தெலு(ங்)கு மூலம்: எம். ஹரிகிஷன்
தமிழில் : திருவை
1.கிர்ரு கிர்ரு லொட்டப்பா
2.மூன்றுபேரும் மூன்றுவிதம்
3.வெங்காயக் கதை
4.கேடு நினைக்காதே கெட்டுப்போவாய்
5.செய்த உதவியை மறக்காதே
6.நரி – சிங்கம்
7.ஒரு பூவின் கதை
8.ஊசி – டாக்டர்
9.கிழவி – செம்மறி
10.எங்க மல்லண்ணா இறந்துபோச்சு
1.கிர்ரு கிர்ரு லொட்டப்பா
ஒரு ஊரில் ஒருவன் இருந்தான். அவனுக்குச் சின்ன வயதில் இருந்து எல்லா வேலைகளையும் இடதுகையால் செய்வது வழக்கம். அதனால் அவனை எல்லோரும் லொட்டப்பா… லொட்டப்பா… என்று பட்டபெயர் வைத்துக் கிண்டல் அடிப்பார்கள். ஆனால் அப்படி யாராவது தன்னைக் கிண்டல் செய்தால்போதும் அவன் கோபத்தில் கொதித்துப்போவான்; அவர்களோடு சண்டைக் கட்டுவான்.
ஒருநாள் அவன் வயலுக்குப் போகும்போது மனைவியை அழைத்து “ஏம்மா… மத்தியானத்துக்குலாம் சாப்பாடு கட்டிக்கினு வயக்கரைக்கு வா!” என்று கூறிவிட்டுச் சென்றான். சரியென்று அவள் நன்கு மசாலா போட்டுக் கமகமனு கோழிக்கறி சமைத்து, கணவனுக்காக வயற்கரைக்கு எடுத்துச் சென்றாள். கணவன் வயலில் தூரமாக உழுதுகொண்டிருப்பதைப் பார்த்தாள். மனைவி வந்ததைக் கவனிக்கவில்லை. அவள் ‘ஓய்’ என்று அழைத்தாள். தூரத்தில் இருந்தான் இல்லையா… அவனுக்குக் கேட்கவில்லை. அப்படியே உழுதுகொண்டிருந்தான். அவள் திரும்பவும் சத்தமாக ‘ஓ…ஓ ய்…. என்று அழைத்தாள். ஊஹூம்… அவனிடம் இருந்து சுத்தமாக ஒரு பதிலும் இல்லை.
எத்தனை முறை அழைத்தாலும் பதில் இல்லாமல் போகவும் அவள் கோபமாக “ஏய்… லொட்டப்பா” என்று சத்தமாகக் கத்தினாள். ‘லொட்டப்பா’ என்ற வார்த்தைக் கேட்டதும் அவன் அதிர்ந்துபோய் “யார்ரா! என்ன அப்டி கூப்டது” என்று கோபமாகத் திரும்பி பார்த்தான். பாரத்தால் வேற யாரு வரப்பு மேல் மனைவி நின்றுகொண்டிருந்தாள். அவன் கோபத்தில் கொதித்துப்போய் “என் பொண்டாட்டி. என்னயே லொட்டப்பானு கூப்டுறியா இரு உன்னை என்ன பண்றனு பாரு ” என்று கட்டையை எடுத்துவந்து அவள் தலையில் ஒன்று போட்டான்… அவ்வளவுதான்… அந்த அடிக்கு அவள் தலை உடைந்துபோய் அங்கேயே விழுந்து இறந்துபோனாள். அவன் பதறிப்போய் சுற்றியும் பார்த்தான். யாரும் தென்படவில்லை. “ஹப்பாடா! நான் கொன்னத யாரும் பாக்கல” என்று எண்ணி கடகடனு குழி தோண்டி, பிணத்தைப் புதைத்துவிட்டு எதுவும் தெரியாத அப்பாவி மாதிரி வீட்டிற்குச் சென்றான்.
நான்கைந்து நாள்கள் கழிந்தன. அவன் மனைவியைக் காணவில்லை என்று எதிர்வீட்டுக் காரர்கள், பக்கத்து வீட்டுக் காரர்கள் எல்லாம் “ஏன்டா…உன் பொண்டாட்டிய காணவே இல்ல. எங்க போயிட்டா” என்று கேட்டனர். அதற்கு அவன் “அவங்க ஊர்ல திருவிழாவாம். அத பார்த்துட்டு வர அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்க. ஒரு மாசம் கிட்ட வரமாட்டா” என்று கூறினான்.
மெதுவாக ஒரு மாதமும் கழிந்தது. இரண்டு மாதங்கள் ஆயின. ஆனாலும் அவள் திரும்பி வரவில்லை, அதோடு மக்களுக்குச் சந்தேகம் வர ஆரம்பித்தது. பார்ப்பவர்கள் எல்லோரும் “ஏன்டா ஒரு மாசத்துல வந்திருவான்ன. ரெண்டு மாசம் ஆச்சுது இன்னும் உன் பொண்டாட்டி வரக் காணுமே என்ன” என்று கேட்க ஆரம்பித்தனர். அதற்கு அவன் “என்ன செய்ய சொல்றிங்க அண்ணா அவள் இந்த ஊருக்கு வரயே மாட்டாலாம். என்னை வீட்டை, வயல்ல எல்லாத்தயும் வித்துட்டு அவங்க ஊருக்கு வரசொல்றா. அவளுக்கு இருப்பு கொள்ளல” என்று கூறி வந்தான். ஒருநாள் அவன் ஒரு வேலையாக வயற்கரைக்குச் சென்றான். மனைவிப் பிணத்தை எங்கு புதைத்தானோ சரியாக அங்கேயே அரைக்கீரை நன்கு செழிப்பாக வளர்ந்திருந்தன. அது இவனைப் பார்த்ததும் காற்று அடிக்கும் போதெல்லாம் அங்கும் இங்கும் ஆடிக்கொண்டு
”சுய் … சுய்… லொட்டப்பா
சுய் …. சுய் …. லொட்டப்பா” என்று சொல்லத் தொடங்கியது. அதைக் கேட்கவும் அவன் கோபத்தில் கொதித்துப்போய் அவற்றைப் பட்டுபட்டுனு பறித்து வீட்டிற்கு எடுத்துவந்து கறிச்சட்டியில் போட்டு ஹப்பாடா என்று நினைத்தான்…
அடுப்பைப் பற்றவைத்தக் கொஞ்ச நேரத்தில் சட்டியில் கறி கொதித்து வேக ஆரம்பித்தது. அதில் இருந்து குமிழ்கள்
”டப்… டப்… லொட்டப்பா
டப்… டப்… லொட்டப்பா” என்று வெடித்துக் கொண்டிருந்தன. அதோடு அவன் கோபத்தில் கொதித்துப்போய் அந்தக் கறி முழுவதையும் எடுத்துச் சென்று தொழுவத்தில் பசுவுக்கு அருகில் வீசி எறிந்துவிட்டு ஹப்பாடா என்று நினைத்தான். பசு அந்தக் கறி முழுவதையும் சுத்தமாகத் தின்றது. அப்போதில் இருந்து அது அவனைக் காண்பது தாமதம்
”அம்பா….. அம்பா… லொட்டப்பா
அம்பா… அம்பா… லொட்டப்பா” என்று கத்தத் தொடங்கியது. அதோடு அவன் கோபத்தில் கொதித்துப்போய் வீட்டில் இருந்து கத்தியை எடுத்துவந்து அதை ஒன்று போட்டான். அவ்வளவுதான் அது இறந்துபோனது.
அவன் அதன் தோலை உரித்து செருப்புத் தைப்பவனிடம் கொடுத்தான். அவன் அந்தப் பசுத்தோலில் நல்ல அழகானச் செருப்பு ஒன்றை தைத்துக்கொடுத்தான். அதைப் போட்டுக்கொண்டு அவன் ரோட்டில் நடக்கவும் அவை உடனே
”கிர்ரு… கிர்ரு … லொட்டப்பா
கிர்ரு… கிர்ரு … லொட்டப்பா” என்று சத்தமிடத் தொடங்கின. அதோடு அவன் கோபத்தில் கொதித்துப்போய் அந்தச் செருப்பை வீட்டின் அருகில் இருந்த நாய்க்கு முன்னால் வீசி எறிந்தான்.
நாய் அந்தச் செருப்பை நன்கு பிய்த்து … பிய்த்துத் தின்றது. அவ்வளவுதான் அப்போதில் இருந்து அது அவனைப் பார்த்தவுடன்
”பௌவ்… பௌவ்… லொட்டப்பா
பௌவ்… பௌவ்… லொட்டப்பா ” என்று குரைக்க ஆரம்பித்தது. அதோடு அவன் கோபத்தில் கொதித்துப்போய் கட்டை எடுத்துவந்து அதன் தலையில் ஒன்று போட்டான். அவ்வளவுதான் அந்த அடிக்குத் தலை உடைந்துபோய் அங்கேயே விழுந்து செத்துப்போனது. அவன் அதை எடுத்துகொண்டு சென்று குளத்திற்குள் வீசி எறிந்துவிட்டு ‘ஹப்பாடா பீட ஒழிஞ்சிது’ என்று நினைத்தான்.
ஆனால் அப்போதிருந்து அந்தக் குளத்தில் யாராவது தண்ணீர்க்காகக் குடத்தை முக்கினாள் போதும்
”புட… புட… லொட்டப்பா
புட… புட… லொட்டப்பா” என்று சத்தம் வர ஆரம்பித்தது. அவனுக்கு அந்தக் குளத்தை என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதை அடிக்க முடியாது. கொல்ல முடியாது. எதுவும் செய்ய முடியாது. அதனால் அது “லொட்டப்பா… லொட்டப்பா” என்று கத்திக்கொண்டே இருந்தாலும் எதுவும் செய்யமுடியாமல் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருந்துவிட்டான்.
2. மூன்றுபேரும் மூன்றுவிதம்
ஓர் ஊரில் ஒரு செவிடன் இருந்தான். ஒருமுறை ஒரு நொண்டி ஆட்டைப் பிடித்துக்கொண்டு பக்கத்து ஊருக்குப் போய்க்கொண்டிருந்தான். நடந்து நடந்து நன்கு கலைத்துப்போனான். தாகம் எடுத்தது. எங்கயாவது தண்ணீர் இருக்கிறதா என்று தேடிக்கொண்டிருக்கும்போது ஒரு மரத்திற்கு அடியில் ஒருவன் அமர்ந்திருப்பதைப் பார்த்தான். அவனும் செவுடுதான்.
முதலாவது ஆள் நொண்டி ஆட்டோடு அவனிடம் சென்று “அண்ணா… இங்க குடிக்கிறதுக்கு தண்ணி எங்க இருக்கு” என்று கேட்டான். மரத்திற்கு அடியில் இருந்தவனுக்கு அவன் கேட்டது சரியாக விழவில்லை. எதிரில் இருந்த நொண்டி ஆட்டைப் பார்த்து “அது காலை நீ உடைச்சியா” என்று கேட்கிறானோ என்னமோ என்று நினைத்து “இல்லை… இல்லை… நான் உடைக்கல. எனக்கு ஒன்னும் தெரியாது” என்று அந்த ஆட்டை பக்கமாகத் தள்ளிவிட்டான்.
அதைப் பார்த்து அவன் “தண்ணி எங்க இருக்குனு கேட்டா என் ஆட்டை தள்ளுறியா, இரு உன்னய” என்று அவனைப் படார்னு ஒரு அடி அடித்தான். அதோடு அவன் கோபமாக “உன் ஆட்டு காலை நான் உடைக்கலனு சொன்னா என்னயே அடிக்கிறியா… எவ்ளோ திமுரு உனக்கு” என்று திருப்பி அவனுக்கு சட்டுசட்டுனு நான்கு வைத்தான். இரண்டு பேரும் அப்படி முடியை முடியைப் பிடித்துக்கொண்டு கீழேயும் மேலேயும் புரண்டு புரண்டு அடித்துக்கொண்டனர். சிறிது நேரத்திற்கு எல்லாம் இரண்டு பேரும் கலைத்துப்போய் யாராவது வந்தால் யார் மேல் தப்பு என்று கேட்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.
அதற்கிடையில் அந்தப் பக்கமாக ஒருவன் கோபத்தோடு பரபரனு நடந்து வருவதைக் கண்டனர். அவன் அப்போதுதான் வீட்டில் மனைவியோடு சண்டைகட்டிக்கொண்டு வீட்டையும் மனைவியையும் விட்டுவிட்டு எங்கேயோ சென்றுகொண்டிருந்தான். அவனும் செவுடே.
அவனை நிறுத்திய இரண்டு செவிடர்களில் ஒருவன் “அய்யா… நான் இந்த ஆட்டு காலை உடைக்கல அப்பயும் இவன் நான்தான் உடைச்சேனுறான். இது எதும் நல்லதா படுதா” என்றான். அதற்குள் இரண்டாவது ஆள் “ஐயா… இங்க எங்கயாச்சும் தண்ணி இருக்கானு கேட்டேன். இருந்தா இருக்குங்கனும், இல்லனா இல்லங்கனும் . அதவிட்டுட்டு என் ஆட்டை தள்ளிவிடலாமா…. நீயே சொல்லு யாரு மேல தப்புனு” என்றான்.
அப்போது அந்த மூன்றாவது ஆள் கோபமாக “நீங்க நூறு சொல்லுங்க… லட்சம் சொல்லுங்க…. இனி நான் என் பெண்டாட்டி கூட சேர்ந்து இருக்க மாட்டேம்னா இருக்கமாட்டேன். என்ன பண்ணுவிங்களோ பண்ணிக்கோங்க” என்று அங்கிருந்து விருவிருனு சென்றுவிட்டான்.
3. வெங்காயக் கதை
ஒரு ஊரில், ஒரு ஐஸ்கிரீம், ஒரு மிளகாய், ஒரு தக்காளி, ஒரு வெங்காயம் இருந்தன. நான்கும் நல்ல நண்பர்கள். எங்கு சென்றாலும், ஒன்றாகத்தான் செல்லும். ஒன்றாகத்தான் சுற்றித் திரியும். நிம்மதியாக ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் குதித்துக்கொண்டும் தாவிக்கொண்டும் மகிழ்ச்சியாக இருந்தன. ஒரு நாள், நான்குமாக சேர்ந்நு குளித்துவிட்டு வரலாம் என்று மத்தியான வேலையில் துங்கபத்ரா நதிக்குச் சென்றன. நான்கும் தண்ணீரில் குதித்து மகிழ்ச்சியாக நீச்சல் அடித்துக்கொண்டிருந்தன. ஆனால் பாவம், நீரில் அடித்து அடித்து ஐஸ்கிரீம் தண்ணீரில் உருகிப்போனது. மற்ற மூன்றும் வெளியே வந்து பார்த்தால் வேற என்ன? ஐஸ்கிரீம் இல்லை. தங்கள் நண்பன் இறந்துபோனதை எண்ணி மிளகாயும் தக்காளியும் வெங்காயமும் துக்கத்தில் விம்மி விம்மி அழுதன.
ஒரு நாள் மற்ற மூன்றும் கொண்டரெட்டி கோட்டையைப் பார்த்துவிட்டு வரலாம் என்று மகிழ்ச்சியாக, சாயங்காலக் குளிர்க்காற்றில்… புறப்பட்டுச் சென்றனர். அப்படி சென்றுகொண்டிருக்கும்போது வழியில் பஜ்ஜி போடுபவர் மிளகாயைப் பார்த்து சடார்னு அதைக் கையில் எடுத்து, கடலை மாவில் முக்கி கொதிக்கிற சூடான எண்ணெயில் போட்டான். பாவம் அந்த மிளகாய் சூட்டினைத் தாங்கிக்கொள்ளமுடியாமல் அந்த இடத்திலேயே இறந்துபோனது. தங்கள் நண்பன் இறந்துபோனதை எண்ணி தக்காளியும் வெங்காயமும் துக்கத்தில் விம்மி விம்மி அழுதன.
ஒரு நாள், தக்காளியும் வெங்காயமும் படம் பார்த்துவிட்டு வரலாம் என்று ஆனந்த் டாக்கீஸுக்குச் சென்றன. இரண்டு டிக்கெட் வாங்கிவந்து தங்கள் இருக்கையில் அமர்ந்து படம் பார்த்துக்கொண்டிருந்தன. அதில் ஒருவன் இருட்டில் சரியாகப் பார்க்காமல் தக்காளி மேலேயே உட்கார்ந்துவிட்டான். அவ்வளவுதான் பாவம் அந்த தக்காளி வயிறு வெடித்து அந்த இடத்திலேயே இறந்துபோனது. தனக்கு மீதமிருந்த ஒரே நண்பனும் இறந்துபோனதை எண்ணி துக்கத்தில் வெங்காயம் விம்மி விம்மி அழுதது.
அப்படி வெங்காயம் அழுதுகொண்டே, அழுதுகொண்டே போகும்போது “ஐஸ்கிரீம் செத்துப் போனப்ப, நானும் தக்காளியும் மிளகாயும் அழுதோம், மிளகாய் செத்துப் போனப்ப, நானும் தக்காளியும் அழுதோம். தக்காளி செத்துப் போனப்ப, நான் ஒருத்தனே இருந்து அழுதேன், அப்புறம் நாளைக்கு நான் செத்துபோனா, எனக்கு யார் அழுவாங்க?” என்று ஓர் இடத்தில் உட்கார்ந்து பயங்கரமாக கவலைப்பட்டுக் கொண்டிருந்தது. ஆகாயத்தில் போய்க்கொண்டிருந்த பார்வதி, பரமேஷ்வரன் அதைப் பார்த்து, “என்னப்பா! பாவம் வெங்காயம் இவ்ளோ சோகமாக இருக்கு. அதுக்கு என்ன கஷ்டம் வந்துச்சோ என்னமோ?” என்று அவசர அவசரமாக கீழே வந்தனர். “வெங்காயம்! வெங்காயம்! “ஏன் இப்படி அழுகுற? உன் கஷ்டம்தான் என்ன” என்று கேட்டனர். அதற்கு, வெங்காயம் கண் நிறைய கண்ணீர் வழிய வழிய “என்ன இருக்கு சாமி! ஐஸ்கிரீம் செத்துபோச்சு, நானும் தக்காளியும் மிளகாயும் அழுதோம், மிளகாய் செத்துப்போச்சு, நானும் தக்காளியும் அழுதோம். தக்காளி செத்துப்போச்சு, நான் ஒருத்தனா இருந்து அழுதேன், அப்புறம் நாளைக்கு நான் செத்துபோனா, எனக்கு யார் அழுவாங்க? எனக்கு யாரும் இல்லையே” என்று சோகமாகச் சொன்னது. அதைக் கேட்ட பரமேஷ்வரன், ஐயோ, பாவம்! என்று பரிதாபப்பட்டு, “நீ எதுக்கும் கவலைபடாதே, இப்பத்தில இருந்து யாரு உன்னை கொல்றாங்களோ அவங்களே உனக்காக அழுற மாரி வரம் தறேன்” என்றார். அவ்வளவுதான்… அன்று முதல், வெங்காயத்தை யார் வெட்டினாலும் அவர்களது கண்களில் இருந்து வலியோடு கண்ணீர் வழிந்துகொண்டிருக்கின்றது.
4. கேடு நினைக்காதே கெட்டுப்போவாய்
ஒரு ஊரில் ஒரு ஏழையும் ஒரு பணக்காரனும் இருந்தனர். ஏழை மிகவும் நல்லவன் அதோடு நல்ல புத்திசாலி. பணக்காரன் மிகவும் கெட்டவன் அதோடு அறிவில்லாதவன். அது மட்டுமின்றி பக்கத்தில் இருப்பவர்கள் நிம்மதியாக இருந்தால் இவனுக்குச் சுத்தமாப் பொறுக்காது. அவர்கள் இருவரும் பக்கத்து பக்கத்து வீடு.
பணக்காரனுக்கு ஏழையின் மேல் பயங்கர கோபம். ஏனென்றால் ஏழை இருப்பதில் தான் உண்டதுபோக, நான்கு பேருக்குக் கொடுப்பான், எப்போதும் எல்லோரோடும் கலகலனு பேசுவான், கலகலனு சிரித்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பான். பணக்காரன் அப்படி கிடையாது. எப்போது பார்த்தாலும் யாரை எப்படிச் சிக்கவைக்கலாம்… இன்னும் எப்படி அதிகமாப் பணம் சம்பாதிக்கலாம் என்று யோசித்துக்கொண்டே எரிச்சலாக இருப்பான். இராத்திரி படுத்தாலும் அவனுக்குத் தூக்கம் சரியாக வராது. அவன் பக்கத்து வீட்டில் இருக்கிற ஏழையைப் பார்த்து “இவன்ட திங்கிறதுக்கு கூட பணம் இல்லானாலும் பட்டு மெத்தைல படுக்கிற என்னவிட சந்தோஷமா இருக்கானே” என்று ஆத்திரம் அடைந்தான். ‘எப்டியாவது இவனை கஷ்டபடுத்தி அழவைச்சி பாக்கனும்’ என்று நினைத்தான்.
ஏழையிடம் ஒரு நல்ல பசு இருந்தது. தினமும் அதன் பாலைக் கறந்து வேண்டும் என்பதை குடித்துவிட்டு மிச்சத்தை வைத்துக்கொள்வான். சாப்பிடுவதற்கு எதுவும் இல்லாதுபோனால் நிம்மதியாக அந்தத் தயிரையே மோராகப் பிசைந்து கொஞ்சம் உப்புபோட்டு வயிறு நிறையக் குடித்துவிட்டு, கண்களை மூடி நிம்மதியாக உறங்குவான். பணக்காரனின் கண் அந்தப் பசுவின் மேல் விழுந்தது. ஒருநாள் யாரும் இல்லாததைக் கவனித்து மெதுவாக அந்தப் பசுவை இழுத்துக்கொண்டுபோய்க் கொன்றுபோட்டான்.
ஏழை காலையில் எழுந்துப் பார்த்தால் வேற என்ன. பசுவை எங்கேயும் காணவில்லை. வெளியே எங்கேயும் போய்விட்டதோ என்னமோ என்று தெரு தெருவாகத் தேடினான். எங்கேயும் காணவில்லை. கடைசியில் பணக்காரன் வீட்டிற்குப் பின்மேட்டில் அதன் தோல் கிடந்தது. அவன் ஒரு வார்த்தை கூட பேசாமல் அந்தத் தோலை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தான். அதை சுத்தமாகக் கழுவி பக்கத்து ஊரில் தோல் வியாபாரியிடம், எதோ கிடைக்கிற விலைக்கு விற்கலாம் என்று எடுத்துச் சென்றான்.
ஆனால் அப்போதைக்குச் சாயுங்காலம் ஆனது. ஊரைத்தாண்டிக் கொஞ்சதூரம் போகவும் இருட்டியது. இருட்டில், செல்வதற்குப் பயந்துபோய் எதற்கும் நல்லதென்று ஒரு பெரிய மரத்தில் ஏறி மேற் கிளைகளுக்கு இடையில் யார் கண்ணிலும்படாமல் உட்கார்ந்துகொண்டான். கொஞ்சநேரத்தில் திருடர்கள் சிலர் அங்கு வந்தனர். மரத்திற்குக் கீழே உட்கார்ந்து எங்கெங்கிருந்தோ திருடிக்கொண்டுவந்தப் பொருள்களை முன்னால் குவியல் குவியலாகப்போட்டுப் பங்கு பிரிக்க ஆரம்பித்தனர். இவை எல்லாவற்றையும் மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஏழை “ஓ” என்று சத்தமாகக் கத்திக்கொண்டே “டேய்… யாருடா என் மரத்துக்கு கிழேயே வந்துருக்கிங்க. உங்கள நசுக்கி பிச்சி பிச்சி திங்குறேன்” என்று கையில் இருந்த பசுத்தோலைச் சடார்னு அவர்களுக்கு நடுவில் போட்டான். அதைப் பார்த்ததும் அவர்கள் திடுக்கிட்டு “அடங்கப்பா…. மேல எதோ ராட்சசன் உட்கார்ந்திருக்கான் போலலா இருக்கு. பசுவை தின்னுட்டு தோலை வீசியிருக்கான். கீழே மட்டும் வந்தானு வையி நம்ம கதி அவ்ளோதான்” என்று பதறிபோய் எல்லாவற்றையும் அங்கங்கே போட்டுவிட்டு ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு திக்காகக் கிழித்துக்கொண்டு ஓடிப்போயினர். அப்படி அவர்கள் ஓடிப்போனதும் ஏழை கடகடனு மரத்தில் இருந்து இறங்கிவந்து அங்கே இருந்த தங்கங்களை எல்லாம் பரபரனு மூட்டைக்கட்டி அழகாக வீட்டிற்குக் கொண்டுபோய்ச் சேர்த்தான்.
பணக்காரன் காலையிலேயே எழுந்துப் பார்த்தால் வேற என்ன… ஏழை இதற்கு முன்னாடி இருந்ததை விட மகிழ்ச்சியாக வீட்டிற்கு முன்னால் உட்கார்ந்துகொண்டு ஐந்துவகை உணவுகளோடு விருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அதைப் பார்த்து பணக்காரன் “என்னடா… இவ்ளோ சந்தோசமா குளுகுளுனு இருக்குற. என்னாச்சு” என்றான். அதற்கு அவன் கலகலவென்று சிரித்துக்கொண்டு “ஒன்னும் இல்லணா… இதற்கு இடையில ஏதோ நோய் வந்து சுத்து வட்டாரத்துல பசுங்க எல்லாம் ஒன்னு கூட இல்லாம செத்துப் போயிடுச்சாம். அதனால பட்டினத்துல பசுத் தோலுக்கு எங்கயும் இல்லாத கிராய்க்கி வந்திடுச்சு. எனக்கு வேணும் எனக்கு வேணும்னு போட்டி போட்டுக்கினு ஆயிரம் தங்க வராகங்கள கொடுத்து வாங்கினு போனாங்க. அப்பா… எனக்கு இன்னும் கொஞ்சம் பசுங்க மட்டும் இருந்திருந்தா இன்னேரத்துக்கு பெரிய ஜமீன்தாரா ஆயிருப்பேன்” என்றான்.
அதைக் கேட்டதும் பணக்காரனுக்கு பேராசைப் பிறந்தது. அவனிடம் நூறு பசுக்கள் இருந்தன. உடனே அவை அனைத்தையும் கொன்று தோல்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு சந்தோஷமாக பட்டினத்திற்குச் சென்றான். போய்ப்பார்த்தால் வேற என்ன அங்கே ஒருத்தன் கூட வந்து சீண்டவில்லை. சும்மாகூட வாங்கிக்கொள்ள யாருமில்லை. அதோடு அவனுக்கு ஏழை பழிக்குப்பழி வாங்கிவிட்டான் என்று புரிந்துபோனது. கோபமாக மிகுந்த எரிச்சலோடு வீட்டிற்கு வந்தான்.
ஒருநாள் வீட்டில் யாரும் இல்லாததைக் கவனித்து ஏழையின் வீடு மொத்தத்தையும் இடித்து நிரவினான். ஏழை வந்து பார்த்தபோது வேற என்ன மொத்தம் சாம்பலாகி இருந்தது. அப்படி செய்தது பணக்காரன்தான் என்று தெரிந்திருந்தும் அவன் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. அமைதியாக அந்தச் சாம்பலை எல்லாம் பையில் எடுத்துக்கொண்டு வண்டியில் போட்டு ஊருக்கு வெளியே எங்கேயாவது போட்டுவிட்டு வருவதற்குக் கிளம்பினான்.
அப்படி போய்க்கொண்டிருந்தபோது வழியில் ஒரு வியாபாரி வண்டியில் மூட்டையை போட்டுக்கொண்டு எதிரில் வந்துகொண்டிருந்தான். அவன் ஏழையைப் பார்த்து “என்ன இருக்கு அந்த பையில” என்றான். ஏழை சிரித்துக் கொண்டே “ரத்தினங்களும் வைரங்களும்” என்றான். அதற்கு அந்த வியாபாரி “அப்டியா என் மூட்டைல தங்கம் இருக்கு. நீ எனக்கு ரத்னங்களயும் வைரங்களயும் கொடுக்குறியா… நான் உனக்கு தங்கம் தறேன்” என்றான். ஏழை சரி என்றான். அதோடு அந்த வியாபாரி “அப்டினா வண்டிங்கள மாத்திக்கலாம் வா” என்று தன் வண்டியை ஏழைக்குக் கொடுத்துவிட்டு ஏழையின் வண்டியைத் தான் எடுத்துக்கொண்டு சென்றான்.
அடுத்த நாள் காலையிலேயே பணக்காரன் எழுந்துப் பார்த்தால் வேற என்ன… ஏழை பட்டுத்துணிகள் போட்டுக்கொண்டு நூறு பணியாள்களோடு புதுவீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டிக்கொண்டு இருந்தான். அதைப் பார்த்து அவன் ஆச்சரியமடைந்து “இது என்னடா… இவ்ளோ பேரை வச்சு இவ்ளோ பெரிய வீட்டை கட்டினு இருக்க. அவ்ளோ பணம் எப்படி” என்றான். அதற்கு அவன் கலகலனு சிரித்துக்கொண்டு “அது ஒன்னும் இல்லணா… பக்கத்து ஊருல ஒரு வியாபாரிக்கு சாம்பல வச்சு நிறைய வேலை இருக்காம். அதனால ஒரு பை சாம்பலுக்கு ஒரு பை தங்கம்னு தங்க மூட்டைய வண்டில போட்டுக்கினு சுத்திட்டு இருந்தான். என் சாம்பலை எல்லாம் அவனுக்கு வித்துட்டு வந்தேன்” என்றான்.
அப்படியா என்று அந்தப் பணக்காரன் தன் பங்களா மொத்தத்தையும் இடித்துச் சாம்பலை ஏழு வண்டிகளில் ஏற்றிக்கொண்டு பக்கத்து ஊருக்குக் கிளம்பினான். காட்டில் வியாபாரி தங்க மூட்டைகளோடு போய்க்கொண்டிருந்தான். அவனைப் பார்த்த பணக்காரன் “என்ன வியாபாரி… உன் தங்க மூட்டையையும் என் சாம்பல் மூட்டையையும் மாத்திக்கலாமா” என்றான். அதோடு அவன் இதற்கு முன்னாடியும் ஏமாற்றிப்போனது இவன்தான் என்று நினைத்து…
”திருட்டுப்பயலே… அடிக்கடி ஏமாறதுக்கு என்னைய என்ன பைத்தியக்காரன்னு நினைச்சிட்டிருக்கியா” என்று அவனைப் பிடித்து மொத்து மொத்துனு மொத்தி நன்கு உதைத்து அனுப்பி வைத்தான்.
அதோடு பணக்காரனுக்கு கோபம் தலைக்கேறியது. இந்த முறை இவன் கதையை எப்படியாவது முடித்தாக வேண்டும் என்று நினைத்தான். அன்றைக்கு இராத்திரி நன்கு இருட்டியதும், அனைவரும் தூங்கிப்போனதும் சத்தம் ஏதும் வராமல் அடிமேல் அடி வைத்துப்போய், அவன் மூக்கில் மயக்க மருந்தை வைத்து, கை, கால்களைக் கட்டி, ஊருக்கு அப்பால் இருக்கிற ஒரு பெரியக் கிணற்றில் தூக்கி வீசினான். ஆனால் ஏழையின் அதிர்ஷ்டம் அதில் அவ்வளவு தண்ணீர் இல்லை. மெத்தென்று இருந்த புல்மேல் விழுந்தான். மயக்கம் தெளிந்ததும் ஏழை எழுந்து வாயால் கயிற்றை அவிழ்த்தான். மேலே எழும்பும்போது காலில் எதோ தட்டுப்பட்டது. என்னப்பா அது என்று பார்த்தால் வேற என்ன… எப்பவோ யாரோ ஒளித்துவைத்த தங்கக்காசுப் புதையல். அவை எல்லாவற்றையும் மூட்டைக் கட்டிக்கொண்டு ‘காப்பத்துங்க காப்பத்துங்க…’ என்று சத்தமாகக் கத்தினான். அந்த வழியில் போய்க்கொண்டிருந்த சிலர் அந்தச் சத்தத்தைக் கேட்டு உள்ளே கயிற்றைப்போட்டு அவனைக் காப்பாற்றினர்.
பணக்காரன் அடுத்த நாள் காலையிலேயே எழுந்துப் பார்த்தால் வேற என்ன… ஏழை வீட்டிற்கு முன்னால் உட்கார்ந்து புதையலில் இருந்து கிடைத்த தங்கக்காசு வராகங்களை எண்ணிக்கொண்டிருந்தான். அதைப் பார்த்து ஆச்சரியமடைந்த பணக்காரன் “இந்த வராகங்கள் எங்க இருந்துடா” என்று கேட்டான். அதற்கு அவன் கலகலனு சிரித்துக்கொண்டே “நேத்து யாரோ என்னை தூக்கிட்டு போயி ஊருக்கு வெளில இருக்கிற கிணத்துல போட்டுட்டாங்க. அந்த கிணறு ஒன்னும் அப்டி இப்டி சாதாரண கிணறு இல்ல. சொர்க்கத்திற்கு வழி இருக்கிற கிணறு. நான் உள்ளே விழுந்ததும் இறந்துபோன எங்க பாட்டன் பூட்டன்லாம் வந்து சொர்க்கத்துக்கு கூட்டினு போனாங்க. காலையில திரும்பி வரப்ப இதோ இந்த தங்கக்காசு புதையலை கொடுத்தாங்க” என்றான் மகிழ்ச்சியாக,
அதோடு அந்தப் பணக்காரனுக்கு ஆசை முளைத்தது. அன்றைக்கு இராத்திரி யாரிடமும் சொல்லாமல் கொல்லாமல் பத்துக் கோணிப்பைகளை எடுத்துக்கொண்டு தாவிக் கிணற்றிற்குள் குதித்தான். ஆனால் பாவம்… அவன் துரதிர்ஷ்டவசம் வழுவிப்போய் ஒரு பெரிய பாறையின் மேல் விழுந்தான். அவ்வளவுதான்… தலை உடைந்துபோய் அங்கேயே இறந்துபோனான்.
5. செய்த உதவியை மறக்காதே
ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான். அவன் பரம ஏழை. ஆனால் மிகவும் நல்லவும். யாராக இருந்தாலும் ஆபத்தில் இருந்தால் முடிந்த உதவிகளை செய்வானே தவிர இல்லை, முடியாது என்று சொல்லமாட்டான். ஒருமுறை அந்த ஊரில் பெரிய பஞ்சம் ஏற்பட்டது. மழை சுத்தமாகப் பெய்யவில்லை. அதோடு விவசாயமும் இல்லாமல் வருவாயும் இல்லாமல் அந்த விவசாயி எதாவது வேலை கிடைக்குமா என்று தூரத்தில் இருக்கிற தன் மாமியார் ஊருக்குப் புறப்பட்டான். வழியில் பெரிய காடு ஒன்று இருந்தது. அந்தக் காட்டில் போய்க்கொண்டிருந்தபோது ஓரிடத்தில் ஒரு பாழடைந்தக் கிணற்றில் இருந்து “காப்பாத்துங்க… காப்பாத்துங்க” என்று சத்தம் கேட்டது. “யாருடா உள்ளே” என்று நினைத்து அந்த விவசாயி வந்து எட்டிப் பார்த்தான். அதனுள்ளே ஒரு நாகப்பாம்பு, புலி, மனிதன் ஆகியோர் இருந்தனர். கிணற்றில் தண்ணீர் அவ்வளவு அதிகமாகவும் இல்லை குறைவாகவும் இல்லை இடுப்பு வரைக்கும் இருந்தது. ஆனால் மேலே வருவது மிகவும் கடினம். சுற்றியும் சுவர்கள் உயரமாக சுத்தமாகப் பாசி பிடித்துப்போய்க் கைவைத்தால் வழுக்கிவிடும் போல் இருந்தன.
அதற்கிடையில் புலி “ஓ மனுஷ மாமா… மனுஷ மாமா… என்னைக் காப்பாத்துவியா… இப்போதைக்கு பத்து நாளாவுது உள்ள விழுந்து திங்குறதுக்கு எதுவும் இல்லாம இன்னும் ஒரு மணி நேரத்திலயோ அரைமணி நேரத்திலயோ செத்திடுவேன் போல இருக்கு” என்றது.
அதற்கு அந்த விவசாயி “அப்பா… உன்னையா.. நீயே ஒரு காட்டு மிருகம். அதோட சேர்த்து நல்ல பசியா வேற இருக்க. மேல வந்ததும் என்னை கொன்னுட்டனா ” என்றான் மிகவும் பயத்தோடு.
அதற்கு அந்தப் புலி “என்ன மாமா.. அப்டி சொல்லிட்ட. பேச்சு மாறதுக்கு நாங்க என்ன மனுஷங்களா… பெத்த தாயை, இருக்கிற ஊரை, சின்ன வயசு நண்பனை, உசுரைக் காப்பத்துனவங்களை யாராவது மறப்பாங்களா” என்றது. சரியென்று அந்த விவசாயி அங்கு இருந்த ஒரு பெரிய ஆலமரத்து விழுதுகளை ஒன்றோடு ஒன்று கயிறு போல பின்னி உள்ளே விட்டான். புலி அதைப் கெட்டியாகப் பிடித்துக்கொண்டதும் முழு பலத்தையும் கூட்டி மேலே இழுத்தான் புலி வெளியே வந்து சந்தோஷமாக “மனுச மாமா… உன் உதவியை என்னைக்கும் மறக்க மாட்டேன். நீ ஆபத்து நேரங்கள்ள என்னை நினைச்சிக்கோ, என்னால முடிஞ்ச உதவியை பண்ணுறேன். ஆனால் ஒரு விஷயம் அந்த மனுஷனை மட்டும் காப்பாத்த வேணாம். அவன் அவ்ளோ நல்லவன் கிடையாது” என்று கூறிவிட்டுச் சென்றது.
அதற்கிடையில் கிணற்றில் இருந்து பாம்பு “ஓ மனுஷ மாமா… மனுஷ மாமா… என்னை காப்பாத்துவியா… இப்போதைக்கு ஒரு வாரம் கிட்ட ஆயிடுச்சு உள்ள விழுந்து. என்னை காப்பாத்துறது கூட சுலபம் ஒன்னும் பெருசா கனக்க மாட்டேன்” என்றது.
அதற்கு அந்த விவசாயி “அம்மோ… உன்னையா. நீயே விஷச் ஜந்து. மேல வந்ததும் என்னய கொத்திட்டனா” என்றான் அதீத பயத்தோடு. அதற்கு அந்தப் பாம்பு “என்ன மாமா… அப்டி சொல்லிட்ட. எதோ உயிர் பயத்துல எங்கள நாங்க காப்பாத்திக்க கொத்துவோமே தவுத்து சும்மா சும்மா காரணமே இல்லாம சாவடிக்க நாங்க என்ன மனுஷங்களா” என்றது.
அதைக் கேட்டு விவசாயி சரியென்று மீண்டும் கயிற்றை உள்ளே இறக்கினான். பாம்பு அதைச் சுற்றிக்கொண்டு வெளியே வந்தது. அது சந்தோஷமாக “உன் உதவியை என்னைக்கும் மறக்கமாட்டேன். நீ ஆபத்து நேரங்கள்ள என்னை நினைச்சிக்கோ, முடிஞ்ச உதவிய பண்ணுறேன். ஆனால் ஒரு விஷயம். அந்த மனுஷனை மட்டும் காப்பாத்த வேணாம். எங்களுக்கு பல்லுலதான் விஷம். ஆனா அவனுக்கு உடம்பு முழுக்க விஷம்தான்… ஜாக்கிரத” என்று சொல்லிவிட்டுச் சென்றது.
அதோடு விவசாயி அவனைக் காப்பாற்றலாமா வேண்டாமா என்று யோசனையில் மூழ்கினான். அதற்கிடையில் அந்த மனிதன் “அண்ணா… அண்ணா… காட்டு மிருகத்தை, விஷச் ஜந்துவ எல்லாம் காப்பாத்திட்டு சக மனுசன காப்பாத்த ஏன் இவ்ளோ யோசிச்சிட்டு இருக்க. இப்போதைக்கு உள்ள வுழுந்து நாலு நாளாயிடுச்சு. உதவின்னு வாய்விட்டு கேட்டுட்டா எதிரியா இருந்தாலும் கை கொடுக்கனுமே தவுத்து முதுகு காட்டக் கூடாதுனு பெரியவங்க சொல்லுவாங்க . அப்படினாலும் உனக்கும் எனக்கும் இடையில சண்டைங்க எதுவும் கிடையாது இல்லையா” என்றான்.
அதற்கு அந்த விவசாயி “அய்யய்யோ… நான் எதுக்கு யோசிக்கப் போறேன் இல்லை. கொஞ்சம் குண்டா இருக்கிற இல்லையா… இந்த விழுதுங்க போதுமா… இன்னும் கொஞ்ச நீளத்துக்கு பின்னனுமானு யோசிச்சிட்டு இருந்தேன்… அவ்ளோதான்… இருந்தாலும் ஆபத்துல இருக்குற சக மனுஷனுக்கு உதவி பண்ணாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா” என்று இன்னும் கொஞ்சம் விழுதுகளை எடுத்துவந்து நீளாமாக அதைப் பின்னி கிணற்றிற்குள் விட்டான். அதோடு அவன் கயிற்றைப் பிடித்துக்கொண்டு மெதுவாக வெளியே வந்தான்.
அந்த மனிதன் மகிழ்ச்சியோடு “உன் உதவியை எப்பயும் மறக்க மாட்டேன். தண்ணி தாகமா இருந்துச்சேனு வாளியில கயிறு கட்டிவிட்டேன் அப்ப காலு வழுக்கி உள்ளே விழுந்துட்டேன்.
மூனு நாளா இந்த பக்கம் யாரும் வரல. பிழைப்பேனு சுத்தமா நம்பிக்கையே இல்லை. உன்னைய அந்த கடவுள்தான் அனுப்பிருக்காரு. நான் இந்த பக்கத்துல இருக்கிற கிராமத்துக்கு அதிகாரி, உனக்கு எதாச்சும் உதவி தேவைப்பட்டுச்சுனா கண்டிப்பா என்கிட்ட வா” என்று கூறிவிட்டுச் சென்றான்.
விவசாயி மீண்டும் நடக்க ஆரம்பித்தான். அடுத்த நாளுக்கெல்லாம் தன் மாமியார் ஊருக்குச் சென்று அடைந்தான். அங்கேயும் வேலைகள் பெரிதாக இல்லை. ஒருநாள் சாப்பிட்டால் மறுநாள் பட்டினிதான். அப்படி ஒரு நான்கு மாதங்கள் ஓடிப்போயின. இனியும் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று நினைத்துத் திரும்பி ஊருக்குக் கிளம்பினான். அப்படி சென்றுகொண்டிருந்தபோது காட்டில் தான் காப்பாற்றியப் புலி் ஞாபகத்திற்கு வந்தது. அது எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம் எனக் கத்திப் பார்த்தான். அந்த அழைப்புக்குக் காட்டில் எங்கோ இருந்த புலி் ஓட்டம் ஓட்டமாக வந்தது. விவசாயியை வீட்டிற்கு அழைத்துச் சென்று வயிறு நிறைய வேண்டும் என்கிற அனைத்தையும் போட்டது. திரும்பிச் செல்லும்போது மதிப்பு வாய்ந்த ஒரு விலையுயர்ந்த வைரநகையை எடுத்துவந்து “காட்டுல பசில ஒரு திருடனைக் கொன்னப்போ அவன்ட கிடைச்சுது. இதை வித்து சந்தோஷமா வாழு” என்னு கையில் வைத்தது.
விவசாயி மகிழ்ச்சியடைந்து அதை எடுத்துக்கொண்டுப் புறப்பட்டான். இவ்ளோ விலையுயர்ந்த நகையை எங்கே விற்பதென்றோ, யாரிடம் விற்பதென்றோ தெரியவில்லை. அதற்குள் தான் காப்பாற்றிய மனிதன் ஞாபகம் வந்தான். கையோடு அவனிடம் சென்றான். அவன் அந்தக் கிராமத்திற்கு அதிகாரி, விவசாயியைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்து வீட்டிற்கு அழைத்துச் சென்று நன்கு மரியாதை செய்தான். விவசாயி அன்றைக்கு இரவில் யாரும் இல்லாதபோது தன் பையில் இருந்த நகையை எடுத்து, கிராம அதிகாரியிடம் கொடுத்து நடந்தது அனைத்தையும் கூறி விற்றுகொடுக்கச் சொன்னான்.
கிராம அதிகாரி அந்த நகையைப் பார்த்ததும் ஆச்சரியமடைந்தான். அது சாதாரண நகை கிடையாது அந்த ராஜ்யத்தை ஆளுகிற மகாராஜாவுக்குப் பரம்பரை பரம்பரையாக வரும் எவ்வளவோ மதிப்புமிக்க நகை. அந்த நகை என்றால் ராஜாவுக்கு அதீத விருப்பம். தான் கும்பிட்டு வருகிற கடவுளின் கழுத்தில் போட்டு அலங்கரித்து தினமும் பூஜைகள் செய்வார். அப்படிப்பட்ட நகை திருட்டுப்போனதால் மகாராஜா “யார் அந்த திருடன பிடிச்சு, நகையை மீட்டுத் தராங்களோ அவங்களுக்கு ஆள் உயரத்துக்கு தங்கமும் கேக்கிற பதவியும் கொடுக்கிறேன்” என்று தண்டோரா போட்டார்.
கிராம அதிகாரிக்கு அந்த நகையைப் பார்த்ததும் தங்கம் மேலேயும் பதவி மேலேயும் ஆசை வந்தது. அதோடு நடந்த விஷயங்கள் எதையும் அந்த விவசாயிடம் சொல்லாமல் “சரி… இந்த நகையை உன்கிட்டயே வச்சிக்கோ. எங்க ராஜாக்கு இது மாதிரி நகைங்க அப்டினா ரொம்ப விருப்பம். இவ்ளோ விலை அதிகமா இருக்கிறத அவரை தவிர வேற யாராலயும் வாங்க முடியாது. நாளைக்கி ராஜாகிட்ட கூட்டிட்டு போறேன். அவர் கேட்டா இது என்னோடதுதான். எங்க பாட்டான் பூட்டன் காலத்துல இருந்து பரம்பரையா வந்துட்டு இருக்கு. நேரம் சரியில்லாததால விக்கபோறேன்” என்று சொல்லு என்றான்.
கிராம அதிகாரி அடுத்தநாள் காலையிலேயே ராஜாவிடம் சென்று “ராஜா… உங்க நகைய திருடுன திருடன் மாட்டிக்கினான். நேத்து என்கிட்ட வந்து அதை விக்க பார்த்தான். அவனை மயக்கி பேசி நாளைக்கு உங்கட்ட கூட்டிட்டு வறேன்” என்றான். ராஜா ‘சரி’ என்றார்.
அடுத்த நாள் கிராம அதிகாரி விவசாயியை ராஜாவிடம் அழைத்துச் சென்றான். ராஜா அந்த நகையைப் பார்த்து “இது யாரோடது, உனக்கு எங்கிருந்து வந்துச்சு” என்று கேட்டார். அதற்கு அந்த விவசாயி “ராஜா! இது என்னோடதுதான். பாட்டன் பூட்டன் காலத்துல இருந்து பரம்பரை பரம்பரையா வந்துட்டு இருக்கு. நேரம் சரியில்லாததால விக்கபோறேன்” என்றான். உடனே ராஜா கோபமாக “ஏன்டா… என்கிட்ட இருந்து நகையை எடுத்துட்டு போனதும் இல்லாம என்கிட்டயே பொய் சொல்லி விக்கப் பாக்குரியா… என்னை பார்த்தா எதும் பைத்தியக்காரன் மாதிரி தெரிதா” என்று வீரர்களை அழைத்து “டேய்… இவனை இழுத்துனு போய் சிறையில போட்டு நாளைக்கு சாயந்தரம் ஊர்மக்கள் முன்னாடி தூக்குல போடுங்க” என்றார். அதைக் கேட்டு விவசாயி ஆடிப்போனான் ஆடி. “ராஜா… என்னை விட்டுருங்க . நான் திருடன் இல்லை” என்று நடந்தது அனைத்தையும் கூறினான். ஆனால் ராஜா அவன் வார்த்தைகளை நம்பவில்லை. காவலாளிகள் விவசாயியை இழுத்துக்கொண்டு சென்றனர். ராஜா கிராம அதிகாரிக்கு ஆள் உயரத்துக்குத் தங்கம் கொடுத்து, ஒரு சிறு ராஜ்யத்திற்கு ராஜாவாக ஆக்கினார்.
விவசாயிக்குக் கண்களில் நீர் பெருக்கெடுத்தது. இன்னும் ஒருநாள் போனால் சாவது உறுதி. எப்படியாவது தப்பித்தாக வேண்டும் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது பாம்பு நினைவுக்கு வந்தது. அதை நினைத்துக் கொண்டான். அவ்வளவுதான்… அது நிமடங்களில் அவன் முன்னால் வந்து நின்றது. நடந்தது அனைத்தையும் கேட்டுவிட்டு “அதுக்குதான் நான் முன்னாடியே சொன்னேன். அவன் அவ்ளோ நல்லவன் கிடையாதுனு. சரி நடந்தது என்னமோ நடந்திடுச்சு. வெளிய வறதுக்கு வழி சொல்றேன் கேளு” என்று என்ன செய்யவேண்டும் என்பதைக் கூறியது. விவசாயி சரியென்று அது கொடுத்த மூலிகையை வாங்கிக் கவனமாக மறைத்து வைத்துக்கொண்டான்.
அந்த நாகப்பாம்பு மெதுவாக யார் கண்ணிலும் படாமல் ராணி இருக்கிற அறைக்குள் நுழைந்தது. படுத்திருந்த ராணியின் காலில் முழுவதாக உள்ளே இறங்காமல் ஒரு கொத்து கொத்தியது. அவ்வளவுதான் அந்த வலியைத் தாங்க முடியாமல் ராணி அதிர்ச்சியில் எழுந்து “பாம்பு… பாம்பு…” என்று சத்தமாகக் கத்தினாள். காவலாளிகள் உள்ளே வந்த நேரத்திற்கு பாம்பு யார் கண்ணிலும் படாமல் ஓடிப்போயிருந்தது.
பாம்பு கொத்திய கொஞ்ச நேரத்திற்கு எல்லாம் ராணி நுரை நுரையாகக் கக்கி படுக்கையில் விழுந்தாள். வலி தாங்கமுடியாமல் துடிதுடித்துப்போனாள். ராஜா ராஜ்யத்தில் இருந்த வைத்தியர்கள் அனைவரையும் வரவழைத்தார். யார் எத்தனை மருந்து கொடுத்தாலும் அவளுடைய வலி கொஞ்சம் கூட குறையவில்லை. என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்தபோது விவசாயி வீரர்களிடம் “எனக்கு ராணி விசத்தை எப்டி இறக்கனும்றது தெரியும். ராஜாகிட்ட ஒரு வாய்ப்பு தரசொல்லி கேளுங்க” என்றான். அவர்கள் அப்படியே விஷயத்தை ராஜாவிடம் கூறினர். “சரி… எந்த புத்துல எந்த பாம்பு இருக்கோனு யாருக்குத் தெரியும்” என்று நினைத்து ராஜா விவசாயியை வரவழைத்தார். விவசாயி பாம்பு கொடுத்த மூலிகையை எடுத்து அதை அரைத்துக் கொத்திய இடத்தில் பூசி ஒரு கட்டுப்போட்டான். கொஞ்ச நேரத்திற்கு எல்லாம் வலி குறைந்துபோய் ராணி
பழைய நிலையை அடைந்தாள். அதைப் பார்த்து ராஜா மிகவும் மகிழ்ச்சியானார்.
அப்போது விவசாயி “ராஜா! நான் பொய் சொல்லல. எல்லாமே உணமையதான் சொல்லிட்டு இருக்கேன். எனக்கு அந்த நகையை தந்தது புலிதான். அதுவும் இல்லாம கிராம அதிகாரி அந்த விஷயத்தை சொல்ல வேண்டாம்னு சொன்னதாலதான் அப்படி சொன்னேன் ” என்றான். அதற்கு ராஜா “நீ சொல்றது உண்மைதான்னு நான் எப்டி நம்புறது” என்றார். அதற்கிடையில் ராஜ்யம் முழுக்க புலிகள் கர்ஜனையோடு நடுநடுங்க வந்துகொண்டிருந்தது. மக்கள் அனைவரும் பயந்துபோய் வீடு, வாசல்களை எல்லாம் விட்டுவிட்டு ஓடிப்போயினர். அதற்கிடையில் படைவீரர்கள் ஓடோடி வந்து “ராஜா! எங்கெங்கோ இருந்து புலிங்க எல்லாம் கூட்டம் கூட்டமாக ராஜ்யத்துக்குள்ள வந்திருக்கு. எங்க ஜென்மத்துல எப்பயும் அத்தனை புலிங்கள பார்த்தது இல்ல. அதுங்களை என்ன பண்றதுனே தெரியல” என்று கூறினர்.
ராஜா அதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்தார். அதற்கிடையில் அங்கு விவசாயி காப்பாற்றினப் புலி வந்தது. விவசாயியைப் பார்த்து “நீ எதுக்கும் பயப்பட வேணாம். நான் தந்த நகையால தானே உனக்கு இவ்ளோ பிரச்சனையும். அதனால உன்னை காப்பாத்துறதுக்கு எங்க கூட்டத்தை எல்லாம் கூட்டினு வந்திருக்கேன்” என்று கூறியது.
ராஜா புலி மூலமாக நடந்தது அனைத்தையும் இன்னொருமுறை தெரிந்துகொண்டு விவசாயியை விடுவித்தார். ராஜா தான் கொடுத்த அறிவிப்புப்படி விவசாயிக்கு ஆள் உயரத்துக்குத் தங்கம் கொடுத்து, தன் ஊருக்கே அவனைக் கிராம அதிகாரியாக அமர்த்தினார். புலி அவனைத் தன் மீது ஏற்றிக்கொண்டு திரும்பி அவன் ஊரில் விட்டுவிட்டு வருவதற்கு மற்ற புலிகளோடு சேர்ந்து மகிழ்ச்சியாகக் கிளம்பியது. நம்பவைத்து ஏமாற்றியதற்காக அந்த கிராம அதிகாரியை வரவழைத்து அனைவரின் முன்னிலையிலும் நூறு சவுக்கடிக் கொடுத்து, “இனி எப்பயும் உன்னை என் ராஜ்யத்துல பாக்ககூடாது” என்று கட்டுப்பாடு விதித்து ஊர் எல்லை வரைக்கும் திரும்ப திரும்ப அடித்தே விரட்டினார்.
6. நரி – சிங்கம்
ஒரு பெரிய காட்டில் ஒரு சிங்கம் இருந்தது. அது மிகவும் உயரமாக, வலுவாக இருந்தது. அதன் நகங்கள் மிகவும் கூர்மையாகவும் இருந்தன. அது ஒரு நாள் வழியில் போய்க்கொண்டிருந்த நரியை அழைத்து “நீ என்கிட்ட வேலை பாரு, காட்டுல எங்கனாலும் சரி யானைய பார்த்ததும் வந்து என்கிட்ட சொல்லு. நான் போயி அது தலையை உடைச்சி, அதோட மூளையை மட்டும் திங்கிறேன். மிச்சம் இருக்கிற உடம்பை எல்லாம் நீ சாப்பிட்டுக்கோ” என்று சொன்னது. நரி சரியென்று மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டது.
சிங்கம் இரண்டு பெரிய பெரியப் பாறைகளைக் கொண்டுவந்து பக்கத்தில் பக்கத்தில் போட்டு அந்தப் பாறையில் இருந்து இந்தப் பாறைக்கும் இந்தப் பாறையில் இருந்து அந்தப் பாறைக்கும் தாவிவிட்டு “என் கண்ணு சிவப்பா இருக்கா?” என்று கேட்டது. நரி இல்லை என்றது, சிங்கம் மீண்டும் அந்தப் பாறையில் இருந்து இந்தப் பாறைக்கும் இந்தப் பாறையில் இருந்து அந்தப் பாறைக்கும் தாவிவிட்டு “இப்ப சிவப்பா ஆய்டுச்சா?” என்று கேட்டது. நரி சிவப்பு ஆகியது என்றது.
”அப்பனா நீ போயி எங்கயாச்சும் யானை இருக்கானு பாத்துட்டு வா போ” என்றது. நரி காடு முழுவதும் தேடிப் பார்த்தது, ஓர் இடத்தில் யானையைக் கண்டதும் ஓட்டமாய் ஓடி வந்து சிங்கத்திடம் சொன்னது. உடனே சிங்கம் நரியைப் பின்தொடர்ந்தே சென்று யானையைக் கண்டதும் அதன் மேல் பாய்ந்தது. தன் கூர்மையான நகத்தால் யானையின் தலையில் பலமாக ஒரு அடி போடவும் அதன் தலை உடைந்து போய் மூளை வெளியே வந்து விழுந்தது.
சிங்கம் நரிக்குக் கொடுத்த வாக்குப்படி மூளையைத் தின்றுவிட்டு முழு உடலையும் நரிக்குக் கொடுத்தது. இப்படியே சிலநாட்கள் செல்லவும் நரி யானைகளின் உடலைத் தின்று தின்று மிகவும் கொழுத்துப்போனது. மெதுவாக, அதற்கு கண்கள் நெற்றிக்கு மேல் சென்றது.
ஒரு நாள் நரி, “நான் என்ன! சிங்கங்கிட்ட வேலை செய்றது. நானே யானைங்கள வேட்டையாடி அதோட மூளையை திங்கிறேன்” என்று நினைத்து வழியில் போய்க்கொண்டிருந்த ஒரு நாயை அழைத்து “நீ என்கிட்ட வேலை பாரு, காட்டுல எங்கனாலும் சரி யானைய பாத்ததும் வந்து என்கிட்ட சொல்லு. நான் போயி அது தலையை உடைச்சி, அதோட மூளையை மட்டும் திங்கிறேன். மிச்சம் இருக்கிற உடம்பை எல்லாம் நீ சாப்பிட்டுக்கோ” என்று சொன்னது. நாய் சரியென்று ஒப்புக்கொண்டது..
நரி கூட சிங்கம் போலவே இரண்டு பெரிய பெரியப் பாறைகளைக் கொண்டுவந்து பக்கத்தில் பக்கத்தில் போட்டு அந்தப் பாறையில் இருந்து இந்தப் பாறைக்கும் இந்தப் பாறையில் இருந்து அந்தப் பாறைக்கும் தாவிவிட்டு “என் கண்ணு சிவப்பா இருக்கா?” என்று கேட்டது. நாய் இல்லை என்றது, நரி மீண்டும் அந்தப் பாறையில் இருந்து இந்தப் பாறைக்கும் இந்தப் பாறையில் இருந்து அந்தப் பாறைக்கும் தாவிவிட்டு “இப்ப சிவப்பா ஆய்டுச்சா?” என்று கேட்டது. நாய் மீண்டும் இல்லை என்றது. அப்போது நரி “அப்டி கிடையாது ஆயிடுச்சுனு சொல்லு” என்றது. சரியென்று நரியின் கண்கள் சிவப்பு ஆகவில்லை என்றாலும் நாய் ஆகியது என்றது.
”அப்பனா நீ போயி எங்கயாச்சும் யானை இருக்கானு பாத்துட்டு வா போ” என்றது. நாய் காடு முழுவதும் தேடிப் பார்த்தது, ஓர் இடத்தில் யானையைக் கண்டதும் ஓட்டமாய் ஓடி வந்து நரியிடம் சொன்னது. உடனே நரி நாயைப் பின்தொடர்ந்தே சென்று யானையைக் கண்டதும் அதன் மேல் பாய்ந்து யானையின் தலையை உடைக்கக் காலால் பலாமாக அடிக்க ஆரம்பித்தது.
என்ன இருந்தாலும் நரி நரிதான்… சிங்கம் சிங்கம்தான்.
சிங்கத்தைப் போன்று நரிக்குக் கூர்மையான நகங்கள் இல்லை இல்லையா. அதனால் யானைக்கு எதுவும் ஆகவில்லை. யானைக்குத் தன் தலைமீது உட்கார்ந்து அடித்துக்கொண்டிருந்த நரியைக் கண்டதும் பயங்கர கோபம் வந்தது. உடனே தும்பிக்கையால் அதைப் பிடித்துக் கிருகிருனு சுற்றி அங்கே இருந்தப் பாறையில் போட்டு அடித்தது.
அவ்வளவுதான்… அந்த அடிக்கு நரியின் தலை உடைந்து அந்த இடத்திலேயே இறந்துபோனது. நாய் “குர்ரோ மொர்ரோ” என்று அலறிக்கொண்டு காட்டுக்குள் ஓடியது.
7. ஒரு பூவின் கதை
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்குத் தங்கப்பொம்மை மாதிரி ஒரு மகள் இருந்தாள். அந்தப் பிள்ளை என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும். சின்ன வயதிலிருந்து பாசமாக எதைக் கேட்டாலும் வாங்கிக்கொடுத்து வளர்த்து பெரியவள் ஆக்கினார். பெரியவள் ஆனதும் வரன் பார்க்கவேண்டும் இல்லையா. அதோடு நல்ல நல்ல சம்பந்தங்களை எல்லாம் தேட ஆரம்பித்தார். ஆனால் எத்தனை சம்பந்தங்களைக் கொண்டு வந்து நிறுத்தினாலும் அவள் “எனக்கு பிடிக்கவில்லை, எனக்கு பிடிக்கவில்லை” என்று நிராகரித்து வந்தாள். அதனால் அவர் மிகவும் கலைத்துப் போனார்.
ஒரு நாள் தனது மகளை அழைத்து, “என்னம்மா… நான் எந்த சம்பத்தத்தை கொண்டு வந்தாலும் பிடிக்கலேன்ற. அப்டி உனக்கு எப்டி பட்டவன் வேணும்னு சொல்லு… பார்த்து பண்ணி வைக்கிறேன்” என்றார். அப்போது அவள் மெதுவாக “அப்பா… அப்பா… எனக்கு சூரியன்னா ரொம்ப பிடிக்கும். எப்டியாச்சும் என்னை அவருக்கு கல்யாணம் பண்ணி வைப்பியா?” என்றாள்.
அப்போது அவள் தந்தை, “பாரும்மா… சூரியனை கல்யாணம் பணறதுன்றது சும்மா வாய் வார்த்தை கிடையாது. அவர் எங்கயோ வானத்தில சுத்திட்டு இருக்காரு. நாம பூமியில இருக்கோம். நமக்கும் அவருக்கும் சம்பந்தம் வச்சிக்கிறது நடக்குற வேலை இல்ல வேற யாரயாச்சும் பண்ணிக்கோ” என்றார்.
ஆனால்… அவள் தந்தையின் பேச்சைக் கேட்காமல்… “கல்யாணம்னு ஒன்னு பண்ணா சூரியனத்தான் பண்ணிப்பேன்… இல்லனா இல்லை” என்று முரண்டு பிடித்துக்கொண்டு பிடிவாதமாக உட்கார்ந்திருந்தாள். எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் அவள் கேட்காமல்போக, அவளுடைய தந்தை பயங்கர கோபமடைந்து, “என் பேச்சை கேட்காதப்போ… இங்க எதுக்கு இருக்க? போ… என் விட்டுல இருந்து” என்று அவளை வீட்டில் இருந்து விரட்டினார்.
அவள் “சூரியனை எப்படி கல்யாணம் பண்றது?” என்று யோசித்து… யோசித்து… மேற்குத் திசையில் புறப்பட்டுக் காடுகள், குன்றுகள், சின்ன சின்ன ஓடைகள், நதிகளை ஒவ்வொன்றாகக் கடந்து… கடந்து ஒரு பெரிய மலை மீது ஏறினாள். அந்த மலை மேல் ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டில் ஒரு வயதான அம்மா வசித்து வந்தாள். அவள் அந்த இளவரசியைப் பார்த்து, “என்னம்மா பாவம்! தனியா அப்டி சுத்திட்டு இருக்க. என்ன வேணும் உனக்கு?” என்று கேட்டாள். அப்போது அந்த இளவரசி கண் நிறையக் கண்ணீர் நிரம்பி் வழிய… வழிய நடந்தது அனைத்தையும் கூறினாள்.
அப்போது அந்தக் கிழவி சேலை முந்தானையால் அவள் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே “நீ எதுக்கும் கவலைபடாதே. நீ தேடுற சூரியன் வேற யாரும் இல்ல. என் மவன்தான். பகல் முழுசும் வானத்துல சுத்தி சுத்தி கலைச்சிப்போயி ராத்திரியானதும் வீட்டுக்கு வருவான். எனக்கு உன்னய ரொம்ப பிடிச்சு போச்சு. நான் சொல்றேன். நீ என் மகனை கல்யாணம் பண்ணிக்குவ” என்றாள். அதற்கு அவள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்.
சூரியன் வானத்தில் பகல் முழுவதும் சுற்றித் திரிந்துவிட்டு கலைத்துப்போய் இராத்திரி ஆனதும் வீட்டிற்குத் திரும்பிவந்தான். வீட்டில் இளவரசியைப் பார்த்து “யார்… இந்தப் பொண்ணு நம்ம வீட்டுல இருக்குறா?” என்று நினைத்தான். அதற்குள் அந்த இளவரசி சூரியனிடம், “நீனா எனக்கு ரொம்ப பிடிக்கும். உனக்காக எல்லாரையும் விட்டுட்டு வந்திருக்கேன். இப்போ உன்னை விட்டா எனக்கு வேற யாரும் இல்லை. என்னை கல்யாணம் பண்ணிக்கிறயா?” என்று கேட்டாள். அதற்குச் சூரியன், “பாரு, பாப்பா… நான் உங்கள மாரி சராசரி ஆளு கிடையாது. நான் எப்பயும் பகபகனு எரிஞ்சிக்கினு வெப்பத்தை கக்கிக்கினு இருப்பேன். என்னை கண்ணு திறந்து நேரா பார்த்தா போதும்… யாரு கண்ணா இருந்தாலும் பொசுங்கிரும். என்னை தொட்டால் போதும் கறிஞ்சி பஸ்பமாயிடுவாங்க. அப்படி இருக்க நீ எப்டி என்னை கல்யாணம் பண்ணிப்ப? போ… போய் உங்க அம்மா அப்பா பார்த்து வைக்கிற சம்பந்தத்தை பண்ணிக்கினு நிம்மதியாக இரு போ” என்றான். அவள் அந்த வார்த்தைகள் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், “இல்லை… நான் உன்னை தவுத்து வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன் என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா… பண்ணமாட்டியா..?” என்று பிடவாதமாக உட்கார்ந்திருந்தாள்.
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் போகவும், சூரியனுக்குக் கோபம் மிகுதியாகி, “கல்யாணமும் கிடையாது… ஒன்னும் கிடையாது போ… என் வீட்டுல இருந்து” என்று அவளை விரட்டினான். பாவம், அவள் அழுதுகொண்டே… வானத்தைச் சுற்றி வருகிற சூரியனைப் பார்த்துக்கொண்டே… எதுவும் சாப்பிடாமல் சில நாட்களில் இறந்துபோனாள்.
அவள் எங்கு இறந்தாளோ சரியாக அங்கேயே சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு செடியாகப் பிறந்தாள். அது சிலநாட்களில் வளர்ந்து பெரியதாகி அதில் ஒரு பூ பூத்தது. அந்தப் பூ எப்படி இருந்தது என்றால் பாதிக் கையளவுக்கு பெரிதாக நிலா மாதிரி வட்டமாக பசும்பச்சை இதழ்களோடு மிகவும் அழகாக இருந்தது.
அன்று முதல் அந்தப் பூ என்றைக்காவது சூரியன் மீண்டும் வரமாட்டாரா… கல்யாணம் செய்து கொள்ள மாட்டாரா என்று காலையில் சூரியன் வானத்தில் தோன்றுவது முதல் சாயந்தரம் மறையும் வரைக்கும் ஆசையாகப் பார்த்துக்கொண்டும் சூரியன் எந்தப் பக்கம் திரும்பினாலும் அந்தப் பக்கம் திரும்பிக்கொண்டும் இருந்தது. அந்தப் பூவையே நாம் சூரியகாந்திப் பூ என்று அழைத்து வர ஆங்கிலத்தில் அதனை ‘சன் ஃபளவர்’ என்று அழைக்கின்றனர்.
8. ஊசி – டாக்டர்
ஒரு ஊரில் ஒரு ஊசி இருந்தது. பாவம் அதற்கு தினுமும் காய்ச்சல் வரும். எத்தனை நாள்கள் ஆகியும் கொஞ்சம் கூட குறையவில்லை. அதோடு அது சோர்ந்துபோய் தள்ளாடி தள்ளாடி டாக்டரிடம் சென்றது. டாக்டர் ஊசி படுகிற அவஸ்தையைக் கொஞ்சம் கூட புரிந்துகொள்ளாமல் “நீயே ஊசி. பின்ன உனக்கு எங்க ஊசி போடுறது… போ… போ… இங்க இருந்து” என்று விரட்டினான். பாவம்… அந்த ஊசி எவ்வளவு மன்றாடியும் டாக்டர் அதற்கு மருந்தே கொடுக்கவில்லை.
ஊசி அழுதுகொண்டே… அழுதுகொண்டே… திரும்பி வீட்டிற்குப் போய்க்கொண்டிருக்க, வழியில் ஒரு வாழைப்பழத்தோல் எதிர்ப்பட்டு “ஊசி மாமா… ஊசி மாமா…. எதுக்கு இப்டி அழுதுட்டு இருக்க, என்னதான் உன் கஷ்டம்” என்று கேட்டது. ஊசி நடந்தது அனைத்தையும் மணி கோர்த்தது போல் வரிசையாக விவரித்தது. அதைக் கேட்டு வாழைப்பழத்தோல் சோகத்தில் “அய்யோ பாவம்… காய்ச்சல் வந்து நீ இவ்ளோ கஷ்டப்படுற ஊசியே போடமாட்டேன்னானா… வா போகலாம்… போயி என்ன அவன் கதைதானு பாப்போம்” என்றது கோபமாக,
”சரி” என்று ஊசி வாழைப்பழத்தோலுடன் சேர்ந்து திரும்பவும் டாக்டர் வீட்டிற்குப் போய்க்கொண்டிருக்க, வழியில் சாணம் குறுக்கே வந்து “ஊசி மாமா… ஊசி மாமா… எங்க நீயும் , வாழைப்பழத்தோலும் போயிட்டு இருக்கிங்க… என்னதான் விஷயம்” என்று கேட்டது. அப்போது அந்த ஊசி அதனிடம் நடந்தது அனைத்தையும் கூறியது. அதைக் கேட்டு அந்தச் சாணம் “அவனுக்கு நல்லா கொழுப்பு ஏறிப் போயிடுச்சுபோல இருக்கு. . நானும் உங்க கூட வரேன்… போலாம்… அவன் கதைதான் என்னனு பார்க்கலாம்” என்று அதுவும் அவைகளோடு சேர்ந்து கிளம்பியது.
அப்படி ஊசி, வாழைப்பழத்தோல், சாணம் மூன்றும் போய்க்கொண்டிருக்க, வழியில் ஒரு சின்ன தேளுகுஞ்சு எதிர்ப்பட்டு “ஊசி மாமா.. ஊசி மாமா… எங்க நீயும் வாழைப்பழத்தோலும் சாணியும் போய்ட்டு இருக்கிங்க . என்னதான் விஷயம்” என்று கேட்டது. அப்போது அந்த ஊசி அதனிடம் நடந்தது அனைத்தையும் கூறியது. அதைக் கேட்டு அந்த தேளு “உனக்கு முன்ன பின்ன யாரும் இல்லன்றதாலதான அவனுக்கு அவ்ளோ தைரியம். அவனுக்கு என்ன பெரிய பாளையக்காரனு நினைப்பா… நானும் வறேன்… பார்க்கலாம் வா அவன் கதைதான் என்னனு” என்று அதுவும் அவைகளோடு சேர்ந்து புறப்பட்டது. அப்படி அந்த நான்கும் சேர்ந்து அந்த ஆஸ்பத்திரிக்குச் சென்றடைந்தபோது … அங்கு டாக்டர் இல்லை. எதோ வேலையாக வெளியே சென்றிருந்தார். சரியென்று நான்கும் மெதுவாக உள்ளே நுழைந்தன.
வாழைப்பழத்தோல் வாசலுக்கு முன்பாக அமர்ந்துகொண்டது. தேள் அலமாரியில் மருந்திற்கு அருகில் சென்றது. ஊசி என்னமோ நாற்காலியின் மேலே அப்படியே நட்டமாக நின்றது. சாணம் சரியாக நாற்காலியின் மேலுள்ள சீலிங்கில் ஒட்டிக்கொண்டிருந்தது.
சிறிதுநேரத்தில் டாக்டர் மிடுக்காக… குலுங்கிக்கொண்டே… டக்டக்டக் என்று நடந்துகொண்டு உள்ளே வந்தான். வாசலுக்கு முன்னால் வாழைப்பழத்தோல் தயாராக இருந்தது இல்லையா… பார்க்காமல் காலை வைத்தான். அவ்வளவுதான்… சர்ருன்னு வழுக்கி டமார்னு கீழே விழுந்தான். விழுந்ததில் கால் உடைந்தது.
அவன் அய்யோ அம்மானு இடித்து, மோதி எழுந்து நொண்டிக்கொண்டே… நொண்டிக்கொண்டே… வலி குறைவதற்கு மருந்து போடலாம் என்று அலமாரியில் கை வைத்தான். எப்போது அலமாரியில் கை வைப்பான்… எப்போது அவனை ஒரு கை பார்க்கலாம்னு எதிர்பார்த்துக்கொண்டிருந்த தேள்குஞ்சு உடனே அவன் கையில் படக்கென்று கொடுக்கால் ஒன்றுபோட்டது.
அவ்வளவுதான்… அந்த வலியில் அவன் வெடவெடத்துப்போய் நாற்காலிக்கு அருகில் சென்றான். அப்போதைக்கு ஊசி செங்குத்தாக அதன் மேல் நின்றவாறு எதிர்பார்த்துக்கொண்டிருந்தது இல்லையா… அவன் அதைப் பார்க்காமல் அப்படியே உட்கார்ந்தான். அவ்வளவுதான்… அது சடாரென்று உள்ளே இறங்கியது. அவ்வளவுதான்… அவன் வலியில் துடிதுடித்துப்போய் “அப்பா” என்று கத்திக்கொண்டே வாயைத் திறந்தான். அவ்வளவுதான் மேலிருந்த சாணம் டமார்னு அவன் வாயில் விழுந்தது.
9. கிழவி – செம்மறி
ஒரு ஊரில் ஒரு வயாதானவள் இருந்தாள். அந்த வயதானவளுக்கு நான் என்று சொல்லிக்கும்படி யாரும் இல்லை. தான் ஒருத்தியாகச் சமைத்து, உண்டு வாழ்ந்துவந்தாள். அவள் வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு குளம் இருந்தது. ஒருநாள் பக்கத்து வீட்டுக்காரர்கள் அந்தக் குளத்தில் மீன் பிடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்த வயதானவளும் மீன் பிடிக்கலாம் என்று ஒரு சின்ன வலையை எடுத்துக்கொண்டு போனாள். காலையில் இருந்து சாயந்தரம் வரைக்கும் வலை வீசிக்கொண்டிருந்தாளே தவிர ஒரு மீன் கூட விழவில்லை.
”எப்பவும் நாலோ அஞ்சோ விழும். இன்னைக்கு ஒன்னு கூட விழல” என்று நினைத்துக் கடைசியாக ஒருமுறை பார்க்கலாம் என்று வலையை வீசினாள். மின்னல் வெட்டியதுபோல் திடீரென்று சரியாக நம் சுண்டுவிரல் அளவுக்கு ஒரு சின்னமீன் விழுந்தது…
ஏதோ ஒன்று கிடைத்தது போதும் என்று நினைத்து அந்த வயதானவள் அதை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தாள். போயும்போயி இவ்வளவு சின்ன ஒன்றை கறிவைத்துத் தின்ன மனம் வரவில்லை. அதோடு “எப்படியும் எனக்கு யாரும் இல்லை. இந்த மீன் குஞ்சியயாவது வளப்போம்” என்று நினைத்து அதை எடுத்துக்கொண்டு போய் ஒரு செம்பில் விட்டாள். தினமும் அதற்கு மூன்று வேலையும் நல்லா சோறு, காய்கறிகள், பழங்கள் எவ்வளவு தின்னுமோ அந்த அளவுக்குப் போட்டுவந்தாள்.
அப்படி அந்த மீன் குஞ்சு தினமும் நன்கு தின்று தின்று ஒரு வாரத்திற்குப் பிறகு சுண்டுவிரல் அளவுக்கு இருந்தது கொஞ்சம் பெருத்து செம்பு அளவுக்குப் பெருத்தது. அதோடு அந்த வயதானவள் அதை எடுத்துப்போய் ஒரு பெரிய குடத்தில் விட்டாள். வயதானவள் மூன்று வேலையும் நல்லா உணவு கொடுத்து வந்தாள் இல்லையா. அதோடு அது நன்கு மொக்கி மொக்கி அடுத்த வாரத்திற்கு எல்லாம் செம்பு அளவுக்கு இருந்தது கொஞ்சம் பெருத்து குடத்தோட அளவுக்கு ஆனது. அப்போது அந்த வயதானவள் அதை எடுத்துச் சென்று குளியலறையில் இருந்த பெரிய தொட்டியில் விட்டாள். ஆனால் ஒரு வாரம் கழியவும் அது நன்கு தின்று தின்று குடம் அளவுக்கு இருந்தது கொஞ்சம் தொட்டி அளவுக்குப் பெருத்துப்போனது. அதோடு அந்த வயதானவள் இனி வேற வழியில்லை என்று நினைத்து அதை எடுத்துச் சென்று வீட்டிற்கு அருகில் இருந்த குளத்தில் கொண்டுவிட்டாள்.
அந்த வயதானவள் எங்கு போனாலும் சாப்பாட்டு நேரத்திற்கு எல்லாம் குளத்தாங்கரைக்கு வந்து “ஷ்…. ஷ்…” என்று அழைப்பாள் . அப்படி அந்த வயதானவள், “ஷ்..ஷ்…” என்றதும் அந்த மீன் எங்கு இருந்தாலும் சர்ருன்னு நீந்தி அவளிடம் வரும். அந்த வயதானவள் தான் கொண்டுவந்தது எல்லாவற்றையும் அதற்குப் பாசமாக ஒன்றொன்றாக உண்ணகொடுத்து கதை பேசுவாள்.
ஒருநாள் அந்த வயதானவள் ஏதோ வேளை விஷயமாக பக்கத்து ஊருக்குச் சென்றாள். சாய்ந்தரம் வரைக்கும் திரும்பவில்லை. அன்று மத்தியானம் என்ன நடந்தது என்றால் ஆடுமேய்ப்பவர்கள் சிலர் ஆடுகளை பத்திக்கொண்டு அந்த குளத்தாங்கரைக்கு வந்தனர். ஆடுகள் தண்ணீர் குடித்ததும் அவற்றை அழைக்க “ஷ்…ஷ்…” என்றனர். கிழவிதான் வந்திருப்பது என்று நனைத்து அந்த மீன்குஞ்சு அழகாக வெளியே வந்தது. அதைப் பார்த்து அவர்கள் “அப்பா! எவ்ளோ பெருசா இருக்கு மீனு. இதை எப்படியாச்சும் பிடிச்சா நல்லா கறிவைச்சி வயிறு நிறைய திங்கலாம்” என்று நினைத்து கமுக்கமாகச் சுற்றிவளைத்துப் பிடித்தனர். அதை வீட்டிற்கு எடுத்துக்கொண்டுபோய் அடித்துக் குழம்பு வைத்தனர்.
கிழவி சாய்ந்தரம் வீட்டிற்கு வந்ததும் “பாவம்! மத்தியானத்தில இருந்து எவ்ளோ பசில இருக்குதோ என்னமோ” என்று நினைத்துப் பரபரனு ஒரு பெரிய சட்டி நிறையச் சோறு எடுத்துக்கொண்டு குளத்தாங்கரைக்கு வந்து எப்போதும் போல் “ஷ்.. ஷ்…” என்று அழைத்தாள். அது உள்ளே இருந்தால் இல்லையா வருவதற்கு; எவ்வளவு நேரம் அழைத்தும் வரவில்லை.
”இதுக்கு என்னடா கேடு வந்துச்சு! தினம் கூப்டதும் சொய்யினு துள்ளிக்கிட்டு வரும். இன்னைக்கு என்ன எவ்ளோ கூப்டும் வரல்ல. என்ன ஆச்சு” என்று நினைத்துக்கொண்டே சுற்றியும் பார்த்தால் குளத்தாங்கரை முழுவதும் ஆடுகளின் கால் தடங்களாகத் தெரிந்தன. “இந்த ஆட்டுக்காரங்கள தவுத்து வேற யாரும் பிடிச்சிருக்க முடியாது” என்று நினைத்து, தலையில் கம்பளி போர்த்திக்கொண்டு, கையில் ஒரு ஓட்டை வைத்துக்கொண்டு, பிச்சைக்காரி மாதிரி அந்த ஆடுமேர்ப்பவர்கள் வீடிருக்கும் பகுதிக்குச் சென்று “அம்மா! சோறு தின்னு நாலு நாளாச்சும்மா! கொஞ்சம் எதாச்சும் இருந்தா போடுங்கம்மா” என்று சத்தமிட்டாள். அந்த ஆடு மேர்ப்பவர்கள் யாரோ பிச்சைக் கேட்கிறார்கள் என்று நினைத்து மீன்குழம்பை எடுத்துவந்து அவள் தட்டில் போட்டனர். அதோடு அவர்கள்தான் மீனைப் பிடித்து தின்றிருக்கிறார்களென அந்த வயதானவள் கண்டுபிடித்துவிட்டாள். உடனே ஓட்டமும் நடையுமாய் சென்று ஊரிலுள்ள எல்லோரையும் அழைத்துவந்து என் மீனை கொடுங்கள் என்று ஆடு மேய்ப்பவர்களோடு பயங்கரச் சண்டையில் இறங்கினாள்.
செத்துபோனது எதுவும் திரும்ப வராது இல்லையா. அதனால் ஊரில் உள்ள அனைவரும் “நடந்தது எதோ நடந்து போச்சு. அது இல்லாம உனக்கு பிடிச்சது வேற எதாச்சும் வேணும்னா கேளு. நாங்க கொடுக்கிறோம்” என்றனர். அந்த வயதானவள் என்ன கேட்பதப்பா என்று யோசித்துக்கொண்டிருந்தபோது அவர்கள் அருகில் ஒரு நல்ல செம்மறிக்குட்டி நிற்பதைப் பார்த்தாள். கையோடு அது வேண்டும் என்றாள். சரியென்று ஊர்மக்கள் அந்தச் செம்மறிக்குட்டியை அவளுக்குக் கொடுத்தனர்.
கிழவி அந்தச் செம்மறிக்குட்டியை மிகவும் பாசமாகப் பார்த்துக்கொண்டாள். நல்ல நல்லப் பழங்கள், காய்கறிகள் கொண்டுவந்து போட்டாள். அப்படி சில நாட்களில் அது வளர்ந்து பெரியதாகியது. கிழவி தினமும் தனக்காகக் காட்டிற்குச் சென்று கஷ்டப்பட்டு எல்லாவற்றையும் கொண்டுவருவதைப் பார்த்து, ஒருநாள் செம்மறி “பாட்டி பாட்டி… தினம் என் இரைக்கோசம் எதுக்கு இவ்ளோ கஷ்டபடுற. நான் இப்ப வளர்ந்திட்டேன் இல்லயா, நானே போயி தின்னுட்டு வறேன் ” என்றது. அந்த வயதானவள் சரி என்றாள்.
ஒருநாள் அந்தச் செம்மறி காட்டில் போய்க்கொண்டிருக்க, வழியில் இரண்டு திருடர்கள் ஒரு குகையில் இருந்து வெளியே வருவதைப் பார்த்தது. அவர்கள் அப்படி வெளியே போனதும் இது கமுக்கமாக உள்ளே நுழைந்தது. அவர்கள் எங்கெங்கிருந்தோ எடுத்துவந்த வைரங்கள், இரத்திணங்கள், மணிகள், மாணிக்கங்கள், தங்கம், ஆபரணங்கள்… ஒன்று இல்லை இரண்டு இல்லை… குவியல் குவியலாகக் கிடந்தன. உடனே அந்தச் செம்மறி ஒருமுறை அங்குமிங்கும் பார்த்துவிட்டு, குவியல் குவியலாகக் கிடந்தவற்றை எல்லாம் அப்படியே சுத்தமாக ஒன்றுவிடாமல் அனைத்தையும் விழுங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தடைந்தது.
இவை எல்லாம் வயிற்றிற்குள் போனதே தவிர்த்து செரிமானம் ஆகாது இல்லையா. அதோடு வீட்டிற்கு வந்ததும் “பாட்டி பாட்டி! ஒரே வயிறு வலியா இருக்கு. கொஞ்சம் உலக்கய எடுத்துட்டு வந்து ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு போடு போடு” என்றது. அதோடு பாட்டி “வழியில கிடைச்சதலாம் தின்னா வயிறு வலிக்காம என்ன பண்ணும்” என்று கோபமாக உலக்கையை எடுத்துவந்து இடதுபக்கம் ஒரு குத்து குத்தினாள் . அவ்வளவுதான்… அந்தச் செம்மறி வாயில் இருந்து மணிகளும் மாணிக்கங்களும் படார்னு கீழே விழுந்தன. அந்த வயதானவள் ஆச்சரியத்தோடு வலதுபக்கம் ஒரு குத்து குத்தினாள். இந்தமுறை வைரங்களும் வைடூரியங்களும் வந்து விழுந்தன. அப்படி ஒவ்வொரு குத்துக்கும் ஒவ்வொன்றாக வயிற்றில் இருந்தவை எல்லாம் ஒன்றுகூட மிச்சம் இல்லாமல் வெளியே வந்து விழுந்தன.
அந்த வயதானவள் அவை எல்லாவற்றையும் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். அவற்றை விற்று பெரிய மாடிவீடு கட்டிக்கொண்டாள். அதைக் கவனித்து வந்த பக்கத்து வீட்டுப் பெண் “நேத்து முந்தாநாள் வரைக்கும் சாதாரண ஆளா இருந்தா. திடீர்னு எங்க இருந்து வந்துச்சுப்பா இவ்ளோ பணம்” என்று ஆச்சரியப்பட்டு வயதானவளிடம் சென்று “என்ன விஷயம்” என்று கேட்டாள். அந்த வயதானவள் நடந்தது அனைத்தையும் கூறினாள் .
அந்தப் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் ஒரு நாய் இருந்தது. அவள் வீட்டிற்குச் சென்றதும் “நீயும் இருக்கியே எதுக்குனு? மூனு வேலையும் தின்னுட்டு இருக்கிறத தவுர்த்து வேற ஒன்னுத்துக்கும் வேலைக்கு ஆவமாட்ட. போ… போயி அந்த செம்மறி ஆட்டை மாரி எங்கயாச்சும் எதாச்சும் கிடைச்சுதுனா தின்னுட்டு வா போ” என்று அதை உதைத்துத் தள்ளினாள். பாவம் அந்த நாய் காட்டில் எவ்வளவு தூரம் சென்றும் அதற்கு எதுவும் கிடைக்கவில்லை. அதோடு எலும்புகளையும் குப்பைக் கூழங்ளையும் தின்றுவிட்டு அமைதியாக வீட்டிற்கு வந்தது.
நாய் வீட்டிற்கு வந்ததும் அவள் அழகாகப் பாயை விரித்து நாயை அதன்மேல் படுக்கப்போட்டு உலக்கையால் இடது பக்கத்தில் ஒரு குத்து குத்தினாள். அது எலும்புகளைக் கக்கியது. “இதென்னடா பா” என்று வலது பக்கத்தில் குத்தினால், கக்கியது ஒரே நாற்றம் எடுத்தது. அதோடு அவள் “சீ! தரித்திரம் பிடிச்சதே! வீடு முழுக்க நாறடிச்சிட்ட” என்று அதை உதைத்துத் தள்ளினாள்.
10. எங்க மல்லண்ணா இறந்துபோச்சு
ஒரு ஊரில் ஒரு ராணி இருந்தாள். அவள் மிகவும் நல்லவள். யாராவது கஷ்டப்படுவதை பார்த்தால் தாங்கிக் கொள்ளமாட்டாள். அந்த ராணியடம் ஒரு வண்ணாத்தி இருந்தாள். அந்த வண்ணாத்தி அவ்வப்போது ஊரில் நடக்கும் விஷயங்களை எல்லாம் ராணிக்கு மணி கோர்த்தாற்போல் அப்படியே விவரிப்பாள். பாடல்கள் நன்கு பாடுவாள். எப்போதும் சிரித்துக்கொண்டும் எல்லாரையும் சிரிக்க வைத்துக்கொண்டும் இருப்பாள். அதோடு வண்ணாத்தி என்றால் ராணிக்கு எவ்வளவோ பிடிக்கும். அவளுக்கு வேண்டியவற்றை எல்லாம் கொடுத்து அன்பாகப் பார்த்துக்கொண்டாள்.
ஒருநாள் எப்போதும் போல் வண்ணாத்தி துணிகளை எல்லாம் சுத்தமாகத் துவைத்துவிட்டு வந்து ராணி முன்பு வைத்தாள். ராணியின் துணிகளை எண்ணிக்கொண்டிருந்தபோது தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள். அதைப் பார்த்து ராணி “அய்யோ பாவம்! நம்ம வண்ணாத்திக்கு என்ன கஷ்டம் வந்துச்சோ என்னமோ. எப்பயும் அழமாட்டா இன்னைக்கி அழுதுட்டு இருக்காளே” என்று நினைத்து “ஏம்மா! எகுக்கு இப்டி அழுதுட்டு இருக்க?” என்று கேட்டாள். அதற்கு அந்த வண்ணாத்தி அழுதுகொண்டே “என்ன சொல்ல சொல்றிங்க அம்மா! நேத்துதான் எங்க மல்லண்ணா இறந்து போனான். அது ஞாபகம் வந்து அழுதுட்டு இருக்கேன்” என்றாள். வண்ணாத்தியின் கவலைக்கரத்தைப் பார்த்து ராணியும் சோகமானாள். கண்களில் நீர் பெருக்கெடுத்தது. மல்லண்ணா, அவளுக்கு மிகவும் வேண்டியவரோ என்னமோ என்று நினைத்து ராணியும் அழ ஆரம்பித்தாள்.
ராணி அழுதுகொண்டிருப்பதைப் பார்த்த ராஜா “அய்யோ பாவம்! என் ராணிக்கு என்ன கஷ்டம் வந்துச்சோ எப்பயும் அழமாட்டா இன்னைக்கி அழுறாளே’ என்று நினைத்து ராஜாவும் அழ ஆரம்பித்தார்.
ராஜா அழுவதைப் பார்த்த மந்திரிகள், சேனாதிபதிகள் “அய்யோ பாவம்! நம்ம ராஜாக்கு என்ன கஷ்டம் வந்துச்சோ, எப்பயும் அழமாட்டாரு இன்னைக்கி அழுதுட்டு இருக்காரே’ என்று நினைத்து அவர்களும் அழ ஆரம்பித்தனர்.
மந்திரிகளும், சேனாதிபதிகளும் அழுவதைப் பார்த்த படைவீரர்களும் பணிப்பெண்களும் “அய்யோ பாவம்! நம்ம மந்திரிங்களுக்கு சேனாதிபதிங்களுக்கு என்ன கஷ்டம் வந்துச்சோ எப்பயும் அழமாட்டாங்க இன்னைக்கி அழுதுட்டு இருக்காங்களே” என்று நினைத்து அவர்களும் அழ ஆரம்பித்தனர். படைவீரர்களும் பணிப்பெண்களும் அழுவதைப் பார்த்த மக்கள் “அய்யோ பாவம்! நம்ம படைவீரர்களுக்கும் பணிபெண்களுக்கும் என்ன கஷ்டம் வந்துச்சோ எப்பயும் அழமாட்டாங்க இன்னைக்கி அழுதுட்டு இருக்காங்களே” என்று நினைத்து அவர்களும் அழ ஆரம்பித்தனர்.
அப்படி ராஜ்யத்தில் எந்த தெருவைப் பார்த்தாலும், எந்த வீட்டைப் பார்த்தாலும் ஒரே அழுகையோ அழுகை. ஒருவரைப் பார்த்து மற்றொருவர் வானத்துக்கும் பூமிக்கும் விழுந்து விழுந்து அழுதனர். அந்த நேரத்தில் பக்கத்து ஊரிலிருந்து ஒரு வியாபாரி சரக்கு விற்கலாம் என்று அந்த ராஜ்யத்திற்கு வந்தான். பார்த்தால் வேற என்ன. ஊர் முழுவதும் அழுது கொண்டிருந்தனர். அவன் ஆச்சரியத்தில் “இதென்னப்பா… எல்லாரும் இப்படி அழுதுட்டு இருக்காங்க” என்று நினைத்து ஒருவரிடம் சென்று “என்ன நடந்துச்சு? எதுக்கு இப்டி அழுதுட்டு இருக்க” என்று கேட்டான். அதற்கு அவன் “என்னவோப்பா, எனக்கும் தெரியாது. எங்க படை வீரர்களும் பணிப்பெண்களும் அழுறாங்க நானும் அழுறேன்” என்றான். அவன் படைவீரர்களிடமும் பணிப்பெண்களிடமும் போய் “என்ன நடந்துச்சு ? எதுக்கு இப்டி அழுதுட்டு இருக்கிங்க” என்று கேட்டான். அதற்கு அவர்கள் “என்னவோப்பா எங்களுக்கும் தெரியாது. எங்க மந்திரிங்களும் சேனாதிபதிங்களும் அழுறாங்க நாங்களும் அழுறோம்” என்றனர்.
அவன் மந்திரிகளிடமும் சேனாதிபதிகளிடமும் சென்று “என்ன நடந்துச்சு? எதுக்கு இப்டி அழுதுட்டு இருக்கிங்க” என்று கேட்டான். அதற்கு அவர்கள் “என்னவோப்பா எங்களுக்கும் தெரியாது எங்க ராஜா அழுறாரு நாங்களும் அழுறோம்” என்றனர்.
அவன் ராஜாவிடம் சென்று “என்ன நடந்துச்சு? எதுக்கு இப்டி அழுதுட்டு இருக்கிங்க மகாராஜா?” என்று கேட்டான். அதற்கு ராஜா “என்னவோப்பா, எனக்கும் தெரியாது. நம்ம ராணி அழுகிறா நானும் அழுகிறேன்” என்றார்.
அவன் ராணியிடம் சென்று “என்ன நடந்துச்சு மகாராணி ? எதுக்கு இப்டி அழுதுட்டு இருக்கிங்க ?’ என்று கேட்டான். அதற்கு ராணி “என்னவோப்பா, எனக்கும் தெரியாது. எங்க வண்ணாத்தி அழுகிறா நானும் அழுகிறேன்” என்றாள்.
அவன் வண்ணாத்தியிடம் சென்று “என்ன நடந்துச்சு? எதுக்கு இப்டி அழுதுட்டு இருக்கிங்க ?’ என்று கேட்டான். அதற்கு வண்ணாத்தி மூக்கை மூக்கை உறிந்துகொண்டே “எங்க மல்லண்ணா இறந்து போயிட்டான். அதனால தான் அழுதுட்டிருக்கேன்” என்றாள். மல்லண்ணா என்றால் யாரென்று புரியாமல் அவன் வண்ணாத்தியை “மல்லண்ணா னா யாரு” என்று கேட்டான்.
அதற்கு அந்த வண்ணாத்தி தேம்பி தேம்பி அழுதுகொண்டே “மல்லண்ணானா கூட தெரியாதா, சின்ன வயசுல இருந்து நா எவ்ளோ பாசமா அழகா வளர்த்த எங்க கழுதை” என்றாள்.
அதைக் கேட்டு அவன் “அடடா! கழுத செத்ததுக்காவா இத்தன பேரு வேலை சோலி இல்லாம அழுதுட்டு இருக்காங்க என்று நினைத்து வானத்துக்கும் பூமிக்கும் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றான். விஷயம் தெரிந்து, ராணி, ராஜா, மந்திரிகள், சேனாதிபதிகள், படை வீரர்கள், பணிப்பெண்கள், மக்கள் என்று எல்லோரும் வெட்கித் தலை குனிந்தனர்.
Art : Neelum Kapur
மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற ‘திராவிடன் பல்கலைக் கழகம்’ இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். தமிழ் தெலு(ங்)கு மொழிக் கீர்த்தனைகளில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாகத் தெலு(ங்)கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார். இவர் தன்னைக் கவிதைகள், ஆய்வு, மொழிபெயர்ப்புகள் என்று படைப்புலகிலும் ஆய்வுலகிலும் ஈடுபடுத்தி வருகிறார்.








Leave a Reply