1.
அப்பாவின்
சட்டைப் பையில்
கை வைத்து
நடுநெஞ்சில்
மிதிவாங்கியவன்
கழுதை விறகால்
அடித்த அடியில்
பிறங்காலில் இன்னும்
தழும்பு ஒட்டியிருக்கும்
நான் தான்
அதட்டுகிறேன்?!…..
யார்ரா
சட்டைப் பையில்ல
கை வைத்ததென்று…..
2.
ஒரு வீடு வாங்கப் போகிறேன்?!….
மகள் ஆசைப்படி
அச்சு அசலாய்
மாடித் தோட்டத்தோடு
இரண்டு மாடியில்
பொம்மை
வீடு!!….
ஆழ்துளை கிணறோடு
வாங்கிவரச் சொன்னாளே
நான் என்ன
செய்ய?!…..
3.
அந்த முகத்தில்
விழிக்கவே கூடாது?!…
என்பது என் வேண்டுதல்
ஆனால்
இராவிலும்
கோழி கூப்பிடவும்
புரண்டு புரண்டு
கண்ணைக் கசக்கினால்
குறும்படமாய்
நீள்கிறது
விழிக்கவே கூடாத
அந்தத்
திடகாத்திர
முகம்……
4.
அம்மண
மழை பார்த்த
ஆனந்தத்தில் தான்
அரிக்கொம்பனும்
எரசையை
உரசிக் கொண்டிருக்கிறான்
அம்மண
மழை பார்த்த
ஏக்கத்தில் தான்
ஆலங்கட்டி என்றும்
மண்ணாங்கட்டி என்றும்
மலுப்பி வைக்கிறான்
மடப்பய மகன்
அம்மண
மழை பார்த்த நாள்
நலுங்கு நாளோ
சடங்கு நாளோ அல்ல
அடை மழை நாள்
அம்மண
மழை பார்த்த அவளுக்கு
மாமணி என்றும்
மருதாணி என்றும்
பெயர் இருக்கக்கூடும்
அம்மண
மழை பார்த்த நான்
அம் மணக் கவிதை
எழுதிக்கொண்டிருக்கிறேன்
நீங்கள்?!….
5.
பாசிப்பருப்பு போட்டு
கடஞ்சு வச்ச பலகீர கடசல்ல
இத்தன தக்காளியா போட்டுத் தொலைவான்னு
ஆரம்பிக்கும் அப்பாவின் வசவுச் சத்தம்….
தவிச்ச வாய்க்குத்
தண்ணி மோந்து வைக்காமக்கூட அப்படி என்ன
காட்டுறானுங்களோ
அந்தப் பக்கத்து வீட்டு டீவில போடுற நாடகத்துல…..என நீளும்
பத்துக்காசுக்குப் பெறமாட்டான்
அவ வீட்டுத் திண்ணதான் கதின்னு என்ன தான் பொறணி
பேசுறாழுகளோன்னு
தெரியலன்னு புலம்புவாரு
வானொலிப் பெட்டிய திருகி
அப்துல் ஹமீது குரல் கேட்டதும்
கொஞ்சமா அடங்கும் கோபம் டி.எம்.எஸ் ம் பி.சுசிலாவும்
கருவேல மரத்து காத்தும்
கொஞ்சம் கொஞ்சமாய்ப் புத்தி மாத்தும்
பத்து மணிக்கு மேல
சீமண்ண ஊத்த மறந்த அரிக்கேன் விளக்கு
முழுசா அணைஞ்சாதான் அவரின்
மூர்க்கமும் அடங்கும்
Art : etsy
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள முத்துலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். பணிநிமித்தம் கடந்த 25 ஆண்டுகளாக திருப்பூரில் வசித்து வருகிறார். தொடக்கத்தில் பனியன் தொழிலாளியாகத் தொடங்கி, தற்போது ‘நம்பி வாங்க’ என்ற பெயரில் தேநீர் கடை நடத்தி வருகிறார். முதல் சமிக்ஞை, மழைவரப்போகிறது, கொலவக்காசு ஆகிய கவிதைத் தொகுதிகளையும், ஒரு குத்துப் பருக்கை என்கிற சிறுகதைத் தொகுப்பையும் எழுதி உள்ளார். இவற்றில் ஒரு குத்துப் பருக்கையும், கொலவக்காசும் தேனி வட்டார வழக்கில் எழுதப்பட்டவை.
தன் மகள் மேகா பிரியதர்ஷினியுடன் இணைந்து ‘மகளோடு விளையா(ட்)டு’ என்னும் சிறார் சிறுகதைத் தொகுப்பு எழுதி உள்ளார். தேனி வட்டார வழக்கில் இவர் எழுதிக்கொண்டிருக்கும் நாவல் விரைவில் வெளிவர இருக்கிறது.
திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்றம் வழங்கிய ஜுவா விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.








Leave a Reply