Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

தேசிய / திராவிட அரசியல் கட்சிகளும் ஜாதி இந்துக்களின் மேலாதிக்கம் நிறுவப்பட்டதும்

பெருமாள் குமாரசாமி
பெருமாள் குமாரசாமி
March 1, 2026
தேசிய / திராவிட அரசியல் கட்சிகளும் ஜாதி இந்துக்களின் மேலாதிக்கம் நிறுவப்பட்டதும்

தட்டச்சு : கவிஞர் நுட்பவினைஞன்


இன்றைக்குப் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் தோன்றி 100 ஆண்டுகள் கடந்த சூழ்நிலையில் பார்ப்பனர் அல்லாதார் என்று இனியும் பேசுவதில் நியாயம் இருக்க முடியுமா? என்ற கேள்வியைப் பலர் எழுப்பி வருகின்றனர். 100 ஆண்டுகளுக்கு முன்னால் இத்தகைய கேள்வியை எழுப்பியவர்கள் பார்ப்பனர்களின் மேலாண்மை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டதை ரசிக்க மாட்டாது பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் பேசிய நியாயங்களையும் விமர்சனங்களையும் எள்ளி நகையாடினர். இன்றோ குலத்தொழில் ஜாதியினரான வண்ணார், மருத்துவர், நாடோடி / அரை நாடோடி அறிவாளர்கள் இந்தக் கேள்வியை எழுப்பி வருகின்றனர். 1952 தொடங்கி இன்றுவரை இந்தியாவில் நடைபெற்று வரும் தேசியக் கட்சிகளான காங்கிரசு, பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக் காலங்கள், 1952 தொடங்கி இன்றுவரை தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தேசிய அரசியல் கட்சியான காங்கிரசு, திராவிட அரசியல் கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் ஆட்சிக் காலங்கள் ஜாதி இந்துக்களின் மேலாதிக்கத்துக்கான அரசியல், பொருளாதார அடிப்படைகளை உருவாக்கியுள்ளன என்றும் இவர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய விமர்சனம் முன்வைக்கப்படுவதற்கான காரணங்கள் இல்லாமல் இல்லை. காலம் கிளர்த்தியுள்ள வரலாற்று மாற்றங்கள் பார்ப்பனர் அல்லாத ஜாதிகளின் பொருளாதாரப் பலம், சமூகத் தகுதி, பண்பாட்டு அடையாளம் ஆகியவற்றில் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. பார்ப்பனர்களின் மேலாண்மையில் சிற்சில சேதாரங்கள் ஏற்பட்டு இருப்பினும், அவர்களின் ஆதிக்கமானது பல நிலைகளில் இன்றுமே தொடர்கிறது. குறிப்பாக மதம், உயர்கல்வி, ஊடகத்துறை, இந்திய அரசு நிர்வாகம், வங்கித் துறை, தனியார் துறை – நமது பொருளாதாரப் பண்பாட்டு வாழ்வில் தீர்மானகரமான பங்கு வகிக்கும் துறைகளில் அவர்கள் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தி வருகின்றனர். அதே சமயம், அவர்களின் மேலாண்மைக்குச் சவால் விடுத்து அவர்களின் ஜாதி ஆணவத்தைச் சாடிய ஜாதி இந்துக்கள் சார்ந்திருக்கும் சமுதாயங்களும் சுதந்திர இந்தியாவின் அரசியல் பொருளாதார வாழ்வில் முக்கியப் பங்காற்றி வந்துள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நிலம், வர்த்தகம், அரசு நிர்வாகம், காவல்துறை, ஊடகத்துறை என்று எதை எடுத்துக் கொண்டாலும் இந்தச் சமுதாயங்களைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பும் அதிகாரமும் கூடியுள்ளன. குறிப்பாக இச்சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளனர். குறிப்பிட்ட சமுதாயம் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் உள்ளூர் மட்டத்தில் அவர்களின் பிரதிநிதிகள் அரசியல் பலம் பொருந்தியவர்களாகவே இருக்கின்றனர்.

குலத்தொழில் ஜாதியினரான வண்ணார், மருத்துவர், நாடோடி / அரை நாடோடிச் சமுதாயங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையில் ஒப்பீட்டளவிலான முன்னேற்றம் ஏற்படவில்லை. அவர்கள் தனிப்பெரும் அரசியல் சக்தியாக வளரவில்லை. அவர்களின் இருப்புக்கும் உரிமைக்கும் இன்றுமே சமூகத் தளத்தில் உத்தரவாதம் இல்லை. சட்டம் பேசும் உரிமைகளை மெய்யுலகில் செயல்படுத்த வருகையில் அவர்கள் சந்திக்கும் சவால்களும் அவ்வுரிமைகளை நிலைநிறுத்த அவர்கள் மேற்கொள்ள வேண்டிய போராட்டங்களும் நாளுக்கு நாள் கூடி வருகின்றனவே ஒழிய குறைந்தபாடில்லை. அவர்களுக்கு எதிரான வன்முறைச் செயல்கள் அதிகரிக்க அவர்களின் உரிமைசார் செயல்பாடுகளே காரணங்களாக உள்ள அவல நிலையும் தமிழ்நாட்டில் தொடர்கிறது. பழைய அரைத் தீண்டாமை வகைகள் ஆங்காங்கே குறைந்துள்ள போதிலும் சூத்திர மூட்டைகளில் அடி சூத்திர மூட்டையாக இருக்கும் குலத்தொழில் ஜாதியினர், நாடோடி / அரை நாடோடி வகுப்பினருக்கு எதிரான வன்கொடுமைகள் கூடியுள்ளன.

இன்னும் சொல்லப்போனால், ஜாதி இந்துக்களுக்கு இடையே உள்ள முரண்பாடுகள் போட்டா போட்டிகள் ஆகியன ஒருபுறம் இருந்தாலும் குலத்தொழில் ஜாதியினரான வண்ணார், மருத்துவர், நாடோடி, அரை நாடோடி விரோதச் செயல்பாடுகள் என்ற இந்த ஒரு புள்ளியில் அவர்கள் இணையவே செய்கின்றனர். குறிப்பிட்ட ஜாதி இந்துக்கள் சமுதாயத்தில் உள்ள வர்க்க, வட்டார வேறுபாடுகளைச் சமன்படுத்தவும் ஈடுகட்டவும் இத்தகைய வன்செயல்களும் அவை முன்னிறுத்தும் ஜாதிப் பெருமித அரசியலும் உதவுகின்றன. ஜாதி மறுப்புத் திருமணங்களையும், காதல் உறவுகளையும் சாடுதல், அவற்றை சகிக்க மாட்டாது சம்பந்தப்பட்ட இளைஞர்களைத் துன்புறுத்தல், கொலை செய்தல், குலத்தொழில் ஜாதியினர், நாடோடி / அரை நாடோடி வகுப்பினரின் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்க முடியாது அவர்களின் சொத்துக்களைச் சூறையாடுதல் என்பன போன்ற செயல்களில் பார்ப்பனர் அல்லாத சமுதாயங்களைச் சேர்ந்தவர்களின் அரசியல், சமுதாயத் தலைமைகளாகத் தம்மை அறிவித்துக் கொண்டு செயல்படுபவர்கள் ஈடுபட்டு வருவதைக் காண்கிறோம். அவர்களின் அரசியல் தலைமையை ஏற்று ஜாதிப் பெருமிதங்களைக் காப்பாற்ற இச்சமுதாயங்களைச் சேர்ந்த வறிய பிரிவினரும் களம் இறங்குவதும் நடைபெற்று வருகிறது. இழப்பதற்கு ஜாதி அடையாளத்தைத் தவிர வேறு எதுவுமில்லாத சூழ்நிலைதான் இவர்களை இவ்வாறு செயல்பட வைக்கிறது. எல்லாவிதமான இயலாமைகளையும் ஈடுகட்ட ஜாதிப் பெருமிதம் கைக்கொடுக்கிறது.

கடந்த நூறு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை தேசிய / திராவிட அரசியல் கட்சிகளின் ஆட்சிக் காலங்களின் செயல்பாடுகளுடன் இணைத்துப் பார்க்கவும் வேண்டியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து 50 ஆண்டுகள் கடந்த சூழ்நிலையில் இத்தகைய மதிப்பீட்டை நாம் மேற்கொள்வது என்பது பயனுள்ளதாக இருக்கும். திராவிட அரசியல் கட்சிகளின் ஆட்சிக்காலம் என்று நாம் கூறிக் கொண்டாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் அதிக நாட்களும் தொடர்ச்சியாகவும் ஆட்சி செலுத்தியுள்ளது.

பொருளாதார வளர்ச்சியை எடுத்துக் கொண்டால் முன் ஆட்சி புரிந்த காங்கிரசு ஆட்சி பின்பற்றிய வளர்ச்சி, உற்பத்திசார் திட்டங்களை திராவிட முன்னேற்றக் கழகமும் பின்பற்றியது. குறிப்பாக வேளாண்துறையில் தொடங்கப்பட்டிருந்த பசுமைப் புரட்சியை இக்கட்சியும் ஆட்சியுமே தொடர்ந்து வளர்த்தது, விரிவுபடுத்தியது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை அதிகார வலிமை கொண்டும் சமரச நடவடிக்கைகளின் மூலமும் இக்கட்சி எதிர்கொண்டது. விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கைகளைச் சமன்படுத்துவதிலும் நில உடைமையாளர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதையும் திமுகவினர் கைவிடவில்லை. வெண்மணிப் படுகொலை இதற்கு முக்கியச் சான்று என்று பதிவு செய்கிறார் எழுத்தாளர் வ. கீதா.

தொழில் வளர்ச்சிக்கு வித்திட்ட காங்கிரசு கொள்கைகளைப் பின்பற்றிய அதே வேகத்தில் தொழிலாளர்களின் போராட்டங்களை அடக்கி ஒடுக்கவும் திமுக ஆட்சியாளர்கள் தயங்கவில்லை. எந்த மாணவர்களின் போராட்டத்தைச் சாதகமாக்கிக் கொண்டு ஆட்சிக்கு வந்ததோ இதே மாணவர்களின் போராட்டங்களை மூர்க்கமாகக் கையாளவும் திமுக தயங்கவில்லை என்று குறிப்பிடுகிறார் எழுத்தாளர் வ. கீதா.

அதேசமயம் வளர்ச்சி, மக்கள் நலம் என்ற இரண்டு விஷயங்களிலும் தனக்குள்ள அக்கறையை ஆட்சியாளர்கள் வெளிப்படுத்திக் கொண்டும் வந்தனர். எடுத்துக்காட்டாக சாலை, போக்குவரத்துத் துறைகளில் முதலீடு செய்தது. போக்குவரத்துத் துறையை அரசுடைமையாக்கியது. 1990களில் புதிய பொருளாதாரக் கொள்கை அமலுக்கு வந்த பிறகு சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்கத் தோதான திட்டங்களை திமுகதான் செயல்படுத்தியது. இதையெல்லாம் செய்த அதேவேளை வகுப்புரிமையை உத்திரவாதப்படுத்தியது. குடிசை மாற்று வாரியத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்தி நகர்ப்புற வறிய பிரிவினருக்கான வீட்டு வசதிகளைச் செய்து கொடுத்தது. மாநில சுயாட்சி தொடர்பான விவாதங்களைப் பொதுவெளியில் தொடர்ந்து நடத்தியது. முக்கியமாக தமிழ்ச் சமுதாயத்தில் பார்ப்பன அறிவாளிகள் செலுத்தி வந்த மேலாண்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து திராவிட அறிவாளர்களின் வளர்ச்சியைச் சாத்தியப்படுத்தியது. பெண்களுக்குச் சொத்துரிமை, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் கொண்டு வந்தது.

திமுகவின் ஆட்சிக் காலத்தில்தான் ஜாதி இந்துச் சமுதாயங்களைச் சேர்ந்தவர்களின் ஒரு பிரிவினரின் ஒப்பீட்டு அளவிலான பொருளாதார அரசியல் வளர்ச்சி என்பது சாத்தியப்பட்டது. அதேசமயம், இந்த வளர்ச்சியானது இச்சமுதாயங்களின் ஜாதியத் தன்னிலையை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்தது. வரலாற்றுப் போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் ஒருபுறமிருக்க, மறுபுறம் ஜாதி எதிர்ப்பு என்பதை வகுப்புரிமையுடன் மட்டும் தொடர்புபடுத்திய அரசியல் சிந்தனையும் செயல்பாடும் இத்தகைய வளர்ச்சிக்கு வித்திட்டது எனலாம். மேலும், ஜாதியமைப்பைப் பத்திரப்படுத்தியுள்ள நிலவுடைமை முறை, ஜாதிய உளவியல், பண்பாடு, பொதுவெளியில் ஜாதியைக் கடந்த உறவுகள் அவ்வப்போது சாத்தியப்பட்டாலும் பண்பாடு, காதல், குடும்பம் என்று வரும்போது ஜாதி அடையாளங்கள் தொடர்ந்து முன்னிறுத்தப்படுதல் ஆகியனவற்றை அரசியல் ரீதியாக அணுகுவதற்கான கருத்து நிலையும் அதையொட்டிய செயல்பாடும் முக்கியமானதாகக் கருதப்படவில்லை. எனவே, ஜாதி இந்துக்களின் வளர்ச்சியானது ஒப்பீட்டளவில் ஜனநாயகப் பரவலாக்கத்தைச் சாத்தியப்படுத்திய போதிலும் சமுதாய வெளியிலும் நமது அரசியல் ஊடாட்டங்களிலும் ஜனநாயகம் ஆழமாக வேர்கொள்ள வித்திடவில்லை. குலத்தொழில் ஜாதியினரான வண்ணார், மருத்துவர், நாடோடி / அரை நாடோடிச் சமுதாயங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறைக் களம், சுய விமர்சனத்திற்கு இடம் கொடுக்காத நிலையில் “திராவிடப்” பெருமித அரசியல் சொல்லாடல்களும் ஒன்றுக்கு மற்றொன்று அரண் சேர்த்து உண்மையான ஜனநாயக வளர்ச்சியைத் தடுத்துள்ளன. முக்கியமாக விளிம்பு நிலை மக்களுக்கு எதிராகச் செயல்படும் ஜாதி இந்துச் சமுதாயத்தினருக்கு அரசின் பாதுகாப்பு தொடர்ந்து இருந்து கொண்டே வந்துள்ளது.

அடுத்து அஇஅதிமுகவின் ஆட்சிக் காலங்களை எடுத்துக் கொண்டால் தமிழ்நாட்டில் அரசியல், சமுதாய வெளிகளிலிருந்து ஜனநாயகப் பண்புகள் முற்றிலுமாகத் தூக்கி எறியப்பட்ட ஆட்சிக் காலங்களாக அவை இருந்தன என்று சொல்லலாம். மக்களுக்கான ஆட்சியாக தன்னை அறிவித்துக் கொண்டாலும் மக்களை மதிக்காத, அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற அவ்வப்போது அவர்களுக்குச் சலுகைகளை வழங்கும் ஆட்சியாகத்தான் ஆதி முதற்கொண்டே இக்கட்சியின் ஆட்சி அமைந்தது. அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து மாநிலத்தின் வளர்ச்சிக்குத் திட்டமிடுதலுக்குப் பதிலாக மாநிலத்தின் நிதி ஆதாரங்களைக் கட்சித் தலைமையின் சொந்தக் கருவூலத்துக்குரிய சொத்தாகப் பாவித்தே அக்கட்சித் தலைமை செயல்பட்டு வந்தது.

டாக்டர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு எழுதப்பட்ட முக்கிய மதிப்புரை ஒன்று அவரின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி முடக்கப்பட்டதன் விவரங்களையும், அவரின் ஜனநாயக விரோதச் செயல்பாடுகள் மாநிலத்தின் ஜனநாயக வாழ்வில் ஏற்படுத்தி இருந்த பாதிப்புகளையும் பட்டியலிட்டுக் காட்டியது. அவரின் ஆட்சியில் நடந்த என்கவுண்டர் கொலைகள், ஊடகத் துறையைக் கட்டுப்படுத்தும் வகையில் இயற்றப்பட்ட சட்ட மாற்றங்கள், சிவில் உரிமைகளுக்காகப் பாடுபட்ட அமைப்புகளும் அவற்றின் உறுப்பினர்களும் துன்புறுத்தப்பட்டது தொடர்பான செய்திகள் ஆகியவற்றை அந்த மதிப்புரை உள்ளடக்கி இருந்தது என்று பதிவு செய்கிறார் எழுத்தாளர் வ. கீதா.

டாக்டர் எம்.ஜி.ஆர் ஆட்சியின் முக்கியச் சாதனை கிராம நிர்வாக அலுவலர் பதவிகளை உருவாக்கியதுதான். இதைச் செய்ததன் மூலம் பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினர், குலத்தொழில் ஜாதியினர் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளில் அமருவதற்கான பெரும் வாய்ப்பையும் வெளியையும் அவர் ஏற்படுத்தினார் என்றாலும், பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கான இட ஒதுக்கீட்டினை 31 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக உயர்த்தினார் என்றாலும், கல்வி தொடர்பான அவரின் பிற கொள்கைகளுடன் இதனை தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். குறிப்பாக உயர்கல்வி தனியார் மயமாவதற்கான திட்டத்தைத் தீட்டியவர் அவர்தான். தனியார் கல்லூரிகளில் வகுப்புரிமையைப் பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டாலும், இங்கு‌ள்ள பிற்படுத்தப்பட்ட, பட்டியல் வகுப்பு, பழங்குடி மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அரசுக்கு இருக்க வேண்டிய முக்கியப் பொறுப்பை அரசு கைவிடவும் இந்த முடிவு காரணமாக இருந்தது.

உச்ச நீதிமன்றம் 1963லும் 16.11.1992 நாளிட்ட தீர்ப்பின் மூலமும் மொத்த இட ஒதுக்கீட்டுக்கு 50 விழுக்காடு உச்சவரம்பு விதித்தது. தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வந்த 69 விழுக்காடு இட ஒதுக்கீடு இத்தீர்ப்பின்படி 50 விழுக்காடாகக் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 69 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடர்ந்திட ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தை நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தக்கூடாத வகையில் அரசமைப்புச் சட்டத்தின் 31 (சி) பிரிவின்படி ஒன்பதாம் அட்டவணையில் சேர்க்கும்படி தமிழ்நாடு அரசு, இந்திய அரசைக் கேட்டுக் கொண்டது. அப்படியே இந்திய அரசும் ஒன்பதாம் அட்டவணையில் சேர்த்தது. இது டாக்டர் ஜெயலலிதா ஆட்சியின் முக்கியச் சாதனைதான் என்றாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில்தான் குறிப்பிட்ட ஜாதியினரின் செல்வாக்கை ஆதாரமாகக் கொண்ட அரசியல் வளர்ச்சி என்பது உத்தியாகக் கையாளப்பட்டது. நமது ஜனநாயக அரசியலில் ஜாதிச் சமுதாயங்களின் நலனே மக்கள் நலனாக அறியப்பட்டு வரும் நிலைமை உள்ளபோதிலும், குறிப்பிட்ட ஜாதியினரின் வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை மையமிட்ட அரசியலை அஇஅதிமுகதான் வெற்றிகரமாகவும் பட்டவர்த்தனமாகவும் கையில் எடுத்தது. ஜாதிக் கட்சிகளின் வளர்ச்சிக்கான நியாயங்கள் எவ்வாறானதாக உள்ள போதிலும், அவற்றுக்கான அரசியல் ரீதியான ஒப்புதலை அஇஅதிமுகவின் செயல்பாடுகள் பெற்றுத் தந்தன. இதைச் செய்த அதேவேளை நாடோடி / அரை நாடோடி, பழங்குடியினர், பட்டியல் வகுப்பினருக்கு எதிரான போக்கை அரசு மேற்கொள்வதையும் இக்கட்சிதான் இயல்பாக்கியது. தன் பங்கிற்கு திமுகவும் ஆட்சியில் இருக்கையில் இந்தப் போக்கைக் கடைபிடிக்கத் தவறவில்லை.

மற்றொரு முக்கியப் பிரச்சினை, பெண் விடுதலை தொடர்பானது. பெண்களின் உடல்களில்தான் ஜாதிகளின் அடையாளம் பொறிக்கப்படுகிறது. அவர்களின் கருவுறும் ஆற்றலின்மீது ஜாதிக் குடும்பமும் அதன் ஆண் ஆதிக்கத் தலைமையும் இன்றுமே அதிகாரம் செலுத்தி வரும் சூழ்நிலையில் பெண்களின் உடல் மாண்பு, சுய விருப்பம், காதல், மணவிழைவு, மண வாழ்க்கை, தாய்மை கடந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அவர்களுக்கு இருக்க வேண்டிய சுதந்திரம் ஆகியவற்றை தமிழ்ச் சமுதாயம் பொருட்டாகக் கருதாததோடு, இவை குறித்து அறிவுப்பூர்வமாக விவாதித்த சுயமரியாதை இயக்க மரபையும் தொலைத்துவிட்டது அல்லது அதனை நினைவுகூர்வதைக் கவனமாகத் தவிர்த்து வந்துள்ளது. ஜாதிக் குடும்பம், ஜாதியால் கட்டமைக்கப்பட்ட பொதுவெளி, இவற்றை இயக்கும் ஆண் ஆதிக்கச் சிந்தனை, மனப்பாங்கு ஆகியவற்றைக் குறித்து யோசிக்கக்கூடத் தயாராகவில்லை. ஜாதி அமைப்பை ஏற்காது அதன் பிடியிலிருந்து வெளியேற விரும்பிய பெண்களின் வாழ்வியலுக்கு ஆதரவாக நின்ற சுயமரியாதை இயக்க மரபின் நிழல்கூட தம்மீது பட்டுவிடக் கூடாது என்று அன்று முதல் இன்று வரை முற்போக்கு அரசியல் கருத்துகளைக் கொண்டுள்ள ஆண்களும் கவனமாக இருந்து வந்துள்ளனர்.

பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களிடம் தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளைப் பறித்து அமெரிக்கா உள்ளிட்ட அந்நிய ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளிகளிடம் தொழிலாளர் வர்க்கத்தைக் கொத்தடிமை ஆக்குவது காலனிய நீக்கமா? புதிய காலனிய சேவையா? இந்தியக் கலாச்சாரம் என்று பேசும் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான இந்திய அரசு தொழிலாளர்களுக்கான ஊதியம் என்பது அவர்களின் உரிமை என்பதை மாற்றித் தங்களின் வர்ணாசிரமக் கொள்கையின்படி ஊதியம் என்பது முதலாளிகளின் கருணை என்று கூறுகிறது. இப்படி அந்நிய சேவையையும், வர்ணாசிரமக் கொள்கைகளையும் இணைத்துத் தொழிலாளர்களுக்கு விரோதமான 4 சட்டத் தொகுப்புகளை உருவாக்கியுள்ளது. அதை மறைத்துக் காலனிய அடிமைத்தனத்தை நீக்குவதாக தொழிலாளர்களிடம் பசப்பு வார்த்தையைப் பயன்படுத்தி ஏமாற்ற நினைக்கிறது.

தந்தை பெரியார் நமக்கு வலியுறுத்தியவற்றை இங்கு நினைவு கூர்வது அவசியம். பார்ப்பனர்களின் மேலாண்மை, பணக்காரர்களின் ஆதிக்கம், இந்துமதம் சாற்றும் ஜாதிக்கொரு நீதி ஆகியவற்றை எதிர்ப்பதும், அவற்றிற்கு மாற்றீடாகப் பொதுவுடைமை, சமதர்மம், பகுத்தறிவு பேசும் அரசியல், சமுதாயச் செயல்பாடுகள் ஆகியன முன்னெடுக்கப்படுவதும் அவசியம் என்பதைத் தன் வாழ்நாள் முழுக்கச் சுட்டிக் காட்டினார். அதற்கான செயல்பாடுகளில் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் குறித்த நுணுக்கமான ஆய்வுகள் நமக்குத் தேவை. அவற்றை மேற்கொள்ளும் மனநிலையும் அவசியம். வரலாற்றுப் பெருமிதங்களைக் கடந்து இத்தகைய ஆய்வுக்கு நாம் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும்.

“துணி வெளுக்க தனி ஜாதி
முகம் மழிக்க தனி ஜாதி
கருவறைக்குள் பெருச்சாளி
சமூகநீதிக் கொலை சனாதனத்தில்”


 

பெருமாள் குமாரசாமி
பெருமாள் குமாரசாமி

பெருமாள் குமாரசாமி – காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் வாழும் சமூகநீதிச் சமூகச் செயற்பாட்டாளர். அவரது கட்டுரைகள் குலத்தொழில் வகுப்பினரான வண்ணார், காவாரா மற்றும் மருத்துவர் வகுப்பு மக்கள் வாழ்க்கையை நம் கண் முன்னே படம் பிடிப்பதன் முக்கியத்துவத்தை நாம் உணரலாம். ஜாதிய வாதிகள் உருவகித்து வைத்திருக்கிற குலத்தொழில் வகுப்பினர் தம்மை விடக் கீழானவர்கள் என்ற கற்பிதத்தின் வழியே தக்கவைத்து வைக்கப்பட்டுள்ளது என்றும் குலத்தொழில் வகுப்பினர் தமக்கு ஒதுக்கப்பட்ட பாத்திரத்தை மறுத்து வெளியேறிவிட்டால் தம்மை மேல்ஜாதி என்று கருதிக்கொள்வதற்கான அடிப்படையே தகர்ந்து விடுமே என்றும் ஜாதியவாதிகள் அஞ்சுகிறார்கள் என்றும் குறித்து உரைக்கிறார் பெருமாள் குமாரசாமி. அவரது நூலான சமூகநீதியின் குரல்கள் சுரண்டப்பட்ட மக்களின் விடுதலை என்ற நோக்கில் அமைந்துள்ளன. விவாதத்திற்கும் உட்படுத்த வேண்டியவை. அவரது கருத்துகள் மிக நுட்பமானவை. தரம் கொண்டவை.

Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top