Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

காற்று வெளியில் மிதக்கும் கவிதை வரிகள்

ந. முருகேசபாண்டியன்
ந. முருகேசபாண்டியன்
October 1, 2025
காற்று வெளியில் மிதக்கும் கவிதை வரிகள்

கவிதை என்பது அழகும் உணர்வும் பொருளும்கொண்ட ஒரு கலை. உள்ளத்துள்ளது: உணர்வாய் வடிவது; அறிவுக்கு விருந்தாய், ஒரு செய்திக்குத் தூதாய் ஒரு சாதனமென வருவது. வார்த்தைகளும் மவுனங்களும் கரைந்து உருகி நிற்கும் ஊடகமாய் இருப்பது. நேற்றிலும் இன்றிலும் கால் பதித்து இன்றுக்கும் நாளைக்கும் கை பரப்பி நிற்பது, என்னைப் பற்றியும் உன்னைப் பற்றியும் என்னோடும் உன்னோடும் பேசுவது. கவிதை, தானாகத் தோன்றும் சுயம்பு அல்ல. அதனை உருவாக்க அறிவும் உணர்வும் வேண்டும்; உழைப்பும் முயற்சியும் வேண்டும்; ஒரு தேவையும் நோக்கமும் வேண்டும்.

பேராசிரியர் தி.சு.நடராசன்

கவிஞர் சீனு ராமசாமி மனதுக்குள் எப்பொழுதும் கவித்துவம் ததும்பியுள்ளது என்பதன் வெளிப்பாடுதான் அவர் இயக்கிய தென் மேற்குப் பருவக் காற்று திரைப்படத்தின் தலைப்பு. கடுங்கோடை காலம் முடிந்து, அம்மியும் பறக்கின்ற ஆடிக் காற்று வீசுகின்ற மதுரை வட்டாரக் கிராமத்தைச் சேர்ந்த எனக்குத் தென் மேற்குப் பருவக் காற்று, அடுத்து வரவிருக்கிற கார் காலத்தின் முன்னறிவிப்பு; ஒருவகையில் கொண்டாட்டம். அந்தத் திரைப்படத்தின் தலைப்புக்குப் பின்னர் ஆயிரமாயிரம் சேதிகள் பொதிந்துள்ளன, கவித்துவமான மொழியில். சீனுவுக்குள் இயல்பாகப் பொதிந்திருக்கிற கவிதைசொல்லி மனம்தான் கவிதைத் தளத்தில் தொடர்ந்து இயங்கிடத் தூண்டுதலாக இருக்கிறது; கவிஞராக்கியுள்ளது.

எப்பொழுது நேரில் சந்தித்தாலும் தோழமையுடன் பேசுகின்ற கவிஞர் சீனு ராமசாமி, அண்மையில் அவருடைய கவிதைத் தொகுப்புகளில் இருந்து எனக்குப் பிடித்தமான கவிதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்திடுமாறு கேட்டபோது மறுக்க இயலவில்லை. ஒருவிதமான தயக்கத்துடன் அவர் எழுதிய ஒட்டுமொத்த கவிதைகளையும் வாசித்து முடித்தபோது, உற்சாகமாக இருந்தது. கவிஞர் சீனு கவிதை மொழியின் வழியாகக் கண்டறிந்த சமகாலம் கவிதைகளில் அழுத்தமாகப் பதிவாகியிருப்பதைக் கண்டறிந்திட முடிந்தது. அவருடைய கவித்துவமான உலகு எனக்கு நெருக்கமாக இருக்கிறது.

பொதுவாகக் கவிதைத் தொகுப்பு உருவாக்குவதும் தொகுப்புப் பற்றி விமர்சனம் அல்லது தொகுப்புரை எழுதுவது எளிமையானதல்ல. ஒவ்வொரு கவிஞரும் ஏதோவொரு புனைவில் கட்டமைத்திடும் கவிதை வரிகள், தனித்துவமான வாசிப்பைக் கோருகின்றன. வெவ்வெறு காலகட்டங்களில் மாறுபட்ட அனுபவங்களுடன் கவிஞர் எழுதிய ஐந்தாறு தொகுப்புகளில் இருந்து ஒரு தொகுப்பை உருவாக்கும்போது அதீதக் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் கவிதை வரிகள் வாசிப்பில் அழைத்துச் சென்றிடும் உலகு விநோதமானது. கவித்துவம் தோய்ந்த சொற்களின் புனைவில் நினைவுகள் காற்று வெளியெங்கும் மிதந்திடும் வல்லமையுடையன. ஒப்பீட்டளவில் கவிதைகள் மனதுக்கு நெருக்கமாக இருப்பினும் கவிதை பற்றிய பேச்சுகள், சிக்கலானவை. பத்து வயதில் புனைகதைகளை ஆர்வத்துடன் வாசித்த எனக்குக் கவிதை அந்நியமாகத் தெரிந்தது நினைவுக்கு வருகிறது. பள்ளிப் பருவத்தில் பாரதிதாசன், கண்ணதாசன் போன்ற கவிஞர்களின் கவிதைகளை வாசித்ததும் பின்னர் மு.மேத்தா, நா.காமராசன் எழுதிய கவிதைகள் மீது ஈடுபாடு கொண்டதும் தனிக்கதை. அடுத்த நிலையில் கலாப்ரியா, பசுவய்யா, நகுலன், பிரமிள், மாயாகோவ்ஸ்கி, பாப்லோ நெருடா, ஆக்டோவியா பாஸ் போன்ற கவிஞர்கள் எழுதிய கவிதைகள் மீது பிடித்த பித்து, இப்பவும் தொடர்கின்றது. இலக்கிய உலகிற்குள் நுழைகின்றவர்கள் எல்லோரும் கவிதை எழுதுவது இயல்பாக நடந்தேறுகிறது. அழகை ரசிக்கிற ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஒருவிகிதத்தில் கவிஞர் பொதிந்திருக்கிறார். ‘‘அழகான மனைவி வாய்க்கப்பெற்ற ஒவ்வொருவரும் கவிஞன்தான்” என்று நடிகர் சிவாஜி கணேசன், ‘படித்தால் மட்டும் போதுமா?’ திரைப்படத்தில் பேசிய வசனம், சாதாரணமானது அல்ல. யதார்த்த வாழ்க்கையில் காதல் வயப்படுவதும் கவிதை எழுதுவதும் ஒன்றுதான். சரி, இருக்கட்டும்.

கவிஞர் சீனு எழுதியுள்ள ஆறு கவிதைத் தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு நூல் என்பது ஒருவகையில் பண்டையத் தமிழிலக்கிய மரபின் தொடர்ச்சிதான். தமிழ் மொழிக்குச் செம்மொழித் தகுதி கிடைத்திட அடிப்படையாக விளங்குகின்ற சங்க இலக்கியப் பாடல்களான எட்டுத்தொகையும் பத்துப் பாட்டும் தொகை நூல்கள்தான். நக்கீரர், கணியன் பூங்குன்றன், ஔவை, வெள்ளிவீதியார், கபிலர், நப்பூதனார் போன்ற கவிஞர்கள் எழுதிய பாடல்கள் தொகுப்பாளர்களின் முயற்சியினால்தான் இன்றளவும் காலங்கடந்து நிலைத்திருக்கின்றன: சங்கக் கவிதைகளை இன்றைக்கும் வாசிக்க முடிகிற பின்புலத்தைத் தொகுப்பாளர்கள்தான் உருவாக்கியுள்ளனர். அதேவேளையில் அந்தக் கவிஞர்கள் எழுதிய ஏனைய உன்னதமான கவிதைகள் எங்கே? என்ற கேள்வி தோன்றுகின்றது. அவை நிச்சயம் காலவெள்ளத்தில் கரைந்து போய்விட்டன.

தமிழ், பக்தியின் மொழி என்று போற்றப்படுவதற்குக் காரணமான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமும் தேவாரமும் பல கவிஞர்கள் எழுதிய பாடல்களின் தொகுப்புகள்தான். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அச்சியந்திரம் அறிமுகமானபோது பல்வேறுபட்ட தொகை நூல்கள் தொகுக்கப்பட்டுத் தமிழில் நூல்களாக வெளியாகியுள்ளன. தமிழிலக்கியப் பரப்பில் தொகை நூல்கள் காலந்தோறும் செல்வாக்குடன் தனித்து விளங்குகின்றன. இன்றைய மின்னணு யுகத்தில் ஒரு படைப்பாளர் எழுதியிருக்கிற கவிதைத் தொகுப்புகள் முழுவதையும் வாசிப்பது ஒருவகையில் சவால். இத்தகு சூழலில் கவிஞராக நிலைபேறு அடைந்தவரின் தேர்ந்தெடுத்த கவிதைத் தொகுப்பு நூல், கவிஞரின் கவித்துவத்தை நுட்பமாக அறிமுகம் செய்கிறது. நண்பர் சீனுவின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் எழுதியுள்ள கவிதைகளில் இருந்து எனக்குப் பிடித்த கவிதைகளைத் தொகுத்துள்ளேன். இந்தத் தேர்வும் தொகுப்பும் முழுக்க என் ரசனையுடன் தொடர்புடையவை. ஒரு குறிப்பிட்ட இலக்கிய வகைமை அல்லது பொருண்மையை மையக் கருத்தாகக்கொண்டு தொகுக்கப்பட்டுப் பிரசுரிக்கப்படுகின்ற தொகை நூல்களின் பின்புலத்தில் தொகுப்பாசிரியரின் அரசியல் பொதிந்துள்ளது என்ற கருத்தியல் இந்தத் தொகை நூலுக்கும் பொருந்தும்.

கவிஞர் சீனு ராமசாமி காற்றால் நடந்தேன் (2010), புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை (2023), மாசி வீதியின் கல் சந்துகள் (2024), கோயில் யானையின் சிறுவன்(2024), நினைவில் ஒளிரும் ஜிமிக்கிக் கம்மல்(2024), மேகங்களின் பேத்தி(2025) ஆகிய ஆறு கவிதைத் தொகுதிகளைக் குறுகிய காலத்தில் வெளியிட்டுள்ளார். ஓராண்டில் மூன்று கவிதைத் தொகுதிகளைத் திரைப்பட இயக்குநரான கவிஞர் சீனு பிரசுரித்திருப்பது அவரைப் பிடித்திருக்கும் கவிதைப் பிசாசின் வேலைதான். வேறு என்ன?

கவிஞர் சீனுவின் பெரும்பாலான கவிதைகள் சுய அனுபவங்களில் இருந்து விரிந்துள்ளன. தனிமனித அனுபவமானது ஒருநிலையில் ஒட்டு மொத்தச் சமூகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றமாக வடிவெடுக்கும் இயல்புடையது. வரலாற்றின் தேவைக்காக உருவாக்கப்பட்ட கவிஞன், கவிதைகளின் மூலம் வரலாற்றை உருவாக்குகிறவனாக மாறுகின்ற விந்தை நிகழ்கின்றது. சீனுவின் தேர்ந்தெடுத்த அனுபவங்களும் மனதில் பதிந்த காட்சிகளும் கவிதையாக வடிவெடுத்துள்ளன.

‘அன்பின் வாதை’ என்று கவிதை எழுதியுள்ள கவிஞர் சீனுவின் உலகம், சகமனிதர்கள் மீதான அன்பினால் தத்தளிக்கிறது. புரியாதவர்களை நோக்கியும் குறிப்பாக ஆணை நோக்கியும் தன்னுடைய பூங்கொத்தை நீட்டுகிற கவிஞருக்குப் பருண்மையான நோக்கம் இருக்கிறது. நகரத்தின் அத்துவான வெளியில் அடையாளமற்றுத் தவிக்கிற மனிதர்கள் மீதான கவிஞரின் நேசம் அளவற்றது. எங்கும் வெறுப்பரசியல் ஆதிக்கம் செலுத்துகிற புறநிலையும் குடும்ப உறவுகளும்கூட நலிவடைந்திருக்கிற அகச் சூழலும் நிலவுகிற காலகட்டத்தில் பூங்கொத்தை நீட்டி அன்பை வழங்குக்கிற கவிதை, வாசிப்பில் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

புரியாதவர்களை நோக்கியே
நீட்டுகிறேன்
என் பூங்கொத்தை.

அவர்கள் வசந்த காலத்தில்
ஒரு இளம் பெண்ணின் காதலில்
வசமாகட்டும் என்றே வாழ்த்துகிறேன்.

புரியாதவர்களுக்கு அப்படியாவது
புன்னகையும் பூக்களும் பிறக்கட்டும்.

புரியாதவர்களை நோக்கியே
எனது பூங்கொத்தை நீட்டுகையில்
அன்பின் பாதையில் எவரும் இல்லை.

‘மேரியின் ஆட்டுக்குட்டி’ கவிதை குறியீட்டு நிலையில் வாழ்க்கையின் தடுமாற்றத்தைப் பதிவாக்கியுள்ளது. மேரி, ஆட்டுக்குட்டி, வழி தவறிய ஆட்டுக் குட்டி, வழி காட்டும் நட்சத்திரம், சிசுபாலன், மேய்ப்பன், கசிந்துருகும் ஜெபம் போன்ற சொற்கள் மேலோட்டமான நிலையில் பைபிள் வாசகங்களை நினைவூட்டினாலும் செவ்வியல்தன்மை காரணமாக வாசிப்பில் புத்துலகை அறிமுகப்படுத்துகின்றன. அபின் போன்ற மதம் தருகின்ற போதைக்குள் சிக்கிக் குழம்பினாலும் இருத்தல் பற்றிய கேள்விகள் முடிவற்றவை. ‘கவியின் கருணை’ கவிதை யதார்த்த வாழ்க்கையின் பெருங்கருணையைச் சித்திரித்துள்ளது. கடவுளை முன்வைத்து விரிந்துள்ள ’நானும் காதலும் காதல்களும்’ கவிதையில் வரும் ‘நான்’ கவிஞரின் சுய மதிப்பீட்டின் வெளிப்பாடு. ‘ஒத்திகை வலி’யின்மூலம் இஸ்ரேலின் பிதாவின் மண்டியிட்டு இறைஞ்சுகிற கவிஞர் எதிரியையும் துரோகியையும்/மன்னிப்பில் ஆசிர்வதித்த பிதாவே என்ற கவிதை வரிகள், வண்ணநிலவன் எழுதிய எஸ்தர் காலகட்டத்திற்கு இட்டுச் செல்கின்றன.

இரண்டாயிரமாண்டுகளாகக் காலங்கடந்து நிலைத்திருக்கும் மதுரை நகரம் கவிஞர் சீனுவுக்குள் உருவாக்கியிருக்கும் தொன்மங்களும் பிம்பங்களும் ஏராளம். ஒருநிலையில் கவிஞர் வரலாற்றின் தொடர்ச்சியாகத் தன்னை அவதானித்துக் கல் பாவிய சந்துகளின் வழியே மிதந்துகொண்டிருக்கிறார். மண்ணும் மரபும் வரலாற்றுத் தடங்களில் தோய்ந்திருப்பதை மதுரைக்காரன் என்ற பெருமித உணர்வுடன் கவிதையாக்கியுள்ளார். கவிஞர் சீனு தமிழர் வாழ்க்கையின் நவீனத்துவத்தைப் பதிவாக்குகிற வேளையில் மதுரை நகரை கவிதை வரிகளாக்கியிருப்பது தொன்மக் கதையாடலுக்கு வழி வகுத்துள்ளது. ‘மாசி வீதியின் கல் சந்துகள்’ கவிதையில் கவிஞருக்குள் உறைந்துள்ள மதுரை நகரின் வரலாற்றுச் சுவடுகள் சமகாலத்தன்மையுடன் பதிவாகியுள்ளன. வெறுமனே nostalagia என்பதற்கப்பால் மதுரைக்காரனாகத் தன்னை அறிந்திடும் கவிஞர் சீனுவின் மதுரை பற்றிய பதிவு ஈரத்துடன் ததும்புகிறது.

கல்சந்தில்
மணக்கிறது
பசுக்களின்
கோமிய நறுமணமோ
ஓர் ஊதுபத்தியின் மணம்போல்
குளிர்ந்த ஆளற்ற கல்சந்தின்
வழியே ஓடும் சிறுவனின்
பாதங்களுக்கு எப்படியும் வந்துவிடும்
ஒரு கோபுர வாசல்
கல்சந்தில் துல்லியமாக
ஒரு காற்று உருவமுள்ள மனிதனின்
அணைப்பைவிடவும்
அவ்வளவு அன்பின் இதம்
கூட்டுகிறது. கல்சந்தின் முட்டில்
சிறிய மஞ்சள் முகங்கள்
தெய்வச்சிலையாக
அது நட்பற்ற சிறுவனோடு மட்டும்
பேசுகின்றன.
… … …
மாசிவீதிகளில்
பச்சைக்கிளிகள் பறக்க
சுவரில் விழுந்த மரம் தழைக்கும்
கல்சந்துகளில்
மாடு
நான் எதிர்படுகையில் விலகி
வழிவிடுகின்றது.
தாத்தாவின் விரல் பற்றிப்
போய்க்கொண்டிருக்கும்
ஒரு சிறுவன் அதைத் திரும்பிப்
பார்க்கவும் செய்கிறான்.
… … …
கோபுர வாசல், கல் சந்து, மாசி வீதி, பச்சைக்கிளி, மாடு என்று நகரின் தெருக்களைக் கவிதை விவரிக்கும்போது வாசிப்பில் நெருக்கம் ஏற்படுகிறது. கவிஞரான எந்தவிதமான சிந்தனைக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் தன்னையும் தன்னைச்சுற்றிலும் அவதானிக்கும்போது இருப்பின் பேரழகை உணர்கிறார். அவர் எதிர்கொண்ட அனுபவத்தின் காலம் ஒரு விநாடியாக இருக்கலாம். அந்தக் கணத்தில் மௌனத்தை அனுபவிக்கிறார்; தன் வாழ்வை வாழ்கிறார். புதிய எண்ணங்கள் ஆக்கிரமிக்கும்வரை கவிஞர் சீனுவின் பார்வைச் சலித்தெடுக்கும் அழகுநிலையிலேயே மூழ்கியிருக்கிறார். ‘மாசி வீதியின் கல் சந்துகள்’ கவிதையின் தலைப்பு, தனிப்பட்ட கவித்துவ மொழி நடையில் வாசகருக்கு நெருக்கமாக இருக்கிறது. கவிஞர் சீனு கையாளுகின்ற மொழி, உணர்வுகளை வெளியிட எடுத்துக்கொண்ட பொருளோடு தொடர்புடையதாக இருக்கும்போது கவிதை மொழியை மீறி வாசிப்பில் உருவாக்குகின்ற எண்ணம், தனித்துவமானதாக விளங்குகிறது. நாகமலை புல்லூத்துப் பற்றிய ‘நினைவோடை’, திருப்பரங்குன்றம் பின்புலத்திலான ‘மலையறிதல்’, ‘பிட்டுக்குப் பெருமான் வந்த கதை’, நாளை மற்றுமொரு நாளில் வாழ்கின்ற ரிக்சா ஓட்டியான ‘மாயன் மாமா’, திரையரங்கில் காலங்கழித்த ‘மாமாவின் வாழ்வு’ போன்ற கவிதைகள் மதுரை நகரின் மறுபக்கத்தைச் சுவாரசியமான மொழியில் விவரிக்கின்றன. அவை மண்ணின் மணத்துடன் வெளிப்பட்டுள்ளன.

அன்றாட வாழ்க்கை, ஒவ்வொரு கணமும் மாற்றங்களை எதிர்கொண்டிருக்கிறது. எளிமையாக இருந்த நிலைமை மாறி, எல்லாம் கலவையாகவும் குழப்பமாகவும் மாறியுள்ளன. இத்தகைய சூழலில் அறிவுக்கூர்மையுடன் மாறுபட்ட உணர்வுகளின் கொந்தளிப்பில் தத்தளித்திடும் கவிஞன் சமகாலத்தன்மையுடன் கவிதை படைக்கின்றான். நவீன வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்திலும் அறிவின் வெளிச்சம் பாய்ந்திட கூர்மையடைந்திடும் கவிஞன் தீவிரமான ஈடுபாட்டுடன் இயங்குகிறான். இதனால்தான் இன்றைய கவிதை தொடர்ந்து புதிய தளத்தில் வெளிப்படுகிறது. ’பாசம்’ கவிதை ஓடும் பேருந்தில் கவிஞர் சீனு அவதானித்த காட்சி, சொல்லிய முறைமையினால் சிறந்த கவிதையாகியுள்ளது. மதுரைக்கருகிலுள்ள ஏதோவொரு கிராமத்திற்குப் பேருந்தில் பயணிக்கிற கிழவி பற்றிய விவரிப்பு, கவிஞர் சீனுவைத் தேர்ந்தெடுத்த கவிதைசொல்லியாக்கியுள்ளது.

தண்டட்டி இல்லாத
வெறுங்காதுடைய கிழவியின்
முழங்கைக்கு மேலே…
அவளின் சுருங்கிய தோலில்

பச்சை குத்தப்பட்ட
தாவர ஓவியங்கள் உயிரோடிருப்பதைப்
பேத்தியின் பேறுகாலத்திற்குப்
பேருந்தில் போகும்
கிழவியின் மடியில்
எவருக்கும் தெரியாமல்
பதுங்கியிருக்கும்
ஈரப்பையின் ஓட்டைவழி
பார்த்துக்கொண்டிருந்தது
செக்காணம் வெடக்கோழி.

தாய்வழிச் சமூகத்தின் தொடர்ச்சியான பாட்டி-பேத்தி உறவு, இன்றைக்கும் தமிழ்ச் சமூகத்தில் அழுத்தமாக உள்ளது. காதில் தண்டட்டி அணியாத பாட்டி என்ற வரி, வறுமையை நுட்பமாகப் பதிவாக்கியுள்ளது. பாட்டியின் உடலில் குத்தியிருக்கிற ஒருபோதும் அழியாத தாவரப் பச்சையைப் பார்த்துக்கொண்டிருந்த வெடக்கோழியின் முன்னொட்டான செக்காணம் என்ற சொல் இனவரைவியலுடன் தொடர்புடையது. கவிதைக்கு நிலம் முதன்மையானது என்ற சங்கக் கவிதை மரபில் செக்காணம் என்ற சொல்லின் மூலம் கிராமத்தினர் வாழ்க்கைமுறை கவிதையில் பதிவாகியுள்ளது. குழந்தையைப் பெற்ற பேத்தியின் உடல் வலியைப் போக்கிட பலியாகப் போகிற வெடக்கோழி, ஈரத்துணிக்குள் இருந்து பாட்டியின் உடலில் குத்தப்பட்டிருந்த பச்சையை வேடிக்கை பார்த்தது என்ற நகைமுரண், கவிஞர் சீனுவின் சமூக அவதானிப்புக்கும் மொழி ஆளுகைக்கும் சான்றாக விளங்குகிறது.

கவிஞர் சீனு கடந்த காலத்தினூடாக நினைவுகளில் பயணித்துக் கண்டறிந்த அனுபவங்கள், ஒருவகையில் சுவராசியமானவை. சமகால மனிதனைத் திடுக்கிடும் அம்சங்கள்மூலம் விழிப்படையச் செய்திடும் எதிர்ப்பு இயல்பைக் கவிதையாக்கிற கவித்துவம் கவிஞர் சீனுவுக்கு இயல்பாகக் கைவரப் பெற்றிருக்கிறது. அன்றாட வாழ்க்கையை எல்லோரும் அனுபவங்கள்மூலம் எதிர்கொண்டு கடந்து செல்கின்றனர். அரசியல், சமூகம் சார்ந்த கருத்தியல்களில் சார்பு இருந்தாலும் எல்லோராலும் மெய்மையைக் கண்டறிந்திட இயலவில்லை. அதேவேளையில் பலரும் அறிந்த நிகழ்வு அல்லது சம்பவம் பற்றி இதுநாள்வரை அறிந்திராத மறுபக்கத்தைக் கவிதை வரிகளில் கவிஞன் சுட்டிக் காட்டும்போது வாசிப்பில் விழிப்பேற்படுகிறது. அந்தக் கவிதை சராசரியான வாசகர்களிடம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது; உணர்வுகளைக் கூர்மையாக்கி இருத்தலை ஆழமாக அறிந்திட வைக்கிறது. ’அவள் பெண்’ என்ற தலைப்பில் சீனு கவிதையாகப் பதிவாக்கியுள்ள வரிகள், ஒரு கணம் திகைப்பை ஏற்படுத்துகின்றன.

மலை நகரில்
நகர்ந்த மேகநிழல் சாலையில்
எதிர்வரப்போகும் பேருந்துக்கு ஸ்வெட்டர்
அணிந்திருந்தவள் நின்றிருந்தாள்.
வெளிர்ந்த சாம்பல் நிறத்தில்
அவள் உதடுகள் இருந்தன.
அடிக்கடி சாலையைப் பார்க்கிறாள்
அலைபேசியைச் சோதிக்கவில்லை,
அவள் அழகாக இருப்பதைப்
பல கண்கள் கவனிக்கின்றன.
அவள் கவனிக்கவில்லை
கவனிக்காமலும் இல்லை,
வசதியற்ற அழகுக்கு
ஆபத்திருக்கும் நாட்டில் அவளுக்கு
சீக்கிரம் அப்பேருந்து
வரவேண்டும்,

எப்பெண்ணுக்குப் பின்னும் யாரோ
எதற்கோ எப்போதும்
காத்திருக்கிறார்கள்.
அது ஏனென்று முழுவதும்
அறிந்தபாடில்லை.

எதுவும் நடப்பதற்ககான சாத்தியப்பாடுகளை அவதானிக்கிற கவிஞர் சீனு, ஆழ் மனத்தின் தவிப்பை விவரணைமூலம் விவரித்திருப்பது. வாசிப்பில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. அழகிய பெண்ணுக்குப் பின்னால் யாரோ எதற்கோ எப்போதும் காத்திருக்கிறார்கள் என்ற கூற்று, கவிதையின் பொருண்மையை முடிவற்றதாக்குகிறது. பேருந்துக்குக் காத்திருக்கிற பெண் என்று தொடங்கும் கவிதை வரிகள், அழகான பெண் என்று அடையாளப்படுத்தி, அவளைச் சுற்றிச் சுழலும் ஆண்களின் கண்கள் என்று சூழலின் வெக்கையைப் பதிவாக்கியுள்ளன. எந்தப் பெண்ணுக்கும் பின்னர் யாரோ காத்திருப்பதன் காரணம் புலப்படவில்லை என்ற கவிஞர் சீனுவின் தவிப்பு, கவிதையை முடிவற்றதாக்கியுள்ளது. பால் அடிப்படையில் பெண் எதிர்கொள்கின்ற புற வாழ்க்கையின் யதார்த்தம் அக வாழ்க்கையில் நுட்பமான மாறுதல்களை உருவாக்குகிறது; இன்ப துன்பத்தை நிர்ணயிக்கிறது. சூழலின் அழுத்தம் அல்லது நெருக்கடி காரணமாகக் காத்திருக்கும் பெண் பற்றிக் கவிஞர் சீனுவுக்குத் தோன்றிய மனவுணர்வுகள் நெகிழ்ச்சியான மொழியில் கவிதையாகியுள்ளன. அதேவேளையில் கவிதை நேர்ப்பொருளில் வெளிப்பட்டுள்ளது. இறுக்கமாகவும் செறிவாகவும் இருத்தல்தான் நவீன கவிதை என்ற கட்டமைத்தலுக்குத் தமிழ்க் கவிதை மரபு அந்நியமானது என்ற புரிதல், சீனுவுக்கு இயல்பாகவே இருக்கிறது.

நுகர்பொருள் பண்பாட்டின் மேலாதிக்கம் ஒருபுறம் எனில் மின்னணு ஊடகம் புனைந்திடும் காட்சி வெள்ளம் இன்னொருபுறம் என்று மூழ்கியுள்ள பெரும்பான்மையான மனிதர்கள் தீவுகளாகியுள்ளனர், நடுத்தர வர்க்கத்துத் தனிமனிதனின் உலகைச் சித்திரிக்கிற கவிதைகள் ஒருநிலையில் பொதுமைத்தன்மை பெற்றுச் சமூகப் பிரச்சினைகளாக உருமாறுகின்றன. புறவாழ்க்கையைப் புறவயமான விவரிப்புடன் கவிதையாக்கிடும் கவிஞன் அரசியல் மோசடிகள், மத அடிப்படைவாதம் விலைவாசி உயர்வு, கையூட்டு, சமத்துவமின்மை போன்றவற்றை கேள்விக்குள்ளாக்குகிறான்; விசாரணைக்குபடுத்துகிறான். அடையாள இழப்பில் தவிக்கிற இன்றைய மனிதன் வன்முறை, கசப்பு, வெறுப்பு, சோகம், கழிவிரக்கம், விரக்தி, குழப்பம், இறுக்கம், சீற்றம், காதல், இழப்பு போன்ற உணர்வுகளில் தத்தளிக்கிற தருணங்களைக் கவிதையாக்கிட முனைந்துள்ள கவிஞர் சீனுவின் சமூக அக்கறை, கவிதையாகியுள்ளது. ‘ஒருத்தி ’என்ற கவிதைத் தலைப்பு யார் அந்த ஒருத்தி என்ற கேள்வியை எழுப்புகிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏகப்பட்ட ஒருத்திகள் கடந்து போகின்றனர். யார் அந்த ஒருத்தி என்ற கேள்விக்குப் பின்னர் பொதிந்திருக்கிற ஒருத்தியின் வாழ்க்கை, முடிவற்ற கேள்விகளை எழுப்புகிறது.

பால் விநியோகிப்பவன்
கதவைத் தட்டும்போது.
ஒருத்தி வந்தாள்
பேப்பர்காரன் கம்பி கேட்டில்
சொருகிய பேப்பர் எடுக்க
ஒருத்தி வந்தாள்.
விரைத்துநின்ற வீட்டு உரிமையாளனுக்கு
ஒருத்தி வந்தாள்.
நள்ளிரவில் வந்த வாடிக்கையாளனுக்கு
ஒருத்தி வந்தாள்.
பணம் கேட்டுஅவள் தந்தை வந்தபோது
ஒருத்தி வந்தாள்.
ஒருநாள் கதவை உடைத்து
வெளியே உடலை
தூக்கி வந்தார்கள்.
கசங்காத பட்டுச்சேலையில்,
கழுத்தில் மாட்டிய துப்பட்டாவுடன்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு கதவின் தட்டலுக்கும்
ஒருத்தியாக வந்தவள்
ஒரே ஒருத்தியாக
அன்று கிடந்தாள்.

கசங்காத பட்டுச் சேலையில் கழுத்தில் மாட்டிய துப்பட்டாவுடன் ஒருத்தியை வீட்டில் இருந்து தூக்கி வந்தார்கள் என்று விலகிநின்று கவிதைசொல்லியாக மாறி கவிஞர் சீனு விவரிக்கிற காட்சிகள், சமூக இருப்பில் ஒருத்தி பற்றிய அழுத்தமான பதிவுகள். நகரத்தின் பிரமாண்டமான இயக்கத்தில் தொலைந்து போகிற ஒருத்தி, எப்படியெல்லாம் இருந்தாள் என்று கவிதை வரிகள் சித்திரிக்கின்றன. சீனுவின் கவிதை முடிவடைந்தாலும் பிரதியில் இருந்து வெளியேறிய ஒருத்தி, காலந்தோறும் தெருக்களில் அங்குமிங்கும் இடைவிடாமல் அலைந்து கொண்டிருக்கிறாள். யோசிக்கும்வேளையில் இணையவெளியயெங்கும் ஒருத்தியின் உடலை மிடுக்கு அலைபேசிகளின் தொடுதிரையில் காட்சிப்படுத்திட அலகு வியர்த்த கழுகுகள் வட்டமிடுவதைக் கண்டறிய முடியும். ஒருத்தி எங்கிருந்து வந்தாள்? என்ன செய்கிறாள்? ஒருத்தியின் மனம் என்னவாக இருக்கிறது? ஒருத்தி விடுதலை உணர்வுடன் தேர்ந்தெடுத்த துப்பட்டாவின் பொதிந்திருக்கிற கதைகள் கண்ணீரின் கதையாடலாகிக் குரூர இன்பத்தை வழங்குவதை ஒருத்தி கவிதையின் தொடர்ச்சியாக அவதானிக்க முடியும்.

ஒருத்தி கவிதையின் அவலமானது இணையத்தில் உறையும் கதைகள், கவிதை காரிகை போன்ற கவிதைகளில் தொடர்ந்துள்ளது. ஏன் இப்படியெல்லாம் துயரமான சம்பவங்கள் பெண்கள் வாழ்க்கையில் நடைபெறுகின்றன என்ற கேள்வி தோன்றுகிறது. சில்க் இன்னும் உயிரோடு இருக்கிறாள்/ பாவம் விஜயலெட்சுமிதான் இறந்து விட்டாள் என்று ஆதங்கப்படுகிற கவிஞர் சீனு பிரபலமான பெண்ணை முன்வைத்துக் கேள்வியை எழுப்பியுள்ளார். வாழ்வின் பெருங்கருணையும் இரக்கமும் இல்லாமல் வெறுமனே உடலாகிப்போன பெண்கள் பற்றி இணையத்தில் இறக்குமதியாகின்ற தொடர்களைத் தொடர்ந்து காண்கின்றவர்களின் கனவுகளில் ஒரு உருத்தெரியாத/ மக்கிய பிரேதம்/ மலையடிவாரத்தில் கிடக்கிறது. எது நிஜம் எது புனைவு என்ற இடைவெளி சிதலமாகிட இறந்தவளின் அலறல்/ காடு முழுவதும் கேட்டிருக்க வேண்டும். கவிஞர் சீனுவின் பெரும்பாலான கவிதைகளின் பின்புலத்தில் வதைபடுகிற பெண்களின் துயரமும் வலியும் பதிவாகியுள்ளன.

பறவைகளின் பறத்தலில் உயிர்த்துடிப்பில் தன்னை அடையாளங்கண்ட கவிஞனிடமிருந்து பறவை இனத்துத் தகவல்களை எதிர்பார்க்க முடியாது. பிரபஞ்சத்திலே, கவிஞனாகிய மனிதன் தன்னையொரு காட்சிப் பொருளாக வைக்க முயலவில்லை. அது அவனுடைய நோக்கமும் அல்ல. அவன் பரந்துபட்ட உலகம் முழுவதையும் தனதாக்கிக்கொள்ள விழைகிறான். அவன் பெற்ற உணர்வுக்கும் அவன் கவிதையில் கையாளுகின்ற பொருளுக்கும் தொடர்பு உண்டென்று கருத இயலாது. பொருளை உள்ளது உள்ளவாறே சொல்ல வந்தவனல்ல கவிஞன். கவிதையின் மூலம் வாழ்வில் சலித்தெடுத்த அரிதான உணர்வுகளைப் புதிய மொழியில் சொல்லும்போது கவித்துவம் தோய்ந்த வரிகள், வெளியெங்கும் மிதக்கின்றன. ’ஆரம்பச் சுகாதார மருத்துவமனை’ கவிதை ஆண் மொழியில் வலியையும் கொண்டாட்டத்தையும் ஒன்றாகப் பதிவாக்கியுள்ளது. சமூக ஆணாக வளர்ந்து எப்பொழுதும் ஆண் என்று இறுமாப்புடன் தன்னைக் கருதுகிறவனின் மனைவி, மருத்துவமனையிலுள்ள மகப்பேறுப் பிரிவில் சேர்க்கப்பட்டபோது, வெளியே தவிப்புடன் காத்திருக்கின்ற சூழலில் அவன் அனுபவிக்கிற உணர்வுகளை விவரிக்கச் சொற்கள் எதுவுமில்லை. இதுவரை காதலுடன் பார்த்த அழகுப் பெண்ணான மனைவி பற்றிய பிம்பம் தகர்ந்து கையறு நிலையில் தத்தளித்த சூழலில் நிகழ்ந்த மகளின் வருகை, அற்புதமானது. காதலால் கருத்தொருமித்த இருவருடைய அன்பின் வித்தான மகளின் பிறப்பு, இதுவரை மனைவி அனுபவித்த வலியையும் அதைக் கண்டு துடித்த கணவனின் துயரத்தையும் அர்த்தமில்லாமல் ஆக்குகிறது. அதிலும் ஒவ்வொரு அப்பாவுக்கும் மகள் குட்டி தேவதைதான். கவிஞர் சீனு மகப்பேறுப் பிரிவின் வெளியே காத்திருக்கிற தந்தையின் கோணத்தில் நுட்பமாக விவரித்துள்ள கவிதையாடல், உணர்வுகளின் கொந்தளிப்பில் தத்தளிக்கிறது.

புதிய மரங்களின் மூச்சுக்காற்றில்
ஒளிரும் மஞ்சள் விளக்கின் கீழ்
விதியைப் புலர்த்தும் கர்வத்துடன்
பின்னிரவில் கதவைத் திறந்தனர் செவிலியர்
வலியின் தீவிரம் பரவத் தொடங்கிய
நேரத்தில் தேங்கிய அன்போடு
எனைவிட்டுப் பிரிந்து சென்றன
அவளது கண்கள்
நம்பிக்கையும்
நம்பிக்கையின்மையும்
பிரார்த்தனையும்
என் கைகளில் ஏதுமற்று காலத்தின்
முன்னே மண்டியிட்டு நின்றேன்
பெயர் தெரியாத பூச்சிகளும்
பறவைகளும்
தவளைகளும்
வண்டுகளும்
வாழ்ந்தலையும் இவ்விடத்தில்
உனது வருகை இனிதே நிகழ்ந்தது
உனது வருகையைக் கொண்டாடும்
விதத்தில் உன்னைச் சுற்றிப் புளியமரங்கள்
பூத்திருந்தன மகளே.

இரவுவேளையில் தாங்கவியலாத வலியென்றாலும் அன்பான பார்வையுடன் பிரிந்து மருத்துவமனையின் மகப்பேறுப் பிரிவுக்குள் சென்ற மனைவி, காலத்தின் முன்னே தவிக்கிற கணவன், மகளின் பிறப்பைப் கொண்டாடும் தந்தை… ஒவ்வொரு ஆணும் தன்னுடைய வாழ்வில் அனுபவித்த உணர்வுகளை ஈரத்துடன் பதிவாக்கியுள்ளார் கவிஞர் சீனு. சமகால வாழ்க்கையின் சாரத்தையும் உன்னதத்தையும் உள்ளடக்கமாகக் கொண்ட சீனுவின் கவிதை வரிகள் காலங் கடந்த நிலையில் பேச்சுகளை உருவாக்கிடும் வல்லமையுடையன. அன்றாடம் வழக்கில் புழங்குகின்ற மொழி, நேர் கூற்றுடன் யதார்த்தத்துடன் வாழ்வனுபவங்களும் மன உணர்வுகளும் உண்மை தோய்ந்து வெளிப்படும்போது சிறந்த கவிதை வெளிப்படுகிறது.

கவிதை என்பது சாதாரண மொழியைவிட ஒரு விஷயத்தை அதிதீவிரமாக உணர்த்துகிற புதுவகையான மொழி. அனுபவ மைய நோக்கில் கவிஞன் ஆழமான அனுபவங்களை வாசிப்பவனுக்குக் கவிதை வரிகள்மூலம் உருவாக்கிட முயலுகிறான். வாசகன் அவற்றை ஏற்கும்போது விழிப்புணர்வையும் உலகினைப் பற்றிய புரிதலையும் அடைகிறான்.

தெய்வீக அன்பு
பாலருந்திய நிலையிலேயே
குழந்தை
தூங்குகிறது தாயும் தூங்குகிறாள்
அங்கு தெய்வம்
கண் விழித்திருக்கிறது.

அன்பு பற்றிய கவிஞரின் பார்வை வழமையில் இருந்து மாறுபட்டுள்ளது. வெறுமனே தாய்-சிசு என்ற உறவுக்கு அப்பால் மனித இருப்பினைச் சாத்தியப்படுத்துகின்ற இயற்கையின் பேராற்றலைத் தெய்வத்தின் கண் விழிப்பாகக் கருதுகிற கவிஞரின் கவித்துவத்தில் அன்பு பொங்குகிறது. இயல்பான காட்சி, கவிஞரின் கவித்துவ மொழியினால் அற்புதமான வரிகளாக மாறியுள்ளது.

பொதுவாகக் கவிதையின் உள்ளடக்கத்தைக் கவிஞன் தீர்மானிக்கிறான். அதேவேளையில் மொழிதான் கவிஞனின் கவித்துவத்தை வடிவமைக்கிறது. கவிஞன் பிறந்து வளர்ந்த சூழல், அரசியல், சமூகக் கட்டமைப்புமூலம் கவிதை மொழியைக் கையாளும்போது, புதிய வீச்சாகக் கவிதை வெளிப்படுகிறது. வரலாற்றுத் தடங்கள் தோய்ந்த மதுரை நகரில் இருந்து சென்னை மாநகருக்குப் புலம்பெயர்ந்த கவிஞர் சீனுவின் கவிதைகளில் பூர்வீகநிலத்தின் வாசனை தோய்ந்துள்ளது. திரைப்பட இயக்குநராகி வெற்றிகரமான திரைப்படங்களை இயக்குவதற்காகச் சென்னைக்குள் நுழைந்தபோது இழந்தவை குறித்து மனதில் ஏற்பட்ட ஏக்கத்தைக் கடந்து தன்னைக் கவிஞராக அடையாளங்கண்ட கவிஞர் சீனுவின் கவிதை மொழி தனித்துவமானது. ‘நகரத்தின் காலங்கள்’, ‘பாதை’, ’நீரின் சமன்பாடு’, ‘அமைதிசூழ் உலகு’, நீயில்லை நான்’, ‘வருகை’ போன்ற கவிதைகள் நகரத்தின் பன்முகங்களைப் பதிவாக்கியுள்ளன. யாரும் போகச் சொல்லவில்லை/ யாரும் இருக்கவும் சொல்லவில்லை என்று சொல்கின்ற கவிஞர் உனது வலது/ கரத்துக்குத்தான்/ வந்தவண்ணம் இருக்கிறது/ ரயில் என்று கவிதையை முடித்துள்ளார். ஏதோவொரு அண்டரண்டப் பறவைபோல பிரமாண்டமான சிறகுகளை விரித்துள்ள சென்னை நகரம் பற்றிய கவிதைகள் ஒருவகையில் மதுரை நகரின் மறுபக்கம்தான். சென்னை நகரை வெறுத்திடாமல் மனித இருப்பின் மாறுபட்ட அம்சங்களை நேர்முறையில் கவிதையாக்கியுள்ள சீனு, ஒருவகையில் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் வழியில் பயணிக்கிறார்.

இருண்மைக்குள் சிக்கிக்கொண்டு ஐம்பதுகளில் ’எழுத்து’ பத்திரிகை உருவாக்கிய கவிதைகளை இன்றைக்கும் நகலெடுத்து உன்னதமானவை என்று போற்றுவது நவீன காலத்திற்குப் பொருத்தமற்றது. புதிரும் சிக்கலும் விரவி, மொழிக்குள் சிக்கிக்கொண்டுள்ள கவிதைகளை ’இது தாண்டா கவிதை’ என்று கொண்டாடிக் கொண்டிருக்கிற கவிஞர்களும் கவிதை அபிமானிகளும் மொழி திரைப்படத்தில் பேராசிரியராக வருகின்ற நடிகர் பாஸ்கர் போல ஒரு காலத்தில் உறைந்து இருக்கின்றனர். சரி, இருக்கட்டும்.

கவிஞர் சீனு தேர்ந்தெடுத்திருக்கிற விஷயத்தின் கணத்தினாலோ அல்லது சொல்கின்ற முறையினாலோ கவித்துவம் தோய்ந்த கவிதைகளை எழுதியுள்ளார் என்பதை வாசிப்பில் அறிந்திட முடியும். சமூக அக்கறையும் பூமியில் மனித இருப்பைக் கண்டறிகின்ற தேடலும் மிக்க கவிஞர் சீனுவின் பெரும்பாலான கவிதைகள், மென்மையாகவும் நுட்பமாகவும் அதேவேளையில் அழுத்தமாகவும் வெளிப்பட்டுள்ளன. இதுவே கவிஞர் சீனுவின் கவிதைகளின் தனித்துவம்.


வேரல் இதழில் வெளியான கட்டுரை. கவிஞரும் இயக்குநருமான சீனுராமசாமியின் பிறந்தாளை (13.10.2025) யொட்டி மறுபிரசுரம் செய்கிறது தடாரி.
நன்றி : வேரல்
Art : raffi yedalian

ந. முருகேசபாண்டியன்
ந. முருகேசபாண்டியன்
Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top