Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

பண்டைத் தமிழகத்தில் நெல்

ஆ. சிவசுப்பிரமணியன்
ஆ. சிவசுப்பிரமணியன்
September 1, 2025
பண்டைத் தமிழகத்தில் நெல்

உலக அளவில் பரவலாக அறிமுகமான உணவு தானிய வரிசையில் தமிழர்களின் முக்கிய உணவு தானியமான அரிசியும் அடங்கும். இது சீனா, ஜப்பான் தாய்லந்து, கம்போடியா, இந்தோனேசியா, சிரிலங்கா, மியான்மர், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பெரும்பான்மை மக்களின் உணவுப் பொருளாக விளங்கி வருகிறது. இந்தியாவிலும் தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரளம், கர்நாடகம், ஆந்திரம், ஒரிசா, மேற்கு வங்கம், அசாம், பஞ்சாப், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் அரிசியைத் தரும் நெல் பயிர் செய்யப்பட்டு அப்பகுதி மக்களின் உணவில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது.

அரிசியை வழங்கும் தாவரமான நெல் புல் இனத்தைச் சார்ந்தது. இதில் ஆப்பிரிக்க மரபினம், ஆசிய மரபினம் என இரு பிரிவுகள் உண்டு. ஆப்பிரிக்க மரபின நெல்லின் தாவரவியல் பெயர் ‘ஒரய்சா குளோபிமா’ (Oryza gllobctrima) என்பதாகும். ஆசிய மரபினத்தில் இதன் தாவரவியல் பெயர் ‘ஒரியா சாட்வியா’ (Oryza sativa) என்பதாகும். இதில் ஒரைசா என்பது அதன் தாவரக் குடும்பத்தின் பேரினத்தையும் சாட்வியா என்பது அதன் சிற்றினத்தையும் குறிக்கும்.

நெல் தொடர்பான தொன்மங்கள்

விலங்குகளைப் போன்று மந்தை வாழ்க்கை வாழ்ந்த மானுடர்கள் தாம் இடம் பெயர்ந்து வாழ்ந்த வாழ்க்கையில் மேற்கொண்ட பொருளாதாரச் செயல்பாடுகள் அவர்களின் முன்னேற்றத்திற்குத் துணைபுரிந்தன. முதலாவது நெருப்பின் பயன்பாட்டை அறிந்து அதைப் பயன்படுத்தத் தொடங்கியது. இரண்டாவது காட்டு விலங்குகள் சிலவற்றை வீட்டு விலங்குகளாக மாற்றியது. இருப்பினும் உணவு தேடி காடுகளில் அலைந்து திரியும் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை. சில தானியங்களையும் பயறு வகைகளையும் பயிரிட்டு வளர்க்கத் தொடங்கிய மூன்றாவது செயல்தான் காய்கனிகள், கிழங்குகள் என்பனவற்றையும் வேட்டைக்கான விலங்குகளையும் தேடி அலைந்த அவன் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

விலங்குகள் சிலவற்றை வீட்டு விலங்காக மாற்றியமை போன்று தாவரங்கள் சிலவற்றையும் அவன் வளர்க்கத் தொடங்கியமை அவனை ஓரிடத்தில் நிலைத்து வாழச் செய்தது. உணவு தேடி அலைகுடிச் சமூகமாக (nomadic society) வாழ்ந்த மனிதனை நிலைகுடி வாழ்க்கைக்குப் (sedentarinesm) பயிர்வளர்ப்பு மாற்றியது.

இவ்வாறு கடினமான அலைகுடி வாழ்க்கையிலிருந்து விடுபட்டு நிலைகுடியான தொடக்கக்கால வேளாண் சமூகங்கள் சிலவற்றில், ஆற்றல் வாய்ந்த கடவுள் ஒருவர் தாம் தேர்வு செய்த மக்களிடம் புனிதமான தானியம் ஒன்றை ஒப்படைத்தார் என்று கூறும் தொன்மங்கள் உருவாகியுள்ளன என்று ஜேம்ஸ் சி.ஸ்காட் (James C Scott 2017: 7) ‘தானியத்திற்கு எதிராக’ (Againist the Grain) என்ற தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தம் கடந்தகால வாழ்க்கையை நினைவுகூறும் வகையில் தொன்மங்கள் சிலவற்றை மானுடக் குலம் வாய்மொழியாக உருவாக்கிக் கொண்டது. எழுத்து வடிவம் தோன்றிய பின்னர், இவற்றுள் சில எழுத்து வடிவிலான புராணங்களாயின. நெருப்பின் அறிமுகம் குறித்துக் கிரேக்க மொழியில் தோன்றிய வாய்மொழிப் புராணம் பிராமிதியூஸ் என்ற மானுடனால் தேவலோகத்தில் இருந்து திருடப்பட்டு நெருப்பு பூவுலகிற்கு வந்தது என்ற கதைக் கருவைக் கொண்டிருந்தது. இதை மையமாகக் கொண்டே எஸ்கிலைஸ் (Aeschylus) என்பவரால் ‘கட்டுண்ட பிராமிதியூஸ்’ என்ற அவல நாடகம் உருவாகியுள்ளது.

தமிழ் நாட்டிலும் சில குறிப்பிட்ட தாவரங்கள் விண்ணுலகத்தில் இருந்து பூவுலகிற்கு வந்ததாகக் கூறும் கதைகளும் வாய்மொழிக் கதைகளாக உருவாகிப் பின்னர் புராணங்களாக மாற்றம் பெற்றன. ஆனால் இவை கடவுளால் வழங்கப்பட்டதாக மட்டுமின்றி தேவருலகத்தில் இருந்து கவர்ந்து வரப்பட்டவையாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. இது அத்தாவர அறிமுகத்தின் விளைவாக உருவான கற்பனையின் மற்றொரு வகைமை எனலாம்.

நெற்பயிர் குறித்தும் சில தொன்மங்களும் வாய்மொழிக் கதைகளும் உருவாகி வழங்குகின்றன. ‘அமா தெரஷூ-ஓமி-காமி’ என்ற சூரிய தேவதைதான் நெல் தானியத்தை உலகத்துக்குத் தந்தாள் என்ற தொன்மம் ஜப்பானிய மொழியில் உள்ளது (ரமேஷ் தத் சர்மா, 2010:4). பிலிப்பைன்ஸ் நாட்டு வாய்மொழிக் கதையொன்று, அக்மே என்ற சிறுமி நெற்பயிரை அறிமுகம் செய்ததாகக் குறிப்பிடுகிறது (மேலது: 4). அருணாசலப் பிரதேசத்தில் அலாங் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆதிவாசிப் பெண் நெல் வேளாண்மையை முதலில் அறிமுகம் செய்தார் என்ற நம்பிக்கை உள்ளது (மேலது: 6).

கரும்பு என்ற தாவரத்தைத் தேவலோகத்திலிருந்து அதியமான் என்ற சங்ககாலக் குறுநிலமன்னனின் முன்னோன் ஒருவன் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவந்தான் என்று புறநானூற்றுச் செய்யுள்கள் ( 99:2, 392:19-21) குறிப்பிடுகின்றன.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊரில் கிடைத்துள்ள 17 அல்லது 18 ஆவது நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படும் கல்வெட்டொன்று தேவேந்திரகுல வேளாளர்களின் தோற்றத் தொன்மம் (Orgin Myth) போன்று உள்ளது. அது வருமாறு:

‘தொடர்ச்சியாக மழை பெய்யாமையால் உலகம் வறுமைப்பட்டு இருக்கிற காலத்தில்’ சேரனும் சோழனும் உக்கிரப்பெருவழுதி என்ற பாண்டிய மன்னனும் மழைவேண்டி தேவேந்திரனைக் காணச் சென்றனர். அது நிறைவேறாத நிலையில் “பாண்டிய மன்னனும் கோபித்து எழுந்து தேவகன்னிமார் நூறு குடும்பத்தாரைப் கைப்பிடியாகக் கூட்டிக்கொண்டு செந்நெல் விதையும் கரும்பு விதையும் கதலி வாழை விதையும் பனை விதையும் இது முதலான பலவித்தும் ஒரு ரிஷபமும் (காளை) சுரபியும் (பசுவும்) கொண்டு பூமியிலே வந்தான்” (தெ.இ.க. 34: க.எண். 432. தொடர் 3-8). பின் பாண்டிய மன்னன் தன்னுடன் அழைத்துச் சென்ற நான்கு தேவேந்திரர்களில் மூத்தவனுக்குத் ‘தேவேந்திரக் குடும்பன்’ என்று பட்டம் கட்டி சில விருதுகளையும் வழங்கிச் சிறப்பித்தான் (மேலது). அத்துடன் பறையர் சமூகத்திற்கும் சில விருதுகளை வழங்கியுள்ளான் (மேலது: தொடர் 9-14).

இக்கல்வெட்டுச் செய்தி பள்ளர் என்று முன்னர் அழைக்கப்பட்ட மள்ளர் சமூகத்தினரிடம் வழக்கில் இருந்த தோற்றத் தொன்மத்தின் தாக்கத்திற்காட்பட்டுள்ளது. இக்கல்வெட்டு தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் என்ற ஊரிலுள்ள சங்கரநயினார் கோயில் கோபுரத்தினுள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கல்வெட்டுக் காலத்தில் இவர்களுக்குக் கோயில் நுழைவு மறுக்கப்படவில்லை எனபதற்கு இது சான்றாகும்.

தொன்மங்கள் என்பன மீவியற்கைச் (supernatural) செய்திகளைக் கொண்டிருப்பன என்றாலும் அதன்பொருட்டு அவற்றை முற்றிலும் கற்பனை என்று புறந்தள்ளிவிட முடியாது. அவை வரலாற்று வரைவுக்கான தரவுகளைத் தம்முள் கொண்டிருப்பதுண்டு. இத்தரவுகளை உள்ளடக்கிய வரலாற்றை உட்பொதிந்த வரலாறு (Embedded History) என்று ரொமிலா தாப்பர் (2013 : 45-46) குறிப்பிடுவார்.

நெல் வேளாண்மையின் நுட்பம் அறிந்த ஒரு சாதி என்ற நிலையில் இத்தொன்மம் அவர்களின் தோற்றத் தொன்மமாக உருவாகி வரலாறாக மாறியுள்ளது. இதன் தொடர்ச்சி போன்று தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் ஒன்றான பள்ளு என்ற சிற்றிலக்கியத்தில் இச்சமூகத்தைச் சேர்ந்த கதைமாந்தர் ஒருவர் இடம் பெறுவது மரபாக இருந்துள்ளது. ஆண்மையும் நெல்வேளாண்மை நுட்பங்களை அறிந்தவராகவும் இப்பாத்திரம் படைக்கப்படுகிறது.

இப்பாத்திரத்தின் வழி, நெல் வித்துகள், உழவு மாடுகள், மழை பெய்தல் என்பன குறித்த விரிவான செய்திகள் கூறப்படுகின்றன. இதனால் அக்காலத்திய நெல் வேளாண்மை குறித்த ஆவணமாகப் பள்ளு இலக்கியங்கள் பலவும் விளங்குகின்றன.

தொன்மமும் சடங்கும்

தொன்மங்களை உள்வாங்கியே பெரும்பாலான சடங்குகள் நிகழுகின்றன. நினைவுக்கெட்டாத நெடுங்காலமே தொன்மங்களில் இடம்பெறும் காலம் என்று வில்லியம் பாஸ்கம் என்ற நாட்டார் வழக்காற்றறிஞர் குறிப்பிட்டுள்ளார். நெடுங்காலத்திற்கு முன் எப்போதோ நிகழ்ந்ததாகத் தொன்மங்கள் கூறும் செய்தியினை மீண்டும் நிகழ்த்திக் காட்டுவதாக (Re enactment) சடங்குகள் அமைகின்றன. கோவில்களிலும் வீடுகளிலும் நிகழும் பண்டிகைகள் சில இத்தன்மைத்தனவே.

இவ்வகையில் கோவை நகருக்கருகில் பேரூர் என்ற ஊரிலுள்ள பட்டீஸ்வரர் கோயிலில் நிகழும் நெல் நாற்று நடும் சடங்கானது கச்சியப்ப முனிவர் எழுதிய பேரூர்ப் புராணச் செய்தியுடன் நெருக்கமான தொடர்புடையதாக உள்ளது என்பதே பேரா.ஞானசேகரனின் கருத்தாகும்.

தேவாரம் பாடிய மூவருள் ஒருவரான சுந்தரர் வந்தபோது பட்டீஸ்வரர் கோயில் சிவனும் பார்வதியும் வயலில் நெல் நாற்று நட்டுக்கொண்டிருந்தனர் என்ற தொன்மச் செய்தியை மீன்டும் நிகழ்த்திக் காட்டுவதே இங்கு நிகழும் நாற்று நடுதல் சடங்கின் நோக்கம் என்பதை இந்நூலில் அவர் நிறுவியுள்ளார். அத்துடன் மள்ளர் சமூகத்திற்கும் நெல் வேளாண்மைக்கும் இடையிலான பிணைப்பையும் வெளிப்படுத்தியுள்ளார் (மகராசன் 2023 : 124-126). நாற்று நடும் சடங்கிற்கு முன் நிகழும் சில சடங்குகளும் இவற்றில் இச்சமூகத்தினரின் பங்கேற்பும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்திற்கும் நெல் வேளாண்மைக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்பை வெளிப்படுத்துகின்றன.

இத்தொன்மத்துடன் ஒத்ததாகத் திருவாருர் மாவட்டத்திலுள்ள திருநாட்டியத்தான்குடி என்ற ஊரிலும் தொன்மம் சார்ந்த சடங்கு ஒன்று நிகழ்கிறது. ஆனால் இது அக்கிராமத்தினரால் கோயில் சார்ந்த திருவிழாவாக நடத்தப்படுகிறது.

இத்தலத்திலும் சுந்தரர் வந்தபோது இறைவன் இறைவியுடன் நெல் நாற்று நடச் சென்றுள்ளார். இதுகுறித்து, ‘திருத்தலங்கள் வரலாறு’ என்ற நூலின் ஆசிரியர் பால.சாரநாதன் (2000: 300) தமது நூலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

‘சுந்தரமூர்த்தி நாயனார் வந்தபோது சுவாமியும் அம்பிகையும் “நீச” வடிவம் கொண்டு நடவு நடச் சென்றனர்.

இவர் விநாயகரைப் பிரார்த்திக்க அவர் சுட்டிக்காட்ட இருவரும் சென்று தரிசித்தனர். விநாயகர் விரலைச் சுட்டிக்காட்டிய குறிப்போடு சந்நதியிலுள்ளார். பிள்ளையாருக்குக் கை காட்டு மூர்த்தி என்பது பெயர். வயல் கோயிலுக்குக் கிழக்கே உள்ளது. பெயர் கோழி மேய்ந்தான் கட்டளை என்பது.’

(பால.சாரநாதன் குறிப்பிட்டுள்ள ‘நீச வடிவம்’ என்ற சொல்லில் இடம்பெறும் “நீச” என்ற அடைமொழிக்கு மூன்று நிகண்டுகள் தரும் பொருள் வருமாறு: திவாகரம் நிகண்டு: ‘கீழ்மக்கள்’ என்றும் பிங்கலம், சூடாமணி நிகண்டுகள் ‘கீழோர்’ என்றும் பொருள் உரைக்கின்றன. சாரநாதனின் இனமையவாதச் சிந்தனைக்கு நீசவடிவம் என்ற அவரது சொல்லாட்சி சான்றாக அமைந்துள்ளது).

திருநாட்டியத்தான்குடியில் நிகழும் நடுகைத் திருவிழாவில் சிறுவன் ஒருவனும் சிறுமி ஒருத்தியும் முறையே சிவன், பார்வதி வேடம் பூணுகின்றனர். இவர்களில் சிவன் வேடம் புனைந்த சிறுவனின் கையில் இத்திருவிழாவிற்காகவென்றே உருவாக்கப்பட்டுள்ள சிறிய கலப்பை ஒன்று இடம்பெறுகிறது. சிவனும் பார்வதியும் சப்பரத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். உழுது தொழி கலக்கப்பட்டு நாற்று முடிகளுடன் நடுகைக்கு ஆயத்தமாக உள்ள கோயில் வயலுக்குச் சென்றவுடன் தொழி உழவு (சேற்று உழவு) நிகழ்கிறது. தொழி கலக்கப்பட்ட வயலில் சிவனும் பார்வதியும் நாற்று நடுகின்றனர். இவர்களைத் தொடர்ந்து அக்கிராம மக்கள் நாற்று நடுகின்றனர். இது முன்னர் குறிப்பிட்ட தொன்மத்தை அடிப்படையாகக் கொண்ட சமயச் சடங்காக நிகழ்கிறது.

நெல்லின் சிறப்பு

அரசர், அந்தணர், வணிகர், வேளாளாளர் என்ற நான்கு வருணத்திற்கும் உரிய தொழில்களைக் குறிப்பிடும் போது வணிகருக்கு வாணிபத்துடன் வேளாண்மைத் தொழிலும் உரித்தானது என்பதை,

மெய்திரி வகையின் எண்வகை உணவின்
செய்தியும் வரையார் அப்பா லான

என்று தொல்காப்பியம் (மரபியல்: 79) குறிப்பிடுகிறது. எண்வகை உணவு எது? என்று அவர் குறிப்பிடாத நிலையில் இளம்பூரணர் (பொ.ஆ. 1070 அல்லது 1095) என்ற உரையாசிரியர் “எண்வகை உணவாவன: நெல்லு, காணம்* (*கொள்ளு), வரகு, இறுங்கு, தினை, சாமை, புல்லு* (*கம்பு), கோதுமை……” என்று குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியர் (பொ.ஆ. 12ஆவது நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 13ஆவது நூற்றாண்டின் முற்பகுதி) என்ற உரையாசிரியர், “எண்வகை உணவென்பன பயறும் உழுந்துங் கடுகுங் கடலையும் எள்ளுங் கொள்ளும் அவரையும் துவரையுமாம்” என்று உரையெழுதியுள்ளார். தொல்காப்பியர் காலத்தில் எண்வகை உணவு எவை என்பது அனைவரும் அறிந்திருந்த நிலையில் அவற்றின் பெயர்களைக் குறிப்பிட வேண்டிய தேவை இல்லாத நிலை இருந்துள்ளது எனலாம்.

சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் ( பொ.ஆ.12ஆவது நூற்றாண்டு) “கூல வணிகன் சாத்தன் கேட்டனன்” என்ற தொடருக்கு (பாயிரம்:88) “கூலம் எண்வகைத்து அவை நெல்லு, புல்லு, வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, இராகி” என்று உரையில் குறிப்பிட்டுள்ளார். இவர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுவன அனைத்தும் தானியம்தான். பயறு வகைகள் எவையும் இடம் பெறவில்லை.

உரையாசிரியர்கள், காலத்தில் வட்டார வேறுபாட்டின் அடிப்படையில் சில வேறுபாடுகள் உருவானாலும் எண்ணிக்கையில் மட்டும் மாறுதல் இல்லை. மூவரும் தம் பட்டியலில் முதல் இடத்தை நெல்லுக்கு வழங்கியுள்ளனர். நெல்லின் பரவலான அறிமுகம், அதன் உயர் மதிப்பு என்பன இதற்குக் காரணமாக இருக்கலாம். மேலும் இன்று கூறப்படும் நவதானியம் என்ற பகுப்புமுறை மேற்கூறிய உரையாசிரி்யர்கள் காலத்தில் இல்லையென்பதும் எண்வகைத் தானியங்கள் என்ற பகுப்பே இருந்துள்ளது என்பதும் தெரியவருகிறது.

இலக்கியப் பதிவுகள்

தொன்மங்கள் மற்றும் தொல்காப்பிய உரைகளில் மட்டுமின்றித் தொன்மையான சங்க இலக்கியங்களிலும் நெல்குறித்தும் நெல் வேளாண்மை குறித்தும் குறிப்பிடத்தக்க அளவில் பதிவுகள் உள்ளன. பண்டைத் தமிழகத்தில் நெல்விளையும் கழனிகளையும், நெற்குவியல்களையும் உடைய ஊர்கள் சிறப்புக்குரியனவாகக் கருதப்பட்டுள்ளன. குடவாயில் என்ற ஊரின் சிறப்பை, ‘பழம்பல் நெல்லின் பலகுடிப் பரவை’ என்று குறிப்பிடும் அகநானூறு (44:16), அள்ளூர் என்ற ஊரின் சிறப்பை நெற்குவியல் நிறைந்த அள்ளூர் என்று அடையாளப்படுத்துகிறது (மேலது 46: 14-16). சோழ நாட்டிலுள்ள அம்பர் என்ற ஊரில் வாழ்ந்த வள்ளலைக் குறிப்பிடும் போது கல்லாடனார் என்ற புலவர் அவனது ஊரான அம்பரின் சிறப்பை, ‘தாழ்நீர்ப் படப்பை நெல்விளை கழனி யம்பர் கிழவோன்’ என்று குறிப்பிட்டுள்ளார் (புறநானூறு385:9-10).

ஊர்கள் மட்டுமின்றி நெல்மிகுந்த வீடுகளும் சிறப்புக்குரியனவாகப் பார்க்கப்பட்டன. ‘நெல் மலி மனை’ (நெல் மிகுந்த வீடு ) என்று புறநானூறும் (388:2) ‘நெடுங்கூட்டுப் பிண்ட நெல்லின் தாய்மனை’ (நிரம்பக் கொட்டிய நெல்லையுடைய தாய்வீடு) என்று நற்றிணையும் (26:3-4) குறிப்பிடுகின்றன.

எருமையை ஏரில் பூட்டி உழும் உழவன் ஒருவனை “மலைகண்டு அன்ன நிலைபுணர் நிலப்பின் பெருநெல் பல்கூட்டு எருமை உழவ’ என்று நற்றிணை (60: 1-2) அழைக்கிறது (‘மலையை எடுத்து நிறுத்தி வைத்தார் போன்று நிலையுடன் கூடிய உயர்ச்சி பொருந்திய அளவற்ற நெற்களின் தொகுப்பைக் கொண்டிருக்கிற, எருமையை ஏரில் பூட்டி உழும் உழவனே’ என்பது வேங்கடராமன் உரை).

பொன்னும் நெல்லும் சமதையாகப் பார்க்கப்பட்டிருக்கலாம் என்ற எண்ணத்தை “நெல்லென்னா பொன்னென்னா” (புறநானூறு 384:11), “நெற்பல பொலிக பொன் பெரிது சிறக்க” (ஐங்குறுநூறு: 1:1) என்ற சங்கப்பாடல் தொடர்கள் தோற்றுவிக்கின்றன.

போர்க்களத்தை ஏர்க்களமாக உவமித்துப் பரணர் என்ற கவிஞர் பாடியுள்ள புறநானூற்றுச் செய்யுளில் (369) இடம் பெற்றுள்ள “ஈரச் செய்”, “பைஞ்சால்” என்ற சொற்கள் நெல் வேளாண்மையைக் குறிப்பதாகவே உள்ளன.

போர்கள் மிகுந்த சங்ககாலத்தில் வெற்றி பெற்ற மன்னன் தன் படை வீரர்களுக்குச் சிறிய ஊர்களைக் கொடையாக வழங்கும் வழக்கம் இருந்துள்ளது. இவ்வாறு வழங்கப்படும் நிலம் கரம்பை (கரிசல்) நிலமாக இருந்துள்ளது. பின்னர் நீர்வளம் மிக்க நெல் விளையும் மருதநிலங்களை வழங்குதலாக மாற்றமடைந்தது. வளம் பொருந்திய மருத நிலத்து ஊர்களைக் கொடையாக வழங்குதல் “தண்ணடை” வழங்கல் என்றழைக்கப்பட்டுள்ளது (புறநானூறு, உ.வே.சா. பதிப்பு 2014 குறிப்புரை செய்யுள்கள்: 285, 287, 297). சீரூர்த் தலைவன் ஒருவன் தான் கைப்பற்றிய தண்ணடை ஊர்களை எல்லாம் வழங்கி முடிந்த நிலையில் இரவலன் ஒருவனுக்குக் கரம்பை நிலத்தை வழங்கியதைத் தன் வறுமையாகக் கருதி நாணினான் (புறம்: 285: 15-17). இவ்வாறு நெல்விளையும் மருதநில ஊர்களைக் கொடையாக வழங்குதலும் பெறுதலும் சிறப்புடையது என்ற கருத்து சங்ககாலத்தில் நிலவியதை,

நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதற் புரளும்
தண்ணடை பெறுதல் யாவது படினே (புற. 287: 8-10)

******
கன்றுடை மரையாத் துஞ்சும் சீறூர்க்
கோள் இவண் வேண்டேம் ………..
துறைநனி கெழீஇக் கம்பு ளீனும
தண்ணடை பெறுதலு முரித்தே ( புற297:4-5, 7-8)

என்ற புறநானூற்றுச் செய்யுள் தொடர்களும் எடுத்துரைக்கின்றன. ஏனைய தானியங்களிலிருந்து மாறுபட்டு மதிப்புறு தானியமாக நெல்லும், அது விளையும் நீர் வளம் மிகுந்த மருத நிலமும் விளங்கியுள்ளன.

வழிபாட்டில் நெல்

உணவு தானியமான நெல் கடவுள் வழிபாட்டிலும் மங்கல அமங்கலச் சடங்குகளிலும் இடம்பெறும் பொருளாகவும் சங்ககாலத்தில் விளங்கியுள்ளது. அந்திமாலைப் பொழுதில் இரும்பால் செய்யப்பட்ட விளக்கேற்றி நெல்லும் மலரும் தூவி வழிபட்டதை நெடுநல்வாடை (42-43 ),

இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ
நெல்லு மலருந் தூஉய்க்கை தொழுது

என்றும், முல்லைப்பாட்டு (8-10) “..நெல்லோடு, நாழி கொண்ட நறூவீ முல்லை அரும்பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது” என்றும் குறிப்பிடுகின்றன. சிலப்பதிகாரமும் (9:1-2) “அரும்பவிழ் முல்லை நிகர்மலர் நெல்லோடு தூஉய்” என்று பதிவு செய்துள்ளது. கடவுள் வழிபாட்டில் மட்டுமின்றித் திருமணச் சடங்கிலும் இம்மரபு இருந்துள்ளது. மணமக்கள் தலையில் நெல்லும் மலரும் கலந்த நீரை ஊற்றி வாழ்த்தியதை அகநானூறு (86:15-16),

‘நீரோடு சொரிந்த ஈர்இதழ் அலரி
பல்இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க’ என்று பதிவு செய்துள்ளது.

நாட்டார் வழக்காறுகளில்

இவ்வாறு சங்ககாலத்தில் சடங்குகளில் இடம்பெற்ற நெல் சங்ககால மரபின் தொடர்ச்சி போன்று இன்றும் சடங்குப் பொருள்களில் ஒன்றாகத் திகழ்கிறது. கோயில் குடமுழுக்கில் கலசங்களை வைத்து வழிபடுவது மரபாக இருந்துள்ளது. நெல் பரப்பப்பட்ட தரையில் கலசங்களை வைக்கும் மரபைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. நாழி என்ற முகத்தலளவைக் கருவி நிறைய நெல் வைத்து விளக்கின் பக்கவாட்டிலோ விளக்கின் முன் விரிக்கப்பட்ட வாழையிலையிலோ வைத்து வணங்குவது இன்றும் தொடர்கிறது. இதை “நிறைநாழி வைத்தல்”, “நிறை நாழி கும்பிடுதல்” என்றும் கூறுவர். அந்த நாழிக்குப் பொட்டிடுவதும் உண்டு. திருமணம், பூப்புச்சடங்கு, சிறாரை முதல்முறையாகப் பள்ளிக்கனுப்பும் சடங்கு, புதுமனைப் புகுவிழா, தைப்பொங்கல் இடுதல் என்பனவற்றில் இது நிகழும். சிறார்களுக்கு எழுதக் கற்றுக் கொடுக்கும் போது முதலி்ல் தாம்பாளத்தில் பரத்திவைக்கப்பட்ட அரிசியின் மீதுதான் விரலைப் பிடித்து எழுதச் செய்வார்கள்.

நாழி என்ற அளவு கருவி இல்லாத நிலையில் சிறிய அளவிலான உழக்கு, நீரருந்தப் பயன்படுத்தும் குவளை என்பனவற்றைப் பயன்படுத்தலும் உண்டு. நெல் இல்லாதவர்கள் பதிலியாக அரிசியைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

பொங்கல் திருநாளின்போதும், பிள்ளையார் சதுர்த்தியின் போதும் நிறைநாழி நெல் வைத்து வணங்குவதலும் உண்டு. இச்செய்திகள் வளத்தின் குறியீடாக மட்டுமின்றி வணக்கத்திற்குரிய கடவுளாகவும் நெல் விளங்குவதை வெளிப்படுத்துகின்றன.

இறப்பின் போது இறந்தவரின் “தலைமாட்டில்” (தலைப்பக்கம்) நிறைநாழி நெல் வைக்கப்படும். இறந்தவரின் வாயில் சிறிதளவு அரிசியைப் போடுவதும் இறப்புச் சடங்குகளில் ஒன்று. இதை இறந்தவரின் பிள்ளைகளும் நெருங்கிய உறவுக்காரர்களும் செய்வர். இதை வாக்கரிசி (வாய்க்கரிசி) போடுதல் என்பர். நெல் செழிப்பைத் தரும் என்ற நம்பிக்கையும் இறந்தவருக்கு உணவு வழங்குதல் என்ற விருப்பமும் இதற்குக் காரணமாகும். இதுபோல் நெல், புன்செய்த் தானியங்கள் ஆகியனவற்றை அறுவடை செய்தபின் தானியத் தட்டைகள், தாள்களில் இருந்து அவற்றைப் பிரித்தெடுக்கும் பணி நிகழும் களங்களில் செருப்பணிந்து நடப்பதில்லை. இது ஒரு விலக்காகவே (Taboo) உள்ளது.

இறந்தோரை எரிக்கும் வழக்கமுடைய சமூகங்களில் எரியூட்டிய மறுநாள் அன்று எரிமேடையில் உடல் கிடத்தப்பட்ட தலைப்பகுதியில் ஒரு பாத்திபிடித்து அதன் உட்பகுதியைச் சேறாக்குவர். இதில் குச்சியால் செய்யப்பட்ட கலப்பையால் உழுதபின்னர் நெல் உள்ளிட்ட நவதானியங்களையும் விதைப்பர். இது வேளாண் சமூகம் சார்ந்த ஒரு போலி (Mockery) உழவுச் சடங்காகும். குடும்ப உறுப்பினர் ஒருவர் மறைந்தாலும் அக்குடும்பத்தின் வளமை தொடரவேண்டும் என்ற விருப்பத்தின் வெளிப்பாடாக இது அமைந்துள்ளது. இச்சடங்கில் நவதானியங்கள் விதைக்கப்பட்டாலும் கூர்ந்து நோக்கினால் இவற்றை விதைப்பதற்காக உருவாக்கப்பட்ட சிறுபாத்தியானது நெல் வேளாண்மைக்காக அதிக அளவு தண்ணீர் பாய்ச்சிச் சேறாக்கப்படுவதை நினைவூட்டுகிறது. தென்மாவட்டங்களில் இதைத் “தொழி கலக்குதல்” என்பர். இது நெல் வேளாண்மைக்கே உரித்தான சாகுபடி முறை. உணவாக அமையும் தானியங்களை அவர்கள் வளமையின் (செழிப்பின்) குறியீடாகக் கருதுவதால் இச்செயல்களை மேற்கொள்கிறார்கள். இவையெல்லாம் வளமைச் சடங்கு (Fertility Rituals) என்று மானுடவியலாளர் குறிப்பிடுவதன் பாற்பட்டதாகும்.

அறுவடையான நெற்கதிரில் இருந்து பிரித்தெடுத்த நெல்லில் சிறிதளவைப் போட்டு வைப்பதற்கென்று மண்பானை ஒன்றுண்டு. இதை “நாட்கதிர்ப் பானை” என்றழைப்பர். திருமணமாகி கணவன் வீட்டிற்குள் நுழைந்தவுடன் புதுமணப்பெண் நாட்கதிர்ப் பானையினுள் இருக்கும் நெல்லைக் கையால் தொடுவது ஒரு சடங்குபோன்று நிகழும். கார்த்திகை மாதம் வீடுகளில் அகல்விளக்குகளை ஏற்றி வைக்கும் இடங்களில் ஒன்றாக நாட்க்கதிர்ப் பானை உள்ளபகுதி அமைகிறது. வளமையின் குறியீடாக நெல் கருதப்படுவதே இவற்றிற்குக் காரணமாகும்.

வளமையின் அடையாளமாக நெல்

சங்க இலக்கியங்களுக்குப் பிந்தைய தேவார மூவர்கள் பாடிய பதிகங்களிலும் செழிப்பின் அடையாளமாக நெல் இடம் பெற்றுள்ளது. சான்றாக திரும்பரம்புயம் என்ற தலத்தை ‘நென் மலிந்த நெய்த்தானம்’ என்றும் (6373:2), நீடூர் என்ற ஊரில் கோவில் கொண்டுள்ள சிவனை ‘நெல்லால் விளை கழனி நீடூரானை’ என்றும் (6352:4) திருநாவுக்கரசர் பாடியுள்ளார். திருமுல்லைவாயில் என்ற தலத்தை “அன்னம்மலி நெல்வாயில்” என்று சம்பந்தரும் (7251) திருக்கானாட்டுமுள்ளூர் என்ற தலத்தைக் ‘கரும்புயர்ந்து பெருஞ்செந்நெல் நெருங்கிவிளை கழனிக்க கானாட்டு முள்ளூரிற் கண்டு தொழுதேனே’ (406) என்றும் திருவாழ்கொளிப்புத்தோர் என்ற தலத்தின் வளத்தை “மலைத்தசெந் நெல்வயல் வாழ்கொளி புத்தூர்” ((581) என்று சுந்தரரும் பாடியுள்ளனர்.

தேவார மூவர் காலத்துக்குப் பிந்திய காலத்திய (பொ.ஆ. 12 ஆவது நூற்றாண்டின் பிற்பகுதி) நூலான பெரிய புராணம் எனும் திருத்தொண்டர் புராணத்திலும் நாயன்மார்கள் பிறந்த ஊரின் சிறப்பைக் குறிப்பிடும்போது நெல்வளத்தையும் சேக்கிழார் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார். வளத்தின் குறியீடாக நெல் சுட்டப்படுவது தமிழ் இலக்கிய மரபில் தவிர்க்க இயலாத ஒன்றாக இருந்துள்ளது.

இம்மரபின் தாக்கத்திற்கு நெற்பயிர் விளையாத இத்தாலி நாட்டவரான வீரமாமுனிவரும் ஆட்பட்டுள்ளார் (இத்தாலியன் என்ற பெயரிலான நெல் குடும்பத்திற்கும் இத்தாலிக்கும் எவ்வித உறவும் கிடையாது). அவருடைய தேம்பாவணிக் காப்பியக் கதை நிகழும் களமும் நெல் வேளாண்மை நிகழாத பாலஸ்தீன நாடுதான். புனித சூசையப்பரின் (ஜோசப்பின்) வரலாற்றைக் கூறும் இக்காப்பியத்தின் முதற்காண்டத்தில் இடம் பெற்றுள்ள நாட்டுப் படலத்தில், நாட்டுவளம் கூறும்போது நெல் வேளாண்மையை வீரமாமுனிவர் இவ்வாறு வருணித்துள்ளார்:

அந்நாட்டில் நெற்பயிர்கள் செழித்து வளர்ந்து, வளர்ச்சியின் தொடக்கக் கட்டத்தில் அவை தலை நிமிர்ந்து நிற்கும் காட்சியை, செல்வச் செருக்குடைய புல்லோருடன் ஒப்பிட்டுள்ளார். பின்னர் அவை முதிர்ச்சியடைந்து நெல்மணிகளுடன் சாய்ந்து நிற்பதை நற்குணமுடையோர் செருக்கின்றித் தலைவணங்கி நிற்பதுடன் ஒப்பிட்டுள்ளார்.

இது சீவகசிந்தாமணிக் காப்பியத்தின் தாக்கம் எனலாம். மொத்தத்தில் நெற்பயிரும் நாட்டு வளமும் இணைத்தே பார்க்கப்பட்டுள்ளன.

தொல்லியல் சான்றுகள்

ஆங்கிலக் காலனிய ஆட்சி தொடங்கி இன்றுவரை தொல்லியல் ஆய்வுகள் பல தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளன. இவற்றுள் பரவலாக அறிமுகமான ஓர் ஊர் ஆதிச்சநல்லூர். தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகில் பொருநை ஆற்றின் தென்கரையில் உள்ள ஊர் ஆதிச்சநல்லூர். இங்கு நடந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட ஈமத்தாழிகளில் நெல்மணி, நெல்உமி, நெல்தவிடு என்பன இடம் பெற்றிருந்தன. இங்கு கண்டெடுக்கப்பட்ட மட்பானை ஒன்றில் நெற்கதிர் ஒன்று கோட்டோவியமாக இடம் பெற்றுள்ளது (சிற்றம்பலம் 1999: 170, 199). இச்செய்தி ஆதிச்சநல்லூர்ப் பகுதியின் மக்கள் நெல் வேளாண்மையை மேற்கொண்டிருந்த நிலைகுடிகளாக வாழ்ந்தமையை உணர்த்துகின்றன. இன்றும் இவ்வூர்ப்பகுதியில் தேவேந்திரகுல வேளாளர்கள் மிகுதியாக வாழ்கின்றனர்.

பொருந்தல் அகழாய்வு

பெருங்கற்காலக் காலத்தில் இருந்தே நெல்லின் பயன்பாடு தமிழகத்தில் இருந்துள்ளதைத் தொல்லியல் ஆய்வுகள் சில அறிவியல் அடிப்படையில் உறுதி செய்துள்ளன. அமராவதி ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில் (1) கரூர், (2) நெடுங்கூர், (3) பொருந்தல், (4) தாண்டிக்குடி என்ற நான்கு ஊர்களும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுக் களங்களாகும் (Rajan.K. & Kumar.V.P. 2014:27). இவற்றுள் பொருந்தல் ஊரில் நிகழ்ந்த தொல்லியல் ஆய்வு நெல் தானியத்தின் தொன்மையுடன் தொடர்புடையதாக உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 56 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பழனி நகருக்குத் தென் மேற்கில் 12 கி.மீ தொலைவில் பொருந்தல் என்ற சிறிய கிராமம் அமைந்துள்ளது. பொருந்தலாறு என்ற பெயரிலான ஆற்றின் கரையில் இது அமைந்துள்ளமையால் இப்பெயரைப் பெற்றுள்ளது (இதே ஆறு பழனியில் ஓடும் போது சண்முகாநதி என்றழைக்கப்படுகிறது).

2009, 2010இல் பேராசிரியர் ராஜன் குழுவினரால் பொருந்தல் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் மெக்காலிதிக் (Megalithic) என்று தொல்லியலாளர் குறிப்பிடும் பெருங்கற்காலத்தைய (Neolithic period) (தமிழகத்தில் கி.மு.1000 முதல் கி்.பி 200 வரையிலான காலம்) நான்கு புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்ட உதவும் நோக்கில் இவற்றிற்கு M1, M2, M3, M4 என்று வரிசை எண்கள் தரப்பட்டன. இந்நான்கு குழிகளிலும் இறந்தோர் உடலை வைக்கும் வகையிலான ஈமத்தாழிகள் (urn) இடம் பெற்றிருந்ததுடன் புதைகுழியினுள் கண்ணாடி மணிகளும் சுடுமண் பொருட்களும் கிடைத்தன. களஆய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் வழி இங்கு வாழ்ந்த மக்கள் கண்ணாடி மணிகள் செய்யும் தொழிலையும், வேளாண்மையையும் மேற்கொண்டிருந்தனர் என்று நூலாசிரியர்கள் (மேலது தொகுதி1: 69) குறிப்பிடுகிறார்கள்.

இந்நான்கு புதைகுழிகளிலும் நிகழ்த்திய களஆய்வி்ல் நான்கு கால்களைக் கொண்ட சுடுமண் ஜாடிகளில் நெல் கிடைத்துள்ளது. M1, M4 ஈமக் குழிகளில் கிடைத்த நெல்லின் வகைமாதிரியைப் பரிசோதித்த சிரீலங்காவின் பட்டமேற்படிப்புத் தொல்லியல் கல்வி நிறுவனத்தின் நிபுணர் பேராசிரியர் முனைவர் பிரேமலதா, புதுச்சேரி பிரெஞ்ச் ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர் மு.அனுபமா ஆகிய இருவரும் இது பயிர் செய்யப்பட்ட நெல் என்று அடையாளம் கண்டுள்னர் (மேலது: 170).

பின்னர் இந்த நெல்லின் வகைமாதிரிகள், ரேடியோ மெட்ரிக் முறையில் காலக் கணிப்பு செய்யும் பொருட்டு அமெரிக்காவின் பீட்டா ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு மேற்கொண்ட ஆய்வில் இந்த நெல் கி.மு. 490 -520. காலத்தைச் சேர்ந்தது (கி.மு.5-6) என்ற முடிவுக்கு வந்தனர். இக்காலக்கணிப்பானது தமிழர் நாகரிகம், பண்பாடு குறித்த ஆய்வுகளில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இந்திய எழுத்துமுறையின் அறிமுகம் குறித்த கருத்தை மறுபார்வைக்கு உட்படுத்தவேண்டும் என்ற நிலையை இக்காலக்கணிப்பு உருவாக்கிவிட்டதாக ராஜன் (2014:170-171) மதிப்பிட்டுள்ளார். இங்கு நெல் மட்டுமின்றி, பிராமி எழுத்துப் பொறிப்புடன் கூடிய மட்கலத்தாங்கியும் (பிரிமனை) ஒன்றும் கிடைத்துள்ளது. அதில் தமிழ்-பிராமி எழுத்துவடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. ஈமக்குழியில் கிடைத்த நெல்லின் காலத்தைக் காலக்கணிப்புக்கு உட்படுத்தினால் அதன் காலம் தெரியவரும். அவ்வாறு தெரியவரும் காலமும் இம்மட்கலத் தாங்கியின் (பிரிமனையும்) காலமும் ஒரே காலத்தன என்ற முடிவுக்கு வரமுடியும் என்று கருதியுள்ளனர். ஏனெனில் ஈமச் சடங்கின் ஒரு பகுதியாகவே நெல்லும் மட்கலம் வைக்கும் பிரிமனையும் ஒன்றாகவே ஈமக்குழியில் இடம் பெற்றுள்ளன. ஈமக்குழியில் கண்டெடுக்கப்பட்ட நெல், பிராமி எழுத்து பொறித்த மோதிரம் வைக்கும் பிரிமனை என்ற இரண்டையும் இணைத்து அவர் பின்வரும் கருத்துக்களை முன்வைக்கிறார்:

♦  ஈமக்குழி நெல்லின் காலமும் பிராமி எழுத்துப் பொறிக்கப்பட்ட மோதிரம் வைக்கும் பிரிமனையின் காலமும் ஒன்று எனக் கருத இயலும்.

♦  இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் எழுத்துவடிவம் அறிமுகமான காலத்தை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு எனக் கொள்ள இயலும்.

♦  இந்தியாவில் பிராமி எழுத்துவடிவம் அசோக மன்னனின் காலத்தில்தான் (கி.மு.268-232) அறிமுகமாகியுள்ளது. அவரது கல்வெட்டுகள் பிராமி எழுத்துக்களில்தான் வெட்டப்பட்டன. அவரது காலத்தில்தான் இந்திய மொழிகள் பல எழுத்துவடிவம் பெற்றுள்ளன. அசோகரின் காலம் கி.மு. 268-232 என்னும் போது பொருந்தல் ஊரின் ஈமக்குழியில் கிடைத்த பிராமி எழுத்துப் பொறித்த மோதிரம் வைக்கும் பிரிமனையும் நெல்லின் காலமும் கி.மு. 5ஆவது நூற்றாண்டுக் காலத்தியதாகிறது. இதன் அடிப்படையில் அசோகருக்கு முன்னரே பிராமி எழுத்துவடிவு அறிமுகமாகியுள்ளது எனலாம். அத்துடன்,

♦  நெல் வேளாண்மை கி.மு. ஐந்திலேயே தமிழ்நாட்டில் நிலவியமை தெரியவருகிறது.

♦  இரும்பு யுகத்தில் அறிமுகமான பெருங்கற்கால ஈமக்குழிகள் வரலாற்றின் தொடக்கக் காலத்திலும் தொடர்ந்துள்ளன என்பதும் வெளிப்படுகிறது.

இக்கருத்தை மேலும் உறுதிசெய்யும் வகையில் மற்றொரு ஈமக்குழியில் கிடைத்த நெல் காலக்கணிப்பிற்கு அனுப்பப்பட்டது. அது பொது ஆண்டுக்கு முன் 450 என முடிவானது (இராஜன் 2018:264). மொத்தத்தில் ‘இவ்விரு காலக்கணிப்புகளும் தமிழ்- பிராமி எழுத்துக்களின் காலத்தை 2500 ஆண்டுகளுக்கு முன்பாக எடுத்துச் சென்றன’ என்கிறார் ராஜன்.

ஆனால் இவ்விரு முடிவுகளை ஏற்றுக் கொள்வதில் அறிஞர் பெருமக்கள் தயக்கம் காட்டினர். இது குறித்து,

“மேற்கூறிய காலத்தை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டிய அறிஞர் பெருமக்கள் இவ்விரு காலக்கணிப்புகளும் பெருங்கற்படைச் சின்னங்களில் இருந்து மட்டுமே வெளிப் போந்தமை என்றும், வாழ்விடப் பகுதியில் இருந்து கிடைக்கும் தமிழ் -பிராமி எழுத்துப் பொறிப்புப் பெற்ற மட்பாண்டங்களுக்கும் காலக் கணிப்பு செய்யப்படுமானால் இக்காலக்கணிப்பை ஏற்றுக் கொள்வதில் இருக்கும் தயக்கம் மேலும் விலகக்கூடும் என்ற கருத்தை முன்மொழிந்தனர்.”

பேராசிரியர் ராஜனும் அவரது ஆய்வுக் குழுவினரும் உள்ளம் தளரவில்லை. அடுத்ததாக அவர்கள் மேற்கொண்ட செயல்பாடுகளுக்கான களமாக ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமணல் என்ற ஊரைத் தேர்வு செய்தனர். சென்னிமலைக்கு மேற்கே நொய்யல் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள இவ்வூர் சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தில் கொடுமணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே இங்கு நிகழ்ந்த அகழாய்வில் கபிலர், அரிசில்கிழார் ஆகிய சங்ககாலக் கவிஞர்கள் பதிற்றுப்பத்து நூலில் (67, 74) குறிப்பிட்டுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில், கல்மணிகளால் ஆன தொழிற்கூடங்கள் செயல்பட்டமை கண்டறியப்பட்டது. நெசவுத் தொழில், சங்கு அறுத்தல் என்பனவும் இங்கு நிகழ்ந்துள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டன.

2012, 2013 ஆவது ஆண்டுகளில் கொடுமணலில் மீண்டும் அகழாய்வு நடத்தி வாழ்விடப்பகுதியின் மண்ணடுக்குகளில் இருந்து முறையே 15 செ.மீ., 60 செ.மீ., 65 செ.மீ., 80 செ.மீ., 120 செ.மீ. ஆழத்தில் பிராமி எழுத்துப் பொறிப்புடன் கூடிய மட்பாண்ட மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பின்னர் இவை பீட்டா அனலடிக் ஆய்வகத்திற்கும் அரிசோனா பல்கலைக்கழக ஆய்வகத்திற்கும் காலக் கணிப்பிற்காக அனுப்பப்பட்டன. பொது ஆண்டுக்குமுன் முறையே 200, 275, 300, 330, 408 என்ற காலக் கணிப்பை அவை வழங்கின. இம்முடிவு குறித்து :

“பொருந்தல் அகழாய்வில் கிடைத்த தமிழ்-பிராமி, எழுத்துக்களின் காலமும் பொது ஆண்டுக்கு முன் 5 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னோக்கித் தள்ளப்பட்டது. இக்காலக்கணிப்பு இங்குக் கிடைத்த ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்புகளாலும் உறுதிப்படுத்தப்பட்டன.”

“…தமிழ் நாட்டில் கிடைத்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்-பிராமி கல்வெட்டுக்களும், புலிமான் கோம்பை, தாதம்பட்டியில் கிடைத்த நடுகற்களும், கொடுமணல் உட்படப் பிற அகழாய்வில் கிடைத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்-பிராமி பொறிப்புக் கொண்ட மட்பாண்டங்களும் அறிவியல் முறைப்படி காலக் கணிப்புச் செய்யப்பட்டு அவை வழங்கிய முடிவுகளும் தமிழகம் 2500 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு செய்யப்பட்ட சமூகமாக விளங்கியிருக்க வேண்டும் என்பதைப் புலப்படுத்துகின்றன” என்கிறார் ராஜன் (2018:267-268). இவ்வுண்மையை அலங்காரச் சொற்களின் துணை எதுவுமின்றி அறிவியலின் துணையுடன் ராஜனும் அவரது குழுவினரும் வெளிப்படுத்தியுள்ளனர்.

சிவகளை

தூத்துக்குடி மாவட்டத்தில் சிவகளை என்னும் ஊரில் அண்மைக் காலத்தில் நிகழ்த்திய அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட ஈமத்தாழி ஒன்றில் நெல்மணிகள் கண்டெடுக்கப்பட்டன. இதை அமெரிக்க நாட்டின் மியாமி நகரிலுள்ள உலகப் புகழ்வாய்ந்த பெட்டா சோதனைச் சாலைக்குக் காலக் கணிப்பிற்காகத் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை 2021 ஆகஸ்ட் 18இல் அனுப்பியது. இந்நெல்மணிகளை ஆய்வு செய்த அந்நிறுவனம் அவற்றின் காலம் பொது ஆண்டுக்குமுன் (கி.மு.) ஆயிரத்து நூற்றைம்பைத்தைந்து ( கி.மு.1155) காலத்தைச் சேரந்தது என்று கண்டறிந்து உறுதிப்படுத்தியுள்ளது (சிவானந்தம்.இரா மற்றும் மூவர் 2022:16).

******

இவ்வாறு தமிழ்நாட்டின் பண்பாடு, சமூகப் பொருளாதாரச் செயல்பாடுகளுடன் தொடர்ச்சியான உறவை நெல் கொண்டிருந்ததை இலக்கியம், தொல்லியல், வரலாறு, நாட்டார் வழக்காற்றியல் என்ற அறிவுத் துறைகள் வெளிப்படுத்துகின்றன. தாவரவியல், வேளாண் அறிவியல் என்பனவற்றின் எல்லைக்குள் மட்டும் நெல் புதைந்து போய்விடவில்லை. அது வழங்கும் அரிசியும் உணவுப் பொருள் என்பதுடன் நின்றுவிடவில்லை. சமூகவியல், வரலாறு, தொல்லியல், பொருளியல், பண்பாடு, அரசியல் என்ற சமூக அறிவியல்களுக்குள்ளும் அது வேர்விட்டுள்ளது. இதைப் புறக்கணித்து விட்டு ஓர் உணவு தானியம் என்பதுடன் மட்டுமே நெல் குறித்த நம் பார்வையைக் குறுக்கிவிட முடியாது. தாவரவியல், வேளாண் அறிவியல் என்ற இரண்டு அறிவியல் துறைகளின் துணையுடன் நெல் குறித்து நாம் இதுவரை அறிந்துள்ள செய்திகளைக் கடந்து நமது சமூக வரலாற்றில் நெல் இடம் பெற்றுள்ளது.


 

ஆ. சிவசுப்பிரமணியன்
ஆ. சிவசுப்பிரமணியன்
Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : யோகதாரா

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top