Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

இன்கா நாடோடிக்கதைகள் – 2

எழில் சின்னதம்பி
எழில் சின்னதம்பி
September 1, 2025
இன்கா நாடோடிக்கதைகள் – 2

(தென்னமெரிக்காவின் ஆண்டியன் மலைத்தொடரில் தோன்றிய பல நாகரீகங்களுள் இறுதியாக வந்த இன்கா இனம் குறிப்பிடத்தக்கது. சாவின், நாஸ்கா, மொச்சி, வாரி, சிமு என்று தொடர்ந்த பண்டைய இனங்களுக்குப் பிறகு பதிமூன்றாம் நூற்றாண்டினிறுதியில் தொடங்கிய இன்காப் பேரரசு பதினைந்தாம் நூற்றாண்டில் உச்சம் அடைந்தது. வடக்கே இன்றைய ஈக்குவேடாரிலிருந்து தொடங்கி பெரு, பொலீவியா என்று தொடர்ந்து தெற்கே சிலி வரை வியாபித்திருந்தது. பதினாறாம் நூற்றாண்டில் புதிய உலகம் தேடி வந்த ஸ்பானியர்களின் துப்பாக்கிகளுக்கு எதிரான போரில் இன்கா இனம் போராடித் தோற்றுப் போனது)

வாத்தியக்கூரி

வெகுநாட்களுக்கு முன்னே வாத்தியக்கூரி என்பவன் பனிபூசிய ஆண்டியன் மலைச்சிகரத்தில் வாழ்ந்து வந்தான். வாத்தியக்கூரி என்றால், உருளைக்கிழங்கு உண்ணுபவன் என்று யோயோ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அவனைக் கேலியாக அழைத்துவந்தனர். அவன் மலைகளைச் சுற்றி விளையும் காய்கறிகளையே உணவாக உண்டு வாழ்பவன். வாத்தியக்கூரிக்கு உறவினர்கள் யாரும் இல்லை. மலையிலிருந்து வீசும் கொடும் உறைபனிக்காற்று மட்டுமே அவனைத் தழுவி வந்தது. ஆதரவாய் அவனைத் தழுவ யாருமில்லை. வாத்தியக்கூரி என்றால் யாருமில்லா அனாதை என்றே பொருள்படும். அவனுக்குத் தாய் இல்லை. தண்ணீர்க்கடவுள் பரியகாக்காவின் மகன் அவன். பரியகாக்கா, நொடியில் சுழற்காற்றை உருவாக்கிக் குளிர்சிகரத்தின் பனியெலாம் உதிர்க்கும் வலுக்கொண்டவன். மலைச்சிகரத்தினுச்சியில் ஒரு குழந்தையை உருவாக்கி அவனை வாத்தியக்கூரி என்றழைக்க வைத்த பரியகாக்காவுக்கு அவனைத் தழுவும் திறன் இல்லை. குளிர் காற்றாய் வருடவே முடியும்.

நெடுங்காலமாகவே பரியகாக்கா கழுகுக் கோட்டா மலையில், இரண்டு பெரிய மலைமுகடுகளுக்கு நடுவில் ஐந்து பெரிய முட்டைகளுக்குள் சிறைப்பட்டுக் கிடந்தான். அவனது மக்கள் சேர்ந்து வாழாமல் பிரிந்து சண்டையிட்டு வாழ்ந்ததால் பரியகாக்கா தன்னை முட்டைகளுக்குள் சிறைப்படுத்திக்கொண்டு வாழ்ந்ததாய்ப் பழங்கதைகள் சொல்லும். அந்தச் சமவெளி மக்களும் உயர்ந்த மலைகளில் வாழ்ந்த வனவிலங்குகளும் ஒரு குடும்பமாய் வாழ்ந்தாலொழிய அவனால் சிறை மீளமுடியாது. அந்த நாளுக்காகக் காத்துக்கிடந்தான் முட்டைகளுக்குள்ளே.

ஒருநாள், தனது கரங்களைத் தூயபனி கொண்டு கழுவிய வாத்தியக்கூரி, அந்த முட்டைகளுக்குள் தனது கரங்களைச் செலுத்தினான். உறைபனிக்காற்று அவனைச் சுற்றி வீசியது. நடுங்கியவன், அந்தக் காற்று தனது தந்தை பரியகாக்காவின் மூச்சுக்காற்று என்றுணர்ந்தான்.

“தந்தையே, மகா பரியகாக்காவே, மலைகளின் கடவுளே! எல்லாவிடங்களிலும் நான் தேடியலைந்து பார்த்துவிட்டேன். எனக்கு அன்பு செலுத்த ஒரு பெண்ணும் இதுவரை கிட்டவில்லையே. தனிமைதான் எனக்கு உறவா?” உறைகுளிர் காற்றைத் தழுவிக்கொண்டு கேட்டான்.

அவனது கேள்விக்குப் பதிலாக, அந்தக் குளிர்பனிக்காற்று இன்னும் வெகுவேகமாய்ச் சுழல ஆரம்பித்தது. வாத்தியக்கூரியின் உடல் நடுங்கியது. காற்றின் வேகத்தால் தடுமாறினான். “ஏன் தந்தையே!” என்று அவன் இரைந்தான். அவனது கதறல் காற்றில் கரைந்து மறைந்தது. பனியும் உறைபனிக்கட்டியும் அவனைச் சுழற்றியடிக்க அந்தவிடத்தை நீங்கி ஓடினான். மலைச் சரிவில் ஓடிய அவனைப் பனி துரத்தியது.

ஓடிய வாத்தியக்கூரியை மலைச்சரிவில் கிடந்த லாமாவின் தோலாடை தடுக்கிவிட்டது. கீழே விழுந்து உருண்டவனின் உடலெலாம் லாமாவின் தோலாடை சுருட்டிக்கொள்ள மலைச்சரிவில் உருண்டான் வாத்தியக்கூரி. பனிக்கட்டிகளில் முட்டி மோதி உருண்டவன் இறுதியாக மலையாடிவரத்தின் யோயோ பள்ளத்தாக்கை உருண்டடைந்தான். அந்த விளைச்சல் நிலத்தில் அப்படியே கிடந்தான் தோலாடை சுருட்டிய லாமாவாய்.

மூச்சு வாங்கிக்கொண்டு படுத்தே இருந்தவன் காலடிச் சத்தம் கேட்டு மெதுவாய் எட்டிப்பார்த்தான். இரண்டு நரிகள் வந்துகொண்டிருந்தன. ஒரு நரி வான்க்கர் மத்தளம் வைத்திருந்தது. இன்னொரு நரி பல்குழல் புல்லாங்கழி ஒன்றை வைத்திருந்தது. இரண்டும் ஏதோ பேசிக்கொண்டு அருகே வர, வாத்தியக்கூரி அசையாமல் படுத்திருந்து செவிகளைக் கூர்மையாக்கினான். யோயோ பள்ளத்தாக்கின் தலைவனைப் பற்றி அந்த நரிகள் பேசிக்கொண்டன.

“தலைவன் காமாச்சிக் நோயுற்று இருப்பதில் எந்தவொரு ஆச்சரியமுமில்லை. அவன் தலைவனானவுடனேயே மக்களின் நிலங்களையும் லாமாக்களையும் தானே அபகரித்துக்கொண்டான். இந்தப் பேராசையே, நோய்தரும் சாத்தானை அவனிடம் அழைத்து வந்திருக்கிறது. அவனைக் குணமாக்குபவனுக்குத் தன் சகோதரி சவுப்பினியாக்காவை மணம் முடிப்பதாக வேறு சொல்லி வருகிறான்” என்றது ஒரு நரி.

“சவுப்பினியாக்கா! என்ன ஒரு அழகு! மலைக்கழுகின் இறகுபோலப் பளபளக்கும் கூந்தலுக்குச் சொந்தக்காரி. அவள் நடந்து வந்தால் கூந்தல் நிலம் வரை நீண்டு தரைபெருக்குகிறதே!” என்றது இன்னொரு நரி.

ஆவல் பொறுக்காத வாத்தியக்கூரி, லாமாத்தோலுடையை விலக்கி எழுந்தான். “நரிகளே, சவுப்பினியாக்காவின் அழகைப் பற்றிச் சொல்லுங்களேன்” என்று கூவினான்.

“ஓ, இந்த உருவம் லாமாவல்ல. இவன் உருளைக்கிழங்கு தின்னி. ஓடு! ஓடு!” என்று சொல்லிக்கொண்டே இரு நரிகளும் ஓடின. அவை கொண்டுவந்த புல்லாங்குழலும் மத்தளமும் இருபுறமும் சிதறி வீழ்ந்தன.

வாத்தியக்கூரி அந்த இசைக்கருவிகளைப் பொறுக்கி எடுத்தான். “நன்றி தந்தையே!” என்றான் மலையுச்சியைப்பார்த்து. “காற்றின் கடவுளே, என்னை நரிகள் வரும் பாதையில் தள்ளிவிட்டமைக்கு நன்றி. எனக்கு இந்த இசைக்கருவிகளைத் தருவித்தமைக்கு நன்றி” என்று சொல்லி அந்தப் பல்குழல் புல்லாங்கழியை ஊதினான். அதில் வழிந்த இசை சவுப்பினியாக்காவின் குரலையொத்திருப்பதாய்க் கற்பனை செய்துகொண்டே அந்தப் பள்ளத்தாக்கை நோக்கி மலைச் சரிவில் நடந்தான். அவனது இருதயம் அந்த மத்தளத்தின் அதிர்வை விட அதிகமாய் அதிர்ந்தது.

கிராமத்தையடைந்த வாத்தியக்கூரி வழியில் கண்ட மனிதர்களிடம், “ஐயா, எனது பெயர் உருளைக்கிழங்கு புசிப்போன், பரியகாக்காவின் மகன்” என்றான். வேடிக்கையான இந்தப் பெயரைக் கேட்ட அனைவரும் சிரித்தனர். “நான் இந்த ஊர்த்தலைவன் காமாச்சிக்கின் நோயைக் குணப்படுத்த மலையிலிருந்து வந்திருக்கிறேன்” என்றான்.

“ஆண்டியன் மலையின் அத்தனை அறிவாளிகளுக்கும் தெரியாத வித்தை உனக்கு மட்டும் எப்படிக் கிட்டியது?” என்று கேட்டார் அங்கிருந்த ஒரு முதிர்ந்த வைத்தியர். “ஒருவேளை உருளைக்கிழங்கை வைத்து இவன் வைத்தியம் செய்யப் போகிறானோ?” என்று கேட்டான் மற்றொருவன். எல்லோருடைய நகைப்பையும் சகித்துக்கொண்டு வாத்தியக்கூரி காமாச்சிக்கின் வீடு தேடி நடந்தான்.

ஊரிலேயே பெரிய வீடு ஊர்த்தலைவன் காமாச்சிக்கினுடையது. அங்கு சென்ற வாத்தியக்கூரி வீட்டின் வெளியே நின்றிருந்த சவுப்பினியாக்காவைக் கண்டு வாய்பிளந்து நின்றான். அவன் இதுபோல அழகியை வேறெங்கும் பார்த்தது கிடையாது. அவளது கண்கள் தீட்டப்பட்ட கற்களாய் மின்னியது. அவளது முகம் ஒளிசிந்தும் ஆற்றலைக் கொண்டிருந்தது.

“வந்தனங்கள்! எனது பெயர் உருளைக்கிழங்கு உண்ணி. நான் உயரிய கழுகுக் கோட்டா மலையிலிருந்து வருகிறேன். தலைவன் காமாச்சிக்கின் நோயைக் குணப்படுத்த வந்துள்ளேன்” என்றான் அவளிடம் பணிவுடன். மற்றவர்களைப்போல அதைக்கேட்டு நகைக்கவில்லை அவள். அவனிடம் இருந்த உயர்குடித்தன்மையையும் வலிமையையும் அவள் கண்டுகொண்டாள். தன்னை அவனிடம் அறிமுகப்படுத்திக்கொண்டாள் புன்முறுவலுடன். அவனை, காமாச்சிக் அரைத்தூக்கத்தில் படுத்திருக்கும் உள்ளறைக்கு அழைத்துச் சென்றாள்.

அரையிருட்டிலிருந்த அந்த அறைக்குக் கண்கள் பழகிக்கொள்ளச் சிறிது நேரமானது அவனுக்கு. நட்சத்திரமில்லாப் பல இரவுகளை மலையுச்சியில் கழித்திருந்த காரணத்தால் இருட்டின் உருவங்களைப் பார்ப்பதற்கு அவன் நன்கு பழகியிருந்தான். மலைக்கழுகின் கரிய சிறகு, மிருகசிரீட நட்சத்திரக்கூட்டம், சுழன்று திருகும் ஆவியுலகின் வடிவங்கள் – இவையெல்லாம் பார்த்துப்பழகிய அவனது கண்கள், அந்த அறையைக் கூர்ந்து கவனித்தன. ஏதாவது அசைவு தெரிகிறதா, ஏதாவது இயக்கம் தெரிகிறதா என்று அறையின் விட்டத்தில், தரையில் – என எல்லாவிடங்களிலும் கூர்ந்து பார்த்தான். கூரையில் அசைவு தெரிய உற்றுப்பார்த்தான். இரண்டு பெரும்பாம்புகள் காமாச்சிக்கின் படுக்கைக்கு நேர் மேலே தயாராய்க் காத்திருந்தன – அவன் இறந்தவுடன் அவனை விழுங்குவதற்கு. படுக்கைக்குக்கீழே அவனது காலுக்கருகில் இரட்டைத்தலைத் தேரை வாயைத் திறந்துவைத்துக் கொண்டு காத்துக்கொண்டிருந்தது.

“தலைவனே காமாச்சிக், உனது பேராசை, வேட்கைகொண்ட பாம்புகளையும் சொறிதவளையையும் வீட்டிற்குள் அழைத்து வந்திருப்பதைப் பார்க்க இயலவில்லையா? நீ எப்படிப் பிறரின் நிலங்களையும் லாமாக்களையும் கவர்ந்துகொண்டாயோ, அது போல உனது ஆவியை உறிஞ்சுகொண்டிருக்கின்றன இந்தப் பாம்புகளும் தேரையும்” என்றான் வாத்தியக்கூரி, காமாச்சிக்கைப் பார்த்து.

விழித்துப் பார்த்தான் காமாச்சிக். வாத்தியக்கூரியைக் கூர்ந்துபார்த்தவன், “பொய்யனே” என்று கத்தினான். “அந்தச் சாத்தன்களை நீதானே என் வீட்டுக்கு அனுப்பி வைத்தாய்?” என்றான் இருமிக்கொண்டே. “ஒழுங்காய் அவற்றைத் திருப்பி எடுத்துக்கொண்டு போய்விடு”

“உன்னைக் குணப்படுத்துபவனுக்கு உன் தங்கை சவுப்பினியாக்காவை மணம் முடித்துவைப்பதாய் நீ கூறியது உண்மையா” என்று கேட்டான் வாத்தியக்கூரி. “ஆமாம், ஆமாம்” என்றான் காமாச்சிக் இருமிக்கொண்டே. “சரி, அதைச் செய்துமுடிக்கிறேன்” என்றவன் கணநேரத்தில் அந்தப் பாம்புகளையும் தேரையையும் பிடித்துக்கொண்டு வெளியே ஓடினான். வீதியில் அவன் ஓடுவதை ஊர்மக்கள் வியப்போடு பார்த்தனர். பாம்புகளையும் தேரையையும் பள்ளத்தாக்கை விட்டுத் தூர எறிந்தான்.

காமாச்சிக் வீட்டை விட்டு வெளியே வந்து நின்றான். திரண்டு நின்ற ஊர்மக்களைப் பார்த்து, “மக்களே, எனது நோய் விலகிவிட்டது” என்றான் கம்பீரமான குரலில். வாத்தியக்கூரியைச் சுட்டுவிரலால் சுட்டிப் பழிசுமத்தினான். “இதோ இந்தக் கெட்ட மனிதன் என்மீது கெட்ட ஆவிகளை ஏவிச் சீக்காளியாக்கி விட்டான். அதனால் தான் இவ்வளவு எளிதாக அவனால் என்னைக் குணப்படுத்த முடிந்தது”

“எனது சகோதரியை மணப்பது ஒன்றும் எளிதான செயலல்ல” என்று வாத்தியக்கூரியைப் பார்த்துச் சொன்னான். “நீ உனது திறமைகளை எல்லாம் நிரூபிக்க வேண்டும். உனது மத்தளத்தையும் புல்லாங்கழியையும் எடுத்துக்கொண்டு ஊர்கூடும் பொதுவிடத்துக்கு வா நாளைக்கு. ஆகச்சிறந்த இசையை உருவாக்குபவன் நீயா அல்லது நானா என்று பார்த்து விடலாம். இப்போதைக்கு என் முன்னால் நிற்காமல் எங்காவது தொலைந்து போ” என்றான் வெறுப்புடன்.

மறுநாள் காலையிலேயே ஊர்மக்கள் பொதுவிடத்தில் கூடியிருந்தனர். வாத்தியக்கூரி வந்தவுடன் காமாச்சிக் அனைவரையும் அமைதிப்படுத்தினான். பின் தனது பல்குழல் புல்லாங்கழியை உதட்டுக்குக் கொடுத்து வாசித்தான். ஊர்மக்கள் அந்த வாசிப்புக்கு ஏற்பப் பாடினார்கள். பெண்கள் மத்தளம் இசைக்க, ஆண்களும் புல்லாங்குழலூத, சிறார்கள் ஆடினர். இசை அந்தப் பள்ளத்தாக்கினை நிறைத்தது. இறுதியில் இசை தேய்ந்து நின்றதும், காமாச்சிக் வாத்தியக்கூரியைப் பார்த்துத் தன் புல்லாங்குழலால் சுட்டினான்.

எல்லாக்கண்களும் உருளைக்கிழங்கு உண்ணியின் மேல் விழ, அவன் மெதுவாய் நடந்து அனைவருக்கும் மத்தியில் வந்து நின்றான். தனது மத்தளத்தைத் தரையில் வைத்துவிட்டுப் புல்லாங்கழியை உயர்த்தினான். தலையை உயர்த்தி மலையுச்சியில் தெரிந்த தனது இருப்பிடத்தைப் பார்த்தான். வீசும் குளிர் காற்றில் சுழலும் பனியினை நினைத்தான். அதன் குளிர்ச்சியில் பெருமூச்சு விட்டவன், கண்களை மூடிக்கொண்டு இசைக்க ஆரம்பித்தான். திடுமென உயர்ந்த அந்த இசை வானில் சுழன்றடிக்கும் பனிச்சூறாவளியாய்ச் சுழல ஆரம்பித்தது.

கிராமத்து மக்கள் வாய்பிளந்தபடி வாத்தியக்கூரியின் இசையில் மூழ்க, சவுப்பினியாக்கா வாத்தியக்கூரியுடன் இணைந்து கொண்டு அவனது மத்தளத்தை எடுத்து இசைக்க ஆரம்பித்தாள். மலைக்கழுகின் சிறகில் இருக்கும் வலிமையுடன் மத்தளத்தை அடித்தாள் சவுப்பினியாக்கா. கிராமத்தினர் நடனமாட ஆரம்பித்தனர். ஆடலில் அதிர்ந்தெழும்பிய புழுதி நடனமாட ஆரம்பித்தது. சுற்றியிருந்த கற்கள் நடனமாட ஆரம்பித்தன. பின்னர் வானத்தின் மேகங்கள் நடனமாடத் தொடங்கின. இறுதியில் பூமி அதிர்ந்து நடனமாடியது.

“ஆ! நிறுத்து! நிறுத்து! பூமியே உன் பாடலுக்கு நடனமாடுகிறது, நீயே வெற்றி பெற்றாய்” என்றான் காமாச்சிக் வெறுப்புடன்.

எல்லா அதிர்வுகளும் முடிந்தவுடன் காமாச்சிக் சொன்னான், “எனது சகோதரியின் தயவுடன் நீ போட்டியில் வெற்றி பெற்றுவிட்டாய், உருளைக்கிழங்கு உண்ணியே. ஆனால், அவளை மணக்கப்போகும் ஒருவனுக்கு உயர்ந்த தகுதியும், தலைவனைப்போல தோற்றமும் வேண்டும்.” அவனது உயரிய உடையைத் திருத்திக்கொண்டே தொடர்ந்தான். “நாளைக்கு எங்கள் கிராமத்தில் மக்காச்சோள அறுவடை தினக் கொண்டாட்டங்கள் நடக்கப்போகின்றன. உன்னிடம் இந்தக் கிழிந்த ஆடைகளைத் தவிர்த்து வேறு ஏதாவது நல்ல ஆடைகள் இருப்பின் அணிந்து கொண்டு வா. இல்லையேல் இப்படியே உனது இருப்பிடத்துக்கு ஓடிவிடு.”

அன்றிரவு வாத்தியக்கூரி கோட்டா மலையில் ஏறித் தனது தந்தையைப் பார்க்கச் சென்றான். “தந்தையே, பரியகாக்காவே! எனக்கு அந்தக் காமாச்சிக்கின் உடைகளைவிட நல்லுடைகள் வேண்டும்” என்றான். உறைகாற்று அவனைச் சுற்றி வீசியது, கிழிந்த அவனது உடைகளைச் சுற்றிய பனியே வெள்ளுடையானது.

மறுநாள் காலையில் காமாச்சிக் ஊர் மத்திக்கு வந்தான், பகட்டான உடையணிந்து. வரிசையாய் அடுக்கிவைக்கப்பட்ட மக்காச்சோள மூட்டைகளை அகம்பாவத்துடன் கடந்து நடந்தான். ஊர்க்காரர்கள் அவனது பளபளக்கும் தங்க நிற உடையையும் தலையில் சூட்டிய வண்ணமிகு இறகுக் கிரீடத்தையும் வெகுவாய்ப் புகழ்ந்தனர். பெருமையுடன் நடந்த காமாச்சிக் தொலைதூரத்தில் மலையில் ஏதோ வித்தியாசமாகத் தெரிய உற்றுநோக்கினான். கண்ணைக் கூச வைக்கும் வெண்மை நிறத்துடன் ஓர் ஒளி நெருங்கி வந்துகொண்டிருந்தது. “விண்மீன் ஒன்று எரிந்து விழுந்து கொண்டிருக்கிறது, அது நம்மை நோக்கி நெருங்கி வருகிறது” என்று கூச்சலிட்டான்.

சலசலத்துக்கொண்டிருந்த ஊர்மக்கள் வாய்மூடி இந்தக் காட்சியை ஆச்சரியத்துடனும் அச்சத்துடனும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். கண்களைக் குறுக்கிப்பார்த்தான் காமாச்சிக். அது எரிமீன் அல்ல. அது உருளைக்கிழங்கு உண்ணி. அவன் பனியால் செய்த வெண்மை நிற ஆடையை அணிந்து சூரிய வெளிச்சம் பட்டுத் தகதகவென எதிரொளிப்புச் செய்தபடி வந்துகொண்டிருந்தான்.

வாத்தியக்கூரி ஊர்மத்தியை அடைந்ததும், காமாச்சிக் தோல்வியை ஒத்துக்கொண்டான். “உருளைக்கிழங்கு உண்ணியே, இன்றைக்கு நீ வெகு நேர்த்தியாக உடையணிந்திருக்கிறாய். ஆனால், உனக்குக் கடைசியாய் ஒரு போட்டி வைத்திருக்கிறேன். ஒரு யோயோ தனது குடும்பத்துக்கு நல்ல வீடு கட்டியிருக்க வேண்டும். பார்க்கலாம், குறுகிய நேரத்தில் மிகச்சிறந்த வீட்டை யார் கட்டுகிறார்கள் என்று” என்று சொன்னான்.

“நீ வைத்த எல்லாப்போட்டிகளிலும் நானே வெற்றி பெற்றேன். காமாச்சிக், உன்னைக் குணப்படுத்தியவனுக்கு சவுப்பினியாக்காவை மணம் முடித்துத் தருவதாய் நீ சத்தியஞ் செய்திருக்கிறாய். ஒரு தலைவனாக நீ உனது வாக்கைக் காப்பாற்ற வேண்டும். இந்தக் கடைசிப் போட்டியில் வெற்றி பெற்றவுடன், நான் சவுப்பினியாக்காவை மணம் செய்துகொள்வேன்” என்றான் வாத்தியக்கூரி.

ஊர்மக்கள் அதுவே சரியான முடிவென்று முணுமுணுத்தனர். அவர்களை அமைதியாய் இருக்கச் சொல்லிச் சீறினான் காமாச்சிக். “மக்களே, மிகச் சிறந்த கற்களையும் ஓலைகளையும் சேகரித்து வாருங்கள். இந்தப் பள்ளத்தாக்கிலேயே தலைசிறந்த கொத்தனாரையும் ஓலை வேய்பவனையும் கொண்டுவாருங்கள். நாம் சிறந்த ஒரு வீட்டினைக் கட்டவேண்டும்” என்று கட்டளையிட்டான். அதைக் கேட்ட மக்கள் ஆளுக்கொரு திசையில் விரைந்தார்கள் அவனது ஆணையை நிறைவேற்ற.

அன்றைய தினம் முழுதும் அங்கேயே இருந்து கட்டப்படும் வீட்டைக் கவனித்துக் கொண்டிருந்தான் வாத்தியக்கூரி. மாலை நேரமானது. வீடு ஏறத்தாழக் கட்டி முடிக்கப் பட்டு விட்டது. மங்கும் மாலை வெளிச்சத்தில் தங்கம்போல் பளபளத்த அந்த வீட்டைச் சுற்றிப் பார்த்தான் வாத்தியக்கூரி. “தலைவனே காமாச்சிக், இந்தக் கற்சுவர்கள் குளிர்காலத்துக் கொடுங்காற்றைத் தாங்கக் கூடிய அளவுக்கு வலிமையானதா?” என்று கேட்டான்.

“என்ன இப்படிக் கேட்டுவிட்டாய் உருளைக்கிழங்கு உண்ணி! சூரியனே இந்த வீட்டினுள் வந்து குளிர்காலத்தில் தங்கிக் கொள்ளலாம். சூரியனையும் குளிர்காலப் பனிப்புயலிலிருந்து பாதுகாக்கும் திறன் படைத்தது இந்தச் சுவர்” என்றான் காமாச்சிக். “வேலையாட்களே, இரவு வரப்போகிறது. வீடு கட்டியது இத்தோடு போதும். கூரை மட்டுமே வேயவேண்டும், நாளை வந்து முடித்து விடலாம்” என்று ஆணையிட்டான். “உருளைக்கிழங்கு உண்ணியே! நீ உனது சிறு குடிசையைக் கட்டுவதற்கு இதுவரை ஒரு கல்லையும் நகர்த்தவில்லை. உனது கதை முடிந்தது, அவ்வளவுதான்” என்று ஏளனமாய்ச் சொல்லிவிட்டு வேலையாட்களுடன் வீடு திரும்பினான் காமாச்சிக்.

நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்த தெளிவான இரவு நேரத்தில் மலையை நோக்கிச் சென்றான் வாத்தியக்கூரி. தனது பல்குழல் புல்லாங்கழியை உயர்த்தி இசைத்தான். அந்தக் கழுகுக்கோட்டா மலையிலிருந்த அத்தனை விலங்குகளையும் உதவிக்கு அழைத்தான் இசையால். அதைக் கேட்ட எல்லா விலங்குகளும் திரண்டன. லாமாக்களும் விக்குனியாக்களும் அடுக்கடுக்கான கற்களைத் தங்கள் முதுகில் சுமந்து வந்தன. ஓநாய்களும் பாம்புகளும் அந்தக் கற்களை ஒன்றின்மேல் ஒன்றாய் இடைவெளியின்றி அடுக்கிச் சுவர்கள் செய்தன. பறவைகள் தங்கள் அலகுகளால் மிகச்சிறந்த கூரையை வேய்ந்தன. வாத்தியக்கூரியும் விலங்குகளும் பறவைகளும் இரவு முழுக்க வேலை செய்தார்கள்.

மறுநாள் காலையில் சூரியன் உதித்ததும் தங்களது வீடுகளிலிருந்து வெளியே வந்து பார்த்த கிராமத்தினர் ஆச்சரியத்தில் கண்ணிமைக்காமல் நின்றனர். வாத்தியக்கூரியின் புதிய வீடு கோட்டா மலைக்கு இணையாக அழகுடன் எழுந்து நின்று கொண்டிருந்தது. வீட்டின் சுவர்கள் மலையுச்சியை சூழ்ந்திருக்கும் குளிர்பனியின் வளவளப்புடன் இருந்தன. வீட்டின் கூரை பல வண்ண இறகுகளால் வேயப்பட்டு இரண்டு மலைச் சிகரங்களுக்கு நடுவில் தோன்றிய வானவில்லாய்க் காட்சியளித்தது.

வாத்தியக்கூரி தனது புது வீட்டிலிருந்து வெளியே வந்து ஊர்மக்களையும் காமாச்சிக்கையும் வரவேற்றான். “எனது வீடு சூரியன் வந்து இருப்பதற்கு மட்டுமல்ல, குளிர்காற்றின் வேகத்தையும் தாங்கவல்லது” என்றான்.

“நீ முதலில் கட்டி முடித்துவிட்டாய்” என்று தோல்வியை ஒத்துக்கொண்டான் காமாச்சிக். கட்டிமுடிக்கப்படாத தனது வீட்டைப் பார்த்தபடி சொன்னான், “ஆனால் உனது வீட்டின் சுவர்கள் இவ்வளவு சிறுத்திருக்கிறதே – பழைய உருளைக்கிழங்குத் தோலைவிட மென்மையாக இருக்கிறது. காற்று வந்து இந்தக் குடிலில் குடியிருக்கக் கூடும். ஆனால் அடிக்கப்போகும் முதல் பனிப்புயலில் இந்தக் குடிசை விழுந்து விடும்!”

“அதையும் பார்த்து விடலாமே” என்றபடி வாத்தியக்கூரி தனது புல்லாங்குழலை எடுத்தான். மலைச்சிகரத்தில் வீசும் கொடுங்குளிர்க்காற்றை நினைத்துக் கொண்டே குழலை இசைத்தான். புல்லாங்குழலிருந்து வந்த அவனது காற்று பெரும்புயலாய் உருவெடுத்து புதிதாய்க் கட்டப்பட்ட அவனது வீட்டில் வலுவாய் மோதிச் சுழன்றது. ஆனால் அந்தச் சுவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. மிக வலுவாகவே நின்றது.

இப்போது காற்று சுழன்று சென்று கட்டிமுடிக்கப் படாமல் நின்ற காமாச்சிக்கின் வீட்டில் மோதியது. அரைகுறையாய் வேயப்பட்டிருந்த கூரை காற்றில் பறந்தது. கற்சுவர் பெருஞ்சத்தத்தை ஏற்படுத்தி அசைந்து கொடுத்தது. தொடர்ந்த கொடும்புயலில் கற்கள் ஒன்றுடனொன்று மோதிக் கடைசியில் இடிந்து விழுந்து சுக்குநூறாகிக் குப்பைமேடாகி நின்றது.

சுழன்று திரும்பிய காற்று இப்போது காமாச்சிக்கைக் குறிவைத்தது. சுழற்காற்றுத் தாக்கித் தடுமாறி வீழ்ந்தான் காமாச்சிக். தரையைப் பற்றிக்கொண்டு விழுந்து கிடந்த காமாச்சிக்கை விடாமல் துரத்தி வீசியது காற்று. அவனை ஊருக்கு வெளியே தள்ளியது. காமாச்சிக் ஒரு புள்ளியாய் மாறிக் காற்றால் அடித்துச் செல்லப்பட்டான். கோட்டா மலைக்கு வெகு தொலைவில் அவனைச் சுழற்றித் தள்ளிக் கொண்டு போனது. அவன் இனித் திரும்பி வரப்போவதே இல்லை.

வாத்தியக்கூரி தனது புல்லாங்குழலைத் தணித்தான். சவுப்பினியாக்காவின் கரம் பற்றிக் கோட்டா மலையின் மீது ஏறினான். இருவரும் சேர்ந்து நடந்து மலைச்சிகரங்களின் நடுவே இருந்த ஐந்து முட்டைகளிடம் வந்து நின்றனர். இருவரும் சேர்ந்து நிற்கையில் சுழன்ற சிறுகுளிர்க் காற்று பொடிப்பொடியான பனித்துகளை அவர்களின் மீது வீசித் தழுவியது. வாத்தியக்கூரியும் சவுப்பினியாக்காவும் மணம் முடித்தவர்களானார்கள்.

“தந்தையே” என்றழைத்தான் உருளைகிழங்கு உண்ணி. “அன்பு, இந்தப் பள்ளத்தாக்கு மக்களையும் மலையின் விலங்குகளையும் ஒன்றிணைத்து விட்டது; நாங்கள் எல்லோரும் இப்போது ஒரேயினத்தவரானோம். நீங்கள் விடுதலை பெறும் நேரம் வந்துவிட்டது.” அவனது இந்தச் சொற்கள் இரண்டு மலைகளிலும் மோதி எதிரொலித்து, ஐம்பெரும் முட்டைகளில் சிறிதாய்க் கீறல்கள் விழ ஆரம்பித்தன. பின்னர் எல்லா முட்டைகளும் முழுதாய்ப் பிளந்தன.

ஐந்து பெரும் மலைக்கழுகுகள் அந்த முட்டைகளிலிருந்து வெளிப்பட்டன. சவுப்பினியாக்காவையும் வாத்தியக்கூரியையும் தூக்கிக் கொண்டு பறந்தன. இருவரையும் கிராமத்துக்குக் கொண்டு வந்து சேர்த்தன. ஊர் கூடியிருந்தது. பலத்த ஆரவாரத்துடன் அவர்கள் புதுத் தம்பதியினரை வரவேற்றனர். “எங்களது புதிய தலைவனே, உருளைக்கிழங்கு உண்ணியே, தலைவனின் மனைவி சவுப்பினியாக்காவே, மகா ஆவியே பரியகாக்காவே போற்றி” என்றனர்.

கழுகுகள் மீண்டும் உயரப் பறந்தன. அந்தக் கழுகுகளின் சிறகுகள் அந்தக் கிராமத்தைச் சூழ, வானத்திலிருந்து கிராமத்தினரை ஆசீர்வதித்துப் பறந்தன – ஒரே இனமாக எல்லோரையும் பார்த்த மகிழ்ச்சியுடன் அந்தக் கழுகுகள் பறந்து மறைந்தன.


Art : .crystalinks.com

எழில் சின்னதம்பி
எழில் சின்னதம்பி
பெயர்: எழில் மயில் வாகனன். தந்தை பெயருடன் இணைத்து, எழுதுவதற்காக வைத்துக்கொண்ட பெயர்: எழில் சின்னதம்பி.
சொந்த ஊர்: தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்திலுள்ள சென்னம்பட்டி எனும் சிற்றூர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம். ஜெர்மனி, சுவீடனில் பணிபுரிந்து தற்போது அமெரிக்காவின் சாண் டியாகோ நகரில் வசிப்பு – தரப்பகுப்பாய்வு இயக்குனராகப் பணிப்பொறுப்பு.

மொழிபெயர்ப்புக் கதைகளும், கலை இலக்கியக் கட்டுரைகளும் கல்குதிரை, சிறுகதை, தினவு, தடாரி, காலச்சுவடு, சிறுவர்களுக்கான ‘இயல்’ போன்ற இதழ்களில்  வெளியாகியிருக்கின்றன. மாய எதார்த்தக் கதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பு ‘கடைசி வருகை’ முதல் புத்தகம், மார்ச் 2022-ல்வெளியானது. ‘லத்தீன் அமெரிக்கப் பெண்ணெழுத்து’ எனும் இரண்டாவது மொழிபெயர்ப்புத் தொகுப்பான ‘கடலோடியின் மனைவி’ 2024 டிசம்பரில் வெளியானது. ‘இயல்திரிபுப் புனைகதைகளின்’ மொழிபெயர்ப்புத்தொகுப்பான ‘சிலந்தி’ டிசம்பர் 2025ல் வெளியாகியிருக்கிறது.
Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • முதலைகளின் தீப்பாடல்

    முதலைகளின் தீப்பாடல்

    March 1, 2026
  • தயவும் பாவமும் :19 ஆம் நூற்றாண்டு இறுதியிலும், 20 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் நவீன இலக்கியத்தில் தலித்துகள் பற்றிய பதிவுகள்

    தயவும் பாவமும் :19 ஆம் நூற்றாண்டு இறுதியிலும், 20 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் நவீன இலக்கியத்தில் தலித்துகள் பற்றிய பதிவுகள்

    March 1, 2026
  • இன்கா நாடோடிக்கதைகள் – 8 : கோனிராயாவும் காவியாக்காவும்

    இன்கா நாடோடிக்கதைகள் – 8 : கோனிராயாவும் காவியாக்காவும்

    March 1, 2026
  • ஆன் செக்ஸ்டன் கவிதைகள் – 06

    ஆன் செக்ஸ்டன் கவிதைகள் – 06

    March 1, 2026
  • இலங்கையின் இருண்ட யுகம் – ஊடகச் சுதந்திரமும் பாலியல் துஷ்பிரயோகங்களும்

    இலங்கையின் இருண்ட யுகம் – ஊடகச் சுதந்திரமும் பாலியல் துஷ்பிரயோகங்களும்

    March 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (16)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இலக்கியம் (18)
  • உரையாடல் (9)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (95)
  • கட்டுரை (4)
  • கதை (6)
  • கதை (4)
  • கவிதை (76)
  • கவிதை (13)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (13)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (42)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (8)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (11)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (33)
  • வாழ்வியல் (2)

Archives

  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • முதலைகளின் தீப்பாடல்

    முதலைகளின் தீப்பாடல்

    March 1, 2026
  • தயவும் பாவமும் :19 ஆம் நூற்றாண்டு இறுதியிலும், 20 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் நவீன இலக்கியத்தில் தலித்துகள் பற்றிய பதிவுகள்

    தயவும் பாவமும் :19 ஆம் நூற்றாண்டு இறுதியிலும், 20 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் நவீன இலக்கியத்தில் தலித்துகள் பற்றிய பதிவுகள்

    March 1, 2026
  • இன்கா நாடோடிக்கதைகள் – 8 : கோனிராயாவும் காவியாக்காவும்

    இன்கா நாடோடிக்கதைகள் – 8 : கோனிராயாவும் காவியாக்காவும்

    March 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (16)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இலக்கியம் (18)
  • உரையாடல் (9)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (95)
  • கட்டுரை (4)
  • கதை (6)
  • கதை (4)
  • கவிதை (76)
  • கவிதை (13)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (13)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (42)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (8)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (11)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (33)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top