நாவலின் பின்னட்டைக் குறிப்பு :
வடசென்னை வாழ்வியலில் நான் கேட்ட, பார்த்த, சொல்லப்பட்ட, அனுபவித்த, யதார்த்த நிகழ்வுகளை ஆவணப்படுத்த கதம்ப மாலை கட்டுவது போல் நினைவுச் சரடிலிருந்து உருவி எடுத்து எழுத ஆரம்பித்தேன். அது ஒரு ஜிக்ஜாக் போல் ஏற்ற இறக்கத்தோடு பயணித்து நேர்கோட்டு நாவலாக அமையாமல் கலைத்துப் போட்ட வடிவத்திலேயே அது தன்னைத் தகவமைத்துக்கொண்டிருந்தது. எல்லாப் பக்கங்களிலும் சாதியின் சாயல் துக்கத்தின் பாலாடை போல் படர்ந்திருப்பதையும் நாவலில் வெளிப்படும் நபர்களின் மனதில் சாதியின் பதற்றம் தும்பியின் சிறகசைப்பு போல சதா படப்படப்பதையும் உணர முடிந்தது. அந்தப் பதற்றத்தைக் குறிக்கும் சொல்லான ‘பறதி’ என்பதையே நாவலுக்குச் சூட்டினேன்.
திராவிடக் கட்சி மீதான விமர்சனம், மத மாற்றம் ஏற்படுத்தும் மனச் சிக்கல், பட்டியல் இனச் சாதிக்குள்ளும் நிலவும் சாதி ஆதிக்கம், சிந்தனையாளர்கள் உட்பட எல்லோருக்குள்ளும் விடுபட முடியாமல் விழுதாகத் தாங்கி நிற்கும் சாதிப்பற்று, புனைவின் மூலம் சாதி மேலாண்மையை அரூபமாய் நிறுவ முயலுதல் என எல்லாமே இதில் கேள்விக்குள்ளாகியிருக்கும். அதிகாரத்தின் ரூபங்கள் எப்படியிருந்தாலும் அதனுள் சிரிக்கும் சாதீயத்தை நீங்கள் உணரமுடியும்.
பச்சையும் மீனாட்சி புரமும்
ஆதித்தனிடம் ஜான்சன் ரொம்பவே அடம்பிடித்தான். என்ன அண்ணே நீங்க கூட வாங்கண்ணே ஒருகெத்தா இருக்குமில்ல. நீங்க வந்தா ஒரு சிபாரிசு போல நான் கேட்டதும் பொண்ணு கொடுப்பாங்க இல்ல என்றான். ஏனோ திட்டவட்டமாக ஆதி மறுத் துட்டான். சிபாரி சில உத்திரவாதத்துல நடக்கும் விஷயம் காலத்துக்கும் நிக்காது. உன்னைப் பாத்து என்ன மதிப்பு கிடைக்குதோ அதான் அசல்னு சொல்லிட்டான். டேய் அவன் ஆசைப்பட்ட பொண்ணு. முறையா பொண்ணு கேட்கப் போறான். ஹெல் பண்ணா என்னடா? என்று துரை கேட்டபோது இல்ல துரை நாளைக்குப் புருஷன் பொண்டாட்டிக்குள்ள எதாவது சண்டை வந்தா முதல்ல எது முன்ன வரும்னு நினைக்கிற? சிபாரிசு செய்த நானில்ல. என் சாதிதான். அந்தப் பொண்ணோட சொந்தமே சட்டுன்னு உங்க சாதி புத்திய காட்டிட்டீங்கன்னு சொல்வான்க சாதிய பத்தி என்ன தெரியும் இவன்களுக்கு ஈஸியா நம்மள உசுப்பேத்துறதுக்கும் மட்டம் தட்டுறதுக்கும் இருக்கும் ஒரே அஸ்திரம் இந்தச் சாதிப் பேருதான். நல்லா போராடி தவம் இருந்து கடவுள் தோன்றி வரம் கொடுக்கும் நேரத்தில் ஒரு பொண்ணை இறக்குமதி செஞ்சி முனிவனை மயக்கி அவரை காலி பண்றாமாதிரிய வேல இவன்களுக்குச் சட்டுன்னு சாதிப் பேரைச் சொல்றது என்று மறுத்து விட்டான்.
பின்னர் ஜான்சன் தனி ஆவர்த்தனம் செய்யக் கிளம்பிட்டான். இவன் அந்த
வீட்டு வாசலில் நின்றுகொண்டு.” ஸார் உள்ளே இருக்கீங்களா? நான் ஜான்சன். ஸார் என்று குரல் கொடுத்ததும் உள்ளே இருந்து ஒரு பெரியவர் வெளியே வந்து எட்டிப் பார்த்தார். அவரைப் பார்த்ததும் இவன் அஸ்ஸலாமு அலைக்கும் என்றான் அவரும் சின்ன சிரிப்போடு மாலிக்கும் சலாம் என்றார்.
ஸார் இந்தத் தெருவிலதான் இருக்கேன். காலையில் போனா நைட்டுதான் ஏரியாவுக்குள்ளே வருவேன். உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று ஏவிஎம் சரவணன் மாதிரி எப்போதும் கைகளைக் கட்டிக்கொண்டு நிற்கும் ஜான்சனைப் புன்முறுவலோடு பார்த்தார் சாதிக் அலி. தம்பி முதல்ல வீட்டுக்குள்ளே வந்து உட்காருங்க” என்றார். தேங்ஸ் சார் உள்ளே வேணாம். அப்புறம் இந்தச் சனங்க அதுக்கும் காது மூக்கு வெச்சிப் பேசுவாங்க. நான் வெளியே இருந்தே பேசுரேன் என்றான் ஜான்சன்.
சாதிக் அலி புன்னகைத்தபடியே நான் அல்லாவுக்கு மட்டும்தான் பயப்படுவேன். சனங்களுக்கு இல்ல. உள்ள வந்து உட்கார்ந்து பேசுங்க என்றபடி அவர், ஜீனத் டீ போடும்மா என்று தம் மகளுக்குக் குரல் கொடுத்தபடியே வீட்டுக்குள் நுழைந்தார், ஜான்சனும் அவரைப் பின் தொடர்ந்து உள்ளே போனான்.
அவன் கண்கள் தன்னிச்சையாகவே ஜீனத்தைத் தேட ஆரம்பித்தது, ஜான்சனின் தோளைத் தட்டி ஷோபாவில் உட்காருங்க தம்பி என்றார். மீண்டும் சாதி அலி.ஷோபா விரிப்பும் சன்னல் திரையும் பச்சை நிறத்தின் ஆளுமையில் இருப்பதாகவும் எதோ தர்காவுக்குப் போனது போன்ற உணர்வும் சட்டென வந்தது. இதுபோல் பச்சை நிறத்துணியை இரண்டு இடத்தில் தொட்டுப் பார்த்தது நினைவுக்கு வந்தது.
ஒன்று பட்டாளம். பச்சைநிறக் கொடி கட்டப்பட்ட கொடி மரம். கொடிமரத்தைச் சுற்றிச் சதுரமாக நான்கு புறமும் மூடப்பட்ட நாலு அடி உயர ஒரு கிரில் கேட். அதிலும் ஜிகினாபோட்ட பச்சைத் துணி கட்டியிருக்கும். அந்த கிரில் கேட்டைச் சுற்றிச் சுமார் நூறு பூட்டுக்கள் ஒன்றன் மீது ஒன்றாகத் தேனடை மாதிரி பூட்டு அடை தொங்கும். நூறு பூட்டு என்றால் நூறு பேர் தனித்தனியாக நூறு பூட்டை வாங்கி இங்கு வந்து போட்டு இருப்பர். அதாவது நூறு பூட்டு என்றால் நூறுபேரின் வாய். அந்த நூறு வாய்கள், எதிராளிகளுக்கு எவ்வளவு மிகுந்த துயரத்தை, கஷ்டத்தை, வேதனையை, துக்கத்தை, சோதனையை, மன உளைச்சலைத் தந்து இருந்தா (பாத்தீங்களா ஒரு விஷயத்தை எத்தனை சொல்லால் குறிப்பிடவேண்டியிருக்கு அதன் தீவிரத்தைச் சொல்ல) இங்கு வந்து சம்பந்தப்பட்டவர்களின் பேரைச் சொல்லி அவன் வாயை அல்லா நீ பூட்டு என்னால் அவன் ஏச்சுப் பேச்சு தாங்க முடியல என்று சொல்லி அவர்களின் பெயர் சொல்லி ஒரு பூட்டைப் போடுவார்கள். அவ்வளவுதான் அத்தோட அந்தப் பேருக்குரியவன் வாயைத் தொறக்க மாட்டான். பூட்டுக்குரியவர்கள் அநேகமாக எதிர்வீட்டுக்காரன், மாமியார்காரி, தன்னைக் கேலி பேசும் நண்பன், சில மனைவிகள் என வாயால் அடுத்தவர்களின் மனதைச் சேதாரப்படுத்துபவர்கள்தான். பூட்டை வாங்கிப் போடுபவர்கள் பாதிக்கப்பட்டவர்கள். இந்தக் கொடி மரத்தைச் சுற்றிப் பச்சைத் துணி இருக்கும். அல்லா அயோக்கியவர்களின் வாயைக் கட்டுவாரா தெரியாது நம்பிக்கையை நாம் விமர்சிக்க வேண்டாம். ஆனால் துயரத்தின் உச்சியில் மனதைக் குவித்து நாம் சொல்லும் சொல் பலிக்கும் என நான் நம்புகிறேன். அதுவே சாபம் எனப் புனைபெயரைப் போர்த்திக்கொள்கிறது. அதற்கு ஏதேனும் ஒரு கடவுள் பெயர் தேவைப்படுகிறது. ஜான்சன் அந்தப்பக்கம் போனா இங்க பூட்டு போட்ட எல்லோருக்கும் நிம்மதி கிடைக்கணும்னு வேண்டுவான் சம்பந்தமே இல்லாமல் அப்படி ஒரு கேரக்டர்.
இதேபோல் நார்த் மெட்ராஸ் ஸ்டான்லி ஆஸ்பிட்டலில் இருக்கும் ஒரு தர்கா மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அங்குத் தர்காவைச் சுற்ற வைப்பதும் பாதிக்கப்பட்டவர்கள் அந்தத் தர்காவைச் சுற்றி ஆங்காங்கே நின்றுகொண்டு உட்கார்ந்து கொண்டு இருக்க, உடன் வந்த உறவினர்கள் எப்போதும் கோயிலில் சாமி கும்பிடுவது போல் தர்க்காவை நோக்கி அல்லா என் புள்ளையைக் காப்பாத்தி தாப்பா என இரு கரம் கூப்பி வேண்டுவதும் மனதைப் பிழியும். நிற்கதியாக நின்னு கையைத் தூக்கிக் காப்பாத்துன்னு கெஞ்சுறவனை நின்னு பாக்க திடமான மனசு வேணும். ஜான்சன் அவங்கள் பார்த்தா கண்கலங்கிடுவான். சத்தமா அல்லா அவங்களைக் காப்பாத்து அல்லா என்பான். தூரத்தில் இருந்து பார்த்தா இவனும் மனநலம் பாதிச்சவனோன்னு யோசிக்கத் தோணும். அடுத்தவன் கஷ்டப்படுறதைப் பார்த்து அழுதா ஒன்னு ஆன்மிகவாதியா இருக்கணும். இல்ல லூசா இருக்கணும். மனுஷனா இருக்கக் கூடாதுங்கிறது பொது விதியாகிப் போச்சே. அந்தத் தர்காவிலும் ஆங்காங்கே கொடிகளில் தொங்கியபடி இருக்கும் பச்சை நிறக் கொடிகள் திடீரெனக் காற்றில் அசைந்து லேசாகப் பறக்க எத்தனிக்கும் போது போ போ நான் பாத்துக்கிறேன்னு அல்லாவே சொல்லுவது போல் இருக்கும் ஜான்சனுக்கு.
அவனுக்கு மசூதிக்கும் தர்காவுக்கும் கூட வித்தியாசம் தெரியாது எல்லாம் அல்லாதான். ஆனால் இதுவரை அவன் சர்ச்க்குப் போனது இல்லை. பெயர் என்னவோ ஜான்சன். அந்தப் பச்சை நிறங்கள் இந்த வீட்டிலும் அதிகம் இருந்ததால் புத்தி பச்சையின் நினைவுகளில் மூழ்கிப் போனான்.
தம்பி என்ன யோசனை டீ குடிங்க என்று சாதிக் அலி சொன்னபோதுதான் சகஜ நினைவுக்கு வந்தான். எதிரே ஜீனத் டீயோடு நின்றிருந்தாள். ஸாரி சார் என்றபடியே டீயை வாங்கிக் குடித்தபடி…
ஸார் நான் வீடுகளுக்குப் பெயிண்ட் அடிக்கிற வேலையைக் கான்ட்ராக் எடுத்துச் செய்யுரேன். என் கிட்ட நாலு பேர் வேலை செய்யுறாங்க. 5 நாளுக்கு 2 பேர் ஒரு வீட்டை பெயின்ட் பண்ணி முடிச்சா பத்தாயிரம் வாங்குவேன். ஒரு ஆளுக்கு 700 ரூபாய். கூலி. ஆளுங்களுக்குக் கொடுக்கும் கூலி போக ஒரு வேலையை எடுத்தா 5 நாளைக்கு 3000 எனக்குக் கிடைக்கும். இதேபோல் இன்னும் ரெண்டு பேர் அந்த வேலையில் இருந்து 3000 ஆக 5 நாளைக்கு என் வருமானம் 6000 ரூபாய். ஆக வருமானத்துக்குக் குறைச்சல் இல்ல.
பேருதான் ஜான்சன். ஸ்கூல் போகாததால் சர்டிஃபிகேட் இல்லாததால் நான் என்ன சாதின்னு அதிகாரபூர்வமா தெரியாது. என்னக்கே தெரியாது. இன்னொருத்தியோட ஓடிப் போன அப்பா, அம்போன்னு நின்ன அம்மா, ஊரிலேயே இருந்தா அப்பாவுக்குத்தான் அவமானம்னு அம்மா பொறந்து வளந்த சொந்த ஊரான சிவகாசியை விட்டு இந்தச் சேரிக்கு நான் கைக்குழந்தையா இருக்கும் போது வந்தோம்.
அம்மா கொத்தவால் சாவடியிலே வெங்காயம் பூண்டு தோல் உரிக்கிறது, பெட்டியில வரும் தக்காளியில் ஓட்டை அழுகல் எடுத்துச் சைஸ் வாரியா பிரிக்கிறதுன்னு கூலி வேலைசெய்து என்னைக் காப்பாத்துனாங்க, நானும் அம்மாவும் இதுவரைக்கும் எந்தச் சர்ச்க்கும் போனதில்ல. அங்க போனா பூர்வீகத்தைக் கிளறுவாங்க. சாதி விசாரிப்பாங்க. எங்களைக் காப்பாத்துனது இந்தச் சேரிதான். அடைக்கலம் தந்தது இந்தச் சேரிதான். நான் சேரி ஆளாவே இருந்துட்டுப் போறேன்னே. அம்மா இன்னும் கர்த்தரை நம்புறாங்க. அதுல ஆச்சரியம் இல்ல. அப்பாவுக்காக ஜெபம் பண்றாங்க அதான் ஆச்சரியம்.
எனக்கு தெரிந்த ஒரே வசனமும் வாழ்க்கையும் நானே சத்தியமும் ஜீவனும் வழியுமாய் இருக்கிறேன் உயிரோட இருக்கேன் அப்படி இருக்கிறவரைக்கும் உண்மையா இருப்பேன். நாலு பேருக்கு உதவக்கூடியவனா வழியா இருப்பேன். நான் புரிஞ்சிக்கிட்ட பைபிள் இதான். பளிச்சுன்னு சொல்றேன் நான் உங்க பொண்ணை விரும்புறேன். இன்னும் நேருக்கு நேர் பேசிக்கிட்டது கூட இல்ல. முறையா கட்டிக்கிறேன். உங்க பொண்ணுக்கு உண்மையா இருப்பேன். அதைச் சொல்லத்தான் வந்தேன். மத்தது உங்க விருப்பம் என்றபடி டீயைக் குடித்து முடித்தான்.
தரையில் சிந்தி இருந்த டீத்துளியை ஒரு எறும்பு நக்கி விட்டு வேரு யாருக்கோ சமிஞ்சை செய்ய இன்னும் மூன்று எறும்புகள் வேகமா வந்து அந்தத் துளியை நக்கிச் சோதனையிட்டு ஆமாம் என்பது போல் அவசர அவசரமாக அங்கும் இங்கும் ஓடத்தொடங்கினர். இன்னும் சில எறும்புகள் வந்து விடக்கூடும். ஜான்சன் தரையைப் பார்த்தபடி இருந்தான். சாதிக் அலியின் பேச்சுக்காகக் காத்திருந்தபடி…
தம்பி என்று குரல் கொடுத்த சாதிக் அலி கையில் சில பேப்பர்கள். தம்பி இதைப் படிங்க. இது அருள் எழிலன்னு ஒரு பத்திரிகையாளர் எழுதிய கட்டுரை. படிச்சு முடியுங்க அப்புறம் நான் சொல்றேன் என்றபடி ஜான்சன் கையில் அந்த அச்சிடப்பட்ட காகிதத்தைத் தந்தார். என்னடா இது பாயிடம் பொண்ணு கேட்க வந்தா? கொடுக்கிறேன் இல்ல முடியாதுன்னு சொல்லணும். பேப்பரைக் கொடுத்துப் படிக்கச் சொல்றாரேன்னு ஆர்வம் பொங்க அதை வாசிக்கத் தொடங்கினான். அதில்…..
25 வருடங்கள் இலக்கியப் பயணத்தில் கவிதை, சிறுகதை, கட்டுரை, மேடைப்பேச்சு என நவீன இலக்கியத்தில் இயக்கம் கொண்டவர் அமிர்தம் சூர்யா. பல பிரிவுகளில் 10 நூல்களை எழுதியிருக்கும் இவரின் 11 வது நூல் இந்நாவல். இது இவருக்கும் முதல் நாவலாகும். நூற்றுக்கும் மேற்பட்ட இவரின் உரைகள் இணையத்தில் உள்ளன. மேலும் கருமாண்டி ஜங்ஷன் என்ற யூ டியூப் சேனலையும் நடத்தி வருகிறார்.
கல்லூரிக் காலத்தில் அமிர்தம் என்ற சிற்றிதழை நடத்திய இவர் 14 வருடங்கள் கல்கி வாரப் பத்திரிகையில் தலைமை துணையாசிரியராகப் பணியாற்றியவர். வடசென்னைக்காரான அமிர்தம் சூர்யா பறதி என்ற இந்த நாவலில் வடசென்னை மக்கள் வாழ்வை நேர்கோட்டு நாவலாக எழுதாமல் ஒரு பின் நவீனத்துவப் பாணியில் எழுதியிருக்கிறார். பறதி என்றால் பதற்றம் என்று பொருள். சாருவின் ஜீரோ டிகிரிக்குப் பிறகு போஸ்ட்மாடனிசத்தில் வந்த நாவல் இதுவாகவே இருக்கும். இந்நாவல் வரலட்சுமி அம்மாள் நினைவு நாவல் போட்டியில் 25,000 ரூபாய் பரிசு பெற்றது.








Leave a Reply