Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

தாழி

எழில் சின்னதம்பி
எழில் சின்னதம்பி
January 3, 2026
தாழி
இத்தாலிய மூலம்:  லுய்ஜி பிராண்டெல்லோ
தமிழில்: எழில் சின்னதம்பி


அந்த வருடம் ஆலிவ் விளைச்சலுக்கும் நல்ல ஆண்டாக இருந்தது. முந்தைய வருடம் தளிர்களால் நிரம்பியிருந்த பண்ணை மரங்கள் அனைத்தும், பூக்களை அச்சுறுத்திய பனிமூட்டத்தையும் தாண்டி நல்ல பழங்களைக் கொடுத்திருந்தன.

டான் லோல்லோ ஜிராஃபா, ‘பிரைமோசோல்’ பகுதியில் இருக்கும் தனது ‘லே குவோட்டே’ பண்ணையில் கணிசமான ஆலிவ் மரங்களை வைத்திருந்தார். புதிய அறுவடையினால் கிடைக்கப்போகும் ஆலிவ் எண்ணெயைச் சேமித்துவைக்க, தனது நிலவறையில் இருக்கும் ஐந்து பழைய மெருகிடப்பட்ட மட்பாண்டக் குடங்கள் போதாது என்பதை அவர் முன்னெச்சரிக்கையாக உணர்ந்திருந்தார். அதனால், அந்தச் சாடிகளைச் செய்த ‘சாண்டோ ஸ்டெஃபானோ டி கமாஸ்ட்ரா’விலிருந்து ஆறாவது, பெரிய புதியதொரு பானையைச் செய்யச் சொல்லிப் பணித்தார். அது ஏறக்குறைய ஒரு மனிதனின் உயரம் இருந்தது. அழகாக உருண்ட வயிற்றுடன் கம்பீரமாக, மற்ற குடங்களுக்கு ஒரு தலைமைச் சன்னியாசி போல் காட்சியளித்தது.

இந்தக் குடத்தின் விஷயத்திலும் அவர் மட்பாண்டத் தொழிலாளியுடன் சண்டையிட்டார். டான் லோல்லோ ஜிராஃபா சண்டை போடாத ஆள்தான் யாராவது ஊரில் உண்டா? அவர் ஒவ்வொரு சின்ன விசயத்திற்காகவும், எல்லைச் சுவரில் வந்து விழுந்த ஒரு சிறிய கல்லுக்காகக் கூட, ஒரு வைக்கோல் துரும்பைக் காரணமாக வைத்துக்கூட சண்டை போடுவார்; வழக்குத் தொடுப்பார். இப்படி எல்லோர் மீதும் வழக்குத் தொடுத்து, எப்போதும் சட்டச் செலவுகளுக்குத் தானே பணம் செலுத்துவார். இப்படிப் பெருகிப் போன சட்டச் செலவு மற்றும் நீதிமன்ற அழைப்பாணை காரணமாக, அவர் கிட்டத்தட்டப் பாதிப் பணத்தை இழந்திருந்தார்.

வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை அவர் தனது கோவேறு கழுதையில் வருவதைப் பார்த்துப் பார்த்துப் போதும் என்றாகிவிட்டது அவருடைய வழக்கறிஞருக்கு. எனவே, அவரைத் துரத்துவதற்கு, ஜெபப்புத்தகம் போல மிகச்சிறிய, ஒரு அரிய சட்டப் புத்தகக் கையேட்டை அவரிடம் கொடுத்தார்; இனி அவர் தனது வழக்குகளுக்குச் சட்ட அடிப்படை தேடுவதில் தன்னை விட்டுவிட்டு அவராகவே அவரது நேரத்தை வீணடிக்கலாம் என்று எண்ணினார்.

முன்பெல்லாம், அவருடன் சண்டையிடுபவர்கள், அவரைக் கேலி செய்வதற்காக, “கோவேறு கழுதைக்குச் சேணமிடு!” என்று கத்துவார்கள். இப்போது, அதற்குப் பதிலாக, “உன் கையேட்டில் தேடிப் பார்!” என்று சொல்கிறார்கள்.

அதற்கு டான் லோல்லோ, “அது சரிதான், நான் உங்களைப் பழி வாங்குவேன், நாய்களே” என்று பதிலளிப்பார்.

விலையுயர்ந்ததும், நான்கு ஒன்சே (பதினெட்டாம் நூற்றாண்டுச் சிசிலியத்தின் நாணயம்) பணத்தைக் கொட்டி வாங்கியதுமான அந்தப் புதிய குடம், நிலவறையில் அதற்கு இடம் கிடைக்கும் வரை, திராட்சை பிழியும் கொட்டகையில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்தது. இவ்வளவு பெரிய குடத்தை யாரும் இதற்கு முன் பார்த்ததில்லை; அது குறைந்தபட்சம் இருநூறு லிட்டராவது பிடிக்கும். திராட்சைக் கசிவின் நாற்றமும், காற்றோட்டமில்லாத, இருண்ட இடங்களில் ஒட்டியிருக்கும் அந்தத் தீவிரமான பச்சை வாசனையுடன் ஈரமான குகையில் வைக்கப்பட்டிருந்த அந்தக் குடம் பரிதாபமாக இருந்தது. இதனால் ஏதாவது மோசமான விளைவு ஏற்படலாம் என்று எல்லோரும் அவரிடம் எச்சரித்தார்கள். ஆனால் டான் லோல்லோ அந்த எச்சரிக்கைகளைப் புறக்கணித்து வெறுமனே தோள்களைக் குலுக்கிக் கொண்டார்.

வேலையாட்கள் இரண்டு நாட்களாக மரங்களிலிருந்து ஆலிவ்களைத் தட்டிப் பறித்துக் கொண்டிருந்தனர். டான் லோல்லோ கடுங்கோபத்தில் இருந்தார். அடுத்த பருவத்திற்கான அவரை விதைக்காக உரத்துடன் வந்த ஆட்கள், தங்கள் கழுதைகளில் சுமைகளை ஏற்றி வந்து, அங்கங்கே குவியலாக இறக்க வேண்டியிருந்தது. ஒருபுறம், தொடர்ந்து வந்து கொண்டிருந்த அந்தக் கழுதைகளின் சுமைகளை இறக்குவதற்கு உதவ அவர் விரும்பினார்; மறுபுறம், ஆலிவ்களைத் தட்டிக் கொண்டிருந்தவர்களை விட்டுச் செல்லவும் அவர் விரும்பவில்லை. அதனால் அவர் ஒரு கடற்படை மாலுமியைப் போலச் சபித்துக் கொண்டிருந்தார். ஒரு ஆலிவ், ஒரே ஒரு ஆலிவ் காணாமல் போனால் கூட, ஒவ்வொருவரையும் தண்டிக்கப்போவதாக அச்சுறுத்தினார். அவர் ஒவ்வொரு ஆலிவையும் மரங்களிலும் இருந்த பழங்களை ஒவ்வொன்றாக ஏற்கனவே எண்ணிவிட்டது போல எச்சரித்தார். உரத்தின் ஒவ்வொரு குவியலும் மற்ற குவியலின் அளவைப் போலவே இல்லாவிட்டால் உரம் கொண்டு வந்த ஆட்களைத் தண்டிப்பதாகவும் அச்சுறுத்தினார். தனது அழுக்கடைந்த வெள்ளைத் தொப்பியை அணிந்து, சட்டைப் பனியனுடன், நெஞ்சு திறந்திருக்க, முகம் சிவந்து வியர்வை சொட்டச் சொட்ட, அவர் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார்; ஓநாய் போன்ற தனது கண்களை உருட்டி, மழித்த தனது கன்னங்களைத் தேய்த்துக் கொண்டிருந்தார். மழித்தவுடனேயே அடர்த்தியான தாடி மீண்டும் அவரது கன்னங்களில் வளர்ந்துவிடும் போலிருந்தது.

மூன்றாவது நாளின் முடிவில், ஆலிவ் பழங்களை உதிர்த்துக்கொண்டிருந்த பண்ணையாட்களில் மூவர், தங்கள் ஏணிகளையும் கழிகளையும் சேமித்து வைப்பதற்காகத் திராட்சை பிழியும் கொட்டகைக்குள் நுழைந்தனர். அங்கே கிட்டத்தட்ட இரண்டாக உடைந்திருந்த அந்த அழகிய புதிய பானையைக் கண்டதும், அவர்கள் மூன்று மரக்கட்டைகள் போல உறைந்துபோனார்கள். யாரோ ஒருவர் கோடாரியால் அதன் வயிற்றின் நடுவே பிளந்தது போல பானையின் முன்பகுதியில் பெரிய துண்டாக, ஒரே துண்டாக உடைந்து போயிருந்தது.

“ஐயோ! செத்தேன்! செத்தேன்! செத்தேன்!” என்று அவர்களில் ஒருவன் முணுமுணுப்பாகக் கூறிக்கொண்டே தன் நெஞ்சில் ஒரு கையால் அடித்துக் கொண்டான்.

“யார் இதைச் செய்தது?” என்று இரண்டாமவன் கேட்டான்.

“கடவுளே!” என்றான் மூன்றாமவன். “டான் லோல்லோ என்ன சொல்லப் போகிறார்? யார் அவரிடம் இதைச் சொல்லப் போகிறார்கள்? அது புதிய பானை ஆயிற்றே! ஐயோ, என்ன ஒரு வெட்கக்கேடு!”

அவர்களில் மிகவும் பயந்திருந்த முதல் ஆள், உடனே கதவை மூடிவிட்டு, ஏணிகளையும் கழிகளையும் வெளியே சுவரில் சாய்த்து வைத்துவிட்டு, மெதுவாக வெளியேறி விடலாம் என்று யோசனை சொன்னான். ஆனால் இரண்டாமவன் அதற்கு மிகக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தான்:

“உனக்கு என்ன பைத்தியமா? நாம் பேசுவது டான் லோல்லோவைப் பற்றி! இதை நாம்தாம் உடைத்தோம் என்று அவர் நினைத்துக் கொள்ளக்கூடியவர். யாரும் அசைய வேண்டாம்!”

அவன் வெளியே சென்று, கொட்டகைக்கு எதிரில் நின்று, தன் கைகளால் வாயைக் குவித்து, “டான் லோல்லோ! டான் லோல்லோ!” என்று சத்தம் போட்டுக் கூவினான்.

அவர் தோட்டப்பகுதியில் உரத்தை இறக்கிக் கொண்டிருந்த ஆட்களுடன் கீழே இருந்தார். வழக்கம் போலத் தீவிரமாகச் சைகைகள் செய்துகொண்டிருந்தார், அவ்வப்போது இரு கைகளாலும் தன் பழைய வெள்ளைத் தொப்பியை இழுத்துச் சரிசெய்தார். சிலசமயம் அவர் அவ்வளவு பலமாக இழுப்பார்; பிறகு தொப்பியைத் தன் கழுத்திலிருந்தோ அல்லது நெற்றியிலிருந்தோ கழற்றவே முடியாது. அந்தி சாயும் நேரத்தின் கடைசி வெளிச்சங்கள் அணைந்துகொண்டிருந்தன. மாலை நேரத்தின் நிழல்களாலும் மெல்லிய காற்றாலும் கிராமப்புறத்தில் பரவிய அமைதியிலும், எப்போதும் கோபமாக இருக்கும் அந்த மனிதரின் சைகைகள் இன்னும் முழு வீச்சில் இருந்தன.

“டான் லோல்லோ! டான் லோல்லோ!”

அவர் மேலே வந்து அந்தப் பேரழிவைக் கண்டபோது, அவருக்குப் பித்து பிடித்தது போல் ஆகிவிட்டது. முதலில், அவர் அந்த மூன்று  வேலையாட்களை நோக்கி விரைந்தார்; அவர்களில் ஒருவனைக் கழுத்தைப் பிடித்துச் சுவரில் அழுத்தி, “சே, சனியனே, நீ இதற்குத் தகுந்த விலை கொடுக்கப் போகிறாய்!” என்று இரைந்தார்.

மற்ற இரண்டு பேர் முன்வந்து அவரைப் பிடித்தனர். பூமியின் கருத்த நிறம் போல, சூரியனால் கருத்துப்போன அவர்களது முகங்களில் தெரிந்த நம்பிக்கையற்ற பார்வை அவரையும் தொற்றிக்கொண்டது. தன் உக்கிரமான கோபத்தைத் தனக்கே திருப்பிக்கொண்டார். தன் பழைய தொப்பியைத் தரையில் வீசினார், தன் தலையிலும் கன்னங்களிலும் திரும்பத் திரும்பக் குத்திக்கொண்டார், கால்களைத் தரையில் அடித்து, இறந்த ஒரு உறவினருக்காக அழுபவரைப் போல ஊளையிட்டார்.

“புதிய பானை! என் விலை உயர்ந்த புதிய பானை! அய்யோ, அது முற்றிலும் புதிது!”

யார் அதை உடைத்தது என்று அவர் தெரிந்துகொள்ள விரும்பினார். அதுவாகவே உடைந்திருக்க முடியுமா? யாரோ ஒருவர் பொறாமையாலோ அல்லது வஞ்சத்தாலோ உடைத்திருக்க வேண்டும். ஆனால் எப்போது? எப்படி? வன்முறைக்கான எந்த அடையாளங்களும் இல்லை! தொழிற்சாலையிலிருந்து உடைந்த நிலையில் வந்திருக்க முடியுமா? அது சாத்தியமில்லை! அது மணி அடிப்பது போல ஒலித்ததே!

டான் லோல்லோவின் முதல் ஆத்திரத் தீ தணிந்துவிட்டதைக் கண்டதும், பண்ணையாட்கள் அவரை அமைதி கொள்ளச் சொல்லிக் கெஞ்சத் தொடங்கினர். பானையைச் சரிசெய்ய முடியும்; அது அவ்வளவு மோசமாக உடையவில்லை. ஒரே ஒரு துண்டுதான். ஒரு நல்ல பழுதுபார்ப்பவரால் அதைச் சரிசெய்ய முடியும்; புதியது போலவே மீண்டும் ஆக்க முடியும். இந்த வேலைக்கு ஏற்றவர் ‘திமா லிகாசி’ மாமாதான். அவர் ஒரு அற்புதச் சிமெண்ட் பசையைக் கண்டுபிடித்திருந்தார். அது அவருக்கு மட்டுமே தெரிந்த ஒரு இரகசியப் பசை. அது உலர்ந்த பிறகு ஒரு சுத்தியலாலும் கூட உடைக்க முடியாத பசை. எனவே, டான் லோல்லோ விரும்பினால், நாளை, விடியற்காலையில், ‘திமா லிகாசி’ மாமா வரலாம்; அவர் கைவைத்தால் பானை புதியதுபோல் சிறப்பாகிவிடும்!

இந்த ஆலோசனைகளுக்கு டான் லோல்லோ தொடர்ந்து மறுத்து வந்தார். ‘இதெல்லாம் பயனற்றது; அதைச் சரிசெய்ய முடியாது’ என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார். ஆனால் கடைசியில் அவர்களைச் சமாதானப் படுத்துவதற்காகச் சம்மதித்தார். மறுநாள், விடியற்காலையில், சரியான நேரத்தில், ‘திமா லிகாசி’ மாமா கருவிகள் கொண்ட தன் கூடையை முதுகில் சுமந்துகொண்டு ‘பிரிமோசோலு’க்கு வந்து சேர்ந்தார்.

மாமா ‘திமா லிகாசி’ — முறுக்கப்பட்ட, முடிச்சுப் போட்ட மூட்டுகளைக் கொண்ட, ஒரு பழமையான அராபிய சரசென் ஆலிவ் மரத்தைப் போல இருந்த ஒரு முதியவர். அவரை அனைவரும் ‘மாமா’ என்றே அழைத்து வந்தனர். அவரிடமிருந்து ஒரு வார்த்தையைப் பிடுங்குவதற்கு ஒரு கொக்கி தேவைப்படும் என்பதைப்போல அமைதியானவர். அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பது ஒரு வகையான மௌனம்; அது அவரது விகாரமான உடலில் வேரூன்றிய ஒரு சோகம். காப்புரிமை எதுவும் இல்லாவிட்டாலும் கூட, ஒரு கண்டுபிடிப்பாளராகத் தன் மதிப்பை யாராலும் புரிந்துகொள்ளவோ அல்லது சரியாகப் பாராட்டவோ இல்லை என்ற நம்பிக்கையின்மை காரணமாக ஏற்படுத்திக் கொண்ட மௌனமாக அது இருந்தது. உண்மை மட்டுமே பேச வேண்டும் என்றுதான் திமா லிகாசி மாமா விரும்பினார். யாராவது ஒருவர் ‘கடவுள் தந்த அந்தப் பசை’யின் இரகசியச் சூத்திரத்தைத் திருடிவிடுவார்களோ என்று பயந்ததால், அவர் மிக எச்சரிக்கையாகவே இருந்தார்.

அவரை நீண்ட நேரம் சந்தேகத்துடன் ஆய்வு செய்த பிறகு, டான் லோல்லோ சொன்ன முதல் வார்த்தை, ‘அந்தப் பசையைக் காட்டுங்கள்’ என்பதுதான்.

திமா மாமா கண்ணியத்துடன் பதிலளிக்க மறுத்து, தலையை அசைத்தார். “வேலை முடிந்த பிறகு நீங்கள் அதன் திறனைப் பார்ப்பீர்கள்.”

“ஆனால் அது வேலை செய்யுமா?”

திமா மாமா கருவிகள் இருந்த கூடையைத் தரையில் வைத்தார். கிழிந்த, நிறம் மங்கிய, சுருண்ட பருத்திக் கைக்குட்டை ஒன்றை வெளியே எடுத்தார்; அதை விரித்து, அதிலிருந்த ஒரு மூக்குக் கண்ணாடியைச் சடங்கு செய்வது போலக் கவனமாக எடுத்தார்; அந்தக் கண்ணாடியில் மூக்கைத் தாங்கிப் பிடிக்கும் பாலமும், காதுகளில் மாட்டும் தண்டுகளும் உடைந்திருந்தன; கயிறுகளால் ஒன்றாக இணைத்துப் பிடிக்கப்பட்டிருந்தன; அவர் அவற்றை மாட்டிக்கொண்டு, கொட்டகைக்கு வெளியே, களத்திற்குக் கொண்டு வரப்பட்ட அந்த உடைந்த சாடியை மிகக் கவனமாக ஆய்வு செய்ய ஆரம்பித்தார்.

“அது வேலை செய்யும்” என்று பதிலளித்தார்.

“ஆனால் சிமெண்ட் பசையை மட்டும் பயன்படுத்தினால் நான் அதை நம்ப மாட்டேன். எனக்கு இரும்புக் கம்பியைக் கொண்டு ஒட்டும் போட வேண்டும்.”

“அப்படியானால், நான் கிளம்புகிறேன்” என்று பதிலளித்துவிட்டு, திமா மாமா தன் கருவிகள் வைத்திருந்த கூடையைத் தன் முதுகில் ஏற்றிக்கொண்டார்.

டான் லோல்லோ அவரைக் கையைப் பிடித்து இழுத்தார்.

“எங்கே போகிறாய்? பன்றி! இப்படித்தான் நீ நடந்துகொள்வதா? இவரைப் பாருங்கள், இவர் தன்னைச் சக்கரவர்த்தி சார்லிமேன் என்று நினைக்கிறார்! நீ ஒரு அற்பமான பழுதுபார்க்கும் ஆள்; நீ ஒரு கழுதை. நான் சொல்வதை நீ செய்ய வேண்டும்! நான் அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும்; எண்ணெய் கசிந்துவிடும், முட்டாள் மிருகமே! ஒரு மைல் நீள விரிசலுக்கு சிமெண்ட் பசை மட்டும் போதுமா? எனக்குக் கம்பித்தையல் வேண்டும். சிமெண்ட் பசையும் கம்பித்தையலும். நான்தான் எஜமான்.”

திமா மாமா கண்களை மூடி, உதடுகளைக் குவித்துத் தலையை அசைத்தார். இவர்கள் எல்லோரும் இப்படித்தான்! ஒரு கலைப்படைப்பைப் போல மனசாட்சியுடன் சரியாகச் செய்யும் வேலையின் இன்பத்தை, தன் சிமெண்ட் பசையின் நற்பண்புகளை நிரூபிக்கும் சந்தோஷத்தை இவருக்கு மறுக்கிறார்களே! மூடர்கள்.

“பானை மீண்டும் மணியடிப்பது போல உறுதியாக இல்லாவிட்டால்…” என்று அவர் ஆரம்பித்தார்.

“முடியாது, முடியாது!” என்று குறுக்கிட்டார் டான் லோல்லோ. “கம்பித்தையல் வேண்டும்! சிமெண்ட் பசை மற்றும் கம்பித்தையலுக்கும் நான் பணம் தருகிறேன். உனக்கு நான் எவ்வளவு தர வேண்டும்?”

“பசைக்கு மட்டும்…”

“சே, நீ ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறாய்!” என்று ஆச்சரியத்துடன் இரைந்தார் டான் லோல்லோ. “நான் என்ன சொன்னேன்? எனக்குக் கம்பித்தையல் வேண்டும் என்று சொன்னேன். வேலை முடிந்ததும் நாம் கணக்கு முடித்துக் கொள்ளலாம்: உன்னுடன் வீணாக நேரத்தைச் செலவிட எனக்கு நேரமில்லை” என்று கூறிவிட்டு, அவர் தன் ஆட்களை மேற்பார்வையிடச் சென்றுவிட்டார்.

மாமா திமா, கோபத்துடனும் வெறுப்புடனும் வேலை செய்யத் தொடங்கினார். பானையிலும் உடைந்த துண்டிலும் தாமிரக் கம்பியைத் துளையிடும்போது ஒவ்வொரு துளையிலும் அந்தக் கோபமும் வெறுப்பும் வளர்ந்தது. துளையிடும் உளியின் ‘கிர்ரென்ற’ சத்தத்துடன் சேர்ந்து, அவர் பலத்த உறுமல்களை அடிக்கடி எழுப்பினார். அவரது முகம் பித்தம் அதிகரித்துப் பச்சை நிறமாக மாறியது; கண்கள் கூர்மையாகிக் கோபத்தில் பிரகாசித்தன. இந்த முதல் செயல்முறையை முடித்தவுடன், துளையிடும் உளியை ஆத்திரத்துடன் கூடைக்குள் வீசினார்; துளைகளுக்கிடையே சமமான இடைவெளி உள்ளதா என்றும் பொருந்துகிறதா என்றும் பார்க்க, உடைந்த துண்டை பானையின் மீது வைத்தார். பின்னர் தன் இடுக்கி மூலம், தான் செய்ய வேண்டிய இரும்புக் கம்பியைச் சிறிய துண்டுகளாக வெட்டினார். பின்னர் ஆலிவ் பழங்களை உதிர்த்துக்கொண்டிருந்த பண்ணையாட்களில் ஒருவனின் உதவியைக் கேட்டார்.

மாமாவின் கலக்கமடைந்த முகத்தைப் பார்த்த பண்ணையாள் அவரிடம், “தைரியமாக இருங்கள், திமா மாமா” என்று சொன்னான்.

திமா மாமா கோபத்துடன் தன் கையை உயர்த்தினார். சிமெண்ட் இருந்த பெட்டியைத் திறந்தார். அதன் மதிப்பைச் சாதாரண மனிதர்கள் அறிந்துகொள்ள மாட்டார்கள் என்பதால், அதைக் கடவுளுக்குச் சமர்ப்பிப்பது போல வானை நோக்கி உயர்த்திக் காட்டினார்; பிறகு, ஒரு விரலால், உடைந்த துண்டின் ஓரங்களிலும் விரிசல்களிலும் சிமெண்டைப் பூச ஆரம்பித்தார். அவர் தன் இடுக்கியையும், ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த சிறிய இரும்புக் கம்பித் துண்டுகளையும் எடுத்துக்கொண்டு, பானையின் திறந்த வயிற்றுக்குள் நுழைந்துகொண்டார்.

“பானைக்குள் இருந்தா வேலை செய்யப்போகிறீர்கள்?” என்று உடைந்த துண்டைப் பிடித்துக் கொள்ளும்படி கொடுத்த பண்ணையாள் கேட்டான்.

அவர் பதிலளிக்கவில்லை. அவர் பண்ணையாளிடம், உடைந்த துண்டைப் பானையின் மீது ஒட்டிப் பிடித்துக் கொள்ளும்படி சைகை செய்துவிட்டு பானைக்குள்ளேயே தங்கிவிட்டார். கம்பிகளைத் தைக்கத் தொடங்கும் முன், அவர் கண்ணீருடன் கூடிய குரலில், பானைக்குள் இருந்து பண்ணையாளைப் பார்த்துக் கத்தினார்: “இழு! உன்னால் முடிந்த அளவு பலமாக இழு! அது கழன்று வருகிறதா என்று பார்! இதை நம்பாதவன் அழியட்டும்! பானையை அடி, அடி! நான் உள்ளே இருந்தாலும் அது எப்படி ஒலிக்கிறது என்று கேட்கிறாயா? போ, உன்னுடைய பெரிய முதலாளியிடம் சொல்.”

“மேலே இருப்பவனே கட்டளையிடுகிறான், மாமா” என்று பண்ணையாள் பெருமூச்சுவிட்டான், “கீழே இருப்பவன் இழிந்தவன்! தைத்துக் கொண்டேயிருங்கள், தைத்துக் கொண்டேயிருங்கள்.”

பிறகு திமா மாமா ஒவ்வொரு சிறிய இரும்புக் கம்பித் துண்டையும், பழுதுபார்த்த இடத்தின் இருபுறங்களிலும் அருகருகே இருக்கும் இரண்டு துளைகள் வழியாகச் செலுத்தி, தன் இடுக்கியால் அதன் இரண்டு முனைகளையும் முறுக்கத் தொடங்கினார். எல்லா இரும்புத் துண்டுகளையும் முடுக்கி முடிக்க அவருக்கு ஒரு மணி நேரம் ஆனது. பானைக்குள் அவருக்கு வியர்வை நீரூற்று போலப் பெருக்கெடுத்தது. வேலை செய்யும் போது, அவர் தன் துரதிர்ஷ்டத்தைப் பற்றி மெதுவாக முணுமுணுத்துக் கொண்டிருந்தார். வெளியே இருந்த பண்ணையாள் அவரைத் தேற்றினான்.

“இப்போது நான் வெளியே வர உதவு” என்று இறுதியாகத் திமா மாமா சொன்னார்.

ஆனால், வயிற்றில் எவ்வளவு அகலமாக இருந்ததோ, அவ்வளவு குறுகலாகத்தான் பானையின் கழுத்து இருந்தது. அது நடக்கப் போகிறது என்று பண்ணையாள் ஏற்கனவே எச்சரித்திருந்தான். ஆனால் திமா மாமா கோபத்தில் அதைக் கவனிக்கவில்லை. இப்போது, திரும்பத் திரும்ப முயற்சித்தும், அவரால் வெளியே வர வழி கிடைக்கவில்லை. பண்ணையாள் அவருக்கு உதவுவதற்குப் பதிலாக, அங்கேயே நின்று குலுங்கிச் சிரித்துக் கொண்டிருந்தான். மாமா சிறை பிடிக்கப்பட்டு விட்டார்; அவரால் பழுதுபார்க்கப்பட்ட பானைக்குள்ளேயே அவர் சிறைபிடிக்கப்பட்டார். இப்போது வேறெந்தத் தீர்வும் இல்லை; அவரை வெளியே எடுக்க வேண்டுமென்றால், அந்தப் பானையை மீண்டும் ஒருமுறை நிரந்தரமாக உடைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.

சிரிப்பொலியும் கூச்சல்களும் டான் லோல்லோவை அங்கே கொண்டு வந்தன. பானைக்குள் இருந்த மாமா திமா ஒரு காட்டுப் பூனை போல இருந்தார்.

“என்னை வெளியே எடுங்கள்!” என்று அவர் இரைந்தார். “கடவுளே, நான் வெளியே வர வேண்டும்! இப்போதே! எனக்கு உதவுங்கள்!”

டான் லோல்லோ முதலில் திகைத்துப்போனார். அவரால் அதை நம்ப முடியவில்லை.

“என்ன சொல்கிறாய்? உள்ளேயா? இவர் தன்னை உள்ளேயே வைத்து அடைத்துக்கொண்டாரா?”

அவர் பானையை அணுகி முதியவரைப் பார்த்து இரைந்தார்: “உதவியா? நான் எப்படி உனக்கு உதவுவது? நீ ஒரு முட்டாள் கிழவன். எப்படி? நீ முதலில் அளக்கவில்லையா? வா, முயற்சி செய்; ஒரு கையை வெளியே நீட்டு, இப்படி! இப்போது உன் தலையை… வா. வேண்டாம்… மெதுவாக! வழியே இல்லை! இதை எப்படிச் செய்தாய்? இப்போது தாழி என்னாவது? அமைதியாக இருங்கள்! அமைதியாக இருங்கள்! அமைதியாக இருங்கள்!” என்று சுற்றியிருந்த எல்லோரையும் பார்த்துச் சொல்ல ஆரம்பித்தார். அவர் அல்ல, அவர்கள்தான் பொறுமையை இழக்கப் போகிறார்கள் என்று நினைத்து. “என் தலை வெடிக்கிறது! அமைதியாக இருங்கள்! இது ஒரு புதிய வழக்கு! என் கோவேறு கழுதையே!”

அவர் தன் விரல் முட்டுகளால் பானையைத் தட்டினார். அது உண்மையில் மணி அடிப்பது போல ஒலித்தது.

“அழகு! புதியது போல… பொறுங்கள்!” என்று சிறைபிடிக்கப்பட்டவரைப் பார்த்துக் கூறினார். “போ, என் கோவேறு கழுதையில் சேணம் போடு” என்று பண்ணையாளிடம் உத்தரவிட்டார், பிறகு, தன் நெற்றியை விரல்களால் தடவியவாறே, தனக்குள்ளேயே முணுமுணுத்தார்: “எனக்கு என்ன நடந்தது என்று பாருங்கள்! இது ஒரு பானை அல்ல! இது நரகத்தின் சாதனம்! நிறுத்து! அதை நிறுத்து!”

திமா மாமா ஆத்திரத்துடன், பிடிபட்ட மிருகத்தைப் போலப் போராடிக்கொண்டிருக்க, பானை ஆடியது. பானையைச் சமப்படுத்த டான் லோல்லோ ஓடினார்.

“இது ஒரு புதிய வழக்கு, என் நண்பரே! என் வழக்கறிஞர்தான் இதைச் சமாளிக்க வேண்டும்! என்னால் என்னையே நம்ப முடியவில்லை. நான் போய்விட்டு இப்போதே திரும்பி வந்துவிடுகிறேன். பொறு! உன்னுடைய நன்மைக்காகப் பொறு. இந்த இடைப்பட்ட நேரத்தில், அசைவில்லாமல் இரு. அமைதியாக இரு! நான் செய்ய வேண்டியதைச் செய்கிறேன். முதலில், என் உரிமைகளைப் பாதுகாக்க, என் கடமையைச் செய்கிறேன். இங்கே: நான் வேலைக்கான பணத்தைக் கொடுக்கிறேன், ஒரு நாள் ஊதியம். மூன்று லிராக்கள். இது போதுமா?”

“எனக்கு எதுவும் வேண்டாம்!” என்று திமா மாமா இரைந்தார். “நான் வெளியே வர வேண்டும்!”

“நீ வெளியே வருவாய். ஆனால் இதற்கிடையில், நான் உனக்குப் பணம் தருகிறேன். இங்கே, மூன்று லிராக்களை எடுத்துக்கொள்.”

அவர் அவற்றை தன் மேலங்கியின் பையிலிருந்து எடுத்துப் பானைக்குள் வீசினார். பிறகு, கவனத்துடன் கேட்டார், “நீ சாப்பிட்டாயா? உடனே அவனுக்குச் சாப்பிட ஏதேனும் கொடுங்கள்! உனக்கு அது தேவையில்லையா? நாய்களுக்குக் கொடுங்கள்! நான் உனக்குக் கொடுத்ததுதான் முக்கியம்.”

உணவு கொடுக்கப்பட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்; சேணம் பூட்டப்பட்ட கோவேறு கழுதையின் மீது ஏறி, நகரத்தை நோக்கிப் பயணமானார். அவரைக் கண்டவர்கள், அவர் அவ்வளவு அதிகமாகவும் வினோதமாகவும் சைகை செய்து தனக்குள்ளேயே பேசிக்கொண்டதால், அவர் ஒரு பைத்தியக்கார விடுதிக்குச் செல்லப் போகிறாரோ என்று நினைத்தனர்.

நல்ல வேளையாக, அவர் தன் வழக்கறிஞரைப் பார்க்க நீண்ட நேரம் காத்திருக்கவில்லை. ஆனால் அவர் தன் வழக்கை எடுத்துரைத்த பிறகு, வழக்கறிஞர் சிரிப்பதை நிறுத்துவதற்கு அவர் சற்று நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்தச் சிரிப்பைப் பார்த்து அவருக்குக் கோபம் வந்தது.

“மன்னியுங்கள், இதில் என்ன வேடிக்கை இருக்கிறது? நீங்கள் ஏமாற்றப்படவில்லை! அது என் பானை!”

ஆனால் வழக்கறிஞரால் சிரிப்பை நிறுத்த முடியவில்லை, எப்படி நடந்தது என்பதை மீண்டும் கேட்க விரும்பினார். அதனால் தொடர்ந்து சிரிக்கலாம் அல்லவா? உள்ளேயா? அவர் தன்னை உள்ளே வைத்து அடைத்துக்கொண்டாரா? மேலும், டான் லோல்லோ என்ன எதிர்பார்க்கிறார்? அவரை… அவரைக் குடியிருக்க… ஹா ஹா ஹா… பானையை இழக்காமல் இருக்க உள்ளேயே வைத்திருக்க விரும்புகிறாரா?

“நான் அதை இழக்க வேண்டுமா?” என்று கைகளை இறுகப் பிடித்தவாறு டான் லோல்லோ கேட்டார். “சேதங்கள் மற்றும் மன உளைச்சலுக்கான இழப்பீடு இல்லையா?”

“இதற்கு என்ன பெயர் தெரியுமா?” என்று வழக்கறிஞர் கேட்டார். “சட்டவிரோதச் சிறைவைப்பு என்று பெயர்.”

“சட்டவிரோதச் சிறைவைப்பா? அவரைச் சிறை வைத்தது யார்?” என்று லோல்லோ ஆச்சரியத்துடன் கேட்டார். “அவர் தன்னைத்தானே சிறைவைத்துக் கொண்டார்! இது என் தவறு இல்லை!”

வழக்கறிஞர் அப்போது அவருக்குச் சில சட்டச் சிக்கல்கள் இருப்பதை விளக்கினார். ஒருபுறம், டான் லோல்லோ சட்டவிரோதச் சிறைவைப்புக் குற்றச்சாட்டைத் தவிர்க்க வேண்டுமென்றால், உடனே சிறைபிடிக்கப்பட்டவரை விடுவிக்க வேண்டும்; மறுபுறம், அந்தப் பழுதுபார்க்கும் நபர் தன் மோசமான வேலை அல்லது முட்டாள்தனத்தால் ஏற்பட்ட சேதங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

“ஆஹா!” டான் லோல்லோ நிம்மதியுடன் பெருமூச்சு விட்டார். “அவர் பானைக்கான பணத்தை எனக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும்!”

“பொறுங்கள்!” என்றார் வழக்கறிஞர். “புதிய பானைக்கான விலை அல்ல, நினைவில் கொள்ளுங்கள்!”

“ஏன் இல்லை?”

“ஏனென்றால் அது உடைந்திருந்தது!”

“இல்லை, ஐயா!” என்று டான் லோல்லோ மறுத்தார். “இப்போது அது புதியது போல இருக்கிறது. புதியதை விடச் சிறந்தது, என்று அவரே சொல்கிறார்! மேலும் நான் அதை இன்னொரு முறை உடைக்க நேரிட்டால், மீண்டும் சரிசெய்ய முடியாது. பானை நிரந்தரமாகப் போய்விடும்!”

வழக்கறிஞர், அதன் தற்போதைய நிலையின் அடிப்படையில் அதன் மதிப்பைக் கணக்கிடும்போது இது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்று அவருக்கு உறுதியளித்தார்.

“முன்கூட்டியே அவரிடமிருந்து ஒரு மதிப்பீட்டைப் பெறுவது நல்லது” என்று வழக்கறிஞர் ஆலோசனை கூறினார்.

“மிக்க நன்றி,” என்று கூறிவிட்டு விரைவாகச் சென்றார் டான் லோல்லோ.

மாலை நேரத்தில் அவர் திரும்பி வந்தபோது, எல்லாப் பண்ணையாட்களும் அந்தக் ‘குடியிருக்கும்’ பானையைச் சுற்றி ஒரு விருந்துக் கொண்டாட்டத்தில் இருப்பதைக் கண்டார். காவல் நாய்கூடக் கொண்டாட்டத்தில் இருந்தது. திமா மாமா அமைதியாகிவிட்டார்; தன் வினோதமான சாகசத்தை ரசிக்கத் தொடங்கிவிட்டார். மேலும் சோகமானவர்களுக்கு இருக்கும் அந்த முறுக்கப்பட்ட சந்தோஷத்துடன் சிரித்துக் கொண்டிருந்தார்.

மாமா எல்லோரையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, தாழிக்குள் பார்க்கக் குனிந்தார்.

“என்ன! உள்ளே எல்லாம் சரியாக இருக்கிறதா?”

“சிறப்பாக இருக்கிறது. குளிர்ச்சியாக” என்று மாமா பதிலளித்தார். “வீட்டை விடச் சிறப்பாக இருக்கிறது.”

“தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி. இதற்கிடையில், இந்தப் பானை புதியதாக இருந்தபோது எனக்கு நான்கு அவுன்ஸ் ஆனது என்று உனக்கு எச்சரிக்கிறேன். இப்போதெல்லாம் அதன் விலை எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறாய்?”

“நான் உள்ளே இருக்கும்போது, என்னைச் சேர்த்து அதன் விலையா?” என்று திமா மாமா கேட்டார்.

பண்ணைத் தொழிலாளர்கள் சிரித்தனர்.

“வாயை மூடுங்கள்!” என்று டான் லோல்லோ கத்தினார். “உனக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன: ஒன்று உன் சிமெண்ட் வேலை செய்கிறது, அல்லது அது வேலை செய்யவில்லை; அது வேலை செய்யவில்லை என்றால், நீ ஒரு மோசடி ஆள்; அது வேலை செய்தால், பானை இப்போது இருப்பது போல் மதிப்புள்ளது. எவ்வளவு? நீயே சொல்.”

திமா மாமா சிறிது நேரம் யோசித்துவிட்டுப் பிறகு சொன்னார்: “இதோ என் பதில். நான் விரும்பியது போல, வெறும் சிமெண்ட் பசையை மட்டும் பயன்படுத்தி என்னைப் பழுதுபார்க்க அனுமதித்திருந்தால் நான் உள்ளே மாட்டிக்கொண்டிருக்கவே மாட்டேன்; மேலும் பானையின் மதிப்பு முன்பு இருந்ததைப் போலவே இருந்திருக்கும். ஆனால் நான் உள்ளே இருந்து கட்டாயமாகச் செய்த இந்த அசிங்கமான கம்பி வேலைகளால், எல்லாம் குழப்பமடைந்து விட்டன. இதன் மதிப்பு எவ்வளவு இருக்க முடியும்? முன்பு இருந்த மதிப்பில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்குதான் இருக்கும்.”

“மூன்றில் ஒரு பங்கா?” என்று டான் லோல்லோ கேட்டார். “ஒரு அவுன்ஸ், முப்பத்து மூன்று லிராக்களா?”

“ஒருவேளை அதைவிடக் குறைவாகவே இருக்கும்; நிச்சயம் அதிகமாக இருக்காது.”

“சரி, அப்படியானால்” என்று டான் லோல்லோ சொன்னார், “நான் அதை ஏற்றுக்கொள்கிறேன், அதனால் எனக்குப் பதினேழு லிராக்கள் கொடு.”

“என்ன?” என்று திமா மாமா புரிந்துகொள்ளாதது போலக் கேட்டார்.

“உன்னை வெளியே எடுப்பதற்காக நான் பானையை உடைக்கப் போகிறேன்,” என்று டான் லோல்லோ சொன்னார், “மற்றும் நீ, என் வழக்கறிஞர் பரிந்துரைத்தபடி, அதன் மதிப்புக்குரிய பணத்தை எனக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும்: ஒரு அவுன்ஸ் மற்றும் முப்பத்து மூன்று லிராக்கள்.”

“நான், பணம் கொடுக்கவா?” என்று திமா மாமா கேலி செய்தார். “நீ கேலி செய்கிறாய்! நான் இங்கேயே அழுகிப் போகிறேன்.”

மேலும், அழுக்குப் பிடித்த தனது புகைக்குழாயை எப்படியோ வெளியே எடுத்து, அதைப் பற்ற வைத்து, புகையைப் பானையின் ஜாடியின் கழுத்து வழியாக ஊதினார்.

டான் லோல்லோ நிலமை மோசமாவதை உணர்ந்தார். திமா மாமா பானையை விட்டு வெளியே வர விரும்ப மாட்டார் என்பது போன்ற மாற்றுச் சாத்தியக்கூறுகளை அவரோ அல்லது அவரது வழக்கறிஞரோ கருத்தில் கொள்ளவில்லை. இப்போது என்ன செய்வது?

அவர் மீண்டும், “கோவேறு கழுதையில் சேணம் போடு!” என்று உத்தரவிடப் போனார். ஆனால் இருட்டிவிட்டதை உணர்ந்து சொல்ல வந்ததை நிறுத்திக் கொண்டார்.

“அதுதானா?” என்று அவர் கேட்டார். “நீ என் பானைக்குள் வாழ விரும்புகிறாயா? இங்குள்ள அனைவரும் சாட்சி! அதற்குப் பணம் கொடுக்க விரும்பாததால்தான் இவர் வெளியே வர மறுக்கிறார். ஆனால் நான் அதை உடைக்கத் தயாராக இருக்கிறேன்! எனவே, இவர் பானைக்குள் இருக்க விரும்புவதால், என் பானையைப் பயன்படுத்த விடாததற்காக, நாளை இவர் மீது அத்துமீறல் வழக்குத் தொடரப் போகிறேன்!”

திமா மாமா ஒருமுறை புகையை வெளியே ஊதினார்; பிறகு நிதானமாகக் கூறினார்: “இல்லை, ஐயா. நீங்கள் எதைச் செய்தாலும் நான் தடுக்க விரும்பவில்லை. நான் இங்கே இருக்க விரும்புகிறேன் என்று நினைக்கிறீர்களா? என்னை வெளியே விடுங்கள்; ஆனால் நான் எதற்கும் பணம் கொடுக்க மாட்டேன்! நீங்கள் கேலி செய்கிறீர்கள், ஐயா!”

கோபத்தில் மூழ்கிய டான் லோல்லோ தன் காலை உயர்த்திப் பானையை உதைக்கத் தயாரானார்; ஆனால் தன்னைத் தானே தடுத்து நிறுத்திக் கொண்டார். அதற்குப் பதிலாக, அவர் பானையை இரண்டு கைகளாலும் பிடித்துப் பலமாக உலுக்கினார்; நடுக்கத்துடன் முதியவரிடம் இரைந்தார். “நீ சிறையில் இருக்க வேண்டியவன். பிரச்சினையை ஏற்படுத்தியது நீயா நானா? நான் பணம் கொடுக்க வேண்டுமா? நீ உள்ளேயே பசியால் செத்துப்போகலாம்! யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போம்!” என்று சொல்லிவிட்டு, அன்றைய தினம் காலையில் பானைக்குள் வீசிய மூன்று லிராக்களைப் பற்றி மறந்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அந்தப் பணத்தைக் கொண்டு, திமா மாமா, அந்தக் கொட்டகைப் பகுதியில் முகாமிட்டிருந்த பண்ணையாட்களுடன் அன்று மாலை கொண்டாட்டம் நடத்த முடிவு செய்தார். அந்த விசித்திரமான சம்பவத்தால் தாமதமாகி விட்டாலும் அவர்கள் அங்கேயே தங்கியிருந்தனர். அவர்களில் ஒருவன் உள்ளூர் உணவகத்திற்குச் சென்று உணவுப் பொருட்களை வாங்கி வந்தான். எல்லாவற்றுக்கும் மேலாக, அன்று சந்திர ஒளி அவ்வளவு பிரகாசமாக இருந்தது; பகல் போலத் தெரிந்தது.

ஒரு கட்டத்தில் படுத்துத் தூங்கச் சென்ற டான் லோல்லோ, ஒரு பலத்த கூச்சலால் எழுப்பப்பட்டார். அவர் பண்ணை வீட்டின் துருத்துமாடத்தில் சாய்ந்து பார்த்தபோது, நிலவொளியில் அந்தக் கொட்டகைப் பகுதியில் ஒரு பேய்க் கூட்டத்தைக் கண்டார்: போதையில் இருந்த பண்ணையாட்கள், கைகோர்த்து, பானையைச் சுற்றி நடனமாடிக் கொண்டிருந்தனர். உள்ளே இருந்த திமா மாமா பெருங்குரலெடுத்துப் பாடிக் கொண்டிருந்தார்.

இம்முறை டான் லோல்லோ தனது கட்டுப்பாட்டை முழுவதுமாக இழந்தார்; ஒரு வெறிபிடித்த காளை போலக் கீழே ஓடி வந்து, யாராவது அவரைத் தடுப்பதற்குள், ஒரு பெரிய உந்துதலுடன் பானையைக் குன்றின் பக்கமாக உருட்டிவிட்டார். போதையில் இருந்தவர்களின் சிரிப்புடன் உருண்ட பானை, கடைசியில் ஒரு ஆலிவ் மரத்தில் மோதிச் சுக்குநூறாக உடைந்தது.

இப்படியாக, திமா மாமா வெற்றி பெற்றார்.


லுய்ஜி பிராண்டெல்லோ (1867 – 1936)

 

இத்தாலியின் சிசிலிப்பகுதியில் பிறந்த லுய்ஜி பிராண்டெல்லோ, இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (1934). ஜெர்மனியின் பான் பல்கலைக்கழகத்தில் படித்தவர். பிராண்டெல்லோவின் படைப்புகள் மனித மனதின் அழுத்தம், அடையாளம், மற்றும் உண்மை-மாயை இடையிலான மாறுபாடு ஆகியவற்றை ஆராய்கின்றன. அவர் நவீனத்துவ நாடகத்தின் தந்தையாகக் கருதப்படுகிறார். Sei personaggi in cerca d’autore எனும் நாடகத்தில் ஓர் எழுத்தாளர் உருவாக்கிய கதாபாத்திரங்கள் தங்கள் கதையை முடிக்க நடிகர்களிடம் உதவி கோரும் நவீனத் திரைநாடகம். ஹென்றி 4 எனும் நாடகத்தில் பித்துக்காரனாக நடித்துவந்த ஒரு மனிதன் உண்மையில் பைத்தியமாகி விடுகிறான்; இது மாயை மற்றும் உண்மையின் இடைவெளியை வெளிப்படுத்துகிறது. Il fu Mattia Pascal (1904) எனும் புதினத்தில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட பின் ஒரு மனிதன் புதிய வாழ்க்கையை தொடங்க முயற்சிக்கிறான் — ஆனால் தன் அடையாளத்திலிருந்து தப்ப முடியாது என்பதே கரு. La Giara (1904) “தாழி” எனும் இச்சிறுகதை நகைச்சுவையும் சமூக விமர்சனமும் கலந்து மனித இயல்பை வெளிப்படுத்துகிறது. பிராண்டெல்லோவின் வழக்கமான இருண்ட நகைச்சுவை (dark comedy) இங்கேத் தெளிவாகத் தெரிகிறது. கதையின் எளிமையான நிகழ்வுகள் மூலமாக அவர் மனித மனத்தின் சிக்கலான இயல்பை வெளிப்படுத்துகிறார்.


எழில் சின்னதம்பி
எழில் சின்னதம்பி

தூத்துக்குடி மாவட்டம் சென்னம்பட்டி எனும் சிற்றூரில் பிறந்தவர். எழில் மயில் வாகனன் என்னும் இயற்பெயர் கொண்ட இவர், தன் தந்தையின் பெயருடன் இணைத்து எழில் சின்னதம்பி என்று புனைபெயராக்கிக் கொண்டுள்ளார்.

மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம் பெற்றவர், ஜெர்மனி, சுவீடனில் பணிபுரிந்து தற்போது அமெரிக்காவின் சாண் டியாகோ நகரில் தரப்பகுப்பாய்வு இயக்குனராகப் பணிபுரிந்து வருகிறார்.

சிற்றிதழ்களில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும், கவிதைகளும், கலைத்துறைக் கட்டுரைகள் பலவும் வெளிவந்துள்ளன. ஓப்ரா பற்றிய அறிமுகமும், ஓப்ராக் கலைஞர் பவரொட்டி பற்றிய கட்டுரையும், ஐரோப்பிய ஓவிய, நாடக, நடனக் கலைஞர்கள் பற்றிய அறிமுகக் கட்டுரைகளும் சிற்றிதழ்களில் வெளியானவை.

‘சிறுகதை’ காலாண்டிதழில் தொடர்ந்து மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளியாகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்னர், செல்பேசியின் பயன்பாடு பரவலாக ஆரம்பித்த காலங்களில் தமிழில் ‘செல்பேசித் தொழில்நுட்பம்’ குறித்த அறிவியல் கட்டுரைகள் மின்னிதழ்களில் தொடராக வெளிவந்தன. மாய எதார்த்தக் கதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பு ‘கடைசி வருகை’ முதல் புத்தகம், மார்ச் 2022-ல் வெளியானது. ‘லத்தீன் அமெரிக்கப் பெண்ணெழுத்து’ எனும் இரண்டாவது மொழிபெயர்ப்புத் தொகுப்பான ‘கடலோடியின் மனைவி’ 2024 டிசம்பரில் வெளியானது. ‘இயல்திரிபுப் புனைகதைகளின்’ மொழிபெயர்ப்புத் தொகுப்பான ‘சிலந்தி’ விரைவில் வெளியாகவிருக்கிறது.

தொன்மை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட உலக வரலாற்றுப் புதினங்கள் எழுதுவது எதிர்காலத் திட்டமாக வகுத்துள்ளார்.

Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • மாதுளை மரம்

    மாதுளை மரம்

    January 4, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 1

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 1

    January 4, 2026
  • இன்கா நாடோடிக்கதைகள் – 6

    இன்கா நாடோடிக்கதைகள் – 6

    January 4, 2026
  • நிணம் : நுண்கதை- குறுங்கதை- சிறுகதை

    நிணம் : நுண்கதை- குறுங்கதை- சிறுகதை

    January 4, 2026
  • சிக்கிம் சுந்தரி

    சிக்கிம் சுந்தரி

    January 4, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (9)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (11)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இதழ் 8 (44)
  • இலக்கியம் (15)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (80)
  • கட்டுரை (2)
  • கதை (4)
  • கதை (3)
  • கவிதை (62)
  • கவிதை (11)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (11)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (36)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (5)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (9)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (3)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (27)
  • வாழ்வியல் (2)

Archives

  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • மாதுளை மரம்

    மாதுளை மரம்

    January 4, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 1

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 1

    January 4, 2026
  • இன்கா நாடோடிக்கதைகள் – 6

    இன்கா நாடோடிக்கதைகள் – 6

    January 4, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (9)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (11)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இதழ் 8 (44)
  • இலக்கியம் (15)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (80)
  • கட்டுரை (2)
  • கதை (4)
  • கதை (3)
  • கவிதை (62)
  • கவிதை (11)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (11)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (36)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (5)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (9)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (3)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (27)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top