அற்புதம்
காற்றுக்கு எனது விரல்களைப்
பரிசாகக் காட்டினேன்
அவை காகிதத்தைப் போல ஆடுமெனக்
காற்று எதிர் பார்த்தது
விரல்களும் எதிர்பார்த்தன
நானுமே எதிர்பார்த்தேன்
எல்லாம் சரியாக இருந்தும் அங்கு
அது நடக்கவில்லையென்றால்
அதுதான் அற்புதம்
சின்னக் குளம்
எறும்பு குளத்தில் குதிக்க
எறும்பு அளவிற்குக் குளம் அலம்பியதும்
ஒரு குளத்தை வெளியேற்றிவிட்டோமோ
என்ற பதற்றத்தில் கை கால்களைப்
படபடவென அடிக்க ஆரம்பித்தது
எறும்பு அளவிற்கு வந்த வளைவை
பேரழிவு போல நினைத்து மேலும் அஞ்சியது
அந்தக் குளத்தைக் காப்பாற்ற முடியுமென்று
எறும்புக்குத் தோன்றவில்லை
எறும்பு அளவிற்குக் குளத்தை மட்டும் காப்பாற்றி
அங்கிருந்து நீந்தி வெளியேறியது
வாழ்த்து மழை
சிறிய வயதில் வாழ்ந்த ஊரில்
இப்பொழுது வாழ வேண்டும்
அதற்கு வாய்ப்பில்லை
சிறிய வயதில் வாழ்ந்த ஊரை
வாழ்த்த வேண்டும்
அதற்கு வாய்ப்புள்ளது
ஒரே நாளில்
அந்த ஊரில் எல்லாரும்
வாழ்ந்து முன்னேறினர்
ஒரே நாளில்
சிறிய வயதிற்கும்
பெரிய வயதானது
ஒரே வழி அந்த ஊருக்கு
அதுவும் இந்தக் குறுக்கு வழி
கடல் முன்
பெரிய கடலை என் சிறிய அளவிற்கு
மறைத்து நிற்கிறேன்
ஒவ்வொன்றும் தன் அளவிற்குக் கடலை
மறைத்துத்தான் நிற்கிறது
இந்த நியாயம் எனக்குப் போதவில்லை
கடலிடம் மன்னிப்புக் கேட்கிறேன்
கடலே உனக்கு இது போதக்கூடாது
இதையாவது வாயைத் திறந்து
சொல்லிவிடு
மனிதர்கள் எண்ணிக்கை உன் முன்னால்
பெருகிக்கொண்டு வருகின்றன
ஆச்சர்யம்
உட்கார்ந்தவுடன் வளைகின்ற
செடியை இரண்டு மைனாக்கள்
வளைய வளைய வந்தன
எனது அதிகாலை சுகத்துக்கு
இந்த மைனாக்கள் பொறுப்பு
இன்றைப் போலே நேற்றும் நான்
உயிரோடுதான் இருந்தேன்
இங்கு பெய்கின்ற மழை
நேற்று வழியாக வரவில்லை போல
ஒரு ஆச்சர்யம்
இன்று உயிரோடு உள்ளதால்
நேற்றும் நான்
உயிரோடு இருந்திருக்கிறேன்
விருதுநகரில் பிறந்தவர். அரசு உதவிபெறும் கல்லூரியில் தமிழ் இணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். 2008 லிருந்து சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதிவரும் இவர் ஆதவன் ( கே.எஸ்.சுந்தரம் ) படைப்புகளை முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்துள்ளார். அறியப்படாத மலர் ( 2013 ), பறவை பார்த்தல் ( 2017 ), கனிவின் சைஸ் ( 2018 ), சாலையின் பிரசித்தி பெற்ற அமைதி ( 2020 ), கண்ணாடி சத்தம் ( 2022), மத்தியான நதி ( 2022), வெறுங்கடல் ( 2024 ) ஆகிய ஏழு கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிற இவரது கவிதைகள் அநேக இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
சௌமா இலக்கிய விருது பெற்றுள்ளார்.








Leave a Reply