இத்தாலிய மூலம் : டீனோ புட்ஸாட்டி
தமிழில் : எழில் சின்னதம்பி
ஸ்டெஃபானோ ரோய்-க்குப் பன்னிரண்டு வயதானபோது, அவன் தன் தந்தையிடம், தன்னுடைய பிறந்தநாள் பரிசாகத் தன்னைக் கப்பலில் அழைத்துச் செல்லும்படி கேட்டான். அவனது தந்தை ஒரு கப்பல் மாலுமி; ஒரு சிறந்த பாய்மரக் கப்பலுக்கு உரிமையாளர்.
“நான் வளர்ந்ததும் உங்களுடன் கடலுக்குப் போக விரும்புகிறேன்” என்றான் சிறுவன். “உங்களது கப்பலைக் காட்டிலும் இன்னும் அழகான, பெரிய கப்பல்களைக் கடலில் செலுத்த நான் கட்டளையிடுவேன்.”
“கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும், என் மகனே” என்று தந்தை பதிலளித்தார். அவரது கப்பல் அன்றே புறப்பட வேண்டியிருந்ததால், சிறுவனைத் தன்னுடன் அழைத்துச் சென்றார்.
அது சூரிய ஒளி நிறைந்த அற்புதமான ஒரு நாள்; கடலும் அமைதியாக இருந்தது. கப்பலில் இதற்குமுன் சென்றிராத ஸ்டெஃபானோ, கப்பலின் மேல்தளத்தில் மகிழ்ச்சியுடன் அலைந்து திரிந்தான். பாய்மரங்களின் சிக்கலான வேலைப்பாடுகளை ரசித்தான். அவன் மாலுமிகளிடம் இதையும் அதையும் விசாரித்தான். அவர்களும் அவனுக்கு எல்லாவற்றையும் விருப்பத்துடன் விளக்கினார்கள்.
கீழ்தளத்துக்கு இறங்கி, கப்பலின் பின்புறம் அவன் சென்றபோது, அவனுடைய ஆர்வம் தூண்டப்பட்டு, அங்கே சிறிது நேரம் நின்றான். கப்பலின் பின்னாலிருந்து, இரண்டு முதல் முந்நூறு மீட்டர் தொலைவில், அவ்வப்போது நீரின் மேற்பரப்பிற்கு உயரும் ஒன்றைக் கவனித்தான்.
கப்பல் ஒரு பெரிய பக்கவாட்டுக் காற்றினால் செலுத்தப்பட்டு வேகமாகச் சென்று கொண்டிருந்தாலும், அந்தப் பொருள் எப்போதும் அதே தொலைவில் தெரிந்தது. அந்தப் பொருள் என்னவென்று அவனால் சரியாகப் பார்க்க முடியாவிட்டாலும், அதைப் பற்றி விவரிக்க முடியாத ஒரு தன்மை இருந்தது; அது அவனைத் தீவிரமாக ஈர்த்தது.
ஸ்டெஃபானோவைத் தளத்தில் காணாததால், தந்தை அவனுடைய பெயரைக் கூவி அழைத்துத் தேடினார். பின்னர் அவனைத் தேடிக் கப்பலின் கீழ்தளத்துக்கு வந்தார்.
இறுதியாகக் கப்பலின் பின்புறத்தில் மகனைக் கண்டதும், “ஸ்டெஃபானோ, நீ அங்கே ஏன் அசைவில்லாமல் நிற்கிறாய்?” என்று அலைகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனைக் கேட்டார்.
“அப்பா, இங்கே வந்து பாருங்கள்.”
தந்தை வந்தார், அவரும் சிறுவன் சுட்டிக்காட்டிய திசையில் பார்த்தார், ஆனால் அவருக்கு எதுவும் தெரியவில்லை.
“அவ்வப்போது அலைகளில் மேலே எழும் ஒரு கருமையான பொருள் தெரிகிறது” என்று ஸ்டெஃபானோ சொன்னான். “அது நம்மைப் பின்தொடர்ந்து வருகிறது.”
“எனக்கு நாற்பது வயது ஆனபோதிலும் நான் இன்னும் நல்ல கண்பார்வையுடன் இருப்பதாக நம்புகிறேன். ஆனால் என்னால் நிச்சயமாக எதையும் பார்க்க முடியவில்லை” என்றார் தந்தை.
சிறுவன் வற்புறுத்திய பிறகு, தந்தை தொலைநோக்கியைக் கொண்டுவந்து, கப்பல் சென்ற பாதையில், கடலின் மேற்பரப்பை உற்று நோக்கினார். அதைப் பார்த்த ஸ்டெஃபானோ, அவருடைய முகம் வெளிரிப் போவதைக் கண்டான்.
“அது என்ன அப்பா? ஏன் உங்கள் முகபாவனை மாறிவிட்டது?”
“ஐயோ, நான் உனக்குச் செவிசாய்க்காமல் இருந்திருக்க வேண்டும்” என்று தந்தை அலறினார். “இப்போது உன்னைக் குறித்து நான் கவலைப்படுகிறேன். நீ பார்த்துக் கொண்டிருப்பது ஒரு சாதாரணப் பொருளல்ல. அதுதான் ‘கொலம்பர்’. உலகெங்கிலும் உள்ள கடலோடிகள் அனைவரையும் அஞ்சவைக்கும் மீன் இதுதான். இது மனிதனைவிட மிகவும் தந்திரமான ஒரு பயங்கரமான, மர்மமான சுறா. எவருக்கும் தெரியாத சில காரணங்களுக்காக இது ஒரு பலியைத் தேர்ந்தெடுக்கிறது; தேர்ந்தெடுத்த பிறகு, அந்தப் பலியைத் தின்று முடிப்பதற்கு எவ்வளவு வருடங்கள் ஆனாலும், வாழ்நாள் முழுவதும் துரத்திக்கொண்டே இருக்கும். இதில் விசித்திரம் என்னவென்றால், அந்த மீன் தேர்ந்தெடுத்த அந்தப் பலியும் அவனுடைய இரத்த உறவினர்களும் மட்டுமே கொலம்பரைப் பார்க்க முடியும்.”
“இது கட்டுக்கதையல்லவா?”
“இல்லை. நான் அதை ஒருபோதும் பார்த்ததில்லை. ஆனால், நான் பலமுறை கேள்விப்பட்ட கதைகளிலிருந்து, என்னால் உடனடியாக அதைக் கண்டறிய முடிந்தது. காட்டெருமையைப் போன்ற மூக்கு, இடைவிடாமல் திறந்து மூடியபடி இருக்கும் அந்த வாய், அந்தக் கொடுமையான பற்கள்; ஸ்டெஃபானோ, எந்தச் சந்தேகமும் இல்லை, கொலம்பர் உன்னைக் குறிவைத்து விட்டது. நீ கடற்பயணம் செய்யும்போதெல்லாம் அது உனக்கு ஒருபோதும் நிம்மதியைக் கொடுக்காது. நான் சொல்வதைக் கேள்! நாம் இப்போதே கரைக்குத் திரும்புகிறோம்; நீ கரையேறிச் சென்று, எந்தக் காரணத்திற்காகவும் மீண்டும் ஒருபோதும் கடலுக்குள் வரக்கூடாது. நீ எனக்கு வாக்குறுதி கொடுக்க வேண்டும். கடற்பயணம் உனக்கானதல்ல, என் மகனே. நீ இதை ஏற்றுக்கொண்டு, மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டும். எது எப்படியிருந்தாலும், உன்னால் நிலத்திலும் செல்வம் ஈட்ட முடியும்.”
இப்படிக் கூறிய அவர், உடனடியாகக் கப்பலின் போக்கை மாற்றினார். துறைமுகத்திற்குத் திரும்பி, திடீர் உடல்நலக்குறைவு என்ற சாக்குப்போக்கைக் கூறி, தன் மகனைத் தரையிறக்கிவிட்டார். அதன்பின்பு, மகனில்லாமல் மீண்டும் புறப்பட்டார்.
மிகுந்த மனக்குழப்பத்துடன் இருந்த ஸ்டெஃபானோ, கப்பல் பாய்மரத்தின் கடைசி நுனி அடிவானத்தில் மறையும் வரை கரையில் நின்று பார்த்துக் கொண்டே இருந்தான். துறைமுகத்தின் கப்பல்துறை எல்லைக்கு அப்பால், கடல் முற்றிலும் வெறுமையாக இருந்தது. ஆனால் கூர்ந்து கவனித்தபோது, தண்ணீரில் அவ்வப்போது மேலே எழும் ஒரு சிறிய கருப்புப் புள்ளியை அவனால் பார்க்க முடிந்தது. அது அவனுடைய கொலம்பர். மெதுவாக முன்னும் பின்னுமாகச் சென்று, பிடிவாதமாக அவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தது.
அதன் பிறகு, எல்லா வழிகளிலும் அந்தச் சிறுவன் கடலுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையிலிருந்து தடுக்கப்பட்டான். அவனுடைய தந்தை அவனை நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு உள்நாட்டு நகரத்திற்குப் படிக்க அனுப்பினார். சிறிது காலம், புதிய சூழலால் திசை திருப்பப்பட்ட ஸ்டெஃபானோ, அந்தக் கடல் அசுரனைப் பற்றி யோசிக்கவில்லை.
எனினும், கோடை விடுமுறைக்காக அவன் வீட்டிற்குத் திரும்பினான். அவனுக்குச் சிறிது ஓய்வு கிடைத்தவுடன், அவன் செய்த முதல் காரியம், ஒருவித உறுதிப்படுத்தலுக்காகத் துறைமுகத்தின் இறுதி முனைக்கு விரைந்ததுதான். அடிப்படையில், தான் அப்படிப் போவது தேவையற்றது என்றே அவன் கருதினான். இத்தனை வருடங்களுக்குப் பிறகு, தன் தந்தை சொன்ன கதைகள் எல்லாம் உண்மையாகவே இருந்தாலும், கொலம்பர் நிச்சயமாகத் தன் முற்றுகையைக் கைவிட்டிருக்கும் என்று அவன் நம்பினான்.
ஆனால் அங்கே நின்ற ஸ்டெஃபானோ, திகைத்துப் போய், இதயம் படபடக்க நின்றான். துறைமுகத்திலிருந்து இரண்டு முதல் முந்நூறு மீட்டர் தொலைவில், திறந்த கடலில், அந்தப் பயங்கரமான மீன் மெதுவாக முன்னும் பின்னுமாகச் சென்று கொண்டிருந்தது. அது அவ்வப்போது தன் மூக்குப் பகுதியை நீரிலிருந்து உயர்த்தி, கரையை நோக்கித் திரும்பிப் பார்த்தது. ‘ஸ்டெஃபானோ வருகிறானா’ என்று கவலையுடன் பார்ப்பது போலிருந்தது.
இதனால், இரவும் பகலும் தனக்காகக் காத்திருக்கும் அந்தப் பகைமைப் பிராணியைப் பற்றிய எண்ணம், ஸ்டெஃபானோவை இரகசியமாய் ஆட்டிப் படைத்தது. தொலைவில் அவன் வசித்த நகரத்தில்கூட, அந்த எண்ணம் நள்ளிரவுகளில் அவனை எழுப்பிக் கவலையில் தள்ளியது. நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் அவனையும் கடலிலிருந்த கொலம்பரையும் பிரித்ததால், அவன் பாதுகாப்பாகத்தான் இருந்தான். ஆனாலும், மலைகள், காடுகள், சமவெளிகளுக்கு அப்பால், அந்தச் சுறா தனக்காகக் காத்திருக்கிறது என்று அவனுக்குத் தெரியும். அவன் மிகவும் தொலைதூரக் கண்டத்திற்குச் சென்றிருந்தாலும், அருகில் உள்ள கடலின் பிம்பத்தில், தப்ப முடியாத ஒரு ஆயுதத்தின் பிடிவாதத்துடன் கொலம்பர் தோன்றியிருக்கும்.
திறமையும் ஆர்வமும் கொண்ட இளைஞனான ஸ்டெஃபானோ, தன் படிப்பைத் திறம்படத் தொடர்ந்தான். வளர்ந்த பிறகு, அதே உள்நாட்டு நகரில் ஒரு வணிக நிறுவனத்தில் மதிப்புமிக்க பணியில், நல்ல ஊதியம் தரும் வேலையில் அமர்ந்தான். இதற்கிடையில், அவனுடைய தந்தை நோயால் இறந்துவிட்டார்; அவருடைய பிரம்மாண்டமான கப்பல் தாயால் விற்கப்பட்டுவிட்டது. ஸ்டெஃபானோவுக்கு ஒரு சாதாரணச் சொத்து மட்டுமே கிடைத்தது. வேலை, நண்பர்கள், பொழுதுபோக்குகள், முதல் காதல் விவகாரங்கள் – ஸ்டெஃபானோவின் வாழ்க்கை இப்போது சீராகச் சென்றது. ஆனால், கொலம்பரைப் பற்றிய சிந்தனை, அவனைக் கொல்லக்கூடியதும் கவர்ச்சிகரமானதும் ஆன ஒரு கானல் நீரைப் போலத் துன்புறுத்தியது. நாட்கள் செல்லச் செல்ல அது மறைவதற்குப் பதிலாக மேலும் மேலும் அழுத்தம் கொடுப்பதுபோல் அவனுக்குத் தோன்றியது.
ஒரு சுறுசுறுப்பான, வசதியான மற்றும் அமைதியான வாழ்க்கையின் திருப்திகள் பெரியவைதான்; ஆனால் ஆழத்தின் ஈர்ப்பு அதைவிடப் பெரியது. ஸ்டெஃபானோவுக்கு இருபத்தி இரண்டு வயதாகும்போது, உள்நாட்டு நண்பர்களிடம் விடைபெற்று, வேலையை இராஜினாமாச் செய்துவிட்டு தன் சொந்த ஊருக்குத் திரும்பினான். தன் தந்தையின் தொழிலைப் பின்பற்ற வேண்டும் என்ற திடமான முடிவைப் பற்றித் தன் தாயிடம் சொன்னான். மர்மமான சுறாவைப் பற்றி ஸ்டெஃபானோ ஒருபோதும் தாயிடம் சொல்லவில்லை, ஆதலால் மகனின் முடிவை மகிழ்ச்சியுடன் வரவேற்றாள் தாய். தன் மகன் கடலைவிட்டு நகரத்திற்குப் போனது குடும்ப மரபுக்குச் செய்த துரோகம் என்றே அவர் தன் மனதுக்குள் எப்போதும் நினைத்திருந்தார்.
ஸ்டெஃபானோ கடற்பயணத்தைத் தொடங்கினான். அது அவனுடைய கடற்பயணத் திறமை, சோர்வுக்கு எதிரான அவனது மன உறுதி மற்றும் அஞ்சாத துணிச்சல் ஆகியவற்றை நிரூபித்தது. அவன் தொடர்ந்து கப்பல் ஓட்டினான். அவனுடைய கப்பலின் பின்னால், இரவும் பகலும், நல்ல வானிலையிலும் புயல்களிலும், கொலம்பர் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. இதுவே தன் சாபமும் தண்டனையும் என்று அவன் அறிந்திருந்தான். தன்னைக் கொல்ல நினைக்கும் கொலம்பரின் எண்ணம் சரியானதுதான் என்று அவன் நினைத்திருந்ததால் அதிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்ளும் வலிமை அவனுக்குக் கிடைக்கவில்லை. மேலும், கப்பலில் இருந்த அவனைத் தவிர வேறு எவரின் கண்களுக்கும் அந்த அசுரன் தெரியவில்லை.
“அதோ அங்கே, கப்பலின் பின்னால் எதுவும் தெரியவில்லையா?” என்று தன் சகாக்களிடம் அவ்வப்போது கேட்பான்.
“இல்லை, எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. ஏன் கேட்கிறீர்கள்?”
“தெரியவில்லை. ஏதோ தெரிவது போலிருந்தது…”
“ஒருவேளை நீ கொலம்பரைப் பார்த்துவிட்டாயா?” என்று மாலுமிகள் சிரித்துக்கொண்டே, தாங்கள் அணிந்திருக்கும் மரத்தாயத்துகளைத் தொட்டு வணங்கி, துரதிர்ஷ்டத்தைத் தவிர்க்கும் சடங்கு செய்து, தீங்கிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வார்கள்.
“ஏன் சிரிக்கிறீர்கள்? ஏன் தாயத்துகளை வணங்குகிறீர்கள்?”
“ஏனென்றால், கொலம்பர் யாரையும் விட்டுவைக்காத ஒரு மிருகம். அது இந்தக் கப்பலைப் பின்தொடர ஆரம்பித்துவிட்டால், நம்மில் ஒருவன் பலியாகப் போகிறான் என்று பொருள்.”
ஆனால் ஸ்டெஃபானோ தனது வேகத்தைக் குறைக்கவில்லை. அவனைத் தொடர்ந்து வந்த இடைவிடாத அச்சுறுத்தல், உண்மையில் அவனுடைய மன உறுதியையும், கடல் மீதான அவனது மோகத்தையும், போராட்டங்கள் மற்றும் ஆபத்துக் காலங்களில் அவனுடைய தைரியத்தையும் பலப்படுத்தியதைப் போல் இருந்தது.
தனது தொழிலில் தான் வல்லவன் என்று உணர்ந்தபோது, அவன் தனது சிறிய சொத்தைப் பயன்படுத்தி, ஒரு பங்குதாரருடன் சேர்ந்து சிறிய ஒரு நீராவிக் கப்பலை வாங்கினான். பின்னர் அவனே அக்கப்பலின் தனியுரிமையாளன் ஆனான். வெற்றிகரமான சரக்கு ஏற்றுமதி காரணமாக, அதன்பிறகு ஒரு வர்த்தகக் கப்பலை வாங்கி, மேன்மேலும் அதிக லட்சியங்களுடன் பயணத்தைத் தொடங்கினான். ஆனால் அந்த வெற்றிகளாலோ, சேர்த்த கோடிக்கணக்கான செல்வத்தாலோ, அவனுடைய ஆன்மாவில் இருந்த தொடர்ச்சியான இந்தத் துன்பத்தை நீக்க முடியவில்லை. மேலும், அவன் ஒருபோதும் கப்பலை விற்றுவிட்டு, வேறு தொழில்களை நிலத்தில் செய்யப் புறப்படவும் இல்லை.
பயணம், பயணம், பயணம் மட்டுமே அவனுடைய ஒரே சிந்தனையாக இருந்தது. ஒரு நீண்ட பயணத்திற்குப் பிறகு, அவன் ஒரு துறைமுகத்தில் காலடி வைத்தவுடனேயே, மீண்டும் புறப்பட வேண்டும் என்ற பொறுக்க முடியாத ஆசை அவனைத் தூண்டியது. வெளியே கொலம்பர் தனக்காகக் காத்திருக்கிறது என்றும், கொலம்பர் என்பது அழிவுக்குச் சமம் என்றும் அவனுக்குத் தெரியும். அது அவனை ஒன்றுமில்லாமல் ஆக்குவதற்குக் காத்திருக்கிறது. ஆனால் ஒரு அடக்க முடியாத உந்துதல், அவனை ஒரு கடலில் இருந்து மற்றொரு கடலுக்கு ஓய்வின்றி இழுத்துச் சென்றது.
இறுதியில் ஒரு நாள், ஸ்டெஃபானோ திடீரென்று தான் மிகவும் முதுமையடைந்து விட்டதை உணர்ந்தான். அவன் பணக்காரனாக இருந்தும், சபிக்கப்பட்ட இந்தக் கடற்பயண வாழ்க்கையை விட்டு ஏன் விலகவில்லை என்பதைச் சுற்றியிருந்த யாராலும் விளக்க முடியவில்லை. அவன் முதியவனாகவும் கடும் துயரமடைந்தவனாகவும் இருந்தான். ஏனெனில் தன் எதிரியிடமிருந்து தப்பிக்க, கடல்கள் முழுவதும் இந்த ஒரு பைத்தியக்காரத்தனமான ஓட்டத்திலேயே அவனுடைய முழு வாழ்க்கையும் செலவழிந்தது. ஆனால், செழிப்பான, அமைதியான வாழ்க்கையின் மகிழ்ச்சிகளை விட, கடல் ஆழத்தின் கவர்ச்சி அவனுக்கு எப்போதும் அதிகமாகவே இருந்தது.
ஓர் இரவில், தான் பிறந்த துறைமுகத்திற்கு அருகில் அவனுடைய பிரம்மாண்டமான கப்பல் நங்கூரமிட்டிருந்தபோது, தனது மரணத்தை நெருங்கிவிட்டதாக அவன் உணர்ந்தான். உடனே, தான் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த தனது இரண்டாம் அதிகாரியை அழைத்து, தான் செய்யப் போவதை எதிர்க்கக் கூடாது என்று கட்டளையிட்டான். அந்த அதிகாரியும் தன்மானத்தின்மீது உறுதியளித்தான்.
இந்த உறுதிமொழியைப் பெற்ற ஸ்டெஃபானோ, கடந்த ஐம்பது வருடங்களாகத் தன்னைத் தொடர்ந்து துரத்திவரும் கொலம்பரைப் பற்றிய கதையை இரண்டாம் அதிகாரியிடம் சொன்னான். அதைக் கேட்ட அதிகாரி பயந்துபோனான்.
“உலகின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை அது என்னைப் பின்தொடர்ந்து வந்துள்ளது,” என்றான் ஸ்டெஃபானோ. “மிக உன்னதமான நண்பர்கூடக் காட்ட முடியாத விசுவாசத்துடன் அது என்னைத் தொடர்ந்தது. இப்போது நான் இறக்கப் போகிறேன். கொலம்பரும் இப்போது மிகவும் வயதாகிக் களைத்துப் போயிருக்கும். நான் அதற்குத் துரோகம் செய்ய முடியாது.”
இப்படிக் கூறிய அவன், குழுவினரிடம் விடைபெற்றான். ஒரு சிறு படகைக் கடலில் இறக்கும்படி உத்தரவிட்டான். ஒரு கூர்வேலை வாங்கியபின் அந்தப் படகில் ஏறினான்.
“இப்போது நான் அதைச் சந்திக்கப் போகிறேன்” என்று அறிவித்தான். “அதற்கு ஏமாற்றம் கொடுப்பது சரியல்ல. ஆனால், என்னால் முடிந்தவரை முழு பலத்துடன் போராடுவேன்.”
சற்றே தளர்ந்த துடுப்பு வீச்சுகளுடன் அவன் கப்பலின் பக்கத்திலிருந்து விலகிச் சென்றான். அவன் அமைதியான கடலில், இரவின் நிழலில் மறைந்து போவதைக் கப்பலிலிருந்த அதிகாரிகளும் மாலுமிகளும் பார்த்தார்கள். வானத்தில் ஒரு பிறை நிலவு தென்பட்டது.
அவன் அதிக முயற்சி செய்து படகைச் செலுத்தத் தேவையிருக்கவில்லை. திடீரென்று, கொலம்பரின் கொடூரமான மூக்குப் பகுதி படகின் பக்கவாட்டில் தோன்றியது.
“இதோ, இங்கே இறுதியாக நான் உன்னுடன் இருக்கிறேன்” என்றான் ஸ்டெஃபானோ. “இப்போது நாம் இருவர் மட்டுமே.” தன் உடலில் எஞ்சியிருந்த பலத்தை எல்லாம் ஒன்று திரட்டி, அவன் கூர்வேலை உயர்த்தினான்.
“ஊ…!” என்று கெஞ்சுவதுபோல் கொலம்பர் முனகியது. “உன்னைக் கண்டுபிடிக்க எவ்வளவு நீண்ட பயணம் செய்தேன்! நானும் இப்போது உடற்சோர்வினால் மிகவும் தளர்ச்சி அடைந்து விட்டேன். நீ என்னை எவ்வளவு நீந்த வைத்தாய்! நீ தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தாய். உனக்குச் சற்றும் புரியவில்லை.”
“என்ன?” என்று கேட்டான் ஸ்டெஃபானோ, கூர்வேலின் முனையைக் கொலம்பரின் இதயத்திற்கு நேராக வைத்தபடி.
“நீ நினைத்ததுபோல, உன்னைத் தின்று தீர்க்க உலகம் முழுவதும் நான் துரத்தவில்லை. கடலின் அரசர் இதை உன்னிடம் ஒப்படைக்கும் பொறுப்பை மட்டுமே என்னிடம் கொடுத்தார்” என்று கூறிய அந்தச் சுறா, தன் நாக்கை நீட்டி, அந்த வயதான மனிதனுக்குச் சிறியதொரு ஒளிரும் கோளத்தை அளித்தது.
ஸ்டெஃபானோ அதைக் கையில் எடுத்துப் பார்த்தான். அது மிகப் பிரம்மாண்டமான ஒரு முத்து. அது புகழ்பெற்ற ‘கடலின் முத்து’ என்பதையும், அந்த முத்தை வைத்திருப்பவருக்கு அதிர்ஷ்டம், அதிகாரம், அன்பு மற்றும் மன அமைதி ஆகியவற்றை அளிக்கும் என்பதையும் அவன் அறிந்துகொண்டான். ஆனால், இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது.
“ஐயோ!” என்று தலையை வருத்தத்துடன் அசைத்தபடி அவன் சொன்னான். “எல்லாம் எவ்வளவு தவறாகப் போய்விட்டது. நானே எனக்குத் தீர்ப்பு எழுதிக்கொண்டேன்; மேலும் நான் உன்னுடைய வாழ்க்கையையும் அழித்துவிட்டேன்.”
“விடைபெறுகிறேன், பாவம் நிறைந்த மனிதனே” என்று பதிலளித்த கொலம்பர், என்றென்றும் கருமையாயிருக்கும் நீரில் மூழ்கி மறைந்தது.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஒரு நீரோட்டத்தால் உந்தப்பட்டு, ஒரு சிறிய படகு செங்குத்தான பாறை ஒன்றின் அருகில் வந்து நின்றது. அதைப் பார்த்த சில மீனவர்கள் ஆர்வத்துடன் நெருங்கிச் சென்றனர். படகிற்குள் அமர்ந்த நிலையில், வெயிலால் வெளுத்துப்போன ஒரு எலும்புக் கூடு இருந்தது. அதன் விரல்களின் சிறிய எலும்புகளுக்கு இடையில் ஒரு சிறிய வட்டமான கல்லைப் பிடித்துக் கொண்டிருந்தது.
***
**கொலம்பர் என்பது பார்க்கப் பயமுறுத்தும் மிகவும் அரிதான, பெரிய மீன் ஆகும். அது காணப்படும் கடல்கள் மற்றும் அதன் கரையில் வாழும் மக்களின் பெயர்களுக்கு ஏற்ப, கோலோம்ப்ரேய், கஹ்லூப்ரா, கலோங்கா, கலூ-பாலு, சாலுங்-க்ரா போன்ற பெயர்களில் இம்மீன் அழைக்கப்படுகிறது. இயற்கையியல் அறிஞர்கள் விசித்திரமாக இதைக் கண்டுகொள்வதே இல்லை. சிலர் இது உண்மையான விலங்கு இல்லை என்றும் வாதிடுகின்றனர்.
இத்தாலிய எழுத்தாளர் டினோ புட்ஸாட்டி (1906 – 1972) ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், நாவலாசிரியர் மற்றும் ஓவியர். அவரது படைப்புகளில் மாய யதார்த்தம், உள்ளார்ந்த அச்சம், காலம் மற்றும் மரணம் பற்றிய தத்துவக் கேள்விகள் ஆகியவை வெளிப்பட்டன. Il deserto dei Tartari (1940) என்பது அவரது மிகப் புகழ்பெற்ற புதினம். Sessanta racconti (அறுபது கதைகள், 1958) என்பது அவரது சிறுகதைகளின் தொகுப்பு நூலாகும். புட்ஸாட்டியின் எழுத்தில் காஃப்கா எழுத்தைப் போன்ற ஓர் ஆழ்ந்த உளவியல் சிக்கல் மற்றும் அபத்த உணர்வு காணப்படுகிறது. அவருடைய கதைகள் எளிமையான மொழியிலும், அச்சம், மரணம், தனிமை, நம்பிக்கை இழப்பு போன்ற தத்துவத் தளங்களிலும் எழுதப்பட்டவை
டீனோ புட்ஸாட்டியின் இந்தக்கதை ஒரு சாதாரணக் கடல் சாகசக் கதை மட்டுமல்ல; இது மிகவும் ஆழமான, குறியீடான அர்த்தங்களையும் (Symbolic Meanings) கொண்டுள்ளது.
1. தப்ப முடியாத விதி அல்லது சாபம் (Inevitability of Fate or Curse)
இந்தக் கதையின் மையக் கருத்து இதுதான்: கொலம்பர் என்பது வெறும் சுறா அல்ல; அது ஸ்டெஃபானோவுக்கு விதிக்கப்பட்ட விதி அல்லது ஒருவிதச் சாபத்தைக் குறிக்கிறது. ஸ்டெஃபானோ தன் வாழ்நாள் முழுவதும் அதனிடமிருந்து தப்பிக்க ஓடுகிறான். நிலத்தில், நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் சென்றாலும், அது பிடிவாதமாகக் கடலில் காத்திருக்கிறது. மிகவும் பணக்காரனாகவும், வசதியுடன் ஓய்வெடுக்கும் காலத்திலும், அந்தத் துரத்தல் அவனை மீண்டும் கடலுக்கு இழுக்கிறது. ஒருவர் தனது அச்சத்திலிருந்தோ அல்லது விதியிலிருந்தோ எவ்வளவு விலகி ஓடினாலும், இறுதியில் அதை எதிர்கொண்டே ஆக வேண்டும் என்பதை இந்தக் கதை காட்டுகிறது.
2. வாழ்க்கையின் முரண்பாடு மற்றும் தவறான புரிதல் (Irony and Misunderstanding)
கதையின் முடிவுதான் மிகவும் சக்திவாய்ந்த பகுதி. ஸ்டெஃபானோவின் வாழ்நாள் முழுவதும் அவனைத் துரத்திய கொலம்பர், அவனைக் கொல்ல வரவில்லை; மாறாக, அவனுக்கு அதிர்ஷ்டம், அதிகாரம், மன அமைதி ஆகியவற்றைத் தரும் கடலின் முத்தைக் கொடுக்கவே வந்தது. ஸ்டெஃபானோ, வரம் என்று வந்த ஒன்றை, ஒரு சாபமாகக் கருதி வாழ்நாள் முழுவதும் ஓடினான். இந்தப் பகுதி, வாழ்க்கையின் முக்கிய நோக்கத்தை நாம் தவறாகப் புரிந்துகொண்டு தேவையற்ற பயத்திலேயே நமது காலத்தை வீணடிக்கிறோம் என்பதைக் குறிக்கிறது.
3. ஆழத்தின் கவர்ச்சி (The Allure of the Abyss)
ஸ்டெஃபானோ, பாதுகாப்பான, வசதியான நில வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருந்தும், கொலம்பரின் அச்சுறுத்தல் நிறைந்த கடலுக்குத் திரும்புகிறான். இங்கே, கொலம்பரைத் துரத்துவது என்பது ஒருவித நோக்கமாகவும் அழைப்பாகவும் மாறுகிறது. அமைதியான வாழ்க்கையின் மகிழ்ச்சியை விட, அறியப்படாத ஆழத்தின் ஈர்ப்பு (The temptation of the abyss) அவனுக்கு அதிகமாக இருந்தது என்று கதை கூறுகிறது. ஒரு சவாலை அல்லது விதியை ஏற்றுக்கொள்வதால் கிடைக்கும் பரவசமே, பாதுகாப்பான வாழ்க்கையை விடச் சிலருக்குத் திருப்தியை அளிக்கும் என்பதைக் குறிக்கிறது.
சுருக்கமாக, இந்தச் சிறுகதை நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் உள்ள அச்சங்கள், விதி மற்றும் நாம் சந்திக்கும் சவால்களின் உண்மையான நோக்கத்தை நாம் புரிந்துகொள்ளத் தவறுவது போன்றவற்றின் குறியீடாக இருக்கிறது.
Art : Galerie Neu
சொந்த ஊர்: தூத்து








Leave a Reply