காலனிய காலத்தில் பிரிட்டிஷ் இந்தியாவில்தான் தமிழ்நாட்டில் கல்வி சனநாயகப்படுத்துதலின் தொடக்கம் நிகழ்ந்தது. அதற்கு முன்னால் கல்வி குறித்த சான்றுகள் கிடைக்கின்றனவே அன்றி கல்விச் சனநாயகம் குறித்து எதுவுமில்லை. காலனிய காலத்தில் நவீனக் கல்வி நிலைகொள்வதற்கு முன்பு வளர்ந்த பிள்ளைகளுக்குத் திண்ணை, குருகுலப் பள்ளிகள் இருந்திருக்கின்றன. இளஞ்சிறுவர்களுக்குப் பெரும்பாலும் அவர்களது தந்தையர்களே ஆசிரியராக இருந்திருக்கிறார்கள். இதை ஒரு புரிதலுக்காக மரபுக் கல்வி என்று வைத்துக்கொள்ளலாம். அந்த மரபுக்கல்வி ஒரு வகையில் மூடிய அமைப்பை உடையது. அந்த அமைப்புக்கு உட்படாதவர்களுக்குக் கல்வி கிடைத்ததாக இப்போதைக்குச் சான்றுகளில்லை. இவ்விடத்து கல்வி என்று சொல்வது மரபு, நவீனக் கல்வி முறைகளைத்தான். இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்ட கல்வி ஒன்று இருந்திருக்க வேண்டும். அது மரபு, நவீனத்திற்கு அப்பாற்பட்டதாக, ஆவணமாக்கலுக்கு அடங்காததாக வாய்மொழியாக இருந்து வந்திருக்கலாம். சான்றாக, எழுதி வைக்கப்படாத மரபான மருத்துவக் குறிப்புகள் இன்றளவும் புழக்கத்தில் இருப்பதையும் அது கடந்து வந்திருக்கும் பாதையையும் ஒரு கல்வி முறையியலாகச் சொல்ல முடியும். அது தனித்த ஆய்வுக்குரியது.
காலனிய கல்வி குறித்த ஆய்வுகள்
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் காலனிய கால கல்வி, பொருளாதாரம், சமூகம் உள்ளிட்டவை இன்னும் முறைப்படி ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. வந்திருக்கும் ஆய்வுகளில் பெரும்பகுதி மெட்ராஸ் மாகாணம் குறித்த ஆய்வுகள் மீதான ஆய்வுகளே. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆவணங்களைக் கொண்டு ஒரு வகை ஆய்வும், கிறிஸ்தவ மறைப்பணியாளர்களின் கடிதங்களைக் கொண்டு ஒரு வகை ஆய்வும் நடந்திருக்கின்றன. அவற்றில் இடைவெளிகளும் விடுபடல்களும் நிறைய உண்டு. கம்பெனி ஆவணங்களையும் மறைப்பணியாளர்களின் கடிதங்களையும் ஒருங்கே வைத்து சமூகத்தைப் பார்த்த ஆய்வுகள் இல்லை. மெக்காலே, வில்லியம் பென்டிங் ஆகியோரின் கல்வி குறித்த அறிக்கைகளை இந்தியா முழுமைக்குமானதாகப் பார்க்கும் பார்வை வியாபித்திருக்கிறது. உண்மையில் அவ்வறிக்கைகள் இந்தியா முழுமைக்குமானவை அல்ல. கிறித்தவ மறைப்பணியாளர்களின் கல்விச் செயல்பாடுகள் பல நோக்கங்களைக் கொண்டிருந்தன. அவர்களின் நோக்கங்களில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுக் கொண்டே இருந்தன. நீண்ட காலம் அவர்களது கல்விச் செயல்பாட்டைத் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்ற வகையில் தகவமைப்பதற்கு அடிப்படையே மாற்றாமல் பரிசோதனைகளைச் செய்தார்கள். பல சமூக மாற்றங்கள் பரிசோதனைகளில் நிகழ்ந்தவை. அவர்கள் தங்களது கல்விச் செயல்பாட்டின் வழி கிறிஸ்தவர்களிடம் ஒருங்கிணைப்பை நிகழ்த்த முடியுமென்று நினைத்தார்கள். அது நிகழவில்லை. தமிழ்நாட்டில் சாதிக்கு அப்பாற்பட்ட எந்தவிதமான ஒருங்கிணைப்பும் முழுமையான நிரந்தரமான பலனைத் தந்துவிடாது என்பதை மறைப்பணியாளர்கள் மிகத் தாமதமாகப் புரிந்துகொண்டிருக்க வேண்டும்.
காலனிய காலக் கல்வி என்றாலே ஆங்கிலக் கல்வி என்ற சுருங்கிய பார்வை ஒன்று உண்டு. அது சரியல்ல. போர்த்துகீசியர், டேனிஷ், ஜெர்மன், பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தவர்களும் கல்வி நிறுவனங்களை உருவாக்கினார்கள். அவர்களின் நோக்கங்களுக்கு ஏற்ற வகையில் கல்வியை வழங்கினார்கள். எல்லாவற்றும் மாணவர்கள் இருந்தார்கள். அமெரிக்க வரலாற்று ஆய்வாளரான ராபர்ட் எர்க் ஃப்பிரைகென்பெர்க் தம்முடைய ‘தென்னிந்தியாவில் நவீன கல்வி’
[Robert Eric Frykenberg, Modern Education in South India, pp. 37 – 65] என்னும் நூலில் இந்தியாவில் பல்வேறு விதமான கல்வி முறைகள் இருந்ததாகச் சொல்வது குறிப்பிடத்தக்கது. அவற்றுள் ஆலே கல்வி முறை (Halle Education System) பெல் – லங்காஸ்டர் கல்வி முறை (Bell Lancaster Education System) ஆகியன பெருமளவில் தென்னிந்தியர்களிடம் தாக்கம் செலுத்தின.
காலனிய காலத்தில் தமிழ்மரபுக் கல்வி
ஐரோப்பியர்களின் கல்வி முறை பொதுமக்களின் ஏற்பினைப் பெற்று பரவத் தொடங்கிய அதே நேரத்தில் மரபான கல்வியும் கற்பிக்கப்பட்டு வந்தன. அவற்றுள்ளும் வகைப்பாடுகள் இருந்தன. எண், எழுத்துக்களை அறிவது ஒரு முறையாகவும், வானியல், ஜோதிடம், அண்டம், தாவரம், விலங்கியல், வேதியியல், மருத்துவம், வேளாண்மை ஆகியவை மற்றொரு முறையாகவும் இருந்தது. தமிழ்நாட்டில் சைவ, வைணவ மத நிறுவனங்களே கல்வி நிறுவனமாகவும் இருந்தமையால் அவர்களின் கல்வி முறை மதத்திற்கும் அறிவியலுக்கும் வேறுபாடற்றதாக இருந்தது. கல்வியில் மதத்தின் சாயல் விழுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை. மதத்தைப் பற்றி அறிவதே கல்வியாகக் கருதும் போக்கு அன்றைய காலத்தில் தமிழ்மரபுக் கல்வி நிறுவனங்களில் மேலோங்கி இருந்தது. திண்ணைப் பள்ளிகளில் தமிழ் கற்பித்தவர்கள் புலவர்கள் எனப்பட்டனர். ஊர் செல்வந்தர், தலைவர் வீட்டுத் திண்ணைகளில் இத்தகைய பள்ளிகள் இருந்தன. குருகுலப் பள்ளிகள் உண்டு உறைவிடப் பள்ளிகளைப் போல செயல்பட்டிருக்கின்றன. திண்ணைப்பள்ளியில் இல்லாத குரு – சீடர் உறவு முறை குருகுலப் பள்ளிகளில் இருந்திருக்கின்றன. காலை ஐந்து மணி முதல் மாலை ஏழு மணி வரை பள்ளிகள் இயங்கியிருக்கின்றன. பெளர்ணமி, அமாவாசை, அஷ்டமி, பிரதமை ஆகிய நாள்களில் விடுமுறை விடப்பட்டிருக்கின்றன. ஆசிரியர்கள் பெரும்பாலும் பிராமணர்களாக இருந்தனர். ஒரே செய்யுளைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் காட்டுவதாகவே வகுப்புகள் இருந்தன. ஓலையில் எழுதும் பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஏழு முதல் எட்டு ஆண்டுகள் வரைப் படித்தாலும் அதற்கேற்ற அறிவு முதிர்ச்சி மாணவர்களிடம் இல்லை.
இலக்கிய வகைமையில் பழமொழிகளின் தொகுப்பு, அம்பிகை மாலை, அண்ட சாஸ்திர மாலை, அருணகிரி அந்தாதி, அபிராமி அந்தாதி, பாரதம், தேவாரம், திருவாசகம், தேவி கவசம், சிவ கவசம், ஞான போதம், இந்திரஜித், இரணியன், கும்பகர்ணன் படலங்கள், கிருஷ்ணன் தூது, மூதுரை, நெல்மாலை, நாலடியார், பால காண்டம், ராமஜெயம், திருக்குறள், வாழப்பாட்டு, வேல முகம், விளக்கொளி, பால காண்டம், ஆத்திசூடி, கொன்றை வேந்தன் என்பன தமிழ் மரபுப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டிருக்கின்றன.
மூதூர்ப் புராணம், திருவெண்காட்டுப் புராணம், விருத்தாச்சலப் புராணம், ஏகாதேசி புராணம், மார்க்கண்ட புராணம், பதினெட்டுக் கதைகளைக் கொண்ட புராணம் ஆகியனவும் இலக்கண அலங்காரம், இலக்கண உத்தாரம், நன்னூல் ஆகியனவும் புராண, இலக்கண நூல்களாகக் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. கணித வகையில் எண் கணக்கு, காசுக்கணக்கு, நேர்க்கணக்கு, ஆவணக்கணக்கு, பச்சவாடக் கணக்கு ஆகியனவும் தானிய நில அளவுகள் பற்றிய கணக்கும் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. அறிவியலை சாஸ்திரம் என்னும் பெயரால் குறிப்பிட்ட தமிழ் மரபுக் கல்வியாளர்கள் பூமி சாஸ்திரம், புவன சாஸ்திரம், வைத்திய சாஸ்திரம், சமேஸ்திரிகை சாஸ்திரம், நட்சத்திர சாஸ்திரம் ஆகியவற்றைக் கற்பித்திருக்கிறார்கள். 9 ஆம் நூற்றாண்டில் வேதங்கள், வேதாகமங்கள், புராணங்கள், மீமாம்சம், தரும சாஸ்திரங்களும் 10 ஆம் நூற்றாண்டில் ஆகமங்கள், பஞ்சராத்திரா, சைவா, வைகான்காவும் கற்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது. 12 ஆம் நூற்றாண்டில் திருவாவடுதுறை மடத்தில் ரூப்வத்ரா, வியாகர்ணா சரகா, பாகாடா (மருத்துவம்) ஆகியன கற்பிக்கப்பட்டிருக்கின்றன. இங்கு ‘சரஸ்வதி பண்டாரம்’ என்று அழைக்கப்பட்ட நூலகம் இருந்திருக்கிறது. வேதங்களைக் கற்பிப்பது நாயக்கர், மராட்டியர் காலம் வரை செல்வாக்குப் பெற்றதாகத் தொடர்ந்திருக்கிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் உறையூர் முத்துவீர வாத்தியார், திரிசிராபுரம் சோமசுந்தர முதலியார், பீமநாயக்கன் பாளையம் இருளாண்டி வாத்தியார், பாலக்கரை வீரராகவ செட்டியார், கொட்டடி ஆறுமுகம் பிள்ளை, கற்குடி மருதமுத்துப்பிள்ளை, திருநயம் அப்பாவையர், மருதநாயகம் பிள்ளை[ டாக்டர் உ.வே.சாமிநாதையர், ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலைய வெளியீடு, 1933, ப. 17,18.] முதலியோர் ஓரளவு தமிழ்நாடு அறிந்த ஆசிரியர்களாக இருந்திருக்கின்றனர். இவர்களினூடாகத்தான் அறிவு என்று சொல்லக்கூடிய ‘பண்டிதம்’ என்பதற்கு விளக்கம் தருவதாக ஒரு வழக்காறு இருந்திருக்கிறது. அதற்குள்ளாக ஒரு வரையறுப்பும் ஒதுக்குதலும் நிலவியதாகத் தெரிகிறது.
அஷ்டப் பிரபந்தமும் அரைப் பண்டிதமும்
வைணவச் சிற்றிலக்கியங்களில் அழகிய மணவாள தாசர், திவ்யகவி என்றெல்லாம் சொல்லப்படும் பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூல்களுக்குத் தனிச்சிறப்புண்டு. அவரது படைப்புகளில் திருவரங்கக் கலம்பகம், திருவரங்கத்து மாலை, திருவரங்கத்தந்தாதி, திருவரங்க நாயகர் ஊசல், திருவேங்கட மாலை, திருவேங்கடத்தந்தாதி, அழகர் அந்தாதி, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி என்னும் எட்டு நூல்களை மட்டும் தொகுத்த அறிவுஜீவிகள் ‘அஷ்டப் பிரபந்தம்’ என்று பெயர் சூட்டினார்கள். அதோடு நில்லாமல் ‘அஷ்டப் பிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்’ என்றார்கள். அது ஒரு பழமொழி போல தமிழ்ப் புலமையாளர்கள் வட்டத்தில் நவீனக் கல்வி அறிமுகமாவதற்கு முன்பு வரை புழக்கத்தில் இருந்தது.
புலவர் மரபில் அறிவுத் தன்மையை அளப்பதற்கு ‘பண்டிதம்’ என்ற சொல் வழக்கும் உண்டு. உடல் நோவுகளையும் அறிவுக் குறைகளையும் களையும் முறையை ‘பண்டுவம்’ என்றார்கள். அறிதலில் இருந்த குறைகளைக் களைந்து பெற்ற அறிவில் முதிர்ந்தவரை ‘பண்டிதர்’ என்றார்கள். அப்போதுதான் பண்டிதர், பண்டிதமணி, பண்டித என்னும் சொற்கள் பலரது பெயர்களில் முன், பின் ஒட்டுகளாகச் சேர்ந்தன. அவ்வாறே ‘பண்டிதர்’க்கு மாற்றுச் சொல்லாக ‘பட்டர்’ என்பதும் புழக்கத்தில் இருந்ததாகத் தெரிகிறது. சமூகக் கெளரவத்தின் அடையாளமாகவும் வெள்ளை நிருவாகிகளோடு நெருக்கம் கொள்வதற்கான திறப்பாகவும் கூட ‘பண்டிதர்’ என்கிற சொல் வினையாற்றி உள்ளது. அந்தச் சூழலில்தான் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் (பி.பெ.ஐ) எழுதிய ‘அஷ்டப் பிரபந்தம்’ என்னும் எட்டு நூல்களை மட்டும் படித்துத் தேர்ந்துவிட்டால் அரைப் பண்டிதனாகி விடலாம் என்ற சொல் வழக்கு உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதன்படி பார்த்தால் பிள்ளைப் பெருமாளின் வெறும் எட்டு நூல்கள் அரைப் பண்டிதத்தைத் தரும். எஞ்சிய அரைப் பண்டிதத்தைத் தமிழின் ஏனைய நூல்கள் தரும் என்று பொருளாகிறது. காலனிய காலத் தமிழ்ப் புலமை மரபில் ஒருவரின் நூல்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? அதில் அப்படி என்னதான் இருந்தது?
அஷ்டப் பிரபந்ததில் ஐந்து அந்தாதியும் மாலை, ஊசல், கலம்பகம் ஆகியன தலா ஒன்று வீதமும் இடம்பெற்றுள்ளன. கட்டளைக் கலித்துறை, வெண்பா, விருத்தம் முதலிய பா வடிவங்களும் யமகம், மடக்கு உள்ளிட்ட சொல்லணிகளும் சிலேடை முதலிய தொடைகளும் அமையப் பாடப்பெற்றவை அவை. சிற்றிலக்கியச் சுவைக்கும் சிருங்காரம் எனப்படும் காமிய விவரணைக்கும் சொல்லணிகள் தேவையாக இருந்த காலத்தில் அவற்றைப் பேரளவில் பயன்படுத்திய நூலாக அஷ்டப் பிரபந்தம் உள்ளது. இவ்வெட்டு நூல்களையும் முறைப்படி கற்பவர்களுக்கு இயல்பாகவே அதற்குள்ளிருந்த எழுத்து, சொல், யாப்பு, அணி இலக்கண அமைவுகளில் புலமை வாய்ப்பது இயல்பு. ஆக, ஒரே நேரத்தில் ஒரே தொகுதியில் இலக்கியமும் இலக்கணமும் வாசிப்பதற்கான தகவமைப்பைக் கொண்டதாக புலவர் மரபால் அஷ்டப் பிரபந்தம் பார்க்கப்பட்டிருக்க வேண்டும். சரி, அரைப் பண்டித அளவுகோலுக்கு அது மட்டும்தான் காரணமா? அஷ்ட பிரபந்தத்தில் உள்ள இலக்கண அமைவுகளைப் போல பிறர் எழுதிய நூல்கள் ஒன்று கூடவா தமிழில் இல்லை?
ஆழ்வார்களின் பாசுரங்கள், அவற்றிற்கு எழுதப்பட்ட உரைகள் ஆகியவற்றின் தாக்கத்தை அதிகமாகப் பெற்றிருக்கும் அஷ்டப் பிரப்பந்தத்தை நாலாயிர திவ்ய பிரபந்தந்தின் கருத்தியல் நீட்சியாகச் சொல்லமுடியும். சொல்லப் போனால் சமய இலக்கியங்களின் மறுமலர்ச்சியே ‘சிற்றிலக்கியங்கள்’ தான். அதாவது காமத்தைத் தவிர்த்து கடவுளைப் பாடிய சமய இலக்கியங்களைப் பேரிலக்கியம் என்றும் காமத்தை உள்ளடக்கிப் பாடியதைச் சிற்றிலக்கியங்கள் என்றும் வகைப்படுத்தினார்கள். சிற்றிலக்கியங்களில் காமமே முக்கிய நுவல்பொருளாக இருந்தது. காமத்தின் வழியாகவும் காமத்தைக் கடந்தும் கடவுளை அடைய முடியும் என்பதான நம்பிக்கையின் பிரதிபலிப்பைச் சிற்றிலக்கியங்களில் நிறைய விதைத்தார்கள். சிற்றிலக்கிய காலத்தில் கட்டப்பட்ட கோவில்களில் மக்களின் கண்கள் படக்கூடிய இடங்களில் காமியச் சிலைகளையும் ஓவியங்களையும் வைத்தார்கள். கூத்துகளில் காமியப் பேச்சுகளை இணைத்தார்கள். இந்தச் சூழலில்தான் காமியத்தையும் கடவுளையும் இணைத்துப் பேசும் சிற்றிலக்கியங்களின் ஒரு பகுதியான அஷ்டப் பிரபந்தத்தைத் தமிழ்ப் பண்டியத்திற்கான அளவுகோலாக வைத்தார்கள்.
எல்லப்ப நாவலர்
சைவத் திவ்ய கவி என்று சொல்லப்படும் எல்லப்ப நாவலர் புராணங்களை எழுதிப் புகழ் பெற்றவர். இவரின் அருணாச்சலப் புராணம் சமீப காலம் வரை தஞ்சாவூர்ப் பகுதிகளில் பெரியபுராணத்திற்கு நிகராகப் பாவிக்கப்பட்டது. சிற்றிலக்கிய வகைமையில் திருவருணை அந்தாதி, திருவருணைக் கலம்பகம், திருவாரூர்க் கோவை, திருவருணைக் கலம்பகம், செவ்வந்திக் கோவை, திருவிரிஞ்சைக் கோவை, திருவிரிஞ்சைக் கலம்பகம், திருப்பாலைப் பந்தல் உலா முதலிய நூல்களையும் எழுதியுள்ளார். இந்த எட்டு நூல்களை ‘சைவ அஷ்டப் பிரபந்தம்’ என்று கூடச் சொல்லலாம். ஆனால் அப்படி யாரும் சொல்லவில்லை. சைவத்தில் ‘பிரபந்தம்’ என்கிற சொல் வழக்கு இல்லாமை கூட காரணமாக இருக்கலாம். சைவத் திவ்ய கவி எல்லப்ப நாவலரும் வைணவத் திவ்ய கவி பி.பெ.ஐ.யும் சமகாலத்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.
பூர்வ அறிவைப் புறந்தள்ளிய பண்டிதம்
புலவர் மரபினரால் சிற்றிலக்கிய காலத்தில் திருமுறைகள், திவ்ய பிரபந்தங்களின் சாராம்ச நீட்சியாகக் கருதப்பட்ட சைவ, வைணவ சிற்றிலக்கியங்களில் புழங்கித் தேர்தலே பண்டிதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. வைதிக மடங்கள் கல்விப்புலங்களாகவும் அவை மட்டுமே எழுதிக்கொண்ட இலக்கண, இலக்கியங்கள் பாடநூலாகவும் இருந்திருக்கின்றன. இலக்கணங்கள் அவைதிகத்தாரின் ஆக்கங்களாக இருந்தமையால் அதை வைதிகமாக்கும் முயற்சிகளுள் ஒன்றாக அகத்தியர், சிவன் ஆகியோரைத் தமிழோடு இணைத்துக் கதைகள் கட்டப்பட்டன. ஆனாலும் இலக்கணங்களின் வரலாறும் அகச்சான்றும் அதற்கு இடம் கொடுக்காத போது, கதைகளுக்கு நியாயம் சேர்க்கும் பொருட்டு இலக்கணக் கொத்து, இலக்கண விளக்கம் முதலியவை எழுதப்பட்டன. அவையும் கூட அவைதிகப் பழந்தமிழ் இலக்கண நூல்களின் தாக்கத்தைப் பெற்றனவாகவே இருந்தனவே தவிர வைதிகத்தாரால் தனித்துவமான இலக்கணத்தைத் தமிழுக்குத் தர முடியவில்லை. அதேசமயம் அவைதிக இலக்கண, இலக்கிய, புலவர்களுக்கு வைதிகச் சாயம் பூசுவதற்கான வேலைகளையும் வைதிகர்கள் செய்தார்கள்.
அவைதிக நூல்களின் மூலத்தைத் திருத்துதல், தீட்டுக் கற்பித்தல், முதல் பிரதியைச் சிதைத்துக் காணாமல் ஆக்குதல், திரித்து எழுதி அதையே சரி எனப் பரப்புதல், திரிபுகளுக்குச் சிவ, கிருஷ்ண, ரிஷி மூலம் கற்பித்தல் என்பதான வைதிகர்களின் செயல்களின் ஒரு பகுதியாகவே சிற்றிலக்கிய காலத்தியப் ‘பண்டிதம்’ உருவாக்கப்பட்டதாகச் சொல்வது தவறாகாது. அதாவது, வைதிகர்களின் ‘பண்டிதம்’ அவைதிக இலக்கண இலக்கியத்தின் பூர்வ அறிவைப் புறந்தள்ளியது.
சிற்றிலக்கியக் காலத்தில் பி.பெ.ஐ., எல்லப்ப நாவலரின் பங்களிப்புகள் முக்கியமானவையாக இருக்கலாம். அதற்காக அவர்களைக் கற்பதுதான் பண்டித்தியம் என்பது சரியாக இல்லை. இவ்விடத்து ‘பி.பெ.ஐ. காலத்தில் சங்க இலக்கியம், காப்பியங்கள் முதலியன பதிப்பிக்கப்படவில்லை. பின்னாளில்தான் கண்டு பிடிக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டது’ என்று காரணம் சொல்லக் கூடும். அந்தக் காரணமும் ஏற்புடையதாக இல்லை. ஏனெனில் வைதிகர்களில் பலர் அவைதிக இலக்கண இலக்கியங்களையும் அறிந்திருந்தார்கள். சான்றாக, மணிமேகலை எந்தச் சமயத்தைச் சார்ந்த நூலென்று விளங்காமல் இருந்த தனக்கு கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியராக இருந்த மங்களூர் ரங்காச்சாரிதான் அது பெளத்தக் காப்பியம் என்று கூறியதாக என் சரித்திரத்திலும் மணிமேகலையும் மும்மணியும் என்கிற கட்டுரையிலும் உ.வே.சா. சொல்லி இருப்பதைக் கூறலாம். இதுபோன்ற சான்றுகள் ஏராளம் உண்டு. தமிழுக்கு இன்றளவும் செழுமை தருவதாக இருக்கும் பழந்தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கொடுத்த அவைதிகர்களின் நூல்கள் சிற்றிலக்கியக் காலத்தில் பண்டிதத்துக்கான அளவுகோலாக இல்லாததைப் புரிந்துகொள்ள பண்டிதம் தேவையில்லை. வரலாற்றை நேர்நோக்கும் மனம் போதும். ஏனெனில் நடந்திருப்பது பண்டிதத்தின் அளவீடு அல்ல. இலக்கியக் கழுவேற்றம்.
ஐரோப்பியக் கல்வி முறையில் திருக்குறளை அறிதல்
இந்தியா வந்த ஐரோப்பியர்களில் கல்வியை நிர்மாணித்துப் பரப்பியதில் மறைப்பணியாளர்களுக்குப் பெரும் பங்குண்டு. அவர்கள் தொடக்கத்தில் திருக்குறளை அறிவதிலும் மொழிபெயர்ப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தனர். திருக்குறள் வழி தமிழர்களின் தொன்மையையும் தொடர்ச்சியையும் அறிந்துகொள்ள முடியும் என்று அவர்கள் நம்பியதாகத் தெரிகிறது. 16 ஆம் நூற்றாண்டில் காயல்பட்டினம் பகுதியில் சமயப்பணியாற்றி வந்த ஜோவா டா வில்லா டோ குண்டே திடீரென இலங்கைக்குப் பணியிட மாறுதல் செய்யப்பட்டார். அங்கு சென்ற ஜோவா கோட்டே என்ற பகுதியின் ஆட்சியாளராக இருந்த புவனைகா பாகு என்பவரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து உரையாடினார். அப்போது தனது சமயப் பிரச்சாரத்திற்குத் திருக்குறள் ஆதரவாக இருப்பதாகக் குறிப்பிட்டதாகத் தெரிகிறது. இது கிடைக்கும் சான்றுகளின் படி இந்தியாவிற்கு வெளியே திருக்குறள் அறியப்பட்ட முதல் நிகழ்வாகத் தெரிகிறது. கோவாவில் அரசாங்கத்தின் பதிவு அதிகாரியாக இருந்த டியோகோ டோ குட்டோ என்பவர் திருக்குறளைப் போர்த்துக்கல்லுக்கு அறிமுகப்படுத்திய முதலாமவராகத் தெரிகிறது. பதினாறாம் நூற்றாண்டின் இறுதி தொடங்கி திருக்குறளை ஐரோப்பிய நாடுகள் அறியத் தொடங்கின. தொடர்ச்சியாக சீகன் பால்கு, டொமினிக் டி வாலன்ஸ் ஆகியோர் திருக்குறள் மீது கவனம் செலுத்தினர். சீகன் பால்கு 1707 இல் தமிழ்வழிப் பள்ளியை ஆரம்பித்தார். அப்போது பாலகவி என்ற நூல் சிறுவர்களுக்குப் பாடமாக இருந்தது. 1709 இல் தமிழ்ப்பள்ளி, போர்த்துக்கீசியப் பள்ளி என்ற பகுப்பு உருவானது. 1715 –இல் ஜோகன் எர்னஸ் குருண்லர் அறக்கொடைப் பள்ளிகளைத் தொடங்கினார். தாமஸ் மன்றோ தமிழ்நாட்டின் கல்வி நிலை குறித்து ஆராய விரும்பி 1823 இல் குழு ஒன்றை அமைத்தார். அக்குழுவின் பரிந்துரைப்படி தமிழ்க்கல்வியில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. தொடக்கக்கல்வி நிலையங்களைத் தாசில்தார் பள்ளிகள் என்றும் மேல்நிலைக் கல்வி நிலையங்களை ஆட்சியரகப் பள்ளிகள் என்றும் அழைத்தார்கள். பிற்காலத்தில் சேசு சபையினரும் கல்வி நிறுவனங்கள் தொடங்கிய போது நவீனப் பாடத்திட்டத்திற்குள் திருக்குறளையும் கொண்டு வந்தனர். மரபான தமிழ்க் கல்வியிலும் மிகவும் பிற்காலத்தில் திருக்குறள் பாடமாக இருந்திருக்கிறது. இது தவிர முற்கால வரலாற்றை வரைபடங்களுடன் கற்பித்தல், இந்துஸ்தான் வரலாறு, ஈசாப் நீதிக் கதைகள், நாலடியார், மூதுரை, நன்னெறி ஆகியனவும் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. 1863 இல் ‘சிறுவர் கல்விப் புதையல்’ என்ற பெயரில் தேர்ந்தெடுத்த புலவர்களின் பாடல்கள் வெளியிடப்பட்டது [British Library, London, Siruvar Kalvi Puthayal, Pondicherry, 1864]. இதில் ஒவ்வொரு பாடலுக்கும் புலவருக்கும் குறிப்புகள் எழுதப்பட்டன. இதை நவீன வகைப்படுத்தலில் அமைந்த தமிழ் இலக்கிய வரலாற்றின் முதல் முயற்சி எனலாம். 1644 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஆவணம் ஒன்று தமிழ்ப் பள்ளியில் 155 மாணவர்கள் படித்ததாகக் குறிப்பிடுகிறது [Madurai Province Jesuit Archives. Shenbaganur, Litterae Annuae written by Fr.Andrew Lopez in Leon Besse. Histoire de la Province du Malabar (typescripts), 2 vols., see vol. 1. pp. 15-21. Joseph Bertrand, La Mission du Madure, 4 vols, Paris, 1847-54, pp. 456-8)]. பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்திலும் தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்பட்ட பாடவேளைகளைக் கீழ்க்கண்ட அட்டவணைகளில் காணலாம்.

மறைப்பணியாளர் சுவோவின் தமிழ்ச்சமூக, இலக்கிய வரலாறு
1889 முதல் 1900 வரை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பீட்டர் சுவோ, தான் நேரில் கண்ட, கேட்டவற்றைத் தொகுத்து பிரெஞ்சில் L’Inde Tamoule என்னும் தலைப்பில் நூலாக எழுதினார். சுவோ காலத்து ஐரோப்பியர்கள் தமிழ்நாட்டைப் பற்றி அறிந்துகொள்வதற்கான கையேடு என்றும் இந்நூலைச் சொல்லலாம். கலை, பண்பாடு, சடங்குகள், தொழில் முறைகள் ஆகியவற்றினூடாகத் தமிழ் இலக்கியத்தை மிக உயர்வாக மதிப்பிடும் சுவோ, தமிழ் இலக்கியம் குறித்த முக்கியத் தகவல்களைத் தொகுத்துத் தந்திருக்கிறார். திருக்குறளின் பெருமைகளை விதந்தோதும் அவர் ரோமானியத் தத்துவஞானியான செனீக்கா
[செனீக்கா (லூசியஸ் அன்னேயஸ் செனீக்கா தி யங்கர்) உரோமானிய உறுதிப்பாட்டுவாத தத்துவ அறிஞர், அரசியல்வாதி, நாடகாசிரியர் ஆவார். ஹிஸ்பானியாவில் உள்ள குதுர்பாவில் பிறந்து ரோமில் வளர்ந்தார். அங்கு சொல்லாட்சி, தத்துவம் ஆகியவற்றில் பயிற்சி பெற்றார். முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.]வின் சிந்தனைகளோடு ஒப்பிடுகிறார். தமிழ்ப் புலவர் குழு பெளத்தர்களோடு விரோதம் கொண்டிருந்தது, பள்ளிகளில் சிவன் பாடல் கற்பிக்கப்பட்டது, கம்பராமாயணம் பல்கலைக்கழகத் தேர்வில் பாடமாக வைக்கப்பட்டிருந்தது, கலிங்கத்துப்பரணியை போர்வீரர்களின் பாடல் என்றது,
நன்னூல் பள்ளிகளில் பாடமாக இருந்தது, சிவவாக்கியர் பாடல்களைப் பாட தடை விதிக்கப்பட்டிருந்தது, கீர்த்தனை நாடகங்கள் பற்றிய செய்திகள், இன்பக்கவி என்பாரின் கிறிஸ்தவக் கீர்த்தனைகள், நாலடியாருக்கு நயனப்ப முதலியார் உரை எழுதியது பற்றிய செய்திகள் ஆகியவை அவர் குறிப்பிட்டிருக்கும் தமிழ் இலக்கியம் பற்றிய செய்திகளில் மிகச்சில. இது அமைப்பு முறையில் இன்றைய தமிழ் இலக்கிய வரலாற்றினை ஒத்துக் காணப்படுகிறது. நூலின் பெயர், நூலாசிரியரின் பெயர், நூலின் காலம், நுவல்பொருள் பற்றிய சிறு குறிப்பு ஆகியன நவீன இலக்கிய வரலாற்று எழுதியலில் முக்கியமானவையாக இருப்பதைப் போன்ற அமைப்பினை சுவோவிடம் காண முடிகிறது. இது காலனிய காலக் கல்வி முறைக்குள் நவீன வரலாற்றை எழுதும் முறை தொடங்கியமைக்கான ஒரு செய்தியாகும். இன்னும் விரிவாகப் பார்ப்பதற்கு இதில் இடமுண்டு.
மரபான தமிழ்க்கல்விச் சூழலில் உருவான தமிழ்ப்புலவர் சரித்திரம் போன்றவற்றில் இருந்த கதைத்தன்மை நவீன இலக்கிய வரலாற்று எழுதியலில் தாக்கம் செலுத்தினாலும் ஐரோப்பியத் தன்மையிலான விவரணை முறைகள் உண்மைகளுக்கு நெருக்கமாக இருப்பதாக மக்களிடம் உருவாகியிருந்த எண்ணவோட்டத்தின் காரணமாக இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து ஏராளமானோரால் இலக்கிய வரலாறு எழுதப்பட்டன. தமிழ்நாடு அரசின் போட்டித் தேர்வுகளில் கணிசமான கேள்விகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் இருந்து கேட்கப்படுவதால் விதவிதமான கோர்வை முறைகளில் இன்றும் இலக்கிய வரலாறுகள் வந்துகொண்டிருக்கின்றன. அவை யாவும் ஐரோப்பியர்களின் தமிழ் இலக்கிய வரைவியலையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன என்பது ஐரோப்பியர்களின் இலக்கிய வரலாற்று வரைவியலின் சரித்தன்மைக்கான உரைகல்லாகும்.
Art : Ashok Sangireddy
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்புக்கு அருகில் உள்ள அக்கனாபுரத்தைச் சேர்ந்தவர். தற்போது மதுரை மாவட்டம், கருமாத்தூரில் உள்ள அருள் ஆனந்தர் கல்லூரியின் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். நானூறுக்கு மேற்பட்ட சமுதாயம், இலக்கியம், பொருளியல் சார்ந்த கட்டுரைகளை எழுதியுள்ளார். தொல்காப்பியத்தில் பொருளியல் பெறும் இடம், புறனடைக் கோட்பாடு – தொல்காப்பியர் மரபு, புறனடைக் கோட்பாடு – வீரசோழிய மரபு, தமிழ் இலக்கிய வரலாறு (பல புதிய குறிப்புகளுடன் 1970 முதல்…), அவதூறுகளும் புனிதப்படுத்தல்களும் நீர் – நிலம் – சாதி – சாஸ்திரம்’ முதலிய நூல்கள் எழுதியுள்ளார்.








Leave a Reply