Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

பொலி எருமை

பாரத் தமிழ்
பாரத் தமிழ்
December 2, 2025
பொலி எருமை

காலம் காலமாகக் கத்தியைத் தீட்டியதால் அந்தச் சுமைதாங்கிக் கல்லின் ஒரு பகுதி நீள் அரைவட்டப் பள்ளமாகவே மாறியிருந்தது. வழுவழுப்பான அந்தப் பள்ளத்தில் அப்படியே தீட்டினால் சுணைப் பிடிக்காதென்று ஒருபிடி மண்ணையள்ளி உள்ளங்கையில் வைத்துக் குலுக்கி, ஊதி ஜலித்து, பெரிய கல்லாகவும் சிறு தூசாகவும் இல்லாத பதத்தில் கொட்டிக் கத்தியை நறநறவென்று தீட்டத் தொடங்கினான் தாண்டவன். கத்தியின் கனம் மற்றும் அழுத்த இழுவையால் மண், தூள் தூளாக நசுங்கிச் சிதறியது.

பத்துக் கிலோவுக்குக் குறையாத அந்தக் கத்தியைப் பலம் உள்ள யாரும் தூக்கலாம் என்றாலும், பக்தியுள்ளவர்களுக்கே அம்மன் தூக்கும் சக்தியைத் தருவதாக நம்பிக்கை.

“கத்திய நல்லா கனகனான்னு தீட்டுங்கடா! ஓங்கி வெட்டனா ஒரே வெட்டுல தல உழணும். ஒண்டி அரச மரத்தடியில முண்டமா கீற செலயோட தலைய பதம் பார்த்த கத்தி அது! ஒரு காலத்துல கல்ல வெட்டன அதுல, இப்ப எருமாட்ட வெட்டத் துப்பில்ல எவனுக்கும்”

சென்ற திருவிழாவில் சின்னோடன் எருமைத் தலையை இரண்டாவது வெட்டில்தான் துண்டாக்கினான். அதைத் தெய்வக் குத்தமாகப் பார்த்ததோடு சின்னோடனைத் திட்டித் தீர்த்தான் அப்போதைய பெரிய முதலியார் ஜம்புலிங்கம். அதை மனதில் வைத்துத்தான் இப்போது குத்திக் காட்டினான் அவனது மகன் ராமநாதன்.

“இல்லங்க மோலியாரே! அப்ப கத்திய தீட்டுனவங்க சரியா தீட்டல. அதான் சின்னோடனுக்கு அப்படி ஆச்சு. இந்தவாட்டி சரியா பண்ணிடலாம்ங்க”

“ஆங் ஆங்… ஆகட்டும்! வாயில சொன்னா பத்தாது. அர கொறையா தீட்டிட்டு அங்க வந்து ரெண்டு மூணு வெட்டா வெட்ற வேல இருக்கக் கூடாது! நல்லா சொண ஏறட்டும், வலுவுத்துக்கும் தீட்டுங்கொ!”

சொல்லிக் கொண்டே மற்ற வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான் ராமநாதன்தான். வழிவழியாக முதலியார் குடும்பத்திலிருந்து வரும் மூத்த வாரிசுதான் ஊரின் முக்கியப் பிரமுகர். அவனுக்கு அடுத்துதான் பஞ்சாயத்துத் தலைவர், மணியாக்காரர், கிளார்க், தலையாரி, போலீஸ் எல்லாம்.

ஏழெட்டுச் சாதிக்காரர்கள் புழங்கும் அந்த ஊரில் தனித்தனி திருவிழாக்களும் சாதிக்கு ஏற்ற கோயில்களும் இருக்கின்றன என்றாலும், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த நடுவீதி கங்கையம்மன் திருவிழாதான் எல்லாச் சாதியும் சேர்ந்து செய்யும் ஒரே திருவிழா. பேருக்குத்தான் சேர்ந்து செய்வது. பிரிவுத் தொகையிலோ, திருவிழா குறித்த முடிவிலோ, கூழூற்றிக் கும்பச் சோறு படைப்பதிலோ சேரியாட்கள் கலந்து கொள்ளக் கூடாது. அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட நான்காம்தரப் பணிகள் ஏராளம். அதில் ஒன்றுதான் திருவிழாவே அவர்களால்தான் நடைபெறுவதாக நம்ப வைக்கப்பட்டிருப்பதும்.

திருவிழா சாட்டு வைத்துத் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து சேரியில் வாழும், தொலுகுட்டி, கொலைக்குத்தி, தோட்டி, வண்ணான் உள்ளிட்ட வகையறாக்களைச் சேர்ந்த சில முக்கியமான ஆண்கள் மட்டும் கட்டாயம் காப்புக் கட்டிக் கொள்ள வேண்டும். காப்புக் கட்டிக் கொண்ட நாளிலிருந்து தங்கள் வீடுகளுக்கு மட்டுமன்றிச் சேரிப் பக்கமே கால் வைக்கக் கூடாது. காலென்ன, சேரிப் பக்கம் தலைவைத்தும் படுக்கக் கூடாது. பொண்டாட்டி பிள்ளைகளைத் துறந்து, வேலை வெட்டிக்குப் போகாமல் திருவிழா ஏற்பாடுகளைக் கண்ணும் கருத்துமாகச் செய்ய வேண்டும். அந்த நாள்களில் குளிப்பது துவைப்பது எல்லாம் மந்திவூட்டு பம்புசெட்டில்தான். குளத்து மேட்டில் உள்ள ஒண்டி அரசமரத்தடியில் தற்காலிகமாக ஓலைக் கொட்டாய் போடப்பட்டு அதில்தான் திருவிழா முடியும்வரைக் கட்டுப்பாடுடன் தங்க வேண்டும். கவுச்சியோ, குடிப் பழக்கமோ, உடல் சுகமோ அறவே இல்லாமல் இருக்க வேண்டும். அதோடு, ஊர்த் தெருக்களில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் போய் ராச்சோறு வாங்கிப் பங்கிட்டுத் தின்ன வேண்டும். பகலில் மட்டும் கொட்டாயிலேயே சமைத்துக் கொள்வார்கள். முதலியார் வீட்டிலிருந்து தேவையான மளிகைப் பொருள்கள் வரும் என்றாலும், எக்காரணம் கொண்டும் சேரியிலிருந்து மட்டும் எந்தப் பொருளும் வரவே கூடாது; வந்தால் தீட்டு.

திருவிழாவுக்குப் பதினோரு நாள்களுக்கு முன்போ, பதினேழு நாள்களுக்கு முன்போ இப்படியான காப்புக் கட்டுதல் நடக்கும். காப்புக் கட்டு நாள்களில் ‘தாங்கள் ஊர்க்காரர்களுக்குச் சமமானவர்கள்’ என்ற நினைப்பும் சேர்ந்தே வந்துவிடும் அவர்களுக்கு. அது ஓரளவுக்கு உண்மையும் கூட. அந்தக் குறிப்பிட்ட நாள்களில் ஊர் ஆள்களோடு ஒன்றாக உட்கார்ந்து திருவிழா குறித்துப் பேசுவது, டீத்தண்ணி குடிப்பது, வசூலுக்குப் போவது, அப்படிப் போகும் இடங்களில் ஒன்றாகச் சாப்பிடுவது, இன்னும் பல வேலைகளை ஊர்க்காரர்களோடு சேர்ந்து செய்வார்கள். இப்படியான ஒப்புக்குச்சப்பான் அங்கீகாரமே அவர்களுக்கு அரியணை ஏறிய சந்தோஷத்தைத் தரும். அதோடு, ஒருவகை மிதப்பும் வந்துவிடத்தான் செய்யும்.

வெல்லம் காய்ச்சும் இடங்களுக்குப் போய்க் கொப்பரைகளைக் கேட்டுத் தூக்கி வருவது, நாகல் மலைக்குப் போய் விறகு வெட்டிப் பூக்குழிக்குச் சேர்த்து வைப்பது, பாக்குக் காட்டில் பந்தலுக்குக் கொம்புகள் வெட்டி வருவது, வாழை மரங்கள், வாழைக் குலைகள், தேங்காய்கள், ஓலைகள் எனச் சகலத்தையும் சுமந்து வந்து சேகரம் செய்வது, ஊர் ஊராக அன்பளிப்பு வசூலிக்கப் போவது என்று பல வேலைகளைக் காப்புக் கட்டியவர்கள்தான் செய்ய வேண்டும்.

அதோடு, அம்மனுக்கு அணுக்கமான இசைக்கருவியான தொலுகுட்டியைச் சுத்தம் செய்வது, பழுது பார்ப்பது, நார் கட்டுவதும் நடந்தேற வேண்டும். வெட வெள்ளாட்டுத் தோலில் ஜவ்வு கட்ட வேண்டும். அதே வெள்ளாட்டுப் போட்டியைப் பதமாய்க் காய வைத்துத் தொலுகுட்டியின் நார் செய்ய வேண்டும். இருப்பதிலேயே அதுதான் மிக முக்கியமானது. பறை மேளங்களும் பம்பையும் இரண்டாம் பட்சம்தான்.

திருவிழாவுக்கான ஏற்பாடுகள் அமர்க்களமாகச் செய்யப்பட்டிருந்ததால் பெரிய முதலியாருக்கும் ஊர்ப் பொதுமக்களுக்கும் இம்முறை எல்லையற்ற மகிழ்ச்சி.

மாவிலை, வேப்பிலை, தென்னங்குறுத்தோலை, அரளிப் பூ, அறுகம்புல் எனப் பலவகைப்பட்ட தோரணங்கள் அந்நடு வீதியைச் சூடிக் கொண்டிருந்தன. வடக்குப் பகுதியில் மூன்று சாதித் தெருக்களும், தெற்குப் பகுதியில் மூன்று சாதித் தெருக்களும் கொண்ட அந்த ஊரின் நடுவில்தான் முதலியார் வீதி இருக்கிறது. நான்கைந்து தலைமுறைக்கு முன்பே மாடி வீடுகளால் நிறைந்த அந்த வீதியில் வீற்றிருக்கும் கங்கையம்மனுக்கு ‘நடுவீதி கங்கையம்மன்’ என்று அதனால்தான் பெயரும் வந்தது. ஊரின் கிழக்குப் பகுதியில் சேரி. அங்குத் தெருவெல்லாம் கிடையாது. சந்து பொந்துகளில் அவர்களுக்கெனக் கிடக்கும் செறங்கா நிலங்களில் மண் சுவர்களால் ஆன குடிசை வீடுகள்தாம். அதுவும் கலைத்துப் போட்ட கந்தல் துணிபோல் இருக்கும். பெரும்பாலும் கரும்புத் தோகை, மஞ்சுப் புல், பனையோலை, தென்னங்கீற்று போன்றவற்றால் வேயப்பட்ட கூரைகள். அரசாங்கப் புண்ணியத்தில் இப்போதுதான் தொகுப்பு வீடுகள் தலைகாட்டத் தொடங்கியிருக்கின்றன சேரியில். நடுவீதியின் வாசலளவுக்குக் கூடச் சேரிக் குடிசைகளின் தரை இருக்காது.

வழக்கம்போலக் கிழக்குப் பார்த்த செட்டியார் கடை பக்கமாகச் சேரியாட்கள் கூடியிருந்தார்கள். ஊரைச் சேர்ந்த மற்ற சாதியினர் நடுவீதியெங்கும் நிரம்பி வழிந்தனர். அவர்களோடு காப்புக் கட்டிய சேரியாட்களும் அடக்கம்.

“வெளியூர்ல வாக்கப்பட்ட பொண்ணுங்க, உள்ளூர்ல பொண்ணெடுத்த ஆம்பளைங்க, அவங்களுக்குப் பொறந்த பசங்க, வேடிக்க பாக்க வந்த வேரில்லாத வேத்தாளுங்க, யாரா இருந்தாலும் பொலி குடுக்குறப்பொ எட்ட நில்லுங்க! இது ஊரோட உத்தரவு!.”

ஒலிபெருக்கியிலிருந்து முதல் அறிவிப்பாக இப்படி வந்ததும், கூட்டத்திலிருந்த கால்வாசிப்பேர் வீதியில் இருந்த மாடிகளுக்கும் பெரிய பாறை பதிந்த வீட்டுத் திண்ணைகளுக்குமாய் ஒதுங்கினர். செட்டியார் கடைப் பக்கத்தில் இருக்கும் நீர்த் தேக்கத் தொட்டிமீதும், பயணிகள் நிழற்கூரைமீதும் சேரி சனங்கள் ஏறிக் கொண்டனர். இன்னும் சிலர் சவுக்குக் கொம்புகளால் கட்டப்பட்டிருந்த சாரங்களில் தஞ்சமடைந்தனர். விவரம் தெரியாத வெளியூர்ச் சிறுவர்களை விழாக் குழுவினர் அப்புறப்படுத்தித் தெருவை அடைகாத்து நின்றனர்.

அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேரில் வீற்றிருக்க, பம்பைக்காரர்கள் பலம் கொண்டு அடித்து, மூச்சிறைக்க ஆடிப் பாடி வர்ணனை செய்ய, சாமி வந்த பெண்கள் பலரும் கூட்டத்திலிருந்து ஆங்காங்கே துள்ளிக் குதித்துப் பம்பைக்காரர்களைச் சூழ்ந்து கொண்டனர்.

காளியாத்தா, மாரியாத்தா, ஓம் சக்தியென வந்திருந்த எல்லாச் சாமிகளும் சொல்லும் வாக்குகளைப் பம்பைக்காரர்கள் வழியாக ஊர்க்காரர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.

திருவிழாவில் ஏதாவது குறையா? மனம் நிறைந்திருக்கிறதா? மக்களைக் காப்பாயா? பொலி போதுமா? மழை வருமா? மண் விளையுமா? நோய் நொடி தீருமா? இப்படியான கேள்விகள்தாம் பெரும்பாலும் சாமி வந்தவர்களிடம் கேட்பது வழக்கம். அப்படித்தான் கேட்டுக் கொண்டிருந்தார்கள் இப்போதும்.

கூட்டத்திலிருந்து தெளிவாக ஓர் குரல்..,

“இந்தமுற வேர்ல்ட் கப்பு இந்தியா அடிக்குமா ஆத்தா?”

எல்லாரும் ஒருகணம் அதிர்ந்து போனார்கள். ஏழாவது படிக்கும் டோனிஜாதான் இந்தக் கேள்வியைக் கேட்டவன்.

எல்லாரிடமும் ஆத்திரமும் அபசக் குணமும் தென்பட்டன. அனைவரும் கண்கள் சிவக்க அவனை எரித்து விடுவதுபோல் பார்த்தனர்.

“அட்ஜேய், சோமன் பேரா! சொம்மா இருக்க மாட்டியா, என்னா வாய் ரொம்ப நீள்து? வேப்ப மண்டையில வாங்கணுமா அடி?” சாமியாடிக் கொண்டிருந்த மஞ்சாக்கண்ணி அவனை நோக்கிப் பாய்ந்தபடி எச்சரித்தாள்.

“ஐயா.., சாமிக்கு எங்க தாத்தா பேரு கூடத் தெரியுதே!”

மகிழ்ச்சியுடன் மீண்டும் சொன்னான்.

சாமியாடிக் கொண்டிருந்தவர்களும் விழாக் குழுவினரும் கோபத்தோடு நாக்கைக் கடித்தபடி அவனைச் சுற்றி வளைப்பதற்குள் எங்கிருந்தோ வந்த பொதுக்கன் கிழவன், அவனை அளேக்கா தூக்கித் தன் தோள்மீது வைத்துக் கொண்டு,

“கொழந்த தெரியாமக் கேட்டுப்புட்டான் போங்க தாயி” என்று அவன்பாட்டுக்குக் கூட்டத்தை விட்டு விறுவிறுவெனச் சந்திரி தெரியாமல் டோனிஜாவோடு கூட்டத்திலிருந்து மறைந்து போனான். கிழவனுக்கு அப்படியொரு மகிழ்ச்சி. கடவுளுக்கு எதிரான அவனது அந்த ஒற்றைக் கேள்வியால் கடைக்குக் கூட்டிப் போய் அவன் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

“காலனிக்காரப் பையனுக்குக் கொழுப்பப் பாத்தியா?”,

“உஸ்கோலுக்குப் போற திமிரு!”,

“பொதுக்கன் வராமப் போயிருந்தா என்னா கெதியாயிருக்குமோ அது?”

“தத்தினூண்டு இருந்துனு எந்தாலாட்டு கேள்வி கேட்டுபுட்ச்சி பாத்தியா அது!”

ஆளாளுக்குத் திட்டினார்கள். அதற்குள் டோனிஜா வீட்டிற்கே போய்ச் சேர்ந்திருந்தான்.

சற்றை நேரத்தில் சலசலப்பு அடங்கியது. கன்றாக இருந்தபோது திருவிழாவுக்காக நேர்ந்து விட்ட பொலி எருமை, கடந்த ஐந்து வருடங்களாகக் கண்டதைத் தின்று வகை தொகை இல்லாமல் வளர்ந்து கொழுத்திருந்தது. மூக்கணாங்கயிறு கூட இல்லாத அதை யாரும் கட்டிப் போடவோ, துரத்தவோ முடியாது. ஊரிலுள்ள யார் தோட்டத்திலும், யார் பட்டியிலும் நுழையும். அதற்கெனப் பல வீடுகளில் தொட்டித் தண்ணீரும் புல்லும் பிண்ணாக்கும் தாராளமாகக் கிடைக்கும். அப்படிக் கொடுப்பது சாமிக்குக் கொடுப்பதற்குச் சமம். எந்தக் கள்ளக் கொடி போரும் வைக்கோல் போரும் அதற்கு மிஞ்சியதுதான். அதை அடிக்கவோ துன்புறுத்தவோ யாரும் எப்போதும் துணிவதில்லை.

“தோட்டி வகையறா!, கொலக்குத்தி வகையறா, தொல்லுகுட்டி வகையறா!, ரெண்டு ஜாதி வண்ணாமூடுங்கொ!… உங்களுக்குச் சேதி என்னான்னா, ஊருக்குச் சம்பந்தப்படாத வேத்தாளுங்க தெருவுல கால் நனைக்காம பாத்துக்கணும்!.. உன்னங் கொஞ்ச நேரத்தால பொலி நடக்கப் போகுது. பொலி… பொலி… பொலியோ….”

ஒலிபெருக்கியிலிருந்து வந்த இரண்டாவது அறிவிப்பைத் தொடர்ந்து, ஆட்டமும் விசிலும் ஆங்காங்கே ஆர்ப்பரித்தன.

கொப்பரைகளில் ஊற்றப்பட்டிருந்த கூழ், வைக்கோல் பரப்பி அதன்மீது காடா துணி விரித்துக் கொட்டப்பட்டிருந்த கும்பச் சோறு, கும்பச் சோறுக்கு ஏற்ற முருங்கைக் கீரை, அவரை- கத்தரிக்காய் கூட்டு, பூசணிக்காய் வறுவல், கருவாடு சேர்த்த காராமணி- மொச்சைக் குழம்பு, தாம்பூலத் தட்டுகளில் நிரம்பியிருந்த வெல்லம் கலந்த பச்சரிசி மாவு, மாவிளக்கு, அதிரசம், முறுக்கு, சீடை, கலகலா, ஓட்டவடை, எள்ளுருண்டை, சிம்பிளி, பொறிவலங்காய்க் கட்டி, எனச் சாமிக்குப் பிடித்தமான சகலமும் படையலுக்காக வைக்கப்பட்டிருந்தன.

கற்பூரம் கொளுத்தி கையெடுத்துக் கும்பிட்டு மரக்கால் அளவுள்ள தொலுகுட்டிக்குச் சூடம் காண்பித்து தன் வகையறாக்களை வரிசையாக வரவைத்தான் எலி பொட்டலம்.

வந்தவர்கள் தொலுகுட்டியை எடுத்துக் கொடுக்க, அதன் காதுப் பட்டையைத் தன் இடது தோளில் மாட்டி, இடுப்புக்கும் அக்குளுக்கும் இறுக்கிப் பிடித்தபடி வாசிக்கலானான்,

“மழ வரணும் தாயி…
மக்க பசி தீரணும் தாயி…
கொலம் வளரணும் தாயி…
கொள்ள நோயகலணும் தாயி…
படியளக்கும் ஒனக்கு…
பாரு கொப்பர கூழு தாயி…
குலம் காக்கும் ஒனக்கு…
பாரு கும்பச் சோறும் தாயி…
மாவிளக்கோட மாட்ட…
பொலி குடுக்குறொந் தாயி…
எல்லைக்கு எல்ல நின்னு…
எரும ரத்தச் சோறு வீசுறொந் தாயி…
எல்லாம் ஏத்துக்குனு,
எங்கள நல்லா பாத்துக்கணும்…”

வாசிக்கும்போது விரலைப் பதம் பார்த்துவிடும் தொலுகுட்டியின் கடுமையான நரம்பை மீட்ட, அதற்கென இருக்கும் சிறு மோதிர அளவு கருவியைத் தன் விரல்களில் அணிந்து இசைக்க, அதிலிருந்து வரும் டொய்ங்… டொய்ங்… சத்தத்தோடு ஒவ்வொரு வரிக்கும் இடைவிட்டு தொலுகுட்டி வகையறாக்கள் சேர்ந்து பாடத் திருவிழா முறையாகத் தொடங்கி விட்டது.

சில குடும்பங்கள் தங்களது நேர்த்திக்கடனான சேவல் அறுப்பு, ஆடு வெட்டுதலைச் செய்து முடித்தபின், ஊருக்குப் பொதுவான பொலி எருமை எப்போது வருமெனக் காத்திருந்தனர். தாம்புக் கயிறு தாங்காது என்பதால் வடக்கயிறு கட்டி நான்கு புறமும் இழுத்து வரப்பட்டு பொலி பீடத்தில் நிறுத்தப்பட்டது.
அதன் தினவெடுத்த சத்தமும் பாய எத்தனிக்கும் வலிமையும் கட்டுக்குள் அடங்கவில்லை. துள்ளியது. மூச்சு விடும் சத்தம் அதன் சினத்தைக் காட்டியது. பத்துக்கும் மேற்பட்ட ஆள்கள் இழுத்துப் பிடித்திருந்தபோதும் உடலைச் சிலுப்பியது.

அதுவரைக்கும் கடவுளாகக் காட்சி தந்த எருமை, தொலுகுட்டியியின் இசைக்கேற்பப் பாடி இனி எமனாக வர்ணனை செய்யப்படும்.
கன்னங் கறேலென்ற அதன் பருத்த உருவம் அந்தக் காலை நேர வெயிலுக்குக் காணக் கண் கூசியது. குன்றுக்கு மீசை முளைத்தாற்போல் அதன் கொம்புகள் பட்டைப் பட்டையாகப் படர்ந்து வளர்ந்து முறுக்கேறி இருந்தன. ஒவ்வொரு காலும் கருவேலம் மரம்போல் வைரம் பாய்ந்திருந்தன. மொத்தத்தில் கரும் பாறையாய்த் தெரிந்தது அந்தக் கண்டி. இரு கொம்புகளையும் கழுத்தோடு சேர்த்துக் கட்டி முன்னால் சிலர் பிடித்திருந்தனர். முன்னங்கால்களையும் பின்னங்கால்களையும் அவ்வாறே கட்டி எல்லாப் பக்கங்களிலும் இழுத்துப் பிடித்துப் பனையின் அடி மரத் தண்டுகளால் ஆன தடுக்குக்குள் நகராமல் அடைகாத்துப் பிடித்தனர். வெட்டுவதற்கு வாகாய் அதன் பிடரியும் கட்டி இழுக்கப்பட்டது. கரைத்திருந்த மஞ்சள் நீரைக் குடியான வண்ணான் மொடாவில் மொண்டு மொண்டு கொடுக்க, சேரி வண்ணான் வாங்கி வாங்கி ஊற்றி நனைத்தான். நனைந்த எருமை, தன் பருத்த திமிலைச் சிலுப்பித் தலையை ஆட்டியது. பலம் கொண்டு கயிற்றால் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் இடரி, நிலைத் தடுமாறி மீண்டும் சுதாரித்து நின்றனர்.

“ஆத்தா உத்தரவு குடுத்துட்டாடா சம்பா! எடு கத்திய” மீண்டும் ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு வந்தது.

மனிதர்களின் மார்பு உயரம் வளர்ந்திருந்த அதை வெட்ட, பலம் கொண்டு கைகளை எவ்வளவு உயர்த்த முடியுமோ அவ்வளவு உயர்த்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்தமுறை சம்பனுக்குப் பொலி வாய்ப்பு என்பதால், பரிவட்டம் கட்டப்பட்டு பார்க்கத் தோரணையாக இருந்தான். இரண்டு கைகளிலும் கத்தியை ஏந்தி எகிறிக் குதித்தவனாய் ஒரே வெட்டு வெட்டி அடங்கினான். கண் இமைக்கும் நேரத்தில் தலை துண்டாகி ரத்தம் பீய்ச்சியடித்தது. சுற்றி இருந்தவர்கள் ரத்தத்தால் நனைந்து போனார்கள். தலை விழுந்த மறுகணமே இடது முன்னங் காலையும் வெட்டித் தனியாக எடுத்தான். மூன்று கால்களோடு முண்டமாய் விலுக் விலுக்கென்று உதைத்துச் சுற்றிச் சுற்றித் தெருவை ரத்தச் சகதியாய் மாற்றியது. மீண்டும் மஞ்சள் நீரை அதன் உடலெங்கும் ஊற்றியபோது ரத்தம் தெருவெங்கும் பரவியது. ஏற்கெனவே வெட்டப்படிருந்த ஆடுகள், கோழிகளின் ரத்தங்களால் செந்நிறத்தில் கிடந்த தெரு, பொலி எருமையின் ரத்தத்தால் ஆறாகவே ஓடியது.

தண்ணீரும் ரத்தமும் சேர்ந்து கவுச்சி நெடி பரவியது நடு வீதியில். ரத்தச் சகதியைத் தெரிந்தோ தெரியாமலோ வெளியூர்க்காரர்கள் மிதித்து விட்டால் அவ்வளவுதான். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு விளைச்சலும் கிடையாது, வெள்ளாமையும் கிடையாது. கொள்ளை நோயாலும் பஞ்சத்தாலும் ஊர்ப் பாழாய்ப் போகும் என்பது எல்லார்க்கும் தெரிந்த விஷயம். அதனால் வெளியூரைச் சேர்ந்த யாரும் எக்காரணம் கொண்டும் வீதியில் இறங்க அனுமதி இல்லை.

வெளியூர்க்காரர்கள் ரத்தம் தோய்ந்த வீதியைக் கால்களால் மிதித்து விட்டால் ஊரின் செழிப்பு மொத்தமும் மிதித்தவரின் ஊருக்குப் போய்விடும். அப்படித்தான் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே திருவிழாவில் கவசம்பட்டைச் சேர்ந்த குழந்தை ஒன்று தெரியாமல் கால் நனைத்துவிட, குழந்தையைப் பலி கொடுக்கச் சொல்லிச் சாமியாடி ஊதனக் காலன் உத்தரவு போட்டான்.

சாமி போட்ட உத்தரவை மீற முடியாது என்று ஒருசாராரும், ஆயிரந்தான் இருந்தாலும் அது குழந்தையாச்சே என்று ஒரு சாராரும் பதறினர். என்ன முடிவெடுப்பதென்று அப்போதைய பெரிய முதலியாரான கொல்லப்பனுக்குத் தெரியவில்லை.

பம்பையை அடிக்கச் சொல்லி மீண்டும் குழந்தையின் பெற்றோர் மடிப்பிச்சைக் கேட்டனர். தெய்வம் வந்தாடிய ஊர்த்தெரு பிச்சாநாத்தாவும் மனமிரங்கவில்லை. ஆத்தாவின் நோக்கம் என்னவென்று யாருக்கும் தெரியாது. ஆனால், பிச்சாநாத்தாவின் நோக்கம் அந்தக் குழந்தையின்மீது குரூரமாய்த் தெரிந்தது.

“அசலூருக் கொழந்தன்னாலும் அதுவும் எந்துதான்டா அறிவு நெனவு கெட்டவனுங்களே! ஆத்தா சொல்றன் நல்லா கேளுங்கடா! அடுத்த திர்னா வர்ற வரைக்கும் ஊரவுட்டு அந்தப் பாலகன அனுப்பக் கூடாது! கோயில்ல பூஜ பண்ணி புண்ணியம் தேடட்டும். அதுவரிக்கும் அவங்கப்பன் ஆத்தாளும் இங்கியே கெடக்கட்டும்!”

கூட்டத்திலிருந்து உறுமிக் கொண்டு வந்த சேரியைச் சேர்ந்த வீரிக் கிழவிதான் ‘தொலுகுட்டிய அடிங்கடா’ என்று சத்தமிட்டபடி குழந்தையைச் சாதூர்யமாகக் காப்பாற்றித் தந்தாள்.

புல் முளைத்திருக்கும் வீரியின் குழியில் இப்போதும் அந்தக் குடும்பம் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது.

வெட்டப்பட்ட எருமை தன் துடிப்பை நிறுத்தியதும் அதன் கழுத்திலிருந்து உசுநூரு வரைக்கும் சூரிக் கத்தியால் ஆழமாய்க் கிழித்துக் குடலை உருவினான் சோமன். எஞ்சியிருந்த ரத்தமும் நிணமும் சொட்டச் சொட்ட பிடுங்கப்பட்ட குடல்களைக் காப்புக் கட்டியிருந்த சேரியாட்கள் தங்கள் கழுத்துகளில் மாலைகளாக அணிந்து கொண்டனர்.

ரத்தம் கலந்த சேற்றுச் சக்தியில் உருண்டு புரண்டனர் இன்னும் சில சேரியாட்கள்.

ஏற்கெனவே சட்டியில் பிடித்து வைக்கப்பட்டிருந்த எருமையின் ரத்தத்தில் கும்பச் சோற்றைப் பிசைந்தான் கழுதக்குறத்தி. மாதுளைப் பரல்கள்போல் உதிர்ந்த ரத்தச் சோற்றைப் பார்த்து ஆர்ப்பரித்து “பொலி… பொலி… பொலிச் சோறே…! என்று கத்தினான். கழுதக்குறத்தியின் அரற்றலைப் பார்த்து மீண்டும் கூட்டம் ஆர்ப்பரித்து. பொலி… பொலி… பொலிச் சோறே…

பொலிச் சோற்றை எல்லைதோறும் வீசியெறிந்து, எல்லைக்கொரு ஆட்டை வெட்டி, அப்படியே எருமை மாட்டுத் தலையைச் சேர வேண்டிய இடத்தில் சேர்த்து விட்டால் திருவிழா முடிந்து விடும்.

எலி பொட்டலத்தின் பாடலும், கைகளில் வாளேந்திய குடியானவர்களின் வெறியாட்டமும் முன்னே போய்க் கொண்டிருந்தது. வாளேந்தியுள்ள அந்தக் கூட்டத்தை யாரும் வழிமறிக்கக் கூடாது. மீறி மறித்தால் வெட்டுப்பட்டுச் சாவது நிச்சயம். அதற்குப் பயந்து யாரும் எதிரே வரமாட்டார்கள். தெரியாமல் யாராவது வந்து விட்டால் நெடுஞ்சாண்கிடையாய்க் காலில் விழுந்து விட வேண்டும். வெறியாட்டம் போடுபவர்கள் காலில் விழுந்தவரை மன்னித்துத் தாண்டிச் சென்று விடுவர். எதிரே நிற்பதோ ஒதுங்குவதோ பேராபத்து.

துண்டிக்கப்பட்ட எருமையின் வலது காலை, வெட்டப்பட்ட எருமையின் வாயில் வைத்துக் கடிக்கும்படித் திணித்திருந்தனர். ரத்தம் வடியும் எருமைத் தலையைச் சும்மாடு எதுமில்லாமல் பொந்தனின் தலையில் தூக்கி வைத்தனர். அவன் பின்னால் குடலை உருவி மாலையிட்டுக் கொண்ட கூட்டமும் ரத்தச் சோற்றை வைத்திருக்கும் கழுதகுறத்தியும் வலம் வந்தனர்.

பொந்தனின் தலை, கழுத்து, தோள், மார்பு, வயிறென உடலெங்கும் ரத்தம் சொட்டி வடிந்தது. குடல் மாலை போட்டுக் கொண்டவர்கள் நாக்கைக் கடித்துக் கொண்டு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். தெற்கே லச்சிகான் தோப்பு, வடக்கே பெரிய கானாறு, கிழக்கே காளியம்மன் தோப்பு, மேற்கே ஒண்டி அரச மரம் என்று நான்கு எல்லைகளையும் மிதித்து விட்டு வர அரை நாளானது.

மாலை ஐந்து மணிவாக்கில், மேற்கு எல்லை அரச மரத்தடிக்கு வந்து சேர்ந்தது கூட்டம். அங்கே இருந்த தலை துண்டிக்கப்பட்ட புத்தர் சிலைமீது கொண்டு வந்திருக்கும் எருமைத் தலையை வைத்து எக்காளமிட்டுச் சிரித்து வசைபாட வேண்டும். அப்போதுதான் திருவிழா முழுமை பெறும்.

ஊரில் உலகத்தில் இல்லாத அத்தனை கெட்ட வார்த்தைகளும் சர்வசாதாரணமாகப் பயன்படுத்தபடும் அப்போது. காப்புக் கட்டியவர்களும் பம்பைக்காரர்களும்தான் விசைமொழிய ஆயத்தமாயினர். குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என்று எல்லாரும் அதைப் பார்த்துச் சிரித்து மகிழ்வர். அதுதான் திருவிழாவின் இறுதிக்கட்டம். அப்போதுதான் திருவிழா நல்லபடியாக முடிந்ததாகக் கொள்ளப்படும்.

“தலையில்லா முண்டமே!
துணியில்லாப் பிண்டமே!
உனக்கெதுக்கு உபதேசம்? ஓடிப் போ பரதேசம்.
எட்ட நில்லாக்காட்டி வெட்டிப் புடுவொம்.
எதாவது மூச்சு விட்ட, இங்கியே பொதச்சிப் புடுவொம்.
தல வோணுமா தல? இந்தா எடுத்துக்கொ….”
இன்னும் இறக்கி வைக்கப் படாத பொந்தனின் தலைமீது இருந்த எருமைத் தலையைக் காட்டிக் கெக்கலிட்டுச் சிரித்தார்கள் புத்தர் சிலையைப் பார்த்து.

“எரும தலைய தூக்கினு போறவங்க, ரத்தச் சோறு எறைக்கிறவங்க, கெட்ட வார்த்தை பேசப் போறவங்க, பம்பக்காரங்க எல்லாரும் அப்படியே நில்லுங்க! இந்த வருஷத்திலிருந்து திர்னாவ நிப்பாட்டச் சொல்லி ஐகோர்ட் உத்தரவு. யாரும் இதுக்கு மேல ஓரடி எடுத்து வைக்கக் கூடாது! மீறுனா எல்லாரையும் புச்சினு போயி உள்ள தள்ள வேண்டி வரும்!”

யாரும் எதிர்பாராத இந்த அறிவிப்பு ஒருபுறம் இருக்க, வேனில் வந்த இருபதுக்கும் மேற்பட்ட காவலர்கள் வாளேந்தி வெறியாட்டம் போட்டுக் கொண்டிருந்தவர்களின் எதிரே நின்றனர்.

அதிகாரத்தின் முன் முனை மங்கிய வாள்களும் திமிர் ஒடுங்கிய மனிதர்களும் செய்வதறியாது திகைத்தனர்.

திருவிழாவில் சாதி பேதம் பார்க்கப்படுவதாகவும், தலித் மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்படாமல் இழிவுபடுத்துவதாகவும் தடையாணை வாங்கியிருந்தான் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து வயது சிறுவனாகப் பொலியிலிருந்து தப்பிய கவசம்பட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் திராவிடப் பாண்டியன்.


Art : Vivid Bison Art

பாரத் தமிழ்
பாரத் தமிழ்

எழுத்தாளர் பாரத் தமிழ், வேலூர் மாவட்டம், கெம்மங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றாலும், நிலவியல் சார்ந்த அடையாளத்தை மட்டுமன்றி அறமற்ற எந்த அடையாளத்தையும் விரும்பாதவர். குழந்தைகள் நலன் சார்ந்து இயங்கி வரும் இவர், ஆபத்தில் சிக்கிய நூற்றுக்கணக்கான குழந்தைகளை மீட்டிருக்கிறார். சிறார் சிறையில் பணிசெய்த அனுபவம் பெற்றவர். வரலாற்று ஆய்வாளர், ஓவியர், சமூகச் செயற்பாட்டாளர் எனப் பன்முகம் கொண்டவர். ‘நிலமற்றவனை நனைக்கும் மழை’ எனும் கவிதைத் தொகுப்பையும் ‘டாஃபி’ எனும் சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார்.

Share :

10 responses to “பொலி எருமை”

  1. தமிழ்வேந்தன்
    December 2, 2025

    வாழ்த்துகள் அண்ணா…
    கதையை படிக்கும்போது திருவிழாவில் இருந்து நேரில் பார்த்தது போல் ஒரு அனுபவம் கிடைத்தது அண்ணா.முடிவில் சிறுவனாக இருந்த திராவிட பாண்டியன் வழக்கறிஞராக வந்து தடையாணை வாங்குவது அருமை அண்ணா.திருவிழாவில் நடக்கும் இது போன்ற சாதிய தீண்டாமைகளுக்கு கண்டிப்பாக ஊருக்கு ஒரு திராவிட பாண்டியன் தேவை இருந்து கொண்டே இருக்கிறது அண்ணா💙❤️

    Reply
  2. Jayaprakash
    December 2, 2025

    இனிமே திருவிழா நடக்க கூடாது னு போலீஸ் சொல்றாங்களே என்னாவா இருக்கும் அப்டினு நெனச்சிட்டே அடுத்த வரிகள் வரும்போது, எது திருவிழாவ நிறுத்துனது 25 வருசத்துக்கு முன்னாடி பொலியில இருந்து தப்பிச்ச சிறுவனா அப்டினு ஆச்சரியமடைந்தது மனம். அடுத்த வரி இன்னும் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது. என்னது அந்த சின்னப்பையன் நம்ம திராவிடப் பாண்டியன் அண்ணனா என்று, அடடா எவ்வளவு பெரிய வேல செஞ்சிருக்காரு அருமை அப்டினு நெனச்சிட்டு இருக்கும்போது ஒரு மனமாற்றம். சமூகத்து மேல அக்கற இருக்குற யார் வேணாலும் தான் இத செய்வாங்க அப்டினு ஒரு மனம் நினைக்க, சரிதான் ஆனா அப்டி செய்றதால ஒரு தரப்பு மக்கள பகைக்க வேண்டிய சூழல் வருமே அதுவும் ஆதிக்க மனம் கொண்ட தரப்பினர பகச்சா என்ன விளைவுகள் வரும் னு நல்லாவே தெரியும். ஆனா அது தெரிஞ்சும் விழாவ நிறுத்திருக்காறே அண்ணன் அவர் உண்மையாவே பெரிய விசயம் பண்ணிருக்காரு அப்டினு இரு மனம் எனக்குள்ளேயே பேசிக்கொண்டிருக்கிறது. இப்படி ஒரு நிமிட மனத் தாக்கமே ஆனாலும் அதை தன்வயப் படுத்திக்கொள்ளும் வகையான கதையை எழுதிய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். இல்லை இல்லை இந்த முறை வாழ்த்துக்கள் ஆசிரியருக்கில்லை. ஆசிரியரின் தம்பியான அண்ணன் திராவிடப் பாண்டியன் அவர்களுக்கே. இன்னும் சொல்லப்போனால் சிறுவயதிலேயே சாமியாடும் பெண்களின் மீதான சந்தேகத்தை கொண்ட சிறு வயது பையன் டோனிஜாவுக்கு இன்னுமொருமுறை வாழ்த்துக்கள். இத்தனை வாழ்த்துக்கள் கூறியும் திருப்தி கொள்ளாத என் மனம், இத்தனைக்கும் காரணமாக இருந்த டோனிஜாவை பொலியிலிருந்து காப்பாற்றிய வீரிக் கிழவிக்கு உளமாற நன்றியை தெரிவிக்க உள்ளம் விழைகின்றது. அவரால் தானே அத்தனையும் நிகழ்ந்துள்ளது. ❤️

    Reply
  3. தமிழன் இளையா 8883377707
    December 2, 2025

    வழக்கொழிந்த வார்த்தைகள் விளக்கொளியாய் ஜொலித்தது
    சிறுகதையில்… சமரசமற்ற அப்பட்ட
    எழுத்து நல்ல திருப்பமான முடிவு
    வாழ்த்துக்கள்பொலி எருமைக்கு

    Reply
  4. Mukilan C
    December 2, 2025

    வணக்கம் தோழர். பொலி எருமை சிறுகதையை வாசித்தேன். இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும், எத்தனையோ தொழில்நுட்பங்கள் வந்த பின்பும் கூட சாதி மிகவும் உறுதித்தன்மையுடன் இருப்பது வருந்தத்தக்கது. இருப்பினும் ஒரு படைப்பாளர் எப்போதும் எதிர்காலம் பற்றி சிந்திப்பவராகவும் தன்னுடைய படைப்புகளின் வாயிலாக சமூகத்தில் மாற்றத்தை நோக்கிய சிந்தனையை விதைப்பதும் மிகவும் இன்றியமையாதது. பொலி எருமை கதையில் நீங்கள் அதைக் தான் செய்துள்ளீர்கள். அரசியல் சமூக பொருளாதார அறிவோடு கூடிய கல்வி இந்த சமூகத்தில் எவ்விதமான மாற்றங்களை உருவாக்கும் என்றும் , இங்கு அறிவால் மட்டுமே அனைத்தையும் சாதிக்க முடியும் என்றும் உணர்த்தி எதிர்வரும் தலைமுறையை கல்வியை நோக்கி நகர்த்தவும், மாற்றத்தை நோக்கி சிந்திக்கவும் ஆகச் சிறந்த படைப்பைத் தந்த உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் தோழர்.

    Reply
  5. Dharmadurai Murugan
    December 2, 2025

    படித்தேன் தோழர். ரொம்ப அருமையா இருக்கு.
    எங்க ஊர் புறத்தில் நடப்பதே போன்றே இருக்கிறது.கொஞ்சம் மாறுபட்ட கதை அவ்வளவு தான்.

    Reply
  6. சக்திசம்பத்
    December 2, 2025

    கட்டமைக்கப்பட்ட சாதியை காவங்காலத்துக்கும் காப்பாற்றிக் கொண்டு செல்வதற்கு திருவிழாக்களும் சாதிய பாகுபாட்டுடனேயே வடிவமைக்கப் பட்டிருக்கிறது என்பதை காட்சி படுத்தியிருக்கிரீர்கள்.சிறுவனின் கேள்வி எல்லாவற்றையும் கேள்குறியாக்குகிறது.சிறப்பான முடிவு.தொடரட்டும் தங்கள் முற்போக்கு எழுத்துகள்.
    வாழ்த்துகள் தோழர்.

    Reply
  7. தமிழ் வேந்தன். நே
    December 2, 2025

    வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐நீங்கள் எழுதிய பொலி எருமை கதை மிக அருமையாக இருந்தது. அந்த கதையை படிக்கும் போதே மனதில் நேரில் பார்ப்பது போல இருந்தது அண்ணா. கதை இறுதியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் திராவிட பாண்டியன் ஐக்கோர்ட் தடையாணை வாங்கினான் பொலியிலிருந்து தப்பிய சிறுவன் என்று கதையை முடித்துள்ளீர். பொலி எருமை கதை இரண்டாம் அசுரன் திரைப்படம் பார்த்ததுப் போல் இருந்தது அண்ணா

    Reply
  8. தமிழ்வேந்தன். நே
    December 2, 2025

    வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐நீங்கள் எழுதிய பொலி எருமை கதை மிக அருமையாக இருந்தது. அந்த கதையை படிக்கும் போதே மனதில் நேரில் பார்ப்பது போல இருந்தது அண்ணா. கதை இறுதியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் திராவிட பாண்டியன் ஐக்கோர்ட் தடையாணை வாங்கினான் பொலியிலிருந்து தப்பிய சிறுவன் என்று கதையை முடித்துள்ளீர். பொலி எருமை கதை இரண்டாம் அசுரன் திரைப்படம் பார்த்ததுப் போல் இருந்தது அண்ணா

    Reply
  9. Thamizhvendhan.N
    December 2, 2025

    வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐நீங்கள் எழுதிய பொலி எருமை கதை மிக அருமையாக இருந்தது. அந்த கதையை படிக்கும் போதே மனதில் நேரில் பார்ப்பது போல இருந்தது அண்ணா. கதை இறுதியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் திராவிட பாண்டியன் ஐக்கோர்ட் தடையாணை வாங்கினான் பொலியிலிருந்து தப்பிய சிறுவன் என்று கதையை முடித்துள்ளீர். பொலி எருமை கதை இரண்டாம் அசுரன் திரைப்படம் பார்த்ததுப் போல் இருந்தது அண்ணா

    Reply
  10. Ramkumar M
    December 2, 2025

    அருமை அண்ணா வாசிக்கும் போது என் எண்ணம் எங்கெங்கோ போய் வந்தது கண் முன்னே நிகழ்வது போலவே பாவித்து கொண்டேன் எங்கள் ஊரில் ஆண்டு தோறும் நடக்கும் செல்லியம்மன் திருவிழாவில் இன்றளவும் இப்படி தான் நடக்கிறது இதே போல் பல வக்கீல்கள் வர வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : யோகதாரா

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (4)
  • கதை (10)
  • கவிதை (14)
  • கவிதை (80)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (45)
  • சிறுகதை (2)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (4)
  • கதை (10)
  • கவிதை (14)
  • கவிதை (80)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (45)
  • சிறுகதை (2)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top