என்னுடைய நாடகச் செயல்பாடுகளைப் பற்றி பேசுவதற்கு முன்னால் என்னுடைய இந்த ஈடுபாடுகளுக்கு ஆதாரமான ஆரம்பகால அழகியல் மதிப்பீடுகள் பற்றி சில விஷயங்கள் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.படிக்கும் போதிலிருந்தே எனக்குக் கவிதை மேல் பெரிய ஈடுபாடு உருவானது. நான் பள்ளியில் எட்டாவது படிக்கும்போதே ஹிந்தியில் B.A க்கு இணையான விஷாரத்தை முடித்துவிட்டேன். அது எனக்கு இளம் வயதிலேயே கபீர்தாஸ், சூர்தாஸ், சுமித்ராநந்தன் பந்த், மகாதேவி வர்மா போன்ற ஹிந்தியின் முக்கியக் கவிஞர்களின் கவிதையுலகை அறிமுகம் செய்தது. அந்த வயதில் அது எனக்கு Romanticism குறித்த பெரிய கற்பனைகளை உருவாக்கியது. மேலும் நான் படிக்கும்போது காலையில் எங்களுடைய ஊர்க்கோவிலிலிருந்து ஒலிக்கும் திருப்பாவைப் பாடல்களைக் கேட்டபடி இருப்பேன். அப்பாடல்களின் உணர்வும், ஓசையும், சொல்லாடல்களும் என்னுடைய ரொமாண்டிசிஸ மனநிலைக்கு மிகவும் உவப்பானதாக இருந்தன. தமிழின் சங்கப் பாடல்கள் மற்றும் பக்தி இயக்கப் பாடல்களின் ஓசைநயம் குறித்த பெரிய ஈடுபாட்டை அவை உருவாக்கின.
கல்லூரி நாட்களில் நான் மிகவும் இடதுசாரி ஈடுபாடுகள் கொண்டவனாக இருந்தேன். மாக்ஸிம் கார்க்கி, காண்டேகர், சரத்சந்திரர் ஆகியோரது படைப்புகளால் பெரிதும் கவரப்பட்டேன். அந்த மனநிலையில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது என்னுடைய ஆங்கிலப் பேராசிரியர் ஆல்பர்ட்டின் அறிமுகம்தான். உலக இலக்கியப் பின்புலத்தில் ஆல்பர்ட் முன்னிறுத்திய ஒருவிதக் கறார்த்தன்மை கொண்ட அறிவுவாதம் உவப்பானதாகவும், அதே சமயம் என்னுடைய ரொமாண்டிசிஸ நிலைப்பாடுகளுக்கு அதிர்வு கொடுப்பதாகவும் இருந்தது. பாலியல் இறுக்கம் போன்ற பலவிதமான மனத்தடைகள் மீது அவருடைய தாக்குதல் இருந்தது. மெல்ல மெல்ல திரைகள் விலக ஆரம்பித்து வாழ்வியல் மீறல்களைக் கொண்டாடும் ஒரு மனநிலை உருவானது. அந்தக் கணத்தில் நம்மைச் சுற்றி ஒரு மிகப்பெரிய சுதந்திரம் இருப்பது புலப்பட்டது. நுண் அசைவுகள் குறித்த பார்வை பற்றி இலக்கியம் மூலமும், உலக சினிமா மூலமும் ஆல்பர்ட் முன்னெடுத்த புரிதல் அவ்வழியில் பயணப்பட எனக்கு உத்வேகமாக இருந்தது.
இத்தகைய மனநிலையுடன் நான் சென்னை வந்தபோது இங்குள்ள நவீன இலக்கியம், நாடகம் மற்றும் சினிமா ஆர்வலர்களுடன் எனக்கு நெருங்கிய தொடர்புகள் ஏற்பட்டன. எழுபதுகளுக்குப் பிந்தைய அந்தக் காலகட்டம் என்பது அரசியல், இலக்கியம், நாடகம், சினிமா எல்லாவற்றிலும் தீவிர நிலைப்பாடுகளுக்கும், புதிய வடிவங்களுக்குமான காலகட்டமாக இருந்தது. 1975ன் அவசரநிலை காலகட்டம் இந்த நெருக்கடிகளை இன்னும் தீவிரப்படுத்தியது. இந்தக் காலகட்டத்தில் எழுச்சிபெற்ற நிறுவன எதிர்ப்பு மனநிலை புதிய நாடக வடிவங்களுக்கும், திரைப்பட இயக்கங்களுக்கும் உந்துதலாக அமைந்தது.
கடற்கரைகளிலும், பூங்காக்களிலும், தெருமுனைகளிலும் அவ்வப்போதைய அரசியல், சமூகப் பிரச்னைகளை ஒப்பனைகளின்றி முன்வைத்த வீதி நாடக இயக்கம் அந்தச் சூழலில் உருக்கொண்டு அரசியல், இலக்கியம், கலை ஆகியவற்றில் தீவிர நிலைப்பாடுகள் கொண்டவர்களால் முன்னெடுக்கப்பட்ட நிலையில் நானும் அந்தச் செயல்பாட்டில் பங்கேற்றேன்.
சினிமாவில் சத்யஜித்ரே, மிருணாள்சென், ரித்விக் கடக் ஆகியோரது படைப்புகள் அழகியலும், நிறுவன எதிர்ப்பும் கலந்த மனநிலையை முன்னெடுத்துச் சென்றன. இந்தச் சூழலிலேயே மேற்குவங்க பாதல்சர்க்காரின் பத்து நாள் நாடகப் பயிற்சிப்பட்டறை சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டு மூன்றாம் அரங்க நாடகச் செயல்பாடுகளுக்கான ஒரு அடித்தளம் உருவாக்கப்பட்டது. பாதல் சர்க்கார் பொருள்களை விலக்கி நாடகத்துக்கு மனித உடலை முதன்மைப்படுத்தினார். உங்களுக்கான நாடகத்தை நீங்கள்தான் உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
இந்தச் சந்தர்ப்பத்தில்தான் தமிழ்ச்சூழலில் ந.முத்துசாமி, பேராசிரியர் ராமானுஜம் போன்றவர்கள் நவீன நாடக உருவாக்கம் குறித்த புதிய பார்வைகளையும், அணுகுமுறைகளையும் அறிமுகப்படுத்துகிறார்கள். முத்துசாமி தன்னுடைய புதிய நாடகத்துக்காகப் புதிய நடிகர்களைத் தயார் செய்யும் முயற்சியில் நடிகனின் வளமை குறித்த பயிற்சிகளில் ஈடுபடுகிறார். ராமானுஜம் நாடகப் பிரதி என்பது நாடகத்தின் ஒரு பகுதிதான். நடிகனின் உடலும், மனமும் இணைந்த லயத்தில்தான் புதிய நாடகம் உருவாகும் என்பதை வலியுறுத்துகிறார்.
இத்தகைய தாக்கங்களின் பின்புலத்திலேயே முழுவதும் நாடகத்துக்கென்று வெளி நாடக இதழ் 1990ல் என்னால் ஆரம்பிக்கப்பட்டது. 1977ல் காந்திகிராமத்தில் பேராசிரியர் ராமானுஜம் மற்றும் பன்சிகெளல் இணைந்து நடத்திய நாடகப் பயிற்சிப் பட்டறை மற்றும் பாதல் சர்க்கார் சென்னையில் நடத்திய 10 நாள் நாடகப் பயிற்சியில் பங்கேற்ற படைப்பாளிகளும், நாடக ஆர்வலர்களும் தமிழ்நாடு முழுவதும் நாடகத்தில் புதிய வெளிப்பாட்டு முறைகளுக்கான செய்திகளை எடுத்துச் சென்றனர். ஏற்கெனவே சென்னையில், கூத்துப்பட்டறை, பரிக்ஷா மற்றும் வீதி அமைப்புகளும், மதுரையில் சுதேசி மற்றும் நிஜ நாடக இயக்கமும் பல்வேறு கலை மற்றும் சமூக உணர்வுக் கருத்துகளைப் புதிய நாடக மொழியில் வெளிப்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தன. அவ்வகையில் கூத்துப்பட்டறை நாடகங்களும், மு.ராமசாமியின் துர்க்கிர அவலம் நாடகமும், தேசிய நாடகப் பள்ளியில் பயிற்சி பெற்ற பேராசிரியர் ராஜூவின் நந்தன் கதை ஆகிய நாடகங்களும் பரவலாக அறியப்பட்டு வரவேற்பைப் பெற்றன
நவீன நாடகம் என்ற இந்தக் கருத்தாக்கம் வலுவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட இந்த 1980-90 காலகட்டத்தில் புதிய நாடக உருவாக்கங்களுக்கான பிரதிகளை உருவாக்கவும், புதிய நாடக நிகழ்வுகள் குறித்த செய்திகளைப் பரவலாக்கவும், நாடகக் கோட்பாடுகளை விவாதிக்கவும், உலக நாடக இயக்கங்கள் குறித்த அறிமுகம் பெறவும் 1990ல் முழுவதும் நாடகத்துக்கென `வெளி` இதழைத் துவக்கினேன். சிறுபத்திரிகை வடிவமைப்புடன் ஏழு ஆண்டுகள் வெளிவந்த 40 இதழ்களில் புதிதாக எழுதப்பட்ட 38 தமிழ் நாடகங்களும், 24 பிறமொழி நாடகங்களும், நாடக நிகழ்வுகள் மற்றும் நாடகக் கோட்பாடுகள் குறித்த விவாதங்களும், நாடகவியலாளர்களின் பேட்டிகளும் என 2000 பக்கங்கள் கொண்ட நாடக ஆவணமாக வெளி உருப்பெற்றது. நாடகப் பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் வெளி இதழில் வந்த படைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.
1997க்குப் பிறகு நான் அலுவல் காரணமாக சென்னையிலிருந்து மாற்றலாகிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் என்னால் வெளி இதழைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. வெளி மாநிலங்களில் வேலை செய்த நான்கு ஆண்டுகளில் பிறமொழி நாடகச் செயல்பாடுகளை நேரில் அறியும் வாய்ப்புகள் ஏற்பட்டன. பத்திரிகை செயல்பாடுகளை முடித்துக்கொண்டு நாடகத்துக்கான களப்பணியில் இறங்குவதே இனி நான் செய்யவேண்டியது என்ற தீர்மானத்துடன் வங்கி வேலையை ராஜிநாமா செய்து எனக்குப் பிடித்த முழுநேரக் கலாச்சாரச் செயல்பாடுகளுக்காக சென்னை திரும்பினேன். பல்வேறு நாடகச் செயல்பாட்டாளர்கள் மற்றும் சிறுகுழுக்களுடன் விவாதங்களும், உரையாடல்களும் மேற்கொண்டு என்னுடைய நாடக உருவாக்கங்கள் குறித்த தேர்வுகளை நோக்கிச் செயல்படத் தொடங்கினேன். 2006லிருந்து தொடங்கி கடந்த 18 ஆண்டுகளில் 15க்கும் மேற்பட்ட நாடகங்களையும், குறுநாடகங்களையும் இயக்கியிருக்கிறேன்.
இன்றைய பின்நவீனக் காலகட்டத்தில் காப்பியங்களின் மறுவாசிப்பு என்பதும், சமகால நுண்னுணர்வுக்கான தளங்களை அவைகளில் அடையாளம் காண்பது என்பதும் முக்கியமான பின்நவீனச் செயல்பாடுகளாக உள்ளன. இலக்கியத்துக்கும் நிகழ்கலைகளுக்குமான ஊடாட்டம் குறித்து இன்று அதிக கவனம் உருவாகியுள்ளது. Reinterpretation of classics in Theatre என்பது உலகம் முழுவதும் ஒரு அர்த்தமுள்ள அரங்கச் செயல்பாடாக உள்ளது. நம்முடைய சூழலிலும் ராமாயணம் மகாபாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களின் செய்திகள் சமகால உணர்வுடன் நிகழ்கலைகளில் வெளிப்பாடு கொண்டுள்ளன. இன்று சுற்றுச்சூழல் சார்ந்த சமூகச் செயல்பாட்டாளர்கள் பல்வேறு எதிர்ப்புக் குரல்களை வெளிப்படுத்த இந்த வடிவங்களைக் கையிலெடுக்கும் சூழல் உள்ளது. இன்றைய உலகமயமாக்கல் சூழலில் கலாச்சார வேர்களை இழந்து தனிமையில் உழலும் தனிமனிதனைச் சமூகமயப்படுத்தி அவனுடன் அந்தரங்க உரையாடலையும், ஒரு ஸ்பரிசத்தையும் முன்னெடுக்கும் ஒரு அரிய கலைவடிவமாகவே இன்று நாடகம் நம் கண்முன் உள்ளது. இலக்கியத்துக்கும் நாடகத்துக்குமான ஒரு அர்த்தமுள்ள ஊடாட்டமாகவே நான் நாடகத்தளத்தில் இந்த உரையாடல்களை முன்னெடுக்க விரும்புகிறேன்.
காப்பியங்களின் மறுவாசிப்பு சார்ந்த சமகாலக் குரல்களை எதிரொலிக்கும் விதமாகவே என்னுடைய அகலிகை, வஞ்ச மகள், மாதவி, ஊழிக்கூத்து, மாதரி கதை, அன்பின் பெருவெளி ஆண்டாள் ஆகிய நாடக நிகழ்வுகள் வடிவாக்கம் பெற்றன. அகலிகை நாடகத்தில் தேவதைகளாக மனநலம் குன்றிய பெண்களையும், தன் அகக்கண்ணால் பார்த்து அகலிகையை உயிர்ப்பிக்கும் ராமராக ஒரு பார்வை குன்றியவரையும் பயன்படுத்தினேன். கு.ப.ராவின் அந்த அகலிகை ஆண்களின் தவறான கற்பிதங்களால் சிதைவுறும் பெண் இருப்பைப் புலப்படுத்துகிறாள். அவளுடைய `நான்குற்றவாளியா`என்ற கேள்வி சமூகத்தின் மனசாட்சிக்கு விடப்பட்ட கேள்வியாக உள்ளது. அதேபோல் சூர்ப்பனகையின் பார்வையிலிருந்து சொல்லப்படும் கு.அழகிரிசாமியின் `வஞ்ச மகள்` நாடகம் சூர்ப்பனகை தரப்பு நியாயங்களுடன் `உனது கூற்றுவனை நான் கொணர்வேன்` என்ற அவள் சூளுரையுடன் முடிகிறது.
கன்னட நாடகாசிரியர் சிவப்பிரகாஷின் `மாதவி` நாடகத்தில் எதிர்பார்ப்பும், தனிமையும், துயரமும் ஒரு உன்மத்த நிலைக்குத் தள்ள, மாதவி வகையறியாது கலையின் அரவணைப்பை நாடுகிறாள்.`மாதரி கதை` நாடகத்தில் கோவலன் கொலையுண்ட இறுதிநாள் நிகழ்வுகள் அவர்களுக்கு அடைக்கலம் அளித்த ஆயர்குலப் பெண் மாதரியின் பார்வையிலிருந்து சொல்லப்படுகின்றன. அவளது எல்லா முயற்சிகளும் எதிர்பாராததும், தவிர்க்க இயலாததுமான அநித்தியத்தின் முன் வியர்த்தமாகும்போது அவள் மரணத்தைத் தேர்ந்தெடுக்கிறாள். ஊழிக்கூத்து நாடகத்தில் வேட்கைகளும், நிர்ப்பந்தங்களும் நிறைந்த பெண்மாதிரியின் ஒரு சமகாலக் குறியீடாக மணிமேகலையின் சித்திரம் விரிவுகொள்கிறது.`அன்பின் பெருவெளி ஆண்டாள்` நாடகம் நேசம், கிளர்ச்சி, உடல் கொண்டாட்டம் என ஒரு பிரத்யேகமான பெண்மொழியுடன் ஒரு வரலாற்று முன்மாதிரியாக ஒலித்துக் கொண்டிருக்கும் ஆண்டாளின் சித்திரம். காப்பியப் பின்புலம் கொண்டுள்ள இந்த நாடகங்களுக்குச் செவ்வியலும், நவீனமும் கொண்ட இசை, நடன அசைவுகளையே பயன்படுத்தினேன்.
வரலாறெங்கும் அவதூறுகள் நிறைந்த பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை நினைவுகூறும் அம்பையின் `ஆற்றைக் கடத்தல்` நாடகத்திலும், தலைமுறைகளாக நீடிக்கும் தீர்வற்ற வெற்று வாக்குறுதிகளைக் கவனப்படுத்தும் முத்துசாமியின் `காலம் காலமாக` நாடகத்திலும், கவிதைக்கும் அதிகாரத்துக்கு மானப் போராட்டமாக கவிஞர் பாப்லோ நெரூடாவின் கடைசி நாட்களைச் சொல்லும் `கொடுங்கோலர்கள்` நாடகத்திலும் சூழலுக்குரிய நடன அசைவுகளே இடம்பெற்றன.
காப்பியங்களின் மெளனப் பகுதிகளும், எண்ணற்ற சிறுகதையாடல்களும் விரிந்து பெருகும் சாத்தியங்களையே இந்த அரங்க நிகழ்வுகள் முன்வைத்தன. இன்று பிரத்யேகமான நாடகப் பிரதிகளை மட்டும் சார்ந்திராமல், கவிதை மற்றும் சிறுகதை வடிவங்களில் வெளிப்படும் நாடகப் பொறிகளை நாடகமாக விரித்துப் பார்க்கும் அரங்க முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. உண்மையில் நிகழ்வெளியின் உயிர்ப்பும் சக்தியும்தான் நாடகம்.
இந்தச் சூழலிலேயே நாடக அழகியல் சார்ந்த என்னுடைய கட்டுரைகள் புத்தக வடிவில் வெளிவந்து நாடக ஆர்வலர்களின் வரவேற்பைப் பெற்றன. தமிழ் நாடகச் சூழல் ஒரு பார்வை, இடிபாடுகளுக்கிடையில், நாடகம் நிகழ்வு அழகியல், ஊழிக்கூத்து, வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள், இலக்கிய வாசிப்பும் நாடக வாசிப்பும், தற்காலத் தமிழ் நாடகங்கள், உடல்மொழியின் கலை, தமிழ் நவீன நாடக நிகழ்வுகள், வரலாற்றுப் பார்வையில் தமிழ் நாடகம், இலக்கியக் குரல்கள் ஆகியவை நூல் வடிவில் வெளிவந்து இலக்கிய நாடக ஊடாட்டங்களைப் பரவலாக எடுத்துச்செல்ல உதவின. நிகழ்கலைகளை ஆவணப்படுத்தும் முயற்சிகள் தமிழில் மிகவும் குறைவு. இந்நிலையில் இந்த நூல்கள் சார்ந்து நாடகக் கருத்துக்களை நான் பல்வேறு குழுக்களுடனும், ஆர்வலர்களுடனும் தொடர்ந்து உரையாடுவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன.
முக்கியமாக என்னுடைய `தமிழ் நாடகச் சூழல் ஒரு பார்வை` புத்தகம் தமிழ் நாடகம் குறித்த வரலாற்றுப் பார்வை, 20ம் நூற்றாண்டு தமிழ் நாடகம், தமிழில் நாடகப் பிரதிகள் குறித்த கண்ணோட்டம், நவீன நாடகக் கருத்தாக்கம், தமிழ் நாடகத்தில் சோதனை முயற்சிகள், திராவிட இயக்க நாடகங்கள், கொங்கு நாட்டுக் கூத்துக்கலை, தமிழில் நாடக நிகழ்விப்புகள்-ஒரு பார்வையாளனின் மனப்பதிவுகள், புதிய நாடகத்தின் பார்வையாளர்கள் ஆகிய தலைப்புகளில் நாடகம் குறித்த வரலாற்றுப் பார்வையுடன் சமகால நாடக விழிப்புணர்வு, உலக நாடகக் கண்ணோட்டம் ஆகியவை குறித்து பரவலாக அறிமுகம் செய்தது. தமிழில் நாடகப்பிரதி தான் நாடகம் என்கிற பார்வையே கல்விப்புலம் சார்ந்தவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் கூத்து போன்ற நம்முடைய தொன்மை நிகழ்த்து கலைகள் தொடங்கி சமகால நாடக நிகழ்வுகள் வரை நிகழ்தளத்தில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளே உண்மையான நாடக வரலாறு என்பதை இக்கட்டுரைகளில் வலியுறுத்தினேன். தொடர்ந்து பல கல்லூரிகளுக்கும் சென்று பிரதி சார்ந்த நம்முடைய நாடகம் குறித்த பார்வையில் மாற்றம் வேண்டும் என்பதையும், சமகால நாடகங்கள் குறித்த பார்வை விரிவடைய வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகிறேன். அதேபோல் என்னுடைய `நாடகம் நிகழ்வு அழகியல்` புத்தகத்தில் பிரதியிலிருந்து நிகழ்வு நோக்கிய அழகியல் பயணத்தில் நம்முடைய நாட்டுப்புறக் கலைகளிலிருந்து இன்றைய நவீன காலம் வரை மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அழகியல் பார்வைகளை கவனப்படுத்தினேன். எந்தக் கலாச்சாரத்திலும் மரபும் நவீனமும் இணைந்து செயல்படுபவை என்பதையும், நவீனம் என்பது மரபின் புத்துருவாக்கமே என்பதையும் வலியுறுத்தினேன். என்னுடைய `வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள்` புத்தகத்தில் கிராமிய நாட்டுப்புறக் கலைகள் தொடங்கி இன்றைய நவீன கலைகள் வரை அதிகம் கவனத்துக்கு வராத பல்வேறு நிகழ்கலைப் படைப்பாளிகளைக் கவனப்படுத்தினேன்.
என்னுடைய `இலக்கிய வாசிப்பும் நாடக வாசிப்பும்` புத்தகம் இலக்கிய வாசிப்புகள் ஒரு நாடகமாக விரிவுகொள்ளும் நிலையில் பல்வேறு சாத்தியப் பாடுகளை உருவாக்குவதைக் கவனத்தில் கொண்டுவந்தேன். அவ்வகையில் சங்ககாலக் கவிதைகள் தொடங்கி இன்றைய நவீன கவிதைகள் வரை பல்வேறு நாடகக்கூறுகளின் வெளிப்பாடுகளாக அவை விரிவுபெறுவதைப் பல எடுத்துக் காட்டுகளுடன் வெளிப்படுத்தினேன். அவ்விதமாகவே வளமான பின்புலம் கொண்ட தமிழ்ச் சிறுகதைக்களம் பல்வேறு நாடகச் சலனங்களை உள்ளடக்கியது என்பதையும் புதுமைப்பித்தன் தொடங்கி இன்றைய கோபிகிருஷ்ணன் வரை எவ்வாறு விரிவுகொண்டுள்ளது என்பதையும் கவனப்படுத்தினேன். முக்கியமாக இலக்கியத்துக்கும் நாடகத்துக்கும் இடையே காலம் காலமாக தொடர்ந்த ஊடாட்டம் நிலவி வருவதையும், ஒரு இலக்கியப் பிரதி நாடகமாக விரிவுகொள்ளக்கூடிய எல்லாச் சாத்தியங்களையும் உள்ளடக்கியது என்பதையும், அதற்கான ஒரு பிரத்யேக வாசிப்பு தேவை என்பதையும் இக்கட்டுரைகளில் வலியுறுத்தினேன். இதன் தொடர்ச்சியாகவே என்னுடைய `உடல்மொழியின் கலை` புத்தகத்தில் உடல்மொழி மூலம் வெளிப்படும் பல்வேறு சங்கேதங்கள் எத்தகைய கலாச்சாரச் செய்திகள் கொண்டவை என்பதைக் கவனத்துக்குக் கொண்டுவந்தேன். இவை எல்லாம் ஒரு கலாச்சாரத்தில் இணைந்து செயல்பட்டு பல்வேறு சமூகச் சிந்தனைகளுக்கு வித்திட்டவை என்பதையே இப்புத்தகங்கள் கவனப்படுத்துகின்றன. 1980 தொடங்கி 2020 வரை கடந்த 40 வருடங்களில் நிகழ்த்தப்பட்ட முக்கிய நாடக நிகழ்வுகளில் செயல்பட்ட அழகியல் கூறுகளை என்னுடைய `தமிழ் நவீன நாடக நிகழ்வுகள்` புத்தகத்தில் விரிவான விமர்சனப் பார்வைகளுடன் அறிமுகப்படுத்தினேன்.
ஆனால் நாடக நிகழ்வுகளைவிடப் பல்வேறு சிரமங்களுக்கிடையே மேற்கொள்ளப்படும் ஒத்திகைகளையும், நிகழ்வு சார்ந்து நடிகர்களுடன் மேற்கொள்ளப்படும் உரையாடல்களையுமே நான் அதிகம் நேசிக்கிறேன். அவையே நடிகர்களுடன் பரஸ்பர அன்பையும், புரிதலையும் முன்னெடுத்துச் செல்லும் சாதனங்களாக உள்ளன. சில நாடக நிகழ்வுகள் எதிர்பார்த்த நாடக விளைவுகளை உருவாக்க முடியாவிட்டாலும் அந்தத் திளைப்பு அதிக மகிழ்வைத் தருவதாகவும், அடுத்த நிகழ்வுக்கான எதிர்பார்ப்பை உருவாக்குவதாகவும் உள்ளது. ஒரே நாடகம் வெவ்வேறு சூழலில் வெவ்வேறு நடிகர்களுடன் அரங்கேற்றப்படும்போது அது வெவ்வேறு வண்ணம் கொள்கிறது.
சமூகத்தின் நினைவுகளுக்கு உயிரூட்டிச் செயலூக்கம் கொள்வதற்கான எல்லா உந்துதல்கலையும் அரங்கம் கொண்டிருக்கிறது. ஒற்றைக்குரல்களின் ஆதிக்கங்களும், அபாயங்களும் பெருகிவரும் இன்றைய சூழலில் பன்மைக் குரல்களும், சிறுகதையாடல்களும் செயல்படும் களமாக அரங்கம் உள்ளது. இங்குதான் உடல் குறித்த கட்டுமானங்கள் விலக்கப்பட்டு உடலின் அதிகபட்சச் சாத்தியங்கள் முன்வைக்கப்பட்டு ஆண்பெண் உறவுநிலைகளின் இறுக்கங்கள் உடைகின்றன. இன்று தனிமை, மன அழுத்தம், உறவுகளின் சிதைவு, மரண பயம் ஆகியவற்றால் பீடிக்கப்பட்டுள்ள தனிமனிதன் ஸ்பரிசம் மற்றும் கூட்டுணர்வுக்கான தளங்களை இங்கு அடையாளம் காண இயலும். மேலும் இன்று நாடகச் செயல்பாடுகளில் பெண்கள் அதிகமாகப் பங்கேற்கும் நிலை உள்ளது. முக்கியமாக ஒடுக்கப்படும் பெண்குரல்கள் வீறுகொண்டு எழுவதற்கான சாத்தியங்கள் இன்று அரங்கவெளியில் அதிகமாக உருவாகிவருகின்றன. இத்தகைய பெண் குரல்களை முன்னிலைப்படுத்துவதையே என்னுடைய நாடகங்கள் இலக்காகக் கொண்டுள்ளன.
Art : Sonam Tshering








Leave a Reply