அன்று விடுமுறை நாள். சென்னை லயோலா கல்லூரியில் மணல் மகுடி நாடகம் பிளே என்று என் முதன்மையான ஆசிரியர்களில் ஒருவரான பிரவீண் பஃறுளியும் நானும் பகிர்ந்திருந்தோம். மாதாந்திரப் பேருந்துப் பயணச் சீட்டைப் புதுப்பிக்காத நாட்கள் அவை. ஆகையால் பயணம் மேற்கொள்வது கற்பனை அளவிலே இருக்கும். எனவே, நாடகம் பார்ப்பது குறித்துத் தீர்மானகரமான முடிவேதும் முன்கூட்டியே எடுக்கவில்லை. மாலை நெருங்க நெருங்க நாடகத்திற்குச் செல்லும் ஆர்வம் தீவிரமானது. சினிமா, கடற்கரை, இலக்கிய நிகழ்வுகள் போன்ற இடங்களுக்கு ஒரு குறிப்பிட இடத்தில் என்னைப் பிக்கப் செய்வார் பிரவீண். அன்று நாடகம் பார்க்கச் செல்லும் முடிவினை நான் மிகத் தாமதமாகவே எடுத்ததால், பிரவீண் முன் கூட்டியே லயோலா கல்லூரிக்குச் சென்று விட்டார். வீட்டில் அங்குமிங்கும் பெருக்கி எடுத்துச் சென்ற சில்லறை, பேருந்துச் செலவுக்குப் போக மீதம் ஐந்து ரூபாய் மட்டுமே இருந்தது. கிண்டி ரயில் நிலையத்திலிருந்து நுங்கம்பாக்கம் செல்ல ஐந்து ரூபாய்தான் கட்டணம். ஆனால், வித் அவுட்டில் சென்று விடலாம் என்று நடைமேடையை நெருங்கி விட்டேன், செக்கிங்கில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது என்று தோன்ற, மீண்டும் படியேறி டிக்கெட் வாங்கி ரயிலேறினேன்.
இருட்டி விட்டது. கறுப்பும் மஞ்சளும் கலந்த பொழுதில் நடந்து கல்லூரி வளாகத்தை அடைந்தேன். செல்போன் வெளிச்சத்தில் பிரவீண் தான் அமர்ந்திருந்த இடத்தைச் சுட்ட இலகுவானது. ஏற்கெனவே, மணல் மகுடியின் நாடகங்களை மதுரை அருளானந்தம் கல்லூரியில் பார்த்திருக்கிறேன். காட்சிரீதியாகவும், மொழிரீதியாகவும் அடர்த்தி மிகுந்ததாக இருக்கும். சென்னை ஸ்பேசஸ், தி.நகர், கே.கே.நகர், கூத்துப்பட்டறை ஆகிய இடங்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிற்கே நாடகங்கள் பார்த்துள்ளேன். அண்மையில் பார்த்தது ‘மீளுரு’ என்னும் நாடகம்தான். மரத்தடியில் வண்ண விளக்குகளால், இந்நாடகத்தில் நடித்த கதாபாத்திரங்களின் உடல் மொழியும் வசன உச்சரிப்பும் என்றும் மறக்க இயலாதவை. கவிதை மொழிகள் மயக்கமுறும் அளவிற்குச் சந்த நயத்துடனும் துயரம் தோய்ந்தும் இருந்தன. என் கவிப் பயணத்திற்கு, அரசியல் பார்வையை நோக்கித் திருப்பியதற்கு ஈழப் போர் மிக முக்கியக் காரணமாக இருந்தது. ஈழப் பின்னணியிலான இந்நாடகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக மாயச் சுவருக்கு நடுவே அந்தப் பக்கம் மாண்டவர்களின் ஆவியும் இந்தப் பக்கம் எஞ்சியவர்களுக்குமான உரையாடல் காட்சிகள் நெக்குருகச் செய்தன. மீண்டும் காணக் கூடா இக்காட்சிகளை எங்கு காண்பேன், கேட்க முடியா வசனங்களை எப்படிக் கேட்பேன் என்ற பரிதவிப்பு மேலோங்கியது. இந்நாடகத்தின் பிரதி தடாரியில் வெளியாகும் என்று கற்பனைகூடச் செய்ததில்லை. இதற்குக் காரணமான எழுத்தாளர் கணேஷ்ராமுக்கும் முருக பூபதிக்கும் நன்றி.
– பச்சோந்தி
(தடாரி ஆசிரியர்)
இனி நாடகப் பிரதியுடன்…
கோமாளிகள் இருவர் எதிரெதிர்த் திசைகளில் சந்தித்து நெடு நாளைக்கிப் பிந்தைய சந்திப்பைத் தம் வலி வாழ்வை நகைச்சுவை மொழியில் பேசி ஊர், மண், மரபு, மக்கள் எனப் பேசிக் கொண்டிருக்கும்போதே வெகு தொலைவிலிருந்து கையில் முறுக்கு மாலையுடன் வரும் பார்வையாளன் கோமாளியின் மகத்துவத்தைப் போரின் பாடுகளைப் பாடலாகவும் பேசிப் பாடிச் சிரித்துப் பரிசு கொடுத்துப் பார்வையாளர்களுடன் சேர்ந்து அமர்ந்துகொள்ள இரு கோமாளிகளும் ஊர் தெய்வங்களை அழைத்து மருள் கொண்டு ஆடிப்பாடி மறைகிறார்கள்.
பின் திரைத் துணிகள் விலகிக் கொள்ள உள்ளே கானகப் பாறைக்குள்ளிருந்து மரத்தைத் தழுவியிருக்கும் குள்ளப் பெண்ணொருத்திக் கைகளில் நீண்ட சாவிக் கொத்துகளைப் பிடித்திருக்க விரி கூந்தலுடன் மூச்சிறைத்துப் பெருங்குலவையுடன் நுழைகிறாள். அவள் பின்னே மூதாதைகளைப் பேய்மை கொண்ட அணங்குகளை நினைவூட்டும் முகமூடிக் கூட்டம் கம்புகளூன்றி நுழைகிறது. நிலத்தில் புழுதியை அள்ளியூதிப் பேசத் துவங்குகிறாள் பெண்.
வனப்பெண் : நிச்சயமின்மையின் சாவி. பளிங்கும், கல்லும், சுடு மண்ணுமாக வாழும் சிலைகளிடம் பெற்ற சாவி.
யார் மீதும் பற்று கொள்ளாத தோல்விகளையும் துயரங்களையும் திறந்து தீண்டாத வார்த்தைகள் கொண்டு பார்க்க வைக்கும் சாவி.
தனிமை வாசம் ஆன்ம இருள் இதயத்தின் பசி அவ்வளவையும் அர்ப்பணித்து இந்தச் சாவிகளை உங்களுக்குக் கொடுத்துப் போகிறேன்.
தொல்குடித் தழும்புகள் ஏறிய அடிமை வாழ்வை மறுத்துச் சொன்ன கதைச்சாவி.
தம் உடல்களைத் தவிர வேறெந்த உடமைகளும் இல்லாத தப்பி பிழைக்க வழி தேடி பிறந்த மண்ணைத் தொலைத்தவர்கள் பாடும் உலகத்தைத் திறக்கும் சாவி.
பசிக்கு பலியான மரித்தோரின் உயிருள்ள கதைகளைப் பார்க்க வைக்கும் திறவுகோல்.
பலியான கன்னிகளின் குரல்கள் எழுந்து வாழும் நிலத்திற்கு அழைத்துப் போகும் சாவியிது.
கொதவளையில் தோட்டாக்கள் குத்தி நிற்க துடிக்கும் கதைநாவிற்குத் தண்ணீர் கொண்டு வந்த மாயப்பெண் கொடுத்த சாவி…
அணங்கேறிய நிலையில் திசை எங்கும் அலைவடைந்து இடுப்பில் கட்டி இருந்த யுத்தத்தால் குண்டு துளைக்கப்பட்ட சால்வையை அவிழ்த்து போர்க்காயம் ஏறிய நிலத்தைத் துடைத்தபடி அதனை நடுவில் விரித்து வானத்தைப் பார்த்து பூமியைப் பார்த்து முனகல்களுடன் அவள் வெளியேற அதே திசையிலிருந்து ஊர்ந்துவரும் மற்றொரு வனவாசிப் பெண்ணின் கால் பாதங்களைத் தொட்டு வணங்கி தன்னால் முன்னுணர்ந்தவற்றைப் பறவை, மிருக உடல் மொழியில் பறந்து ஊர்ந்து வனத்தின் வாக்குகளைத் தனக்குள்ளிருந்து உருவியெடுத்துப் பேசுகிறான்.
வனவாசி : குடு குடு குடு…….. குடு
ஆயி….. காளி….. கருப்பாயி…..
இருட்டு புடிச்சு நெறிக்குது, மூச்சு முட்டுது அங்கிட்டும் இங்கிட்டும் கெடந்து வந்துக்கிட்டுருக்கு போங்காலம்.
குடுகுடுகுடுகுடு…..குடு
நிலைமை பதறது நிச்சயம் ஒன்னும் பேசமுடியல… ஒன்னு சேரமுடியல… கள்ளப்பிராந்துகள் வட்டம்போடுது
மனை இருந்துச்சு மாடு இருந்துச்சு ஒரு காலம் காடு கடல் எல்லாம் கூட இருந்துச்சு நாறப் பேய்கள் நாட்டாமை பண்ணி நாளும் போச்சு நாசமா.
குடுகுடுகுடுகுடு…. குடு
மேல மேல போகுது ஆகாசம் பாவம் நிலத்துக்கு வாயிருந்தா அழுதுரும் காத்து ஓட்டம் சரியில்லை ஒரு தூத்துளி கிடையாது
பாத்து இரு தாயி பத்திரமா.
குடுகுடுகுடுகுடு….. குடு
கண்ணு புருவம் துடிக்குது கனவுல ஒத்தமயில் ஓடியோடி கத்துது மேகமெல்லாம் ரத்த ரத்தமா திரண்டு உருண்டு தொங்குது கொள்ளையும் கோமாரியும் வருமோன்னு பயமிருக்கு
பாத்து இரு தாயி பத்திரமா.
உன் வீட்டாளு ஒன்னு நாதியில்லாம ரோட்டுல கெடக்குது நரிக்கு அதிகாரம் கொடுத்தா அது கெடைக்கு ரெண்டு கேட்குது.
பயப்படாதெ மனசு விடாதெ தெம்பா இரு நியாமுன்னு ஒன்னு இருக்கு மக்க மனுசக இருக்காக
கூறு இருக்கு சொரணை இருக்கு எல்லாத்துக்கும் மேல ஆயி….. காளி….. கருப்பாயோட அருள் இருக்கு கருப்புக்கும் கண்ணு திறந்திருக்கு….
குடுகுடுகுடுகுடு… குடு
கருப்பு….
தம் வன தேவதைகளைப் பலவாறு கூவி அழைத்து முகங்களை தம் நெடுங்கூந்தலால் மறைத்து ஆடி குதித்து வரும் இரு வனவாசிகளிடம் துயரங்கள் விழுந்த சால்வையை விரித்துக்கொடுத்து மறைந்துவிடுகிறான். வந்த வனவாசிகள் இருவரும் நடக்கவிருப்பதைப் பேசுகிறார்கள்.
வனவாசி 1 : புழுதிக்கால்களோட உழவுப்பாதையிலிருந்து பசிச்ச வயிறுகளுக்கு அன்னமிடும் அணையா நெருப்புச் சுடராய் நின்னு அசையும் நாடோடிக் கலைஞர்கள் நாங்க. திசைகள்தான் எங்க ஊரு. கால்கள் போகும் திசைக்குள் பற்றிப் படரும் செடிகளெனப் பசித்த நிலத்தின் மௌனத்தை பாட்டும், கதையும், இசையும் கொண்டு நிரப்ப வந்துள்ளோம்.
வனவாசி 2 : கடலுக்குள் போனவர்களுக்காகக் காத்து நிற்கும் பனமரத்தாயிகிட்ட பனங்கள்ளு குடிச்சுவந்தோம். துயரக்குலவையால துடி பெற்று வந்துள்ளோம். போர், நவீன வாழ்வு, துண்டு தூண்டான வாழ்வின் சிதிலங்களைத் தேடி எடுத்து நாவின் எச்சில் தடவி ஒட்டி உசுப்பி உள்மதி திரைய கதைபோட வந்திருக்கோம்.
பின் சால்வையை உடலில் சுற்றிக்கொண்டு மறைந்துவிட எதிரெதிர் இருபக்கங்களிலிருந்தும் வரும் வனவாசிகள் ஆண் பெண்ணாகப் பிரிந்து தங்கள் வனத்தின் இசைக் கருவிகளையும் விதைகளையும் மரஉரல்களையும் கொண்டு இசையாக வாசித்துச் சடங்கேறிய நடையில் வட்டமிட்டபடி ஆண்களிடம் இருந்து முகமூடிகளை வாங்கி நிலத்தில் ஒவ்வோர் உரலோடும் தனித்தனியே படையல் இட்டு வைக்கின்றார்கள் பூரண அமைதி கேட்டு மறைந்த வனம் முன்னோர்களிடம் இசையால் வணங்கி நிலமெங்கும் வட்டமிட்டு இசை ஊதிய மர விதைகளை வான் நோக்கிக் குலுக்கியபடி இரு குழுக்களாகப் பிரிந்து திரும்பவும் மனத்திற்குள் மறைந்து விடுகின்றார்கள்.
குடுகுடுப்பை 1 :
வா வா வரப்போறாதாருன்னு சொல்லுறேன்
கூடையில கஞ்சி வச்சி தன்சுமய தலையில வச்சு
கூப்பிட்டு அன்னமிடும் குலச்சாமி போல
கதெயும் பாட்டும் சுமந்து கூத்தும் நடிப்பும் நிறுத்தி
சோர்ந்தவுகளெ விசனப்பட்டவுகளெ
தூக்கி நிறுத்த நீண்டாயுளுற நிறைமதிபெற
வாடாத கற்பகம் போல நம்ம நாடகக்கலையால
காக்க வரும் ! கால் போன திசையெங்கும் ஆடிவாரான்
அறங்காட்டி திறங்காட்டி தன்னாற்றல் ஏத்த வரான்.
புழுதிப்பாதை திறந்து வயக்காட்டு முனிபோல சீறிவரான்….
குடுகுடுப்பை 2 : கடல் முகம் பார்த்து கத காத்த குடிச்சு வளர்ந்தவன் நானு. கடலோர பனந்தாயி கிட்ட பனங்கள்ளுண்டு பனமதுரமுண்டு அவெ வேரத்தழுவி பனங்கிழங்கெ வாயில கவ்வி சேவற்பெருங்கோழி சிறகடிச்சு கூர மேல நின்னு சினத்தோட கூவியழைச்ச கதைசொல்லி உறங்காமீனு சொன்ன கடல் கவுச்சி கதெய கடலெ விஷமாக்குன கதெய அணு உலைக்குத் தப்பிக்க ஏங்கும் கடல் ஜீவராசிக கதெய இப்பச் சொல்ல வாரான் வாரான்…
இரு குடுகுடுப்பைகளும் உடுக்கையொலிகளுடன் பின்பக்கம் இருளில் மறைய உயரே முகமூடிகள் மாட்டிய மூவர் பல்வேறு உடலசைவுகளுடன் முகமூடிகளைப் பின்பக்கம் திருப்பி ஒவ்வொருவராகப் பேச தூரத்திலிருந்து தோலிசை ஒலி.
நிலம் – 2
பின் திரைச்சீலை தானே விலக வனத்திற்குள்ளே மரங்களைச் சுற்றி நின்று மூங்கில்களை வாத்தியமாக்கி ஒலி எழுப்பும் மூன்று முகமூடிகளிட்ட வனவாசிகள் மிக மெதுவாய் மரத்திடமிருந்து முன்னே நுழைந்து தனக்குப்பின்னே வருபவர்களை இசையொலியால் அறிவித்தபடி தம்மைத்தாமே வட்டமிட்ட படி நடன அசைவில் அழைக்க வனத்திற்குள்ளிருந்து சிறு கூட்டமாகத் தனித்தனியே நுழையும் வனவாசிகள் முகமூடிகளுடன் இருவர் இருவராக தனியே சில இடங்களில் விரித்துப் போகின்றனர். திரும்பவும் துணிகளும் பெண்களுமாக இரு வெவ்வேறு குழுக்கள் முகமூடிகள் மாட்டி அதன்மேல் துணிகள் தொங்க தம்மை மறைத்து ஊர்ந்து வருகிறார்கள். எல்லோரும் அமர்ந்து தம் முகமூடிகள் அசைவுகளால் பேசி வனத்தின் ஆதி முகமூடிச்சடங்கினை நிகழ்த்தத் துவங்குகிறார்கள். தம்மைச் சுற்றியிருக்கும் வெற்றுவெளிகளைத் தங்கள் குழு நாடகீய நடன உடலசைவுகளால் புதிய களமாக பேரானந்த வெளியாக்கி முகமூடிகளின் சடங்கியல் வாழ்வை நிகழ்த்தி மூங்கில் இசை வாத்தியங்களை எல்லோரும் வாசித்த படி வனத்தின் இருளுக்குள் மறைந்துவிடுகின்றார்கள்.
நிலம் – 3
மறந்த அதே இருளுக்குள்ளிருந்து கூட்டமாக ஒவ்வொருவரும் தத்தமது தோல் இசைக்கருவிகளுடன் முதுகுகளில் உதிரக்கரையேறிய பாறைகளைச் சுமந்துகொண்டு அவை எல்லாவற்றையும் கீழே இறக்கி வைத்து வணங்கி அமர்ந்து ஒவ்வொருவராக தங்கள் வனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட யுத்தத்தின் வலி வாதைகளை கதைகளாகச் சொல்கிறார்கள். இசையும் நடன உடலசைவுகளும் மந்திர உச்சாடனங்களைப்போல வசனங்களைப் பேசியபடி நிகழும் காட்சி.
வனவாசி 1 : வனத்தோட பல்லுயிர்கள்தான் எங்க வனவாசிகளை வளர்த்துச்சி அதுகதான் எங்க முதுமூதாக்கள்.
வனவாசி 2 : நாங்க போர்த்தியிருக்கிறது குகையோட காயங்கள் ஏறிய சால்வை… வன மிருகத்தோட வாசனை ஏறிய உடலால அரங்காடிச் சொல்லுகிறோம். மனுசனா வாழ்றதுல சோர்வடைந்துவிட்ட சமூகத்தை உயிர்ப்பிக்க வந்திருக்கோம். எங்க கூத்தாடி கூட்டம் பூமி பூரா அலையுறதப்பாருங்க… கேளுங்க…
வனவாசி 3 : ஆதியில சமவெளி மனுசனோட கறைகள் ஏறின எந்த சத்தங்களும் காட்டுக்குள்ள நுழையல. நாடு பிடிக்கிற மனுச வெறிக்கு தான் போரெ கண்டுபிடிச்சது. போரை ஏன்டா முதல்ல காட்டுக்குள்ள துவங்னீங்க… காடுகள்கிட்ட வன உயிரினங்கள்கிட்ட மனுச புத்தியில்லைங்கிறனாலத்தானே உங்க இழிவான போர்ப்புத்தியை எங்க மேல இறக்குனீங்க காட்டுயிர்களெல்லாம் வசவுப்பாடல பாடி உருவேத்றது உங்களுக்குத் தெரியுமா?
வனவாசி 4 : பறவைகளோட வசவுப் பாடல் பெருகிடும்டா….. நிறுத்துங்கப்பா உங்க சண்டைகளெ… அந்தர வெளியின் பக்கங்களில் தொட்டுப் பாருங்கப்பா… பறவைகளோட வாழ்வெ காற்றின் அடுக்கடுக்கான உணர்வுகள உணர்ந்து வாழப் பழகுங்கப்பா… ஏ…. மக்கா… நான் சொல்லுறத கேளு மக்கா…
தன் உடலை உலுப்பி உலுப்பி ஓடியோடி வெளியேறவும் மற்ற நடிகன் விட்ட கதையினைத் தொடர்கிறான்.
வனவாசி 5 : இரண்டாம் உலகப்போருல அந்த சர்வாதிகாரி உலகமே தன் காலுக்குக் கீழனு சொல்லி ஊரெங்கும் வதைமுகாமெ திறந்தான்… அவன் சைபீரீயா காட்டுக்குள்ள அதெ ஒட்டுன நாட்டப் பிடிக்க கட்டாய போருக்குக் கூப்பிட்டு வம்பிழுத்தான். ஒரு யுத்தம் தன் விதிப்படி காட்டில் சண்டை செய்து தன்னிடம் வீழ்ந்தவர்கள் பெருக நாட்டுக்குள் நுழைந்து மனுச மக்களெ கொன்னு போட்ருவான் இலங்கையில உக்ரைன்ல பாலஸ்தீனத்துல நடந்த போர பாத்த பறவைகள் என்ன சொல்லிச்சுனு தெரியுமா?
வனவாசி 6 : அந்த சைபீரீயா காட்டுலதான ஷாமன்னு ஒரு பழங்குடி கூட்டம் வாழ்ந்தது. அது படைத்தளபதிகளுக்கும், வீரர்களுக்கும், சர்வாதிகாரிகளுக்கும் தெரியல. எப்படி தெரியும் பழங்குடிப் பண்பாட்டைப் புரிந்த எந்த ராசாவும் இந்த பூமியில இல்ல. போரோட குண்டு சத்தம் பீரங்கிச் சத்தம் கேட்டு காட்டுல இருக்க தாவரங்களும் பூச்சியினங்களும் பறவைகளும் பைத்தியம் பிடித்துக் கத்திக்கத்தி அழுவுற கேவலொலி அந்த ஷாமன் பழங்குடி காதுகளுக்கு மட்டும்தான் கேட்டுச்சி…
வனவாசி 7 : ஒவ்வொரு உயிரினங்களோட புலம்பலொலி கேட்ட சாமன் தன்னோட தொன்ம மூதாதைகளிடம் தொல் மரங்களிடம் பாடிப்பேசி ஆடித்தாளம் போட்டு வணங்குகினானா… விடாத குண்டுச் சத்தங்களைக் கேட்டு வனத்துல திசை மிரண்டு ஓடியோடி தோலிசைக் கருவிகளைத் தூக்கி எடுத்து வாசிக்கத் துவங்கி அந்த இசையொலிகளாலேயே பேசுனான்….. இசைக்குள்ள இறங்குனாங்க மூதாதைகள்….
குண்டூசிச் சத்தங்கள் போல கேட்கும் தோலிசை ஒலிகளுக்கு நடிகை நடிகர்கள் வெளியெங்கும் ஓடியோடி வீழ்ந்து எழுந்து ஆளுக்கொரு தோலிசைக் கருவிகளை எடுத்துத் தனித்தனியாக ஆங்காங்கே வாசித்து ஒன்றாகக்கூடி திரும்பவும் எழுச்சியோடு வாசித்து எல்லா இசைக்கருவிகளையும் வட்ட வடிவில் வைத்துவிட்டு துணி மறைத்துக் கட்டிய இடது திசைக்குச் சென்று துணிக்கு நின்று அடக்கத்துடன் சைகைகளில் சொல்லி பின் ஒருத்தி பேசுதல்.
வனவாசி 8 : நாங்க எங்க வன மூதாதைகளிடம் இசையால பேசுனோம் போரோட குண்டுச் சத்தத்தால உங்க பீரங்கியால வனத்துல இருக்கிற உயிரினங்களின் பைத்திய அழுகை வரப்போற அழிவுகளெ முன்னெடுத்துச் சொல்லுது… நீங்க போரெ நிறுத்துங்க… இறகால கெஞ்சிக்கேட்கிறோம்… செடியின் மனசால கெஞ்சிக்கேட்கிறோம்… பறவைங்க உயிர தொட்டு கேட்கிறோம்… போரெ நிறுத்துங்களேன்.
திரும்பவும் குண்டுச் சத்தம் தொடர வேண்டாமென மறுத்து அனைவரது கரங்களும் ஒன்று கூடி படையினரின் குறியீடாக நிற்கும் தொங்கும் துணியை உரசியுரசி
வனவாசி 9 : யார் சொல்லியும் போர் மனசெ புரிய வைக்க முடியல அன்பின் கருணைமிக்க வார்த்தைகள் அது போர்க்காதுகளுக்குக் கேட்கவேயில்ல. திரும்பியும் போர்ப் பாதை கொலைப் பழி ஷாமன் மூதாதை சொன்னது பழிச்சது… போர்ப்படைகள் போன திசையெங்கும் தோல்வி வீழ்ச்சியாக விரட்டி வந்துச்சு….
பேசப் பேச திரும்பவும் குண்டுச் சத்தம் கேட்டுக் கொண்டிருக்க தொடர்கிறது. பெரும் பனங்கூடையில் முகமூடிகளைச் சுமந்து வரும் மூதாவை கூட்டமாகக் குலவையிட்டு வரவேற்கிறார்கள். மூதாவோ போர்த்திசை பார்த்து சைகைகளில் வசை மொழி கூறி முகமூடிகளை எல்லோருக்கும் எடுத்துக்கொள்ளச் சொல்கிறாள். முகமூடிகள் மாட்டிய எல்லோரும் இடைவெளி விட்டு கேட்கும் குண்டுச் சத்தத்திற்கு எதிராக புதிய முகமூடி உருக்களாக புதிய பல உடலசைவு நாட்டிய தாளத்தை உருவாக்குகிறார்கள். பின் கவிழும் இருளுக்குள் இருந்து நீண்ட துணியினை இழுத்து வரும் நடிகன் மிக சோக நடையில் வந்து பேசுதல்.
வனவாசி 10 : இசையாள எங்க முன்னோர்கள்ட்ட பேசின பேச்செ சொல்லுறேன் கேளு. நாளைக்காலை இந்த இடத்துல இந்த திசையில மூதாக்க வாக்கெ மறுத்து போர் செஞ்சீங்கனா தோல்விகள் பல ரூபத்துல உங்கள பின் தொரத்தி வருமுங்க…
வனவாசிக்கூட்டம் : வீழ்ச்சி, வீழ்ச்சி படுதோல்வி.
வனவாசி 11: தளபதிகளும், ராணுவ ஜெனரல்களும், படை வீரர்களும் ஷாமன் பழங்குடி சொல்லுறது பழிக்குதுன்னு நினைச்சாங்க… அந்த எளிய மனதின் சக்தி பேரெழுச்சியாய்ச் செயல்படத் துவங்குச்சி. நாம தோக்குறோம்னு உணர்ந்து படை வீரர்களுக்கிடையில் குழப்பம் கூச்சல்… ஷாமன் காரணம்னு சொன்னாங்க. மறுநாள் தளபதி ஆணையிட்டான் கண்ணு கெட்டிய தூரம் கிடைக்கிற ஷாமன் பழங்குடிகளையெல்லாம் சுட்டுத் தள்ளுங்கடான்னு சொல்ல…
வனவாசி 12 : வேட்டைப்பலி துவங்கிடுச்சு… பல பேரை சுட்டுட்டான்… அதற்கடுத்த நாளு எஞ்சினை பழங்குடிகெ ஒன்றுகூடி இசைக்கருவிகளத்தான் ஆயுதமா தூக்குனாங்கன்னு வரலாறு சொல்லிச்சு… உண்மையில் ஆயுதங்களை அன்பால உருக வைக்கிறவுங்க அவங்க… திரும்பவும் மூதாதைகள் கிட்ட பேசத் துவங்கினாங்க ஷாமன் பழங்குடிகளின் உதிரக்கறை படிந்த ஒவ்வொரு பாறையின் மீது ஏறி நின்று வாசித்தார்கள்… எப்படி வாசித்தார்கள் தெரியுமா?
முகமூடிகள் மாற்றிய புது உரு கொண்ட பலரும் எழுந்து வரும் போரின் அடையாளமான நெடுந் துணியை இழுத்து விரித்து வாசிக்க மறுபடியும் எதிர்ப்பக்கம் வரும் மற்றொரு போர்த் துணியைக் கூட்டா இழுத்துப் போட்டு உடல் அசைவுகளோடு ஆடியாடி தோலிசை வாசிக்கின்றார்கள்.
வனவாசி 13 : கூட்டு வாழ்வை எமக்குத் தந்த மரமே மன்னிச்சிடு. தேச எல்லை கடந்து விதைகள் கொண்டு வந்து காடு வளர்த்த பறவைகளே மன்னித்துவிடு! இருமண் பாட்டால் வயலை வளர்த்த புழுவாத்தா புழுவே மன்னித்துவிடு! வாடிய பயிருக்கு மண்ணைக் கொடுத்த வெறுங்கால் விவசாயப் புழுதிக்காரங்க சொல்றோம் நீரோடைகள் எங்க ரத்தம், காத்து எங்க மூச்சு, பாறைகள் எங்கள் முன்னோர்கள்…
வனவாசி 14 : ஏ சாமெ திணை ஏ கம்பு வரகு ஏ கனிவகை மரமே தாவரமே! பூமிக்கிட்ட புழுவுகிட்ட பாடுகளின் பாடலைக் கேளு காத்தவன் தின்னது போக கள்வன் தின்னுது போக பறவைகள் தின்னுது போக புழு பூச்சி தின்னது போக பசிச்சவன் தின்னது போக எங்களுக்கும் கொஞ்சம் விளைஞ்சி தா சாமியோ ஏ அட்ரா சாமி கொட்ட…. (இருள்)
இரண்டு வனவாசிகள் : மூதா இசையால பேசுறோம், இறங்கி வா….
பேய்மைகொண்ட நிலைக்கு எல்லோரும் இசையால் உந்தித்தள்ளப்பட்டுத் துடிகொண்ட தத்தமது உடல்களை இசையால் அடக்கி ரகசியப் பாஷைகளில் மூச்சொலிகளால் பேசிப்பேசி பூமியை வணங்கியபடி திரும்பவும் வன இருளுக்குள் மறைந்து விடுகின்றார்கள்.
நிலம் – 4
எல்லைக்கோடுபோல நீண்ட குறுகிய செவ்வக வெண் துணியை இழுத்து வரும் நடிகன் நிகழ்விடத்தின் முன்வரை விரித்து வைத்துவிட்டு விலகி மறைந்துவிடுகிறான். நடுவில் நீண்டிருக்கும் துணியின் இரு பக்கமும் நுழையும் நடிகர் நடிகைகள் பெரிய சாவிகளை உயரே தூக்கியபடி வந்து அமர்தல். நெடிய நீண்ட சுவருக்குப் பின்னே இருந்து சுவருக்கு அந்தப்பக்கமிருக்கும் மனிதர்களோடு துயரம் பீறிடப்பேசுகிறார்கள். நடிப்பு மொழியால் தோன்றும் சுவர். நடிக்கும்போது எல்லோரது முகங்களும் சுவரின் உயரே பார்த்தபடி பேசி நடிக்கின்றார்கள். இடையிடையே புல்லாங்குழல் வாசிப்பவர்களும் மணிகள் குலுக்குபவர்களும் ஓசைகள் எழுப்பிப் பேசுகிறார்கள். கூட்டமாய் இருபக்கமும் நுழைந்தவர்கள் தரையில் மண்டியிட்டுத் தாங்கள் தேடும் மனிதர்களின் பெயர்களைத் துதிப்பாடலைப் போல கூட்டாய் உச்சரித்து முனகுகின்றார்கள். இடது பக்கமிருந்து மூதாதைகளின் முகமூடிகள் அங்கியணிந்த குழுவினர் உள்ளே நுழைந்து கைகளில் தூக்கி வந்த குண்டு துளைக்கப்பட்ட சால்வைகளை நீட்டித் தலைகவிழ்ந்திருப்போரை வணங்கிப் பின்னோக்கிப் போக மூதாதைக் கூட்டத்தினரை விலக்கி நடுவில் புர்கா அணிந்த முஸ்லிம் பெண். சுவரைத் தட்டித்தட்டி ஓடி மூச்சிறைத்து அமர்ந்து அந்தப்பக்கமிருக்கும் தன் சகோதரியிடம் இருக்கும் பெண்குழந்தையின் நலன் வேண்டி இருவரும் பேசுகிறார்கள்.
நடிகை 1: அக்கா… அக்கா….அக்காஆ…… உனக்கு என்ன அக்கா ஆச்சு….அக்காஆஆ….
நடிகை 2: தங்கோ… தங்கோ… கேக்குது தங்கோ…
நடிகை 1: என் பிள்ளை எப்டிக்கா இருக்கா?
நடிகை 2: குழந்த என்கிட்ட பத்திரமா இருக்கு தங்கோ…
நடிகை 1: என் பிள்ளைய நல்லா பார்த்துக்கோ அக்கா….
நடிகை 2 : பாப்பா அழுகுது தங்கோ. தங்கோ நீ பாப்பாக்குத் தாலாட்டு பாடு தங்கோ; தாலாட்டு பாடு. உன் குரல கேட்டா குழந்த தூங்கிரும்.
தங்கோ…
நடிகை 1: என் பிள்ளை என் குரல கேட்காம இருக்க மாட்டாளேக்கா எப்டி அக்கா இருக்கப் போறா….
தூரி தூரி தூராரோ….ஆரி ஆரி ஆராரோ….. அக்கா…அக்கா….என் பிள்ளை தூங்கிட்டாளா அக்கா… அக்கா…என் பிள்ளை சமத்துப் பிள்ளை என் குரல கேட்டு தூங்கிருப்பா…அக்கா…என் பிள்ளை ய நல்லா பார்த்துக்கோ அக்கா…. நாளைக்குத் தாலாட்டு பாட வருவேன் அக்கா… நல்லா பார்த்துக்கோ அக்கா….. நல்லா பார்த்துக்கோ…..
சகோதரிகள் பேசிக்கொண்டிருக்கும்போதே கண்கள் கட்டுப்பட்ட பலர் சுவரில் இருபக்கத்திலுமிருந்து சுவரைத் தட்டித்தட்டி ஆயிஷா… முகமத், ரஹீம் என்று பெயர்களைக் கூறிச் சத்தமிடுகின்றனர்.
சுவரைத் தட்டித் தட்டிப் பேசி ஓலமிடும் பெண்ணும் ஆணும்.
நடிகை 3: பாண்டி…….
நடிகன் 1: பேச்சி…….
நடிகை 3: ஏன் இத்தனை நாள வரல…
நடிகன் 1 : ஆடு மாடெல்லாம் செத்துப்போச்சு பேச்சி. அதைப் பொதச்சுட்டு வரேன். எனக்கு யாரையும் பாக்கவோ, பேசவோ புடிக்கல பேச்சி, யாருமே இல்ல…
நடிகை 3: பாண்டி…
இறந்தவங்கள உயிர்பிச்சு அலையுற அந்த வனத்துப் பெண் இருக்கால அவ இந்த பூமிப்புற…..
நிச்சயமா வருவா… பாண்டி, நீ பயப்படாத பாண்டி.
நடிகன் 1: பேச்சி……..
நடிகை 4: அப்பா…. அப்பா…. எங்கப்பா இருக்க
நடிகன் 2: கொடி…. கொடி…..
நடிகை 4: கருப்பு ….கருப்பு …… எனக்கு ரொம்ப பயமா இருக்கு….கருப்பு. மாடுகளோட போன அப்பாவ காணாமே கருப்பு.
நடிகன் 2: நீ…அப்பா…அப்பா……அப்பா நீயும் அந்தக் காட்டுக்குள்ளதான் இருக்கியா….அந்தக் காட்டுக்குள்ள ஆண்களும் பெண்களும், இசையூதி வணங்கி அலையுறத பாத்தேன்… நீயும் பாத்தியாப்பா…
கோமாளி : ஏ கோமாளி. ஏ கோமாளி. கோமாளி இல்லனா பூமி தாங்காது. எதுனாலும் பாத்துக்குருவோம். வா…..கோமாளி சோர்ந்து போகக்கூடாது. கோமாளி வா பாத்துக்கிர்வோம்.
சிலர் சுவரின் இருபக்கமிருந்தும் குழல்களால் பேசிக்கொள்கிறார்கள். குண்டு விழும் சத்தம் கேட்டதும் சுவரின் ஒருபக்கத்தில் இருப்பவர்கள் வீழ மறு பக்கத்தில் ஒரு குழல் மட்டும் நின்று போன குழல்களைத் தேடி பதறியூதி அமர்கிறது.
மாட்டு மணியொலிகளால் பேசிக்கொள்ளும் இருவர். மணியொலி ஒருபக்கம் நின்று போக மறுபக்க மணி பதறி விழுகின்றது. இரு பக்கமிருப்பவர்களும் பெயர்களைக் கூவிக் கத்துகின்றனர். சிலர் தங்களது உடைகளைச் சுவருக்கு மேலே மறுபக்கத்திற்கு உயரத்தில் எறிகின்றனர். வந்து விழும் துணிகளை நேசத்தோடு எடுத்து உடம்போடு சேர்த்து அணைக்கின்றனர்.
நடிகை 5 : அண்ணே அண்ணே
நடிகன் 3 : பெருமாயி…..
நடிகை 5 : அண்ணே வந்துட்டியாணே…எங்கணே போன என்ன மறந்துட்டில….
நடிகன் 3: நா எப்படித்தா ஒன்ன மறப்பேன்… அன்னைக்கு ஆத்துல மீன் பிடிக்கும் போது குண்டு விழுந்துச்சுல அதுல அண்ணனோட வெளிச்சமே போயிடுச்சுத்தா…
நடிகை 5 : என்னணே சொல்ற இத்தனை நாள் எப்படிணே இருந்த…
நடிகன் 3 : பூ விக்கிறேன்ல…
நடிகை 5: எப்பன்ணே வருவ….
நடிகன் 3 : வெங்கல இசையொலிகளை நிலம்பூராம் எழுப்பியலையுற அக்காமார்க வருவாங்க அவங்க உன்ன பத்திரமா பார்த்துப்பாங்க… தைரியமா இரு…
நடிகன் 4 : ராமு, ராமு…
நடிகை 6 : அண்ணே…
நடிகன் 4 : ராமு இருக்கியா….
நடிகை 6 : இருக்கேன்ணே…எங்கிட்ட கதையைப் பத்தி கதை சொல்லுறேன் கதையைப் பத்தி கதை சொல்லுறேன்ன்னு சொல்லிகிட்டே இருப்பிய இப்பயாவது சொல்லுவியாணே…
நடிகன் 4 : கதைதானே சொல்லுறேன் ராமு ஒரு ஊருல கோமளி இருந்தாராம் அவரு பிசாசு மொழியில கதை எழுதுவாராம்…
நடிகை 6 : பிசாசு மொழியா…
நடிகன் 4 : ஆமா ராமு கதையை பூரா மூட்டைகட்டி அரண்மணைக்குள்ளே போனாரு கதையை அரண்மணைக்குள்ளே கொண்டுபோராரா… அரசர் கதையா கதையை வச்சு நாம என்ன பண்ண தங்கம் கொண்டு வந்தா நகை செஞ்சு போட்டுக்கிருவேன் வெளியே போ என அரசர் சொல்லிட்டாராம் ராமு… அப்பறம் கதையை எடுத்துக்கிட்டுக் காட்டுக்குள்ள போய்ட்டாரு காட்டுக்குள்ள போய்ட்டாரா மரத்தடியில் உட்கார்ந்து கதை எடுத்துப் படிக்கத் தீக்குள்ள போட கதையைப் படிக்க தீக்குள்ள போட புகையோட கதையும் கலந்து விலங்குகள் பறவைகள் எல்லாம் வந்து அழுதுச்சு
நடிகை 6 : ஏன் அழுதுச்சு..?
நடிகன் 4 : கதை அப்படி ராமு.
நடிகை 6 : எப்படி அழுதுச்சு…?
நடிகன் 4 : ம்ஹூம் உஉஉங்னு அழுதுச்சு ராம… கதைவாசனை அரசர் கிட்ட போய்யிருச்சு கதை வாசனை அரண்மனைக்குள்ளே போய்யிருச்சா அரசர் தூங்கிக் கிடந்தாரு தூங்கிக் கிடந்தாரா…
நடிகை 6 : எல்லா அரசருக்கும் இதேவேலைதானா?
நடிகன் 4 : ஆமா ராமு, அரசரைத் தூங்கவிடாம கதை வாசனை காட்டுகுள்ள கூட்டிக்கிட்டு வந்து விட்டது கதையை எரிக்காதிங்க உங்க கதையை ஊருக்கெல்லாம் எல்லாம் சொல்லுறேன். வாங்க அரண்மனைக்குப் போலாம் எனச் சொல்லிக் கூட்டிகிட்டுப் போய்ட்டாரு ராமு மீதிக் கதையை நாளைக்கு வந்து சொல்லுறேன் ராமு…..
நடிகை 6 : நாளைக்கு வந்து சொல்லிரு அண்ணே
நடிகன் 4: சரி ராமு…
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே சுவரின் இருபக்கமிருந்தும் சுவரைக் கீறி, தட்டி மெல்லிய குரலில் பேசமுயற்சிக்கின்றனர்.
நடிகை 7 : அக்கா அக்கா…
நடிகை 8. : தாமர தாமர வந்துட்டியா…
நடிகை 7: அக்கா… இந்த முகத்தை வச்சு இந்த உலகத்தைப் பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்குக்கா. பொம்மைகளோடுதான் இருக்கேன் அக்கா ஆனா எல்லா பொம்மையூ உடைஞ்சு போச்சுக்கா உடைஞ்ச பொம்மையெல்லா ஒட்ட வச்சுட்டுத்தான் இருக்கேன் அக்கா பொம்மைகளுக்கு சாவே கிடையாதுக்கா இந்த உலகத்தில் இருக்கிற மனுசங்க எல்லாம் பொம்ம கிட்டதான் மண்டியிட்டு அழுகிறாங்க அது ஏனோ எனக்குப் புரியலக்கா நீ என்ன அக்கா பண்ற….
நடிகை 8 : தாமர, எங்க ஊர் குழந்தைகளுக்குக் கதை சொல்ல யாருமே இல்லல. அதான் ஊர் ஊரா அலைஞ்சு அலைஞ்சு கதை சொல்லிக்கிட்டு இருக்கேன். இறந்த பறவைகெ, மாடுகெ இப்ப வரைக்கும் மனுஷனை நம்பிக்கிட்டே இருக்கிற நாய்கள் எல்லாம் என் கதைக்குள்ள நிரப்பி வச்சிருக்கேன் தாமரை. உன் பொம்மை எல்லாம் என் கதைக்குள்ள உடையாம இருக்குலெ. தைரியமா இருலெ என்னால கதை சொல்றத நிறுத்த முடியாது. கதையைக் கதையா சொன்னா சுடுவியா அப்படித்தான் சொல்லுவேன்…
நடிகை 9 : பாவ்லோ… பாவ்லோ… இருக்கியா…
உயிர்கரு முட்டைகளைச் சடங்கு செஞ்சு அலையுற பெண்களைப் பார்த்தீங்களா? அவுங்கள பத்ரமா பாத்துக்கனும் பாவெல்.
நடிகன் 5 : அவரு என்ன ஆனாரு…
நடிகை 9 : அவரு 13 நாள் உண்ணா நோன்புல ஒருசொட்டு தண்ணி கூட குடிக்காம மரிச்சுப் போனாரு பாவ்லோ. காணாமல் போன தோழர்களுக்காக அவர்கள் மனைவியும், பிள்ளைகளும் எழுதின வரிகள் செவரு பூறாம் ஊர்ந்துகிட்டு இருக்கிறத நான் பாத்தேன் பாவ்லோ. பாவ்லோ… கேட்குதா… லோத்… லோத்தின் மனைவி ஞாபகமாவே இருக்கு பாவ்லோ…
நடிகன் 5 : கறுத்த மலைப்பாதையின் வழியே பெருத்த சரீரமும் ஒளிரும் முகமும் கொண்ட நியாயவான்
தேவதூதனைப் பின்தொடர்ந்து நடந்தான். ஆனால் அவனது மனைவியின் உள்ளத்தில் ஒரு குமுறல். இன்னமும் காலம் கடந்து விடவில்லை. இப்பவும் நீ திரும்பிப் பார்க்கலாம்.
உன் சொந்த சோடோம் நகரின் சிவப்புக் கோபுரங்கள்
நீ கீதம் பாடிய சதுக்கம், நீ நூல் நூற்ற முற்றம்.
அன்புக் கணவனுக்குப் பிள்ளை பெற்றெடுத்துக் கொடுத்த உயரமான வீட்டின் ஆளில்லா ஜன்னல்கள்.
அவள் திரும்பிப் பார்த்தாள்
மின்னல் போன்ற கொடும் வேதனையில் அவள் கண்கள் உறைந்தன.
கல்போல் கண்ணிழந்தாள் அவள்
வெண்ணிற உப்பாகியது அவள் உடல்.
மண்ணில் நேராகப் புதைந்தன அவள் கால்கள்.
மிகவும் அற்பமானதொரு இழப்பாகத்தானே தெரிகிறாள் அவள்.
லோத்தின் மனைவிக்காக அழுபவர்தான் யார்?
ஒரு நொடி நேரப் பார்வைக்காகத் தன் உயிரை ஒப்படைத்த அவளை
ஒருபோதும் மறக்காதென் நெஞ்சம்…
நடிகன் 6 : எண்ணே…
நடிகன் 7 : டேய் டேய் ஈசா… இருக்கயாடா…?
நடிகன் 6 : இருக்கேணே… காலம் பூறாம் காயத்தோட இருக்கேன்ணே…
நீ எப்டிணே பொழச்ச…
நடிகன் 7 : அன்னைக்குக் குண்டு வெடிச்சதுல ஒரு மலப்பாறைக்குள்ள போயி ஒளிஞ்சுக்கிட்டன்டா அங்க அரண்ட பறவ எல்லாந் தான் எனக்கு துணை இருந்துச்சு நீ என்னாடா செய்ற…
நடிகன் 6 : நம்ம ஊருல குண்டு போட்டாய்ங்கள…அங்க தொலைஞ்சு போன மனுஷங்கலப் பூறாம் நம்ம மாடுக தேடித்தேடி சுத்தி சுத்தி வருதுணே.
நடிகன் 7 : என் கனவுலயும் வயக்காடா வருதுடா புழு பூச்சிலாம் மொய்க்குது என் மேல. பாட்டி பாத்ரமா இருக்காலடா…
நடிகன் 6 : ஏலேய்… பாட்டியும் நம்ம நாயும் ஒன்ன தேடிதானடா காட்டுக்குள்ள வந்தாய்ங்க…
நடிகன் 7 : என்னா டா சொல்ற ஒங்கூடத்தானடா இருந்தாய்ங்க…
நடிகன் 6 : இல்ல… இல்ல…
நடிகன் 7 : என்ன இல்ல…
நடிகன் 6 : உயிர் முகமூடிகளப்பூறாம் நிகழ்த்தி அலையுற பழங்குடிங்க அந்தக் காட்டுக்குள்ள இருக்காங்க அவங்கள பத்ரமா பாத்துக்கச் சொல்லனும்ணே…
நடிகன் 7 : இந்த நெலத்ததோட வனத்தோட மொழி அவங்களுக்கு மட்டுந்தான்டா தெரியும் அவங்களோடயா நம்ம பாட்டி போயிருக்கு….
நடிகன் 6 : ஆமாடா… ஆமா….
நடிகன் 7 : அவங்க பாத்துக்குவாங்கடா நம்ம பாட்டிய… என்னால தான்டா இங்க இருக்க முடியல… எல்லா பிரச்சினைகளுக்கும் இந்தச் சுவர் தான்டா காரணம் இடிடா… இடிச்சு வாடா எங்கிட்ட….
முட்ரா….இடிடா….. டேய்…. ஓடடா…
சுவரை முட்டி இடிக்க முடியாமல் வலியோடு கீழே விழுந்து ஊர்ந்து செல்கின்றனர்.
நடிகன் 8 : ஏய். ..டேய் ….ஏய்…
நடிகன் 9 : சரவணா…
நடிகன் 8 : டேய்…ராஜு…
நடிகன் 9 : டேய், நீயாடா. நீயாவது இருக்கியே டா. என்ன டா பண்ற.
நடிகன் 8 : நான் இங்க கல்லு உடைக்கிறேன் டா. உடைக்கலைன்னா அடிக்கறாங்கடா.
அத விடுடா…அவைங்க எங்கடா. டேய்.
நடிகன் 9 : அவைங்கள சுட்டுக்
கொன்னுட்டாய்ங்கடா.
நடிகன் 8 : என்னடா சொல்லுற, சுட்டாய்ங்கலா, அவளவு தான்டா அவைங்கள சுட்டாய்ங்க, நம்மலயும் சுட்டுக் கொன்றுவானுகடா.இனி நம சேரவே முடியாது டா.
நடிகன் 9 : டேய். …அப்படிலா சொல்லாதடா. மனச விடாதடா டேய். நா சொல்றத கேளுடா. டேய் கேளுடா.
நடிகன் 8 : சொல்லு டா.
நடிகன் 9 : இந்த நேரம் யாரும் வரமாட்டாய்ங்கடா…(சத்தமா மறுமுறையும் கூறுகிறான்) எப்படியாவது இந்த செவுத்த ஒடச்சு வந்துர்ரா..டேய் முடியல டா..
நடிகன் 8 : இந்தா வாரன்டா.
நடிகன் 9 : சீக்கிரம் வாடா.
சென்றவன் கையில் கிடைத்த ஓர் இரும்பைக் கொண்டு சுவரை உடைக்கிறான். சிறிய துளை ஏற்பட்டதும் மகிழ்ச்சியில் சத்தமிடுகின்றனர். இரு பக்கமிருக்கும் அத்தனை பேரும் வேகமாக ஊர்ந்து சுவரின் அருகே வந்து பெருஞ்சத்தமிட்டுச் சுவரை உடைத்து எல்லை கலந்து விழுகின்றனர். பெண்களின் கரங்கள் அத்தனையும் ஒரு குழந்தையைத் தூக்கிப் பிடித்தவாறு இருக்க காட்சி மறைகிறது.
நிலம் – 5
ஆழ் தூக்க நடையாளர்களைப்போலவும் போரில் மரித்தோர் தம் உடல்களில் சுற்றப்பட்ட வெண்பழுப்புக் கறைத்துணிகளைத் தனித்தனியே அவரவருக்குத் தத்தமது முகங்களுக்கு நேரே கண்ணாடி போல பிடித்து குறுக்கு நெடுக்காக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் துயரத்தின் இறுதி முனகல்களைக் குழுவாக லயத்தில் எழுப்புகிறார்கள். சட்டென எல்லோருக்கும் யுத்த நிலம் நினைவுக்கு வந்ததைப் போல கூட்டாய்ச் சரிந்து சிதறி வீழ்கிறார்கள். எல்லோரது உடல்களையும் நேர்த்தியுற்று களைந்து வெண்பழுப்புத்துணிகள் தழுவியிருக்கின்றது. நீண்ட நிசப்தத்தில் வீழ்ந்து எழுந்து தவழ்ந்து வரும் மனிதன் முழுவதும் அழுகையை அடக்கியபடி யாரையோ தேடியபடி ஒவ்வொரு முகமாய்ப் பார்த்துச் சரிந்து வீழ்கிறான். சில நொடிகளில் திரைக்குப் பின்னே மூகமூடிகளுடன் வனமரங்களைத் தழுவி மரித்தவர்களை யுத்தகளம் நுழையும் வனப்பெண் தன் அழுக்கு மூட்டைக் கிழிந்த துணிகளை அள்ளி எல்லோர் மீதும் வீசிப்பாடுகின்றாள்.
தூரி தூரி தூரியம்மா
ஆரி ஆரி ஆரு வருவா
என் கண்ணே தூரி தூரியடா
தூரிக்க அழுதவனோ
கண்ணோட கண்ணுறங்கு
ஓலை கொண்டு மையெழுதி
மாடப்புறா காட்டுப்புறா சேர்ந்தெழுதி
கதை கேட்டு கதை கேட்டு
மயிலு உறங்கலியே மாமயில் தூங்கலியே
தூரி தூரி தூரியம்மா
ஆரி ஆரி ஆரியம்மா நான் வருவேன்
கண்ணே கண்ணுறங்கு கான மயிலுறங்கு
முப்பாட்ட முப்பாட்டி கதை போட கூப்பிடுறாங்க
கதையால பாட்டால எழுந்து போடா
ராரி ராரி ராராரோ
தூரி தூரி தூரியம்மா…
வீழ்ந்து கிடந்த உடல்களின் முகங்களை வாஞ்சையுடன் பார்த்துப் பழுப்புத் துணியை எடுத்துத் தம் கண்களில் கட்டி முகமூடிகளை எடுத்து திசை சுற்றிக் காண்பித்து மூங்கில் புல்லாங்குழல் எடுத்து வாசிக்கத் துவங்குகின்றாள். இசை பரவி யுத்த நிலத்தில் மரித்தவர்களின் உடல்கள் அசையத் துவங்கி இசை கேட்டபடி எழுந்து அவள் வீசிய கிழிந்த வெண்பழுப்புத் துணியை அவரவர் எடுத்து அவளைப் போலவே தத்தமது கண்களில் கட்டி அவளது இரு தோள்களையும் தொட்டபடி இரு குழுவாக அவளைப் பின்தொடர்ந்து செல்ல அவள் எல்லோரையும் இசைப்பாதை வழி பெரும் பயணத்திற்குள் அழைத்துப் போகிறாள். வெளியெங்கும் இசை பரவ வனப்பெண்ணைப் பின் தொடர்ந்து உயிர்ப்புற்ற எல்லோரும் மறைந்து விடுகின்றார்கள். உயிர்ப்புற்றவர்கள் விட்டுச்சென்ற யுத்தக்கறைகளேறிய துணிகளிடம் வருகின்றனர் அந்நிலத்துள்ளிருந்து எழுந்த பல நிலத்து மூதாக்கள். மூச்சொலிகளால் பேசிப்பேசி நிலமெல்லாம் கிடக்கும் துணிகளை நேசத்தோடு தழுவியெடுக்கின்றனர். யுத்த ரணங்களைத் துடைத்துத் துடைத்து நிலத்தோடு பேசி நிலத்துக்குள் மறைந்தோரை அழைக்கின்றனர். மொத்தத் துணிகளையும் அள்ளியணைத்து சுழன்று மறைகின்றனர்.
நிலம் – 6
யுத்தத்தில் இறந்தவர்கள் உயிரோடிருக்கும் தம் சொந்தங்களுக்காக அதிசயமான உயிர்ப்பொருட்களையும் வார்த்தைகளையும் பாடல்களும் கொண்டு ஒவ்வொருவராக வந்து கொண்டே இருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் மறதி, பைத்தியநிலை, என நினைவாழத்திலிருந்து தனக்குத்தானேயும் பின் தனியே பொதுவிலும் அவரவருக்கான தனியுலகில் நுழைந்து துயரார்ந்து பேசியலைகிறார்கள். யுத்தத்தில் இறந்த பலரும் தான் இறந்தநொடியை ஆசையை வெளிப்படுத்துகிறார்கள். எல்லோரது கைகளிலும் முதுகுகளிலும் தோள்களிலும் பல விநோதப் பொருட்கள் இருக்கின்றன.
(பறவைகளுக்கான விதைகளோடு அலைபவள்)
நடிகை 1 : என் மகளுக்கான பள்ளிக்கூடம் பதுங்குக் குழிக்குள்ளதான் நடக்கும் அன்னைக்கு அவெள கூட்டியாறெப் போயிருந்தேன் வீடு திரும்பும் வழியில இராணுவம் என்ன பிடிச்சுட்டுப் போய் என்னோடு பல பெண்களெ நிர்வாணமாக்கி ஓட ஓட விரட்டிச் சுட்டாங்க. என் கூட ஓடிய இன்னொருத்தி சஹீர்… சஹீர்னு முடிவில்லாம கத்திகிட்டே ஓடுனா… நான் இறந்த பின்னும் இப்பயும் அந்தச் சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கு… குண்டுகளால எங்க வீடு சிதிலமாவதற்கு முன்னாடி முற்றத்துல ஆலிவ் மரமும் ஆரஞ்சு மரமும் இருந்துச்சி ஒவ்வொரு மாலை நேரத்துலயும் என் மகளோடு அம்மரத்திற்கு வரும் பறவைகளை தினமும் எண்ணிட்டே இருப்போம் திரும்பாதெ பறவைகளுக்காகக் கைகளில் அவைகளுக்குப் பிடித்த விதைகளோடு மரத்தைச் சுத்திச்சுத்தி வருவா…
மகள் : அம்மா இன்னும் அந்தப் பறவெ ஏன்மா வரல திசை மாறி போயிருச்சாமா… சுட்டுருப் பாங்கலாமா! சுடுறதெ எப்பமா நிறுத்துவாங்க… தூக்கமில்லாம ஜன்னல் வழியா எட்டிப்பார்த்துக்கிட்டே இருக்கேன்மா..
நடிகை 1 : தாயி… இன்னைக்கு அந்தப் பறவை வந்துடுச்சாமா அதுகளுக்கான விதைகளை இறந்த உன் அம்மா இன்னும் சேகரிச்சுக்கிட்டே இருக்கேன்… உன்னிடம் அழைத்துப்போகும் பறவைகளுக்காகக் காத்துட்டே இருக்கேன்… …ப்பா…. ப்பா…. வா…. வா….
(பறவைகளை அழைத்தபடி கைகளில் விதைப்பைகளுடன் அலைகிறாள்)
நடிகை 2 : (பூங்கொத்துகளோடு அலையும் இளம் பெண்)
எனக்காக அந்தச் சதுக்கத்துல இன்னும் நீ காத்திட்ருக்கீயா?… உனக்குப் பூங்கொத்து கொடுத்து என் விருப்பத்தைச் சொல்லவே வந்துட்டு இருக்கும்போது நானும் என் தோழியும் சாலையோரத்துல நடமாடிக் கொண்டிருந்த பல பாதசாரிகளோடு நாங்களும் குண்டு மழைக்கு இரையாகிட்டோம்டா… இன்னும் அங்கனதான் நிற்கின்றாயாடா? பெண்ணா சொல்றேன் யுத்த துவேசத்த இந்த பூமியிலிருந்து விரட்டணும். உனக்கான மலர்களை இந்த பூமி பூரா அலைஞ்சு சேர்த்துட்டே இருக்கேன். உன்கிட்ட எப்படி இந்தப் பூவை கொடுக்கப் போறேன்னு இன்னும் யோசிக்கல… தானே முளைத்தெழுந்த மலர் கொத்துக்களோடு அலைகிறேன். அந்தச் சதுக்கத்துக்குப் போகாதெ குண்டு போட்டுடுவாங்க நானே உன்னைத் தேடி வாரேன்… என்னோடு பல பெண்களும் அவரவருக்கான உறவுகளுக்கு மலர்களைத் தேடிச் சேகரிப்பதால் எனக்கு ஒரு தைரியம்.
நடிகன் 1 : யுத்தம் தொடங்கியதால் வெளியூரில் இருக்கும் எம் மகனெ வரச் சொல்லி நான் எழுதிய கடிதத்தெ போஸ்ட் பண்ண போயிட்டிருக்கும்போது எங்கிருந்தோ வந்த தோட்டாக்கள் என்ன நடுவீதியில கொன்னுடிச்சி அப்பா ஓடுங்க அப்பா அப்பானு யாரோ என் பிள்ளையோட குரல் போலவே கூப்பிட்டுச்சி… ஒருவேளை அவனா இருக்குமோ… மகனே கடிதம் உனக்கு அனுப்ப முடியல… இன்னும் நிறைய எழுதி வச்சிருக்கேன் மகனே இங்க இறந்தவர்களெல்லாம் உயிரோட இருக்கிறவர்களுக்காக அதிசயமான வரிகளையும் பாட்டுக்களையும் பாடிப்பாடி புதிய உயிர்ப் பொருட்களை எல்லாம் தேடிச் சேர்த்துட்டே இருக்கோம்ப்பா… வீட்டுல தனியா இருக்குற அம்மா கிட்ட போயிட்டியா? யுத்தம் இன்னும் முடியலையாப்பா அம்மாவ பத்திரமா பாத்துக்கோப்பா அம்மாவுக்குப் பிடிச்சதெல்லாம் வாங்கிட்டேன்னு சொல்லுப்பா எப்படி வர்றதுன்னு தெரியலப்பா ஒருவேளை நம்மூர் கதையில வர்ற அந்த அண்டரண்டா பறவையோட கால்களைக் கட்டிப்பிடித்து அதையும் கூட்டி வந்துவிடுவேன்.
(பைகள் நிறைய மகனுக்கு எழுதிய கடிதத்தோடு அலையும் தந்தை)
(சேலைகளுடன் அலைபவன்)
நடிகன் 2 : எங்க அம்மாவுக்குச் சேலைகள் வாங்க கடைவீதிக்குச் சென்ற போது அவரவர் அம்மாவுக்குச் சேலைகள் வாங்கிக் கொண்டிருந்த பலரையும் நான் பார்த்தேன். தன் முது வயது பாட்டிக்கு சேலை வாங்க காசு இல்லாது நின்ற அந்த முதியவரின் முகத்தில் காலத்தின் கோடுகள் அவரது புன்னகையின் அசைவில் உயிர்ப்புற்ற நொடியை வாழ்வின் விந்தையாகக் கருதுவேன். திடீரென விழுந்து கொண்டிருந்த குண்டுச் சத்தத்தில் வாங்கிய சேலைகளோடு பலரும் மடிந்து விட்டோம். அம்மா எங்கள் சடலங்களை வண்டிகளில் அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தபோது நான் மட்டுமே உனக்கான சேலையை மார்போடு இறுக்கப் பற்றியிருந்தேன். அந்தச் சேலை என்னோடுதான் இருக்கிறது. இன்னும் சில சேலைகளைச் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். நீ காத்திருக்கும் பதுங்குக் குழிக்குக் கரங்கள் வெட்டப்பட்ட பின்னும் நெய்து கொண்டிருந்த நெசவாளிகளிடம் வாங்கிய சேலையோடு நான் வந்துடுவேம்மா.
நடிகன் 3 : என் புதைக்குழி ஆழ வெட்டப்பட்டு அதனுள் மூடப்பட்டிருந்தேன். என் உடலுக்குக் கீழே பழம்யுத்தத்தில் மரித்த வீரன் ஒருவனின் எலும்புக்கூடு துரு ஏறி உதிர்ந்து கொண்டிருக்கும் இரும்பு வாளையும் அதன் மேல் மற்றொரு கை காலத்தால் உறைந்து போன கல் மலரையும் பிடித்திருக்க அவை என் முதுகுத்தண்டுவடத்தில் இடித்து எழுப்பியது வெளியே பூத்திருக்கும் காற்று மலர்களின் வேர்கள் அவனது எலும்புக் கரங்களில் சுருண்டிருந்தன. உலகில் மரித்து புதையுண்டு போனவர்களை இயற்கையின் உயிரினங்கள் கைவிடுவதில்லை.
நடிகன் 4 : ஏ மாடத்தி… மாயி, சின்னக் கருப்பு, பேச்சி….. காலையில வெள்ளங்காட்டி கருத்தறுப்புக்குப் போகணும்… கம்பு, திணை, வரகு, குதிரைவாளி, கதிரெல்லாம் வளர்ந்து காத்துக் கிடக்கு என்ன செஞ்சிட்டு இருக்கே ஏவளே! வாம்மா சீக்கிரம் போகனும் வெயில் ஏறக்குள்ள போயிடுவோம்.
பாடல் :
கோடை கருதறுப்பே
கொடிக்காலே சூழ்ந்திருப்பே
நாளக் கருதறுப்பே
நானும் வந்தாலாகாதே
நெல்லுக்கதிரானேன் ; நேத்தறுத்த தாளானேன்
ஊரோரம் கதிரறுத்து
உரலுபோல கட்டுக் கட்டி
தூக்கி வரும் கொத்தனாரே
தூரகளம் போய்ச் சேர
கருதறுத்துக் கிறுகிறுத்து
கண்ணு ரெண்டும் பஞ்சடைச்சி
தூக்கி விடும் கொத்தனாரே
தோப்புக்களம் போய்ச்சேர
வெள்ளிப் பிடியருவா
விடலைப் பிள்ளை கையருவா
சொல்லியடிச்சருவா
சுழட்டுதயா நெல் கருதை
நடிகை 3 : ஏங்க ஊரு கம்மா கரையில கழுதைகளெல்லாம் நீர் வத்திப்போன புழுதித் தடத்துல விழுந்து புரண்டு புரண்டு அண்ணாந்து கூவிக் கூவி கத்துது. மழை நாள்ல தவளைகளெல்லாம் அதுக்குப் பதில் பாட்டுப் பாட வரும்ல. அதுகளத் தேடித் தேடி இசையைக் கத்துக்கிட்ட நல்லப்பசாமிய கூட்டி வரச் சொல்லுங்க… அய்யா நல்லப்பசாமி…
நடிகை 4 : கொஞ்சம் கொஞ்சமா தண்ணி எல்லாம் வத்திப் போச்சு….இருளப்ப சாமி கோவில் எதிர்ல பெரிய கெடங்கு…. அந்தக் கெடங்குல தண்ணியும் சகதியும் சம அளவுல இருந்துச்சு…. ஒரு நாள் மாலைல எண்ணாயிரக்கணக்கான தவளைகள் ஒன்று கூடி கரைகல்ல இருந்துச்சு…எல்லா தவளையும் ஒன்று கூடி மலைக்காக வேண்டி ராவெல்லாம் பாடிப் பாடி பேசுமாம்…ஒரு வேலை நாளுக்கு மாலை பெய்யலனா…. எப்பவும் போல எல்லா தவளையும் ஒன்று கூடி தற்கொலை செஞ்சுக்குமாம்… தற்கொலை செஞ்சுக்குமாம்….
நடிகை 5 : நூறு ஆண்டுகள் கழித்து மழை பெய்தாலும் தவளைக் கருமுட்டைகள் குட்டிகளாகிக் கும்மாளமிடும். நண்டுகள் மீன்கள் நரிப்பூச்சிகள் நீர்ப்பாம்புகள் எல்லாமே வந்துவிடும். கரையில் நடமாட மனிதர்களும் இருப்பார்கள் தானே?
நடிகன் 5 : அதிகாலை கடுங்குளிர் நாளில் எங்க மலை கிராமத்தாரோடு விறகு பொறுக்க பல குன்றின் மீதேறிப் போய்க்கொண்டிருந்தோம். நாளெல்லாம் வானத்தைப் பார்த்து பயங்கொள்வது அன்றாடமாகிவிட்டது. அன்று எங்கிருந்தோ திடுமென விநோத மழையெனப் பொழிந்த அந்தத் தோட்டாக்கள் என் நெஞ்சுக் கூட்டைப் பிளந்தன. பற்றியெரியும் என் நுரையீரலில் அம்மா தாலாட்டி வளர்த்த கடைசி உயிர்த்துடிப்பைச் சுற்றியிருந்த வனமரங்களெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தது. இளஞ்சிவப்பாக மாறிக்கொண்டிருந்த மேகத்தைப் பார்த்தபடி நான் மரித்துப்போனேன். அம்மா தங்கச்சிகிட்ட கொஞ்சம் பசி பொறுத்துக்கச் சொல்லுமா சீக்கிரம் விறகு பொறக்கிட்டு வந்திடுறேன். எங்கம்மா போர்ச்சூழல்ல 10 மாதங்களாக வீட்டின் உள்ளேயே என்னை அடைத்து வைத்துப் பாதுகாத்தாள். 4 பெண் பிள்ளைகள் எங்க வீட்ல. சிறைவாசத்தை மிஞ்சியது எங்கள் வாழ்க்கை… பாப்பா… தங்கச்சி… இங்க பசில இறந்தவங்க பலரோடு நானும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கான உணவுகளையெல்லாம் சேகரிச்சுட்டே இருக்கோம்.
( கைப்பைகளில் விறகுகளைச் சுமந்தபடி அலையும் மகன்)
நடிகன் 6 : சிறைபோல வீட்டுக்குள்ளேயே அடைபட்ட நாட்கள் சலித்துப் போய் ஒரு நாள் மழையில் அவளப் பார்க்க அவ வீட்டுக்குப் போய்ச் சந்திக்க ஆசைப்பட்டுச் சால்வை போர்த்தப்படாத அவளது முழு நீள நெடுங் கூந்தலைப் பார்த்து தொட்டு வணங்கி என் நேசத்தைத் துதி செய்தேன். ரோஜா நிற உதட்டுச் சாயம் பூசப்படாதிருந்த அவள் உதடுகள் பயத்தின் நொடிகளை முணுமுணுத்துக் கொண்டிருந்தன. அவளது பாட்டி மந்திரித்துக்கட்டி விட்ட தாயத்துடன் வீடு திரும்பிய இரவில் ராணுவ வண்டியில் பிடித்துப் போய் பேச்சு மறுக்கப்பட்ட நொடியில் சாலை நடுவில் பலரோடு தூணில் கட்டப்பட்டு நினைவுகள் அலைபாய சுடப்பட்டேன். காசா… அன்பே நான் திரும்பவும் உன்னிடம் வருவேன். என்னைச் சிறு பொம்மையாகச் செய்த கோமாளி நடிகன் போர் நிலமெங்கும் உலவிக் கொண்டிருக்கிறான் அவன் வருவான். உனக்கான உதட்டுச் சாயங்களும் கூந்தல் தைலமும் வாசனைத் திரவியங்களும் வாங்கிச் சேகரித்துள்ளேன். ரிப்பன் பந்துகளும் பாசிமணிகளும் மட்டும்தான் இன்னும் வாங்க வேண்டும். காசா… காசா…
(வாசனைத் திரவியங்கள் உடன் அலைபவன்)
நடிகை 6 : (பெண் கவிஞர்) அந்தக் கவிதையை நான் எழுதிக் கொண்டிருக்கும்போது என் வீட்டு வாசலுக்கு இழுத்து வரப்பட்டுத் துப்பாக்கி ரவைகளால் சுட்டுக் கொல்லப்பட்டேன். இப்போதும் முடிவற்று அந்தக் கவிதையை நான் எழுதிக் கொண்டே இருக்கிறேன். அந்த வாக்குகளை முடிவற்ற இப்பூமிக்கு விட்டுச் செல்கிறேன். பொங்கி எழும் குழந்தைப் பருவ நினைவுகள் அம்மாவின் ரொட்டி காபிக்காகக் காத்திருக்கிறேன் சாவு வருகையில் ; இன்று வாழ்விற்குத் தகுதி உடையவளாக எனது தாயின் கண்ணீருக்குத் தகுதியுடையவளாக நான் இருக்க வேண்டும். ஒரு நாள் வருவேன் அம்மா என்னை உனது கண்ணிமைகளுக்கான திரையாக எடுத்துக் கொள். உனது காலடிகளால் ஆசீர்வதிக்கப்பட்ட புற்களைக் கொண்டு எனது எலும்புகளைப் புதைத்து விடு. உனது கேசத்தின் கற்றையொன்றைக்கொண்டு உனது ஆடையிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் நூலிழையைக் கொண்டு நம் இருவரையும் பிணைத்து விடு உனது இதயத்தின் ஆழத்தை நான் தொடுவானாகில் நான் அமரத்துவம் பெற்று விடுவேன் கடவுளாகி விடுவேன். நான் திரும்பி வருவேனாகில் உனது நெருப்பை மூட்டுவதற்கான விறகாக துணி காயப் போடும் கயிறாக என்னைப் பயன்படுத்து.
அம்மா எனக்கு வயதாகி விட்டது எனது குழந்தைப் பருவத்தின் நட்சத்திர வானத்தின் வரைபடத்தை எனக்குத் திருப்பிக் கொடு. காத்திருக்கும் உனது கூட்டுக்கு உழவார குருவிகளுடன் நான் திரும்பி வரும் பாதையை வரைய வேண்டுமம்மா… பேச்சைத் தொடர முடியாமல் இருவர் அவளைத் தழுவிக் கொண்டபடி அழைத்துச் செல்கிறார்கள்.
கோமாளி : ஊரில் மாண்டவர்களை என் நாடகத்தின் வழி பொம்மைகளாகப் பிறக்க வைத்திருக்கிறேன். எல்லோரையும் மறுஉருவமாக்கி அலைகிறேன். (பொம்மலாட்ட பொம்மைக்குழுவோடு அலைந்து கொண்டிருக்கும் வாய் கண்கள் தைக்கப்பட்ட கோமாளி)
நடிகன் 7 : என்னைப்போல பல உடல்களும் ஈக்கள் மொய்க்க என் உடலுக்குள் மட்டும் ஏதேதோ தேடினார்கள். என்ன ஒரு வேளை உளவு பார்ப்பவனாக எண்ணி இருக்கலாம். தூரத்தில் அம்மாவும் அப்பாவும் விசும்பி நிறைந்த தம் கண்களோடு தம் மகன்களின் பிணத்தை அடையாளம் காட்ட காத்திருக்கும் பல பெற்றோர்களோடு நின்றிருந்தனர். என் சட்டைப் பையில் அம்மா எனக்கு எழுதிய கடிதம் உதிரக் கரையுடன் நனைந்து காய்ந்திருந்தது. என் முகம் சிதைக்கப்பட்டிருந்ததால் அடையாளம் காட்ட முடியாது அம்மா அப்பாவின் கரத்தை இறுகப் பிடித்துத் தவித்தாள். என் வெட்டப்படாத கைவிரல் நகங்களும் கடிதத்தின் சில வரிகளும் மட்டுமே அவளுக்கு உதவி செய்தன. அவர்கள் முன் தைல மரங்கள் சூழ்ந்த அந்தக் காட்டில் சடலங்கலாக இருந்த நாங்கள் அனைவரும் சிறிய சடங்குடன் புதைக்கப்பட்டோம்.
நடிகன் 8 : சுடப்பட்ட மலையில் புதை குழிக்குள் தூக்கி வீசப்பட்ட மறு நொடியில் ஒரு பெண் தலையொன்று என் உடலின் மீது வீழ்ந்து என்னை உறைந்த கண்களால் பார்த்துக் கொண்டே இருந்தது. உடைந்த விலங்குகள் பூட்டப்பட்ட ஆணின் இரண்டு கால்களும் ஒரு வயோதிகரின் வெட்டுண்ட கரத்தினுள் இறுகப்பற்றியிருந்த காகிதங்களும் என் மீது வீழ்ந்தன. மலர்களால் இரு கரங்களும் கட்டப்பட்டிருந்த ஒரு இளைஞனின் உடலும் என் மீது போடப்பட்டது. போர் முடிவுக்கு வரும் நாட்கள், 300 நாட்களுக்குப் பிறகு எங்கள் சவக்குழிகள் தோண்டியெடுக்கப்பட்டு எலும்புகளாயிருந்த உடல்களைத் தனித்தனியே பிரித்து வைத்தனர். தலை மட்டுமே என்னுடையது கைகளும் கால்களும் மார்புக்கூடும் வேறு எவருடையதோ. தெரியவில்லை என் மோதிரமிட்ட எலும்புக் கரங்கள் வேறு உடலுடன் சேர்க்கப்பட்டிருந்தன. அடையாளம் காட்ட வந்திருந்த அப்பா அடக்க முடியாத அழுகையுடன் அந்த மோதிரமிட்ட எலும்புகளைச் சடங்குகள் செய்வதற்காக வாங்கிப் போனார். அவரோடு எலும்புகளைத் தூக்கிச் சென்ற கூட்டத்தினரிடையே பாட்டி ஒருத்தி உடைந்த உச்சக் குரலில் தாலாட்டுப் பாடினாள்.
தூரி தூரி தூராரோ ; 2
ஆரி ஆரி ஆராரோ; 2
கொடியவரை பிஞ்சுவிட குலந்தழைக்க வந்த புள்ள
பச்சை இலுப்பை வெட்டி
பால் வடியும் தொட்டி கட்டி (தூரி – 2) ஆத்துக்குள்ள அம்பூணி ; அந்தரங்கமா தொட்டி கட்டி காத்து வந்து வீசிடவே
கருணையுள்ளம் பெருகிடவே ( தூரி – 2 )
எண்களால் ஆவேசமாகப் பேசியலையும் ஒரு ஆண் உச்சத்தில் வெறி கொண்டவனைப் போல பேசிப் பேசி வலிப்பு வந்ததைப் போல பல எண்களை முடிவற்றுச் சொல்லிக் கொண்டிருக்க… பெண்ணொருத்தி வாஞ்சையோடு அவனைத் தன் மடியில் கிடத்தி எண்களாலேயே தாலாட்டுப் பாடுகின்றாள்.
தூக்கு மேடைக்குச் செல்வது போல கைகளில் பொம்மை கிறுக்கப்பட்ட காகிதங்களோடு வரும் ஒருவன் ஆங்கிலத்தில் நம்பர்களைச் சொல்லிக்கொண்டே தூக்கிலிடப்படுவதாகவும் தூங்கிச் சரிந்து விழுவதாகவும் பாவனை செய்கிறான் திடீரெனச் சுற்றி இருந்தவர்களெல்லாம் அவனைப் பார்த்து ஒலியால் பாடி எழுப்புகிறார்கள்.
நடிகன் 9 : சந்தையில கீரையாபாரம் பார்க்கும் கூன்கிழவி பூச்சியம்மாளின் பேத்தி வேம்பாவெ கடைசியாகப் பார்த்தபோது வீட்டுக்குத் திரையாகவும் படுக்கை விரிப்பாகவும் எதுவும் உருப்படியா இல்லைன்னு சொன்னதால அதெல்லாம் அவளுக்குச் செய்யணும்னு நினைச்சேன். நானும் எங்க தாத்தாவும் சாக்கு யாவாரிக கிழிந்த சாக்குகளைத் தைக்கிறதுதான் எங்க வேல. நல்ல சுத்தமான சாக்குகளை அவளுக்குக் கொடுக்கிறதுக்குப் போயிருந்தேன் அவ வசிக்கும் தெருவே யுத்தத்தால நிர்மூலமாகிப் போயிருந்தது யாருமே உயிரோட இல்ல. நொறுங்கிச் சிதறிக் கிடந்த அவளுடைய வளையல்களை எல்லாம் குனிந்து சேகரித்துத் திரும்பிய இரவே அந்தப் பிரதேசமே எங்கும் குண்டுகளுக்கு இரையாகி அநேகமாக நாங்க எல்லோருமே செத்துப் போயிட்டோம். கரும்பு நிறத்து என் வேம்பாவுக்கு நான் சாக்குகளைக் கொடுக்கணும் யாராவது அவள் திசை சொல்ல வருவாங்கன்னுதான் காத்துட்டிருக்கேன். வேம்பா உனக்காக எளிய வாழ்வின் முடிவற்ற சாக்குக் கம்பளத்தை உனக்காக நெய்து வைத்திருக்கேன்… இங்கே மரித்தோரெல்லாம் வாழ்ந்து கொண்டிருப்பவருக்காக இருப்பின் தற்கணங்களை உயிர்ப்பிக்கும் சடங்குகளைச் செய்தலைகிறோம்.
நடிகன் 10 : கல்லறைகள் நிரம்பிய எங்கள் இடத்தைக் கடக்கும் பழங்குடிகளின் மாட்டு வண்டியும் அவர்களது பாடலும் உறைந்திருந்த எங்களை எழுப்பும். அவர்களது பாடல்கள் எனக்கு வாழ்வின் நம்பிக்கை மிகுந்த அழுகையை வரவழைக்கும். யுத்தத்தில் காணாமல் போன தம் எருமைகளுக்காகப் பாடி வணங்கி அழைப்பார்கள் அந்தப் பாட்டு…
“ஏ எருமையே எருமையே காட்டாறு வழிவந்த எருமையே ஆறு போகும் பாதை வழிவந்த எருமையே மலைக்கூம்பில் தேவதைகளைப் பார்த்து வந்த எருமையே தேவதைகளிடம் முத்தம் வாங்கிய எருமையே வெட்டிய மரங்களைப் பார்த்து அழுத எருமையே எவரும் தொலையாத மலைவழி வந்த எருமையே வனராக்கிகளின் தீட்டு ரத்தம் வணங்கி வந்த எருமையே பசித்தோருக்கு அன்னையாகி பால் கொடுத்த எருமையே எம் பெண்களைச் சுமந்த காட்டைக் காண்பித்த எருமையே இறந்தோரை எழுப்பி அலையும் எருமையே தொலைந்தோரைத் தேடி மா…. மா…. மா… வென அழுது போன எருமையே கொம்புகளால் பாறைகளை உரசி உரசி மரங்களை முட்டி முட்டி போரை வெறுத்து எங்களைப் பிரிந்த எருமைத்தாயே எருமைப்புள்ள வா…. வா… வா…
சேர்த்து வைத்திருந்த பொருட்கள் அனைத்தையும் நாடக நிலத்தில் சமர்ப்பித்து மறைக்கின்றனர்.
நிலம் – 7
நீல ஒளிபடரும் நிலத்தில் பெண்கள் பலரும் தன் பிறப்பு வாசலிலிருந்து நீண்டிருக்கும் உயிர்க் கொடியின் மறு முனையில் பெரிய கருமுட்டை பிடித்து முட்டியிட்டு உடல், முகம் கவிழ்ந்த நிலையில் இருக்க தூரத்திலிருந்து கேட்கும் பிரசவ வலியின் முனகலையொத்த குரலொலித்தாளம் வானுக்கும், பூமிக்குமாக அலைந்துகொண்டிருக்கின்றது. எல்லோரும் உயிர்க்கரு முட்டைகளை நிலமெங்கும் பரவியிருக்கும்படி வைத்துவிட்டு நிலத்தின் சிறு தொலைவில் காத்திருக்கும் விதைகள் கோர்த்த இசைக்கொத்துகளை நெற்றியில் கட்டியிருந்த துண்டுத்துணிகளை அவிழ்த்து வாயில் கவ்வி குழுவாக நீண்ட ரெட்டை நாக்கைப்போல அணங்குற்றுச் சுற்றி முற்றும் பார்த்து பின் விதையிசைக்கொத்துக்களை எடுத்து அவரவர் கைகளில் தூக்கி வாயால் கவ்விய துணியுடன் உலுப்பி உலுப்பி முன்னேறிக்கொண்டே இருக்கின்றார்கள். எல்லாவற்றையும் சடங்கு நிலையில் வரிசையாகத் தரையில் வைத்துவிட்டுக் கலைந்து விலகி வாயால் ரெட்டை நாக்காக இருந்த துணியினை உயிர்க் கருமுட்டையின் வெளியிலிருக்கும் கொடியுடன் இணைத்துக்கட்டி அவற்றை ஓர் உயிரைப் போல பாவித்துத் தூக்கியலைந்து பின் முன்னே வந்து காத்திருக்கும் விதைக்கொத்துக்களை எடுத்து வாய்களில் கவ்வி அலையும் பெண்கள் அனைவரும் வட்டவடிவ பல ரூபங்களில் எடுத்திருக்க பெரும் பறவையென்று பெண்களின் வட்ட வடிவுகுள் நுழைந்து அடைகாக்க அவற்றிடம் கொடுத்துக் கவ்விய விதைக்கொத்துக்களை தலையால் இருபக்கம் உழுப்பி வலது இடதாக தலைகள் திருப்பி வெளியேறுகிறார்கள். கருமுட்டைகளை அடைகாத்த பெரும் பறவை நீல ஒளிக்குள் எல்லாவற்றையும் தூக்கி எடுத்துத் தள்ளாடி நடந்து நிமிர்ந்து வனத்துக்குள் மறைகிறது. பின் பக்கமிருந்து விதைநெத்துக்களை நீட்டி உழுப்பியபடி அழைக்கும் பழங்குடிகள்.
நிலம் – 8
வனமந்திரங்களை உச்சரித்தபடி காட்டிற்குள்ளிருந்து பல இசைக்கருவிகள், விதைநெத்துக்களுடன் எறும்புபோல வரிசையாக பல திசைகளிலிருந்தும் நுழையும் வனவாசிகள் யுத்தத்தின் மீதிக்கதைகளைச் சொல்லத் துவங்குகின்றனர்.
நடிகை 1 : அந்த வனத்துக்குள்ள இருந்த காட்டுயிர்கள் மேல படிஞ்ச யுத்த வடுக்கள் இயற்கையா இருக்கிற பல இசைக்கலைஞர்களோட காதுகளுக்குக் கேட்டுக்கிட்டே இருந்துச்சு.
நடிகன் 1 : அவுங்க எல்லாரும் அந்த வனத்துக்குப் போனாங்க.
நடிகை 2 : ஆனா அங்க பழங்குடிகளெல்லாம் மரவேர்களிலும் பாறைகளிலும் காதுபதிச்சு இசைச் சடங்கால பேசி அந்த வனத்துக்கே சிகிச்சை கொடுத்திட்டிருந்தாங்க.
நடிகன் 2 : சமவெளிக் கலைஞர்கள் பழங்குடிகள்னாலே இசைங்றத நமக்குள்ள ஆழமா படிக்கனும்னு உறுதிசெஞ்சாங்க.
நடிகை 3 : உங்க இசைய சமவெளி உலகத்துல நிகழ்த்துனீங்கனா புகழ் உச்சி உங்கள மெச்சும் எங்களோட வாங்கன்னு கூப்பிட்டாங்க.
நடிகன் 3 : நாங்க வந்துட்டா பாறைகள், மரங்கள், பறவைகளையெல்லாம் யாரு இசையால பார்த்துப்பாங்க.
நடிகன் 4 : தேவைப்பட்டா எங்க ஊனுடம்பெ பறவைகளுக்கு இரையாக உண்ணப்பழக்குவோம். நாங்களும் பெருங்காடா மாறுவோம்னு சொல்லி வேர்களைத்தேடிப் போயிட்டே இருந்தாங்க.
நடிகன் 5 : பூர்வ குடிகளெ வணங்கி வாசிப்போம்னு சொல்லி அடிடா…. காத்தே…. மரமே…. பல்லுயிரே…
குழு : காத்தே…. ஏ…. காத்தே
துடும்பு தோலிசை வாசித்து சடங்காட்டத்தை நிகழ்த்தி பெண்கள் பலரும் துடும்பு இசைக்கருவி வாசிக்கும் ஆண்களின் மீது ஏறித்தாவி குதிக்கின்றனர்.
பெண்கள் குழு : நாங்க வந்துட்டோம். போர் நிறுத்த முரச இப்ப அடிங்கடா.
இசையுடன் கூடி ஆடியாடி அணங்கு குரலெடுத்து உச்சி நிலைக்குப் போகிறார்கள்.
கவிதைகள்:
1.கவிஞர் சபரிநாதன்
2. கவிஞர் அன்னா அக்மதோவா
4. கவிஞர் சமயவேல்
5. கவிஞர் முஹம்மத் தர்வீஷ்
Art : C.J.Antony Doss
தமிழ் நாடகப்பரப்பில் மணல்மகுடி நாடக நிலத்தின்வழி இயங்கிவரும் ச.முருகபூபதி இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக நாடகத்தளத்தில் நவீன நாடகங்கள், குழந்தைகள் நாடகங்களைப் படைத்து காத்திரமாக இயக்கம் கொண்டுள்ளார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகத்துறையில் முதுகலையும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவரது நாடகங்கள் இந்திய மற்றும் சர்வதேச நாடக விழாக்களில் பங்குபெறுபவை. இந்திய ஒன்றிய அரசிடமிருந்து உஸ்தாத் பிஸ்மில்லாக்கான் யுவபுரஸ்கார் விருதினைப் பெற்றுள்ளார். தமிழ்நிலத்தின் மரபுசார்ந்த தொல்சடங்குகளை, இசைவடிவங்களை, கலைப்பண்பாட்டு நிகழ்வுகளை ஆய்வுசெய்து, நாடகக்கலையின் வேர்தேடும் ஒரு தொல்கூறுமுறையில் பொதுவில் பேசப்படாத திணை பழங்குடிகளின் நாட்டாரிய அழகியல் வாய்மொழிக் கதைமரபு வேளாண்குடிவாழ்வு, நிலமிழந்த இடப்பெயர்வு, அதிகாரம். மறுக்கும் குரலற்ற விளிம்பு நிலையோரின் பாடுகள், அவர்களின் பண்பாட்டுப்புழங்கு பொருட்கள் இசைவடிவங்களை நாடகவுருவேற்றி மனித மையம் தாண்டிய பேருயிர் இயக்கமாய் நவீனமாக நாடகநிலமிறக்குகிறார்.
இதுவரை சின்னமனூர் சர்க்கஸ்காரி எனும் சிறுகதைத் தொகுப்பும், கூந்தல் நகரம், செம்மூதாய், சூர்ப்பணங்கு ஆகிய நாடகத் தொகுப்புகளும், குழந்தைக் கலைஞர்களுடன் வேலை செய்த பயணங்கள் கட்டுரைகளாகத் தொகுக்கப்பட்டு உடல் திறக்கும் நாடக நிலம், கதை சொல்லும் கலை மந்திரமரம் ஆகிய நூல்களாக வெளிவந்துள்ளன. மதுரகவி பாஸ்கரதாஸின் மகள் வயிற்றுப்பேரனான இவர் அவரது நாட்குறிப்புகளைத் தொகுத்து பதிப்பித்துள்ளார். கோவில்பட்டியை மையமாகக்கொண்டு மணல்மகுடி நாடகக்குழு இயங்கிவருகிறது.








Leave a Reply