தேசிய கல்விக் கொள்கையின் வரைவறிக்கை “இந்திய மையக்கல்வி” என்பதைப் பேசுகிறது. கூடவே “உள்ளூர் மயமாக்குதல்” என்ற சொல்லை விசுறுகிறது. பிரிதொரு இடத்தில் “சமத்துவமான” என்ற பதத்தைக் கூறிவிட்டு “அனைவருக்குமான”; “சமவாய்ப்பு” என்ற சொற்களையும் அறிக்கையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கிறது. தேசியக் கல்விக் கொள்கையின் வரைவறிக்கை 2019ல் வெளியிட்ட பாசக அரசின் முந்தைய ஐந்தாண்டுகளின் செயல்பாடு எவ்வாறிருந்தது?
காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவை நீக்கியதோடின்றி காஷ்மீரை மூன்று பாகங்களாகப் பிரித்தது. பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு கடும் விமர்சனத்திற்குள்ளானது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்திய சிறுகுறு தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகின. மக்களின் பணம் ஒரு உத்தரவால் அப்படியே பறிக்கப்பட்டது. கொரோனா கால நெடும் பயணங்கள் மக்களைச் சோர்வுக்கு உள்ளாக்கின. தலித்துகள், இசுலாமியர்கள் கும்பல் படுகொலைக்கு உட்படுத்தப்பட்டனர். வரலாற்றுப் புகழ்மிக்க தில்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் போராடிய மாணவர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. நஜீப் அகமது எனும்முதுகலை பயோடெக் மாணவர் என்ன ஆனார் என்று இதுவரைத் தகவலில்லை. உச்சபட்சமாக தேசியக் குடியுரிமைச் சட்டத்தின் வாயிலாகச் சிறுபான்மையினர் அச்சுறுத்தப்பட்டனர். நாடெங்கும் பெரும் போராட்டங்கள் மேலெழும்பின. இந்திய மக்களை மதரீதியாக/சாதிரீதியாகச் சேரவியலாமல் பிரித்து வைத்தல் செயல்பாட்டில் ஈடுபட்ட பாசக அரசின் கல்வி குறித்தான வரைவறிக்கையில் “சமத்துவம்”; “அனைவருக்குமான” “சமவாய்ப்பு” என்ற சொற்கள் ஆச்சர்யப்பட வைத்தன. வரைவறிக்கை “இந்திய மையக்கல்வி” என்ற ஒன்றை அழுத்தமாக விவாதிக்கிறது. இந்தியாவில் இந்திய மையக்கல்வி காலனிய காலத்தில் எவ்வாறு இருந்தது என்பதைத் தமிழகத்தை முன்வைத்து விவாதிக்கலாம்.
I
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் செயல்பட்டு வந்த சுதேசக் கல்விமுறையைக் குறித்து அறிந்து கொள்ள ஆங்கிலேய ஆட்சியாளர்களின் குறிப்புகளைத்தான் நாம் நாடவேண்டி இருக்கிறது. தாமஸ் மன்றோ சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்த தருணத்தில்தான் உள்ளூர் கல்விமுறை குறித்தான ஆய்வை மேற்கொள்வதற்கு ஆணையிட்டார். அதன் வாயிலாகப் பெறப்பட்ட குறிப்புகளிலிருந்துதான் காலனியச் சூழலில் எத்தகைய கல்விமுறை செயல்பட்டது என்பதை அறிந்து கொள்ள நம்மால் முடிகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழகக் கல்விமுறை இருவகைக் கல்விமுறையால் பின்னப்பட்டிருந்தன. முதல்வகைக் கல்வி முறையில் கடிகை (பணம் கொடுத்துப் படித்தல்); மடங்கள் உருவாக்கிய கல்விநிலையம் (வைணவக்கல்வி/சைவக்கல்வி); அஹ்ரஹாரம் (பிராமணர் வாழிடங்களில் தனிக்கல்வி நிலையம் செயல்பட்டது); வேதப்பாடசாலை (தங்கிப் படிக்கும்) என்பதான கல்வி நிலையங்கள் செயல்பட்டன. முதல்வகை கல்வி நிலையங்களில் பிராமணர்களும், வெள்ளாளர்களும்மட்டுமே கல்வி பயின்றனர்.
இரண்டாவது வகை கல்வி நிலையங்களைக் காலனிய அரசு பயல் ஸ்கூல் என்று அழைத்தது. தமிழகத் தரப்பு திண்ணைப் பள்ளி என்றது. காலனிய காலத்தில் தமிழகமெங்கும் திண்ணைப் பள்ளிகளே சூழ்ந்திருந்தன என்று ஆய்வாளர் செந்தில்பாபு குறிப்பிடுகிறார். திண்ணைப் பள்ளி என்பது உள்ளூர் துவக்கப்பள்ளியாகும். இதனை ஓராசிரியர் பள்ளி என்றும் சொல்லலாம். ஆசிரியரின் வீட்டின் முற்றத்திலோ அல்லது கோவிலிலோ இல்லையெனில் மரத்தடியிலோ இப்பள்ளி இயங்கும்.
ஒவ்வொரு கிராமமோ அல்லது சில கிராமங்கள் இணைந்தோ திண்ணைப் பள்ளியை உருவாக்கும். ஆறு அல்லது ஒரு கிலோமீட்டருக்கு ஒரு திண்ணைப்பள்ளி செயல்பட்டது. திண்ணைப் பள்ளி வேதபாடசாலை போன்றோ சைவப் பள்ளி போன்றோ செயல்படவில்லை. அங்கு பிராமணர்களும், சைவ வெள்ளாளர்களும் மட்டுமே கல்வி பயின்றனர் அல்லது அவர்களுக்கு மட்டுமே கல்வி போதிக்கப்பட்டது. ஏனைய மாணவிகள் அங்கு சென்று பயிலமுடியாது. சமஸ்கிருதமும் தமிழும் அங்கு பயிற்று மொழியாகச் செயல்பட்டன. இவ்வகைப் பள்ளிகளுக்கு நிலஉடமையாளர் / ஜமீன்தார் ஆதரவு உண்டு. அப்பள்ளிகளுக்கு நிலமானியம் கிடைக்கப்பட்டது.
திண்ணைப் பள்ளியில் பிற்படுத்தப்பட்டவர்கள், இசுலாமியர்கள் பயின்றனர். இப்பள்ளிகளுக்கு நிலமானியமும் கிடையாது. உள்ளூர் நிலஉடமையாளர் / ஜமீன்தார் ஆதரவும் கிடையாது. ஆனால் வேதப்பள்ளி நிலையங்கள், சைவமடப் பள்ளிகள், திண்ணைப் பள்ளிகள் ஆகிய மூன்று வகை கல்வி நிலையங்களிலும் தலித்துகளுக்கு மூடப்பட்டிருந்தன. தலித் மாணவர்களுக்கென்று தமிழகத்தின் சிற்சில இடங்களில் அவர்களால் தனித் திண்ணைப்பள்ளிகள் செயல்பட்டன.
திண்ணைப்பள்ளியில் ஐந்து வயதுடைய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஏழு முதல் எட்டு ஆண்டுகள் பாடம் படித்தனர். மேற்சொன்ன கணக்கு துல்லியமற்றது. தென்னிந்தியா முழுவதும் செயல்பட்ட திண்ணைப் பள்ளியின் மாணவர் சேர்க்கை விகிதம், படித்த கால அளவுகள் வேறுபடுவதாக பிரிட்டிசாரின் சர்வே கூறுவதாக ஆய்வாளர் செந்தில்பாபு கூறுகிறார். இப்பள்ளியில் மொழிப் பயன்பாடு, மாணவர்களின் கணிதத்திறன் ஆகியன வைத்தே அம்மாணவர் எந்த வகுப்பில் பயிலவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
உள்ளூர்ச் சமூகத்திற்குப் பங்களிப்பதற்காக மாணவனைத் தயார் செய்வது மட்டுமே திண்ணைப் பள்ளியின் நோக்கமாகும். அதை ஒட்டியே பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. இதை ஒட்டியே கடிதம் எழுதுதலுக்கும் கணக்கீட்டுக்கும் இப்பள்ளியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தமிழ் எழுத்துக்கள், துவக்கநிலை தமிழ் இலக்கணம், தமிழ் நாட்காட்டி, நிகண்டுகள், கவிதைகள், நீதிபோதனைகள், கடிதம் எழுதும் முறை, விவசாயம் மற்றும் வணிகம் சம்பந்தமாகப் பராமரிக்கப்படும் கணிதப் பதிவேடு எழுதும்முறை போன்றவை திண்ணைப்பள்ளியின் பாடத்திட்டமாகச் செயல்பட்டது. அரிச்சுவடி (மொழிப்புத்தகம்), ஆத்திச்சுவடி (பழமொழி), கொன்றைவேந்தன் (நீதிபோதனை), நிகண்டுகள், பிள்ளைத்தமிழ், பொன்னிலக்கம் (எண்கள் குறித்து), நெல்விளக்கம் (அளவை), என் சுவடி (வாய்ப்பாடு) முதலானவை திண்ணைப் பள்ளியின் பாடநூல்களாகும்.
இப்போது இங்கு “இந்தியமையக்கல்வி” என்ற ஒன்றை ஞாபகப்படுத்துங்கள். சுதேசக்கல்வியில் அறிவியல் வளர்ச்சிக்கோ, ஜனநாயகத் தன்மைக்கோ, பகுத்தறிவுச் சிந்தனைக்கோ இடமில்லை என்பது தெரியவரும். சாதி ரீதியிலான கல்விநிலையங்களும் மாணவர்களிடம் சாதி பார்க்கும் கல்விச் செயல்பாடுகளும்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்திய மையக்கல்வியாக இருந்தது.
II
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஜனநாயகமற்ற இந்துமையக் கல்வியோடு காலனியத்தின் ஆங்கிலவழிக் கல்வி இப்போது உரசிக்கொண்டது. 1813ஆம் ஆண்டு பிரிட்டீஷ் பாராளுமன்றம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. “இந்தியாவின் வருமானத்திலிருந்து ஆண்டுதோறும் ரூபாய் ஒரு லட்சத்திற்குக் குறையாமல் ஒதுக்கப்படும். இலக்கியத்திற்குப் புத்துயிர் ஊட்டுவதற்கும் அதனை மேம்படுத்துவதற்கும், இந்தியாவின் அறிவாளிகளை ஊக்குவிப்பதற்கும் பிரிட்டிஷ் ஆட்சிப் பகுதிகளில் வாழ்பவர்களிடம் விஞ்ஞான அறிவை ஊட்டி வளர்ப்பதற்கும் இந்தப்பணம் செலவிடப்படும்” (அ.நூ.தொ.23/139) என்று கூறிய அறிவிக்கை “இந்துக்களிடையே கல்வியை வளர்க்க நடவடிக்கை எடுத்துக்கொள்ளும்படியும், பாரளுமன்றத்தின் உத்தேச நோக்கங்களை இது பூர்த்தி செய்யும்…” (மேலது/139) என்றும் கூறியது.
இங்கிலாந்தின் பாராளுமன்ற அறிவிக்கையைத் தொடர்ந்து கம்பெனி ஆட்சி ஒவ்வொரு மாகாணத்திலும் கல்விச் சங்கங்களை அமைத்தது. 1814ம் ஆண்டு பம்பாய் கல்விச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. காலனியப் பாராளுமன்ற அறிவிக்கைக்கு முன்பே 1812ம் ஆண்டு சென்னை கல்விச்சங்கம் உருவாக்கப்பட்டது. சென்னை கல்விச் சங்கம் கல்லூரியாகச் செயல்பட்டது. “அரசாங்கம் ஊதியம் செய்வதன் பொருட்டு இங்கிலாந்து தேசத்திலிருந்து நமது நாட்டுக்கு வந்த ஆங்கிலேயர் இந்நாட்டு மொழிகளில் பயிற்சி பெறுவதற்காக இந்தச் சங்கம் அமைக்கப்பட்டது” என்று மயிலை சீனி வேங்கடசாமி கூறுகிறார்.
சென்னை கல்விச் சங்கத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகள் கற்றுக் கொடுக்கப்பட்டன. இக்கல்லூரியின் தமிழ்ப் பிரிவில் பணி செய்த அனைவரும் சைவ முதலியார் சாதியைச் சேர்ந்தவர்கள். இக்கல்லூரியில் இந்திய மாணவர்களும் சேர்ந்து படித்தனர். ஆனால் தலித் மாணவர்கள் சென்னைக் கல்லூரியில் பயில தடைவிதிக்கப்பட்டிருந்தனர். 1832ம் ஆண்டு சென்னை கல்லூரியில் பயில்வதற்குத் தலித் மாணவர் ஒருவர் விண்ணப்பித்துள்ளார். அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. சோர்வடையாத தலித் மாணவர் சென்னை கல்விச் சங்கத்திற்கு மனு செய்துள்ளார். இந்த மனுவை சென்னை கல்விச் சங்கம் பம்பாய் கல்விச் சங்கத்திற்கு அனுப்பியதாக பேரா.ஆ.இரா.வேங்கடாசலபதி கூறுகிறார். 1850-51ம் ஆண்டுக்கான பம்பாய் கல்விச் சங்கத்தின் அறிக்கை பின்வரும் குறிப்பை வெளியிட்டது. “பெருமதிப்பிற்குரிய மன்றம் 1830ல் சென்னைக்குப் பின்வருமாறு எழுதுகிறது. கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் மேம்பாடுகள் அபிவிருத்திகள் மக்களின் தார்மீகப் பண்பையும் அறிவுத் திறத்தையும் உயர்த்துவதில், வளப்படுத்துவதில் பெரும் பங்காற்றும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்த மேம்பாடுகள் மேல்தட்டு வகுப்புனரின் கல்வி சம்பந்தப்பட்டவையாக இருப்பது அவசியம். இத்தகைய வகுப்பினரிடையே கல்வியின் தரத்தை உயர்த்துவதன் மூலம் ஒரு மாபெரும் சாதனையைச் சாதிக்கமுடியும் (அ.நூ.தொ. 23/140). கல்வி என்பதை மேல்சாதிக்கானது என்பதைக் காலனிய நிர்வாகம் திட்டவட்டமாகத் தெரிவித்ததின் வாயிலாக சென்னை கல்விச்சங்கம் நடத்திய கல்லூரியில் தலித் மாணவர் படிக்க இயலாமல் போனது. சென்னைக் கல்லூரியின் நவீனக் கல்வி வடிவம் சாதியாய் மாறியதின் இரண்டாம் பாகத்தை இனித் தொடர்வோம்.
எல்பின்ஸ்டோன் சென்னை மாகாணத்தின் கவர்னராக இருந்த காலத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கு முனைப்பு காட்டினார். மெக்காலேயின் கல்வி முறையில் எல்பின்ஸ்டன் திருப்தி அடையவில்லை. மேற்கத்திய கல்வி முறையால் மட்டுமே இந்திய மக்களை மறுஉருவாக்கத்திற்கு உட்படுத்த முடியும் என்று எல்பின்ஸ்டன் நம்பினார். அதனால் ஸ்காட்லாந்து கல்வி முறையைப் பின்பற்றி மேற்கத்திய இலக்கியம், தத்துவம், அறிவியல் ஆகியவை பாடத்திட்டங்களில் இடம் பெற வேண்டும் என நினைத்தார். உயர்நிலைப்பள்ளியில் மேற்சொன்ன பாடத்திட்டம் தொடக்கநிலைப் பாடமாகக் கற்பிக்கப்பட்டது. இவற்றோடு மொழிப்பாடங்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டன.
எல்பின்ஸ்டன் 1839ல் கல்வி குறித்து இரண்டு குறிப்புகளை விட்டுச் சென்றார். 1. ஐரோப்பிய இலக்கியங்கள், அறிவியல்களை சுதேச மக்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்பதான பெண்டிங்ஸ்சின் கருத்தை எல்பின்ஸ்டன் ஏற்றுக்கொண்டார். மொழிப் பாடத்தில் ஆங்கிலம் கற்பிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றார். 2. லண்டனில் உள்ள கம்பெனிகளின் இயக்குநர் குழு சில வருடங்களுக்கு முன்னர் “கல்வியில் வடிகட்டும் கொள்கையை” உருவாக்கியது. அக்கொள்கையை அவ்வாறே எல்பின்ஸ்டன் எடுத்துக் கொண்டார். இவருக்கு வெகுசனக் கல்வியில் நம்பிக்கை இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட மேட்டுக்குடியினருக்கு மட்டும் கல்வி கிடைத்தால் போதுமானது என்று கூறினார். “சமூகத்தில் உயர் அடுக்கில் உள்ள சிறந்தவர் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆங்கில வழியில் மேற்கத்திய கலாச்சார வடிவிலான இலக்கியக் கல்வியைப் பயிற்றுவிக்க வேண்டும்… மேற்கத்திய கலாச்சார வடிவிலான கல்வி முறையில் பயிற்றுவிக்கப்படுபவர்கள் இருவகை செயலில் ஈடுபடவேண்டும். தான் பெற்றுக் கொண்ட அறிவொளியை மீதமுள்ளோருக்கு வழங்க வேண்டும். அரசாங்கப் பொறுப்புகளுக்குத் தோள் கொடுக்க வேண்டும்” (R.சுந்தரலிங்கம்/59-60) என்றும் எல்பின்ஸ்டன் கூறினார்.
எல்பின்ஸ்டனின் அறிவுறுத்தல்களைக் கவனத்தில் கொண்டு சென்னைப் பல்கலைக்கழகம் 1841ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1841ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளி என்று அது அழைக்கப்பட்டது. 1840ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழத்திற்கான நிர்வாகக்குழு உருவாக்கப்பட்டது. சுதேசிகள், காலனிய அறிவாளிகள் என்பதாக 15 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. இந்துக்கள், இசுலாமியர்களின் நெருக்கடியால் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கல்வித்திட்டத்தில் மதம்சார் நூல்கள் தவிர்க்கப்பட்டன. கல்வித்திட்டத்தில் மதச்சார்பின்மை கடைபிடிக்கப்பட்டது. கல்விக்கட்டணம் 4 ரூபாய் என்று முடிவானது. இக்கட்டணம் மிக அதிகம். அதிகக் கட்டணம் வாயிலாக தலித் மாணவரின் பள்ளி நுழைவு தடுக்கப்பட்டது. அத்தோடினின்று பிராமணர்கள், உயர் சாதியினர்களிடமிருந்து உயர்வர்க்கநிலை மாணவர்களே 4 ரூபாய் கட்டணத்தில் சேர்ந்து படித்தனர். கல்விக் கட்டணத்தைக் குறைக்க 10 ஆண்டுகளாக முறையிட்டும் பயனில்லாமல் போனது. இதனால் உயர்சாதி ஏழைகள் கூட கல்வி பயில இயலவில்லை. உயர்சாதி தொகுப்பில் உள்ள உயர் வர்க்கத்தினர் மட்டுமே பயிலவேண்டும் என்பதில் பல்கலைக்கழக நிர்வாகக்குழு உறுதியாக இருந்ததைப் போன்று “சாதி இந்துக்களின் செல்வாக்கிற்கு மதிப்பு கொடுத்து தீட்டு ஏற்படுத்தக்கூடிய சாதிகளின் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் சேருவதைத் தடுப்பதற்குப் பல்கலைக்கழக நிர்வாகக்குழு முனைப்புக் காட்டியது” (மேலது/61).
சென்னைப் பல்கலைக்கழக கல்விக்கதை இவ்வாறு இருக்க சென்னையில் முதன் முதலாகப் பெண்களுக்கு நவீனக் கல்வி கொடுப்பதற்காக உருவான ஆங்கிலப் பள்ளியின் கதையையும் படித்து விடுவோம். உயர்சாதியைச் சேர்ந்த பெற்றோர் தங்களது பிள்ளைகளை 1850 முதல் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். முழுப்படிப்பையும் பெண்கள் முடிப்பதற்கு முன்னர் பாதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளை ஆண் ஆசிரியர்களின் வகுப்பிற்கு அனுப்ப மறுத்து திருமணம் செய்து வைத்தனர். சென்னைப் பகுதி சீர்த்திருத்த செயல்பாட்டாளர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இத்தருணத்தில்தான் மேரி கார்பண்டர் சென்னைக்கு வந்து சேர்ந்தார்.
ராஜாராம் மோகன்ராய்யின் நண்பர் என்ற அறிமுகம் சென்னை உயர்சாதி கணவான்களிடம் உரையாடுவதற்கு மேரி கார்பண்டருக்கு உதவியது. பெண்கல்வியின் முக்கியத்துவம் குறித்து அவர் சென்னை மக்களிடம் 1867 ஜனவரி முதல் உரையாடினார். இன்னொருபுறம் பெண்களுக்கென்று தனிப்பள்ளியை உருவாக்க வேண்டுமென்று காலனிய அரசை வலியுறுத்தினார். மேரி கார்பண்டரின் நெருக்குதலால் காலனிய அரசு ஒப்புதல் தெரிவித்ததோடு ஒரு பகுதிக்கான நிதியைத் தருவதாக ஒப்புக்கொண்டது. மீதிப் பணத்திற்கு நன்கொடை திரட்டப்பட்டது. இத்தருணத்தில் விஜயநகர ராஜா வருடத்திற்கு பன்னிரண்டு ரூபாய் தருவதாக ஒப்புதல் அளித்ததின் பேரில் பெண்கல்விக்கான பள்ளி ஒன்று உருவாக்கப்பட்டது. 1869ல் பெண்கள் மட்டுமே பயில்வதற்கான சிறப்புப்பள்ளி ஒன்று உருவாக்கப்பட்டது. இதற்கு Female Normal School என்று பெயரிடப்பட்டது. இப்பள்ளில் உயர்சாதிப் பெண்கள் மட்டுமே படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். தலித் பெண்கள் இப்பள்ளியில் இருந்து விலக்கப்பட்டனர்.
காலனியத்தின் கல்வி உருவாகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தலித் மாணவர்கள் 1851ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயில நுழைந்தனர். தலித் மாணவர்களின் வருகையை சாதி இந்து மாணவர்கள் தங்களது ஊழைச் சத்தத்தால் வரவேற்றனர். தொடர்ச்சியாக சாதி இந்து மாணவர்கள் பல்கலைக்கத்திலிருந்து வெளியேறிப் போராடினர். சாதி இந்து மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்கலைக்கழக நிர்வாகக்குழு உறுப்பினர் ஒருவர் ராஜினாமா செய்தார். இதனால் பல்கலைக்கழக நிர்வாகக்குழு தவித்துப்போனது. இருப்பினும் நீண்ட யோசனைக்குப் பிறகு சமூகப் பாகுபாடுகளைக் கல்வி நிறுவனத்திற்குள் அனுமதிப்பதில்லை என்று பல்கலைக்கழக நிர்வாகக்குழு அறிவித்தது. இதைத் தொடர்ந்து 1870ஆம் ஆண்டு முதல் காலனிய அரசு கல்வி நிலையத்தில் சமூகப்பாகுபாடு கடைபிடிக்கக்கூடாது என்று அறிவித்தது. காலனியத்தின் பொதுப்பள்ளியும், பெண்களுக்கான சிறப்புக் கல்வியும் ஒரு பகுதி மக்களை விலக்கி வைத்ததின் கதை, இந்து மையக்கல்வியான திண்ணைப்பள்ளி, வேதக்கல்வி, சைவக்கல்வியின் கதையோடு இணைவதை இங்கு நாம் குறிப்பிட வேண்டும். காலனியக் கல்வியில் கூட ஒருநாள் தலித்துகள் அனுமதிக்கப்பட்டனர். சுதந்திரம் கிடைக்கும் வரையில் வேதக்கல்வி, வைணவக் கல்வி, சைவக்கல்வியில் தலித்துகள் அனுமதிக்கப்படவில்லை என்பதை இங்கு சொல்லி வைப்போம்.
III
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியமையக்கல்வி இந்துமயக் கல்வியாகத் தென்பட்டது. இந்துமயக்கல்வி காலனியத்தோடு ஊடாடி சிற்சில மாற்றங்களுடன் வளர்ந்து வந்தாலும் அனைவருக்குமான கல்வி என்பதில் ஏராளமான முரண்பாடுகள் தென்பட்டன. இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு ஜவஹர்லால் நேரு புதிய இந்தியப் பண்பாட்டை உருவாக்க முயற்சித்தார். நவீன அரசியல் சாசனம் அதுவரை புனிதத்துவப்படுத்தப்பட்ட மனுசாசனத்திற்கு எதிராக வடிக்கப்பட்டது. சுந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், முதலிய கோட்பாடுகள் இந்திய நவீன வாழ்வின் சட்ட சாசனமானது. நவீன அறிவியல் வளர்ச்சிக்கு வித்திடும் அறிவியல் மையம் உருவாக்கப்பட்டது. உயர்கல்வி, உயர் ஆய்வு மையம், பல்கலைக்கழகங்களை உருவாக்குதற்கான பல்கலைக்கழக மானியக்குழு உருவாக்கப்பட்டது. இந்திய மக்களின் கல்வி வளர்ச்சி பகுத்தறிவு, ஜனநாயகம், சோசலிசம், அறம் எனும் விழுமியங்களின் அடிப்படையில் வளர்ப்பதற்கான கல்விக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. மொத்தத்தில் நவீன இந்தியாவின் பண்பாட்டு உருவாக்கங்களிலே நேருவின் வேலைத்திட்டம் கவனம் குவித்தது.
1964ல் ஜவஹர்லால் நேரு இந்தியாவிற்குத் தேவையான நவீன கல்வியை உருவாக்குவதற்கு D.S.கோத்தாரி தலைமையில் குழு ஒன்றை உருவாக்கினார். இந்தியக் கல்வியின் திசைவழியை கோத்தாரி கல்விக் குழுவே தீர்மானித்தது. இந்தியாவின் கல்வித் திசை வழியைத் தீர்மானித்த கோத்தாரி குறித்து சிறிது பார்க்கலாம்.
தௌலத் சிங் கோத்தாரி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூரில் ஜுலை 6, 1906ம் ஆண்டு பிறந்தார். ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தையின் பெயர் பேத்லால் கோத்தாரி. பள்ளி ஆசிரியர். தனது 38 வயதில் பிளேக் நோயால் உயிரிழந்தார். அதன் பின்னர் தந்தையின் நண்பரின் உதவியோடு இந்தூரில் பள்ளிக் கல்வியை முடித்தார். இந்தூரில் 1922ல் இண்டர்மீடியட் பருவத்தை முடித்த கோத்தாரி இளங்கலை இயற்பியலை 1926ம் ஆண்டும் முதுகலை இயற்பியலை 1928ம் ஆண்டும் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார்.
அலகாபாத் பல்கலைக்கழகத்தில்தான் மேக்நாத் சாஹா எனும் பேராசிரியரின் அன்பைப் பெற்றார். மேக்நாத் சாஹா இந்திய அணுத்துறையில் தேர்ந்த அறிவாளி. மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். தலித் குடும்பத்தில் பிறந்த போதிலும் தனது கல்வித் திறத்தால் இந்தியாவின் நவீன அறிவியலராக உருவானவர். இத்தகையச் சிறப்பு கொண்ட மேக்நாத் சாஹாவின் ஆலோசனையின் பேரில் இங்கிலாந்தில் உள்ள கேட்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை முடித்துத் திரும்பினார்.
டெல்லிப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையைச் செழுமைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட கோத்தாரி 1948ம் ஆண்டு இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவியல் ஆலோசகராக இருந்தவரை 1961ல் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராக நேரு உயர்த்தினார். அதன் பின்னர் இந்தியக் கல்விக் குழுவின் தலைவராக 1964ல் நேருவால் நியமிக்கப்பட்டார். 1966ல் கோத்தாரி தனது அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பித்தார்.
கோத்தாரி கல்விக்குழுவின் முகப்பு இவ்வாறு தொடங்குகிறது. ‘இந்தியாவின் தலைவிதி இப்போது அவர்களது வகுப்பறைகளில் வடிவமைக்கப்படுகிறது. இது வெறும் வாய்ஜாலம் அல்ல என்று நாங்கள் நம்புகிறோம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட உலகில், மக்களின் வளம், நலன் இவற்றோடு பாதுகாப்பின் அளவையும் கல்வியே தீர்மானிக்கிறது. நமது பள்ளிகள், கல்லூரிகளில் இருந்து வெளிவரும் மாணவர்களின் தரமும் எண்ணிக்கையுமே தேசிய மறுசீரமைப்பு என்ற மாபெரும் நிறுவனத்தின் வெற்றியாகும். நமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். இக்குழு கல்வியின் பல்வேறு அம்சங்களை ஒட்டுமொத்தமாகப் பரிசீலித்துப் பல பரிந்துரைகளை வழங்கியுள்ளது. பணி அனுபவம் தொடர்பான பரிந்துரைகளும் இதில் அடங்கும். சமூக சேவை, தார்மீகக் கல்வி, தொழில்கல்வி, ஆசிரியர் பயிற்சி, விவசாயம், பயன்பாட்டு அறிவியலில் ஆராய்ச்சி இன்னும் பிற. கல்வி ஆணையத்தின் இந்த அறிக்கை, இந்தியா மற்றும் பிற வளரும் நாடுகளின் கல்வி வளர்ச்சியில் ஒரு மைல்கல்லாகப் போற்றப்படும்…4*
கோத்தாரிக் கல்விக் குழுதான் அனைவருக்குமான கல்வியை அதன் பொருளில் உறுதிபடுத்தியது. கல்வியில் வடிகட்டுதல் முறைக்கு எதிரான இந்தியக் குரல் இதுவாகும். நாடுமுழுவதும் பொதுப் பள்ளிகளை உருவாக்குதவற்கு வித்திட்டது. இத்தகைய பொதுப்பள்ளிகளில் சாதி, மதம், இனம், பொருளாதார வேற்றுமைகளைக் களைந்து அனைத்துத் தரப்பு மாணவர்களும் நவீனமயமாக்க வேண்டும் என்று கூறியது. நவீனப் பள்ளிகளை நிர்வகிக்க வேண்டும், சமூகத்தின் அறிவு வளர்ச்சிதான் சமூக மாற்றத்திற்கு வித்திடும் என்று அறிவித்தது. மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டி எதையும் ஆராய்ந்து பார்க்கும் மனப்பான்மையின் செயல்திறனையும் கல்வி உருவாக்க வேண்டும் என்று சொன்னது.
சமூகத்தில் உள்ள சராசரி மனிதனின் கல்வி நிலையை உயர்த்துவதோடு அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் கணிசமான எண்ணிக்கையில் உயர் அறிவாற்றலும், திறமையும், அறிவியல் மனப்பான்மையும் உள்ள வர்க்கத்தை உருவாக்க வேண்டும் என்றும் கோத்தாரி கல்விக் குழு கூறியது. அறவழிப்பட்ட அறிவு உருவாக்கம், இயற்கை அறிவியல் சமூக சேவை, முதலானவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தது. இக்குழுதான் இந்தியக் கல்வியை 10 +2 +3 என்பதாக வரையறுத்தது.
கோத்தாரி கல்வி ஆணை குறித்து ……….. என்பவர் இவ்வாறு கூறுகிறார் “கோத்தாரியின் தலைமையிலான இந்தியக் கல்வி ஆணையம் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். இது அவரது பரந்த அனுபவம் மற்றும் கல்விக்கான அர்ப்பணிப்பால் மட்டுமல்ல, ஒரு அரிய மனிதனின் தார்மீக மற்றும் அறிவுசார் பண்புகளாலும், ஆழமாக சேவை மற்றும் இரக்க உணர்வாலும், அறிவியல் மனப்பான்மை, இந்தியாவின் கலாச்சார அனுபவம் மற்றும் மரபுகளின் சாரத்தில் இருந்தும் பெறப்பட்டது”.5
இங்கே கோத்தாரி பயன்படுத்திய சொற்களைக் கவனியுங்கள் “அனைவருக்குமான”; “பேதமற்ற பொதுக்கல்வி”, “அறிவியல் மனோபாவம்”; “அற உணர்வு”, “சமூகச் சேவை”. இப்போது இங்கு பாசக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கை 2019ன் வரைவறிக்கையையோ; தேசியக் கல்விக் கொள்கை 2020 அறிக்கையயையே நினைத்துப் பாருங்கள்.
மோடியின் பாசக அரசு நேரு உருவாக்கிய அரசியல் பண்பாட்டை உடைத்து நொறுக்குகிறது. அதன் செயல்திட்டத்தின் ஒரு பாதியாகத்தான் நேரு உருவாக்கிய கல்விப் பண்பாட்டை அழித்தொழிக்கிறது. நேருவின் இந்தியா இருமொழிகள் என்றது. மோடியின் இந்தியா மூன்று மொழிகள் என்கிறது. நான்காவதாக சமஸ்கிருதத்தை மறைமுகமாக நுழைக்கப் பார்க்கிறது. அனைவருக்கும் கல்வி என்ற நேருவின் இந்தியக் கனவை உயர்சாதியினருக்கு மட்டுமேயான கல்வியாக மோடி இந்தியா உருவாக்குகிறது. நேரு இந்திய மையக்கல்வியான சனாதனமும்; சனாதனத்தைத் தழுவும் காலனிய மையக் கல்வியின் வடிகட்டுதல் முறையை நிராகரித்தார். மோடி காலனிய வடிகட்டுதலை மீட்டுறுவாக்குகிறார். இச்செயல்பாடு சுதந்திர இந்தியாவிற்கு எதிரானது.
Art : Shashikant Charbe
அ.ஜெகநாதன் ஆய்வாளர்.மதுரையில் வசிக்கிறார்.








Leave a Reply