யாரும் யாருடனும் இல்லை, அஞ்சாங்கல் காலம் ஆகிய இரண்டு நாவல்களும் தங்களுடைய பழமையான மரபுகள் மீது மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருக்கிற ஒரு பெரிய குடும்பத்தின் கதை. இதில் வருகிற மாந்தர்கள் பெண் குழந்தைகள் தங்களது கால்களை விரித்துப் போட்டுக் கொண்டு தூங்கினால் குடும்பத்துக்கு ஆகாது என்று அவர்களின் கால்களைக் கயிறால் கட்டிப்போட்டு ஒடுக்கித் தூங்கப் பழக்குகின்ற பழமையானவர்கள். இந்தக் குறிப்பை அஞ்சாங்கல் காலத்தில் வாசிக்கிற போது, காம்பியாவின் ஜஹா துகுரே (Jaha Dukureh), சோமாலியாவின் அயான் ஹிர்சி அலி (Ayaan Hirsi Ali), வாரிஸ் டைரி (Waris Dirie), இஃப்ரா அகமது (Ifrah Ahmed), செனகலின் காடி கோயிட்டா (Khady Koita), கினியா பிஸ்ஸாவ்வின் ஃபாத்திமா டிஜாரா சானி (Fátima Djarra Sani), கென்யாவின் நைஸ் நைலான்டேய் லெங்கெட்டே (Nice Nailantei Leng’ete), மலிபியாவின் ஐசா எடோன் (Aïssa Edon), இந்தியாவின் மசூமா ரணல்வி (Masooma Ranalvi), அரேஃபா ஜோஹாரி (Aarefa Johari) உள்ளிட்ட பெண்களும் அவர்களுக்கு அவர்களின் பிற்போக்கான குடும்பத்தாரால் காலச்சாரத்தின் பெயரில் பிறப்புறுப்புச் சிதைக்கப்பட்ட கொடுமைகளும் நினைவுக்கு வந்தன. சிறு குழந்தைகளின் கால்களைக் கட்டிப் போட்டுத் தூங்க வைப்பதற்கும் உறுப்பைச் சிதைப்பதற்கும் ஒரே காரணம் ‘கலாச்சாரம்’ தான்.
இந்த நாவல்களில் வேளாண் சமூகம் வணிகச் சமூகமாக மாறியது, பயணத்திற்குக் கால்நடைகளைச் சார்ந்திருந்தவர்கள் தீடீரென மோட்டார் வண்டிகளுக்கு மாறியது, கூட்டுக் குடும்பம் சிதைந்து தனிக்குடும்பங்களாக உருப்பெற்றது, பழமையின் பிடிக்குள் சிக்கியிருந்தவர்களின் வாரிசுகளின் நவீனச் சிந்தனைக்குத் தகவமைப்பாகும் போது ஏற்படும் பதற்றம், அதற்கான சமூகத் தேவை ஆகியன சார்ந்து வாசிப்பை நிகழ்த்த முடியும். என்றபோதிலும் பிரான்ஸ் பனானின் கோட்பாடு சார்ந்து அணுகிப் பார்க்கலாம்.
யார் பிரான்ஸ் பனான்?
பிரான்ஸின் ஒரு பகுதியாக இருக்கும் மார்டினிக் தீவில் 1925இல் பிறந்தவர் பிரான்ஸ் பனான் (Frantz Fanon). 1951இல் மனநல மருத்துவர் படிப்பை முடித்த அவர், பிரான்ஸின் காலனிய நாடுகளுள் ஒன்றாக இருந்த அல்ஜீரியாவில் பணியாற்றினார். பிரான்ஸின் ராணுவத்தால் கொடுமைகளை அனுபவித்த அல்ஜீரிய கறுப்பர்களுக்குச் சிகிச்சை அளிக்கும்போது அவர்களினுடைய மனம் சார்ந்து அவர்களைப் படிக்க ஆரம்பித்தார். கறுப்பர்கள் அடிமையாக இருப்பதற்காக அவர்கள் மனம் வெள்ளையர்களால் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதங்களை ஆராய்ந்தார். பின்னர் அல்ஜீரிய விடுதலை இயக்க முன்னணியில் இணைந்து அந்த அமைப்பின் விடுதலை நோக்கிய நகர்வுக்குக் கருத்தியல் தத்துவங்களை வழங்கினார். அவருடைய ‘Black Skin White Masks’ நூல் அவரது தத்துவங்களின் சாராம்சம். அதில் கலாச்சார ரீதியாகக் கறுப்பரிடம் அடிமை மனநிலையை உருவாக்கும் வெள்ளையர்களின் தந்திரங்களை விவரிக்கிறார். அதை எடுத்துக்கொண்டு வெள்ளையர்கள் இடத்தில் தமிழக ஆண்களையும் கறுப்பர்கள் இடத்தில் இந்தியப் பெண்களையும் வைத்துப் பார்க்கலாம்.
‘யாரும் யாருடனும் இல்லை’யில் விவசாயச் செழிப்போடு இருந்த ரத்தினசாமியின் மகன் பொன்னையா. ஏலக்காய் வியாபாரம். அவரது மனைவி அன்னம்மா. இவர்களுக்கு தர்மராஜ், செல்வம், நரேந்திரன், நந்தகோபால், குணா என்று ஐந்து மகன்கள், இரண்டு மகள்கள். இதில் குணாவுக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை. இரண்டு மகள்களில் பூரணி என்பவரைத் தேனியில் தனது சொந்த அக்கா மகனுக்குத் திருமணம் முடித்துக் கொடுத்திருக்கிறார் பொன்னையா. தர்மராஜ் பலசரக்கு, செல்வம் பாத்திரக்கடை, நரேந்திரன் லாரி சர்வீஸ், தொடர்குடிகாரனான நந்தகோபால் அவனது அத்தை மகள் வினோதினியைத் திருமணம் முடித்திருக்கிறான். வாணி, ராதிகா, லதா, அனு, சுபா, பானு, வசந்தி, சரவணன், குமார் என்று பொன்னையாவுக்கு நிறையப் பேரக் குழந்தைகள். இரண்டு மாடி கொண்ட பெரிய வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசிக்கிறார்கள். வசதிக்குக் குறைவில்லை. அவர்களுக்குள் பிணக்கம் ஏற்பட்டுச் சொத்துக்களைப் பிரித்துக்கொண்டு தனிக்குடும்பங்களாகச் சிதறுவதோடு நாவல் முடிகிறது. இதில் முக்கியமான பாத்திரம் குணாவும் வினோதினியும். அவர்கள் தான் பழமையின் நீட்சிக்குள் சிக்கியபடி காலமாற்றத்தை தம் இருப்பு வழியாக நிறுவிக் கொண்டே குடுப்பத்திற்குள் வெடிப்பை நிகழ்த்துகிறார்கள்.
‘யாரும் யாருடனும் இல்லை’யின் தொடர்ச்சிதான் அஞ்சாங்கல் காலம். இதில் வினோதினியும் குணாவும் ரேணுகா, மகா என்று வருகிறார்கள். மற்ற பாத்திரங்களும் வேறுபெயர்களில் வருகின்றன. புதியதாக கிருஷ்ணசாமி, அவரது மனைவி பாவை, கிருஷ்ணசாமியின் நண்பர் முத்துவேல், அவர்கள் குடும்பத்தின் வேலையாட்களோடு முந்தைய நாவலில் இருந்த வாணியும் அவள் கணவன் சேகரும் இதில் சுமி, ராஜாவாக வருகிறார்கள்.
‘யாரும் யாருடனும் இல்லை’யில் வினோதியின் கணவன் நந்தகோபால், தன்னுடைய அண்ணன் மகளின் திருமண நகையைத் திருமணத்தன்றே யாருக்கும் தெரியாமல் எடுத்துக்கொண்டு போய் குடிக்கிறான். தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபாடில்லாத அவனது நாற்றமடிக்கும் குடிவாசனை வினோதினியை அவனிடமிருந்து அந்நியப்படுத்திக் கொண்டே இருக்கிறது. குடித்தே சொத்தையெல்லாம் அழித்துவிட்டு ஒருநாள் மூணாறு எஸ்டேட் மலையிலிருந்து விழுந்து செத்துப்போகிறான். இந்தச் சூழலில் நந்தகோபால் உயிரோடு இருந்தபோதே அவனின் தம்பி குணாவோடு இணைந்து வினோதினி கருத்தரிக்கிறாள். குடும்பத்தினரால் கரு கொல்லப்படுகிறது. வினோதினி உடைந்துபோகிறாள். குணா மனம் வெறுத்து டெல்லிக்குப் போய்விடுகிறான்.
அஞ்சாங்கல் காலத்தில் ரேணுகாவாக வரும் வினோதினியை பாவையின் கணவர் கிருஷ்ணசாமி மறுமணம் முடித்துக்கொள்கிறார். கிருஷ்ணசாமியால் இனவிருத்தி செய்ய முடியாத நிலையில் அந்தப் பலியை தன்னுடைய மனைவி பாவையின் மேல் சுமத்தி தனது இயலாமையை மறைப்பதற்காக ரேணுகாவைத் திருமணம் செய்து கொள்கிறார். ரேணுகாவின் மனம் டெல்லிக்குப் போய்விட்ட மகாவையே (குணா) நினைத்துக் கொண்டிருக்கிறது. அவளுக்கு நடந்த இரண்டு திருமணமும் அவளைக்கேட்டு நடக்கவில்லை. குடும்பத்தின் மூத்தவர்கள் முடிவு செய்து நடத்தியவை. அதில் அவள் சிறுவர்கள் தூக்கிப்போட்டு விளையாடும் ஒரு பொம்மையைப் போலவே கையாளப்பட்டு இருக்கிறாள்.
‘யாரும் யாருடனும் இல்லை’யில் வாணியாக வந்த சுமியின் திருமண வாழ்க்கை, குழந்தைப்பேறு என்று அவளது உலகம் அஞ்சாங்கல் காலத்தில் விரிவாக வருகிறது. சிறுமியான பவானி நவீனத்தின் பிரதிநிதியாக வருகிறாள். அவளது கேள்விகளில் இருக்கும் நியாயத்தை ஏற்றுக்கொள்வதே குடும்பத்தினருக்குப் பாடாவதியாக இருக்கிறது. தான் விரும்பும் வாழ்வு தனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே வாழ்ந்து கிடைக்காமலேயே போய்ச்சேரும் ரேணுகாவின் மரணத்தோடும் மகாவின் பேதலிப்போடும் அஞ்சாங்கல் காலம் நிறைவு பெறுகிறது.
கை விலங்காகும் கேலியும் விளையாட்டும்
‘யாரும் யாருடனும் இல்லை’யில் வினோதியின் முதல் கணவன் நந்தகோபாலைப் போலவே அவனது சகோதரி பூரணியின் கணவன் குடித்துச் சொத்துகளை அழிக்கிறான். பூரணியின் அத்தை மகன் தான் அவன். அவனது பொறுப்பற்ற தனத்தைச் சுட்டிக் காட்டி அவளின் அம்மா அன்னம்மா தடுத்தபோதும் கேட்காமல் பூரணி அவனைத் திருமணம் செய்து கொள்கிறாள். திருமலாபுரத்தில் செல்வச் செழிப்பான தந்தையின் மகளாக இருந்த அவள், தினமும் குடிகாரக் கணவனிடம் அடி வாங்கி உடல் மெலிந்து தனது பிள்ளைக்கு அது விரும்பியதைக் கூட வாங்கிக் கொடுக்க முடியாமல் வதைபடுகிறாள். அவ்வளவு கொடுமையில் இருந்தும் அவளால் அதிலிருந்து விடுபட முடியவில்லை. அந்தச் சூழலுக்கு அவள் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறாளே தவிர விடுபடுவதற்கான வாய்ப்புகள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்றன.
பூரணி தனது அக்காவினுடைய திருமணத்தில் பந்தி பரிமாறும் போது தான் தனது வருங்காலக் கணவனைப் பார்க்கிறாள். அவளுக்கு அவன் மீது அப்போது சிறு விருப்பம் கூட இல்லை. ஆனால் உறவுக்காரப் பெண்கள் பூரணியிடம் ‘பாத்துப் போடுமா, உன் முறைப் பையனுக்கு இன்னும் கொஞ்சம் பாயாசம் போடு’ என்று கேலி செய்கிறார்கள். இந்தக் கேலி ‘முறைப் பையன் என்றால் சலுகைக்கு உரியவன்’, அவனுக்காகவே நீ பிறந்திருக்கிறாய் என்கிற எண்ணத்தைப் பூரணிக்குள் உருவாக்குகிறது. அதுவே தடுப்புகளைத் தாண்டி அவனைத் திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு அவளை மாற்றுகிறது. மற்றொரு இடத்தில் அம்மனுக்கு எலுமிச்சைத் தோலில் அகல் செய்து அதில் வாழைத்தண்டுத் திரி வைத்து விளக்குப் போட்டால் நல்ல கணவன் கிடைப்பான் என்கிற எண்ணம் விதைக்கப்படுகிறது. இதுபோன்ற செயல்கள் பெண்களிடம் அவர்களுக்குக் கிடைத்த இணையோடு திருப்தி பட்டுக்கொள்ளும் மனநிலையை உருவாக்குகிறது. அதாவது விளக்கு எரிப்பதால் ‘நல்ல கணவன் கிடைப்பான்’ என்ற திருமணத்திற்கு முந்தைய எதிர்பார்ப்பு திருமணத்திற்குப் பிறகு குடிகாரனாக, பெண் பித்தனாக, திருடனாக இருந்தாலும் ‘நல்ல கணவனே கிடைத்திருக்கிறான்’ என்ற திருப்தியாக மாறி ஆழ்மனதில் படிந்துவிடுகிறது. இந்தக் கொடுமைகளை யாரிடமாவது சொல்லித் தேறுதலடையலாம் என்றால் ‘வீட்டு விஷயத்தை வெளியே சொல்வது குடும்பப் பெண்களுக்கு அழகல்ல’ என்ற அம்மாவின் அறிவுரை நினைவில் வந்து தடுக்கிறது. வெளியே சொன்னால் குடும்பப் பெண்ணாக இருக்கத் தகுதி அற்றவள் ஆகிவிடுவோமோ என்ற பயம் நிழலாடுகிறது. இந்த மாதிரியான ஒழுக்கம், கட்டுப்பாடு தொடர்பான சங்கதிகள் பெண்களைப் பலவீனமானவர்களாக உணர வைத்து விடுகின்றன.
இரண்டு நாவலிலும் ஒருபுறம் குழந்தைகள் அதிலும் பெண் குழந்தைகள் பிறந்து கொண்டே இருக்கிறார்கள். இன்னொரு புறம் வீட்டின் சமையலறையில் அடுப்பு எரிந்துகொண்டே இருக்கிறது. இரண்டும் இணைந்து இந்த உலகம் பெண்களுக்கு நெருப்பு தான். அதில் தான் நீங்கள் புழங்க வேண்டியிருக்கும். அதற்காகவே நீங்கள் ஏற்கனவே எரிந்துகொண்டிருக்கும் அம்மாவாலும் எரித்துக்கொண்டிருக்கும் அப்பாவாலும் கொண்டு வரப்படுகிறீர்கள் என்று ஆசிரியரால் சொல்லப்படாத புதிய அர்த்தத்தை வழங்கிவிடுகின்றன.
‘யாரும் யாருடனும் இல்லை’யில் தர்மராஜ் தன் மனைவி ராஜேஸ்வரியை ‘என்னத்த சமைச்சிருக்க சனியன்! எல்லாம் என் தலையெழுத்து’ என்று திட்டுகிறான். இது உனக்கேயுரிய ஒரு வேலையைக் கூட ஒழுங்காச் செய்யத் தெரியவில்லை என்று அவளைக் குற்ற உணர்ச்சிக்குள் தள்ளுகிறது. இதைக் குற்றத்தில் இருந்து தப்பிப்பதும் தப்பிப்பதற்கான முயற்சியிலுமாகவே மனைவியை வைத்திருந்து வாழ்க்கை மீது அவநம்பிக்கை ஏற்படும் அளவுக்கு அவளைக் களைப்படைய வைப்பதற்கான வேலைத் திட்டமாகப் புரிந்துகொள்ளலாம்.
கறுப்பர்களைப் பாலியல் வன்முறையாளர்களாக, அறிவுக் குறைபாடு உடையவர்களாக, உயிரியல் அடிப்படையில் தாழ்ந்தவர்களாகச் சித்திரித்து வெள்ளையர்கள் எழுதிய கலை, தத்துவம், மருத்துவ நூல்களை விமர்சிக்கும் பனான், அவை அனைத்தும் வெள்ளை ஆதிக்கத்தின் நீட்சி என்று கூறி அப்படி எழுதியவர்களை மனநோயர்கள் என்கிறார். இந்த அடிப்படையில் ராஜேஸ்வரியைப் பார்த்து ‘சனியனே என்ன சமைச்சிருக்க’ என்று திட்டுகின்ற தர்மராஜையும் மனநோயராகவே கருத வேண்டியுள்ளது.
பெண் குழந்தைகள் அனைவரும் உள்ளூரில் படிக்கிறார்கள். ஆண் ஊட்டியில் வசதியான பள்ளியில் படிக்கிறான். விடுமுறையில் வீட்டுக்கு வந்திருக்கும் அவன் தனது சகோதரிகளுடன் விளையாடுகிறான். அப்போது தானொரு பொறியாளராகி பிரமாண்டமான கட்டிடங்களைக் கட்டுவேன் என்று இல்லாத மீசையைக் கூட தடவிக் கொள்கிறான். சகோதரிகளிடம், ‘நீ என்னவாக ஆவாய்’ என்று வரிசையாகக் கேட்டுக் கொண்டே வந்தவன் அவர்கள் தீவிரமாக யோசிப்பதைப் பார்த்துவிட்டு, ‘நீ பத்தாங் கிளாஸ் போனதுமே கல்யாணம்’, ‘நீ ஒன்பதாங் கிளாஸ் போனதுமே கல்யாணம்’ என்று சொல்கிறான். எல்லோரும் சேர்ந்து சிரிக்கிறார்கள். அங்கு வாணி விளையாட்டு வீராங்கனை ஆவேன் என்கிற தன்னுடைய விருப்பத்தைச் சட்டென்று சொல்லக் கூட இடமில்லை.
பனான் தன்னுடைய நூலில் ‘The lived experience of the Blackman’ என்ற பகுதியில் வெள்ளையர்களைப் பொறுத்தவரை ‘கறுப்பர்கள் அசல் மனிதர்கள் அல்ல. மனிதரைப் போன்றவர்கள் என்ற எண்ணம் அவர்களுள் படிந்திருக்கிறது’ என்பார். இதைப் பொறியாளர் கனவில் இருக்கும் ஆணின் பார்வையோடு இணைத்து நோக்கலாம். அவனைப் பொறுத்தவரை அவனது சகோதரிகள் அசல் மனிதர்கள் அல்ல. மனிதரைப் போன்றவர்களே. அதனாலேயே பத்தாங் கிளாஸ் முடிந்ததுமே உனக்குக் கல்யாணம் ஆகிவிடும் என்று சொல்கிறான். வெள்ளையர்களுக்குள் கறுப்பர்கள் ‘அசல் மனிதர்கள் அல்ல’ என்று பதியப்பட்டு இருக்கும் ஆழ்மனப்பதிவு கறுப்பர்கள் மீதான ஒடுக்குதலாக மாறுவதைப் போல ஆண்களுக்குள் பெண்கள் ‘அசல் மனிதர்கள் அல்ல’ என்று பதிவாகியிருக்கும் ஆழ்மனப் பதிவு பெண்கள் மீதான ஒடுக்குமுறையாக மாறுகிறது.
விஜயா, பெண்ணுக்கு ‘நிறம் இருந்தால் அவளது எட்டுக் கோணலையும் மறைந்து விடும்’ என்று சொல்பவளாகவும் அதில் நம்பிக்கை கொண்டவளாகவும் இருக்கிறாள். உண்மையில் அவளது சிந்தனை தான் கோணலாக இருக்கிறது. அவளது சொற்கள் நிறமுள்ள பெண்களைச் சிறப்பிப்பது போல தெரியும். ஆனால் அது கறுப்பாக இருக்கும் பெண்களின் மீதான தாக்குதல். இந்த இடத்தில் தான் பனான் கச்சிதமாகப் பொருந்துகிறார். அவர் வெள்ளையர்களின் நிறங்களை மதிக்காதீர்கள். அது உங்கள் கறுப்பு நிறத்தின் மீது நீங்களே வெறுப்புக் கொள்ளும் படியாக உங்களை மாற்றும் என்பதாகச் சொல்கிறார். அப்படிச் சொல்லும் இடங்களில் Colour, Colourless என்று இரண்டு சொற்களை அழுத்தமாகப் பயன்படுத்தி அதன்வழி, கறுப்பர்களை ‘நிறமுள்ளவர்கள்’ என்றும் வெள்ளையர்களை ‘நிறமற்றவர்கள்’ என்றும் குறிப்பிடுகிறார். இதில் வெள்ளையர்களை நிறமற்றவர்களாகச் செய்த அடையாள நீக்கம் முக்கியமானது.
விருப்பங்களை அப்புறப்படுத்துதல்
பெண்களின் சமூகத் தகவமைப்பைத் தடுப்பதற்காக அவர்களுக்குப் பிடித்தமான விஷயங்களைக் கண்காணித்து அதைத் தொடரவிடாமல் துண்டித்துவிடுவது வழமையாகத் தொடர்கிறது. நாவலில் குழந்தைகள் குதிரை வண்டியில் பள்ளிக்குச் செல்கிறார்கள். அந்தப் பயணம் அவர்களுக்குப் பிடித்தமானதாக மாறும் போது வேனுக்கு மாற்றப்படுகிறார்கள். வேன் பிடித்தமானதாக மாறும்போது பள்ளிக்கு அனுப்பப்படாமல் நிறுத்தப்படுகிறார்கள். உனக்குப் பிடித்தமானது உன்னுடைய தேர்வாக இருக்கக் கூடாது என்பதன் வெளிப்பாடு அது.
வாணிக்குத் தாவணி போட வேண்டும் என்று வீட்டுப் பெண்கள் அங்கலாய்க்கிறார்கள். அதனால் வாணிக்குத் தன் உடலின் செழிப்பு எல்லோரையும் அச்சுறுத்துவதாகவும் தன் சுதந்திரங்களுக்குத் தடையாகவும் மாறி வருவதை எண்ணி நடுக்கம் ஏற்படுவதாக ஒரு விவரிப்பு உண்டு. வாணியின் நடுக்கம் அவளால் அவளுக்காக உருவாக்கிக் கொண்டதல்ல. வெளியிலிருந்து திணிக்கப்பட்டது. ஆனால் அந்தத் திணிப்பை அவளே உருவாக்கிக் கொண்டதாக அவளைச் சமூகம் தந்திரமாக நம்ப வைத்திருக்கிறது.
கறுப்பர்கள் படிக்கிறார்கள், முன்னேறுகிறார்கள், அதிகாரத்திற்கு வருகிறார்கள், ஆனாலும் வெள்ளைச் சமூகம் கறுப்பர்களைக் குறித்த மதிப்பீட்டை முன்னமே உருவாக்கி வைத்திருப்பதால் அவர்கள் மீதான ஒடுக்குதலை எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் வெள்ளையர்களால் நிகழ்த்த முடிகிறது என்கிறார் பனான். அதுபோலவே ஆண்களால் ஏற்கனவே உருவாக்கி வைக்கப்பட்டிருக்கும் பெண் மீதான பார்வைகள், பெண்ணின் சுயவிருப்பங்களுக்கும் தேர்வுகளுக்கும் தடை விதிப்பதோடு அப்படியான சிந்தனைகளைக் காலிசெய்வதை ஒத்ததாக இருக்கிறது. இதற்கான சான்றுதான் பெண்களின் ஆசைகளையும் விருப்பங்களையும் அழித்து அவர்களுக்குப் பதினைந்து வயதில் திருமணம் செய்து வைப்பதும் அவர்களின் அம்மாக்கள் 35 வயதில் பாட்டி ஆவதுமான சித்திரிப்பு. அதை அஞ்சாங்கல் காலத்தின் என்னுரையிலும் உமா மகேஸ்வரி சொல்லியிருக்கிறார்.
ராஜேஸ்வரியின் மகன் காதல் திருமணம் செய்து தன் மனைவியை வீட்டுக்கு அழைத்து வருகிறான். அதை ஏற்றுக் கொள்ள முடியாத ராஜேஸ்வரி, ‘ஆம்பளப்புள்ள தானே தண்ணி மோந்து குடிக்கக்கூடாது. எச்சில் தட்டைக் கழுவிப் போடக்கூடாது, தினமும் முட்டையோ, கறியோ ரத்தப் பொறியலோ கட்டாயம் அவனுக்கு விசேசமாகச் சமைக்க வேண்டும். அவன் எது கேட்டாலும் அடுத்த நிமிடம் வாங்கிக் கொடுத்தாகணும், வெளியூருக்கு அனுப்பிப் பெரிய படிப்புப் படிச்சு, என் மகன் ராசாவா வளர்ந்து….’ என்று நினைத்ததெல்லாம் வீணாகப் போகிவிட்டதாகப் புலம்புகிறாள். இந்த எண்ணம் அவளுக்கு எப்படி வந்தது? இந்தக் கூப்பாட்டுக்கெல்லாம் சாதி தான் காரணமாக இருக்கிறது.
ராஜேஸ்வரியின் தங்கை வினோதினி தனது கணவனை விடுத்து கொழுந்தன் குணாவைக் கூடிக் கருத்தரிக்கிறாள். சம்பிரதாய முனகலோடு சத்தமில்லாமல் அந்தக் கரு ராஜேஸ்வரி ஏற்பாட்டினாலே தான் கொல்லப்படுகிறது. கணவனின் இறப்புக்குப் பிறகு தமது சாதியைத் தாண்டி கிருஷ்ணசாமி நாயக்கருக்கு வினோதினி மறுமணம் செய்யப்படுகிறாள். ராஜேஸ்வரியின் மாமனார் பொன்னையாவுக்குத் தொடுப்பு இருக்கிறது. அவளது கொழுந்தன் செல்வம் தனது வீட்டுக்கு வேலைக்கு வந்த பெண்ணைப் பலவந்தமாக உறவுகொள்கிறான். இவ்வளவையும் சத்தமில்லாமல் கடக்கும் ராஜேஸ்வரிக்குத் தனது மகன் கீழ்ச்சாதிப் பெண்ணைக் காதலித்துக் கொண்டு வந்தது மட்டும் கொந்தளிப்பைத் தருகிறது. அதை அவளுக்குள் சாதி குறித்து பதியவைக்கப்பட்டு இருக்கும் ‘உள்வாங்கப்பட்ட சாதியவாதம்’ (Internalized Castism) எனலாம். காலனியச் சூழலில் ‘உள்வாங்கப்பட்ட இனவாதம்’ (Internalized Racism) என்பார் பனான்.
அஞ்சாங்கல் காலத்தில் வரும் பெண்களைப் பற்றி என்னுரையில் குறிப்பிடும் உமா மகேஸ்வரி கணவர், குழந்தை, நகை, நட்டு, மாமியார், நாத்தனர் என்று வட்டத்துக்குள்ளேயே சுற்றி வந்தாலும் அது குறித்த புகாரோ, வருத்தமோ இன்றி மாறாத புன்னகையோடு வளைய வருகிறவர்களாகக் குறிப்பிடுகிறார். ஏன் அவர்களுக்கு தங்கள் வாழ்க்கையில் சிடுக்குகள் குறித்து புகாரும் வருத்தமும் இல்லை? அதற்கு எப்படி அவர்கள் பழகிப் போனார்கள்? என்கிற கேள்விகள் பல நூற்றாண்டுத் தகிப்பின் வெளிபாடாக அமைந்திருக்கிறது. பெண்கள் புகாரின்றியும் வருத்தமின்றி வாழ்வதையுமே கலாச்சாரம் என்று சொல்லி அதற்கு அவர்கள் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
சமத்துவத்தின் மீது விருப்பம் கொண்டவர்கள் பெண்கள் தங்களது சடங்கு, சம்பிரதாயங்களைக் கேள்விக்குள்ளாக்கி அதிலிருந்து விடுபட வேண்டும் என்று சொன்னால், அப்படியெல்லாம் விடுபட முடியாது, நாங்கள் நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்று வாழைத்தண்டில் திரி செய்து விளக்குப் போடுவோம் என்று பெண்களே எதிர்க்குரல் எழுப்பும்படியாக அவர்களை ஆக்கி வைத்திருப்பது தான் பனானின் கூற்றுப்படி மனநோயாளிகளின் சமத்காரம்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்புக்கு அருகில் உள்ள அக்கனாபுரத்தைச் சேர்ந்தவர். தற்போது மதுரை மாவட்டம், கருமாத்தூரில் உள்ள அருள் ஆனந்தர் கல்லூரியின் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். நானூறுக்கு மேற்பட்ட சமுதாயம், இலக்கியம், பொருளியல் சார்ந்த கட்டுரைகளை எழுதியுள்ளார். தொல்காப்பியத்தில் பொருளியல் பெறும் இடம், புறனடைக் கோட்பாடு – தொல்காப்பியர் மரபு, புறனடைக் கோட்பாடு – வீரசோழிய மரபு, தமிழ் இலக்கிய வரலாறு (பல புதிய குறிப்புகளுடன் 1970 முதல்…), அவதூறுகளும் புனிதப்படுத்தல்களும் நீர் – நிலம் – சாதி – சாஸ்திரம்’ முதலிய நூல்கள் எழுதியுள்ளார்.








Leave a Reply