Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

கித்தான் நிலம்

ச. முருகபூபதி
ச. முருகபூபதி
February 1, 2026
கித்தான் நிலம்

கித்தான் – 1

தரி இயந்திரத்தின் இயங்குச் சத்தங்கள் பரவி மிக மெதுவாய்க் கூடக்கூட கித்தான் நிலத்தின் இடது மூலையிலிருந்து நுழையும் நடிகையின் உடலில் சுற்றிய கிழிந்து தொங்கும் துணி பெரிய நீண்ட கம்பளத்தை இழுத்து வருகிறது. தரியின் சத்த தாளத்திற்கு ஏற்றாற்போல் உடல் இயங்குகிறது. எதிர்த் திசையின் மறு முனைக்கு வந்து அமரும் அவள் கண் வாய் முகமெனத் துணிகளைக் கட்டுகிறாள். பின் பூச்சியைப் போல மெதுவாய் ஊர்ந்துசெல்ல கம்பளம் தரையிலிருந்து எழுந்து பின் நேர்த்தியாக விரிகிறது. கண்களில், வாயில் நெய்த கிழிந்த துணிகள் ஒட்டப்பட்டு நூல்கள் பிரிந்து தொங்கும் தோற்றம், அவர்கள் உடைகளோ தனித்தனியான ரிப்பன்கள்போல நீண்டு எல்லோரது ஆடைத் துணியையும் இணைத்த கம்பளமாகி அதனை நெருங்குகிறார்கள். எல்லோரது விரல்களும் கிழிந்த துணிகொண்டு சுற்றப்பெற்று காயங்களைப்போல தோற்றம் கொண்டு தம்மிடம் விரல்களற்ற நிலையை நடிப்பில் வெளிப்படுத்துதல். வெவ்வேறு இடங்களிலிருந்து நெசவாளர்களைப் போல் தோற்றம் கொண்ட பலரும் விரல்களற்ற காயக் கட்டுக்களுடன் நுழைதல். எல்லோரும் சடங்கு நிலையில் அன்பை வெளிப்படுத்துதல்.

பூச்சிநிலையில் இருந்த பெண் பாடலை ஒலியில் முனகி தம் உடம்பிலிருந்து கம்பளத்தைப் பிரித்து நெசவாளர்களிடம் ஒப்படைக்க அவர்கள் எல்லோரும் ஆவேச நிலையில் கரங்களில் இருந்த காயக் கட்டுகளை அவிழ்ப்பது அதீத நிலையில் நிகழ்கிறது. பெண்ணோ பெரிய வெங்கல மணிகள் இரண்டுடன் இவர்களை வேகவேகமாகச் சுற்றுகிறாள். கட்டு அவிழ்ப்பதும் பெண் மணிகளுடன் சுற்றுவது விவேகமடைய அவிழ்ந்த காயக் கட்டுகளின் இடத்திலிருந்து இறகுகள் உதிர்கின்றன. விரல்களில் ஒழுகும் வெண்நூல்கள், பெண் மணிகள் குழுக்கிய நிலையில் இருளில் மறைந்ததும் நிற்காமல் கேட்கும் மணி ஒலி. கம்பளம் தரையிலிருந்து எழுந்து எல்லோரது உடலிலும் பிணைக்கப்பட்டு எல்லாப் பக்கங்களுக்கும் போக முயற்சித்துப் பல்வேறு படிமங்களை நிகழ்த்திக் கம்பளம் விரித்த நிலையில் வெளியேறுகிறது. கித்தான் நிலமெங்கும் வெவ்வேறு இடைவெளிகளில் வீழ்ந்துகிடக்கும் நெசவாளர்கள். அவர்களின் கரங்களிலிருந்து ரிப்பன் போல வெண்பழுப்புத் துணிகள் பிரிந்து கிடக்க அதன் உள்ளே அசையும் உடல்கள். மெல் இருளில் மெருன் சிகப்புத் துணியைப் பெண்ணொருத்தி இழுத்துச் சென்று மறைய நிலம் செந்நிறம் கொண்டு பின் துணியும் மறைய பழுப்பில் உறைந்த நிலம் இருளாகிறது.

கித்தான் – 2

கீழே வலதுபக்கமிருந்து நுழையும் சாம்பல் நிற ஓடையென ஊர்ந்து போகிறது. மேலே ஆகாய நீலம் நகர்ந்துபோக மேலும் மேலிருந்து பறவைப் பொம்மைகளைப் பிடித்த பெண் கரங்கள் அசைந்து அசைந்து மறைதல்.

மௌனத்தில் சில நிறமாற்றங்கள்.

இடதுபக்கமிருந்து இடுப்பில் கந்தல் துணியும், கந்தல் தலைப்பாகையும் அணிந்த வெற்று உடம்புக்காரர்கள் பஞ்சாரத்தில் முகங்கள் பதித்துத் தூக்கி வருகிறார்கள். பஞ்சாரத்திற்குள் இருந்து வெளியே எட்டிப் பார்க்கும் முகத்தில் நீண்ட காகிதங்கள் துணிகளாகத் தைக்கப்பட்டு வாயசைப்பில் தலை குலுக்கியபடி வருதல். அதேபோன்று எதிரே கண்ணாடிப் படிமம் போல இதேபோன்ற செயல் பஞ்சாரத்துடன் நிகழ்கிறது. இரு குழுக்களும் பஞ்சாரத்தை ஒட்டிய நிலையிலேயே செய்யும் சில செயல்களும் எழுப்பும் ஒலிகளும், ஆவி துதிப்பாடலை நினைவுறுத்துகிறது. தங்கள் உடையிலிருந்து கடித்துக் கிழித்த சிறுசிறு துணிகளைp பஞ்சார ஓட்டைகளில் கட்டுவது ஒருவித நடன அசைவில் நிகழ்கிறது. எதிரெதிரே இரு பெண்கள் வாயில் மலர்க் கொத்துக்களைக் கவ்வியிருக்க நெழிந்து கரிபடிந்த ஈயப்பானைகளைத் தட்டித்தட்டி கண்ணாடி போல நிற்கின்றார்கள். இரு பெண்களுக்குப் பின்னே நீள் அங்கியைப் போல துணி உருண்டு போதல். கவ்வியிருந்து மலர் கொத்துக்களை நிலத்தில் வைத்துப் பானையைத் தலையில் மாட்டி சத்தம் எழுப்பியபடி மலர்களைச் சுற்றிச்சுற்றி அதனை எடுத்துப் பானைத் தலை நோக்கி நீட்டிக் கொடுத்து தலைகளாட்டி முத்தமிடுதலைப் பானை முகத்தோடு செய்கிறார்கள். இடையே இரு பஞ்சாரக் குழுவினரும் வேகவேகமாக தம் ஆடைத் துணியை நூல் நூலாய்க் கிழித்துக் கட்டுவது முனகல்களுடன் வேகமடைகிறது. மெதுவாய்த் தலையிலிருந்த பானையை இருவரும் கழற்றி வயிற்றுப் பகுதியில் வைத்து அதன் மேல் துணி போர்த்தி பின் இடுப்பில் இறுக்கிக் கட்டவும் இருவரும் கர்ப்பஸ்திரீகளாக மாறுகிறார்கள். இரு கையையும் நீட்டிய நிலையில் நுழையும் கண்தெரிய சிறுமி. பெண்கள் இருவருக்கும் தன் கை விரல்களையே தூரிகை போலும் நிலத்தைக் குழைக்கப்பட்ட வருணம் போலும் பாவித்து ஒப்பனையிட்டு முடித்து இருவருக்குப் பின்னே நீண்டிருக்கும் துணியால் அவர்கள் உடலைச் சுற்றிச் சுற்றவும் இருவரும் சிற்பமாக உறைந்து நிற்கிறார்கள். இரு சிற்பத்தின்மேல் முகமுரசி முத்தமிட்டும் நிலத்தில் எதனையோ தேடிய வண்ணமிருக்கப் பஞ்சாரக் குழுவினருக்கு உள்ளிருந்த உருவம் கடித்துக் கொடுக்கும் காய்ந்த இலைகளைப் பூமியெங்கும் பதிக்கிறார்கள். பதித்த இலைகள் சிறுமியை நெருங்கவும் அவள் மரம், தானியம் குறித்த பாடலை நீட்டிய குரலால் பாடும்போது இலைகள் பதிப்பது வேகம் கொள்கிறது.

இலைகள் இடைவெளிகள் விட்டும் வெற்று வெளியை முன்னிறுத்தியும் வைக்கப்படுகின்றது. இலைகள் வைப்பவர்கள் கித்தான் நிலமெங்கும் பதித்தபடியே மறையவும் கண்தெரியாச் சிறுமியின் பாடல் ஒலியில்மாறி வெளியெங்கும் தேடி அலைவடைகிறாள். இரு பஞ்சாரமும் உயரே எழுந்து எழுந்து அசைதலுடன் ஊர்ந்து போவது மெலிதாய் இருக்க சிறுமி எல்லாப் பக்கமும் ஓடித் தேடி விழுந்தபடியும் நடுவில் நின்று மெல்லிய தன் ஒலியால் முனகுதலுடன் பச்சைநிறம் பரவி ஒற்றைச் சுடருடன் சிறுமி கடந்து போகிறாள். இருளில் கேட்கும் சருகுகளின் சத்தம்.

கித்தான் – 3 :

இடது கீழ் மூலையில் எழுதிய காகிதங்கள் கட்டுக் கட்டாக மூன்று கட்டுகள் ஃ வடிவத்தில் வைக்கப்பட்டிருத்தல். அதை இரும்பு ஆணிகள் கொண்டு சிலுவையென அடிக்கப்பட்டிருத்தல். அதனைச் சுற்றி பாதி எரிந்த காகிதங்களும், சீல் வைத்துப் பூட்டப்பட்ட சில புத்தகங்களும் அவற்றைச் சுற்றி உடைந்த பல எழுத்துக்கள் சிதறிக் கிடக்கின்றன. ஆணியடிக்கப்பட்ட காகிதங்களிலிருந்து நீளும் கயிறுகள் தனித்தனியே மூவரைப் பிணைத்திருக்கின்றன. அவர்கள் வெவ்வேறு இடங்களில் சுருண்டு கிடக்கிறார்கள். மூவரின் முகத்தில் எழுதாப் புத்தகம் பதிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளி விட்டு கேட்கும் தோலிசை அதிர்வில் நிலத்தின் மையத்தில் வைலட் நிலம் திடீரென ஊர்ந்து ஓடி மறைய இருகால் ஊனமான சிறுமி கக்கத்தில் கட்டை வைத்து மெதுவாக வருதல், அவள் பின்னே ஒரு கால் ஊனமான இரு பெண்கள் ஒரு கையில் பிடித்த கம்பு கொண்டு மூவருமாக ஒரே தாளத்தில் நுழைதல். சிதறிக்கிடக்கும் எழுத்துக்களைச் சுற்றி நின்று நீண்ட அமைதியில் பார்த்துக்கொண்டிருக்கக் கயிற்றில் பிணைக்கப்பட்ட மூவரும் முகத்தில் பதித்த புத்தகத்துடன் நிலத்தைக் கீறிய விரல்களால் புத்தகத்தை எழுதுவதை ரகசியமாகச் செய்கிறார்கள். சிறுமியும் இரு பெண்களும் கீழே அமர்ந்து தம் மார்புக்குள்ளிருந்து சில எழுத்துக்களையும் எடுத்துக் கீழே வைத்து உடைந்த எழுத்துக்களை ஒட்டி ஒட்டி நெளிவான பாதைக்கு வெளிவிட்டு நிலமெங்கும் எழுத்துக்களை வைக்கிறார்கள். கயிற்றில் பிணைக்கப்பட்டோர்கள் வெளி முழுவதும் மூவரும் ஒட்டவைத்த முழு வார்த்தைகளால் சப்தம் எழுப்பி அலைகிறார்கள். இடையிடையே மூவரிடமும் சென்று முகத்திலிருந்த புத்தகத்துடன் நிலத்தில் முட்டி முட்டி எழுந்தும் வீழ்ந்தும் ஓடியும் திரும்ப முட்டியும் செய்யும் செயல் லயமாகக் கனவுகளைப் போல நிகழ்கிறது. சிறுமியும் இரு பெண்களும் உடைந்த எழுத்துக்களை நிலமெங்கும் வைப்பதும் ஆணியடிக்கப்பட்ட கைப்பிரதிகளுக்குள் வார்த்தைகளைத் தேட முயற்சிப்பதும் கயிற்றை உதறி உதறி சில வரிகளை உச்சக் குரலில் வாசிக்க இடையில் மூவரும் நிலத்தில் விரலால் எழுதிய மண் வரிகளின் ரேகைகளை முகத்திலும் உடலிலும் பூசியபடி பைத்திய நிலையில் வாசித்து பின் அழுகும், ஏங்கும் குரலில் வாசிக்க பெருத்த தோலிசை அதிர்வில் குண்டடிபட்டதைப் போல மூவரும் வீழ்ந்து உரைகிறார்கள். சிறுமியும் பெண்களும் மௌனத்தில் எழுந்து மூன்று ஆண்களின் முகத்தில் ஒட்டிப் பிடித்த எழுதாப் புத்தகத்தைத் தனித்தனியே விளக்கி எடுக்கவும் அசையாதிருக்கும் உடலை எழுத்துக்களால் அவர்களின் மீது அடுக்கி அடுக்கி அஞ்சலி செலுத்துவதைப் போல் தொடரும் செயல். மூவரின் முகங்களும் எழுத்துக்கள் பரவி தையலிடப்பட்டிருக்கின்றன. சிறுமி பெண்கள் கைப்பிரதியில் அடிக்கப்பட்ட ஆணிகளைப் பற்களால் கடித்தும் கைகளால் பிடுங்கியும் பூட்டிய புத்தகங்களை உடைத்துத் திறந்தும் புத்தகமேந்திக் கட்டைகளை ஊன்றி ஊன்றி சோகத்தில் எழுந்து வெளியேறும்போது அவர்களைப் பின்தொடர்ந்து நீல நிறத்துணி வெளியெங்கும் பரவி நகர சுடப்பட்ட மூவரும் உயிர்ப்புற்றதைப்போலக் கைப்பிரதிகளை எதிர்த் திசைக்குத் தூக்கி நீட்டவும் காகிதங்கள் காற்றில் பரவிப் பறக்கின்றன. சிறுமி மட்டுமே தூக்கிய கரத்தோடு நடுவில் நின்று சிதறிய கைப்பிரதிகளைக் குனிந்து பொறுக்குகின்றாள். காகிதங்களின் ஓசைகளில் இருள் பரவுகிறது.

கித்தான் – 4 :

கித்தான் நிலத்தின் நடுவில் பெண்ணொருத்தியின் கூந்தல் பரவியிருக்க அவளது கர்ப வயிற்றைச் சுத்தி கிளை கிளையான பாதைகளாய்க் கிளம்பும் சில நிறத் துணிகள். இடது மூலையில் கூட்டமான பழமையின் ரேகை பதிந்த தொன்ம முகங்கள். வலது மூலையில் அழுக்கு மூட்டைகள் கூட்டமாய் அடுக்கப்பட்டிருக்கின்றன. அதன் நடுவில் முகத்தில் சாம்பல் பூசி கைகள் நிரம்ப வளையல் அணிந்து சலங்கைக் கால்களுடன் உடல் உதர அரற்றி மென் குரலால் ஒலிப்பாடலில் சுருண்ட நிலையில் வெவ்வேறு உயிரினமாகிறார்கள். பின் குதித்துச் சுருண்டு வீழ அழுக்கு மூட்டை உருவங்கள் அரவாணி நடிகனைத் தழுவித் திரிவதும் சேர்வதுமான நாட்டிய நிலை. நடுவில் கர்ப்ப ஸ்திரியின் முனகல்களுக்குப் பதில் முனகல்களாக அழுக்கு மூட்டை உருவங்கள் குழுவாய் எழுப்பும் ஒலி முனகலில் ஊர்ந்த நிலையில் முன்னேறிப்போகும் அரவாணி நடிகனைப் பின்தொடர்ந்து ஜீவராசியென நகரும் அழுக்கு மூட்டைகள் கர்ப்பஸ்திரீயின் விலகிய தொடைக்கு நடுவிலிருந்து பிறப்பு வாசல் நோக்கித் தன் இடுப்பில் கட்டியிருந்த சுருக்குப் பையிலிருந்து தானியங்களை இரு கைகளால் அள்ளி வானம் பார்த்து முனகி பாடிக்கொண்டிருக்க பிறப்பு வாசல் நோக்கிக் கீழே துணி விரித்து இழுத்துப்போகும் இரு துணிமூட்டை உயிர்கள். பின் அவளைச் சுற்றி வெவ்வெறு வெளியில் நிற்கும் துணி மூட்டை உயிர்கள் குனிவதும் நிமிர்வதுமான செய்கைகளில் தானியத்தால் கோடுகீறி கர்ப்ப வயிற்றில் காது பதிக்கவும் துணி மூட்டைகள் திரும்பவும் நெருங்க துணிக்குள்ளிருந்து முகமூடியிட்ட முகங்கள் தலை நீட்டி அவளைச் சுற்றி காது பதித்து முனகளில் தொடரும் மொழிப் பாடல்.

கர்ப்ப ஸ்திரி தன் உடல் மிருக நிலைக் கொண்டதைப்போல ஓங்கிய மூச்சிறைத்த குரலில் ஒலியால் பாடவும் துணி மூட்டைக்குள்ளிருந்து வெளியேறியவர்கள் மூட்டைத் துணியை நீண்டு பரவும் ஆடையாகப் போர்த்திக் கொள்கிறார்கள். பலரும் பல முகமூடிகள் மாட்டி சில மாடுகளும் துணையிருக்க அவளது பெரு ஒலியிலிருந்த கர்ப்ப வயிற்றுக்குள்ளிருந்து பிரசவிக்கும் உதிரப் பறவையினை வானத்தை நோக்கித் தூக்கி அதன் முகத்தினை அவள் உதட்டில் பதித்து எடுத்துத் தரையில் வைக்கவும் மற்ற முக மூடிகள் அவள் உடலைத் தடவித் தடவி வாஞ்சை கொள்கிறது. சூழ்ந்திருந்த முகமூடிகள் வானத்தையும் அவளையும் பார்த்தபடி மௌனம் காக்கிறது. சில நிமிடங்களில் விரித்த வெண் துணியில் பறவை வைத்துத் தூக்கிக் குழுவாய் அரவாணி நடிகனைப் பின்தொடர்ந்து போக எதிரே தானியக் கதிர்க்கட்டுகளை ஏந்திவரும் கண்தெரியாச் சிறுமி அவளைப் பின்தொடர்ந்து ஒவ்வொரு கோமாளிகளாய் ரெக்கைகட்டிய நிலையில் நுழைந்து கர்ப்ப ஸ்திரீயின் உடலைச் சுற்றி கரம், முகம் பதித்துச் சிறு முனகலில் சிறுமியின் தலைமைக்கும் கதிர் நடுவதற்கும் முனகல்கள் தாளமாயிருக்க மிக மெதுவாய் எழும் கர்ப்ப ஸ்திரீ ஊர்ந்த நிலையில் வெவ்வேறு பாதைகளுக்குச் செல்லும் முகமூடி உருவங்கள். கண்தெரியாத சிறுமியும் பெண்ணும் நிலமாய் நிற்கிறார்கள். இரண்டு பக்கமும் எதிரெதிரே கூட்டமான மெழுகுச் சுடர்கள் எட்டிப் பார்க்கச் சிறுமியும் பெண்ணும் அதை நோக்கிய பயணத்தைத் தொடர்கிறார்கள்.

கித்தான் – 5

சிறுமியும் பெண் ஒருத்தியும் எதிர் எதிர்த் திசையிலிருந்து சில வர்ணத் துணிக் கூட்டத்தை இழுத்து வருகிறார்கள். நிலத்தின் நடுவில் சுருட்டிவைக்கப்பட்ட கித்தான். இருவருக்குப் பின்னே நீண்டுவரும் வர்ணத் துணிகள். இருவரும் கித்தானை விரித்து வரைகின்றார்கள். சுற்றியுள்ள சுவர்களில் தொங்கும் திரைச் சீலைகளில் ஊர்ந்து செல்லும் ஜன்னலின் நிழல். பின் திரைச்சீலைகள் மூச்சு விடுவதைப் போல முன்னே நீண்டு வந்து பின் சுவர்களில் அடங்குகிறது. நடுவில் மட்டும் வட்ட ஒளி. சுற்றியிருக்கும் சுவர்த் திரைகளில் நிழல்களும் உருவங்களுமாக நிற்க எல்லோரது கைகளிலும் வட்ட, நீள் வட்ட மரச்சட்டங்கள். மெல் ஒலியில் குழுவாய் நகர்கிறார்கள். திரும்பவும் சிறுமியும் பெண்ணும் கித்தானில் வளையங்கள் வரைந்து அதனுள் மனித உருவங்கள், கித்தானுக்கு மட்டுமே பட்ட ஒளி, அதனைச் சுற்றம் இருவர். இருவரைச் சுற்றும் வட்ட மரச் சட்டகம் குறித்த முகமூடிகள் மாட்டிய பாத்திரங்கள், எல்லோரது முகத்திலும் துணி சுற்றியிருக்கத் தலைக்குப் பின்னே அவை கூந்தல்போல நீண்டு சுவரில் இணைக்கப்பட்டுள்ளது. எல்லோரும் வட்டமிடுவது தாளகதியில் நிகழ்கிறது. வட்ட அசையில் குழுவினர் இருளில் மறைய சிறுமியும் பெண்ணும் கித்தானைச் சுற்றிக் கீழ்ப்பக்கம் ஒன்றாய் வெளியேறுகிறார்கள். அவர்களைப் பின்தொடரும் வர்ணத் துணிகள் நீரைப்போல ஊர்ந்து செல்கிறது. அந்தரத்தில் கசியும் ஒளியிலிருந்து நிலம் நோக்கி இறங்கிவரும் வட்ட வடிவ வலை ஐந்து இடைவெளிவிட்டு கித்தான் வெளியெங்கும் இறங்கி நிற்கிறது. ஏற்கெனவே கீழே ஐந்து பெண் பாத்திரங்கள் சுருண்டு இறக்க, வட்ட வலை அவர்களை உள்வாங்கிக் கொள்கிறது. தரையில் பரவும் நீலநிற ஒளியில் வலைக்குள் இருக்கும் பெண்கள் ஒருவரையொருவர் கரங்களை நீட்டிப் பேச முயற்சிக்கிறார்கள். தாங்களே தம் உடல் வலையுடன் பேசுவதைப் போன்ற செய்கைகள், சுற்றியிருக்கும் சுவர்த்திரைகள் நிலத்தில் இருக்கும் வட்ட வலைகளை நோக்கி நீந்தி வருகிறது. வரும்போதே நின்று, நகர்ந்து, தயங்கி வடிவங்கள் பலவற்றை உருவாக்கியபடியே வருதல், திரைக்குப் பின்னிருந்து நீளும் வெண்ணிறக் கைகள். லங்கோடு கட்டிய வெண் சாம்பல் படிந்த உருவங்கள். ஒவ்வொரு வலைக்குள் இருக்கும் பெண்ணோடு நாட்டிய அசைவுப் பாவனையில் உடலால் உரையாடுதல். பின் வெவ்வேறு திசைகளுக்கு ஓடி வெற்று வெளியுடன் பேசி பின் வட்ட வலையை நெருங்கித் தொடுவது போல திரும்பவும் விலகி வேறுபக்கம் ஓடுகிறார்கள். பின்னர் தரை தொட்டு வெற்று வெளிதடவி கை நீட்டியபடியே வலையின் அருகில் நெருங்கியும் விலகியும் ஓடி சுவர்த் திரைகளைத் தொட்டு திரும்ப வலையைச் சுற்றி ஓடி சுவர்த்திரைக்குப்பின் மறைந்துகொள்ள வட்ட வளையம் பலநிறத் தோற்றம் கொள்கிறது. தனித்தனியான வட்ட ஒளிக்குள் ஒலிப்பாடலுடன் உள்ளே இருப்போர் நடிக்க வட்ட ஒளி மங்கி சுவரிலிருந்த வலையை நெருங்கும் திரைச்சீலைகள் ஆடியபடியே அசைந்து ஐந்து வட்ட வலைகளும் நடுவில் ஒன்றாய் நெருங்க ஒரு வட்ட வளையமாகிறது. சுற்றிப்படரும் நீல ஒளிக்குள் அசையும் நீண்ட திரைகள், ஒவ்வொரு ஒளியாய் மறைய நான்கு திசை மூலைகளிலிருந்து தனித்தனியே எட்டிப்பார்க்கும் சுடர்கள் அசைந்து அசைந்து அணைகிறது.

கித்தான் – 6

ஒரே தாளகதியில் நீள நெற்றுக்களில் விதைகள் குலுங்க, இரு கைகளையும் நீட்டியபடி அண்ணாந்து பார்த்துக் குழுவாய் நுழையும் நடிகர்கள். அவர்கள் நின்று விதைகள் குலுக்கி மூச்சுவிட்டு காற்றை ஊதித்தள்ளி சில நேரம் குதித்த படியும் கித்தான் நிலமெங்கும் அலைகிறார்கள். பின் குழு தனித்தனியே பிரிந்து திடீரென ஒன்றாய் வட்டமாகக் குனிந்து கூடிய உடல்களுடன் நெற்றுக்கள் குலுக்கி அண்ணாந்தும் குனிந்தும் குலுக்கி குரல் சத்தம் எழுப்பித் தனித்தனியே பிரிந்து வெவ்வேறு இடங்களுக்குள் சிதறி ஓடி மறைகிறார்கள். வெவ்வேறு பக்கமிருந்து தலையில் போட்டோ ஃபிரேம்களோடு தலைகவிழ்ந்து குப்புறச் சுருண்டு விழும் ஒருவன். அவனை ஒட்டிய நிலையில் அவனைப் போன்று பலரும் செய்கின்றார்கள். ஒவ்வொருவரும் போட்டோ ஃபிரேமுடன் விழும்போது நெற்றுக்கள் குலுங்கிக்கொண்டிருக்க இடைவெளி விட்டுக் கேட்கும் தனித்த தோலிசை அதிர்வு. எல்லோரும் குழுவாய் இணைந்து பூச்சியெனத் தலைகவிழ்ந்த நிலையில் போட்டோக்களை முதுகில் வைத்துப் பின் நிலத்தில் குத்தி ஒரே தாளகதியில் ஊர்ந்து போகின்றார்கள். அவர்களின் லயத்திற்கு ஏற்றாற்போல கித்தான் வெளி பயன்பாடு கொள்கிறது. திரும்பத் துவங்கிய இடத்திற்கு வர முயற்சிக்கும்போது ஊர்ந்த நிலை பாதி குனிந்த நிலையாக மாறித் தொடர்கிறது. எல்லோரும் போட்டோக்களைப் பாதித் தரையில் கவிழ்த்த நிலையில் கூட்டொலியில் சில நொடி பாடியபடி வானத்தைப் பார்த்த எல்லோரது முகங்களும் ஒரே நிற முகமூடியாய் ஒரே உணர்வில் இருக்கின்றன. எல்லோரும் போட்டோக்களை அணைத்தபடி வட்டமாக உடல் நடிப்பில் பல வடிவங்களை உருவாக்குகிறார்கள். வலது பக்கமிருந்து இடுப்பில், கைகளில் துணிகள் கட்டப்பட்டு இழுத்துவரும் சிறுமியின் நீள் ஒலிக் குரலுக்கு முகமூடிக்கூட்டம் அமைதியடைந்து போட்டோக்களைத் தங்களுக்குள் பரிமாறிக்கொள்கிறார்கள். வட்டம் இருபாதியாகக் களைய குரல் ஒலியுடன் துணிகள் பின்வர கிளம்பிப்போகும் சிறுமியைப் பார்த்தபடி கழுத்தில் போட்டோக்களை மாட்டி குனிந்தபடி இரக்கை போலக் கை நீட்டியும் மடக்கியும் நடந்தும் ஒரே நேரத்தில் எல்லோரும் நீண்டு செல்லும் மறுமுனையில் முகம் பதித்து அணைத்திருக்க துணிகள் இவர்களை விடுத்துப் பிரிந்து தனியே கடந்து செல்லவும் எல்லோரும் தம் மார்புக்குள்ளிருந்து (Pan flutes) ஃபேன் ஃப்லூட்சை எடுத்து வாசித்தபடி போட்டோக்களை கித்தான் நிலமெங்கும் வானம் பார்க்க வைக்கிறார்கள். போட்டோக்களின் கீழ், மேல்பக்கம் அமர்ந்து போட்டோவையும் வானத்தையும் பார்த்தபடி இசை வாசித்துக்கொண்டிருக்க ஒளியில் மாறுகொள்ளும் நிலவெளி. மிக மெதுவாய்த் தொடரும் வாசிப்பில் புழுவென நெளிந்து களைந்து விரிகிறார்கள். பச்சை ஒளியில் வாசிப்புத் தொடர்கிறது. நிறங்கள் மாறி நீல ஒளி மறைய கழுத்தில் போட்டோ மாட்டிச் சுடருடன் நுழையும் சிறுமி. தொடரும் ஃப்லூட் இசை தங்களுக்குள் பேசியபடி இருளை வரவைக்கிறது.

கித்தான் – 7

நான்கு மூலைகளிலிருந்தும் நீண்ட கறுப்புத் துணியை தலையில் மாட்டி குனிந்த நிலையில் கித்தான் நிலத்தில் பிரவேசிப்பவர்கள் மெதுவாய் ஊர்ந்து போகிறார்கள். நிறம் மாறும் ஒளி பல வடிவமெடுக்கின்றன. நான்கு பேரும் சந்தித்துக் கடந்து அமரும் போது நிலப்பரப்பு பலநிலை கொண்டு அசைகிறது. மலைவடிவில் இருக்கும்போது கறுப்பு நிலத்திற்குள்ளிருந்து சிறுமி ஒருத்திப் பிய்த்துக்கொண்டு வெளியே வந்து விழுகிறாள். சுருண்டெழுந்து கறுப்புக்குள்ளிருந்து முதுதாயை நினைவூட்டும் இரு சேலையை இழுத்தபடி மௌனத்தில் வெளியேற கறுப்பு நிலப்பரப்பு வெவ்வேறு வடிவம் கொள்ள சிறுமி மறைந்த பின்பும் சேலைகள் நகர்ந்துகொண்டிருந்தன. சிலநொடிகளில் கறுப்பு நிறம் உயர்ந்து கறுப்புத்துணி மெதுவாய்ப் பின்னோக்கிப் போவது நீரெனத் தோற்றம் கொள்கிறது. துணிக்குள்ளிருந்த உருவங்களின் உடல் பழைய துணியால் சுற்றப்பெற்று உடலெங்கும் பூட்டுக்கள் மாட்டப்பட்டுள்ளன. நால்வர் கால்களிலும் பெரிய பூட்டு இரும்புக் குண்டைப்போல் தொங்குகிறது. முகம், கை, கால், உடல் எனப் பலநிறக் கயிறுகளால் கட்டப்பட்டு நெடுநாள் தோற்றம் கொள்ளும் நான்கு உடல்களும் பெண்களாய் இருக்கின்றன. தொங்கும் பூட்டுக்கள் தொந்தரவாய் இருக்க உடலை உதறி வெவ்வேறு பக்கம் நின்று சில நொடி அமைதியில் அதனையே தொடர்கிறார்கள். காலில் சுளகுப் பாதத்துடன் உலக்கைச் சுற்றிவரும் வயோதிக மூதாட்டிகள். எல்லோரையும் வட்டமிட்டு ஆயுதமென எல்லாவற்றையும் கழற்றிக் கீழே வைத்துவிட்டுக் கண்டாங்கிச் சேலையைக் கோபமாய்த் தூக்கிச் செருகிக் குலவையிட்டு வேகமான மூச்சிருப்பில் திரும்பிப் பார்த்தபடியே வெளியேறுகிறார்கள். விளக்கமாறுகளால் நிலத்தைச் சுத்தம் செய்வதைச் சடங்கு நிலையில் செய்துவரும் முகமூடியிட்ட பெண்கள் ஆவேசமாகத் தூத்துப் பெருக்கியபடி அவற்றை வாளைப்போல நிலத்தில் கிடத்திவைத்து வெளியேற மற்ற நால்வரும் உடலிலுள்ள பூட்டுக்களைத் திறக்க முயற்சித்தபடி உடல் உதறலுடன் அணங்கென மூச்சிறைத்து வெளியெங்கும் நடந்து மறைகிறார்கள்.

மூன்றாவதாக உக்கிரமான முகமூடி மாட்டியவர்கள் நீள் விதை நெத்துக்களை உலுக்கியபடி மருளேறி நால்வரைச் சுற்றி வட்டமிட்டு ஓடியபடி பின் முன்னும் பின்னும் மூச்சிறைக்க நடந்தபடி முகமூடிகளைக் கழற்றி நெற்றுக்களோடு சேர்த்துப் பரப்பிவைத்து நிலத்தில் நெற்றி உரசியபடி நால்வரைப் பார்த்தபடி வெளியேறுதல். நால்வரும் பூட்டுக்களை உடைக்க முயற்சி செய்தல். நிலத்தில் மோதி மோதி விலகி வெறிகொண்டு பிய்த்தெடுக்க முயற்சித்துச் சுருண்டு கீழே விழுகிறார்கள். இப்போது நைந்த தலைப்பாகையும் மண் படிந்த இடுப்புத் துணியும் கட்டி பலர் வாயில் சலங்கைகள் கவ்வித் தலையை உலுக்கியபடி நெருங்கி நால்வரது உடலெங்கும் சலங்கை கொண்டு ஒத்தடம் கொடுத்துக் கை, கால்களில் மாட்டிய வளையல்களைக் குலுக்கி வார்த்தைகளை முனகி சில வார்த்தைகளைப் பூட்டுத் துவாரத்துக்குள் இரகசியமாகச் சொல்லவும் நால்வரில் சிலர் விடுதலையடைவதாக உணர்ந்துகொள்ளவும் வேகவேகமாக வார்த்தைகள் வரிகளாகிப் பூட்டுத் துவாரத்திடம் சொல்லியபடி ஆவேசமாக நடிக்கிறார்கள். பூட்டு மாட்டப்பெற்ற நால்வரும் உடலில் உள்ள பூட்டுக்களை, கயிறுகளை, துணிகளைப் பிய்த்து எறிந்து அணங்குநிலையினை வெளியெங்கும் பரப்புகிறார்கள். நால்வரும் உருமாறிக் கீழே விழுந்து சில வரிகளைத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். இப்போது எல்லாப் பூட்டுக்களும் திறக்கப்பட்டிருக்கின்றன. மற்றவர்கள் சுற்றியிருக்கும் பொருட்களைப் பயன்படுத்தி நடித்து வாயில் சலங்கைக் கொத்துக்களைக் கவ்வி குலுக்கியபடி வட்டமிட்டு வெளியேற வரிகள் பாடலாகிக் கூந்தல் விரித்த நிலையில் தலை உழுப்பும் பெண்கள். இடதுபக்கம் தோலிசை அடித்தபடி நகர்ந்துவரும் சிறுமி எல்லோரையும் தழுவும் இருட்டு.

கித்தான் – 8

கித்தான் நிலமெங்கும் வெண் அழுக்குக் காகிதங்களான பாதைகள் கிளைகிளையாய்ப் பிரிந்து வெவ்வேறு இடங்களுக்குச் செல்கின்றன. நான்கு பக்கமும் திறந்த கதவுகள். அங்கிருந்தும் துவங்கும் அல்லது முடியும் காகிதப் பாதைகள். சுவர்ச் சித்திரங்கள் தெரிய அதன் ஓரங்களில் அசையும் திரைகளுக்குள் உடல் மறைத்து எட்டிப்பார்க்கும் பெண்கள். சுவரின் மேலே உயரத்தில் தூரிகையால் வரைந்துகொண்டிருக்கும் உயரமான ஒல்லியான கறுப்பு உடையிட்ட பெண். முகம் கைகளில் தொடர் வரைதலில் ஏற்பட்ட வர்ணத்திட்டுக்கள். மேலிருந்து ஒவ்வொரு பகுதியாய்க் கீழிறங்கும் ஒளிப்பரவல். சில நொடிகளில் சுவர்ச் சித்திரத்திற்குள்ளிருந்து வெளியேறித் தாவும் வரிப்புலி, அது நடந்த இடத்திலேயே திரும்பத் திரும்ப நடந்து தூரத்தில் அமர்ந்து வெறித்துப் பார்க்கிறது. பெண் விலகி வந்தும் சித்திரத்தை நெருங்கியும் தூரிகை எதார்த்தத்தில் பயணமாகிறாள். சில நொடிகளில் சித்திரக் குகைக்குள்ளிலிருந்து மேலும் சில வரிப்புலிகள் வெளிவந்து வெவ்வேறு இடத்தில் அமர்ந்து நெடிய தூரத்தைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. காத்திருப்பின் அழகில் நிற்கும் வரிப்புலிகளுக்கிடையில் குட்டிப்புலி ஒன்று வாஞ்சையோடு செல்லம் கொஞ்சியபடி தன்னைத்தானே நக்கியபடி உருண்டு பெரண்டு கீழே கிடக்கும் சில இலைகளைக் கடித்து விளையாண்டு, திரும்பவும்படுத்துக் கை கால்களை அசைத்துக்கொண்டிருக்க பெண் தூரிகையுடன் நிலத்தின் நடுவில் இருக்கும் பாறையில் வந்து அமர்கின்றாள். வரிப்புலிகள் எழுந்து நடந்து சுவர்ச் சித்திரத்தில் தம் உடல் பதித்துப் பெண்ணைக் கூர்ந்து பார்த்துத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி குகைக்குள் நுழைகிறது. திரும்பவும் ஒன்றன் பின் ஒன்றாக வெறித்துப் பார்த்தபடி இருக்க பெண் ஒரு கையில் தூரிகைகளுடன் மறு கையில் போர்த்தியிருந்த நீள் துணியை இழுத்தபடி குகைக்குச் சென்றுவிடுகிறாள். திரைக்குள் மறைந்திருந்த பெண்கள் திரையால் குகைச் சித்திர மதிலை மூடுகிறர்கள். உடனே மறுபக்கமிருக்கும் சித்திர மதிலிலிருந்து பலரும் இறங்கிப் பல காகிதப் பாதைகைளில் தனித்தனியே நிற்க கித்தான் தூரிகைப் பையுடன் நுழைந்து குனிந்து எல்லோரது பாதங்களைச் சுற்றித் தூரிகையால் அச்செடுக்கின்றாள். பெண்ணைத் தவிர்த்து மற்றவர்கள் காகிதப் பாதையெங்கும் நடந்தபடி திரும்பிப் பார்த்தபடியே திரைக்குள் மறைந்துவிடுகிறார்கள். மண் குவளையில் வர்ணம் நிரப்பித் தூக்கிவரும் சிறுமி கால் தடங்களுள் வர்ணமிட்டு நிரப்புகிறாள். திரைகளுக்குப் பின்னிருந்து எட்டிப்பார்க்கும் கோமாளிகளின் வர்ணமிட்ட முகங்கள், பெண் திரும்பவும் மதிலை நோக்கி வர வால் முளைத்த கோமாளிகள் வெளியெங்கும் நடக்கத் துவங்குமுன் சிறுமி வெளியேறிவிட அவர்களின் வால்கள் நிலத்தில் உரசி அலைய நடைநிலத்தில் தூரிகை பிடித்த கையில் கசியும் வர்ணம். வானத்தைப் பார்த்து முனகுகிறாள். வால் முளைத்த கோமாளிகள் வெவ்வேறு கதவுகளுக்குள் நுழைய தனியே நிற்கும் சித்திரப்பெண். மூன்றுபக்கச் சித்திர மதில்களில் ஒளி உரிய நிறங்களில் நகர்ந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு சித்திர மதிலையும் முகத்தால் கையால் தொட்டுத் திரும்புகிறாள். நடுவில் உள்ள பாறையில் அமர வெவ்வேறு கதவுகள் வெவ்வேறு பாதைகளிலிருந்து அரிக்கேன் விளக்குடன் நகர்ந்துவர ஒரு பக்கமிருந்து குகை நோக்கிக் கூன்விழுந்த பாட்டியுடன் கரம்பிடித்துப் போகும் சிறுமி. ஒவ்வொரு நிற ஒளியும் மறைய சுற்றியிருக்கும் அரிக்கன் விளக்குகள் ஆடியபடி மறைந்து பரவும் இருள்.

கித்தான் – 9

இரண்டு கந்தல் கந்தலான குடைகள். எதிரெதிரே கண்ணாடிபோல விரித்து நட்டுவைக்கப்பட்டுள்ளன. ஒரு வாடிய பூங்கொத்தும் பல சிதறிய மலர்களும் ஆங்காங்கே கிடக்க சில வெண் வலைத்துணிகள் கறுப்பு வலைத்துணிகளுடன் மோதியபடி உறவாடுகின்றன. இரண்டு பெண்கள் பின்நோக்கியபடி சில அடிகள் மட்டும் முன்னோக்கி நடந்து திரும்பவும் பின்நோக்கி நகர்வது நாட்டிய அசைவுகளாய் இருக்கின்றது. இருவரும் முகத்தைக் காண்பிக்காமலேயே மறைந்துவிடுகிறார்கள். மங்கிய ஒளியில் கந்தல் குடைபிடித்துவரும் இரண்டு கோமாளிகள் மிக மெல்லிய அசைவில் இருவரும் தூர நின்றபடிக் குடைகளை மடக்கிச் சுருக்கிப் பிடித்தபடி வெளியெங்கும் சிதறிக்கிடக்கும் மலர்களைக் குனிந்து பிறக்குவதை நடன அசைவில் ஓடியோடிச் செய்கிறார்கள். பின் இறக்கிய கைகளோடு நின்று யாரையோ எதிர்பார்த்துத் தூரத்தில் யார் யாருக்கோ கைநீட்டித் திரும்பவும் ஓடியோடி திறக்கும் காதல் கொண்ட வேகநிலை. சில நொடிகள் கண்ணாடிப் பிம்பத்தோடு மலர்கள் குடை வைத்துப் பாவனையில் பேசுதல், திடீரெனக் கண்ணாடிப் பிம்பம் மறைந்துவிட அதனைத்தேடும் கோமாளி திசையெங்கும் ஓடி தத்தளித்தல். பூங்கொத்துக் குடையுடன் விழுந்து உருண்டு எழுதல். இப்போது பல முனைகளிலிருந்தும் நுழையும் கோமாளிகள். நடுவிலிருக்கும் அவனை நெருங்கியதும் மடக்கிய குடைகளை விரித்து அழுவதுபோல பாவனை செய்து கண்ணீரை மழையில் கழுவுவதுபோல நடித்தல். பின், எல்லோரும் குடையைச் சுருக்கி மடக்கி வட்டமாக ஒரே இடத்தில் தலைகீழாகக் குத்திவைக்கின்றார்கள். கோமாளிகள் பூங்கொத்துக்களைப் பிடித்தபடிக் கூட்டமாய்ச் சுருண்டு அமர்ந்திருக்க மழையில் நனைவதைப்போல பாவனை நடிப்பு, எல்லோரும் பூங்கொத்துக்களை நிலத்தில் வைத்துவிட்டு குனிந்த தலையோடு திரும்பிப் பார்த்தபடி வெளியேறுகிறார்கள். நீண்ட அமைதியில் குடை மலர்க் கொத்துக்களுடன் உருமாறும் ஒளிநிறம். உரையாடிக்கொண்டிருக்கும் தோற்றம். இப்போது இடது மூலையிலிருந்து இரண்டு குரங்குகளுடன் உடலெங்கும் கண்ணாடி மாட்டிய வயோதிகக் கோமாளி சில நொடிகள் நடுவிலிருக்கும் குடைகள் பூங்கொத்துக்களைப் பார்த்தபடியிருக்க குரங்கு நடிகர்களும் கண்ணாடிகளை மாட்டி மாட்டிப் போட்டபடி வயோதிகக் கோமாளிமுன் குட்டிக்கரணம் அடித்துத் திரும்பவும் கண்ணாடியைப் போட்டுப் பார்த்தல். அமைதியில் கோமாளியின் கிழிந்த பைக்குள்ளிருந்து பழவகைகளை எடுத்துத் தின்றபடி கோமாளிக்கும் கொஞ்சம் கடித்துக் கொடுக்கின்றது. நீண்ட மௌனத்தில் விசும்பலுடன் பாடும் கோமாளிக்குக் கண்ணீரைத் துடைத்துவிட்டபடி அவனைத் தடவித்தடவி வாஞ்சையுடன் முத்தமிட்டுக் கடிக்கின்றது. பாடல் தொடர அழும் அவன் கண்களுக்குக் குரங்குகள் கண்ணாடி மாட்டவும் மூவரும் சிரிக்க ஆரம்பித்துச் சத்தம் கூடி இருளில் மறைய பூங்கொத்துக் குத்தப்பட்ட குடைகளில் ஒளிபரவி இருள் சூழ்ந்து சில நொடிகளில் திரும்பவும் ஒளி பரவப் பூங்கொத்துக்களைத் தூக்கிவரும் சிறுமி பார்வையாளர்கள் எல்லோருக்கும் மலர்கள் கொடுத்துக் குடைகள் நோக்கி எல்லோரும் கைநீட்டி இருக்க பரவும் இருளுக்குள்ளிருந்து சுடரேந்திப் போகும் சிறுமி.

கித்தான் – 10

கித்தான் நிலத்தைச் சுற்றி எல்லாக் காட்சிகளிலும் வந்த பொம்மைகள் முகமூடிகள் துணிகள், மலர்கள், குடைகள் என அனைத்து உயிர்ப்பொருட்களும் பரப்பப்பட்டிருக்கின்றன. மங்கிய நீல நிறத்தில் இடது கீழ்ப்பக்கம் அசையும் திரைக்கும் முன் நீண்ட பலகை இரண்டில் எதிரெதிரே மெழுகுவத்தி எரிந்துகொண்டிருக்க ஒன்று மேட்டிலும் மற்றொன்று கீழ் மண் நிலத்திலும் இருக்க வலது பக்கமிருந்து மெழுகுப் பலகை ஊர்ந்து போகின்றது. சில நொடிகளில் நிலமெங்கும் எழும் நிலவறைகள். அவை துணியாலான செவ்வகப் பெட்டிகளாய் நிலத்திலிருந்து எழுகின்றது. உள்ளே மெழுகுச் சுடர்களுடன் நிழல் மனிதர்கள். இப்போது செவ்வகத் துணியாலான உள்ளும் வெளியும் மெழுகுச் சுடரின் ஒளி மட்டுமே பரவியிருக்கின்றது. சில நிமிடங்களில் மற்றொரு மெழுகுச் சுடர் பரவிய பலகையைச் சிறுமி இழுத்து வருகிறாள். எல்லா நிலவறைக்குள் இருப்பவர்கள் விரித்த கரங்களைப் பதித்துப் பதித்து சிறுமியைத் தொட முயற்சிக்கின்றார்கள். சிறுமியைப் பின்தொடர்ந்து ஒப்பனையிட்ட கோமாளி தடவித் தடவிக் குருடனைப்போல கீழே விழுந்து எழுந்து மற்றொரு பலகையைப் பிடித்து மெதுவாக இழுத்தும் பின் எல்லாவற்றையும் பார்த்தபடியும் நகர்ந்து வருதல். சிறுமி உறைந்து விழிகள் முழித்தபடி அசையாது நிற்கிறாள். எல்லாப் பக்கமிருந்தும் பார்வையாளர்கள் நகர்ந்து வருகிறார்கள். அவர்கள் துணிகளால் எல்லையிட்ட இடங்களில் தங்கள் கழுத்துவரை துணி போர்த்தியபடி அரைவட்ட வடிவில் நிற்கிறார்கள். மேலே பார்வையாளர்கள் இருந்த இடத்தைச் சுற்றியும் கட்டப்பட்ட வெள்ளை நிற நீள் துணிக்குள் நடமாடும் சுடர்களும் நிழல்களும் சில நொடியில் காற்றில் சில சுடர்கள் அணைந்துகொண்டிருக்க அணையாச் சுடருடன் கோமாளியும் சிறுமியும் சித்திரச் சுவரின் குகைக்குள் எடுத்துச் செல்லவும் சுடர்கள் ஒவ்வொன்றாய்க் காற்றில் போராடி அணைகிறது. கடைசியில் ஒரு சுடர் மட்டும் எரிந்துகொண்டிருக்கிறது.


 

ச. முருகபூபதி
ச. முருகபூபதி

தமிழ் நாடகப்பரப்பில் மணல்மகுடி நாடக நிலத்தின்வழி இயங்கிவரும் ச.முருகபூபதி இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக நாடகத்தளத்தில் நவீன நாடகங்கள், குழந்தைகள் நாடகங்களைப் படைத்து காத்திரமாக இயக்கம் கொண்டுள்ளார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகத்துறையில் முதுகலையும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவரது நாடகங்கள் இந்திய மற்றும் சர்வதேச நாடக விழாக்களில் பங்குபெறுபவை. இந்திய ஒன்றிய அரசிடமிருந்து உஸ்தாத் பிஸ்மில்லாக்கான் யுவபுரஸ்கார் விருதினைப் பெற்றுள்ளார். தமிழ்நிலத்தின் மரபுசார்ந்த தொல்சடங்குகளை, இசைவடிவங்களை, கலைப்பண்பாட்டு நிகழ்வுகளை ஆய்வுசெய்து, நாடகக்கலையின் வேர்தேடும் ஒரு தொல்கூறுமுறையில் பொதுவில் பேசப்படாத திணை பழங்குடிகளின் நாட்டாரிய அழகியல் வாய்மொழிக் கதைமரபு வேளாண்குடிவாழ்வு, நிலமிழந்த இடப்பெயர்வு, அதிகாரம். மறுக்கும் குரலற்ற விளிம்பு நிலையோரின் பாடுகள், அவர்களின் பண்பாட்டுப்புழங்கு பொருட்கள் இசைவடிவங்களை நாடகவுருவேற்றி மனித மையம் தாண்டிய பேருயிர் இயக்கமாய் நவீனமாக நாடகநிலமிறக்குகிறார்.

இதுவரை சின்னமனூர் சர்க்கஸ்காரி எனும் சிறுகதைத் தொகுப்பும், கூந்தல் நகரம், செம்மூதாய், சூர்ப்பணங்கு ஆகிய நாடகத் தொகுப்புகளும், குழந்தைக் கலைஞர்களுடன் வேலை செய்த பயணங்கள் கட்டுரைகளாகத் தொகுக்கப்பட்டு உடல் திறக்கும் நாடக நிலம், கதை சொல்லும் கலை மந்திரமரம் ஆகிய நூல்களாக வெளிவந்துள்ளன. மதுரகவி பாஸ்கரதாஸின் மகள் வயிற்றுப்பேரனான இவர் அவரது நாட்குறிப்புகளைத் தொகுத்து பதிப்பித்துள்ளார். கோவில்பட்டியை மையமாகக்கொண்டு மணல்மகுடி நாடகக்குழு இயங்கிவருகிறது.

Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top