‘மலரினும் மெல்லிது’ என்பது காமத்துக்கு மட்டுமல்ல; கவிதைக்கும்கூடப் பொருந்துவதே! ஆழ்மனத்தின் அந்தரங்கத்திற்குள் திக்குமுக்காடும் நுண்மைகளையும் உண்மைகளையும் மொழிக்குள் மடக்கிக்கொண்டு வருவதே கவிதை (கவிதையின் ஒரு முகம் அது) என்றும் வரையறுக்கலாம். எவ்வளவு நுண்மையாகவும் எவ்வளவு உண்மையாகவும் ஓர் உணர்வு மொழியில் வெளிப்படுகிறதோ, அந்த அளவுக்குக் கவிதை அவர்களே எழுதியதுபோல் வாசகர்களுக்கு நெருக்கமாகிறது. எழுத்தின் அளவு கூடக் கூட இந்த அருமை அருகுகிறது; குறையக் குறைய ஓரளவுக்கேனும் வசப்பட்டு விடுகிறது என்பது பழைய பார்வை; அளவும் கூடித் தரமும் கூடும் கவிதை வேண்டிக் கவிஞர்கள் ‘அசாவாமையுடன்’ இன்று செயல்பட்டு வருகிறார்கள். இந்த விடாமுயற்சியின் குறிப்பிடத்தக்க வெளிப்பாடாகவே, ஸ்ரீவள்ளியின் கவிதைகளைக் கருத வேண்டும். ஏற்கெனவே வெளிவந்த ‘பொன்கொன்றை பூக்க வந்த பேய்மழை’; ‘பொல்லாத மைனாக்கள்’ஆகிய தொகுப்புகளுடன், புதியதாகத் ‘திருவிருந்து’ என்ற தொகுப்பும் சேர்ந்து, 174 கவிதைகளுடன், 255 பக்கங்களில், ‘ஸ்ரீவள்ளி கவிதைகள்’ என்ற பெருந்தொகுதியாக, எழுத்து வெளியீட்டின் கலைநயம் மிளிரும் ‘கிளாசிக் எடிஷனாக’, இப்போது ஸீரோ டிகிரி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. வாசகனின் மனதோடு பேச முனையும் இத்தொகுப்பில், சங்க இலக்கியச் சாயலை விடவும் பக்தி இலக்கிய நெடியே சற்றுக் கூடுதலாகக் கமழ்கிறது என்பதை என் முதல் விமர்சனப் பதிவாகச் சொல்லிவிட விரும்புகிறேன்.
வார்த்தைகளின் பெருவெளியாக, ‘ஸ்ரீவள்ளியின் கவிதைகள்’ திகழ்கின்றன. அன்பும் ஈரமும் பரிவும் கசிவும் வலியும் கண்ணீரும் கூடிய வார்த்தைகள்! ஒவ்வொரு கவிதையிலும்,ஏதாவது ஒரு தொடர் அல்லது சில சொற்களேனும், நம்மைத் துணுக்குற வைத்து, நமது வாசிப்பை இடைமறித்துப் பின் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, வாசிப்பைத் தொடரச் செய்கின்றன. “இலக்கியப் பிரதிகளுக்கு அர்த்தம் வாசகர்களால் தரப்படுகிறது” என்பதைப் பெரிதும் நம்புகிறார் ஸ்ரீவள்ளி. அந்த வகையில், கசக்கும் காதலின் அரற்றல்களாக, கையாலாகாமையின் புலம்பல்களாக, வலியின் ரணங்களாக, குற்ற உணர்வின் கேவல்களாக, சந்தர்ப்ப அதிர்வுகளின் மௌனங்களாக, தனிமையின் உரத்தப் பகிர்தல்களாக – ஸ்ரீவள்ளியின் கவிதைகள் – அனைத்து மெய்ப்பாடுகளின் ‘ஜால ரூபங்களையும்’ ஒருங்கே கைக்கொண்டுள்ளன எனலாம். மிகக்குறுகிய மூன்றரை மாதங்களில், ‘அகத்தில் திடீரெனக் கண்டுணர்ந்த மற்றொரு நானின் அலைக்கழிதல்களாக’த் தம் முன்னுரையில் இக்கவிதைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார் பெருந்தேவி.”பூக்குழியில் தட்டுத் தடுமாறி நடந்த சுயத்தின் கருகிய தடங்கள், இக்கவிதைகளில் ஒருவேளை தட்டுப்படலாம்” என்றுமுரைக்கிறார்.
கொந்தளிப்புகள் பேரலைகளாக உருமாறியபோது, மனநல மருத்துவரின் ஆலோசனைகளைக் கைவிட்டு, மனத்தடைகளையெல்லாம் எழுதித்தான் கடக்க வேண்டுமென்று தம்மிடம் என்றோ கூறிய அசோகமித்திரனின் வார்த்தைகளைப் பின்பற்றிக் கவிதையே கதியாகக் குறிப்பிட்ட ஒரு மோசமான காலத்தைத் தாம் கடந்து வந்ததன் சாட்சியமே இக்கவிதைகள் என்கிறார். குறுந்தொகை, திருவாசகம், நாச்சியார் திருமொழி, ஜலால் அல் – தீன் ரூமி, ஸிமோன் வெய்லின், அக்கமகாதேவி முதலிய பல பிரதிகளின் தாக்கத்திற்குட்பட்டவையாகத் தம் கவிதைகளைத் தாமே இனங்கண்டுகொள்கிறார். “அன்பை ஆதாரமாகக் கொண்ட, ஒரு முன்மாதிரி வெளியை நோக்கிய நகர்வுக்கான உந்துசக்தியை” மில்லிமீட்டர் மில்லிமீட்டராக அளிக்கும் வார்த்தைக் கூட்டங்களாகவும் இவற்றைச் ‘சுய மதிப்பீடும்’ செய்துகொள்கிறார். மேலும், ‘ரணத்திலிருந்து அருளுக்கு’ என்றும், ‘காதலின் சாத்தியங்கள், எல்லைகள், நிபந்தனைகள், மயக்கங்கள், திளைப்புகளூடே அகங்காரத்தின் சுயத்தை முழுக்கக் கலைக்க முடியாவிட்டாலும் தள்ளிவைப்பதற்கான யத்தனத்தை எழுதுவதே’ ஸ்ரீவள்ளியின் கவிதைகளுக்கான இயக்குவிசை என்றும் வரையறுத்துக்கொள்கிறார்.
இவையெல்லாம், கவிஞர் சொல்வதுபோல், அப்படியே அவர் கவிதைகளில் வசப்பட்டிருக்கிறதா என்று கேட்டால், ஓரளவுக்கு என்றுதான் சொல்ல முடியும் என்று தோன்றுகிறது. எந்த ஒரு கவிஞருக்குமே, அவரின் எண்ணத்திற்கும் அவரது சொற்களுக்குமிடையில் தோன்றிவிடும் இடைவெளிகள் இங்கும் அப்படியேதான் இருக்கின்றன. பல கவிதைகளில் வார்த்தைகளுக்குப் புலப்படாத எதையோ ஸ்ரீவள்ளி சொல்ல முயன்றாலும், வார்த்தைகளில் அவை வேறொன்றாகி நிற்கும் சாத்தியங்களே என் வாசிப்பில் புலப்படுகின்றன!
ரோஜா பற்றி ஸ்ரீவள்ளி புனைந்துள்ள இருபது கவிதைகளிலும் இதுதான் நடந்திருக்கிறது. ‘ரோஜா’ என்ற குறியீட்டின் மூலம் ஸ்ரீவள்ளி உணர்த்த முயலும் அழகு, சுதந்திரம், எல்லையின்மை, அச்சமின்மை, உண்மை… முதலிய பல்வேறு கருத்தியல்கள் வெறும் அர்த்தங்களின் குறிப்புணர்த்தல்களாகவே கவிதைகளில் விரவிக் கிடக்கின்றன. கவித்துவத் தெறிப்புகளாகச் சில தொடர்கள் அல்லது வரிகள் மட்டுமே எஞ்சுகின்றன. யதார்த்தத்தைப் புறந்தள்ளிவிட்டுக் கற்பனையின் அதீதத்தில் பயணிக்கும் சுதந்திர மீறலைக் கவிஞன் எடுத்துக்கொள்ள முற்படும்போதெல்லாம், இப்படி நடக்கக்கூடும் என்றே தோன்றுகிறது. “தன்னை அடக்கும் ஒருவரை, வாழ்நாள் முழுக்கப் பாதுகாக்கிறது ரோஜா” என்கிறார் ஸ்ரீவள்ளி. இங்குப் பெண்ணை ரோஜா குறித்து நின்றாலும், அது உணர்வாக அல்லாமல், ஒரு கருத்தியலாகவே திரண்டிருக்கிறது எனலாம். “ஒரு ரோஜாவின் வாசனைக்குள் நுழைந்து, இன்னொன்றின் வாசனை வழியாக, வெளியேறப் பார்ப்பது, நடக்காத காரியம்” என்கிறார் ஸ்ரீவள்ளி. ஆம்; உண்மைதான். ஆனால், உணர்வுக்கும் கருத்துக்குமான முரண், இங்குப் புலப்படுவதையும் நாம் கவனிக்காதிருக்க இயலாதுதானே! “ரோஜாவின் அருகே, ஆயுள் முழுதும் அமர்ந்திருந்தாலும், தன் கதையை அது சொல்லப்போவதில்லை” என்கிறார் ஸ்ரீவள்ளி. அந்தக் கதையைக் கவிஞன் எப்படியாவது சொல்ல வைப்பதுதான் கவிதை என்கிறோம் நாம். “போலச் செய்யப்படுகிற ரோஜாக்களை, ஏன் கண்டுபிடிக்க வேண்டும்?” எனக் கேட்கிறார் கவிஞர். அவற்றை யாரும் கண்டுபிடிக்கத் தேவையில்லை; தம் போலித்தன்மையைத் தாமாகவே அவை வெளிப்படுத்திவிடும்!
தமிழில் நாற்பதாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஆத்மாநாமின் ‘ரோஜாப் பதியன்கள்’ கவிதை, இன்றுதான் எழுதப்பட்டதுபோல் இன்னும் புத்திளமையோடு இருக்கிறது. ரோஜாவைப் பற்றித் தமிழில் இனி யார் எழுதினாலும், அதைத் தாண்டி அல்லது அதன் அருகிலாவது சென்றால்தான், வாசகப் பொருட்படுத்தல் நிகழுமென்று கூறிவிடலாம். “குறியீடாக இல்லாத தருணங்களின், ரோஜாவைக் குறித்தே எழுதுகிறேன்” என ஸ்ரீவள்ளி பிரகடனப்படுத்தினாலும், குறியீடுகளாகவே அவை நிற்கின்றன என்ற ஏமாற்றத்தையே வாசகன் அடைவதாக உணர்கிறேன். “நாற்சந்தியில், ஒரு கடை வாசலில், அழுக்கு வாளியில் முக்கி, ரோஜாக்களைக் கழுவுகிறான் ஒருவன், பாத்திரங்களைப்போல” என்பது போன்ற திடுக்கிடல்களை ஸ்ரீவள்ளி காட்சிப்படுத்தினாலும், அவை கவிதைகளுக்குள் சில பளிச்சிடல்களாகத் தெரிவதன்றிக் கவிதைகளை விசாலப்படுத்துவதாகச் சொல்ல முடியவில்லை.
இத்தகைய பளிச்சிடல்களையும் கண்சிமிட்டல்களையும் இக்கவிதைகளில் நிறையக் காண்கிறோம். ஆனால், முழுமையான உணர்வனுபவங்களாக அவை உருத்திரள்வதில்லை என்பதுதான் ஏமாற்றம்! ஏதோ ஒரு அவசரம் தெரிகிறது, ஸ்ரீவள்ளியின் விவரிப்புகளில். சொற்களின் பெரும் வலையில் அவர் சிக்கியிருக்கிறார். ஒரு சொல், அதற்கடுத்த சொல், மேலும் ஒரு சொல் எனச் சொல் வரிசையைப் பெருக்கிக்கொண்டே போகிறார் ஸ்ரீவள்ளி. “மனம் எத்தனை பழைய இடம், கதவு எத்தனை பழைய பாதுகாப்பு” என்பது போன்ற இடங்களில், நாமும் அவரோடு சேர்ந்து, அவர் எழுதிய அந்த வசீகரமான சொற்களையே மீண்டும் ஆமோதிக்கிறோம். ஆனாலும் அவை, விரிந்த வெளியிலிருந்து உருவியெடுத்த சில அரிய சொற்தருணங்கள் மட்டுமே; சலனங்களாக அவை மனத்தில் அசைவதன்றிப் பசுமரத்தாணியாய் வேர்பிடித்து நிற்பதில்லை. “என் நினைவுகள், என்னுடையதாக இல்லாதபோது, எதை நான் நினைவுகூர்வது?” – இங்கு ஸ்ரீவள்ளி கைக்கொள்ளும் ‘என், நான்’ முதலிய தன்மைச் சொற்கள்கூடப் பொதுமையாக வாசக மனத்திலேறும் அந்த விநோதமே, ஸ்ரீவள்ளியின் கவிதைகளில் நம்மை ஈர்க்கும் கவித்துவத் தெறிப்பாயுள்ளது. எனினும், ‘நீர்முக உபாசனை’, ‘பிறகு’, ‘உன்னைத் தின்னுதல்’, ‘புழு’, ‘வசியம்’, ‘வார்த்தைக் குழப்பம்’, ‘முடிவு’ போன்ற ஒரு சில கவிதைகளிலேயே, உணர்வனுபவங்களின் ஒருவகை முழுமையும்கூட, ‘வாசக நிறைவாக’ வசப்பட்டிருப்பதைப் பார்க்கிறேன்.
‘ஆண் – பெண்’ உணர்வலைகளை எழுதும்போது, அவை வெறும் டைரிக் குறிப்புகளாகவோ, தனிமனித நினைவுப் பதிவுகளாகவோ வெளிப்படுவதன்றிக் காலங்கடந்த பேரனுபவங்களாக மடைமாற்றம் பெறுகின்ற போதே, காதல் கவிதைகள் காவியங்களாகின்றன. அந்த இடத்தைச் சென்றடைவதில், ஸ்ரீவள்ளியின் கவிதைகளில் ஏதோ சில அம்சங்கள் குறைகின்றன. உணர்வுகள் உச்சியில்தான் நிற்கின்றன என்றாலும், நூதனமான சொற்களில் அரிய காட்சிகள் விரிந்திருந்தாலும்கூட, ஒரு நச்சரிப்பையும் இடையறாத குமுறலையும் கடந்த நிலையில் – இவை வாசக மனமேறித் தொந்தரவு படுத்துவனவாகவோ, கவிதையை வாசித்து முடித்த பின்னும் அந்த அனுபவத்தையே மீண்டும் மீட்டிக்கொண்டிருப்பதாகவோ இல்லையென்றுதான் எனக்குப் படுகிறது. ஒருவேளை என் வாசிப்பிலும் குறைகளிருக்கலாம். இரண்டு, மூன்று முறை படித்துப் பார்த்துவிட்டேன். மனத்தில் சில சொற்கள் தங்குகின்றன என்றாலும், ‘வாசிப்பனுபவம்’ மறக்க முடியாததாக இல்லை.
காதல், கவிதை மற்றும் அவற்றை எழுதுவது பற்றியே பல கவிதைகளிலும் கவிஞர் பேசிக்கொண்டிருக்கிறார். “காதல் போரல்ல, காட்சிப் பிழையை, எத்தனை நாள் பாடுவது?” என்றொரு கவிதையில் கேட்கவும் செய்கின்றார். ஆனாலும், அதையே திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டுதானிருக்கிறார். ‘என்னதான் இருக்கிறது நினைக்க?’ ; ‘எப்போதும் எதுவுமே முதன்முறை அல்ல’ ; ‘பூனை விளையாட்டு’ ; ‘எதன் பொருட்டும் இதயத்தை இழக்காதீர்கள்’ ; ‘அந்தக் குருவிக்கு அங்கென்ன வேலை?’ ; ‘எனக்கு உன்னிடம் என்னதான் வேண்டும்?’ ; ‘உனக்கு என்னைப் பிடிக்கவில்லை எனக் கூறியிருக்கக் கூடாது’ முதலிய கவிதைகளின் தலைப்புகள் நம்மை வசீகரிக்கும் அளவுக்குக் கருப்பொருளும் அதன் தொனி மாற்றங்களும் நம்மைக் கவர்ந்திழுப்பதில்லை. ஸ்ரீவள்ளியின் சொற்களையே கடன்வாங்கிச் சொல்வதானால், அவருடைய கவிதைகள், ‘கிறுக்குப் பிடித்த ஒரு பறவை, தன் ரணத்தைத் தானே கொத்துவதன்’ அடையாளங்களே எனலாம். “காலம் மூன்றையும் உயரத் தாண்டும், ஒரு சொல் உண்டு, தெரியுமா?” எனக் கவிஞர் கேட்கின்றார். வாசகர்களாகிய நாம் வேண்டுவதும்கூட, அந்தச் சொல்லைத்தான்! ஆனால் கவிஞரோ, “இது சொற்ப ஒளிக்கணம்” என்கிறார். இக்கவிதைகளில் நடப்பதுதான் என்ன? “செடி என்றாள் அவள், வெடி எனப் புரிந்துகொண்டான் அவன், முத்து என்றான் அவன், முன்பு எனப் புரிந்துகொண்டாள் அவள், ஒரு செம்பருத்திப் பூவை அவள் கண்டபோது, ஆம்புலன்ஸ் விளக்கை அவன் கண்டான்” என்றெழுதுகிறார் ஸ்ரீவள்ளி. இந்த முரண் அனுபவத்தையே, வாசகர்களும் அடைகிறார்கள்!
ஆனாலும், இந்தக் கவிதைகளில், அவ்வப்போது அமரத்துவமான பல சொற்றொடர்கள் ஆங்காங்கே முளைத்துவிடத்தான் செய்கின்றன. “காலாவதி நாள் குறித்த பின்னரே, எந்த அன்பின் தொடக்கமும் சித்திக்கிறது, எதன் பொருட்டும் இதயத்தை இழக்காதீர்கள் ” என்கிறார் ஸ்ரீவள்ளி. இந்தக் கரை காண முடியாத சோகம், ஸ்ரீவள்ளியின் எல்லாக் கவிதைகளிலும், ஏதோ ஒருவிதத்தில் இருக்கத்தான் செய்கிறது. “பாவங்கள் என்ற சொல் வசப்படாதவர்கள், தீர்க்க முடியாத தவறுகள் என, வைத்துக்கொள்ளுங்கள், மனிதர்களைப் பிணைப்பது பாவங்களே, ஒருவர் கண்ணில் மற்றவர் பார்க்க விழைவதும், ஒருவர் பேச்சிலிருந்து மற்றவர் கணக்கிடுவதும், ஸ்பரிசத்தில் ஒருவர் மற்றவரிடம் தந்தேற்பதும், அவற்றையே” என்கிறார் ஸ்ரீவள்ளி. இதன் சாரம்தான் என்னவாம்? “ஓரளவு பிடித்த உடல் வாசனைகள், ஓரளவு பிடித்த முகபாவனைகள், ஓரளவு பிடித்த படாடோபங்கள், ஓரளவு பிடித்த ஒருவரையொருவர்” என்கிறார் கவிஞர். “அந்தகாரங்களுக்கு வெளியில், என்று எதுவுமேயில்லை, எதிர்காலம், ஆறாத காயம் என ஆகிவிட்ட பின்பு, தனிமை தன் நிழலை, இங்கே விட்டுவிட்டுத் தப்பியோடிய பிறகு” என்றெழுதுகிறார். பாவம் மனிதர்கள்! (காதலர்கள்!), அவர்களால்தாம் என்ன செய்துவிட முடியும்? எனக் கேட்கின்றார் ஸ்ரீவள்ளி.
“பென்னாம் பெரிய மனத்தில், என் மனம், ஒரே ஒரு ரோஜாப்பூ” எனத் தன்னைத்தானே தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்! இல்லாவிடில், “காதலின் எல்லாச் சந்தேகங்களும், ஓர் இரவாவது, உறங்கச் செல்லட்டும்” எனச் சுயத் திருப்தியைப் பாவனை செய்துகொண்டிருக்க வேண்டியதுதான்! இப்படியெல்லாம் சொன்னாலும்கூட, “அளவில்லா மனோலயங்கள், கோடானுகோடி நோக்கறியாப் புள்ளிகள், தர்க்கத்துக்கும் சந்தேகத்துக்குமிடையே, அல்லாடிச் சிதைந்த சிறு புதர்கள், காட்டாதன காட்டப்படாமல், கேளாதன கேட்பிக்கப்படாமல், சொக்கட்டான் ஆடும் பேரிருப்பு” என்பதுபோல் பெருக்கெடுக்கும் ஸ்ரீவள்ளியின் சில சொற்கோலங்களில், நம் வாசக மனம் முற்றிலுமாக வசமிழப்பதும் ஓர் உண்மைதான். “ஆன்மா இல்லை என உறுதிப்படுவது, ஆன்மா இல்லாததைவிடக் கொடுமையானது” என்றெழுதும் அதே ஸ்ரீவள்ளிதான், “என் இறைச்சியைக், கணக்கில்லாச் சின்னப் பூச்சிகள், மொய்க்கும்போது, ஒரு அர்த்தமும் ஒரு நிரூபணமும், உயிருக்குக் கிட்டிவிடுகின்றன” என்றுமெழுதுகிறார்.
படீர் படீர் என்று சில இடங்களில், உணர்வுத் தெறிப்புகளும், ஸ்ரீவள்ளியிடம் அனிச்சையாக வெடித்துக் கிளம்புகின்றன. ” பூமி மொத்தமும் தூங்கும்போதும், ஒரு காதலன் காதலனாக, இருக்க மறுப்பதைவிட, வெட்கக் கேடு வேறொன்றுமில்லை” என்கிறார். மேலும் அவர், “எல்லாவற்றையும், சொல்லிவிடுவதுதான் நல்லது. ஆனால் அதற்கு அபாரமான தைரியம் தேவைப்படுகிறது” என்றுமெழுதுகிறார். அந்தத் தைரியம், ஸ்ரீவள்ளியிடம் நிறையவே இருக்கின்றது. “யாருக்கும் தெரியாதபடி, கவிதை எழுதுவதோ, எழுதியதை அழிப்பதோ, மறந்துவிடுவதோ தவறில்லை, சுய இன்பத்துக்குச் சமமான இன்பம் அது” எனத் துணிந்தெழுதுகின்றார் அவர். இப்படியான உண்மைகளைப் போட்டுடைப்பதில், பெருந்தேவிக்கு நிகர் பெருந்தேவியே! ‘ஒரு பூவின் அடுக்குக்குள், ஓராயிரம் முறை, போய் வந்துவிட்ட, ஒரு குட்டிப் பூச்சி’யே அவர். “பலரும் என்னிடம், கவிதை போதும் என்கிறார்கள், நாவல் எழுது என்கிறார்கள்” என்கிறார் ஸ்ரீவள்ளி. நானும் அவரிடம் அதையேதான் சொல்ல விரும்புகிறேன். ‘கவிதைகள் போதும்; நாவல் எழுதுங்கள் பெருந்தேவி’!








Leave a Reply