Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

பிறவி

அஜயன் பாலா
அஜயன் பாலா
October 1, 2025
பிறவி

‘‘சாரா இங்க வாயேன்’’

‘‘சொல்லுங்க அடுப்படியில வேலை இருக்கு…’’

‘‘டிவில பாரேன் பாப்பா நம்ம மஞ்சு ஜாடையிலயே இருக்கு’’

‘‘உங்களுக்கு எப்பவும் இதே வேலைதான்’’

அவசரமாக டிவி ஹாலுக்கு வந்த சாரா கணவன் அமர்ந்திருந்த சோபாவின் அருகே வந்து நின்று டிவியைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள்.

சட்டென முகம் மாறியது, அவள் அங்கிருந்து விலகி படுக்கையறைக்குள் நுழைய கேசவன் அப்படியே அமர்ந்து விட்டான். அவன் முகம் தொலைக்காட்சியில் இருந்தாலும் மனம் பெரும் பாரத்தில் கனத்திருந்தது.

அந்த விளம்பரம் போய் சீரியல் மீண்டும் துவங்கி ஓடிக் கொண்டிருந்தது, ஆனால் அவன் கண்ணின் விழித்திரைகளில் தொலைக்காட்சி உருவங்கள் குட்டியாக அசைந்து கொண்டிருந்த போது சட்டென நீர் பொங்கி கன்னத்தில் வழிந்துகொண்டிருந்தது. அவசரமாக கையால் கன்னத்தைத் துடைத்தான், படுக்கையறைக்குள் மனைவி சாரா விசும்புவது சன்னமாகக் கேட்டது.

அவனுக்கு நன்றாகத் தெரியும் சாரா இதைப் பார்த்தால் கண்டிப்பாக அழுவாள். அதற்காகத்தான் அவளை வரச் சொன்னான். அழட்டும்… எல்லாத்துக்கும் அவள்தான் காரணம் அவள் அந்த வேதனையிலிருந்து தப்பிக்கக் கூடாது. தான் செய்த தவறுக்காக தினம் தினம் மருகி மருகி உருக்குலைய வேண்டும். குழந்தை அப்படிப் பிறப்பது யார் குற்றம்., கேசவனுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் வாழ்க்கையின் அடிப்படை விதிகள் குறித்து நிறைய கற்பிதங்கள் உண்டு.

படித்து முடித்து வேலையில்லாமல் வாழ்ந்த இடைப்பட்ட காலத்தில், அவன் வாழ்வில் நேர்ந்த உச்சகட்ட துயரங்களின் வடு இன்னமும் அவனுக்குள் ஆழமாகப் பொதிந்து கிடக்கிறது. அவற்றிலிருந்து அவன் தப்பிக்க முடிந்ததே இந்த ஒரு எண்ணத்தின் பால்தான். அன்று அப்படி ஒரு குழந்தை பிறந்த செய்தியை டாக்டர் அவனுக்குச் சொன்னவுடனே மனதில் தோன்றியதும் அதுதான்.

சென்ற வாரம் கூட ரேஷன் கார்டு ஆதார் அட்டையோடு இணைக்க அருகிலிருக்கும் இண்டர்நெட் செண்டருக்குச் சென்ற போது ஒரு பேச நடக்க முடியாத குழந்தையை அங்கு வந்த பெற்றவர்கள் இருவரும் எப்படிக் கொஞ்சினார்கள். பிறவியிலேயே குழந்தை கைகால் சூம்பிக்கிடப்பது யார் குற்றம், ஒவ்வொரு உயிரும் இந்த உலகில் காரணத்தோடுதான் பிறக்கின்றது, பிறவியிலேயே குருடனாகவும் செவிடனாகவும் ஒருவன் பிறப்பதற்கும் ஏதோ காரணம் இருக்கிறது. இயற்கையின் இந்த முரட்டு விதிகளுக்கு எதிராகப் போராடி ஜெயிப்பதுதான் வாழ்க்கை.

நன்றாகப் பிறந்து ஓடி ஆடி வளர்ந்தபின் விபத்தில் கைகால் இழந்து வீட்டில் கிடப்பதை விட இது எவ்வளவோ மேல். அன்று டாக்டர் தெளிவாக விலாவாரியாகச் சொன்னார். இதுபோன்ற குழந்தைகள் பிறந்தால் நம் வீட்டில் கடவுள் பிறந்திருப்பதாக நினைத்துக் கவனித்துக் கொள்ள வேண்டும் என ஒரு சாமியாரைப் போல லெக்சர் கொடுத்தார். ஆனாலும் அவள் கேட்கவில்லை. பிடிவாதமாய் இருந்து விட்டாள். பிறந்ததிலிருந்து பெற்ற தாய் குழந்தையைத் தொடாமலே இருந்தாள் எப்படி? யாருக்காவது தூக்கிக் கொடுத்து விடுங்கள் என ஹிஸ்டீரியா போல கத்தினாள்.

அந்த இரண்டு மாதங்களும் வீட்டில் நரக வேதனை. அழும் குழந்தைக்குப் பால்கூடக் கொடுக்கமாட்டேன் என்ற அவளுடைய பிடிவாதம். இது எல்லாம் அவனுக்கு அவளைக் கொலை செய்துவிடும் அளவுக்குக் கோபத்தைக் கொடுத்தது. ஒரு வேளை தான் படித்து வளர்ந்த ஹாஸ்டலும் அது உண்டாக்கிய சூழலும்தான் தன்னை இப்படிக் கோழையாக சாத்வீகனாக ஆக்கிவிட்டதோ என உணர்ந்தான்

மேலும் குழந்தை அப்படிப் பிறந்ததற்குக் காரணம் ஜீன்களின் குறைபாடு காரணமாகவும் இருக்கலாம் என டாக்டர் சொன்ன போது அவனுக்குச் சட்டெனத் தன் இரண்டாவது பெரியப்பாவின் பையன் ஞாபகத்துக்கு வந்தான்.

ஒருவேளை தனது மரபணு பிசகுதானோ என்ற சந்தேகம் வேறு அவனைக் குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கியது. நல்ல வேளையாக டாக்டரிடம் இதை அப்போதைக்குச் சொல்லவில்லை. இதெல்லாம்தான் தன்னை அவளிடம் பேச முடியாமல் தடுத்துவிட்டன.

ஒருநாள் சாராவின் அப்பா கேசவனின் மாமனார் மருமகனை மாடிக்கு வரச் சொன்னார். ஏதோ பேச அழைக்கிறார் என அவனும் மொட்டை மாடிக்குச் செல்ல, சட்டெனக் காலில் விழுந்தவரைப் பார்த்துப் பதறிவிட்டான் ‘‘மாப்ள என்னை மன்னிச்சுடுங்க. எனக்கு உலகமே என் பொண்ணுதான். அவ போனதுக்கு அப்புறம் பொண்ணுக்காகவே வாழ்ந்துட்டன். அவ இப்படி டெய்லி அழதுகிட்டு வாழறது எனக்குப் புடிக்கலை… கடைசிக் காலத்துல அவ முகத்துல சந்தோஷத்தைப் பாக்க ஆசைப்பட்றேன்’’ என்றவர்.. ‘‘குழந்தைய யார்கிட்டயாவது குடுத்துடலாம்னு இருக்கேன்’’ என்றார்.

உங்களுக்கென்ன ராஜா மாதிரி இருக்கீங்க, அவளும் சின்னப் பொண்ணு. கொஞ்சம் ஆரம்பத்துலயே செக்பண்னி நல்ல டாக்டரா பாத்து லட்சக்கணக்குல செலவு செஞ்சாவது நல்ல குழந்தையா பெத்துக்கலாம். எல்லாம் விசாரிச்சுட்டன் டாக்டர் கூட சரின்னு சொல்லிருக்கார்..’’

‘‘சரி அதுக்கு இப்படிப் பண்றது தப்பு இல்லையா மாமா’’ கேள்வி இதயத்திலேயே சுழன்றது. அவரிடம் எப்போதும் எதிர்த்துப் பேசியதில்லை. ஆனால் மனதில் ஒரு வெறுப்பும் கசப்பும் அவர் மீது மட்டுமல்ல அவன் ஒட்டுமொத்த வாழ்வின் மீதும்.
கோழைத்தனமும் கூட ஒரு ஊனம்தான் என அந்தக் கணத்தில் தோன்றியது.

யாரோ குழந்தையில்லாத பெண் வாங்கிக் கொள்வதாகச் சம்மதித்திருப்பதாகவும் டிரைவர் முருகன்தான் ஏற்பாடு என்றும் கூறியவர் கடைசியாக ஒரு சத்தியம் கேட்டார். இதுக்காக எந்தக் காலத்திலும் தன் மகளைக் குறை சொல்லவோ திட்டவோ கூடாது எனக் கேட்டுக்கொண்டார்

முருகன் சாராவின் அப்பாவிடம் டிரைவராக வேலை செய்து வந்தவன். பத்து வருடமாக அவன் குடும்பத்தில் நல்லது கெட்டது எல்லாம் சாரா அப்பாதான் முன்னாள் நின்று செய்து கொடுப்பவர். அந்தப் பெண் யார் என்ன விவரம் என இவர்களும் கேட்கவில்லை.
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு வரவழைத்து அங்குதான் சாராவின் அப்பா குழந்தையைத் தூக்கி அந்தப் பெண்ணிடம் கொடுத்தார். அந்தப் பெண்ணிடம் சாரா அப்பாவும் கேட்கவில்லை. முருகனும் சொல்லவில்லை. கைவிட்டுப் போனால் சரி என
முடிவெடுத்து அதைச் செய்துவிட்டனர். வெளியே போலீசுக்குத் தெரிந்தால் குற்றம் என்பதால் ரகசியமாகப் பத்து மணிக்கு மேல் முடிந்தது. குழந்தையை எது வேண்டுமானாலும் செய்துகொள் எனச் சொல்லி 2 லட்சம் பணமும் அந்தப் பெண்ணிடம் கொடுத்துள்ளார்கள்.

அன்று இரவு வீடே பெரும் துக்கத்தில் இருண்டது. ஆனால் சாரா சீக்கிரமே அந்தத் துக்கத்திலிருந்து மீண்டாள்.

அதன்பின் முருகனும் வேலையை விட்டு பெங்களூர் போய்விட்டான். தொடர்பும் இல்லை. அந்தக் காரியத்தைச் செய்யத் துணிந்த மன அழுத்தமோ என்னவோ அடுத்த மூன்றே மாதத்தில் மாரடைப்பு ஏற்பட்டு சாராவின் அப்பா மாணிக்கமும் போய்ச் சேர்ந்துவிட்டார். கேசவன் வெளியில் மாமனாருக்காகச் சில சொட்டுக் கண்ணீர் சிந்தினாலும், தான் கருத்தில் கொண்ட வாழ்க்கையின் விதி இத்தனை சீக்கிரம் அவரைக் காவு வாங்கிவிட்டதை எண்ணி மிகப்பெரிய மகிழ்ச்சி.

அவள் அப்பா சாவின் போது மனைவியை கேசவன் சமாதானப்படுத்தினாலும் ஒருவிதக் குரூர திருப்தி. அம்மா இல்லாத காரணத்துக்காக மகளின் எல்லாப் பிடிவாதங்களுக்கும் தடை சொல்லாத ஒரு அப்பாவுக்கு மாரடைப்பைவிடக் கொடூர மரணம் நிகழ்ந்திருக்க வேண்டும். கேசவனுக்கு ஒரு வகையில் விடுதலை. சரியான வேலையில்லை என்ற காரணத்தால் வீட்டோடு மாப்பிள்ளையாக்கிக் கொண்ட அவர்களது பணத்திமிரைச் சாவு வெற்றி கொள்வதாக நினைத்தான். அந்த மாபாதகத்துக்கு உடன்பட்ட கோழைத்தனத்துக்குத் தனக்கும் ஒரு நாள் பரிசு உண்டு என எதிர்பார்த்தான் .

அப்பாவின் மரணத்தை சாராவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த வீட்டை விற்றுவிட்டு இந்தப் புது ப்ளாட்டுக்கு வந்து நான்கு வருடமாகிறது. எப்போதாவது எங்காவது கைகால் சூம்பிய நிலையில் நான்கைந்து வயது குழந்தையைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்கும் இவனுக்கும் நம் குழந்தையோ என்ற படபடப்பு சூழும்.

என்னதான் அவள் அன்று அப்படிக் குழந்தையைக் கொடுத்துவிட்டாலும் அவளை மீறிய தாய்மை உணர்ச்சி அவளைப் பெரும் துக்கத்தில் அவ்வப்போது வாட்டி வதைத்துக் கொண்டுதான் இருந்தது. அழட்டும் அழட்டும் நன்றாக அழட்டும் அப்போதாவது அந்தத் தவறை அவள் உணர வேண்டும் என நினைப்பான். அதனாலேயே இன்று சற்று முன் தொலைக்காட்சியில் அதுபோன்ற குழந்தைகளைப் பற்றிய அரசு விழிப்புணர்வு விளம்பரப் படம் வந்த போது இவன் சாராவை அவசரமாக அழைத்துக் காண்பித்தான். அவன் நினைத்தது போல நடந்தது அவளும் இப்போது கட்டிலில் அழுது கொண்டிருக்கிறாள்.

பழி வாங்கிய குரூர திருப்தி உள்ளுக்குள் புகைந்தாலும் அதிலிருந்து பிடிவாதமாக வெளியில் வந்தவன் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு எழுந்து படுக்கை அறைக்குச் சென்று அழுதுகொண்டிருக்கும் மனைவியை ஆறுதலுடன் கட்டித்தழுவினான். கன்னத்தில் வழியும் உப்பு நீரை இறுக்கமான முத்தங்களால் துடைத்தான்.

கொஞ்ச நாளில் அதை மறந்து சகஜநிலைக்கு வந்தாள். ஒரு நாள் முருகன் எங்க போனான் யார்கிட்டயாவது விசாரிங்களேன் என்றவள், பின் அவளே நம்ம குழந்தை இருந்தா இப்ப வயசு நாலு இருக்கும்ல எனக் கேட்டாள். முருகனுக்குத் தெரிந்த நபர் ஒருவர் அரிசிமண்டி வைத்திருந்தார். தூரத்து உறவினர் போல அவரைப் பிடித்து முருகனின் செல்போன் நம்பரை வாங்கி போன் செய்தான்.

இரண்டு முறை ரிங் போனது எடுக்கவில்லை… வீட்டுக்கு வந்து அவன் பாத்ரூமில் முகம் கழுவிக்கொண்டிருந்த போது போன் ஒலித்தது. நினைத்தது போலவே அது முருகன்தான். சாரா தான் போனை எடுத்து வந்து கேசவனிடம் நீட்டினாள். போனை எடுத்துக் காதில் வைத்தவுடன் சாரா அவன் முகத்தையே பார்த்தாள். டிஸ்ப்ளேவில் முருகன் பெயரைப் பார்த்துவிட்டாள் போல… அவன் என்ன சொல்லப்போகிறான் என்ற படபடப்பு அவள் முகத்தில் தவிர்த்துவிட்டு வெளியில் போக நினைத்தவன் சந்தேகம்
வரும் என்பதால் அங்கிருந்தே பேசினான்.

‘‘ஹலோ நான் கேசவன் பேசறேன் முருகனா?’’

‘‘ஆமாம்’’ பதில் வந்தது.

தான் இப்போது அரக்கோணத்தில் டாக்ஸி ஓட்டுவதாகவும் சவாரியில் இருப்பதாகவும் சொன்னவன். அப்புறமா கூப்பிடறேன் என்றவன் போனை கட் பண்ணிவிட்டான். குரலில் பதற்றமும் பயமும் ஒருசேரத் தெரிந்தன. ஒருவேளை குழந்தையைத் திரும்பக் கேட்கப் போகிறோம் எனப் பயந்துவிட்டானோ என்னவோ சாராவுக்கு ஏமாற்றம். அடிக்கடி போனை எடுத்து அவனிடம் கால் வருகிறதா எனப் பார்த்துக்கொண்டாள்.

பிறகு இரண்டு நாள் கழித்து அவனாகக் கூப்பிட்டு விவரம் சொன்னான். அப்போது அவன் அருகில் மனைவி இருந்ததாகவும் அவளுக்குக் குழந்தையை வாங்கிக் கொடுத்த விவரம் தெரியாது என்பதால் கட் பண்ணியதாகவும் கூறினான்.

பொதுவாக நல விசாரிப்பு முடிந்தபின் கேசவன் தயக்கத்தோடு குழந்தை இப்ப எங்க இருக்கு முருகா எனச் சுத்திவளைத்துக் கேட்க, ‘‘என்ன சார் அன்னைக்கு அவ்ளோ சொன்னீங்க இன்னைக்குத் திடீர்னு குழந்தை எப்புடி இருக்குன்னு கேக்கறீங்க என கோபப்பட்டவன் அதெல்லாம் சொல்ல முடியாது சார். விஷயம் லீக் ஆச்சின்னா புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் உள்ள போவீங்க’’ என மிரட்டினான்.

கேசவனுக்கு இனி அவனிடம் பேசிப் பலனில்லை எனத் தெரிந்து விட்டது. அவன் யாரிடம் கொடுத்திருப்பான் எப்படித் தெரிந்து கொள்வது. முருகனிடம் நைசாகப் பேச்சுக்கொடுத்து விஷயத்தைக் கறக்க வேண்டும் யாரை அணுகலாம் என யோசித்தான். ஹாஸ்டலிலேயே வளர்ந்துவிட்டதால் நண்பர்கள் எனப் பெரிதாக யாரும் இல்லை.

மறுநாளே ஆடிட்டர் மூர்த்தியிடம் விஷயத்தை ஓபனாகச் சொல்லி ஆலோசனை கேட்டான். அவனைப் பொறுத்தவரை மூர்த்திதான் வெளியுலகம் எல்லாவற்றிற்கும் அவரிடம் ஒரு வார்த்தை கேட்டுக் கொள்வான் நெருக்கமான ஆள்.

அவரிடம் விஷயத்தைச் சொன்னபோது அவர் தன் அசிஸ்டன்ட் குமாரிடம் பேசலாம் அவன் இதில் உதவி செய்வான் எனக் கையோடு க்ளப்புக்கு வரச் சொன்னார். மாமனார் இறந்த பிறகு ஆடிட்டர்தான் அந்த க்ளப்பை அறிமுகம் செய்து வைத்தார்.

குமாரை கேசவனுக்கும் நன்றாகத் தெரியும். கொஞ்சம் விவரமானவன் சமூகத்தின் இண்டு இடுக்கு எல்லாம் அத்துபடி. நிறைய பேசுவான் குற்றப் பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து போலீஸ் நண்பர் பரிந்துரையின் பேரில் ஆடிட்டரிடம் சேர்ந்து இன்று அவருக்கே அவன்தான் முக்கிய முடிவுகளை எடுப்பதில் ஆலோசனை சொல்கிறானாம், ஆடிட்டரே பெருமையாகச் சொன்னார்.

குமாருக்கு ஏற்கெனவே விஷயம் தெரிந்திருந்தது. ‘‘சார் சொன்னார், எனக்கே கஷ்டமா இருந்தது சார் எனச் சொன்னவன். நம்பர் கொடுங்க சார் உங்களுக்கு டீடெய்ல இரண்டு நாள்ல சொல்றேன் எனக் கூறிவிட்டுக் கொஞ்சம் யோசித்துப் பின் ” நான் கடவுள் படம்
பாத்தீங்களா சார்’’ எனக் கேட்டான்.

‘‘கேள்விபட்ருக்கேன் படம் பாக்கலை’’

‘‘பாலா சார் படம் சார். பாவிப் பசங்க இந்த மாதிரி குழந்தைங்களை அவனுங்கதான் பெரும்பாலும் வாங்குவாங்க” என்று சொல்லி, ‘‘அது ஒரு பெரிய நெட்வொர்க் சார்’’ என்றவன் விலாவாரியாச் சொல்ல ஆரம்பித்தான்.

பிறகுதான் கேசவனுக்கு அந்த நெட்வொர்க் பற்றித் தெரிய வந்தது. அப்படியானால் அவனுக்குப் பிறந்த குழந்தையைப் பிச்சை எடுக்க வைத்து யாரோ ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கப் போகிறார்கள் கேசவனுக்குத் திக்கென்றிருந்தது. மனைவியிடம் சொல்லவில்லை, மனம் முழுக்கப் பெரும் இருள் சூழ்ந்தது.

இரண்டு நாள் கழித்து குமார் போன் செய்தான் ‘‘விசாரிச்சாச்சு சார் அரக்கோணத்துல் ஒரு வக்கீல் மூலமா வரவழைச்சி விலாவாரியா கேட்டாச்சு குழந்தை இப்போ பழனியில் இருக்கான் சார் என்ன செய்யலாம் சார்’’ எனக் கேட்டான்.

பின் அவனே ‘‘இந்நேரம் அது ஒரு வாழ்க்கையில் செட் ஆயிருக்கும் சார், விட்ருங்க உள்ள போனா ஏகப்பட்ட பஞ்சாயத்து. போலீஸ்ல ஆள் இருக்கு பாத்துக்கலாம்னு வயிங்க ஆனாலும் என்னைக் கேட்டா இனி விட்ருங்க நாலு வருஷம் ஆயிடுச்சில்ல’’ எனச்
சமாதானப்படுத்தினான். சாராவிடம் இது எதையும் சொல்லிக்கொள்ளவில்லை.

ஆனாலும் மனசு கேட்கவில்லை தூக்கமும் சரியாக வரவில்லை. சாரா கேட்டாள். எதுவும் சொல்லவில்லை அவள் தவறாமல் பார்க்கும் மவுனராகம் சீரியல் பார்த்து விட்டு வந்து படுத்தாள். அவள் தூங்கிவிட்டாளா என உறுதி செய்துகொண்டு மொட்டை
மாடிக்குப் போய் கேசவன் குமாருக்கு போன் செய்தான்.

‘‘சொல்லுங்க சார் இந்த நேரத்துல?’’

‘‘தூங்க முடியலை குமார் குழந்தைய நாம் போயி அட்லீஸ்ட் பாக்கவாவது முடியுமா?’’

‘‘சார் வேணாம் சார் அது ரொம்ப கொடுமையா இருக்கும் உங்களால தாங்கமுடியாது… வேணும்னா நான் இந்த ஞாயித்துக்கிழமை பழனிக்குப் போயி பாத்துட்டு என்ன சிச்சுவேஷன்னு சொல்றேன் அங்க நம்ம பிரண்டோட மிஸஸ் எஸ் ஐயா இருக்காங்க
அதுக்கப்புறம் முடிவு பண்னிக்கலாம்’’ என்றான். ஓரளவு மனம் சமாதானமாகியது.

சொன்னது போலவே சனிக்கிழமை இரவே குமார் பழனிக்குக் கிளம்பினான். அவனுக்கு ஜி பேவில் ஐந்தாயிரம் ரூபாய் கேசவன் அனுப்பினான். ‘‘எதுக்கு சார் இதெல்லாம் எங்க சாரோட ஃபிரண்டு நீங்க உங்களுக்கு ஒரு கஷ்டம்னா எனக்கும்தான் சார்’’ என்றான். பத்தாவது நொடியில் ஐந்தாயிரம் திரும்பிக் கணக்கில் வந்தது.

கேசவன் குமாரை நினைத்து ஆச்சர்யப்பட்டான். வாழ்க்கையில் அவன் அளவுக்கு ஏன் நமக்கு அடுத்தவருக்கு உதவும் நல்ல மனசில்லாமல் போனது என யோசித்தான். மறுநாள் மனைவியுடன் மைலாப்பூர் கோயிலுக்குப் போன கேசவன் வழியில் காசு கேட்ட எல்லாப் பிச்சைகாரர்களுக்கும் 100 ரூபாய் போட்டதைப் பார்த்து சாரா ஆச்சர்யப்பட்டாள்.

வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் படுத்தபோது சரியாக இரண்டு மணிக்கு குமாரிடமிருந்து போன் வந்தது. சாராவுக்குத் தெரியாமல் இருக்க சின்ன வேலை எனச் சொல்லி அவசரமாக முன்பக்கமிருந்த ஆபீஸ் அறைக்கு வந்தவன், கதவைச் சாத்தி ஏசி போட்டுவிட்டு மீண்டும் குமாருக்கு அழைத்தான். சட்டென போனை எடுத்த குமாரிடம் ‘‘என்னாச்சு குமார் பத்துட்டீங்களா?’’

‘‘சார் விசாரிச்சு இடத்தைக் கண்டுபுடிச்சிட்டேன். இங்க ஒரு லேடி எஸ் ஐ தான் நமக்கு ஹெல்ப் பண்றாங்க அவங்க பேர் விமலா நான் சொன்னன்ல்ல என் ஃபிரண்டு சினிமால அசிஸ்டண்டா இருக்காருன்னு அவங்க மிஸஸ்.’’

‘‘ம்ம் அவங்களுக்கு தேங்க்ஸ் சொல்லுங்க குமார்’’

‘‘சார் அதெல்லாம் அவங்க தங்கமானவங்க இதுமாதிரி கேஸ் டெய்லி இங்க வருமாம்.. முருகன் சொன்ன ஆளுகிட்ட அவங்களே பேசி மிரட்டினாங்க ஆளைமட்டும் காமி போதும்னு ஒண்ணும் பண்ண மாட்டோம்னு சொன்னதுக்கப்புறம் ஒத்துக்கிட்டான்.
ஒண்ணு செய்யட்டா சார், அப்படியே இன்னும் அஞ்சு நிமிஷத்துல வீடியோ சாட்டுக்கு வாங்க அப்படியே உங்களுக்குக் காமிக்கறேன் பாருங்க’’ என்றான்.

அவசரமாக லேப்டாப்பை எடுத்து வாட்ஸ் அப் வெப் ஓபன் பண்ணி வீடியோவை ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தான்.

மானிட்டரில் ‘‘கேக்குதா சார்’’ என குமார் கையசைத்தான். ஒரு போலீஸ் ஜீப்பின் முன்சீட்டில் அமர்ந்திருந்தான். காமிராவைத் திருப்பி பின் சீட்டைக் காண்பிக்க லேடி எஸ்.ஐ சிரித்துக் கொண்டே கையசைத்தார்.

‘‘சார் இப்ப கிளம்பறோம் அங்கதான் இருக்கோம் ‘‘அப்படியே பாருங்க’’ எனக் கூற இப்போது காமிரா திரும்பி பழனி மலை நடைபாதையோரம் காண்பித்தபடி நகர்ந்தது. பல நடைபாதைக் கடைகளையும் மக்கள் கூட்டம் கடப்பதையும் காண்பித்தபடி
கடந்தது. ஒரே இரைச்சல் வியாபாரிகள் கூச்சல், பிச்சை எடுப்பவர்கள சத்தம் எனப் பலவிதமான சப்தங்கள் ஒலிக்க குமார் மானிட்டரில் நகரும் காட்சிகளையே பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

சட்டெனக் கதவு தட்டும் சத்தம். சாரா ‘‘என்னங்க என்ன பண்றீங்க காபி போடவா’’ எனக் கேட்க சட்டென அவனுக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியவில்லை. அவன் உளறினான் ‘‘இரு இரு நானே வரேன்’’ எனக் கத்திவிட்டான். என்னாச்சு இவருக்கு என கோபத்துடன் அவள் நகர்வது கேட்டது. ஆன்லைனில் இப்போது குமாரின் குரலும் கேட்டது ‘‘என்ன சார் பாக்கறீங்களா?’’ அந்தப் பச்சை சேலை கட்டிருக்க அம்மாவை’’ பாருங்க, எஸ்.ஐ அந்த அம்மாவைக் கைத்தட்டி அழைக்கும் குரல் கேட்டது ‘‘ஏம்மா பச்சை சேலை இங்க வா’’ வேறு யாரோ திரும்ப.. இல்லை உன் பக்கத்துல… அந்த அம்மா குழந்தை வச்சிருக்குல்ல அது.”

இப்போது காமிரா சரியாகக் காண்பிக்க இன்னொரு பெண் கையில் ஐந்து வயது குழந்தையுடன், அந்த அம்மா குழந்தையை வைத்துவிட்டு வர, எஸ்.ஐ ‘‘ஏம்மா அந்தக் குழந்தைய எடுத்துகிட்டு வா’’ என எஸ்.ஐ அதட்ட குழந்தையுடன் காமிராவை நோக்கி வரும் பச்சை சேலை அம்மாவை கேசவன் பார்த்தான். பார்வை அந்தக் குழந்தையை நோக்கித் திரும்பியது. சட்டென லேப்டாப்பை மூடி தலையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் கேசவன்.

ஒரு நிமிடம் வியர்த்து விறுவிறுக்கக் கண்ணில் நீர் தாரை தாரையாக வழிந்தது. பர்சில் தான் நெடு நாட்களாய் வைத்திருந்த சிறுவயதுப் புகைப்படத்தைப் பார்த்தான். மறுநாள் குமார் சென்னைக்கு வந்தபின் போன் செய்தவன். ‘‘இப்ப எது செஞ்சாலும் விஷயம் பெரிசாவும் அப்புறம் உங்களுக்கும் அது பிரச்னை. குழந்தை காணாமல் போயிருந்தாகூடப் பரவாயில்லை ஆக்‌ஷன் எடுக்கலாம்’’ எஸ்.ஐ சொன்னதாக குமார்
சொன்னான். இருந்தாலும் மனசு கேட்கவில்லை. அன்று மாலை குமாரே தான் ஒரு ஆலோசனை சொன்னான் ‘‘பணத்தை வச்சிக்கிட்டு என்ன சார் வீட்லயே முடங்கியிருக்கீங்க?.’’

அவன் கொடுத்த ஐடியாபடியே அன்று மாலையே மனைவியைப் பெட்டி படுக்கைகள் தயார் பண்ணி வைக்கச் சொல்லி குமாரிடமே சொல்லி டிராவல் ஏஜென்சியில் டெல்லிக்கு ப்ளைட் டிக்கட் புக் செய்து அங்கிருந்து சிம்லா குலுமனாலி என இரண்டு
வாரத்திற்குப் பயணத் திட்டங்களை ஆன்லைனில் ஏற்பாடு செய்து கொண்டான். இந்த இடைப்பட்ட நாட்களில் குமார் அவனிடம் மிகவும் நெருங்கியிருந்தான்.

அந்த இரண்டு வாரம் சாரா மகிழ்ச்சியாகக் கவலையில்லாமல் இருந்தாள். டூர் போய் வந்த பலனாக சாராவிடமிருந்து மகிழ்ச்சியான போன் கால் வந்தது. இம்முறை அவள் குழந்தைக்குச் சம்மதித்தாள் பயம் போய்விட்டிருந்தது.

டாக்டர் அவளது துணிச்சலைப் பாராட்டினார் பரவாயில்லையே ஆல் தி பெஸ்ட் என வாழ்த்து கூறினார். இம்முறை ஒவ்வொரு வாரமும் கவனத்தோடு மருத்துவமனை போய் செக் அப் செய்தார்கள், இந்த முறை குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என
டாக்டர் நம்பிக்கை கொடுத்தார். அவர் குறித்த நாள் நெருங்க நெருங்க இருவருக்கும் பதற்றம் தொற்றியது. கேசவனை விட சாரா தெளிவாக இருந்தாள்

மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்து நின்ற டாக்ஸியிலிருந்து கையில் தாங்கிய குழந்தையுடன் அவள் வீட்டுக்குள் இறங்க, வேலைக்காரி ஆரத்தி சுற்றி அவளுக்குப் பொட்டு வைத்தாள். குழந்தைக்கும் பொட்டு வைத்த வேலைக்காரி சூம்பிக் கிடந்த குழந்தையின் விரல்களுக்கு முத்தம் கொடுத்தாள்.

இது எதையும் அறியாத நான்கு வருடங்களுக்கு முன் பிறந்த அவர்களது முதல் குழந்தை பழனி மலை அடிவார சிக்னலில் கார் கதவைத் தட்டிக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் அழுக்கேறிய கைகளில் அமர்ந்தபடி சூம்பிய கையைக் காற்றில் அசைத்துக் கொண்டிருந்தது…


Art : momaa.org

அஜயன் பாலா
அஜயன் பாலா
Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : யோகதாரா

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top