1
இருளின் வசீகரிப்பில்
சிற்றொலிகளின் நிமிண்டலில்
மனம் லயித்து நகரும்
ஸ்பரிசங்களின் பரிபாலனை
வெற்றுடலைப் பொதிந்து
அர்த்த புஷ்டியான அலங்காரமானது
பகட்டின் மாயை காட்டத் தெரியாமல்
உத்வேகங்களைக் கடந்தன சொற்கள்
நகர்தலின் தீவிரத்தில் அகப்படும் மறுகணம்
மனதில் முகிழ்க்கும் ரகசியங்கள்
வெற்றுப் பிதற்றல்களல்ல
2.
இருட் பாதையின் பேரடுக்குகளில்
நிற மாயைகளின் நகர்வு
வழி மறவா
இருட்பயணியின் விழிகளில்
ஒளிச்சிடுக்குகள் படர்ந்தன
புரண்டு ஒளிர்ந்தது உடல்
திரி தூண்டும் கோலில்
நீச்சம்பெறும் திரியின் வெம்மை
பிரதாபமற்று மடிந்து மறைந்தபோது
இருளே ஒளி இருளே ஒளி என்று
அனத்தின பிறவாச் சொற்கள்.
3
பெருங்காட்சியமைப்பில்
பிழையேதும் இல்லை
மேகங்கள் செம்பிழம்பாய் ஒளிர்கின்றன
ஒற்றைப் பறவையின் பறத்தலில்
கைங்கரியம் காட்டிப் படர்கிறது காற்று
நீண்டு செழித்த விருட்சங்கள்
நிழலுருவை நெருங்குகின்றன
முன்பனிக்காலப் பொழுதுகள்
உருப்பெற்றுக் கடக்கின்றன
கற் சாய்வுகளின் மறைவிடங்களிலும்
காட்டுப்புறாக்களின் முனகலிலும்
மீந்திருக்கிறது காலம்
4
பெரும் முத்தாய்ப்புகளில்
மனம் சோரம் போகும்
பல்லிகள் பதுங்கும் சுவர்களுக்கு அப்பால்
பின்னிரவில் எங்கோ கேட்கும்
ஆலய மணியின் கடைசி ஒலிக்குமுன்
இமைகள் கவிழ்ந்து அடங்கும்
அறையின் வெப்பம் ஒன்றுகூடி
உடல் ஒழுகி உருகும்
விடாய்த்த மனம்
கதி கலங்கிய நாட்களில்
காத்திரமாய் நடைபயிலும்
அடைய மறுக்கும் கதவெனச்
சடாரென அறைந்து நொறுங்கும்
Art : Razor Picz
ஜெபா பெட்ஸி என்னும் இயற்பெயர் கொண்ட கவிஞர் ஜெபா குமரிமாவட்டத்தில் பிறந்தவர். இலக்கிய வாசிப்பின் பொருட்டு் எழுத்துலகில் பயணிப்பவர். கலைகளில் ஆர்வம் மிகுந்தவர். இயற்கை ஆர்வலர். பகுதிநேர ஓவிய ஆசிரியராகப் பணியாற்றினார். தற்போது காலச்சுவடு இதழ், பதிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளராக முழுநேரம் பணிபுரிகிறார்.








Leave a Reply