தாட்டோ ஏஞ்சலோ சுமா
“உண்மையான கலை என்பது அழகாகத் தெரிவது அல்ல, மாறாக நம்மை மாற்றுவதுதான்” என்று ராய் அட்சாக் கூறியதைத் தற்செயலாகக் கண்டபோது, படைப்பாற்றல் குறித்த எனது அணுகுமுறையை அது மென்மையாக்கியது என்று சொல்லும் தாட்டோ ஏஞ்சலோ சுமா போட்சுவானாவில் பிறந்தவர், அதனால் மோட்ஸ்வானா என்று அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பாடகியாக ஆரம்பத்தில் தன் அக்காவுடன் கலை வாழ்வைத் தொடங்கினாலும் மகப்பேறு காலமே அவளுக்குள் இருந்த கவிஞரை வெளிப்படுத்தியதாகக் கூறுகிறார். வானியலை அடிப்படையாகக் கொண்ட எண் கணித சோதிடத்திலும் ஆர்வமுள்ள இவர் ஒரு தொழில் முனைவோராகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். உலகெங்கிலும் உள்ள பல்வேறு இலக்கிய இதழ்களில் இவருடைய கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
அவர்கள் அவளுடைய நாக்கில் நீலமாக முத்தமிடுகிறார்கள்
அவளுடைய உடலில் ஆண்கள் கதைகளை விட்டுச் செல்கிறார்கள் –
வாழ்க்கை அவர்களை எப்படி வெறுமையாக விட்டுவிடுகிறது என்பது பற்றிய நேர்மையற்ற, மனமுடைந்த, நம்பிக்கையற்ற கதைகள்
அவள் அவற்றின் வாசனையால் நிரம்புகிறாள்
அவர்கள் அவளுடைய நாக்கில் நீலமாக முத்தமிடுகிறார்கள், அவளுடைய வாயை காமத்தால் எரிக்கிறார்கள்,
அவளுடைய அமைதியான குரலை ருசித்து, அதை மேலும் முடக்குகிறார்கள்.
அவளுடைய தொடைகளுக்கு இடையில் ஒரு வீடு இருக்கிறது
அது சிறிது நேரம் தங்கள் முகங்களை (பெயர்களை) மறக்க ஆண்களிடம் கேட்கிறது
அவள், அவர்களின் உடலுக்குக் கீழே இருக்கும் போது அவளுடைய பெயரை மறக்க கற்றுக்கொள்கிறாள்
சில நேரங்களில், அவள் பல நிறமுடையவள்
ஒரு பழைய நினைவைப் போல தெரஞ்சிவிட்ட தோலில் இரத்தம் கன்னிவிடும்.
அவளுக்கு மேகங்கள் பிடிக்கும்.
அவை எப்படி இருண்டு கூடுகின்றன, ஆனாலும் மழை போன்ற அழகான ஒன்றை உருவாக்குகின்றன.
சில வலிகள் தாங்களே கூடி நம்மை உயிர்வாழச் செய்கின்றன என்று அவள் சொல்கிறாள்.
அறிமுகமில்லாத உடல்களின் எடை அவள் உடலை அழுத்தும்போது
அவள் ஜன்னலுக்கு வெளியே பார்க்கிறாள்
மேகங்கள் ஏன் கூடுகின்றன என்பதை நினைவில் கொள்கிறாள்.
உணவு மற்றும் துணிகள் நிறைந்த பிளாஸ்டிக் பைகளுடன் அவள் வீடு திரும்பும்போது,
அவளுடைய குழந்தைகளின் சிரிப்பு அவளை உயிர்ப்பிக்கிறது.
அவள் இனி வெறுமையாக உணரவில்லை.
அவளுடைய பெயரையும் அவளுடைய ஊரையும் நினைவில் வைத்திருக்கிறாள்
குழந்தைகள் மீதான அன்பில் அவளுடைய வலியின் சாயல் இல்லை.
அவர்களின் வயிறுகள் நிரம்பின, அவர்களின் கண்கள் மின்னுகின்றன.
இதுதான் அவளுடைய கதை.
ஆண்களின் வெறுமையோ அல்லது அவர்களின் வாசனையோ அல்ல.
அவளுடைய உடல், இரண்டு குரல்,
இரண்டு வாழ்க்கைகளுக்கு இடையில் அல்லாடுகிறது.
ஆனால் அந்த ஆண்களைப் போல அவள் ஒருபோதும் வெறுமையாக இல்லை.
அவள் தன்னைப் பற்றி அறிவாள்.
அம்மா என.
■
என் அடிவயிற்றை யாரோ ஒருவர் தொடுவதைப் போல நானும் தொடுகிறேன்
ஒரு மனிதன் எனக்கு ரயிலில் இருக்கை கொடுக்கிறான்,
அவன் நான் கர்ப்பமாக இருப்பதாக எண்ணுகிறான்,
உட்காரும்போது நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்,
வேலை செய்வதில் சோர்வாக இருக்கிறேன்,
நான் என் அடி வயிற்றைப் பிடித்துக் கொள்கிறேன்
அதை யாரோ ஒருவர் தொடுவதைப் போல நானும் தொடுகிறேன்,
உடையக்கூடிய மற்றும் வெல்ல முடியாத விஷயங்களைத் தொடுவது போல தொட்டு
என் மகளுக்கு என்ன பெயர் வைப்பேன் என்று யோசிக்கிறேன்,
பிரசவ வலியைத் தாங்கும் தைரியம் எனக்கு இருக்கிறதா என்று யோசிக்கிறேன்
இருபது வயதில் என் கர்ப்பிணி அம்மா என்னை உடலில் சுமந்துகொண்டு,
இந்த நெரிசலான மற்றும் தடதடக்கும் ரயிலில்
தினமும் வேலைக்குச் செல்வதைப் பற்றி நான் நினைக்கிறேன்
இந்த வலி இன்னும் எத்தனை இரவுகள் நீடிக்கும் என்று பயந்திருப்பாளா
என்னைப் போலவே சோர்ந்து எப்போதாவது அவள் வருத்தப்பட்டாளா என்று நான் ஆச்சரியப்படுகிறேன்,
நான் எழுதும் எல்லா கவிதைகளிலும்
அவளைச் சமாதானம் செய்ய முயற்சிக்கிறேன்
இந்தக் கவிதையிலும் நான் அதைதான் செய்யப் போகிறேன்.
நான் அதைச் செய்கிறேன்.
நான் அதைச் செய்துவிட்டேன்.
■
நீண்ட வானம்
“பெண்கள் தங்கள் வலியை நெய்ய முடிந்தால்
அது வானத்தை விட நீளமானதாக இருக்கும் ” என்று
ஆரம்பித்தாள் அவள்.
என் அம்மா சொன்னாள்
சூரியனை என் வாயில் அடைத்து விட வேண்டும்
வாழ முடியாத அளவுக்கு மிகவும் இருண்டு இருக்கும் நாட்களுக்கு
துயரம் போல ஒலிக்கும் நாட்களுக்கு
என் சொந்த இதயத்தில்
எனக்காக ஒரு இல்லத்தை உருவாக்கவும்
என் ஆன்மா பருகக் கூடிய ஆலயத்தை உருவாக்கவும்
“என் குழந்தையே
உண்மை உன் நாவின் அடியில் வாழ்கிறது,
அதைப் பேசக் கற்றுக்கொள் “
என்று மேலும் அவள் சொன்னாள்.
நாங்கள் உயிர் வாழ்கிறோம்
ஏனென்றால் எங்கள் அம்மாக்கள் உயிர் பிழைத்ததால்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நவலை என்னும் சிற்றூரில் பிறந்த இவர் அரசு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். சொற்களால் பொம்மை செய்பவன் என்று கூறிக்கொள்ளும் இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதை எழுதுகிறார், தற்போது மொழிப்பெயர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.
வெயில் ஒளிந்துகொள்ளும் அழகி, சதுரமான மூக்கு, துரிஞ்சி, தண்ணீரின் சிரிப்பு, மற்ற விலங்குகள் ஆகிய கவிதைத் தொகுப்புகளும் எழுத்தெனப்படுவது என்ற புதிய நோக்கில் இலக்கண நூலும் “a piece of moonshine at dinner” (Writersgram publication) என்ற ஆங்கிலக் கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளன.
சிறார் இலக்கியத்தில் தங்கக் குருவி, காடனும் வேடனும், ஊசி எலியும் ஆணி எலியும், லிமொ ஆகிய நான்கு நாவல்கள் உட்பட பத்துக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.








Leave a Reply