Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

மனோர் அத்தை

பாரத் தமிழ்
பாரத் தமிழ்
October 1, 2025
மனோர் அத்தை

எலும்புக் கூட்டைத் துணியால் சுற்றிக் கிடத்தியதுபோல் அடையாளமே தெரியாமல் இருந்தது மனோர் அத்தையின் பிணம். தலா ஒரு பிடியளவு தசை காணாமல் போனது போன்று பார்க்கவே பயமாக இருந்தன, மூடிய இரு கண்களின் குழிகள். உறிஞ்சியெறிந்த சாராயப் பொட்டலமாய்க் கன்னங்கள் பல மடிப்புகளாய்ச் சுருங்கியிருந்தன. எண்பதாண்டுகளாய் இந்தப் பூமி தேய நடந்த அவளது கிழட்டுப் பாதங்களில் அழுது அழுது ஓய்ந்து போய் அப்படியே முகத்தைப் புதைத்து விசும்பிக்கொண்டிருந்தாள் சரளா. சாவுக்கு வந்திருந்த எல்லாரும் சரளாவின் பரிதாபம் பற்றியும் மனோர் அத்தையின் தியாகம் பற்றியும் மெச்சிக் கொண்டிருந்தார்கள். கடந்த ஒரு வாரமாகப் படுத்த படுக்கையில் கிடந்தவளுக்கு இன்று விடியற்காலை தூக்கத்திலேயே உயிர் பிரிந்திருந்தது. நல்ல சாவுதான் என்று எல்லாரும் சொல்லிக் கொண்டிருந்த போதே மழை பெய்தது.

“ஒருத்தி இல்லாமப் போனது ஊரே புசோன்னு கீதே.‌ அவ செஞ்ச புண்ணியம்தான் இன்னிக்குன்னு பாத்து மழயா கொட்டுது. இல்லாக்காட்டி இந்தப் பங்குனி வெயில்ல எந்தப் பயிருக்கு மழ பேயப் போவுது?”

அதுவரை குந்தனவாக்கில் ஒருத்தி மீது ஒருத்தி கைப் போட்டு வட்டமாய் அழுது கொண்டிருந்தவர்களில் ஒருத்தியான நாய்க்குட்டி பந்தலோரம் நகர்ந்தபடி சொன்னாள். பறை மேளச் சத்தமும் அதற்கு ஏற்ற இளைஞர்களின் நடனமும் விசிலும் ஒருபுறமிருக்க, அண்டாவில் ஊற்றி வைத்திருந்த சாராயத்தை மொண்டு குடித்துக் கொண்டிருந்தார்கள் பெரியவர்கள். மனோர் அத்தையின் வயதொத்த ஆண்களும் பெண்களும் மனித ஈக்களாய் அவளையே சுற்றிச் சுற்றி வந்தனர். இன்று அவள் சாவுக்கு விசிலுடன் குத்தாட்டம் போடும் எந்த இளைஞனும் அவளின் அன்பாலோ கருணையாலோ ஒருநாளேனும் நனைந்தவர்களே.

பசியாலோ தின்பண்டங்கள் வேண்டியோ அழும் யார் வீட்டுக் குழந்தைக்கும் காளியப்பன் தாழ்வாரத்தில் சாராயம் விற்கும் மனோர் அத்தைதான் பத்துப் பைசா, இருபது பைசா, நாலணா என்று கொடுத்து ஆற்றுப் படுத்துவாள். சில குழந்தைகளைக் கூலி வேலைகளுக்குப் போயிருக்கும் அவர்களின் பெற்றோர் வரும்வரை பத்திரமாகப் பார்த்துக் கொள்வாள்; தன் மடியில் கிடத்தித் தூங்க வைப்பாள்; அவர்களைக் குளிப்பாட்டி விடுவாள். அவளது கடைசிக் காலத்தில் சாக்னா கடை போட்டாள். இட்லி, தோசை, எலும்பு பாயா, போட்டி வறுவல், கோழித் தலை-கால் குழம்பு விற்று சில வருடங்கள் பிழைப்பு நடத்தினாள். அப்போதும் பல குழந்தைகளின் பசியைப் போக்கினாள். அந்த விசுவாசம்தான் இன்றைய அவர்களின் ஆட்டம் பாட்டம்.

பதினைந்து வயதிலேயே திருமணமாகி கணவனைப் பறிகொடுத்துவிட்டுப் பிழைக்க வழி தெரியாமல் சாராயம் விற்க ஆரம்பித்தவள் மனோர் அத்தை. ஆரம்பத்தில் ரொம்பவே சிரமப் பட்டாள். போலீஸ் தொல்லை; பொறுக்கிகள் தொல்லை; ஆபாசப் பேச்சு; அதையும் தாண்டிய சீண்டல்கள் என்று சகலத்தையும் பொறுத்துக் கொண்டே பெரிய சாராய வியாபாரியாக வலம் வந்தாள். தேன்கல் மலையில், வேலம்பட்டை, வாழைப்பழம், கருப்பட்டி வெல்லம், திராட்சை, பலாப்பழம், சுண்ணாம்பு, யூரியா என்று எதையெதையோ கலந்து இரவில் காட்டின் சுனை நீரைப் பயன்படுத்தி ஆண்களோடு தங்கிப் பதமாய்க் காய்ச்சுவாள்.

சாராயம் காய்ச்சுவதற்கு முன்பு ஊறல் போட வேண்டும். ஆட்களை விழுங்கும் பெரிய பெரிய காங்குகளில் அதற்கான பொருள்களை எல்லாம் போட்டுப் பூமியில் குழி தோண்டிப் புதைக்க வேண்டும். அப்படிப் புதைக்கப் பத்தடி ஆழமானது குழி வெட்ட வேண்டும். அதே சமயம் அந்தக் குழி யார் கண்ணிலும் படாத காட்டுப் பகுதியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அது களவு போவதோடு போலீசுக்குக் காட்டிக் கொடுக்கப்பட்டு விடும். வாரக் கணக்கில் ஊறும் அந்த ஊறலை எடுத்துப் பெரிய பெரிய கொப்பரையிலிட்டுச் சாராயம் காய்ச்ச வேண்டும். ஊறல் காங்கைப் புதைக்க துணைக்கு ஆளில்லாமலே தோண்டி முடிப்பாள் மனோர் அத்தை.

ஆவி பறக்கும் சாராயத்தின் நெடியை வைத்தே அதன் வீரியம் அறிவாள். தேவைப்பட்டால் குடித்தும் பார்ப்பாள். விடியற்காலை பெரிய கேன்களில் சாராயத்தை நிரப்பி மலையிலிருந்து சைக்கிளில் மிதித்து எடுத்து வருவாள். அதற்கெனப் பெரிய கேரியர் பொருத்தப்பட்ட டபுள் பார் சைக்கிள் ஒன்றை வைத்திருந்தாள். அதற்கான ரால்கோ டயரை அடிக்கடி மாற்ற வேண்டும். மேடு பள்ளம் காடு கரடு பார்க்கும் சைக்கிளாயிற்றே. ஒரு கிளாஸ் சாராயம் இரண்டு ரூபாய்க்கு ஆரம்பித்த வியாபாரம், அவள் அந்தத் தொழிலைக் கைவிடும்போது பொட்டலமாக மாறி இருந்தது. அப்போது பொட்டலம் ஒன்றின் விலை இருபது.

வாரம் ஒருமுறை வரும் உள்ளூர்க் காவலர்களுக்கு வழக்கமான மாமூலைத் தந்து விட்டு வியாபாரம் செய்யும் அவளது துணிச்சல் யாருக்கும் வராது. போலீஸ் கெடுபிடியை விட குடிகாரர்களின் அடாவடித்தனமும் ஏச்சும் பேச்சுமே பெரிய தலைவலியாக இருந்தது. அதிலும், அழகான பெண் சாராய வியாபாரியாக இருக்கிறாள் என்றால் குடிக்க மட்டுமா வருவார்கள்?

அண்டா, குண்டா, அரிசி பருப்பு, தானியங்கள், குடும்ப அட்டை எதை வேண்டுமானாலும் அடகு வைக்க வரும் ஆண்களுக்குக் கடன் கூடக் கொடுத்து விடுவாளே அன்றி, வீட்டுப் பொருட்களை வாங்கும் பழக்கம் அவளுக்கு எப்போதும் கிடையாது. குறிப்பாக, குடும்ப அட்டையைக் கொண்டு வந்தால் பிடிங்கி வைத்துக் கொண்டு அவரவர் மனைவிகளிடம்தான் ஒப்படைப்பாள். ஒருமுறை, நள்ளிரவில் யாரோ கதவு தட்ட, சாராயத்திற்கு வந்தவர்கள் என்று கதவைத் திறந்தாள். நான்கைந்து பேராக வந்தவர்கள் அவள் வாயைப் பொத்திக் கத்தியைக் காட்டி நாசம் செய்து விட்டுப் போனார்கள். முகங்களுக்குத் துணிகளைத் கட்டிக் கொண்டிருந்த அவர்களை எவ்வளவு யோசித்தும் அடையாளம் தெரியவில்லை. அவர்களிடமிருந்து உயிருடன் தப்பியதே பெரும் போராட்டமாய் இருந்தது அவளுக்கு. அன்றுமுதல் இரவில் யார் கதவு தட்டினாலும் திறப்பதில்லை.

ஆணுக்கு நிகராக எந்த வேலையையும் மல்லுக்கட்டி செய்து முடிப்பாள். எவ்வளவு அழகு இருக்கிறதோ அவ்வளவு பலமிருந்தது அவள் உடலில். இளமையில் அவளுடன் போட்டி போட முதலியார், நாயுடு வீட்டுப் பெண்களால் கூட முடிந்ததில்லை. அவ்வளவு அழகு மனோர் அத்தையின் உடலும் முகமும். எலுமிச்சையும் மாம்பழமும் கலந்த ஒரு வித்தியாசமான வண்ணம் அவள் மேனிக்கு. ஓர் ஓவியன் வரையும் ஓவியத்தில், எங்கெங்கு என்னென்ன அங்கங்கள் எவ்வளவு அளவில் இருக்க வேண்டும் என்று வரைவானோ, ஒரு கிரேக்க, ரோமாபுரி சிற்பி வடிக்கும் சிற்பத்தில் எத்தனை நேர்த்தி இருக்குமோ அப்படியான உருவம் அவளுக்கு. அவள் ஒருத்தியைத் தவிர அந்த ஊரில் வேறு எவருக்குமே அப்படியொரு உடல்வாகு இல்லை. தன் அழகின் மீது அவளுக்கு ஒருநாளும் கர்வமோ மகிழ்ச்சியோ இருந்தது கிடையாது. மாறாக, பயமிருந்தது. அதையும் வெளிக்காட்டாமல் வாயாடுவாள். அவள் அப்படி வாயாடவில்லை என்றால் பிழைக்க முடியாது. ஆனால் ஊரிலுள்ள ஆண் பெண் என எவரும் அவள் அழகை அப்படி ரசிப்பர்; ஆராதிப்பர்.

அவளுக்குப் பிடித்தமான அந்தப் பச்சைப் புடவையை மிகச் சரியாக யாரோ இன்று அவள் உடல் மீது சுற்றி இருந்தார்கள். சரளாவை விட அவள் விருப்பத்தை அறிந்தவர் யாராக இருக்க முடியும்? அவள்தான் அதைச் செய்திருக்க வேண்டும். சரளாவுக்கு மனோர் அத்தை சொந்த அம்மா இல்லை; வளர்ப்புத் தாய்தான். அதையும் ஊரார் சொல்லித்தான் அறிந்து கொண்டாள் சரளா. ஆனாலும் தன் அம்மா அப்பா பற்றியோ தனது குடும்பம், பூர்வீகம் பற்றியோ மனோரிடம் இதுநாள்வரை அவள் கேட்டதே இல்லை.‌ அவ்வளவு செல்லமாகவும் செல்வாக்காகவும் சரளாவை வளர்த்திருந்தாள்.

1986 ஆம் ஆண்டு, வழக்கம்போல் மாரியம்மனுக்கு ஆடித் திருவிழா கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த ஆண்டு 47 ஆம் ஆண்டு திருவிழா என்று விளம்பரப் பிரசுரத்தில் அச்சடிக்கப்பட்டிருந்தது. அரக்கோணத்திலிருந்து வந்திருந்த ஒரு குழு, மூங்கில் கொம்புகளில் வாழை மட்டைகளையும் வைக்கோலையும் திரித்து வளைத்துக் கட்டி மிகப் பிரமாண்டமான தேரைச் செய்தார்கள். வண்ண வண்ண கண்ணாடிகளும் ஜிகினா அட்டைகளும் சீரியல் பல்புகளும் பொருத்தப்பட்ட அந்தத் தேர் அப்போதுதான் அந்த ஊருக்கு அறிமுகமானது. அதற்கு முன்பெல்லாம் பெரிய குடையும் பூக்களாலான ஜோடிப்பு மட்டுமே இருந்தது. அதேபோல், குடியாத்தம் தேன்மொழி சவுண்ட் சர்வீஸ் மிகப் பிரமாண்டமான பந்தலைப் போட்டிருந்தது. அம்மன் உருவமும் மற்ற கடவுளர் உருவங்களும் வண்ண சீரியல் பல்புகளால் வடிவமைக்கப்பட்ட காலமும் அதுதான். மாவிலை, வேப்பிலை, தென்னங்குறுத்தோலை அலங்கரிப்புகளால் ஆன தோரணம் அனைத்துத் தெருக்களிலும் கட்டப்பட்டிருந்தது. அலங்கரிக்கப்பட்ட அம்மனை அந்தத் தேரின் நடுவில் உட்கார வைத்தபோது அவ்வளவு அழகாய் இருந்தது அம்மன். ஆனால் எந்த அலங்காரமும் இல்லாத மனோர் அத்தையை விட அல்ல.

வெள்ளிக்கிழமை பெரிய இரும்புக் கொப்பரையில் கூழூற்றி, கும்பச் சோறு படையலிட்டு, மாவிளக்கு, தேங்காய் உடைப்பு என்று நடந்தேறியது. பெரிய எருமை மாடு ஒன்றும் நான்கைந்து ஆடுகளும் பலி கொடுக்கப்பட்டன. பம்பைச் சத்தத்துடன் பறை மேளமும் போட்டி போடும் அன்று, பல பெண்களுக்கு சாமி வந்து ஆடுவார்கள். ஆண்கள், வாள்களை எடுத்துக் கொண்டு மாரியாத்தா சிலையை நோக்கி ஓடிப் போய் வெட்டுவதுபோல் ஆங்காரமாய்க் கத்துவார்கள். அப்படிக் கத்தும் ஆண்களைத் தடுக்கப் பத்துப் பதினைந்து இளைஞர்கள் அவர்களின் இடுப்பைப் பற்றித் தழுவிக் கொண்டு நிறுத்துவார்கள். மொட்டச்சி கிழவி, லைலா, அற்புதம், காவேரி, கலைவாணி, நளினி, கனகலதா இவர்களுக்குத்தான் பொதுவாகச் சாமி வரும். கும்பச் சோறும் பச்சரிசி வெல்லம் கலந்த மாவையும் பிசைந்து சாமி வந்த பெண்கள் தின்றது போக ஊரே உருண்டை கட்டித் தின்னும்.

அன்று மாலையே ஊரைவிட்டு இரண்டு மைல் தொலைவில் உள்ள காளியம்மன் தோப்பிற்குக் கால்நடையாய்ச் சென்று ஊர்கூடிப் பொங்கல் வைப்பது வழக்கம். வரும் போது இருட்டி விடும். அம்சாவின் கைப்பந்தமும் மண்ணெண்ணெய்ப் புட்டியும் அந்த இரவை அவ்வளவு ஒளியாக்கும். பொங்கல் வைத்த இரவே கரகாட்டமும் நடக்கும். கரகாட்டத்திற்கும் அம்சாவின் பந்தமே வெளிச்சம். நிமிடத்திற்கு ஒருமுறை அதற்கென இருக்கும் அலுமினியக் கரண்டியில் எரியும் பந்தத்தில் எண்ணெயை ஊற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் சுற்றப்பட்ட காட்டன் துணி கருகாமல் எரியும். தெருக்களில் கூட மின் விளக்குகள் இல்லாத காலமது. இளவட்டங்கள் பணத்தாள்களைக் கரகாட்டக்காரிகளின் ஜாக்கெட்டுகளில் குத்தித் தங்கள் கிளுகிளுப்பை அடைவார்கள். ஐந்து, பத்து ரூபாயிலிருந்து ஐம்பது ரூபாய் வரை அப்படிக் குத்தப்படும்.

சனிக்கிழமை காலை, அம்மன் தேரோட்டமும் இரவு பாட்டுக் கச்சேரியும் இருக்கும். குறிப்பாக, வேலூர் ‘கிரிஜா மணி’ கச்சேரிதான் பிரபலமானது என்பதால் அதையே அந்த ஊருக்கும் புக் செய்திருந்தார்கள். ஞாயிறன்று முழுக்க முழுக்க மஞ்சள் நீராட்டு விழாதான். பெயருக்குத்தான் மஞ்சள் நீராட்டு விழா. சாணி, தொட்டித் தண்ணீர், புழக்கடை சகதி எல்லாம் மொண்டு ஊற்றுவார்கள். முறைப் பெண்களைத் தேடித் தேடி மாமன்மார்கள் நனைப்பார்கள். அப்படித்தான் பெண்களும் ஓரணியாகத் திரண்டு தத்தமது முறைப் பையன்களைச் சூழ்ந்து கொண்டு நனைப்பார்கள்.

வெள்ளிக்கிழமை கரகாட்டம் ஆட வந்த கூட்டத்தில் இருபத்தைந்து வயது மதிக்கத்தக்கப் பெண், கைக் குழந்தையுடன் வந்திருந்தாள். கைக் குழந்தைக்காரி எப்படி விடிய விடிய ஆட முடியும்? ஆடாத அவளுக்குக் காசு எப்படிக் கொடுப்பது என்று திருவிழா ஏற்பாட்டாளர்கள் பேசிக் கொண்டனர். ஆனால் அவள் ஆட்டத்தைப் பார்த்து மிரண்டு போனது ஊர்.

கரகாட்டம் முடித்த கையோடு மறுநாள் பணப் பட்டுவாடா செய்யப்பட்டது. ஆட வந்த ஆண் ஆட்களும், இசைக் கலைஞர்களும், பெண் ஆட்களும் தங்களது ஊர்களுக்குக் கிளம்பிப் போனார்கள். கைக்குழந்தை வைத்திருந்தவள் மட்டும் போகாமல் அந்த ஊரிலேயே கோயில் வாசலில் தங்கி இருந்தாள். ஞாயிற்றுக்கிழமை வரை தன் குழந்தையுடன் அந்த ஊரைச் சுற்றிச் சுற்றி வந்தவள் அந்தத் திருவிழாவின் ஓர் அங்கமாகவே மாறி விட்டாள். ஆனால் அவள் பார்வையில் பரிதவிப்பும் தேடலும் பெருந்துயரமும் கவ்வியிருந்தன. ஞாயிற்றுக்கிழமை மாலைவாக்கில், மனோர் அத்தையின் வீட்டிற்கு வந்த அவளை, வரவேற்று முதலில் உணவு கொடுத்துச் சாப்பிடச் சொன்னாள். அவள் தோள் மீது தூங்கி விட்டிருந்த குழந்தையைப் பக்குவமாக வாங்கிக் கயிற்றுக் கட்டிலில் புடவையைப் போட்டு பூப்போலப் படுக்க வைத்தாள்.

“சொந்த பந்தம் யாருமில்லக்கா. மூனு நாளா இங்கதான் இருக்கன். விசாரிச்சதுல உங்களத்தான் பார்க்கணும்னு தோணுச்சு”

கறி சோறு தின்றபடி கண்ணீர் மல்கச் சொன்னாள்.

பசிக்கு அவள் வாரி வாரித் தின்னுவதை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தாள் மனோர்.

“எந்தொழிலுக்கு இந்தக் கொழந்த சரிபட்டு வராதுக்கா. இத எங்கியாவது வுட்றணும்”

மீண்டும் அவளே பேசினாள்.

“ஐயோ ஐயோ! பொம்பளக் கொழந்தைய எங்கடி வுடுவ? வேணான்னா இங்க வுட்டுப் போடி நாம்பாத்துக்குறன்”

மனோரிடமிருந்து அவ்வளவு சீக்கிரம் இந்தக் கருணையான வார்த்தை வருமென்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

“நீதான்கா எனக்கு மாரியாத்தா” என்றபடி அவள் கால்களைப் பிடித்துக் கொண்டு அழுதாள்.

தூங்கிக் கொண்டிருந்த தன் குழந்தைக்குக் கடைசியாக ஒரே ஒரு ஈர முத்தத்தை மட்டும் அழுத்தமாய்க் கொடுத்துவிட்டு அழுதபடியே வீட்டை விட்டு ஓடியவள்தான் அவளைப் பற்றி அதற்குப் பிறகு எந்தத் தகவலும் இல்லை. அந்த ஊருக்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆட வந்த கரகாட்டக் குழுவிலும் அவள் வருகையை மனோர் அத்தை எதிர்பார்த்தாள்; அவளைத் தேடினாள். ஆனால் பலனில்லை. பிறகு கரகாட்டமே வழக்கொழிந்து போன பிறகு அவள் குறித்த ஞாபகம் மனோர் அத்தைக்கு அறவே இல்லாமல் போனது.

சரளாவுக்கு வளர்ப்புத் தாயாக மாறிய போது மனோர் அத்தையின் வயது முப்பதுக்கும் குறைவாகத்தான் இருந்தது. சரளா வளர வளர சாராயக் கடை வேண்டாம் என்று தோன்றியது. அவளையாவது நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் அவளைக் கண்ணியமாக வளர்க்க வேண்டும் என்றுமே கொடிகட்டிப் பறந்த சாராய வியாபாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தினாள். பத்தாம் வகுப்புக்கு மேல் சரளாவால் தேற முடியவில்லை. படிப்பில் நாட்டமில்லாத அவளை நல்ல இடத்தில் மிகக் கௌரவமாகத் திருமணம் செய்து கொடுத்தாள். வரதட்சணையாக டிவிஎஸ் 50யும் ஐம்பதாயிரம் பணமும் ரொக்கமாகக் கொடுத்தாள். அதோடு, தனக்கென இருந்த மாடி வீட்டையும் நாளு ஏக்கர் நன்செய் நிலத்தையும் சரளாவுக்கே சேர வழி செய்தாள். பங்காளிப் பசங்க எவ்வளவோ சண்டை போட்டுப் பார்த்தார்கள். “அந்த அநாதப் பொண்ணுக்கு அவ்ளோ செய்யுற எங்களுக்குச் செய்ய மாட்டியா?” என்று.

மனோர் அத்தையைப் பொறுத்தவரை அவள் முடிவுதான் இறுதியானது. யாராவது பெண்கள் சொன்னால் கூட காதிலாவது வாங்குவாள். ஆண்கள் என்றால் அது போலீசாக இருந்தாலும் அவளிடம் வேலைக்கு ஆகாது. மனோர் அத்தை எப்படிச் சாராய வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தாளோ, அப்படி கஞ்சா வியாபாரத்தில் உச்சம் தொட்டவள் லட்சுமி. சாராயத்திற்கும் கஞ்சாவுக்கும் அடிக்கடி ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து ஆட்கள் வருவார்கள். ஒருநாள் சித்தூரிலிருந்து ஐந்து பேர் கொண்ட கூட்டம் மாலை வாக்கில் மனோர் வீட்டை நோக்கி வந்தது.

“குடிக்கப் போறீங்களா? பார்சலா வோணுமா? கிளாஸ் மூன்றூபா. பார்சல்னா பாக்கெட் அஞ்சிரூபா. என்னா வோணும்?”

மனோர் அத்தை கேட்டாள்.

“இப்போதைக்கு அஞ்சி கிளாஸ் குடிக்கக் குடு. வெடிகால போகும்போது பத்துப் பொட்டலம் வாங்கிக்கிறோம். அப்படியே இன்னைக்கு ராத்திரி தங்க இடமும் குடு”

இப்படியான தூண்டில் பேச்சு, சீண்டல் பேச்சு எல்லாம் பார்த்தவள்தான். இருந்தாலும்,

“புரியிற மாதிரி சொல்லுங்கப்பா” என்றாள் அதட்டலாக.

“ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒருநாள் நடுராத்திரி வந்தமே.‌ அது வேற யாருமில்ல நாங்கதான்” அவள் காதோரம் போதையில் உளறினான் ஒருவன்.

அவளுக்குப் புரிந்து விட்டது. இதுநாள் வரை அவள் மண்டையைக் குடைந்து கொண்டிந்த அந்தச் செயலுக்குக் காரணம் யாரெனத் தெரியாமல் உள்ளூரில் யார் யாரையோ சந்தேகப்பட்டிருந்தாள். அதன் விளைவாகப் பலரோடு காரணம் சொல்லலாம் சண்டை வாங்கி இருந்தாள். பெண்கள் இயற்கை உபாதை கழிக்க கானாற்றுக் கரைக்கோ, கள்ளிப் புதருக்கோ ஒதுங்கினால் கூட எட்டிப் பார்க்கும் ஆட்கள் அந்த ஊரில் இருந்தார்கள். அதிலும் குறிப்பாக, அப்படிப்பட்ட தூம வேலையைத் துடுக்காகச் செய்பவர்கள் தேவன், ராமுடு போன்றவர்கள் என்பதால் அவர்கள் மீதும் மனோர் அத்தைக்குச் சந்தேகம் இருந்தது. சம்பவம் நடந்த அதே வாரத்தில் குடிக்க வந்த ராமுடுவைச் சந்தேகப்பட்டு “உங்கூட வந்த மத்த பாடுகாங்கொ யாருடா? ஆம்பள இல்லாத வூட்ல ஆட்டம்போட்டா அடங்கிப் புடுவான்னு நெனச்சியா? ஊர் சாண்டா ஒண்ணா குட்ச்ச எந்தூம. யார் மேல் கைய வச்சிட்டுத் தப்பிச்சிடலாம்னு பாக்கற? பேளப் போறன்னு சொன்னா கூட சும்மா வுட மாட்டாடா இந்த மனோரு!” திட்டிக் கொண்டே பேய் போல் விரட்டி விரட்டி அடித்தாள். அப்படித்தான் தேவனையும் ஒருநாள் வெளுத்திருந்தாள். பாவம் ராமுடுவும் தேவனும் என்று தோன்றியது இப்போது அவளுக்கு.

எவ்வளவு தைரியம் இருந்தா திரும்பவும் வந்து எங்கிட்டியே சொல்லுவானுங்க என்று கோபம் தலைக்கு ஏறியது. ஆனாலும் அவர்களைச் சும்மா அனுப்ப மனம் வரவில்லை. எதையோ யோசித்தவளாய் “இன்னைக்கு முடியாது. தலைக்குத் தண்ணி ஊத்தினு கீறன். அடுத்த வாரம் ஞாயித்துக் கெழம வர்றீங்களா?” என்றாள். வந்தவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இப்படி இணங்கிப் போவாள் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் கேட்டபடி ஸ்பெஷலான பத்துப் பொட்டலங்களைத் தந்து வழியனுப்பி வைத்தாள். மறுநாள் செய்தித் தாளில் விஷச் சாராயம் குடித்து சித்துரில் ஐந்து பேர் பலி என்று செய்தி வந்தது. பொதுவாக அப்போதெல்லாம், வேலூர் மாவட்டச் செய்திக்குப் பக்கத்தில் சித்தூர் செய்தியும் சேர்ந்தே வரும்.

கட்டிலிலிருந்த மனோர் அத்தையை, நடு வாசலில் போடப்பட்டிருந்த பச்சை ஓலையில் வடக்குத் தெற்காகக் கிடத்தினார்கள். அதற்கு முன்பு சிகைக்காய் போட்டு நன்கு குளிக்க வைக்கப்பட்டாள். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் மூன்றையும் கலந்து கடைசியாக அவளது தலைக்குத் தேய்த்து விட்டார்கள். அங்காளிப் பங்காளிகள் மரக்கா கோலம் சுற்றி வந்து பிணத்தைத் தூக்கும்முன் அடிக்கும் கடைசி அடியான கல்யாணப் பறை வாசிக்கப்பட்டது.

மகன்கள் இல்லாத மனோருக்கு கொள்ளிப் போட ஆளில்லை என்றும் பங்காளிப் பசங்க யாரையாவது போடச் சொல்லாம் என்றும் பேசிக் கொண்டார்கள். பொதுவாக யார் கொள்ளி போடுகிறார்களோ அவர்களுக்குத்தான் செத்தவர்களின் சொத்து, வீடு எல்லாம் சேரும் என்பது எழுதப்படாத கிராமத்து விதி. அதுவரை அமைதியாக இருந்த சரளா, அம்சாவை அழைத்து “எங்கம்மாவுக்கு நானே கொள்ளிப் போட்றன். அதான் அதொட விருப்பம். என்ன பண்ணணும் சொல்லு” என்றாள் துடுக்காக.

“ஐயோ ஐயோ வாய கயிவுடி. அவ உன்ன வளத்த பாவத்துக்கு நீ அழுதது போறும். கொள்ளிப் போட்றாளாம் கொள்ளி. ஆம்பளங்களத் தவிர யாரும் போடக் கூடாது போடி எட்ட”

மனோரின் மைத்துனன் மனைவி பவளம் வெடுக்கென்று அதே நேரத்தில் சரளாவை நிலைகுலைய வைக்கும் தொனியில் சொன்னாள். வீட்டின் உள்ளே ஓடிப் போய் சூரிக் கத்தியை எடுத்து வந்த சரளா, கூட்டத்தைப் பார்த்து, குறிப்பாகப் பவளத்தைப் பார்த்து “சாகுற வரிக்கும் ஆம்பள இல்லாம வாழ்ந்த எங்கம்மாவுக்குச் செத்த பெறகு எதுக்குடி ஆம்பள மயிரு? நான்தான் கொள்ளி போடுவன். எவளாவது வாயத் தொறந்தீங்க கோக்கிய அறுத்துப்புடுவன்” நல்ல பாம்பாய்ச் சீறினாள்.

“இதுவரைக்கும் பொம்பளைங்க யாரும் சுடுகாடு போனதில்லம்மா. அதுவும் கொள்ளி போட”

நாட்டாண்மை சிகாமணி பொறுமையாகச் சொன்னான்.

“இதுவரைக்கும் வரலன்னா என்னா? இப்ப வரன்; வந்து கொள்ளி போட்றன் நாம் போட்டா வேவாதா எங்கம்மா ஒடம்பு?” விட்டுக் கொடுக்காமல் பேசினாள்.

“அதில்லமா… பொம்பளைக்குக் கொள்ளி போட்ற பாக்கியம் இல்லியேம்மா” தோட்டியாக இருக்கும் பெரியசாமி சொன்னான்.

“பறையனுக்குக் கோயிலுக்குள்ளாற வர உரிம இல்லன்னு குடியானவன் சொல்றப்ப மட்டும் மீசய முறுக்கிக்குனு அதெப்படின்னு கேக்குறீங்கல்ல?”

“அது வேற இது வேற தாயி! புரிஞ்சிக்க”

கோவிந்தனின் சமாதானத்தையடுத்து கோபம் வந்தவளாய்க் கத்தினாள்.

“எல்லா மயிரும் ஒண்ணுதான். வூட்டாண்ட இருந்து பத்தடி சுடுகாடு. எங்கம்மாவ தரதரன்னு இழுத்துணு போயி தனியா கொள்ளி போடுவன். நீங்க யாரும் வர வேணா”

கொஞ்சம் நேரம் ஊர்ப் பொதுமக்கள் குறிப்பாக ஆண்கள் தங்களுக்குள் எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள். பொழக்கடையில் இருந்த பானைத் தண்ணீரைப் புடைவை நனைய மடமடவெனத் தலைமீது மொண்டு ஊற்றிக் கொண்டு, எருமட்டை புகைந்து கொண்டிருந்த கொள்ளிச் சட்டியைக் கையில் எடுத்துக் கொண்ட சரளா “ம்ம் தூக்குங்க பாடைய” என்றாள் ஆங்காரமாக. அம்சா உடனே இசைவு தந்தாள். அதுவரை ஆட்டம் பாட்டு விசில் என்று கத்திக் கொண்டிருந்த இளவட்டங்கள் ஓடி வந்து பாடையைத் தூக்கினர். ஊர்ப் பெரியவர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. இளைஞர்கள் ஆதரவு சரளாவுக்கு இருந்ததை உணர்ந்து கிழக் கட்டைகள் ஒதுங்கிக் கொண்டனர். சரளா தன் முந்தானையைத் தூக்கி இடுப்பில் செருகி முன்னே போனாள். மனோர் அத்தையின் பிணம் பின்னாள் போனது. ஊர் எல்லையோடு பெண்கள் எல்லாரும் தடுக்கப்பட்டு அப்படியே வீட்டுக்கு அனுப்பப்படுவது வழக்கம் என்றாலும், சரளா கொள்ளிச் சட்டியைத் தூக்கியதால் பல பெண்களும் முதல் முறையாக அவளுடனே எல்லையைத் தாண்டினர்.

சுடுகாடு போகும் முன் பனைமரங்கள் சூழ்ந்த நடுக்காட்டில் கிடத்தப்பட்ட மனோர் அத்தைக்கு இறுதிச் சடங்கு செய்ய பாடை தரையிறங்கியது. அரிச்சந்திரன் கதையை ஒருவன் சொல்லச் சொல்ல மற்றவர்கள் ஓஹோ என்று சத்தமெழுப்பிக் கொண்டிருந்தனர். அதுவரை இளைஞர்கள் மத்தியில் கேலியும் கிண்டலுமாகத் தள்ளாட்டத்துடன் ஆடிக் கொண்டே கூட்டத்துடன் வந்து கொண்டிருந்த ஒரு கிழவி மட்டும் மனோர் அத்தையின் முகத்துடன் தன் முகத்தை ஒட்டி கன்னத்தில் காய்ந்த முத்தம் கொடுத்து, நரம்புகள் புடைக்கும் தன் கையெடுத்துக் கும்பிட்டுத் தெலுங்கு வாசத்துடன் சொன்னாள்.

“எங்கொல சாமியே!”

எந்த ஊர்த் திருவிழாவின் கரகாட்டமும் அத்துப்படியான துரைசாமிதான் கூட்டத்தைப் பிளந்து அந்தக் கிழவியை உற்றுப் பார்த்துச் சொன்னான்.

“இது குண்டூருக் கரகாட்டக்காரி வெங்கட்டா!”


Art : saatchiart

பாரத் தமிழ்
பாரத் தமிழ்

எழுத்தாளர் பாரத் தமிழ், வேலூர் மாவட்டம், கெம்மங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றாலும், நிலவியல் சார்ந்த அடையாளத்தை மட்டுமன்றி அறமற்ற எந்த அடையாளத்தையும் விரும்பாதவர். குழந்தைகள் நலன் சார்ந்து இயங்கி வரும் இவர், ஆபத்தில் சிக்கிய நூற்றுக்கணக்கான குழந்தைகளை மீட்டிருக்கிறார். சிறார் சிறையில் பணிசெய்த அனுபவம் பெற்றவர். வரலாற்று ஆய்வாளர், ஓவியர், சமூகச் செயற்பாட்டாளர் எனப் பன்முகம் கொண்டவர். ‘நிலமற்றவனை நனைக்கும் மழை’ எனும் கவிதைத் தொகுப்பையும் ‘டாஃபி’ எனும் சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார்.

Share :

10 responses to “மனோர் அத்தை”

  1. Sathish T
    October 3, 2025

    சிறப்பு தோழர் வாழ்த்துக்கள் நல்ல கதை தோழர் ♥️

    Reply
    1. bharath Thamizh
      bharath Thamizh
      October 4, 2025

      நன்றி தோழர்

      Reply
  2. Praveen Kumar. E
    October 3, 2025

    பாரத் தோழர் அவர்களின் ஊர்க்காரர் ஆகவும் மற்றும் மனோர் ஆயாவின் உறவு முறை காரன் என்பதிலும் நான் பெருமிதம் கொள்கிறேன் ஏனென்றால் மனோர் ஆயாவின் வாழ்க்கை வரலாறு எனக்கு பத்தில் இருந்து 30 விழுக்காடு மட்டுமே எனக்கு தெரியும் ஏனென்றால் எனக்கு இப்பொழுது 24 வயது கடந்துள்ளேன் ஆகவே எனக்கு அவருடைய பூர்வ ஜென்மமான வாழ்க்கை வரலாறு எப்படி எவ்வளவு சிக்கல்களையும் இன்னல்களையும் பெருந்தொயரையும் கடந்து வந்தார்கள் என்று நான் அறியாமல் இருந்தேன் ஆனால் இப்பொழுது எனக்கு மாமா உறவு கொண்ட தோழர் பரத் தமிழ் அவர்களின் ஆற்றலால் நான் என்னுடைய முன்னோர்களான மனோராயாவின் வாழ்க்கை வரலாற்றை நான் அறிந்து கொண்டேன் அவர்கள் ஒரு பெண்ணாக தனியாக இந்த காலகட்டத்திலும் ஒரு பெண் என்றாலே பெரும் சிரமத்தை மேற்கொள்ள வேண்டும் அல்லது பெரும் துயரத்தை கடந்து வர வேண்டும் அக்கால கட்டத்தில் இந்த சாராயம் விற்ற கதை எவ்வளவு இன்னல்களை சந்தித்து அவர் வந்திருப்பார் ஆண்களால் நேரிடும் எவ்வளவு துயரத்தை அவர் சந்தித்து வந்திருப்பார் என்பதை கண்டு நான் வியக்கிறேன் அப்படி அச்சூழலை தாண்டி கடந்து வந்த மனோர் ஆயாவின் வரலாற்று கூறும் படி பேரன் நான் என்பதை கண்டு பெருமிதம் கொள்கிறேன் இக்கதையை வெளி உலகத்திற்கு எடுத்துக்கொண்டு சேர்த்த உறவில் மாமாவும் எனக்கு தோழருமான பாரத் தமிழ் அவர்களை பாராட்டுவதற்கு வயதில்லை எனினும் இது போன்ற சிறு சிறு கிராமங்களில் வாழ்ந்த வீர தமிழிசைகளின் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு கிராம கவிஞர்களும் எடுத்து உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அந்த ஒரு சில வீர தமிழச்சியின் வரலாற்று ஆனாக நான் விளங்குகிறேன் என்பதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன் பெருமிதம் அடைகிறேன் இந்த என்னுடைய பூர்வகுடி ஆயா திருமதி வீரமிகு மனோர் ஆயாவின் கதையை இவ்வுலகத்திற்கு எடுத்துரைத்த என்னுடைய அன்பு மாமா தோழர் பாரத் தமிழ் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியையும் என்னுடைய பூர்வ குடி வரலாற்று தாயான மனோரின் வீரத்திற்கு நான் ஜெய் பீம் என்று சொல்வதை நெஞ்சை நிமிர்த்து பெருமிதம் கொள்கிறேன் என்றும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.. நன்றிகள்…?

    Reply
    1. bharath Thamizh
      bharath Thamizh
      October 4, 2025

      அன்பும் நன்றியும்

      Reply
  3. R .jayanandan
    October 3, 2025

    அரக்கோணத்தில் நான் சிறுவனாக வாழ்ந்த காலத்தில், அங்கு சுவால்பேட்டை பக்கத்தில், ரயில் ரோட்டை ஒட்டி, மாலைகலந்த இரவு நேரத்தில் சாராயம் விற்பார்கள். அந்த கும்பலில், பாரத் தமிழின், பெண்ணைப்போல ஒருத்தியைக் பார்த்துள்ளேன். ஆனால் அவளுடைய ரணமான வாழ்வின் கீறல்களில் வழிந்த ரத்தவாடையை உணர்ந்தவனல்ல.
    இந்த கதையில் அதை உணர்ந்தேன்.
    சிறப்பான நடை யதார்த்தமான பார்வையோடு.

    ஜெயானந்தன்.

    Reply
    1. bharath Thamizh
      bharath Thamizh
      October 4, 2025

      அன்பும் நன்றியும்

      Reply
  4. Sanjaikumaran
    October 4, 2025

    கல்யாண பறை என்றால் என்ன?
    இறுதி ஊர்வலத்தில் அரிச்சந்திரன் கதை சொல்லப்படுமா?

    Reply
    1. bharath Thamizh
      bharath Thamizh
      October 4, 2025

      கடைசியாகப் பிணத்தைக் தூக்கும்போது அடிக்கப்படும் பறைக்குக் கல்யாணப் பறை என்பார்கள். ஆமாம் இடுகாட்டில் அரிச்சந்திரன் கதை சொல்லப்படும்.

      Reply
  5. மரியனஸ்
    October 6, 2025

    மனோகர் அத்தை கதையின் தொடக்கத்தில் மனோகர் அத்தையை பற்றி எழுத்தாளர் தோழர் பாரத் தமிழ் அவர்கள் மிகைப்படுத்தி எழுதுகிறாரோ என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது ஏற்றுக் கொள்ளவும் எனக்கு தயக்கம் இருந்தது. மெல்ல மெல்ல கதையுடன் நான் நகர்ந்து சென்றேன். அதை முழுமையாக வாசிக்க காரணம் , கதையில் வருகின்ற சாராயப் பொட்டலமும் மற்றும் தோழர் பாரத் தமிழ் மட்டுமே.

    கதையில் வரும் சரளாவின் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது.. குறிப்பாக பவளத்தை பார்த்து கூறிய வரிகள் நம்மைப் பார்த்து கூறுவதைப் போல இருந்தது . இன்னும் இங்கு பல மனோகர் அத்தைகளும், சரளாக்களும் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள் .. தொடர்ந்து எழுதுங்கள் , தொடர்ந்து உரையாடுங்கள் தோழர் பாரத் தமிழ் ….மகிழ்ச்சி..

    -மரியனஸ் 🎭

    Reply
    1. bharath Thamizh
      bharath Thamizh
      October 7, 2025

      அன்பும் நன்றியும் தோழர்

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : யோகதாரா

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top