Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

பூரதம்

பாரத் தமிழ்
பாரத் தமிழ்
November 2, 2025
பூரதம்

அதிகாலை நல்ல தூக்கத்தில் இருந்தான் தமிழ்.‌ தலைமாட்டில் கிடந்த ஃபோன் அலறியது கூடத் தெரியாமல் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். இரவு தாமதமாகப் படுத்ததாலும் அதற்கு முன்னர் சென்னை வரைப் பயணம் செய்திருந்த களைப்பாலும் உடனே எழுந்து ஃபோனை எடுக்க முடியவில்லை. மீண்டும் ஃபோன் அலறியது. இந்நேரத்திற்கு இரண்டாவது முறையாக ஃபோன் வருகிறது என்றால் என்னவாக இருக்கும்? மனம் சற்றே அவனைப்‌ பயம் காட்டியது. பெரும்பாலான துயரச் செய்திகள் இரவிலும் விடியற்காலையிலுமே வரும் என்பதால் யாருக்கும் எதுவும் ஆகியிருக்கக் கூடாது என்ற அச்சத்துடனேயே ஃபோனை எடுத்துக் கண்களைத் திறக்காமலே சொன்னான்

“ஹலோ…”

துயரங்களைச் சுமந்து பேசிய மறுமுனைக் குரல்,

“அப்பா செத்துட்டார் ணா” பெருத்த சோகத்துடன் சொல்லிவிட்டு அழவும் செய்தது.

தமிழுக்குப் பதற்றமாகி விட்டது. உடலெங்கும் வியர்த்துக் கைக் கால்கள் நடுங்க ஆரம்பித்தது விட்டன. கண்களைத் திறந்து ஃபோனை பார்த்தான். சேரனிடமிருந்துதான் அந்தக் கால் வந்திருந்தது. இறந்தது தனது அப்பன் கோவிந்தன் என்பது அப்போதுதான் உரைத்தது தமிழுக்கு. சேரன், கோவிந்தனின் இரண்டாம் மனைவியின் மகன். தமிழுக்குத் தம்பி. எதிர்முனையில் இன்னும் துண்டிக்கப்படாத தம்பியின் ஃபோன் அழுதுகொண்டே இருந்தது. அவனை எப்படி ஆற்றுப்படுத்துவது, என்ன பதில் சொல்வதென்று தமிழுக்குக் குழப்பமாய் இருந்தது.

“கவலப்படாத தம்பி” இதோ நான் கிளம்பி வரன்” என்று மட்டும் சொல்லிவிட்டு ஃபோனைத் துண்டித்தான். செத்திருப்பது அப்பனாக இருந்தாலும், பயந்தது போன்ற மரணமாக இல்லை அவனுக்கு. எனவே சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பி எழுந்து உட்கார்ந்தான்.

தமிழ், தன் கடைசி நம்பிக்கை கை மீறிச் சென்றது போல் மட்டும் உணர்ந்தான். சாவதற்குள் அப்பன் கோவிந்தனுடன் ஒரு சந்திப்பாவது நிகழாதா என்று ஏங்கியிருந்தவன். என்றைக்காவது ஒருநாள் வந்து தன் குற்றத்தை ஒத்துக் கொண்டு மன்னிப்புக் கோருவார் என்று கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாய்க் காத்திருந்தவனாயிற்றே.

நன்றாக ஞாபகம் இருந்தது. நான்காம் வகுப்புப் படிக்கும்போது ஒரு மாலை நேரத்தில், கோயில் அருகே விளையாடிக்கொண்டிருந்த தமிழிடம் “அவருதான்டா உங்கப்பா” என்று சேகர் சுட்டிக் காட்டியது. ஆனால் அதற்கு முன்பே அந்த உருவத்தைப் பல இடங்களில் பார்த்திருக்கிறான் தமிழ். தெருக்களில், சாலைகளில், நல்லது கெட்டதுகள் நடக்கும் இடங்களில், திருவிழாக்களில் என்று எங்கெங்கோ. ஊரில் உள்ள பலரையும் பார்ப்போமே அப்படி.

“யாரு, யாருக்குடா அப்பன்? தேவிடியா பையா. தொலச்சிப் புடுவன் தொலச்சி” இந்தச் சொற்களோடு

‘பளார்’ என்று சேகர் கன்னத்தில் ஓர் அறையும் விழுந்தது. தமிழைவிட இரண்டு வயது மட்டுமே பெரியவனான சேகருடன் தமிழும் சேர்ந்து அப்போது அழத்தான் முடிந்தது. சேகர் கன்னத்தில் ஐந்து விரல்களின் அடையாளம் சிவந்து போயிருந்தது. அப்பா என்றால் கெட்டவார்த்தை பேசுபவர் என்றும் கன்னத்தில் அறைபவர் என்றும் புரிந்து கொண்டான் அப்போது.

மற்ற வீடுகளில் உள்ள பிள்ளைகளை அவரவர் அப்பாக்காள் கண்டிப்பதையும் அடிப்பதையும் ஏற்கெனவே அவன் பார்த்திருக்கிறான் என்றாலும், அந்தக் கெட்ட நிகழ்வு அதை உறுதி செய்வதாக இருந்தது. அடிக்கும் அப்பாக்கள் இல்லாமல் இருப்பதே நல்லது என்றும், அதனால் தனக்கு அப்பா இல்லாததால் குறை ஒன்றுமில்லை என்றும் அவனது அந்த வயது புரிதலாய் இருந்தது.‌

பூரதம் தமிழின் அம்மா. ஒன்றாம் வகுப்புக் கூடப் படிக்காத அப்பாவிப் பெண். பிறவியிலிருந்து உழைப்பைத் தவிர வேறெதையும் அறிந்திராத ஏமாற்றத்தின் மொத்த உருவம். கோவிந்தன், பூரதத்தை விரும்பியெல்லாம் திருமணம் செய்துகொள்ளவில்லை. இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்குள் திருமணமே நடக்கவில்லை. ஊரால் நடத்தி வைக்கப்பட்ட அதைத் திருமணம் என்று சொல்ல வாய்ப்புமில்லை.

பூரதத்தின் சொந்தப் பெரியப்பா மகன் தனசேகர். தனசேகருக்கும் கோவிந்தனின் அக்கா கோட்டீஸ்வரிக்கும் இடையே ஊரறிந்த காதல். கோட்டீஸ்வரியின் காதல் அவள் வீட்டிற்குத் தெரிந்து எதிர்ப்பு வந்தது. அதையும் தாண்டித் தனசேகரைத்தான் திருமணம் செய்வேன் என்று விடாப் பிடியாய் நின்றாள் கோட்டீஸ்வரி. ஆனால் தனசேகர் என்ன காரணத்திற்காகவோ கோட்டீஸ்வரியை ஏமாற்றி விட்டு வீட்டில் பார்த்த வேறொரு வசதியான பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். கோட்டீஸ்வரி, தான் ஏமாற்றப்பட்டதாக எண்ணி எண்ணிப் பித்துப் பிடித்து இன்றளவும் பைத்தியமாச் சுற்றித் திரிகிறாள்.

தனது அக்காவைக் காதலித்து ஏமாற்றிய தனசேகரை நேரடியாகப் பழிவாங்க முடியாத கோவிந்தன், பதிலுக்குப் பதில் தனசேகரின் சித்தப்பா மகளான பூரதத்தைக் காதலிப்பதாகச் சொல்லிக் கர்ப்பமாக்கி விட்டு ஊரை விட்டே ஓடிப் போனான்.

தனசேகருக்கு உடன்பிறந்த அக்காள் தங்கை என்று யாருமில்லை. அதனால் அவனது பங்காளித் தங்கையான பூரதத்தை ஏமாற்றத் திட்டமிட்டு அப்படிச் செய்தான். வாயும் வயிறுமாய்க் கிடந்த பூரதத்திற்கு நீதி வேண்டி ஊர்ப் பஞ்சாயத்துக் கூடியது.

எங்கிருந்தோ இழுத்து வரப்பட்டிருந்த கோவிந்தன் கோயில் கம்பத்தில் கட்டிப் போடப் பட்டிருந்தான்.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள்வரை கலந்து கொண்ட அன்றைய பஞ்சாயத்தில்,

“பூரதம் கழுத்துல தாலிக் கட்டி உம் பொஞ்சாதியா ஏத்துக்குறதத் தவிர உனக்கு வேற வழி கெடயாது. நீ என்னா சொல்ற?”
பஞ்சாயத்துத் தலைவர் அழுத்தமாக நிபந்தனை வைத்தார்.

“முடியவே முடியாது! ஒன்னாங்கிளாஸ் கூடப் படிக்காத அவ எங்க, பிஎஸ்சி படிச்ச நான் எங்க?” கோவிந்தன் இப்படிப் பதில் சொல்லவும்,

“என்னாடி இது பிஎஸ்சி மயிரெஸ்ஸி ன்னிக்குனு… படிச்ச படிப்புக்கு ஏத்த மாதிரி பண்ணியிருந்தா நீ சொல்றது வாஸ்தவம்தான். பண்றத பண்ணிபுட்டு பேச்சப் பாரு எஞ்சாண்ட அவன் வாயில வாக்க. இவனெல்லாம் படிச்சவனாம்! த்துப்பூ…” காரித் துப்பினாள் தனம்மா.

“இந்தம்மா, பொம்பளைங்க யாரும் பேசக் கூடாது! ஆம்பளைங்க நாங்க எதுக்கு கீறோம்?” பிச்சை, தனம்மாவைப் பார்த்து அதட்டினான்.
“பொம்பளைக்குப் பாதிப்புன்னு பஞ்சாயத்தக் கூட்டிப்புட்டு பொம்பளப் பேசக் கூடாதா? யார்ரா இவனுங்கொ, ஆம்பளைக்காடா பொறந்தீங்கொ எல்லாரும்?” கர்ணம்மாவை முந்திக் கொண்டு நறுக்கென்று கேட்டாள் பூமா.

“இந்தாப்பா… ஆளாளுக்குப் பேசி நேரத்த வீணடிக்காதீங்க. கட்றா தாலியன்னா கட்டித்தான் ஆகணும்!”

பஞ்சாயத்துத் தலைவர் உறுதியாகச் சொன்னார்.

“எங்கக்கா கோட்டீஸ்வரிய இவங்கண்ணங்காரன் ஏமாத்தினப்ப எங்க போயிருந்தீங்க எல்லாரும்?”

மீண்டும் துடுக்காய்க் கேட்டான் கோவிந்தன்.

“அது உங்க குடும்பப் பிரச்சினன்னு உங்களுக்குள்ளியே முடிச்சிகிட்டிங்க. அதுவுமில்லாம தனசேகருக்கும் இந்தப் பொண்ணுக்கும் என்னடா சம்பந்தம்? இவ அவன் கூடப் பொறந்த பொறுப்பு இல்லியே. உன் வூட்டுப் பிரச்சினையும் பஞ்சாயத்துக்கு வந்திருந்தா அதுக்கும் இப்புடித்தான் தீர்ப்பாகி இருக்கும்”

தனபால் சொன்னார்.

“அட உன்ன வாந்தி பேதி வந்து வாரிக்குணு போகொ! நீ முச்சுடும் இருக்க மாட்டடா! யாரு பண்ண தப்புக்கு யாரப் பழித் தீக்குறதுன்னு வெவஸ்த்த இல்லயா? போயியும் போயும் பாவப்பட்ட அந்தப் பொண்ணுதான் கெடச்சாளா உன் அரிப்புக்கு?”

ஜெயா, நெட்டி முறித்துச் சாபமிட்டாள் கோவிந்தனைப் பார்த்து.

“அதெல்லாம் தெரியாது. பதிலுக்குப் பதில் செரியா போச்சு. வேணும்னா நஷ்ட ஈடா எதாவது செஞ்சிட்றோம். இது செரிப்பட்டு வராது. பிரிச்சி வுட்ருங்க”

கோவிந்தனின் அப்பன் பெரியசாமி சொன்னான்.

“அட உம் புள்ள வளத்த அறிவுல நாய் ஓக்கோ. அந்தத் தருதலிக்கி நல்லது எட்த்துச் சொல்றான்னா, அவனவுட ஏதுங்கெட்ட பிளக்காத்தனமா பேசறாம்பாரு… இவனெல்லாம் பெரிய மனுஷனாம்! எதுக்கு எதுடா பதிலு? தாலி கட்டாம அந்தாண்ட போக வுட மாட்டோம்!”

காட்டா கிழவி கறாராகச் சொன்னதோடு பெரியசாமியை அடிக்க எழுந்து ஓடினாள்.

எல்லாரும் காட்டாவைத் தடுத்து ஆற அமரப் பேசி இறுதியாக ஒரு முடிவெடுத்தார்கள்.

ஊர்ப் பெரியவர்களும் உறவினர்களும் கோவிந்தனுக்கு என்னென்னவோ சொல்லி எப்படியோ தாலிகட்ட வைத்து விட்டார்கள். மாரியம்மன் கழுத்தில் கிடந்த வெறும் மஞ்சக் கிழங்கு-நூல் தாலியை எடுத்து ஊரார் முன்னிலையில் வேண்டா வெறுப்பாக மனதுக்குள் ஏதோ முனகிக்கொண்டே கட்டினான் கோவிந்தன்.

அன்று மாலை பஞ்சாயத்து முடிந்து ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பூரதத்தைக் கோவிந்தன் வீட்டில் விட்டு விட்டு, பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி அறிவுரைகள் சொல்லி விட்டுக் கிளம்பினர்.

இரவு ஏழு மணிவாக்கில் கோவிந்தனின் அம்மா கோவிந்தம்மா பூரதத்தைப் பார்த்து,

“இந்தத் தேவிடியா நம்மூட்டுல எப்படிப் பொழப்புப் பண்றான்னு நாம்பாக்குறன். ஓலு வெறி ஏறிபுட்டிருந்தா ஊர்மேல போக வேண்டியதானடி? ஒண்ணுல்லாதவளுக்கு எம்புள்ள கேட்குதா?”

“அத்த… ஏன் அத்த அப்புடி பேசுற?” பயத்துடன் கேட்டாள் பூரதம்.

“ஏழு ஊரு சந்தைய எறக்குடி எங்கூடய ன்னாளாம். அடிங்…! யாருடி அத்த? கொண்டய அறுத்துப் புடுவன் ஜாக்கிரத! அடிக் கேப்மாரி;சினாலு; நாசி; தட்டுவாணி. அத்த கித்தன்னு இன்னொருமுற சொன்ன, அவ்ளோதான். காதுல மூக்குல பொட்டுத் தங்கமில்லாம வேப்பஞ் சுப்புலு சொறுகினு கீற முண்ட, உனக்கு நான் அத்தியா?”

சொல்லிக் கொண்டே பூரத்தின் வாய்மீது நக்கென்று ஒரு குத்து விட்டாள்.

பூரதம் திகிலடைந்தாள். இதையெல்லாம் அவள் எதிர்பார்க்கவில்லை. அண்ணன் தம்பி உறவுகள் இல்லாத அநாதைப் பெண் அவள். வெகுளியான ஒரே அம்மா அவளுக்கு. கேட்க நாதியற்ற தனக்கு இப்படியொரு வாழ்க்கை அமைந்து விட்டதை எண்ணி கண் கலங்கினாள்.

ஒரு வருஷத்துல பொண்ணுக்குச் செய்ய வேண்டிய சீர் செனத்திய செய்து விடுவதாகப் பூரதத்தின் அம்மா சின்னக்கண்ணு பஞ்சாயத்தில் வாக்குக் கொடுத்திருந்தாள். எனவே வெறும் பழைய துணிமணியோடு புகுந்த வீட்டுக்குப் போயிருந்தாள் பூரதம்.

“அவ மூஞ்சியப் பாரு. காசாரமாட்டம்‌ கீது. உள்ள கிள்ள காலெடுத்து வச்ச அவ்ளோதான். தாவாரத்துல வெறுந்தரையிலயே படு. கதவு இல்லாத குட்ச்சகாரிக்கு மெத்தை வூடு கேக்குதா?”

கையிலிருந்த சூரிக்கத்தியைக் காண்பித்து மிரட்டினான் கோவிந்தனின் அப்பா பெரியசாமி.

கோவிந்தனின் நான்கு தம்பிகளும் ஒரு தங்கையும் அவரவர் பங்கிற்குப் பூரதத்தைப் பத்துமணிவரைத் திட்டிக் கொண்டிருந்தார்கள்.

அதிலும், கோவிந்தனின் தங்கை உமா, பூரத்தின் மீது காரி எச்சிலைத் துப்பினாள்.

அந்த வீட்டில் பைத்தியமாய் இருக்கும் கோவிந்தனின் அக்காள் கோட்டீஸ்வரி மட்டும் பூரதம் பக்கத்தில் உட்கார்ந்து பரிதாபமாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். கோவிந்தன் அன்றிரவே ஊரை விட்டு மெட்ராஸில் உள்ள தன் கல்லூரி நண்பர்களிடம் கொஞ்சம் நாள்கள் அடைக்கலம் இருக்க ரயிலேறினான்.

அன்றிரவு மட்டுமல்ல அடுத்தடுத்து நாள்களில் ஒரு வாய் சோறு கூடப் போடாமல் பூரதத்தைத் திட்டிக் கொண்டும் மிரட்டிக் கொண்டுமே இருந்தனர். மூன்றுநாள் பார்த்தாள். பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவளாகவே நான்கு வீடுகள் தள்ளி இருக்கும் தனது குடிசைக்கு வந்து சேர்ந்தாள்.

பொழுது இன்னும் புலரவே இல்லை. ஐயோ குய்யோ என்று உறவினர்கள் அழும் சத்தம் அப்போதுதான் தமிழுக்குக் கேட்டது. தமிழ் வீடும் அப்பன் கோவிந்தன் வீடும் ஒரே தெருவில்தான் இருக்கின்றன. இருவரின் வீடுகளுக்கும் இடையே லட்சுமி வீடு, விஜயன் வீடு, மாசிலாமணி வீடு இவைதாம் இடைவெளி. எதையோ யோசித்தவனாய்க் கட்டிலிலேயே படுத்திருந்தான். “யாரும் பார்க்காத இந்த இருட்டிலேயே போய் அப்பனைப் பார்த்து விடலாமா?” உள்மனம் கேட்டது.

“ச்சே ச்சே… அவன் ஒருநாளும் உன்ன மகன் என்று எங்கேயும் சொன்னதில்ல. அவன் எப்படி உனக்கு அப்பன்னாவான்?”

மீண்டும் அதே உள்மனம் பதிலையும் சொன்னது.

வெளியே வந்து வாசலில் நின்றான். நாய்கள் ஓலமிட்டு அழுதன. காசிவேலும் அவனது கூட்டாளிகளும் பறைகளை எடுத்துக் கொண்டு இழவு வீட்டை நோக்கிப் போனார்கள்.

சர்ச்சின் மணியோசை விடியற்காலை நான்கு மணி என்று அறிவித்தது. பூரதமும் அவளது இளைய மகனும் கோயமுத்தூர் போயிருந்ததால் தமிழ் மட்டும் வீட்டில் இருந்தான்.

முகத்தைக் கழுவிக் கொண்டு நாற்காலியில் அமர்ந்து எந்த வகையிலாவது அழ முடியுமா என்றும் குறைந்தபட்சம் சோகமாகவாவது இருக்க முடியுமா என்றும் முயற்சித்துப் பார்த்தான்.

“உருகி உருகிப் பாத்த சித்தப்பன் செத்துப் போன அன்னைக்கே ஒங்கண்ணுல ஒரு சொட்டுத் தண்ணி வரலயே, உனக்கெல்லாம் என்னா மனுசுடா?” தமிழைத் திட்டும் போதெல்லாம் இந்த வார்த்தையைத் தவறாமல் சொல்லித் திட்டுவாள் பூரதம். அவனைக் கல் நெஞ்சக்காரன் என்றும் சொல்வதுண்டு. பூரதத்தின் தங்கை பாரதியின் கணவர் பாபு. அவர்தான் தமிழை வளர்த்தவர்; துணிமணி எடுத்துத் தந்தவர்; நல்லது கெட்டது பார்த்தவர். அவர் இறப்புக்கே அவனுக்கு அழ வரவில்லை என்று இப்போதுவரை அவன்மீது குற்றச்சாட்டு உண்டு.

பல்லைத் துலக்கிக் கொண்டே யோசனையில் ஆழ்ந்தான். கடைசியாக அப்பாவை எப்போது பார்த்தோம் என்று. ஓராண்டுக்கு முன்பு, ஓர் இலக்கியக் கூட்டத்தில் பார்த்த ஞாபகம். தமிழை, அவர் எப்போதும் நேருக்கு நேர் பார்க்க விரும்புவதில்லை. சிறு வயதில் எப்படியோ, எப்போது வளர்ந்து வாலிபனானானோ அப்போது முதல் தமிழை எதிர்கொள்ளக் கோவிந்தனுக்குத் துணிச்சல் இருந்ததே இல்லை. அவனைக் கண்ட‌ மாத்திரத்தில் முகத்தை வெறுப்பாக வைத்துக் கொள்வான். அல்லது விலகி வேறொரு திசையில் போவான். பொது இடங்களில் தற்செயலாக எப்போதாவது பார்த்துக் கொள்வதோடு சரி. இதுவரை மொத்தமாக எத்தனை முறை அப்படிச் சந்தித்தார்கள் என்பதை எண்ணிச் சொல்லி விடலாம். வாழ்நாள் முழுவதும் இப்படியே பாதைகளை மாற்றியே தப்பித்து விட்டான் கோவிந்தன்.

கோவிந்தனின் தம்பி சூரப்பன். தமிழ் பன்னிரண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது ஒருநாள், சாலையில் வழிமறித்து

“டேய் நில்றா!”

சத்தம் போட்டான்.

தமிழ் கேட்டும் கேட்காதவன் போல் அமைதியாக நடந்து போய்க் கொண்டிருந்தான்.

“ங்கோத்தா உன்னதான்டா நில்றா! எங்கண்ணன் பசங்க கூடப் பேசுறியாமே? இனிமேல் அவனுங்கக் கூடப் பேசுறதா கேள்விப்பட்டன் தொலச்சிப் புடுவன்”

என்று சொல்லி விட்டுத் துள்ளினாள்.

துடிப்பான வயது; இளம் ரத்தம். சைக்கிளில் நின்றுகொண்டிருந்த சூரப்பனை சைக்கிளோடு எட்டி உதைத்தான். கீழே விழுந்ததில் தலையில் ஐந்து தையல் போட வேண்டியதாய்ப் போனது சூரப்பனுக்கு.

தமிழுக்கு முதல்முறை கோவிந்தனைப் பார்த்த ஞாபகம் சரியாக நினைவில் இல்லை. ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும்போது அவனது பெரியம்மா சாவித்திரி வீட்டில் தமிழைப் பார்க்கக் கோவிந்தன் ஒருநாள் போனானாம். தமிழைத் தூக்கிக் கொஞ்சினானாம். அதுதான் முதலும் கடைசியுமான சந்திப்பாம். ஒடுகத்தூரில் உள்ள சாவித்திரி அடிக்கடி இதை மட்டும் சொல்வாள்.

ஓராண்டுக்கு முன்பு ஒருநாள், மூன்றாம் தாரமாகத் தன்னுடன் வாழ்ந்து வரும் எஸ்தரைத் தன் பைக்கில் உட்கார வைத்துப் போனான் கோவிந்தன். தமிழைப் பார்த்ததும் பதறியவன் சாலையில் வண்டியைத் தாறுமாறாகச் செலுத்தி விழவிருந்தான். தமிழ் வழக்கம்போல் அவனைக் கண்டுகொள்ளவில்லை. தமிழ் மறையும்வரை அவனையே திரும்பித் திரும்பிப் பார்த்து வண்டி ஓட்டினான். அவனுக்குப் பின்னால் அமர்ந்திருந்த எஸ்தர் தன் முகத்தை முந்தானையால் மூடிக் கொண்டாள்.

இப்படியான யோசனைக்கிடையே பொழுது விடிந்தது. பந்தல் போடவும் மற்ற வேலைகளைச் செய்யவும் ஆள்கள் கூடினார்கள். கட்சிக்காரர்களும் முக்கியப் பிரமுகர்களும் வந்தவண்ணம் இருந்தனர்.

சுகாதாரத் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த கோவிந்தன், அரசியலில் எம்.எல்.ஏ சீட் கிடைத்ததும் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டான். ஆனால் அந்தத் தேர்தலில் கோவிந்தன் வெற்றிபெறவில்லை. பிறகு, ஆளும் கட்சியின் ஏதோ ஒரு பிரிவின் மாநிலத் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டான்.

அவ்வப்போது வாசலில் நின்று நடப்பதையெல்லாம் நோட்டமிட்டான் தமிழ். குளித்து விட்டு முதலில் சாப்பிட வேண்டும். மற்றதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று டவலைத் தேடியபடி கேஸ் அடுப்பில் ஊற்றிவைத்திருந்த இட்லி குக்கரின் விசில் சத்தம் கேட்கவே அதை இறக்கி வைத்து விட்டுக் குளிக்கப் போனான்.

தமிழ், அப்பாவை அவனது சிறு வயதில் தேடியது உண்மைதான். ஆனால் இப்போது அப்படி ஓர் உறவு இருப்பதையே மறந்து போயிருந்தான். தேடித் தேடிக் கிடைக்காததால் மரத்துப் போயிருந்தான். அப்படி அவன் தேடிய ஒவ்வொரு முறையும் தூரமாகப் போய்க் கொண்டே இருந்து விட்டான் கோவிந்தன். கைக்கு எட்டாத தூரம்வரை; அவனது கால்கள் ஓயும் தூரம்வரை; இல்லை. நினைவுகள் வெறுக்கும் தூரம் சென்று விட்டிருந்தான்.

சுடச் சுட இட்லியும் புதினா சட்னியும் தட்டில் போட்டு, இட்லிப் பொடிக்கு இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டுக் கொண்டே தனது பால்யத்தை நினைத்துப் பார்த்தான். அதில் வெறுமையும் வறுமையும் அன்றி வேறெதுவுமில்லை. அப்பாவின் பாசத்திற்காக ஏங்கியதை விட உணவுக்காக ஏங்கிய நாள்கள்தான் அதிகமாய் இருந்தன. வழக்கத்தைவிட இரண்டு இட்லிகளைக் கூடுதலாய்த் தின்ன வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு.

ஏழாவது படிக்கும்போது ஒருநாள், தமிழுக்கு உடல்நிலை சரியில்லாததால் கோவிந்தன் பணியாற்றும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள் பூரதம். தமிழ் எதிர்பார்க்கவில்லை கோவிந்தன்தான் ஊசியும் போட்டு மருந்து மாத்திரைகளைக் கொடுப்பானென்று. சேகரின் ஐந்து விரல்கள் பதிந்த கன்னம் நிழலாடியதால் எதையும் பேசவில்லை. பேசும் நிலையில் உடலும் ஒத்துழைக்கவில்லை. அன்றுதான் முதன்முதலாகத் தமிழைத் தொட்டான், ஒரு நோயாளியாக. அதுமட்டுமின்றி அவ்வளவு அருகில் அவனைப் பார்த்ததும் அதுதான் முதல்முறை. அப்பன் ஊசி போட்ட தனது இடக் கையைத் தடவிக் கொடுத்துக் கொண்டே அன்றைய நாளிதழை வாசிக்கலானான். எந்தச் செய்தியும் மனதில் நிற்கவில்லை. கோவிந்தன் இறந்து போன செய்தியே வந்து வந்து போனது.

பதினொன்றாம் வகுப்புப் படிக்கும்போது பேரன்ட்ஸ் மீட்டிங் என்று சொல்லி, அப்பா அம்மா இரண்டு பேரும் வர வேண்டுமெனத் தலைமை ஆசிரியர் கோபாலன் கண்டிப்போட்டு சொன்னபோது, வேறு வழியின்றி “அப்பா செத்துட்டாரு, அம்மா மட்டும்தான்” என்று முதல்முறையாகப் பொய் சொன்னது நினைவுக்கு வந்தது. உடன் படித்த ஊரைச் சேர்ந்த பிள்ளைகள் அவனது அப்பா சாகவில்லை என்று தலைமை ஆசிரியரிடம் சொல்லி விட்டார்கள். விசாரித்த பிறகுதான் தெரிந்தது. கோவிந்தன் தலைமை ஆசிரியரின் நெருங்கிய நண்பன் என்று.

அப்பா இல்லை என்றால் ஏன் இல்லை என்று கேட்பார்கள். அதற்குப் பதில் சொன்னால் எங்கே போனார் என்று கேட்பார்கள். அம்மாவை ஏமாற்றிவிட்டு ஓடிப் போனார் என்றால், எதனால் என்று கேட்பார்கள். இப்படி நீளும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்வது ஒருபக்கம் என்றால், கதையைக் கேட்டுவிட்டுக் கடைசியில் தமிழைப் பரிதாபமாகப் பார்ப்பார்கள். அதனாலேயே அப்படிப் பொய்ச் சொல்லி விட்டான்.

“என் ஃப்ரெண்ட் செத்துட்டான்னு எங்கிட்டியே பொய் சொல்றியா? ராஸ்கல்…. வெளியே போடா!”

அடித்து விரட்டிய தலைமையாசிரியர் கூட அவன் தரப்பிலிருந்த நியாயத்தைப் புரிந்து கொள்ள முயற்சிக்கவேயில்லை. ஆனால், அந்தப் பொய் அவனுக்கு வசதியாக இருந்தது. பள்ளிக்கூடம், கல்லூரி, பழகும் நண்பர்கள் என்று, யார் அப்பாகுறித்துக் கேட்டாலும் அதே பொய்யைத் தயங்காமல் இன்றளவும் சொல்கிறான் தமிழ். திரும்பத் திரும்பச் சொல்வதால் பொய் ஒன்று உண்மையாகி விடுகிறது என்பது எவ்வளவு பெரிய உண்மை!. அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இனிமேல் பொய் சொல்லத் தேவை இருக்காது. தனது பொய் மெய்யான நிம்மதி மனதின் ஓர் ஓரத்தில் இருக்கவே செய்தது அவனுக்கு.

மூன்றாவது இட்லியைச் சாப்பிடத் தொடங்கினான். கேட்டை யாரோ சத்தமாகத் திறந்து உள்ளே வருவது போல் இருந்தது. எட்டிப் பார்த்தான்.

“என்னடா, பெரியப்பா செத்துட்டு கீறாரு, நீ பாட்டுக்கு எங்கியோ போறவனாட்டும் ரெடியாயிட்டு சாவகாசமா சாப்டுனு கீற?”

சோகமும் ஆத்திரமும் கலந்த குரலில் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான் பாவேந்தன்.

கோவிந்தனின் தம்பி மகன்தான் அவன்.‌ அப்பா சொந்தத்தில் தமிழோடு உரிமையாகப் பேசும் ஒரே நபர் பாவேந்தன் மட்டும்தான். என்ன சொல்வதென்று தெரியாமல் அவனையும் சாப்பிடச் சொன்னான். அவன் வந்த வேகத்தில் கோபித்துக் கொண்டு கிளம்பிப்‌ போய் விட்டான்.
அந்த ஊரில் உள்ள பெரியவர்களுக்குத் தெரியும். கோவிந்தன்தான் தமிழின் அப்பனென்று. தமிழ் தலைமுறையைச் சேர்ந்த பலருக்கும் இன்றளவும் தெரியாது. தமிழும் யாரிடமும் சொன்னதில்லை. கோவிந்தனும் சொல்லிக் கொண்டதில்லை.

வெளியூர்களில் தன் ஊர்ப் பெயரைச் சொல்லும்போது யாராவது தமிழிடம் கோவிந்தன் குறித்துக் கேட்டால் “தெரியுமே அந்த அங்கிள் எங்க தெருதான்” என்று கொஞ்சம் கூடத் தயக்கமே இல்லாமல் சொல்வான். ஓரிடத்தில் கூட அவர் தனது அப்பா என்று சொன்னதே இல்லை.

கோவிந்தனின் இரண்டாம் மனைவி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தபோது, அரசாங்கத்தின் இலவசத் தொகுப்பு வீடுகள் பலருக்கும் கட்டித் தரப்பட்டன. ஒழுகும் குடிசையிலிருந்த பூரதத்திற்குப் போனால் போகிறது என்று கூட இலவசத் தொகுப்பு வீட்டை ஒதுக்கவில்லை. பி.டி.ஓ அலுவலகத்திலிருந்து பூரதம் பெயருக்கு வந்த தொகுப்பு வீட்டைத் தன் மைத்துனர் பெயருக்கு மாற்றிக் கொடுத்தான் கோவிந்தன்.

குடிசை வீடுகளுக்கு இலவச மின் இணைப்புகள் தரப்பட்ட‌போதும் பூரதம் வீட்டைத் தவிர்த்து மற்ற அனைத்துக் குடிசைகளுக்கும் தந்தான். அப்படித்தான் குடிநீர்க் குழாய் இணைப்பும் அவர்களுக்கு மறுக்கப்பட்டது.

ஊரில் சொல்லிக் கொள்ளும்படியாகப் பூரதம் இப்போது பொருளாதாரத் தன்னிறைவு பெற்ற பூரிப்பில் இருக்கிறாள். கோவிந்தனின் வீட்டைவிட இரண்டு மடங்கு பெரிதான மாடி வீட்டைக் கட்டி விட்டாள். ஊரில் அவளது பிள்ளைகள்போல் இருக்க வேண்டும் என்று பிறர் சொல்லும் அளவுக்குத் தன் பிள்ளைகளை ஆளாக்கியிருக்கிறாள்.

முந்தைய நாள் இரவு, சத்யஜித் ராயின் ‘பூட்டிய பணப் பெட்டி’ கதையை வாசித்துப் பாதியிலேயே விட்டிருந்தான் தமிழ். அதைத் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்று தோன்றியதால் சாய்வு நாற்காலியில் அமர்ந்து வாசிக்கத் தொடங்கினான். அந்தக் கதையில் வரும் மஜூம்தாரும், மஜூம்தாரின் பழைய மாளிகையும், அந்தக் குர்குடியா கிராமமும், பணப் பெட்டிகள் குறித்தான மர்மங்களும் அவனை என்னமோ செய்தது. வாசிப்பின் இடையே கேட்கும் பறைச் சத்தம், ரோஜா, சண்டு மல்லி மாலைகள், ஊதுவத்தி வாசமெல்லாம் அவனையும் அறியாமல் மீண்டும் கோவிந்தன் நினைவை ஆட்கொண்டது.

“ஒரு பெண், தன் கணவனையும் பெற்ற குழந்தைகளையும் தவிக்க விட்டு வேறொரு ஆணோடு ஓடிப் போகிறாள் என்றால் தவிர்க்கவே முடியாத ஆயிரம் காரணங்கள் அவளுக்குத் தேவைப்படுகின்றன. ஆனால் ஒரு ஆண், தன் மனைவியையும் தன் குழந்தைகளையும் அப்படித் தவிக்க விட்டு ஓடிப் போக, தவிர்க்க வேண்டும் என்கிற ஒற்றைக் காரணம் போதுமானதாக இருக்கிறது.

அம்மாவும் யாருடனாவது ஓடிப் போயிருந்தால், யாரையாவது இரண்டாம் திருமணம் செய்து கொண்டிருந்தால் என்னவாகி இருக்கும்? மூன்றாவது மனைவியுடன் வாழ்ந்துகொண்டிருந்த கோவிந்தனுக்கு உள்ள மரியாதை, இரண்டாம் திருமணம் செய்து கொண்டிருந்தால் அம்மாவுக்குக் கிடைத்திருக்குமா? தன் அப்பன் குறித்தும் அம்மா குறித்தும் இப்படி ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருந்தான்.

“உங்கம்மா எங்கப்பா காணோம், அதுக்குத் தகவல் சொன்னியா? இன்னிக்கு உங்கப்பனுக்குத் தாலியறுக்கணுமே! அதான் கூப்ட்டுனு போக வந்தோம்” சடங்கு செய்விக்கும் வண்ணாத்தியும் சில பெண்களும் வந்து தமிழிடம் தயக்கத்துடன் கேட்டார்கள்.

“ஊருக்குப் போயிருக்காங்க, அவங்க கழுத்துல தாலியே இல்ல. இருந்தாலும் வரமாட்டாங்க”

அவர்கள் ஒன்றும் பேசாமல் கைகளைப் பிசைந்தவாறு கிளம்பிப் போனார்கள்.

இப்படியொரு நாள் வரும் என்று தெரிந்தேதான், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கிருத்துவ மதத்திற்கு மாறியிருந்தாள் பூரதம். அந்த மதத்தின்படி தாலி அணியக் கூடாது. தாலி அறுக்கவும் முடியாது. பூரதத்தால் கோவிந்தனுக்கு எதிராக இதைத்தான் செய்ய முடிந்தது.

கோவிந்தனின் இரண்டாம் மனைவி, பஞ்சாயத்துத் தலைவராக இருந்தபோது நோய்வாய்ப்பட்டு இறந்து போனதால் இப்போது தாலி அறுக்க மனைவியற்றவனாய்க் கிடத்தப்பட்டிருந்தான். தாலி கட்டாமல் மூன்றாம் தாரமாகக் கோவிந்தனோடு வாழ்ந்து வரும் எஸ்தருக்கு அந்த வாய்ப்பு இல்லாததால் ஜனங்களோடு நின்று கண் கசக்கிக் கொண்டிருந்தாள்.

இயல்பான நாளாகவே இந்த நாளும் அவனைக் கடந்து போக வேண்டும் என்று மனதில் உறுதியேற்று, வழக்கமான தன் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினான். காலையில் ஊற்றிய இட்லியோடு இரண்டு ஆம்லெட் போட்டு மதியம் சாப்பிட்டு அமைதியாகப் படுத்திருந்தான்.

கோயம்புத்தூர் போயிருந்த தமிழின் தம்பியிடமிருந்து கால் வந்தது. செத்துப் போயிருக்கும் அப்பனைப் பற்றிக் கேள்விப்பட்டு அதுகுறித்துதான் எதையோ விசாரிக்கப் போகிறான் என்ற எண்ணத்தில் ஃபோனை எடுத்துப் பேசினான். ஆனால் அவன் கோயம்புத்தூரிலிருந்து வர இன்னும் இரண்டு நாள்கள் ஆகும் என்பதை மட்டும் சொல்லி விட்டு ஃபோனை வைத்தான்.

“எப்படி உன் விருப்பமின்றி நீயோர் இந்துவானாயோ, எப்படி உன் விருப்பமின்றித் தாழ்த்தப்பட்டாயோ, அப்படித்தான் கோவிந்தனுக்கு மகனும் ஆனாய். இது ஒரு விபத்துதான்”

தமிழின் உள்மனம் ஆழமாய்ச் சொல்லிச் சமாதானப்படுத்தியது.

இப்படியே மாலைவரை யோசித்துக் கொண்டே இருந்தான். பிணத்தைத் தூக்கும் முன் அடிக்கும் கடைசிப் பறைச் சத்தம் கேட்டது. பட்டாசும் வாணவேடிக்கைச் சத்தங்களும் விண்ணைப் பிளந்தன. வீட்டு மாடிமீது ஏறிப் பார்த்தான். கோவிந்தனின் பாடை தெருவைக் கடந்து சர்ச் இருக்கும் சாலை வழியாகப் போய்க்கொண்டிருந்தது.

“எங்களிடமுள்ள கோவிந்தனுக்கான மன்னிப்பை, எங்கள் அனுமதியின்றி நீயேன் தந்தாய் ஏசுவே?”

தலையைக் கவிழ்ந்து சர்ச்சின் கோபுரத்தில் கை விரித்து நின்று கொண்டிருந்த சிலையைப் பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்தான் தமிழ்.


Art : La Coloriste

பாரத் தமிழ்
பாரத் தமிழ்

எழுத்தாளர் பாரத் தமிழ், வேலூர் மாவட்டம், கெம்மங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றாலும், நிலவியல் சார்ந்த அடையாளத்தை மட்டுமன்றி அறமற்ற எந்த அடையாளத்தையும் விரும்பாதவர். குழந்தைகள் நலன் சார்ந்து இயங்கி வரும் இவர், ஆபத்தில் சிக்கிய நூற்றுக்கணக்கான குழந்தைகளை மீட்டிருக்கிறார். சிறார் சிறையில் பணிசெய்த அனுபவம் பெற்றவர். வரலாற்று ஆய்வாளர், ஓவியர், சமூகச் செயற்பாட்டாளர் எனப் பன்முகம் கொண்டவர். ‘நிலமற்றவனை நனைக்கும் மழை’ எனும் கவிதைத் தொகுப்பையும் ‘டாஃபி’ எனும் சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார்.

Share :

6 responses to “பூரதம்”

  1. Jaya Navi
    November 2, 2025

    அருமை தம்பி

    Reply
    1. பாரத் தமிழ்
      பாரத் தமிழ்
      November 2, 2025

      அன்பும் நன்றியும் அக்கா

      Reply
  2. madurai veeran k
    November 5, 2025

    இந்த சமூகத்தில் ஒரு குழந்தை பிறப்பதற்கு மட்டும் காரணமாக இருந்து அதை தவிர அந்தக் குழந்தைக்கு வேறு எந்த வகையிலும் பயனற்று, அக்குழந்தையைபிள்ளையாக கூட ஏற்றுக் கொள்ளாமல் இருப்பவனை அவனுடைய இறப்பில் மட்டும் அப்பன் என்று கூறிக்கொள்ளும் இந்த சமூகத்தை நோக்கி நியாயமாக கேள்வி கேட்கும் நோக்கில் சுவாரஸ்யமான எழுத்து நடையுடனும், சுவாரசியமான கதை சொல்லல் மூலமும் மிகவும் சிறப்பாக இருந்தது அண்ணா இச்சிறுகதை. தொடர்ந்து இதுபோன்ற தரமான சிறுகதைகளை எழுதுங்கள் அண்ணா படிக்க நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்.

    Reply
    1. பாரத் தமிழ்
      பாரத் தமிழ்
      November 6, 2025

      அன்பும் நன்றியும் தம்பி.

      Reply
  3. Madurai veeran k
    November 5, 2025

    சிறுகதை மிக சிறப்பாக இருந்தது

    Reply
  4. பாரத் தமிழ்
    பாரத் தமிழ்
    November 5, 2025

    ஒரு குழந்தை பிறக்க காரணமாக மட்டும் இருந்துவிட்டு மற்றபடி அந்த குழந்தைக்கு வேறு எந்த வகையிலும் பயனற்று இருப்பவனை (பிள்ளையாகவே ஏற்றுக்கொள்ள மறுக்கும்) இறந்த பிறகு மட்டும் அப்பன் என்ற அடையாளத்தை அந்த பிள்ளையிடம் திணிக்க நினைக்கும் இந்த சமூகத்தை நோக்கிய பிள்ளைகளின் சார்பாக நியாயமாக பல கேள்விகளை கேட்டு இருக்கிறது இச்சிறுகதை. சுவாரசியமான எழுத்து நடையுடனும், சுவாரஸ்யமான கதை சொல்லலுடனும் இச்சிறுகதை இருந்தது கூடுதல் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற தரமான படைப்புகளை உருவாக்குங்கள் படிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் அண்ணா.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    December 2, 2025
  • பொப்பி என்பது புனைபெயர்

    பொப்பி என்பது புனைபெயர்

    December 2, 2025
  • அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    December 2, 2025
  • வண்ணார் : வரலாறும் வலிகளும்

    வண்ணார் : வரலாறும் வலிகளும்

    December 2, 2025
  • பொலி எருமை

    பொலி எருமை

    December 2, 2025

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (8)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (9)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இலக்கியம் (12)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (67)
  • கட்டுரை (1)
  • கதை (3)
  • கதை (2)
  • கவிதை (49)
  • கவிதை (11)
  • குறுங்கதை (5)
  • சிறார் (4)
  • சிறார் கதை (10)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (30)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (3)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (8)
  • நாவலின் ஒரு பகுதி (7)
  • நினைவேடு (1)
  • நுண்கதை (1)
  • நூல் அறிமுகம் (11)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (24)
  • வாழ்வியல் (2)

Archives

  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    December 2, 2025
  • பொப்பி என்பது புனைபெயர்

    பொப்பி என்பது புனைபெயர்

    December 2, 2025
  • அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    December 2, 2025

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (8)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (9)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இலக்கியம் (12)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (67)
  • கட்டுரை (1)
  • கதை (3)
  • கதை (2)
  • கவிதை (49)
  • கவிதை (11)
  • குறுங்கதை (5)
  • சிறார் (4)
  • சிறார் கதை (10)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (30)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (3)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (8)
  • நாவலின் ஒரு பகுதி (7)
  • நினைவேடு (1)
  • நுண்கதை (1)
  • நூல் அறிமுகம் (11)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (24)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top