நிலம் :-1
நிகழ்விடத்தின் எதிரெதிர் கண்ணாடி பிம்பம்போல குப்புறப்படுத்திருக்கும் இருவர். அவர்களது உடலெங்கும் செய்தித்தாள்கள் கந்துகந்தாக ஒட்டப்பட்டிருக்கின்றன. முகத்தில் வெண்காகிதங்கள் ஒட்டப்பட்டு அவை வர்ணம் தீட்டப்பட்டு ஆழி முகமூடித்தன்மையோடு இருக்கின்றன. மெல்லிய உடலசைவில் இருக்கும் நாடக நில இடது மூலையில் எட்டுப்பேர் கொண்ட குழு தலையில் வெண்பழுப்புத்துணி சுற்றப்பட்டிருக்கிறது. தலை கவிழ்ந்தபடி நெருக்கமாக பாதங்கள் சிறு சிறு அடியெடுப்பால் வேகம் கொள்கிறது. நிகழ்விட ஓரங்களிலெல்லாம் அரைவட்டமாக சுற்றித் திரும்பவும் நடுவில் கிடக்கும் இரு உடல்களை தீண்ட பழையபடி நகர்ந்து குனிந்து விலகி இணைகிறது. சில நொடிகளில் திரும்பவும் துவங்கிய இடத்திற்கே இன்னும் வேகமாக அதே பாத அளவில் வேகம் குறுக்காக கடந்து வேகம் குறைந்து வந்த இடத்திற்கே திரும்புதல், வேகம் மேலும் குறைந்து முகங்கள் கூட்டமாய் கீழே சரிய கைகள் வெவ்வெறு திசைகளுக்கு பயணிக்கிறது. எழுந்து பின்னோக்கி சரிந்து முகம் விலகி நிமிர்கிறது கீழே இருக்கும் இருவரை உதடுகள் துடிக்கக் கூட்டமாகி, கூர்ந்து நோக்கி வெவ்வேறு படிமங்களை உருவாக்கிக் காண்பித்த நிலையில் சட்டென வெவ்வேறு திசைகளுக்கு விலகி ஓடி காற்றை திசையை மோப்பமிட்டபடி ஓடியோடி துணி சுற்றிய முகத்தில் தொங்கும் வெண்துணிகள். சட்டென ஆங்காங்கே உரைந்த நிலையில் சிற்பமான உள்பக்கம் திரும்பிட வேகவேகமாக ஓடிவந்து எட்டு பேர் இரு குழுவாக பிரிந்து கவிழ்ந்து கிடப்பவரின் பாதம், அகங்கையில் முகம் பதித்து சுருண்டு கொள்கிறார்கள். இவை தாளகதியில் வேகமாய் நடக்கின்றது. பாதத்தில் முகம் பதித்தோரின் நீட்டிய ஒலி எழுப்பலோடு இரு உடலை விரித்த நிலையிலேயே தூக்குகிறார்கள். உடல்கள் குனிந்து இரு குழுவும் எதிரெதிராக விலகிக் கடக்கிறார்கள். எல்லாத் திசைகளுக்கும் தூக்கிச் செல்ல திசைகள் மறுக்கப்பட்டதாக உணர்ந்து பரிதவித்து வேகமாக தூக்கி ஓடுகிறார்கள். மூச்சிறைப்பு கொஞ்சம் கொஞ்சமாக சப்தமாகி இரு உடலையும் நீட்டிய ஒலியோடு தூக்கி வீச இருவரும் நிலத்தில் உக்கிரமாக காலூன்றி நிற்கின்றார்கள். மூச்சிறைக்கு விரித்த வழிகளோடு மெதுவாய் தலை திருப்பி நிற்கிறார்கள். எட்டுப்பேரும் இருவரைச் சுற்றி எதிரெதிர் கண்ணாடி பிம்பம்போல சட்டென வீழ்ந்துவிடுகிறார்கள். இருவரும் தம் உடலெங்கும் துண்டு துண்டாய் ஒட்டப்பட்டிருக்கும் காகிதங்களைப் பிய்த்தெடுத்து வீசி இருவரிப்பாடலை திரும்பத்திரும்பப்பாடி நிலத்திற்குள்ளிருந்து சலங்கைக் கொத்துக்களை உருவி எடுத்து குதிக்கவும் எட்டு பேரும் திசைசிதறி வெளியேறி, அதே வேகத்தில் உள்ளே நுழைந்து பித்தளை தாளத்தை ஆங்காங்கே நின்று வாசித்து வெளியெங்கும் உக்கிரமேந்துகிறார்கள். அவர்கள் இருவரும் திசையெங்கும் தம் உடலில் ஒட்டியிருந்த காகிதங்களை பிய்த்து வீசிவீசி கதையாய்ப் பாடலாய் மந்திர உச்சாடனம் போல பேசுகிறார்கள். பித்தளை தாளம் பல லயங்களுக்கு ஏறி இறங்கி வாசிக்கப்படுகிறது. கதை முடியும் தருவாயில் எல்லோரும் நெருக்கம் கொள்ள எல்லோரது கரங்களும் பித்தளை தாளங்களை கழுத்தில் மாட்டி வட்டமாக கைகளை நிலத்தில் விரித்து தலைகள் உள்ளடக்கி பின் கைகளை எதிர்பக்கம் நீட்டி கால்களை உயரே நடுவில் நிற்கும் இருவரை நோக்கி நீட்டி சில வடிவங்களை உருவாக்குகிறார்கள். சில நொடிகளில் வட்டமாக சுற்றி குப்புற வீழ்கிறார்கள். நடுவில் ஒருவன் நிற்க மற்றவன் விலகி வந்து கீழே வீழ்ந்திருப்போரில் ஒருவரது இடுப்பிலிருந்து ஓர் துணியை அவிழ்ந்து இழுக்க வந்து கொண்டே இருக்க உள்ளிருப்பவனின் முகத்தில் சுற்றுகிறான். வீழ்ந்திருப்போரிடமிருந்து கூட்டுத் தாள ஒலிகள். வெளியே நிற்பவன் வட்டமிட்டவாறு ஒவ்வொருவரது இருப்பு துணியை எடுத்து பாடலுடன் நடுவில் இருப்போனின் கழுத்திலும் தலையிலும் சுற்றுதல் ஓர் சடங்கைப்போல நிகழ்கிறது. நிலத்தோடு இணைக்கப்பட்ட விநோத துணியுருவமாக மாறவும் அவை அரைவட்டமாக முன்னோக்கி ஊர்ந்து வரவும் தனியே இருப்பவன் தன் இடுப்புத்துணியை அகன்ற அரைவட்ட இருமுனைகளிலும் கொடுத்து பெரும்பறவைபோல பின்னோக்கி போவது பறவையின் அசைவை ஒத்திருக்கின்றது. எல்லோரும் இணைந்த மொத்தச் சிறு அசைவில் இருள் கவிழ்கிறது.
நிலம் :-2
இருளில் டார்ச் விளக்கொளி எவற்றையோ தேடுகின்றது. அணைத்தனைத்து தேடும் ஒளி முழு ஒளியாகி தரையால் நடமாடி பதட்டத்தில் ஓடும் பாதங்களை மட்டுமே ஒளி காண்பிக்கிறது, ஒளிமறைந்து கூட்டுப்பாத ஒலிகளும், மூச்சும் தாளத்தில் கேட்பது தொடர, பின்பக்க இடது மூலையிலிருந்து நீண்ட கம்பின் இரு முனையிகளிலும் துணி கட்டப்பட்டு, முகம், பின் தலையிலும் முகமூடி மாட்டப்பட்டு இருவர், கம்பில் பல வெண் அங்கிகள் உருவமாய் தொங்க தூக்கி வருகிறார்கள். கால் நீட்டி உயர்த்தி உடலை உக்கிரமாக்கி மெதுவான அசைவில் உள் நுழைகிறார்கள். அவ்வப்போது அவர்கள் கைகளிலிருந்து ஒளி அவர்களது முகமூடிகளில் நிலத்தில் பட்டு மறைதல். அவ்வப்போது அவர்கள் வெளியிலிருந்து பலரும் உள்நுழைந்து வெளியேறி திரும்ப நுழைந்து வெளியேறுவது தொடர் செயலாக ஒவ்வொருவராய் கம்பில் தொங்கும் அங்கிகளுக்குள் தம் உடல் நுழைத்து ஓடி நின்று முகமூடிகள் ஒளியினை சிதறவிட்டபடி வெளியேறுதல். அங்கியிட்டவர்கள் அணைந்தணைந்து. எரியும் லேசான ஒளியில் , குழு ஒலிப்பாடலுடன் நின்று குனிந்து ஓடுவதுடன் இருளாகி ஒளி நுழையும் போது நடுவில் எல்லோரும் பெண்ணைப்போல வெண் பழுப்பு அங்கியுடன் நிற்க, உடல் அகற்றிய எல்லோரும் பாதி அங்கித்துணிகளை தம்முகங்களில் மாட்ட அதி துணிமுகமாகி சிதறி ஓடி மீண்டும் சேர்கிறார்கள். துணிகளால் பல வடிவங்கள் கூட்டமாய் இணைந்து உருவாக்குதல். ஓவ்வொருவரும் தம் உடலுக்குள்ளிருந்து மலர்களை அல்லது செடி, மலர்களைப் பிய்த்து நிலத்தில் வைத்து வெளியே ஓடவும் அடுத்த பெண் அதே போல் பிய்த்து வைக்க வெளியிலிருந்து வெளியேறிய ஒவ்வொருவரும் தோல் இசைக்கருவிகளுடன் உள்ளே நுழைந்து வைத்து நிற்கிறார்கள். வெளியேறுதல் உள்நுழைதல் நொடி நேரத்தில் சமமாக நிகழ்கிறது. இவை தொடர் செயலாகி நிகழ்விடமெங்கும் தோல் வாத்தியங்களுடன் மூச்சிறைக்க அமர்ந்திருக்கின்றார்கள். கூட்டொலி தாளத்தில் வாத்தியங்கள் தனிதனியாகவும் கூட்டாகவும் இசையால் பேசுகின்றன. இடையிடையே மெளனங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.
நடிகன் 1 : எங்க ஊர்ல முதுமூதாய் ஒருத்தி இருந்தா, நிபந்தனையே இல்லாம நேசத்தை கொடுக்கும் அதிசயமான குழந்தையவள். கடலோட மொழியும் கடல் ஜீவராசிகளோட பாசைகளையெல்லாம் அறிஞ்சவ. சமுத்திரக் காற்றோட வகைகளுக்குள்ளே, தன் மூதாக்கள் தன்னோடு பேசிப்புலம்புவதை சொல்லிச் சொல்லிக் கதெ பாடுவா.
நடிகன் 2 : ஒரு நாள் அணுக்கழிவுகளெல்லாம் சமுத்திரம் புகுந்து மூதாக்களின் குணம் கொண்ட வல்லிய நெடுமீன்களெல்லாம் மரித்து நடுக்கடலில் தத்தளித்து, சுறாக்கள் புலம்புவதாக கடல் காற்று உதிர மூச்சுவிட்டு கதறுதே! யாருகிட்ட உதவி கேட்பேன். அலையே! நீரே! குமிழே! படகுகளே செதில் செதிலான கடலின் துக்கம் கேட்க வாருங்களேன்… ஏ மக்கா… கடல் பெத்தெடுத்த மக்கா.. சமுத்திர வாசல் திறந்து சுறாக்களின் புலம்பல் தேற்ற வாங்கடா எம்மக்கா… கத்திக்கத்தி கரைகளெங்கும் ஓடிஓடி பரிதவிச்சா… என் மூதா முதுமூதா…
நடிகன் 3: நாக்கு மடக்கி அடக்கிய துக்கத்தோடு கிளம்பி வந்தாங்க மூதாவின் இளம்பேரங்க இருவர்… பாட்டி நான் போறேன் நான் போயி கேக்குறேன். மரித்த சுறாவின் கண்ணீரின் தடங்களை தொட்டுத் தொட்டு காரணம் கேட்டு வாறேன்… எஞ்சி மிதக்கும் சுறா முள்ளிருந்தாலும் ஏன்னு கேட்பேன். கடல் ஜீவராசிகளே உங்களின் பிள்ளைகளா நாங்க இருக்கோம்னு கெஞ்சிக்கெஞ்சி சொல்லிருப்பேன் பாட்டி நாங்க போய் வாரோம் வாரோம்னு கட்டுமரமேறி அலைபோல பாஞ்சி போனாங்க..
நடிகன் 4: அவுங்க போன இரவிலிருந்து இப்ப வரைக்கும் காத்திட்டிருக்கா… லாந்தர் பிடித்து வருவீகளா பிள்ளைகளா வருவீகளா… இல்ல இல்ல நான் நான் வாரனேன்னு கத்திச் சொல்லும்போது மொத்த கடல்கிராமமே அமைதி சொல்லுயும், இரவுகளெங்கும் லாந்தரோடு ஓடிக்கிட்டிருக்கா… இரவு மூடிய வீட்டின் கதவுகளில் தம் நெற்றியுரசி யுரசி எதிர்பார்ப்பின் கண்ணீரைப் பூசிப்போவாள். வீட்டுக்கதவுகளின் சாவித்துவாரங்களுள் கடல் ஊளை பேசிக்கொண்டிருக்கும்.
நடிகன் 5: ஒருநாள் தன் காத்திருப்பின் முடிவாக மாதா கோவில் மணியில் தொங்கும் நெடுங்கயிறுபிடித்து, தம் புலம்பலை முத்தங்களாக்கி பிடிகயிரெங்கும் முத்தமிட்டு கல்லறைத்தோட்டம் புகுந்து மரித்தோரோடு பொரிக்கப்பட்டிருந்த கல்வரி வாசகங்களை துடிக்கும் தன் வாக்குகளால் வேகவேகமாய் படித்து மாதா கோயில் மரக்கதவுகளில் முட்டி முட்டி தனிக்கட்டுமரமேறி கடலுக்குள் பயணமானாள். அன்று கடல் நிசப்தத்தை பாடிக்கொண்டிருந்தது.
நடிகன் 6: அன்று பயணம் போன எம்மூதா இன்னும் கரைதிரும்பல. மீன் பாடு தேடிப்போன சகோதரரெல்லாம் தூரதூரமாய் தொடுவானக் கடற்கானலில் அவளைப்பார்த்தாக கதைபேசுவாங்க. எம்முதுமூதா கடல் மக்களுக்காக துணையிருக்க போனவ பேரங்களோட துணைபிடித்து அலைஞ்சிட்டிருப்பா…
நடிகன் 1: நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீன்பாடு தேடிப்போன எங்கமக்க புயல் நாளில் மாட்டிக்கிட்டாங்க… திரும்பும் திசையெங்கும் எழுந்துயர்ந்த அலைகள்… எல்லோரும் சிதறியடிக்கப்பட்டு பாறைகளில் மோதி மிதந்ததை எப்படிக் கதையா சொல்லுவேன்…. நினைவுகள் குமுறி உறைந்து மிதக்கும் படகுகளை சொல்லவா… திசையற்ற அகதிப்பறவைகளின் இறகுகள் அவர்களோடு சேர்ந்து மிதந்த துயரம் சொல்லட்டுமா….
நடிகன் 2: அப்போ எம்மூதா மரிச்சவுங்களெல்லாம் ஆளற்ற நெடும்படகில் தூக்கிப் போட்டபடி எல்லோரையும் கூட்டாய் சேர்த்துக் கொண்டிருந்தாள். யாரும் உயிரோடு இல்ல … அகதிப்பெண்களின் கூந்தல் இழைகள் சிக்கிச்சுற்றிய மீன் எலும்புகளில் கண்ணீர்த்தீவுமக்களின் முனங்கல்களை உச்சரித்தபடி வா… வாயான்னு இறந்த உடல்களை படகு தரைப்பலகையில் படுக்க வைத்து தாலாட்டியதை நான் சொல்லட்டுமா..
நடிகன் 3: இல்ல இரு… நான் சொல்லுறேன்… அலையடித்து சிதறிக்கிடந்தவர்களை ஒன்று சேர்த்து நட்சத்திரங்கள் விழிக்க கடல் மூலிகை பூசிக்கொண்டிருந்தாள். எல்லா உடல்களையும் எண்ணிப்பார்த்து கையில் இழுத்து வந்த வலை மூட்டைக்குள்ளிருந்து கடல் சங்குகளாலும்,சிப்பிகளாலும், நத்தை ஓடுகளாலும் செய்யப்பட்ட முகமூடிகளை பிரித்துப்பிரித்து முகம்முகமாய் பார்த்துப்பார்த்து மாட்டிவிட்டாள், எவரும் எழவில்லை எல்லோரது மார்புகளிலும் முத்தமிட்டு முத்தமிட்டு காதுகளில் ஏதோதோ ரகசியம் பேசினாள். தன் வயோதிக உடலால் பலமேற்ற மூச்சிழுத்து குலவையிட்டாள்.
நடிகன் 4: அப்போது உடைந்த தூர கட்டுமரத்தில் உறைந்த கண்களுடன் குழல் வாசித்தபடி அகதிச்சிறுவனொருவன் தன் பெரும்படகை நெருங்கும்போது தன் சேலை தூக்கி வீசிக்காப்பாற்றினாள். அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. யாரையோ எதிர்பார்த்து பாட்டி திசையெங்கும் நடந்து கொண்டிருந்தாள். அகதிச்சிறுவனுடன் பேசினாள், மக்கா.. நான் போயி கடல் தேவதையை கூட்டி வந்து இவங்களெயெல்லாம் எழுப்பப் போறேன். நான் போயிட்டா இவுங்கள யாரு பாத்துக்குவா… இவுங்க இந்த பூமிக்கு நம்பிக்கை கொடுக்க வந்த மக்கள்…
நடிகன் 5: அகதிச்சிறுவன் பேசினான், மூதா நானிருக்கேன். இறந்த உடல்களிடம் கதை கேட்டவன் நான், உறுப்புகள் துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டத்திலிருந்து வந்தவன் நான். அவர்களுக்காக நான் மௌனம் காப்பேன். நீ போய் வா.. மரித்த உடலிகளின் கனவுகளைப் பாட வந்தவன் நான் போய் வா மூதா… என்றான்…
நடிகன் 6: குலவையிட்டபடியே தேவதையை அழைத்து வர கிளம்பிப்போனாள் மூதா… அவள்போன பின்னும் முகமூடிகளில் குலவையொலி எதிரொலித்துக்கொண்டிருந்தது. அகதிச்சிறுவன் உறைந்த கண்களுடன் பிணங்களுக்கு நடுவே நின்று கொண்டிருந்தான். படகைச்சுற்றி பாட்டியால் கழுவி வைக்கப்பட்ட பாசிபடிந்த கபாலங்களும் எலும்புகளும் இசைக்கருவிபோல தோற்றம் கொண்டிருந்தன.
வெங்கல மணி குலுக்கியபடி ஒரு கையில் வலையுடன் நுழையும் நடிகன்.
மரணம் தழுவிய உடல்களுக்கிடையில் மற்றொரு சிறுவனின் உதடு முனங்கிக்கொண்டிருந்தது. அவன் கால்களிலும் தலையிலும் இருந்த காயத்தை பாட்டி தன் சேலை கிழித்து கட்டியிருந்தாள். அகதிச்சிறுவன் காற்றை அவன் வாயிலும் காதிலும் ஊதிஊதி அவன் உடலெங்கும் எழுதி எழுப்பினான். பின் இருவரும் உடல்களுக்கு நடுவே அமர்ந்து தீரா மௌனத்தில் பேசிகொண்டிருந்தினர். படகு மிதக்கிறதா பயணிக்கிறதா தெரியவில்லை. மௌனங்கள் நிறைந்த படகிற்குள் ஒளிமிகுந்த நீரினாலான பெரும்பந்தொன்று குதித்து கடலுக்குள் வீழ்ந்தது. வீழ்ந்து மறைந்த கடல் நீருக்குள்ளிருந்து கடல்தேவதை எழுந்துவந்தாள்.
சுருட்டிக்கட்டிய கூந்தலுடன் ஈர உடையுடுத்தி கடல் சங்குகளரோடு படகினுள் இறங்கினாள், இறந்தோரின் முகங்களில் முகமூடிகள் சதா காற்றைப்போல முனங்குவதை தேவதை உற்றுக்கேட்டாள்.
தலையில் துணி சுற்றிய ஒருவன் கைநீட்டி தடவித் தடவி உள் நுழைந்து எல்லோரது பாதங்களையும் தொட்டுத் தொட்டு பேசுகிறான்.
நடிகை 1: நட்சத்திரம் மினுக்கும் இருளின் ரேகையை பூசிவந்த கடல்தேவதை இரு சிறுவர்களின் முகங்களை குனிந்து பார்த்து வழிந்த கடல்கிராம சிறுவனின் முகக் கண்ணீரை தன் ஆடை கொண்டு துடைத்தெடுத்தாள். தன் மார்போடு இரு முகங்களையும் புதைத்துக்கொண்டாள். மௌனங்களை மொழியாகக் கொண்ட என் செல்லங்களே! நீங்கள் கேட்க விரும்பியவற்றை சொற்களால் இட்டு நிரப்புங்களேன் எனக்கேட்டாள். அகதிச்சிறுவன் மௌனத்திலிருக்க, மற்ற சிறுவன்.. இது அப்பா…. அம்மா …. அவுங்களை எழுப்பிவிடுவேன் இல்ல.. இது தாத்தா அவரையும்.. இது அண்ணன்.. எனக்கு எங்க அத்தை பிடிக்கும், சில அவுங்க மகன் அவுங்களையும் எழுப்பிட்டேன் என்று திக்கிய வார்த்தைகளில் உடல் உடலாய்ப்பார்த்துக் கேட்டான்.
ஓவ்வொருவரும் கீழே குனிந்து உடல்கள் கிடப்பதாய் பாவித்து சங்குகளை நிலமெங்கும் பதித்துப்பேசி ஓடிஓடி தேடிப்பேசுகிறார்கள்.
நடிகை 2: அகதிச்சிறுவனோட ஈரமுடியினை கோதிவிட்டபடி கடல் தேவதை கேட்டாள். உன் பெற்றோரும் உறவினரும் இப்பூமிக்குச் செய்த நற்பயன்கள் எதுவனக் கூறுவாயா!
சிறுவன் சொன்னான், எங்க அம்மா தினம் கடவுளிடம் துதிப்பாடல் பாட என் அப்பா பிரார்த்தனை செய்வார். அவர்கள் யாருக்காக பிரார்த்தனையும் துதிப்பாடலும் பாடினார்கள்? கடலில் தோணியுடன் மறைந்து மரித்த என் மூத்த சகோதரனுக்காக, உன் குடும்பத்துக்கு மட்டுமே உன் வேண்டுதலா? என் அத்தை தினமும் எஞ்சிய கனிகளை மாடுகளுக்கு உண்ணத்தருவாள். மாமன், தன் சொந்தங்களுக்கு எப்போதும் உதவுவார். மற்ற அனைத்துக் கனிகளையும் கொடுத்து எஞ்சிய கனியை மட்டும் தான் உண்ணும் மனிதர்கள் இப்பூமியில் எங்கேனும் இருக்கின்றார்களா?
அகதிச்சிறுவனிடம் கேட்டபோது, என் அம்மா எங்க அம்மா எங்க ஊரில் உள்ள அனாதைகளாய் திரியும் நாய்களுக்கும் கழுதைகளுக்கும் தினமும் உணவிட்டு நேசிப்பாள். அம்மா இறந்த பின்பும் எங்க வீட்டுக்கதவுகளை நக்கி முட்டும் கழுதைகளின் பாதத்தடங்களில் ஓடித் திரிந்தவன் நான்.
பிறருக்காக வாழ்பவர்கள் தானே, இவ்வுலகில் அன்னையர்கள். கடல் யுத்தத்தில் சுடப்பட்ட ஈழமகள் என் அம்மா அவளைப் பூமிக்கு திரும்ப அழைத்து வருவாயா? மீனவதேவதையே!
பேசாதிருந்த அவள் தான் கொண்டுவந்திருந்த சங்குகளை பிணங்களுக்கிடையே ஒவ்வொன்றாய் வைத்து மந்திரித்து தன் உதடுகள் தொட்டுத் தொட்டு முகமூடிகளெங்கும் பூசி எழுந்தாள். சிறுவர்களுக்கும் பெருஞ்சங்குகள் கொடுத்து, வீழ்ந்தோரின் உடலெங்கும் வைத்துப்பேசி எழுப்புங்கள் குழந்தமையை வணங்கிய அப்பாவும் அம்மாவும் வேண்டுமென எழுப்புங்கள். விடுதலையின் துடியும் அடக்கமும் வேண்டுமென கேட்டு எழுப்புங்கள்.
அசையும் படகுக்குள்ளிருந்து கடல்பார்த்து வீழ்ந்து மறைந்தாள். அவள் மறைந்த திசையில் மூதாவின் குலவையொலி கேட்டுக்கொண்டேருந்தது.
நிகழ்விடத்தின் வெவ்வேறு பக்கமிருந்து கைகளில் கடல் சங்குகளுடன் நுழையும் சிறுவர் சிறுமிகள், ஒவ்வொருவராய் பேசுகிறார்கள்.
சிறுவன்-1: நாங்களே கடல் தேவதையிடம் சங்குகளால் பெற்ற குழந்தைகள்.
சிறுவன்-2: எங்கள் அம்மா அப்பாக்களை எழுப்ப வந்துள்ளோம், உறவுகளையும் உசுப்பி பேசிட வந்துள்ளோம்.
சிறுவன்-3: நிறுவனமாகிய பெற்றோரின் ஆசை துறந்து எங்களோடு பேச அழைக்க வந்துள்ளோம்.
கண்கள் தைக்கப்பட்டதைப்போல ஒப்பனையிட்ட பலரும் கைகளில் ஒற்றை நரம்பிசை பிடித்து இசைத்தபடி கனவு நடையாளர்களைப்போல மிதந்தபடி முன்னேறி நடக்க இவர்களுக்கு முன்னே நீண்ட நீள் வட்ட பச்சை இலையினை கையில் ஏந்தியபடி அழைத்துப்போகிறான். இடையிடையே அவரவர் கைகளுக்கு எட்டியமட்டில் தம் இமைகளையும், இலையினையும் முனங்கலொலியுடன் தடவித் தடவி தொட்டுக்கொள்கிறார்கள். சட்டென நின்று எல்லா திசைகளுக்கும் நடந்து நின்று வலியுடன் சரிந்து ஒவ்வொருவரது பாதத்தையும் வாஞ்சையுடன் தொட்டு வருடி கழுத்தில் தொங்கும் அவரவர் பைகளிலிருந்து காய்ந்த சருகுகளை அள்ளி நீட்டியபடி, யாரும் வாங்கிக்கொள்ளாதது கண்டு தங்களைச் சுற்றி பலரும் இருப்பதுபோல பலபாவனைகளில் காய்ந்த இலைகளை கொடுக்க முயற்சித்தல் புனைவுகொள்கிறது. முன்னே இருப்பவன், நீள் வட்டவடிவ இலையினை தரையில் விரித்து ஒற்றைக் குரலில் லயமான நீள் ஒலி எழுப்பி சிலநொடி மௌனத்தை, திரும்ப ஒற்றை நரம்பிசை மாற்றுகிறது. எல்லோரும் பச்சை இலையினைச் சுற்றி காய்ந்த இலைகளை பரப்பியபடி கூட்டொலிகளால் அடுக்குகிறார்கள். திடீரென தூரத்திலிருந்து வரும் வெறுப்பு நெடியை நடுப்பில் பிடிக்கின்றார். பயம் கூடிக்கூடி சைகைகளில் வெறுப்பை விரட்டுகிறார்கள்.
பச்சை இலையின் மீது ஒற்றை நரம்புக்கருவிகளை படுக்க வைத்து அதற்கும் இலைக்கும் வேகவேகமாக முத்தமிட்டு தடவித் தடவி வருடுகிறார்கள்.
சில நொடிகளில் இருள் கவிழ ரகசிய, காற்றொலிகளில் பேசிப்பேசி ஒற்றை நரம்பிசையை வேகவேகமாய் வாசிக்கின்றார்கள். மிகமங்கிய ஒளியாய் திசை குழம்பி வாசித்தபடி ஓடி மறைய… நீண்ட தோலிசை அதிர்வில் தனி நரம்பிசை ஒலிக்க ஒளி நுழைந்து பெண்ணொருத்தி சுருண்டு கிடக்கிறாள். அதே போன்ற பல இலைகள் நிகழ்விடம் சுற்றி விளிம்பில் அரை வட்டமாக கிடக்க அதன்மீதும் இவளைப் போன்ற உடல் நெளிவில் ஒற்றைக்குழலிசை தோன்றி குழுவான தோலிசையில் முன் இலையில் இருப்பவள் தவிர்த்து மற்றவர்கள் குதித்து எழுந்து கைகளில் உள்ள கதிர்களைக்கொண்டு களத்தில் அடிப்பதுபோல அடித்து வெளியேறி திரும்பவும் நுழைந்து, நிலத்தில் அடித்து வைக்கோல் வாயில் கல்வியபடி வெளியேறி மறைகிறார்கள். இலைக்குள் தன்னை சுருட்டிக்கொண்டு நத்தையென ஊர்ந்து இலை விரிய எழுந்து நின்று பாடுகிறார்கள். தோலிசை அதிர்வோடு நீண்ட பழுப்புத்துணியை ஓர் இயந்திரம் போல பாவித்து தூக்கி வருகிறார்கள், அதற்குள் அவளை திணிக்க முயற்சிக்க விலகி விலகி, அத்துணிக்குள் அவளைத் திணித்து கீழே வீழ்கிறார்கள். இப்போது அவள் அகன்ற உடைக்குள் இருக்க எல்லோரும் ஊர்ந்து அவளுக்குள் மறைகிறார்கள். வெங்கல இசையும் தோல் கருவிகளும் இசைக்க அவள் உடைக்குள்ளிருந்து மரக்கொப்புகளைப்போல கிளைகிளையான கைகள் அசைகின்றது. தாள இசை கூடக்கூட கை கிளைகள் மறைந்து தலைகள் பிறக்கின்றன. பின் கொஞ்ச கொஞ்சமாய் ஒரு உடலிலிருந்து பல கிளை உடல்கள் தோன்றி குழுவாகப்பாடி பேசி ஓர் குறுங்கதையொன்றைச் செய்கிறார்கள்.
எல்லோரையும் சுமந்த தாதியாக பூச்சியாக முன்னேறிப் பேசுகின்றாள், இலைப்பெண். எல்லாரும் உடலுக்குள்ளிருந்து ஒற்றை நரம்பிசைக்கருவிகளை உருவித்தூக்கி வாசித்தபடி முன்னிருக்கும் பச்சை இலையால் தன் முகம் சுற்றி நரம்பிசை வாசிப்போடு இருளுக்குள் மறைகின்றாள். தன் கிளைகிளையான உடல்களுடன்.
வட்டமான நீள் உயரத்தில் தானியக்குதிரைப்போல சிறு துவாரங்கள் கொண்ட வெண் வலைகளுக்குள் ஏழு மூதாதைகள் பாதங்களை நிலத்தில் உரசியபடி மெதுவாய் வட்டமிட்டுச்சுற்றுகிறார்கள். எதிர் எதிர் திசையிலிருந்து இருவர் இமைகள் தைக்கப்பட்ட நிலையில் இடுப்பில் கயிறு கட்டப்பட்டு பின்பக்கம் இழுக்க இழுக்க முன்னோக்கி முயன்றபடி குதிருக்குள் நடமாடும் மூதாதையரை ஸ்பரிக்க ஏங்கி கஷ்டப்பட்டு சுற்றுகிறார்கள். இரு கயிறுகளும், இருவரை இழுத்து அவர்களை கீழே வீழ்த்த மறுபடியும் முயற்சிகளை தொடர மூதாதையர் வாயில் அடுக்கப்பட்டிருந்த இலையடுக்குகளை உருவி நீட்டுகிறார்கள். தம் தைக்கப்பட்ட கண்களைத் தடவித் தடவி வலைக்குதிரெங்கும் கரம் தடவுகிறார்கள். பெரும் போராட்டத்திற்குப்பின் வலையை எதிரெதிர் பிடித்து இழுக்க குதிர் சரிபாதியாக பிளவுந்து தத்தமது உடலை வலையால் சுற்றி கீழே வீழ்ந்து மறைகிறார்கள்.
அரைவட்டவடிவில் நிற்கும் மூதாதையர் எழுந்து மறைகிறார்கள். இலைகளை உருவி மெதுவாய் குனிந்து தரையில் வைக்க அவர்களுக்கு நடுவில் பறவை இறகுகளை அள்ளி வீசியபடி எட்டிப்பார்க்கும் சிறுமி, மூதாதையர் மீது ஏறி முன் பக்கம் கீழே இறங்கி தரையில் முகம் பதித்து அவர்களைப் பார்க்கிறாள். அவர்கள் குனிந்து சிறுமியின் முகத்தில் மென்வளச் சிரிப்புடன் விரல்கள் பதித்து இலைகள் நீட்டித்தொட்டு நிமிர்கிறார்கள். சிறுமி அவர்களது பாதத்தை தொட்டு அவர்களது கால்களின் முட்டிகளில் நெற்றி உரசி உரசித் தரையில் முகம் பதித்து திரும்பித் திரும்பி பார்த்தபடி வெளியேறுகிறாள். அவர்கள் வட்டமாக குனிந்து இலைகளை நிலத்தில் வைக்க நிகழ்விடத்தின் இருபக்க விளிம்பிலிருந்து இமைகள் தைக்கப்பட்ட பலரும் கைகள் அகன்று வீசி மூச்சினை இழுத்து ஊத அப்பக்கமிருந்து சருகுகள் பறந்து மிதந்து அடங்குகிறது. இமை தைக்கப்பட்டவர்கள் மூதாதையரை ஏங்கி அழைத்தபடி திரும்பவும் கைகள் வீசி மூச்சை ஊதி மறைகிறார்கள்.
பின்பக்கமிருந்து சிறுமி இலையுடை அணிந்து, புதிய சிறுமி போல கையில் மாவிலக்கு போன்று களிமண்ணைக் கொண்டு செய்த விளக்கோடு திரி கொண்டு தூக்கி வருகிறாள். களைந்து நின்ற மூதாதைகள் திரும்பவும் நடுவில் சூழ்ந்து சருகுகள் பிடித்த கரங்களை நீட்டி வானத்தைப்பார்க்க சிறுமி எல்லா இடத்திலும் சுடரினை வைத்து அதன் வெப்பம் மூதாதையர்களின் பாதங்களில் பதிக்க உறைந்த கண்களால் சிரிக்கின்றார்கள். எல்லோரும் சிறுமியை நோக்கி முன்பக்கம் இலைகளுடன் சரிய அவளோ சில வரிக்கதைகளை ஓடிஓடிச் சொல்கிறாள். கதை முடியுமுன் மூதாக்கள் தம் இடுப்புச்சுருக்குப்பையிலிருந்து புளிய விதைகளை அள்ளிக் குலுக்கி நிலத்தில் போட்டு நெடுங்குலவையிடவும் சிறுமி சுடரினை தூக்கி திரும்பவும் முதலில் வந்த இடத்திற்கே அதாவது மூதாதையர்கள் நடுவில் நின்று சுருண்டு அமர்ந்து தனியே பாடுகிறாள். பாட்டின்போது இமை தைக்கப்பட்டவர்கள் கந்தல் சாக்குகளில் பழுப்பு இலைகளை சருகுகளை பொறுக்கியபடி நிகழ்விடத்தில் அலைகிறார்கள். சுடரினை சூழும் கூட்டு விரல்கள் முன்பக்கம் நீட்டி மூச்சிழுத்து அணைத்துவிடுகிறார்கள். இருளில் நரம்பிசை எழுந்து அடங்குகின்றது. கால்களின் பாத ஒலிகள் தொடர இருள் நிறைகிறது.
நிலம் :-3
வெண்சாம்பல் நிறத்தாள்களில் கிழித்து ஒட்டப்பட்ட முகங்கள், முகமூடிகள் போலவே தோற்றம் கொள்கிறன. கை, கால்கள் துணிகளால் விலங்கிடப்பட்டுள்ளன. பல உடல்கள், நிலத்தில் ஊர்ந்தும் மிகமெதுவாய் உருண்டும் நுழைகின்றன. ஆங்காங்கே தலைகள் தூக்கி முகங்கள் காண்பித்து, திரும்பவும் ஊர்ந்தும் உருளவும், நகரவும் தொடங்க; கண்களில் இமைத்திரை தைக்கப்பட்ட ஓர் உடல் உள்ளே நுழைந்து திசை தெரியாது தயங்கித் தயங்கி ஓடுகிறது. கீழே இருக்கும் உடல்கள் ஊர்ந்தோடியாடியும் குனிந்தும் ஓடிய நிலையில், ஓடும் நடிகனை விரட்டி ஓடியபடி ம்ம்…. குரலொலியும் பாடுதல். நடிகன் ஓட ஓட ,மற்ற உடல்கள் இடம் விட்டு ஓட அனுமதித்து மதிப்பளித்து விரட்டிவருகிறன. அவன் சுவரில் பதிந்து சிற்பமென நெளிந்து மறு சுவருக்கு ஓடி, அதே போல் செய்து மறுபடியும் பின் திரைக்கு ஓடி, உடலால் வரைய மற்ற உடல்களும் ஊர்ந்து விரட்டியபடியே இருக்க நடுவில் வந்தவன் இருவரிகளை நீட்டிச் சொல்ல, மற்றவர்கள் இறக்கைவடிவில் நிலத்தில் கிடந்து கட்டப்பட்ட கை கால்களில் பல்வேறு உடல் வடிவங்களை சிற்ப நிலைக்கு மாற்றுகிறார்கள். பின் சில நொடிகளில் கூட்டுக்கதைப்பாடல் தனித்தனியே மாற தலைகள் தொங்க குனிந்த நிலையிலேயே வீழ்ந்து வீழ்ந்து எழுந்து வெளியேறவும், பல அழுக்கு மூட்டைகள் உடலெங்கும் கட்டப்பட்ட ஒருவனும், உடலெங்கும் பிய்ந்த செருப்புகள் தொங்க அழிந்த பாதத்தடங்களை, நிலமெங்கும் தேடியலைந்தபடி நுழைகிறார்கள்.
பல்வேறு கிளைகிளையான கயிறுகளில் விதை முடிச்சுகளை கட்டிய ஒருவன் இழுத்து வர அம்முடிச்சுகளில் செடிகள் முளைவிட்டிருக்கின்றன. அவனோ நிலத்தைத் தேடி தேடி காது பதித்து மோப்பமிட்டபடி வருகிறான். எதிர்பக்கம் நீண்ட சாக்குபைக்குள் உடல் நுழைத்த ஒருவன் சில பெண் பெயர்களை நீட்டிக்கூவியபடி தேடி வருகிறான். அலைதலுடன் வட்டவடிவ வளையத்தை கட்டி அதில் உருவங்கள் தொங்க,உறைந்த பார்வையில் இரு வளையங்களைத்தூக்கி மெது அசைவில் அலையும் பொம்மைக்கோமாளி, அவனைத்தொடர்ந்து கால்நடையின் பெயர்களையும் நிலத்தின் வகைகளையும் பாடியபடி ஒருவன் அலைதல், உடலெங்கும் பல்வேறு வகையான சாவிக்கொத்துகள் தொங்க குறிப்பிட்ட சாவியை தேடியபடி நடமாடும் மற்றொருவன், புத்தகக்கட்டுகள் பலவற்றை கயிற்றில் இழுத்தபடி தூக்கியபடியும் வார்த்தைகளை ஆவலோடும் தேடும் ஒருவன், வார்த்தைகளையும் முனங்கியபடி வருதல்.
இவர்கள் எல்லோரது பாதங்களையும் துடைத்து முத்தமிட்டபடி வரும் இருவர் அவர்களைத் தொடர்ந்து ஒப்பனைப்பெட்டியுடன், முகத்தில் ஒப்பனையும் செய்யும் நடிகை, புதிய புதிய முகங்களை தன்முகத்தில் தேடுகிறாள். இவர்களுக்கிடையில் கண் தைக்கப்பட்டவன் தேடுதலுடன் ஓடுதல்.
சில நொடிகளில் கைகளில் வெங்கல மணி குலுக்கி உடலெங்கும் புகைப்படங்கள் (கருப்பு வெள்ளை) தொங்க கண்களில் கருப்பு வெள்ளைத்துணி கட்டப்பட்டு நின்று, நடந்து நின்று எல்லோரையும் பார்த்து தன் உடலே சுவராக நினைத்து எல்லோரிடமும் ஒவ்வொன்றாய் கழற்றிக் காண்பிக்கின்றாள். எல்லோரும் ஒருவக்கொருவர் காண்பித்து கேட்டு அந்நிலை படிப்படியாக தீவிரமடைகிறது. குழு ஒலிப்பாடல் தொலை தூரத்திலிருந்து நிகழ்விடத்தை நெருங்குகிறது.
வெண்வலையாலான தானியக்குதிரையும் அதற்குள்ளிருக்கும் மூதாதையர்களையும் இழுத்து வரும் சிறுமி தன் பாடலால் எல்லோரையும் ஒன்று சேர்க்க, அவ்ர்கள் தன் முன்னே ஒவ்வொருவராய் விலகி ஓடி நெருங்கி தமதை காண்பிக்கிறார்கள். அரைவட்டத்தில் சுற்றித் தானியக்குதிரை நடுவில் நிறுத்துகிறாள். பின் மூதாதையரின் சொற்களைக் கேட்டுத் தம்பொருட்களை நிலமெங்கும் களைத்து வைக்கிறாள் சிறுமி. குதிரை இரண்டாகப் பிரிக்க மூதாதையர் வெளியே வந்து எல்லோருக்கும் சருகுகளையும், கதிர்களையும் கொடுத்து தன்னோடு அழைத்துக்கொண்டு சுருண்டு நடுவில் நிற்கிறார்கள். உயரப்பார்த்து முனங்கியபடி, சிறுமியோ திசையெங்குமிருந்து நீண்ட துணிகளை இழுத்து வந்து அவர்களது உடலெங்கும் சுற்றுகிறாள். அது ஒரு சடங்குபோல நடக்கிறது. இப்போது பெரிய துணி மலைக்குள் ஆங்காங்கே தலைகள் சிறுமியோ அவர்களைச் சுற்றி வட்டக்கோடு கிழித்து வார்த்தைகள் சிலவற்றை உச்சரித்தபடி அவர்களுக்கு முன்னால் சுருண்டு அமர்ந்து இடைவெளிவிட்டு பாடுகிறாள். கோட்டைச்சுற்றி விதைகளை ஊன்றி, முன்பக்கம் வருகிறாள். நிலத்தில் மட்டும் ஒலி பரவி மெதுவாய் இருளில் மூழ்கிறார்கள். சிறுமியின் பாடல் நீண்டு ஒலிக்கிறது.
நிலம்:-4
நிகழ்விடத்தின் முன்னே மூவர் முதுகு காண்பித்து குனிந்திருக்கிறார்கள். அவர்கள் பின் கழுத்திலிருந்து கயிறுகள் நீண்டு தரையில் கிடக்கும் தனித்தனியான பலகையில் கட்டப்பட்டிருக்கின்றன. மூன்று பலகையிலும் தனித்தனியே பொம்மைகள் நிற்கின்றன. அவர்கள் கண்களில் வெண்துணியும் முகங்களில் வெண் வலைகளும் சுற்றப்படுகின்றன. அவர்களின் கைகளில் கிழிந்த பெரிய துணியாலான தானியத்தை தைத்தபடி குனிந்து மெதுவாய் நகர்ந்து போகிறார்கள். இடையிடையே பின்பக்கம் நின்று வரும் பொம்மைகளைப் பார்த்து உதடுகளை முனங்கிக்கொள்கிறார்கள். அப்பொம்மைகள் கைகளில் காய்ந்த இலைகள் ஏந்தியிருக்கின்றன. எல்லோரது முதுகுகளிலும், குழந்தையினை நினைவூட்டும் பொம்மைகள். இவர்கள் மூவரைப்போலவே எதிரே கண்ணாடி பிம்பம்போல மூவர் பலகைகளில் பொம்மைகள் நிற்க குனிந்த நிலையில் தானியங்கள் தைத்தபடி இழுத்து வருகின்றார்கள். எதிர் எதிரே ஆறுபேரும் சந்திக்கின்ற நொடியில் துணியாலான தானியங்களை முகங்களில் பதித்து விலகியும் சேர்த்தும் ஒருவருக்கொருவர் மார்புகளில் முதுகுகளில் என் உடலெங்கும் ஊர்ந்து பேசிப்பாடுகின்றார்கள். பின்னர் விலகி ஒருவரை மற்றவர் தாள லயத்தில் சுற்றுகிறார்கள். எல்லோர் முதுகுகளிலும் துணியால் சுற்றப்பட்ட சிறு உருவங்கள் கைக்குழந்தைகளை நினைவூட்டுகிறது. தூரத்தில் சிறுமியின் ஒற்றைக்குரல் பாடலாய் நீண்டு ஒலிக்க எல்லோரும் தானியங்களைத் தூக்கி பதட்டத்தில் திசையெங்கும் தேடுகிறார்கள். குரல் மறைய ஏமாற்றத்துடன் தத்தமது தானியத்தால் முதுகிலிருக்கும் துணியுருவ குழந்தைகளை தானியத்தால் வாஞ்சையோடு வருடுகிறார்கள். சில நொடிகளில் வெண்துணிகளுக்குள்ளிருந்து வாயில் சருகு இலைகள் கவ்விய மூதாதைகள், சருகு இலைகளை நீட்டி நீட்டி தயங்கித் தயங்கி நெருங்கி விலகி மறைகிறார்கள். சில வட்ட சுற்றலுக்குப்பின், எல்லோரும் மோப்பமிட்டபடி நெருங்கி ஒருவர் உடல் மீது மற்றவர் சாய்ந்து காது பதித்து நெருங்கி நெருங்கி நழுவ முயற்சிக்கும் தருணத்தில், வெண் சாம்பல் ஒப்பனையிட்ட மூன்று நிறைமாத கர்ப்பிணி வேடமிட்ட நடிகர்கள் வெளிர்சாம்பல் ஒப்பனையுடன் உள்ளே நுழைகிறார்கள். மிதந்த நடையில் நுழையும் அவர்களின், வலது கைகளில் வட்டவளையத்தில் குட்டி பொம்மைகள் சுழல உறைந்த விழிகளுடனேயே நுழைகிறார்கள். கர்ப்பிணிகளின் கால்களில் மாட்டுமணிகள் கொத்தாக கட்டப்பட்டிருக்கின்றன. பொம்மை இரு கைகளுக்கும் இடமாறியபடி நிகழ்விடத்தை வலியும் ஆனந்தமாய் சுற்றுகிறார்கள். நடுவிலிருப்பவர்கள் முகங்களை வெவ்வேறு திசைகளுக்குத்திருப்பித்திருப்பி தேடுகிறார்கள். மூன்றும் கர்ப்பிணிகளும் முன்னும் பின்னும் வட்டமாக நடந்தபடி மூவரும் குழுவாகப் பாடத்துவங்குகிறார்கள். நடுவிலிருந்தவர்கள் விலகி தத்தமறு பலகைகளில் நின்ற பொம்மைகளுக்கு இடுப்புச்சுருக்குப்பையிலிருந்து தானியக்கதிர்கள் கொடுத்து கீழே இறக்கி வைத்து முதுகில் இருந்த குழந்தை துணிப்பொம்மைகள் அழுவதாய் நினைத்து குதித்து குதித்து பேசிப்பாடுகிறார்கள் இந்த உரையாட்ல ஆறுபேறுக்குள்ளும் தனியான கேள்விகளையும் தொடர்கின்றன. வெவ்வேறு இடங்களின் நின்ற கர்ப்பிணிகளோ தலை நீட்டி முன்னே இருக்கும் பொம்மைகளுக்கு தன் வட்ட வளைய பொம்மைகள் சுற்றிச்சுழல நீட்டிக்காண்பிக்கிறார்கள். மூவரும் தம்மைத் தாமே சுற்றி மூவரும் முன் உடலை வளைத்து நீட்ட, தழுவிய பொம்மைகளை பின்பக்கம் நீட்டி முகங்களால் ஆறுபேரையும் தழுவியபடி மூவரும் ஒன்று சேர்ந்து தனித்தனியான ஒலிகளை எழுப்புகிறார்கள். குழுவாய்ப்பாட முதுகுகளில் பொம்மை சுமந்து குதித்தவர்கள் பலகைகளை நிலத்தில் இருத்தி தாளம் எழுப்ப, சில நொடிகளில் பொம்மைகளையொத்த ஆறு நடிகர்கள் குதித்து நுழைகிறார்கள். பின் மர இசை, பலகைகளில் எழும்ப ஆறுபேர் இசைத்துக்கொண்டிருக்க நுழைந்தவர்கள் குதித்தாடிய படி திசை பரவி மறைகிறார்கள். மர இசையொலி நீள்கிறது. பொம்மையொத்த நடிகர்களின் கைகளில் பொடிப்பொடியான கயிறுகளில் வலைபோல் பின்னப்பட்டுக் கொண்டிருக்கும் மௌனத்தில் பொம்மைகளாயிருப்பவர்கள், வலைபோல தங்களைத் தாமே பின்னல்பின்னி மூன்று கர்ப்பிணிகளின் கற்பவயிற்றில் காது பதிக்கவும் மர இசை மௌனம் பரப்பி இசையொலி தொடர்கிறது. பின்பக்கமிருந்து நிறைய அழுக்குப்பொதி சுமந்த ஊமையொருவன் தன் ஒலிமொழியில் விசும்பல் கூடிய பாடலில் நுழைந்து பார்வையாளர்களை நோக்கி கோவமுடன் பாடிக்கொண்டிருக்க இருள் நுழைகிறது.
நிலம்:-5
மென்நீல ஒளிக்குள் பெயர்களை, தானியங்களை, மரங்களை, பறவைகளை பூச்சியினங்களை கூவி வருகிறார்கள், பெயர்போல நீட்டி அழைக்கும் இருவர் கண்ணாடி போல எதிரெதிர் திசைகளிலிருந்து துணி மூட்டைபோல துணிகளை அழுத்திச் சுமந்து அதிலிருந்த வெண்துணிகளை வீசிவீசி நிலமெங்கும் விரிக்கின்றார்கள். திடீரென எதையோ எவரையோ தேடுவது போல் தொடரும் செய்கைகள் ஒரு கண்ணாடி பிம்பத்தை நினைவூட்டுகிறது. இவையனைத்தும் மெல்லிய வேகத்திலேயே நிகழ்கிறது. பின் விரித்த துணிகளை உறைந்த கண்களுடன் முனங்களால் கூவிக்கூவி உதட்டின் ஈரம் தொட்டு பதித்து, எதிர்த்திசைகளில் ஓடிநின்று நீட்டிக்கூவும் வார்த்தைகளுக்குள்ளிருந்து, கண்ணாடிபோல எதிரெதிர் வரும் துணியாலான தானியக்குதிர்கள் அசைந்தாடி ஒரே இடத்திலேயே நின்று, உள்ளிருந்து நரம்பிசை வாசித்தபடி துணிக்கரங்கள் அழைக்க, அதனை மிக மெதுவாய்த் தழுவியபடி அதனோடு மறைகிறார்கள். சட்டென மறுநொடியே நிகழ்விடத்தின் பின்பக்கம் ஓர் உடல் சரிந்து கீழே வீழ்ந்து நெளிந்து எழுந்து வலது இடது பக்கம் சரிந்து சரிந்து மெதுவாக முன்னேறுகிறது. சில நொடிகளில் வலது இடது பக்கமிருந்து இரு உடல்கள் சரிந்து வீழ்ந்து நெளிந்து எழுகிறது. இப்போது மூன்று உடல்களும் கடிகார பெண்டுலம் போல வலது இடதாக சரிந்து நடந்து, முன்னேற மூன்று உடல்கள் மேலும் கூட்டாக உடல் ஒட்டிய நிலையில் சரிந்து குப்புற வீழ்ந்து மெதுவாக உருண்டு மற்ற உடல்களும் தம் உடல்கள் நீட்டி மென் அசைவில் நெளிந்து ஒன்றையொன்றைத்தீண்டி சில உடல் படிமங்களை உருவாக்குகிறது. சில நொடிகளில் விதையொலிகளின் சப்தத்தில், தோலிசை மூண்டு ஒலிக்க கீழே விரித்து கிடந்த துணிகளை அனைத்து உடல்களும் போர்த்திக்கொண்டபடி எழுந்து தலைகளைக் கவிழ்ந்தும் நிமிர்ந்தும் முன்புபோல பெண்டுல நடையில் சரிந்து வலது இடதாக ஆடியாடி வெவ்வேறு திசைகளுக்கு திரும்பித் திரும்பி முன்னேறுகிறது. திரைபோல தலையில் முன்னும்பின்னும் போர்த்தி அசைத்து நெருங்கி விலகுகிறது.
கழுத்துகள் தெரிய துணிகள் போர்த்திய உடல்கள், ஓருடலாய் கூட்டாய் நெருங்கி அதிசிற்பமென சரித்து விலகி துணிகளை தலையில் போர்த்திச் சுத்தி நகர்ந்து பின் விதவிதமாய் போர்த்தி, அதிக நெருக்கத்தில் பிணைந்து மெல்லிய அசைவில் ஆடியாடி முதலில் சொன்ன வார்த்தைகளை நீட்டிச்சொல்லியபடி, விலகி மறுபடியும் அதுபோலவே முன்னேறுகிறார்கள். நெறுக்கமாய் இருப்பது தூரம் தூரமாய் விலகிப்போய் இடைவெளிகள் விட்டுத் துணித் தானியப் பொம்மைகளை வைத்து இருவர் முகச்சித்திர கோமாளிகளாக கரங்களில் வட்டவளைய பொம்மைகள் சுற்ற கண்ணாடி போல நுழைந்து வாழ்த்த கண்களுடன் உற்றுப்பார்த்தபடி இருவரியினை நீட்டிச் சொல்லவும், அவர்களுக்கு வழிவிட்டபடி விலகி ஓடி முன்பக்கம் தலைநீட்டியபடி உறைந்து நின்று ஒவ்வொருவரும் அவரவர்களுக்கான வார்த்தைகளை நீட்டிச் சொல்லவது பல பாவங்களில் கதை சொல்வது போலவே நிகழ்கிறது. சில நொடிகள் வார்த்தைகள் பாடல்கள் போலவே நீட்டியும் குறுக்கியும் சொல்லப்படுகிறது. பொம்மைகள் சுமந்து வந்த கோமாளிகள் தேடித்தேடி ஓடுகிறார்கள். மற்றவர்கள் பெரும் மதிப்பளித்து விலகி தத்தமது முகங்களை பெருவலியோடு பொத்தியும் சட்டென விலகி ஓடியும் முகம்முகமாய் மோதி உறைந்து, பின் விலகி ஓடி பழைய நிலைக்கே வருகிறார்கள். இடையே இரு குழுக்களாக பிரிந்து பெண்டுல நடை தளர்ந்த ஒலியால் பேசிப்பேசி ஒலியால் உரையாடாலாய் மோதுகிறார்கள்.
முகங்களிலிருந்து துணிகள் முக்காடு போட்ட நிலையில் ஆடியாடி பெண்டுல நடையில் திரும்ப வேகமாய் சிதறி ஓடிக் கூட்டமாய் சில வார்த்தைகளை கூவியும் இரைந்தும் வாஞ்சையோடும் சொல்லியும், துணிகளை கழுத்தில் கட்டித் தொங்கவிட்டும் திரும்ப முன்போல ஆடியைப்போல சரிந்து உறைந்த கண்களால் பறவையின் பெயர்களை வலியோடு கூவிக்கூவி சொல்லியபடி முன்னேறி நிகழ்விடத்தில் இருள் கவிழ மென்நீல ஓவியில் ஒவ்வொரு உடலாய் சரிந்து வீழ்கிறது. திரும்பவும் முதலில் வந்தவர்கள் துணிமூட்டை சுமந்து நிலத்தில் வீசி பெயர்களை கூவிக்கூவி எங்கும் இருள் பரவுகிறது.
நிலம் :-6
நடிகன் 1: வெள்ளாவி உவர்மண் மூட்டைகளைச் சுமந்த கழுதைகளின் உடம்பெல்லாம் திட்டுத்திட்டான சீழ்வடிந்த புண்கள். கழுதைகள் புறக்கணித்த ஊர்களும் நகரங்களும் பெருகும் நாட்களில் இன்றைய மனிதர்கள். மனிதர்களை விட்டுப்பிரிந்த கழுதைகள் கானல்நீர் அலைபாயும் உப்போடையின் இரவெல்லாம் சந்தித்து மறையும் கதை உங்களுக்குத் தெரியுமா? தன் காயங்களும் காத்திருப்பின் ஏக்கத்திற்கும் ஆறுதல் தர வண்ணாத்தி தேவதை வருவாள் என்ற காத்திருப்பின் வலி உங்களுக்குத் தெரிய வேண்டும்.
நடிகை: பெளர்ணமி நாளொன்றில் கண்ணீரின் திட்டுக்கள் படிந்த முகங்களோடு, நிலவு பார்த்த கழுதைகளிடம் கிழிந்த மாற்றுத்துணி கட்டி அள்ளி முடித்த கூந்தலோடு கரிசல் நிலப்புழுதி வெண்பனியாய் மிதக்க அதோ வருகிறாள் உளுந்து நிற வண்ணா தேவதை தூரத்தில் வண்ணார்களின் ச்சோ…ச்சோ ….சோ வென்ற சலவைப்பாடல்…
நடிகன் 1: கழுதைக்கூட்டநடுவில் நின்று கரம் நீட்டி அவைகளை அழைத்தபோது பரவசமான விழிகளோடு அவளை வட்டமிட்டு பாத்த்தன. சில புழுதியில் புரண்டழுது பரவசமான விழிகளோடு, துயரமும் மௌனமும் நிறைந்த ஒலி மொழியால் அவளிடம் பேசின.
“நாங்க இல்லாம வண்ணாத்துறைக்கு அழுக்குப்பாதிகளை எப்படி தூக்கி போரீக? அப்பச்சி மாருக உங்களுக்கு இன்னும் சுடு சோறு தரலையா?
”அவமானப்படுத்தாத வார்த்தைகளில் பேசுறாங்களா? அடிக்காம இருக்காங்களா?”
“கல்லெறி வாங்குன காயத்தோடு… வெள்ளாவி உவர்மன் மூட்டை சுமந்த காயத்தோடு கேட்கிறோம்… தாய் போல கொஞ்ச ஆளில்ல… நிழல் போல பார்த்துக்கொள்ள நொடிகள் இல்ல… எங்க அழுகைய தழுவித்தேற்ற யாரு இருக்கா!”
நடிகன் 6: ”ஆதியாகமக் கொலைப்பாலைப் புழுதியில், அந்த மனிதக் குழந்தையை சுமந்து எல்லைதாண்டிக் காப்பாற்றிய உயிர்கள் நாங்கள்,தொங்கும் மரச்சிலுவை பாரமேறிக்கிடக்கிறோம். கைவிடல்,புறக்கணிப்பு, திசைகள் கலைந்துபோன பாதைகளில் பித்துக்கொண்டு கனைத்துத்திரிகிறோம். எங்கள் அழுகை தழுவித்தேற்றும் மனங்கள் எங்கே…! தருவீர்களா….!”
”உப்புப் பொதிசுமந்த எங்கள் அலுப்பில், மண்குவிந்து நிலமாகி எழுந்து நிற்பவை உங்கள் பேரரசுகள்.ஒரு புறமுதுக் சிலிர்ப்பில் அதிர்பவை அவைகளென நினைவிருக்கிறதா…!”
நடிகன் 7: அப்போ வண்ணா தேவதை தன் நெடுங்கூந்தல விரித்து கழுதை உடம்புல இருந்த தூசுப்புழுதி தடவி, தன் கிழிந்த உடைகளெல்லாம் துறந்து, அவைகளைப் போல பிறந்த மேனியாகி “வாங்க நானிருக்கேன் எம்மேல நிலமா நெனச்சி இளைப்பாரிக்கோங்க” என்றபோது அவர் உடலெங்கும் கழுதைகள் முகம் புதைதத்து விசும்பலுடன் முனங்கிக்கொண்டிருக்க, அப்போது தேவதை, ஆதிச்சலவைச்சடங்குப் பாடலைப்பாடிப்பாடி அவைகளைத் தூங்கவைக்கிறாள்.
வண்ணாத்திப்பாறைகளெங்கும் மோதி நிலமெங்கும் அப்பாடல்பாடி அலையும் சலவைக்கலைஞர்கள், அழுக்குப்பொதிகளோடு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
நடிகை: ”இந்தக் கதையைப் பாடியபடி உவர்மண்தேடிப் போனவங்க, வறண்ட நடுக்காட்டு சுக்காம்பாறை மலைக்குன்றில், தேடித்துழாவியபோது மலைக்குள்ளிருந்து மண்முகமாய் அந்த இரவில் தீபமேற்றி வந்த வண்ணாமுது தேவகைளைக் கண்டோம். யாரிடமும் பேசவில்லை அவர்கள். விரல்களில் முடிவற்று சலவைகள் செய்த காய வடுக்கள் சிற்பநிலை கொண்டிருந்தது. வயோதிக வண்ணாமூதாய்கள் சிலர் தன் பொக்கை வாய்களுக்குள் மந்திரமொழியில் ஒலியாலான பாடலை பாடிக்கொண்டிருந்தார்கள். உவர்மண் மூட்டை நிறைந்தபோது மறைந்து மண் மலையாகிவிட்டருந்தனர்.”
நடிகை : நாங்க அள்ளிச் சுமக்கும் உவர்மண் துகள்களிலும் அவர்கள் மறைந்திருந்தார்கள். (கூட்டாக)
வடக்கே மழை பெய்ய, வாள்சுருண்டோடி நீரிறைக்க
கோழிக்குஞ்சு நாத்து நட, காக்கா கதிரறுக்கும்,
குளமெல்லாம் நெறஞ்சு மடவாத்து கூப்பிடுதே.. ச்சோ…. ச்சோ…..ச்சோ ….
வண்ணத்திக்குருவி வாலவால ஆட்டிக்கிச்சாம்
கள்ளிக்காக்கா ஓடி வந்து, கால நீட்டிக்கிச்சாம்
மழையே…மழையே…. வா… மாமழையே, வா… சிறுமழையே வா…
இப்படி பாடிக்கிட்டே கிளை பிரிந்து பயணமானோம். தும்பி தண்ணிப்பாதையில் பயணமானான்.
நடிகன் 5: தன் கண்தெரியா சகோதரி, வயோதிக தாயைத்தேடிப்போன தும்மி எனும் அவள் மகன் உவர்மண் மூட்டையை கொடுத்து கொலையுண்ட தன் சகோதரியைத் தேடிப்போறேன்,வெளுத்த துணிகளைத்தாருங்களம்ம என்றான். மரித்தவர் திரும்பி எழுந்த கதைகளை கேட்ட என் காது மடல்கள் துடிப்பதைப்பாரேன் என்று சொன்ன அம்மாவின் காதுகளில் உதடு குவித்து மந்தரித்தாள் சகோதரி. தானியங்களால் செய்யப்பட்ட பொம்மை இருக்கு அக்காவுக்கு அதையும் எடுத்துப்போயேன். அக்கா அங்கே தனியா இருக்கிறாளா! தற்கொலை செய்து கொண்ட அவள் தோழியைப் பார்ப்பாயா? அங்கே என்ன செய்து கொண்டிருப்பார்கள்?
நடிகன் : நகரங்களிலிருந்து கொட்டப்பட்ட பெரிய குப்பை மேடுகளில் அவர்கள் எதைஎதையோ தேடித்திரிகிறார்கள். தேசங்களின் அரசியலும் தத்துவமும் ஒரு வேளை அதன் அடியாதுத்தில் உலவிக்கொண்டிருக்கலாம்.
நடிகை: இரவெல்லாம் பூமியின் அடியாழத்தில் ஓடும் அன்பு நதியின் குமிழ்களைக்கேட்டு நேசம் உலகநாகரிகமாக மாறிடும் எதிர்காலத்தை அழைத்துக்கொண்டிருப்பார்கள். காதலின் சிறகுகள் முறிக்கப்பட்ட திசைகளிலிருந்து வந்தவர்கள் பலரும் நிலத்துள் விரல்கள் புதைத்து கண்ணீராய் எழுதப்பட்ட வார்த்தைகளில் பாடிக்கொண்டிருப்பார்கள்.
அம்மா,நான் அங்கு போகத்தான் வேண்டும்…இதயக் கூச்சலிட்டு அப்பாதை எனை அழைக்கிறதம்மா….
நடிகை: சலவை செய்த பழைய துணிகளோடு நேசம் தடைசெய்யப்பட்ட அந்த விந்தைநிலத்தை அன்று இரவே சென்றடைந்தேன். ஆதி அண்மை வேண்டிய பெண்கள் ஆண்கள் பலருக்கும் கால், கைகள் முடமாக்கப்பட்டு ஊர்ந்த நிலையிலேயே அற்புத பொருட்களை படைத்துக் கொண்டிருந்தனர். பலர் புதிய வார்த்தைகளை திரைச்சீலைகளில் எழுதிக்கொண்டிருந்தார்கள். அளவற்று காதலைப்பரப்பிவிடும் தவசங்களை பெண்கள் பலரும் தம் பிறப்பு வாசலில் பதித்து வணங்கி பத்திரப்படுத்தினார்கள். ஒப்பனையிட்ட பலரும் எதிர்கால அன்பின் ஒத்திகைக்குள் மொழி மீறிய மெளன உடலில் பேசிக்கொண்டிருந்தார்கள்.
நடிகை: அப்போது வெட்டுக்காயமேறிய உடலுடன் கழுதையின் கழுத்தில், முகம்புதைய வரும் வாலிபனைச்சுற்றிச் சுற்றி விரல்கள் நீட்டி அவனை இறக்கிவைத்த பெண்கள். அவன் கால், கைகளில் இருந்த குத்தப்பட்ட ஆணியின் தடத்தில் குமுறுகிற அன்பின் பதட்டத்தோடு தம் உதடுகளின் ஈரத்தை சடங்கென பதித்து எடுத்தார்கள்.
நடிகை: சமூகவெளியில் வேசை முத்திரையிடப்பட்ட பலரும், குனிந்த தலையுடன் அவனுடைய காயங்களை தம் அகங்கைகளால் துடைத்து அழுத கண்ணீரில் தம் கூந்தல் நனைத்து ஒத்தடம் கொடுத்தார்கள். விழிப்பு நிலைக்கு வந்த அவன் ஏங்கிய விழிகளோடு நிசப்தத்தை பகிர்ந்து கொண்டான். அங்கே என் சகோதரி கையிழந்த ஒருவனுக்கு, கனிகளை உண்பதற்காக ஊட்டிக்கொண்டிருந்தாள். வெடிப்புற்ற அவள் கைவிரல்களில் சேவைகளின் கருணை கசிந்து கொண்டிருந்தது. அங்கே பால்பேதமற்ற உறவுவெளியில் ஒருவருக்கொருவர் கூந்தலில் முத்தங்களை பறிமாறிக்கொண்டார்கள். நான் சலவை செய்த துணிகளை வெளியெங்கு வைத்துவிட்டு அவர்களது அழுக்குப்புனிதத் துணிகளை சுமந்தபடி வெளியேறியபோது நிபந்தனையற்ற காதலின் வருங்காலப்பாடலை சடங்காய் நிகழ்த்திக்கொண்டிருந்தனர்.
நடிகன்: காத்திருந்த, அம்மாவுக்கும் சகோதரிக்கும் நைந்து, கிழிந்த துணிகளை நினைவு மலரென அள்ளிக்கொடுத்தேன். நாங்கள் மூவரும் மெளனங்களால் விசும்பிய முகங்களை சுவற்றில் புதைத்துக்கொண்டோம். பின்னிரவில் குளத்துக்கு, சலவை செய்ய கிளம்பிய என்னிடம் இளவரசியின் துணிகளை தூக்கிக்கொடுத்து அனுப்பினார்கள். அத்துணிகளை ஞாபகங்களின் தாழ்வாரத்தில் அமர்ந்து துவைக்க ஆரம்பித்தேன், துவைக்க துவைக்க எழும் நேசத்தின் அதி வாசனை. காத்திருப்பு, ஏக்கம், வியர்வை, அழுத்தம், அழுகை, விசும்பல் துயரம் ஊடாடிடும் காதலை உணர்ந்த தருணமது. காற்றின் ஏடுகளெங்கும் இளவரசிப்பெண்ணின் கபடற்ற முகத்தை காண ஏங்கினேன். தூரத்தில் கொலையுண்ட சகோதரியின் தளும்புகள் ஏறிய நாவற்பழமுகம்.
நடிகன்: மறுநாள் நான் வெளுத்த துணிகளை இளவரசிகளிடம் கொடுக்கச்சென்ற அம்மாவிடம் தன் துணிகள் பார்த்து பேசினாளாம்,இளவரசி
நடிகை: “சலவையின் பரிபூர்ண ரேகைகளை என் துணிகளில் உணர்கிறேன், இத்துணிகளை வெளுத்த சலவைத்தொன்மமிக்க கரங்கள் யாருடையவை! அன்பும், பிரபஞ்சப் பொறுமையும், கருணையும் கொண்டு துவைத்தெடுத்த அந்த நேசமிக்க விரல்களை நான் காணவேண்டும். சலவைக்கலையின் துடிகொண்ட சூதற்ற அவ்விரல்களில் நான் முத்தமிட வேண்டும்.”
உலகைத்துடைக்கும் அந்த தூய உடலைக்கொண்டவனைக் காண வரவேண்டும்மென்று ரகசியமாய் மன்றாடிக்கேட்டாளாம்.
நடிகன் : ஆணவமும், கெளரவமும் பைத்தியமேறித் திரியும் அரசனின் மகளவள். தந்தை தவிர்த்து எந்த ஆணின் நிழல்படாத, பெண் காவலர்கள் சூழ்ந்த தனிக்கோட்டையில் வாழ்பவள். அவள். சுய இன மோகியான அரசனின் கொடுவாள் விழிக்குள் கட்டுப்பட்டவள். இதில் அவள் காதலை கனவை எங்கு ஒளித்து வைப்பாள். நித்யத்துவமான எளிமையின் பாதைக்காக காத்திருக்கின்றாள் இளவரசி.
நடிகை: அன்று, சாமத்தில் தங்கைகள் வன்கொலையுண்ட நிலத்திலிருந்து கொண்டுவரப்பட்டு கிழிந்த ஆடைகளையும் வயல்பரப்புகளில் சுயமரணம் செய்கொண்ட விவசாயிகளின் நைந்த வேட்டிகளையும், கோவணத்துணிகளையும் எம் கழுதைகள் சூழ சலவை செய்து கொண்டிருந்தேன். வண்ணாத்துறைகளில் படிந்த துயரங்களின் மொழி அவைகளுக்குப் புரியும்.
நடிகன் : குளக்கரையெங்கும் துயர நேசத்தை சுமந்து கிழிந்த ஆடைகள் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தன. கழுதைகள் கண்மாய்ப் புழுதியில் புரண்டு புரண்டு புலம்பியவாறு கலங்கிய நீரில் முகம் பார்த்துக் கொண்டிருந்தன. கண்மாய்க்கரை ஆலமர விழுதுகள் பின்னி இருந்த சுருளுக்குள், என் அம்மாவின் ரூபத்தில் இளவரசி தோன்றி மறைந்தாள்.
நடிகன்: இளவரசியின் பித்தேறிய வாக்குகளுக்கு கட்டுண்ட என் தாய் மறுநாள், அரண்மனை இளவரசியின் சலவை செய்யப்பட்ட துணி மூட்டைக்குள் என்னைக் கட்டி, ரெட்டை கழுதையின்மேல் பொதிப்பாரமாய் ஏற்றி, அவள் இருப்பிடத்தில் இறக்கி வைத்து இளவரசியிடம் சேதி சொன்னாள்.
நடிகன் : பூச்சிகள் விழிக்கும் இரண்டாம் சாமத்தில் தனியே வந்த இளவரசி, துணி மூட்டை பிரித்தபோது நான் தூக்க மயக்கத்தில் இளவரசியோடு பேசிக்கொண்டிருந்தேன். அவள்,என் விழிப்பு வரை காத்திருந்து, இறகுகளால் செய்யப்பட்ட விசிறிகள் வைத்து எழுப்ப நினைத்தாள். மடிக்கப்பட்ட புடவை போல நான் கிடந்தேன். தன் முடிவற்ற காத்திருப்பை நீர்க்குமிழிகள் தெளித்து அவள் எழுப்பியபோது, ஆதிச் சலவைப் பாட்டின் ச்சோ… ச்சோ… ஒலி எழுப்பிப்பாடி திரும்பவும் உறக்கத்தை தழுவினேன். இதுநாள் வரை அவள், கனவாய்ச் சேர்த்திருந்த அதிசயமான காதலுக்கான பொருட்களை எல்லாம் எல்லாம் தரை எங்கும் பரப்பி திரும்ப எழுப்பியபோது, சோ சோ பாடல் பாடி மறுபடியும் தூங்கிப்போனேன். ரத்தம், நரம்பு என கனவு முழுக்க சலவை கலையை நேசிக்கும் துடிமிக்க என் இருப்பு, காதலின் நிலத்தில் அவளை நிலைகுலையச் செய்துவிட்டது. சொற்ப வார்த்தைகளால் எந்தத் தீண்டலும் இன்றி, உரையாடினோம்.
நடிகன் : என்னால் இளவரசியின் பேரழகை தாங்கும் சக்தியற்றுக் கிடந்தேன். அவளின் வசீகர இருப்பின் முன், குறுகி நெளிந்து சுருண்டு கொள்கிறேன். என்னால் முடியவில்லை. எளிமையின் துடிமிக்க தரித்திரங்களில் வாழ்வினை கற்றவன் நான். அவளது தூய கனவின் அழைப்பிலேயே என் எளிமையை உணர்ந்தேன். அவள் நெடுங்கூந்தல் தொட்டுச் சொல்கிறேன். அவள் உறவைச் சுமக்கும் சக்தி எனக்கில்லை. அவளால் நேசமடையும் நான், எனதானவன். உறவின் ஆழத்தில் உடல் மீறிய அன்பை பெற்றுக்கொண்டோம்.
நடிகன் : சாம்பல் மிக்க பின்பனி இரவொன்றில் சந்தித்த போது, பைத்தியம் பிடித்த பயங்களை என்னிடமிருந்து மறைத்துவிட்டு கழுதைகளின் கண்ணீர் குமிழ்களுக்குள் மறைந்திருக்கும் கதைகளை சொல்லியபடி, அவளிருப்பிடத்தில் இருவரும் தனித்தனியான சாளரங்களில் உடல் சாய்ந்து உறங்கி விட்டோம்.
நடிகை : விடியற்காலையில் இளவரசியின் பெண் காவலர்களால் கைது செய்யப்பட்டு, ஆண் காவலர்கள் சூழ நுழைந்த அரசனிடம் தலைகுனிந்து இருவரும் கேள்விகளை மௌனங்களால் நிரப்பிக் கொண்டு இருந்தோம். அரசன் பேசினான்,
நடிகன்: “குடிகெடுத்த பெண்ணே, மானம் அழித்து அவமானம் வாங்கி வந்தவளே, என் ஆணவ பெருமை குழைத்தவளே..”
எதனைக்கொண்டு என் குலப்பெருமை தூக்கியலைவேன். ஏங்கு போய் முறையிடுவேன்.”
நடிகன்: என பழைய நீர்த்துப்போன வார்த்தையில், கோபத்தை முறுக்கேற்றிக் கொண்டிருந்தான் அரசன். அவனின் உத்தரவுக்கு காத்திருந்த வாட்கள் தும்பியின் தூயநேசம் கண்டு கூர்முனையை மடக்கி வைத்திருக்கட்டும்.
நடிகை: நாங்கள் இருவரும் அரசனின் கண்முன் காவலர்களால் கழுதைகளில் ஏற்றப்பட்டோம். என் ஆடை உருவப்பட்டு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தப்பட்ட புறங்கை மடக்கிக் கழுதையுடலோடு கட்டப்பட்டேன். ஆபரணங்கள் பறிக்கப்பட்ட அவள் விசும்பாத விழிகளோடு என்னுடன் பயணப்பட தயாரானாள். ஊர் எல்லை தாண்டி கல்லெறியப்பட்டு துரத்தப்பட்டோம். பின் துவண்ட எங்கள் உடல் வனாந்திரத்தை நோக்கி போய் கொண்டிருக்க, எங்கள் முன்னே எங்களைப்போன்று பெண்களும் இளைஞர்களும் கல்லெறிபட்டு சாணிபூசப்பட்டு ரத்தவிளார் பதிந்த உடல்களோடு நிசப்தத்தில் பயணமாகிக் கொண்டிருந்தார்கள். பலர் கால் கைகள் கட்டப்பட்டு நிலத்தில் ஊர்ந்து பயணமாகிக்கொண்டிருந்தார்கள். தொடைகளுக்கிடையில் உதிரமலர்களைப் பிடித்த பெண்கள், அதிசயமான இளைஞர்களின் கரங்களில் சுமந்து செல்லப்பட்டனர். எல்லோரும் எங்கே செல்கிறோம் ? கால்கள் போன திசைகளில் எங்கள் இருப்பு அலைந்து கொண்டிருந்தன. இலக்கைத்தேடாத பயணம்.
நடிகை : நாங்கள் எல்லோரும் நீண்ட குளத்தை அடைந்தபோது, அங்கே என் சகோதிரியுடன் பார்த்த பலரும் ஒப்பனையிட்டு புதுவகை இருப்பிற்கு தயாராகிக்கொண்டிருந்தார்கள். குளத்தைச் சுற்றி நாங்கள் கூட்டமாக நின்றோம். அழுகை துணிவாய் உருவேறியிருந்த நொடியது.
நடிகை: காதல் சுமந்த வாழ்வின் ருசி நாவில் சுரந்து கொண்டிருந்தது. ஒவ்வொருவராய் ஜோடிஜோடியாய் நீருக்குள் இறங்கினோம். உள்ளிருந்த கரங்கள் அழைத்தபடி இருக்க, தூரத்து அரைநிலா, சிதறிய நட்சத்திரங்கள் இவற்றுக்கு துணையிருந்தன, எல்லோரும் நடுங்கும் உதடுகளால் முத்தமிட்டபடி நீராடிக்குள் அசைவு கொண்டனர். கடைசியாக நாங்கள் இறங்கியபோது, கண்மாய்க்கரையைச் சுற்றி பதட்டத்தில் கழுதைகள் ஓடிக்கொண்டிருந்தன. நாங்கள் முன்னே போனாரின் சுவடுகளை வணங்கியபடி கழுதைகளை பார்த்தபோது, அவை முடிவற்ற கனைப்பு மிக்க மொழியில் கருணைப் பாடலை பாடிக்கொண்டிருக்க நாங்கள் நீராகிவிட்டோம்.
கழுதைகளே அன்பின் காதலின் சாட்சி…..
கண்களில் பழுப்புத்துணி கட்டப்பட்டு கந்தல் உடை தைக்கப்பட்டு கிழிந்த நிலையிலிருக்கும் உடையுடுத்தி நுழையும் இரு பெண்கள். அவர்களது கை கால்களும் பழுப்புத்துணிகளையினால் பிணைக்கப்பட்டுள்ளன. கை விரல்களிலிருந்து கால் விரல்களுக்கு வெள்ளைத்துணி நாடா கட்டப்பட்டு, அதனோடு நடந்து தயங்கியபடி நுழைவதும் சிறிய அளவில் ஓடுவதும் நடப்பதுமாக இருக்கின்றர்கள். கைகளின்பக்கமிருந்த துணி உடைகளிலிருந்து மெல்லிய துணி பிரிந்து ரெக்கையென பறக்கிறது. அவர்களது கண்கட்டுத்துணிகளில் பச்சயம் கசிந்து பரவியிருக்கிறது. திசை குழம்பி உலவுகிறார்கள். அவர்களை நோக்கி மட்டுமே ஒளி தொடர்கிறது. இருவரும் நிலத்தில் தலை குனிந்த நேரத்தில் ஒளி நிலமெங்கும் பச்சையாய் பரவுகிறது. கீழே பதுங்கிக்கிடந்த உடல்களிடமிருந்து றெக்கைகள் முளைவிட்டு எழுகின்றன.
நிலம் மெலிதாய் இருள்கிறது.
நிலம் : -7
கோமாளி வருகை
உடலெங்கும் கூலிங்கிளாஸ் மாட்டிய கோமாளி கையில் இரண்டு கயிறுகளை பிடித்து கயிற்றின் மறுமுனையில் இரண்டு குரங்கு குட்டிகள். உள்ளே நுழைந்ததும் அவைகளுக்கு கண்ணாடிகளை உருவித்தருகின்றான். அதனை வாங்கி குரங்குகள் பலவிதமாக அணிந்து நடந்து பார்க்கின்றன. பின் தேர்வு செய்து கோமாளிக்கு ஒன்றை மாட்டிவிட்டு அழகு பார்க்கின்றன. பின் கோமாளி தன் பைக்குள்ளிருந்து கம்பங்கருதை கசக்கி ஊதிக்கொடுக்கின்றான். ஊதித்தின்றபடி வெளியேறுகின்றார்கள்.
பலகைகள் கூட்டமாகச் சேர்ந்து கோமாளியை மேடைக்குள் தள்ளிவிடுகின்றன. திரும்பவும் அத்திசைக்கே கோமாளி எழுந்து ஓட மறுபடியும் கைகள் சேர்த்து உள்ளே தள்ளிவிடுவதை பார்த்த குரங்குகள் கைகளின் பக்கமே நிற்கின்றன. ஓடி வந்த கோமாளியை கைகள் பிடித்து உள்ளே இழுத்து வந்து ஒரு பொட்டணத்தை கீழே போட்டு வெளியேறவும், இன்னொரு பொட்டணமும் கோமாளி அருகே வந்து வீழ்கிறது. “வெக்கமாயிருக்கு எனக்கு வெக்கமாயிருக்கு” என்பதை பலவாறு கூச்சத்துடன் சொல்லி நடிக்கின்றான்.
பின் “அண்ணே , அக்கா….. அய்யா உங்களுக்கு எந்நாடுன்னு சொல்லுங்களேன்” எனப்பேசி நடிக்கிறான். பின் பொட்டணத்தைப் பிரித்து ஸ்டான்ட், மைக் உருவாக்கி அதன்முன் செறுமல், உறுமல், பின் தொடர் இருமல், பொட்டணத்திலிருந்து சுத்தியல் எடுத்து mike test செய்தல் பின் கத்தி, கல் கொண்டு test செய்கிறான், பின் தன் பையிலிருந்த பணத்தை எண்ணிப்பார்த்து தானே வைத்துக்கொள்கிறான். பையிலிருந்த சில்லரைகளை அள்ளி வீசுகிறான் பின் பேசத் துவங்குகிறான்.
கோமாளி:
ஆகட்டும் டும் டும் டும்மா
நடக்கட்டும் டும் டும் டும்மா
துவங்கட்டும் டும் டும் டும்மா
கிளம்பட்டும் டும் டும் டும்மா
சோலிய முடிக்கட்டும் டும் டும் டும்மா
பேசிக்கொண்டிருக்கும்போதே குரங்குகள் நுழைந்து மைக்கை உடைத்து மடக்குகிறது, குரங்குகளைப்பார்த்து தலையசைத்து தலையசைத்து “ஆட்டும் ஆட்டும்” என்றபடி அதனோடே அவனும் கிளம்பிப் போகிறான்.
“அண்ணே ! அக்கா! தம்பி! அம்மா… நீங்க எந்துரு நீங்க எந்துருனே! கேட்டபடி பலரும் குழம்பி நடக்கின்றார்கள், நெருங்கும் ஊருள்ளே கூட்டு ஒலி கேட்டுக்கொண்டே இருக்கின்றது.
நைந்து கிழிந்து உடைந்த குடையுடன் கையில் பூத்த மலர்களுடன், நுழையும் கோமாளி. அவனது இடுப்பில் இரண்டு குரங்குள் உட்காந்திருக்கிறது. மலர்களை நீட்டி சைகைகளால் எல்லோரையும் அழைக்கின்றான். எவரும்வராதது கண்டு குரங்குகளே மலர்களைத் தூக்கிச்சென்று அழைக்கின்றது. சில நொடிகளில் பல திசைகளிலிருந்தும் மெதுவான நடையில் கந்தல் நைட்டி அணிந்த பலரும் திசை குழம்பி நடந்து நடந்து எல்லோரும் கோமாளியின் கிழிந்து உடைந்த நந்தை குடைக்குள் அனைத்துப் பெண்களும் விரிந்த மொட்டைத்தலைகளுடன் அவனோடு சேர்கிறார்கள். கோமாளிக்கும் குரங்குகளும் அழைத்தபடியே இருக்கின்றார்கள். தூரத்தில் கூட்டொலிகள் கேட்டபடி கரைகிறது. கோமாளியுடனான குடைப்பயணம் தொடர எல்லோரும் மெல்லிய கூட்டுப்பாடலில் மறைகிறார்கள்.
ரொம்பவும் உடைந்த நைந்த குடை மற்றொரு கையில் வாடிவதங்கிய மலர்க்கொத்து தூரத்தில் மரங்களின் பெயர்களை பெண்ணாய் அழைப்பது கேட்டுக்கொண்டே இருக்கிறது. பெரும் துக்க நடையில் வந்த கோமாளி தேடித்தேடி எல்லா திசைகளுக்கும் மலர்களை வைத்து கீழே வீழ்ந்து எழுந்து நடுவில் அமர்ந்து காதல் விவசாயம் குறித்த பாடலை மெதுவாக பாடிப்பாடி உச்ச குரலை எட்டும்போது அழுகையும் பாடலுமாய் கல் சிலேட்டில் பூக்களை வரைந்திருக்க அதனை கோமாளி நோக்கி நீட்டியபடி அனைவரும் நெருங்க அழுகைப்பாடல் கூட நீட்டிய சிலேட்டுகளுடன் வெளியேறிப்போவது போல இருளில் சிலேட்கள் வைத்து காகித மலர்களோடு நுழைகிறார்கள். அவன் அருகே சென்று மடியில் வைத்து அழும் அவனை கன்னத்தில் அறைந்து சிறித்து விளையாட்டாக ஒவ்வொருவராக கோமாளி கன்னத்தில் அடித்து விளையாடுகிறார்கள். கோமாளியும் அழுகையிலிந்து சிரிப்புக்கு வரவும் தூரத்தில் மரம், பறவைகளின் பெயர்களை கூவிச்செல்வோரின் குரலின் ஒலி நீண்டு ஒலிக்க சிரிப்பொலி அமைதியடைந்து கூவுவது நீண்டு மங்குகிறது.
தமிழ் நாடகப்பரப்பில் மணல்மகுடி நாடக நிலத்தின்வழி இயங்கிவரும் ச.முருகபூபதி இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக நாடகத்தளத்தில் நவீன நாடகங்கள், குழந்தைகள் நாடகங்களைப் படைத்து காத்திரமாக இயக்கம் கொண்டுள்ளார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகத்துறையில் முதுகலையும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவரது நாடகங்கள் இந்திய மற்றும் சர்வதேச நாடக விழாக்களில் பங்குபெறுபவை. இந்திய ஒன்றிய அரசிடமிருந்து உஸ்தாத் பிஸ்மில்லாக்கான் யுவபுரஸ்கார் விருதினைப் பெற்றுள்ளார். தமிழ்நிலத்தின் மரபுசார்ந்த தொல்சடங்குகளை, இசைவடிவங்களை, கலைப்பண்பாட்டு நிகழ்வுகளை ஆய்வுசெய்து, நாடகக்கலையின் வேர்தேடும் ஒரு தொல்கூறுமுறையில் பொதுவில் பேசப்படாத திணை பழங்குடிகளின் நாட்டாரிய அழகியல் வாய்மொழிக் கதைமரபு வேளாண்குடிவாழ்வு, நிலமிழந்த இடப்பெயர்வு, அதிகாரம். மறுக்கும் குரலற்ற விளிம்பு நிலையோரின் பாடுகள், அவர்களின் பண்பாட்டுப்புழங்கு பொருட்கள் இசைவடிவங்களை நாடகவுருவேற்றி மனித மையம் தாண்டிய பேருயிர் இயக்கமாய் நவீனமாக நாடகநிலமிறக்குகிறார்.
இதுவரை சின்னமனூர் சர்க்கஸ்காரி எனும் சிறுகதைத் தொகுப்பும், கூந்தல் நகரம், செம்மூதாய், சூர்ப்பணங்கு ஆகிய நாடகத் தொகுப்புகளும், குழந்தைக் கலைஞர்களுடன் வேலை செய்த பயணங்கள் கட்டுரைகளாகத் தொகுக்கப்பட்டு உடல் திறக்கும் நாடக நிலம், கதை சொல்லும் கலை மந்திரமரம் ஆகிய நூல்களாக வெளிவந்துள்ளன. மதுரகவி பாஸ்கரதாஸின் மகள் வயிற்றுப்பேரனான இவர் அவரது நாட்குறிப்புகளைத் தொகுத்து பதிப்பித்துள்ளார். கோவில்பட்டியை மையமாகக்கொண்டு மணல்மகுடி நாடகக்குழு இயங்கிவருகிறது.








Leave a Reply