பூக்களுடன் ஆற்றில் போடப்பட்ட சாம்பல் கைக்கால்கள் முளைத்து நீருக்கடியில் இருந்த ஏணியில் மெதுவாக இறங்கத் தொடங்கியிருந்தது. ஆற்றுமணலில் ஒருதுளி உப்புநீரைக் கலந்து, திரும்பிப் பார்க்காமல் நடக்கத் தொடங்கினாள். அகோரிகள் போன்ற தோற்றமுடைய நான்கைந்து பேர் அங்கிருந்த பிணச் சாம்பலில் துழாவிக்கொண்டிருந்தனர். அவ்விடம் அகோரிகள் வரும் நேரத்தைத் தவிர தவிப்பை, தனிமையை உணர்ந்தபடி வெக்கையாக இருக்கும். வயிறு உள்ளடங்கி இருந்ததால் சாம்பலின் உள்ளிருந்த தங்கத்தின் வடிவம் மாறியிருந்தது. கிடைத்தவன் பேய்பிடித்தவன் போல் கத்திக்கொண்டிருந்தான்.
அங்கிருந்த அனைவரின் பார்வையும் அங்கே திரும்பியபோதும் அவள் பார்வை நீரை நோக்கியே இருந்தது. கரைத்த இடத்தில் முன்பு ஒருமுறை தெளிந்த நீரில் அவன் முகம் நன்றாகத் தெரிந்ததாக நினைத்துக்கொண்டாள். மீண்டும் ஒருமுறை சென்று பார்க்கலாமா என்று தோன்றிற்று.
பல ஆண்டுகளாய்ப் பிணவாடையில் இருந்து வெளியேற முடியாதா என்று நினைத்த துகள் ஒன்று அவள் பாதத்தில் ஒட்டிக்கொண்டதும், முடிவற்ற பள்ளத்தில் தலைகீழாக விழத்தொடங்கினாள். அடர் இருள் பாளங்கள் முடிவின்மையை நோக்கி வேகமாக ஊர்ந்து கொண்டிருந்தன. இடையே ஒளிச்சிதறல்கள். இன்னும் கூடுதல் வேகம். பாதி மறைந்த சூரியன் போல் ஏதோ ஒன்று. மீண்டும் இருள். எங்கே அவள்? காற்றின் வேகத்தில் காணாமல் போயிருந்தாள்.
இமையைத் திறந்தாக வேண்டும். முடியவில்லை. முடியாதென்ற பயம் மூளையில் ஓங்கி அறைந்தது. இதயம் படபடக்க ஆரம்பித்தது. காற்றில் மிதந்துகொண்டிருந்த துகள் எடையேறி முடிவுக்கு வந்தது. சுற்றி பிசுபிசுப்பின் நீர்மை. மெலிதான செந்நிறக் கோடுகள் பரவும் வெள்ளை மண்டலம். பளபளக்கும் கருப்புருளை இருபுறமும் அசைந்துகொண்டிருந்தது.
கண்களைக் கசக்கிக்கொண்டு எழும்பினேன். நேரம் வெளுத்திருந்தது. திடீரென வெளியே ஏவுகணை விழுந்து வெடித்துச் சிதறுவதுபோல் சப்தம். ஐயோ, காருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது. பதறியடித்துக்கொண்டு வெளியே ஓடினேன். காரணம், கடந்த வாரம் இன்கிரிட் ஃப்ரோஸ்ட் குழுமத்திற்குள் அடங்கும் இத்தாலி சேஸி, இங்கிலாந்து சஸ்பென்சன், செக் குடியரசின் ஹேண்ட்லிங் என்று மொத்த ஐரோப்பாவையும் உள்ளடக்கிய எனது கார் எரிந்து சாம்பலானது.
கனவென்றாலும் மனஉளைச்சல் ஆனதற்கு முக்கியக் காரணம், அருகில் கரிக்கொட்டையான செல்ல நாய்க்குட்டி. அங்குமிங்கும் ஓடி சங்கிலியில் இருந்து வெளியேற முடியாமல் நெருப்பினுள் சென்றிருக்கும் என்று நினைத்தேன். அதற்கு நான்தான் காரணம் என்ற குற்றவுணர்ச்சி நாள் முழுவதும் ஆக்கிரமித்திருந்தது. வெளியே வந்து பார்த்தால் அத்தனையும் அப்படியே இருந்தது. எந்த மாறுதலும் இல்லை! அப்படி என்றால் சத்தம்? அருகாமையில் ஏதேனும் நடந்துள்ளதா? காரை எடுத்துக்கொண்டு மெதுவாகச் சாலையில் பயணிக்கத் தொடங்கினேன்.
மறைந்திருந்த மேகங்கள் விலகி தூய வெண்கீற்றுகள் நகரத்தைச் சூழ்ந்திருந்தன. கட்டிடங்கள் உள்ளிருந்து அமிலப்புகைகள் மேலெழும்பிக் கொண்டிருந்தன. மரண ஓலமிட்டபடி இறந்த குழந்தைகளின் பிணங்களைத் தூக்கியபடி ஓடி வந்து கொண்டிருந்தனர். இரு இளைஞர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த உறவுகளில் உறுப்புகளை தங்கள் முன் போட்டுக்கொண்டு தலைகுனிந்தபடி அமர்ந்திருந்தனர். பெருக்கல் போன்று கைகளை வைத்தபடி உயரமான தோற்றத்தில் இருக்கும் சிலை சேதமடையாமல், உண்மையான மனிதர்களின் பாகங்கள் சிதைகிறதே என்று நினைத்திருக்கக்கூடும். அருகில் உயரம் குறைந்த, அதேநேரம் கைகளைக் கட்டிக்கொண்டு பவ்யமாக நிற்கும் மனிதனுக்கும் எதுவும் துன்பகரமாக நடந்துவிடவில்லை. சுத்தியலை எடுத்துவந்து இரு சிலைகளையும் அடித்து நொறுக்கினான். தூரத்தில் தெரிந்த பிருமாண்டமான கட்டடத்தின் நடுவே சூரியன் இறங்கியதுபோல் ஒரு தோற்றம். சுற்றிஎங்கிலும் வெண்புகைகள். வானில் ஒளிக்கீற்றுகள் சீராக வந்துகொண்டிருந்தன.
ஒருவன் எரிந்துபோன மரத்தின் மூட்டில் நின்றுகொண்டு மனம் பிறழ்ந்தவன் போல் சிரித்துக் கொண்டிருந்தான். சங்கிலிகளின் ஓசையை நான் உணர்ந்தபோது அவனைப் பார்க்க வேண்டும் என்று அவன் நின்றிருந்த மரத்தின் திசையில் பார்த்தேன். அப்போது அவன் அங்கு இருக்கவில்லை. மண்ணில் இருந்து தானியத்தைப் பிரித்து எடுத்துக்கொண்டிருந்த சிறுமியின் இரத்தம் எஞ்சியிருந்த தானியத்தில் படிந்தது. பிணவாடை காருக்குள் வரத் தொடங்கியிருந்தது. எவ்வளவு இறுக்கமாக ஜன்னல் கதவுகளை மூடியும் இடுக்குகளின் வழி உள்ளே வரத் தொடங்கியது.
மூச்சு முட்டியது போல் இருந்ததால் கதவைத் திறந்து வெளியே வந்தேன். நகரம் இயல்பான அவசரத்துடன் காணப்பட்டது. இன்று ஒரு முக்கியமான வாடிக்கையாளர் சந்திப்பு இருந்தது. முகச்சவரம் செய்யலாம் என்று சலூனிற்குள் நுழைந்தபோது, மரத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த கிறுக்கு இளைஞன் சவரக்கத்தியுடன் வந்து அமரும்படிச் செய்தான். இதில் பத்து வயது குறைந்த தோற்றத்தில் பதின்ம வயது தோற்றத்தில் இருந்தான். குழந்தைத் தொழிலாளர்களை எப்படி பணியில் ஈடுபடச் செய்கிறார்கள் என்ற யோசனையுடன், இவனை நம்பிக் கழுத்தைத் தரலாமா என்ற யோசனையே அதிகமாக இருந்தது. கண்ணில் தெளிவுள்ளதா என்று நான்கைந்து முறை கண்ணாடியைப் பார்த்தேன். நினைத்தது போலவே முடிவில் என் காதின் நுனியை அறுத்துவிட்டான்.
கொஞ்சம் கூட வலியில்லை. மிருதுவான காதின் கீழ்ப்பகுதி என்பதால் இரத்தம் நிற்காமல் வந்துகொண்டிருந்தது. நான் கோபத்தில் அவனைக் கடுமையாக வசைப்பாடத் தொடங்கினேன். மன்னிப்புடன் பஞ்சை எடுத்து வந்து அடைத்துக் கொண்டிருந்தான். தள்ளிப்போ என்று கத்தத் தொடங்கினேன். எங்கே உன் முதலாளி? அவன் பேசும் மொழி எனக்கு விளங்கவில்லை. என் மொழி பேசும் முதலாளி வந்தான். குழந்தைத் தொழிலாளியை வேலைக்கு வைத்து என் காதை அறுத்துவிட்டீர்கள். உங்கள் மீது வழக்கு போடப் போவதாக மிரட்டினேன்.
இரத்தம் நிற்காமல் கொப்பளித்துக்கொண்டிருந்தது. அவனுக்குப் பதினெட்டு வயது நிறைவடைந்தது என்று ஆதார் அட்டையைக் காட்டி உறுதிப்படுத்தினான். ஒருவேளை போலியாக இருக்குமோ என்று உள்மனம் சொன்னாலும் ஆத்திரமாக வந்தது. அவனைப் பணிநீக்கம் செய்வதாகவும், மருத்துவமனைச் செலவை ஏற்பதாகவும் உறுதியளித்தான் முதலாளி. வேலையை விட்டு அனுப்பிவிட வேண்டாம் என்று என்னிடமும், முதலாளியிடமும் அவன் மொழியில் கெஞ்சிக் கொண்டிருந்தான். மருத்துவமனை செல்வதற்காக காரில் ஏறியபோது இரத்தம் வருவது நின்று வெட்டப்பட்ட இடமே மறைந்து போனது. எரியும் கட்டிடங்களினால் வெக்கை அதிகமாக உணரமுடிந்தது. நான் அவனைப் பார்ப்பதற்காகக் காரை வந்தவழி நோக்கித் திருப்பினேன். பள்ளத்தாக்கில் பதுங்கியிருந்த ஒரு குழு ஆயுதங்களுடன் புகுந்து வெட்டிச் சாய்த்துக்கொண்டிருந்தது.
பாதி இடிந்துபோன கட்டிடங்களில் குடும்பத்தில் இருந்த பாதிப் பேருடன் சோகமாக அமர்ந்திருந்தனர். இடிக்கப்பட்டதை மறைப்பதற்காகச் சில வீடுகள் போர்வையால் மூடிக்கொண்டு உணவுக்காகக் காத்திருந்தனர். கடந்தமுறை இடிபாடுகளினால் நடக்க முடியாமல் இருந்த இடத்தில் மக்கள் நடந்து நடந்து ஒரு பாதையை உருவாக்கியிருந்தார்கள். அந்த வழியே சிமென்ட் கொண்டுபோகும் தள்ளுவண்டியில் இரு கேன்களுடன் தன் குழந்தையையும் தள்ளிக்கொண்டு ஓர் இளம்வயது தந்தை எரியும் வண்ணமலர்கள் இருக்கும் பாதையைக் கடந்து எங்கோ சென்று கொண்டிருந்தார்.
அவர் செல்லும் பாதையின் முன் முடிவின்மை போன்றே தோற்றமளித்தது. சரிபாதிக்குள் தரை. அதற்குமேல் வான்வெளி, அதில் மெதுவாக அலையும் மேகங்கள். வெளிச்சம், வெக்கை, எங்கோ தூரத்தில் குண்டுமழை பொழியும் சப்தங்கள். கரடுமுரடாக இருந்த தரை சமதளமாக இருந்தது. இடிந்து கீழே விழப்போகும் நிலையில் ஒரு கட்டிடம் வழியில் இருந்தால் மீண்டும் கரடு முரடான பாதைகள் உருவாகக் கூடும். அதற்கான சூழல் எதுவும் தென்படவில்லை.
குதிரை வண்டிகளைப் பூட்டிக்கொண்டு அத்தியாவசியப் பொருட்களைச் சுமந்தபடி சாலை மார்க்கமாக நடக்கத் தொடங்கினார்கள். அனைவரும் வரிசையாக என் காரில் வந்து எச்சிலை உமிழ்ந்துவிட்டுக் கோபமாக நடக்கத் தொடங்கினார்கள். மீண்டும் அந்த மரம் நிற்கும் பகுதியருகே வந்தபோது, மரம் முழுவதும் எரிந்து சாம்பலாகியிருந்தது. நெருப்பில் எரிந்துகொண்டிருக்கும் இரும்புச் சங்கிலியின் நிறம் என்னை அச்சுறுத்தியது.
இரத்தக் கறையுள்ள கத்தி அருகே கிடந்ததைக் கண்டு பொறுக்கமுடியாமல் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வேகமாகக் கிளம்பியபோது வழியில் விசித்திரமான ஒன்றைக் கண்டேன். தரைமட்டமான வீட்டின் முன்பாக சோபாவில் அமர்ந்துகொண்டு கால்மேல் கால் போட்டுக் கொண்டு சுருட்டைப் பிடித்துக்கொண்டு ஒரு மனிதன் அமர்ந்திருந்தார். அவர் அருகே சில தாள்களும் புத்தகங்களும் இருந்தன. புழுதிக்காற்றில் தாள்கள் பறந்தபோது, அதில் இருந்த கவிதைகள் கூர்மையுள்ள கத்தியாக உருவெடுத்து என்னைத் தாக்க வந்துகொண்டிருந்தன.
நான் அதனிடம் இருந்து தப்பித்து வண்டியை வேகமாகச் செலுத்தினேன். தூரத்தில் சாலையோரம் விழுந்து கிடந்த ஏவுகணையைத் தொட்டுப் பார்த்துச் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் சற்று முன்னால் கடலுக்கடியில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டு ஆர்ப்பரிக்கும் சுனாமி போல் கட்டிடங்கள் சரிந்து கிடந்தன. அப்படியே நீரின் சாயல். அசைவு மட்டுமில்லை. அங்கே நிலவறைக்கு வாகனம் செல்லும் பாதை ஒன்று தெரிந்தது. வண்டியை நிலவறையை நோக்கிச் செலுத்தினேன். நிலவறையை அடைவதற்குமுன் இருபக்கமும் மெழுகுவர்த்தியின் வெளிச்சம். ஆண்குறி துவாரத்தில் இருந்து வெளியே வந்து நாக்கை நீட்டும் பாம்பு. நீட்டிய நாக்கில் எரியும் மெழுகை விடும் அழகியபெண். பாதாளச் சாக்கடைக்குள் அடைபட்டிருக்கும் அடிமைகள். விதைப்பையைக் குத்திக் கிழிக்கும் முட்கள் படர்ந்த காலணிகள். மேற்பகுதியில் பாரம் விழுந்து தூசிகள் சிதறிக் கொண்டிருந்தன.
மெழுகின் வெளிச்சத்தில் விரிசல் அதிகமாகிக்கொண்டிருந்தது தெரிந்தது. எதற்காக இந்த மனிதன் நிலவறைக்குள் பள்ளம் தோண்டிக்கொண்டிருக்கிறான்? அருகே எதுவும் பிணங்கள் இருக்கிறதா என்று சுற்றிமுற்றிப் பார்த்தேன். அனைத்துப் பிணங்களையும் ஏற்கெனவே புதைத்துவிட்டதாகச் சொல்லி வேகமாகத் தோண்டிக்கொண்டிருந்தான். நகரத்தைச் சுற்றி ஓடும் நதியில் மீன்கள் செத்து மிதக்கின்றன. நாற்றமெடுத்த நதியில் நீரைக் குடிக்க முடியாது. நாற்றத்தை நீக்குவதற்காக வந்த மந்திரவாதிகளும் செத்துவிட்டார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிணறு தோண்டிக்கொண்டிருப்பதாகச் சொன்னான். நதியில் மீன்கள் செத்ததன் காரணத்தை எத்தனை முறை கேட்டும் சொல்லாமல் மெளனமாக நின்றுகொண்டிருந்தான். நிலவறை மனிதன் சொன்னது அனைத்தும் உண்மைதான். இப்போது நான் கேட்ட கேள்வியின் பதில் கிடைத்தது. தூரத்தில் முதியவர்கள் கூட்டம் தங்கள் கைத்தடிகளுடன் ஓடி வந்துகொண்டிருந்தனர்.
அவர்கள் தாகத்தினால் வருகிறார்களா? அல்லது என்னைத் தாக்க வருகிறார்களா என்ற குழப்பம் மனதுக்குள் நிலவியது. நதியினை நெருங்கிய முதியவர்களின் கூட்டத் தலைவன் “அனைவரும் கைத்தடிகளை நிலத்தில் போடுங்கள்” என்று கட்டளையிட்டதும் நிலத்தின் மேல் ஒவ்வொரு கைத்தடிகளாக வந்து விழத் தொடங்கியது. நீரில்லாமல் வாடிக்கொண்டிருக்கும் புல்கூட்டம் தரையில் சாயும்முன்பு, கைத்தடிகள் அனைத்தும் பாம்பாக மாறி ஊரத் தொடங்கின.
அனைத்துப் பாம்புகளும் நதிக்கரைக்குச் சென்று ரத்தத்தைக் குடிக்கத் தொடங்கின. தலைவன் மீண்டும் பேசத் தொடங்கினார். “நாம் இனிமேல் நீருக்காகக் காத்திருக்க முடியாது. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால் ரத்தம் குடிக்கப் பழக வேண்டும்”. முதிய தலைவன் கடவுள் போன்ற உடல்மொழியில் பேசிக் கொண்டிருந்தான். நம்முடைய எதிரித் தேசத்தை ஒருநாள் கண்டிப்பாகத் தண்டிப்பேன். பகை நம் இரத்தத்தில் கலந்துள்ளது. நம்முடைய வம்சத்திற்கு இந்தப்பகையை ஊட்டி வளர்க்க வேண்டும். என்றாவது ஒருநாள் அவர்கள் தேசத்தில் இருக்கும் நம்முடைய ஜனங்களை மீட்டுக் கொண்டு வருவார்கள். அதைக்கேட்டு மற்றவர்கள் தலையை மெதுவாக அசைத்தார்கள். கூட்டம் கூட்டமாகக் குளவிகள் வந்துகொண்டிருந்ததைப் பார்த்து பயப்படக்கூட அவர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. குளவிகளைக் கண்டு பயப்பட்டால் சபிக்கப்பட்டவர்களாவீர்கள். உங்கள் வம்சம் விருத்தி அடையாது. கொடிய வியாதியினால் அவதியுறுவீர்கள். எச்சரிக்கை. எதிரிகளின் பலிபீடங்களை அழித்து, தோப்புகளை வெட்டி வீச வேண்டும். குளவிகள் அவர்கள் முகங்களில் ஊர்ந்தபோதும் கண்களை மூடாமல் அதன் நகர்வை அனுபவித்தார்கள். சிறிது நேர இருப்பிற்குப் பின் குளவிகள் அங்கிருந்து வான்நோக்கிப் பறந்துகொண்டிருந்தன. எதிரிகளை ஒருநாள் வெல்வோம். அவர்களை மண்டியிட வைப்போம். நடக்கும் அதற்காக அவர்களின் செல்வத்தை நாம் எடுத்து வரக்கூடாது. நம்முடைய நிலத்தையும், ஜனங்களை மீட்பது மட்டுமே நம் குறிக்கோள். அவர்களின் வார்த்தைகள் வெடிக்கும் நரம்புகளில் இருந்து கொப்பளிக்கும் இரத்தத்தின் சப்தத்தை ஒத்ததுபோல் இருந்தன. அவர்களின் சொற்களினால் அந்நதியின் இரத்தமட்டம் பல மடங்காகப் பெருகிக்கொண்டிருந்தது. அவர்கள் எப்போது திரும்பினார்கள் என்பதனை நான் அறிந்திருக்கவில்லை.
இரத்தம் என்னை மயக்கப்படுத்தியிருந்தது. காதில் ஒலிகளின் கலவையான சப்தங்கள். உலோகங்களைக் கொண்டு செல்லும் சிறுவர்கள். இயந்திரத்தில் போட்டுச் சப்பி நொறுக்கப்படுகிறது. தகடுகள் அடுக்குதல், சுழலும் ஸ்க்ரூ, பில்டிங் சத்தம், தெறிக்கும் நெருப்புக் கீற்றுகள். சில ரசாயனங்களின் மணங்கள், இடையிடையே சில காட்சிகள். உதாரணமாக நடுக்கடலில் விழும் குச்சி, அதில் அமரும் பார்ன் சுவாலோ. இனி எந்த இரத்தத்தாலும் மயக்கமுற வைக்க இயலாது. அங்கிருந்து நகரம் இருக்கும் திசையை நோக்கிக் காரை மெதுவாகச் செலுத்தினேன்.
மொத்தமாக இடிந்த வீட்டிற்குள் ஒரு குறிப்பு எழுதப்பட்டிருந்தது. “இந்த மொழியைப் பேசத் தெரிந்த கடைசி மனிதன் இப்போது இறந்துவிட்டான். அவன் இந்த வீட்டில் வசித்தவன்” அங்கே கூண்டிற்குள் அடைபட்டிருந்த காகத்தைப் பறக்கவிட்டேன். உடைந்து கீழே சிதறிக்கிடந்த செங்கலில் பச்சைச் சிறகு வரையப்பட்டிருந்தது. அருகே ஹாசோர் வன்முறையில் அழிக்கப்பட்ட பசால்ட் சிங்கங்களின் சிலைகள் சிதறிக்கிடந்தன. நான் மெதுவாக நகர நகர, நான் செல்லும் திசையை நோக்கி நகரத்தொடங்கின. கற்களில் உரோமம் முளைத்ததும் அதன் அசைவு அச்சுறுத்துவதாக இருந்தது. உறுமல் ஒலியில் நெஞ்சே அடைத்துவிடும் போலிருக்க கார் கதவைத் திறந்து கீழே இறங்கினேன். பொதுஜனங்கள் திரளாக மாலையில் வேகமாக வீட்டிற்குள் சென்று கொண்டிருந்தார்கள்.
காதில் இரத்தம் வருவது நின்று காயத் தொடங்கியிருந்தது. மருந்து போடப்பட்ட பிசுபிசுப்பு தொட்டுப் பார்த்தபோது இருந்தது. வெண்பஞ்சின் உரோமங்களும் உலர்ந்த இரத்தத்தில் ஒட்டியிருந்தன. எந்த மருத்துவமனைக்குச் சென்றேன்? டாக்டர் யார்? ஒருவேளை அவளாக இருக்குமோ என்று நதிக்கரையில் சாம்பலைக் கரைத்தவளின் உடலை டாக்டர் உடைக்குள் பொருத்திப் பார்த்துக்கொண்டேன். என்ன நடந்தது என்று யோசிக்கும் எந்தக் கேள்விகளுக்கும் யோசித்துப் பார்த்தால் பதில் இல்லை. சலூன் கடைக்குச் சென்றபோது அவனைத் துரத்திவிட்டதாகச் சொன்னார்கள். குற்றவுணர்வு இருந்தாலும் குற்றவுணர்வு இல்லாதவனைப் போல், நான் செய்தது சரிதான் என்று சுயசமாதானம் செய்துகொண்டு காரில் ஏறியபோது மீண்டும் நகரம் எதிர்காலத்திற்குச் சென்றது. அன்று முதல் காரை ஷெட்டிற்குள் அடைத்துவிட்டுப் பேருந்தில் பயணிக்கத் தொடங்கினேன்.
வெட்டுப்பட்ட காதின் நுனி முழுமையடைந்த ஒருநாள் மக்கள் அனைவரும் தங்கள் கார்களைப் பாதுகாக்கப் போராடிக்கொண்டிருப்பதாகச் செய்திக்குறிப்பை வாசித்தேன். மற்றுமொருநாள் என் காரை ஏவுகணை வியாபாரிகள் வண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். நான் ஆசை ஆசையாக வாங்கிய கார், ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? சிறிதுகூட மனசாட்சியே கிடையாதா? என்று கேட்டபோது, இரண்டாம் போருக்குப் பின் ஏவுகணை வியாபாரம் மந்தமாக இருந்ததால், டேங்கர் லாரிகளை மறுசுழற்சி செய்து கார் தயாரிக்கத் தொடங்கினோம். இப்போது எங்களுக்கு மீண்டும் ஜாக்பாட் அடித்துள்ளது. உலோகத் தட்டுப்பாடு. கவலை வேண்டாம், நஷ்ட ஈடு கிடைத்துவிடும். என்று என்னைச் சமாதானப்படுத்திக் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்கள்.
பாம்புகள் குடித்து ஆற்றுநீர் வற்றியிருந்தது. கண்ணாடித் தொழில் செய்யும் அரசியல் வியாபாரிகளின் லாரிகள் வரிசையாக நின்றுகொண்டிருந்தன. மழைக்காலம் வந்து நதிகளில், அருவிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடும் நாள் ஒன்றில், அவள் கைகளில் இருந்து முகம்பார்க்கும் கண்ணாடி கீழே விழுந்து சில்லுச் சில்லானது. இடப்புறமாக எழும்பியதால் நொறுங்கியிருக்கலாம் என்று நினைத்து வீதிக்குச் சென்று புதுக்கண்ணாடி ஒன்றை வாங்கிவந்தாள். இம்முறை இருளின் முடிவின்மையில் இருந்து வெளியேற முடியாது என்று தோன்றியது. எதிர்காலமும் மற்றோர் இடத்தின் காட்சிகளும் என்னை நோக்கித் துரத்திக்கொண்டிருக்கின்றன. கார் உடைந்து நொறுங்குவது இப்போது தெளிவாகக் கேட்கமுடிகிறது.
Art : Asaf Hanuka
ஐசக் பேசில் எமரால்ட் – கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர், முதுகலை மென்பொருள் பொறியியல் முடித்துவிட்டு ஊடகத்துறையில் பணிபுரிகிறார். “அபினி” (நாவல்), “பற்றி எரியும் நரம்புகள்” (சிறுகதைத் தொகுப்பு) ஆகிய நூல்களின் ஆசிரியர். இவரது படைப்புகள் நீலம், யாவரும்.காம், வனம், நகர்வு ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளது.








Leave a Reply