முரல்மொழி
வான்சூடிய நிலவை
தான் சூடிப் பார்த்துக்கொண்டிருந்தது ஆறு
பித்தஞ் சூடிய முரல்மொழியில் சீண்டிக்கொண்டிருந்த நாங்கள்
அதைப் பலவாக உடைத்தோம்
ஒரு துண்டு அவளுக்கு; இன்னொன்று எனக்கு
அவள் நிலவாகிறாள்
நான் அதன் நிழலாகிறேன்
உருமாற்றம்
வெளிச்ச வீடாக இருந்து, பெரும்விளக்காக எரிந்து
இப்போது விளக்கமாக உருமாறியுள்ளது இந்நிலையம்
இது அதன் நான்காம் உருமாற்றம்
ஜார்ஜ் கோட்டையிலிருந்து ஒளிரத் தொடங்கி
ஒண்ம நிழலாக இப்போது இங்கே சாந்தோமில்
உறங்கா விழியாக நின்றுகொண்டிருக்கிறது
எல்லா நினைவுச் சின்னங்களும் தங்களுக்குள்
ஓர் ஒத்திசைவான இலட்சிய வடிவத்தைக்கொண்டிருக்கின்றன
எனும்போது
இக்கலங்கரை விளக்கமும் இப்பெருநகரத்தின் நினைவுச் சின்னம்தான்.
இது பெரும் எரிவிளக்கு என்பதைவிட ஒரு கோள்
இங்கிருந்தே நான் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
ஒருவித இலட்சியத்துடன் அப்பெரிய மீனுடன் போராடும் சாண்டியாகோ
கடுங்கோடைநாளில் தன்முக விசாரணையைத் தொடங்கியிருக்கும் மெர்சோ
ஒரு மூட்டமான நாளில் தன் தலையை அடுப்பில் செருகிக்கொள்ளும் விக்டோரியா லூகாஸ்
தன் புனைவிலிருந்து வெளியேறும் கருத்த பூனையைப் பார்த்தபடி
சிரித்துக்கொள்ளும் எட்கர்…
ஆடிப்பாவையுள் நுழைந்து நான் வேறொரு வழியில்
தப்பிச் செல்ல விரும்புகிறேன்
இங்கே எல்லாமே டயோனிசஸாகத் தளும்பிக்கொண்டிருந்தன
அக்கா கடைகளைக் கடந்து சென்றுகொண்டிருக்கையில்
என் முன் கானல் அசைகிறது, பின் பறக்கிறது
உருவங்களைத் திருடிக்கொண்டு
எரியும் புதிர்,
அது மாயைகளில் நழுவிக்கொண்டிருக்கிறது
அமைதியின்மையின் அமைதி
சிநேகிதி மொஸார்டின்
சிம்பொனி 40 கேட்டுக்கொண்டிருந்தாள்
இன்று ஜனவரி 27
அவனின் பிறந்தநாள்
எத்துணை பெரிய வஞ்சகன் அவன்,
முப்பத்தைந்து வயதில் மரணத்தைத்
தழுவிக்கொண்ட அசலான வஞ்சகன்
சால்ஸ்பர்க் அவனை வளர்த்தது
பின்பு அவன் சால்ஸ்பர்க்கை வளர்த்தான்
பிறகும் தன் இரக்கமற்ற இசையால் உலகத்தை வளர்த்தெடுத்தான்
தந்தையின் இறுதி அழைப்பிற்குச் செல்லாமல்
தான் வளர்த்த நாகணவாய்ப்புள்ளின்
இறப்பைச் சிறப்பாக வழியனுப்பி வைத்த
மகத்தான கொடியவன் அவன்
நான் வெளிவந்தபோது
முன்பனிக்காலத்தின் வைகறை என்னைத் தழுவிக்கொண்டது
ஆவிகள் பூத்த வயல்வெளிகள்
நிரந்தரமின்மையின் அணங்காக
எங்கும் அலையாடிக்கொண்டிருந்தன
ஆங்கே
இலைகள் பறவைகளாகத் தொங்கிக்கொண்டிருக்க
பறவைகள் இலைகளாகச் சுழன்றுகொண்டிருந்தன
பின்னணியில் Requiem தொடங்கிவிட்டது
மெளனம், பனியாகக் குசுகுசுத்து
இசையாக மினுங்குகிறது
அமைதியின்மையின் அமைதி எங்கும்…
நகுலம்
நீலச்சங்கு வேலியோரம் மொத்தம் நான்கு குட்டிகள்
இப்போது மீதமிருப்பவை இரண்டுதான்
முதல் குட்டி, சாலையில் விளையாடிக்கொண்டிருக்கும்போது
லாரியில் அடிபட்டுச் செத்துப்போனது
அடுத்தது, பனிக்கும் குளிருக்கும்
தன் இருத்தலைக் கொடுத்துவிட்டு இறந்துபோனது
அவற்றைக் காணச் செல்லும் ஒவ்வொரு காலையும்
எனக்குப் பீதிதான்
எது வாழ்வுக்கானது, எது மரணத்துக்கானது…
நான் வாழ்வை அழைக்கும்போது
மரணம் அருகே வந்து என் கரத்தைக் கடிக்கும்
மரணத்தை அழைக்கும்போது
வாழ்வு என்னைச் சுற்றிச் சுற்றி வந்து
என் காலை நக்கும்
இன்று வழமையைவிட
வயல்வெளியெங்கும் வண்ணத்திப் பூச்சிகள்
மிகுதியாகப் பறந்துகொண்டிருந்தன
நான் வழக்கத்தைவிட மேலதிகப் பீதியுடன்
அவற்றைக் காணச் சென்றுகொண்டிருக்கிறேன்
காத்திருக்கும் கடல்
ஒரு சிறுபறவை வானத்தை அழைத்து வருவதுபோல்
கடலை அழைத்து வந்துவிட்டது
இன்று இல்லத்திற்கு வந்து சேர்ந்த இம்மீன்
என்னைச் சதா உற்று நோக்கிக்கொண்டிருக்கும்
அதன் பாவனை,
ஒரு பழந்தீவினையை ஞாபகங்கொள்கிறது
ஆத்மாநாமிற்குக் கிணறு
ஆதவனுக்கு நதி
எனக்குக் கடல் காத்திருக்கிறது போலும்…
கவிஞர் பயணி தருமபுரியில் பிறந்தவர். தற்போது சென்னையில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகிறார். ’சிறுபத்திரிகை’ எனும் கலை-இலக்கியச் சிற்றிதழை அச்சிதழாகத் தொடர்ந்து நடத்தி வருகிறார். வேறு எதன் பொருட்டும் அல்லாமல், கவிதை கவிதையின் பொருட்டே எழுதப்படுகிறது என்னும் கோட்பாட்டைக் கொண்டவர்.
கட்டுரையாளர், விமர்சகர், இதழாசிரியர், வெளியீட்டாளர் எனப் பன்முகம் கொண்ட பயணி ரகசிய மொழி, மீள மேலும் மூன்று வழிகள், காமத்தில் நிலவுதல், உப்புஸ்தூபியில் மிதக்கும் கடல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.








Leave a Reply