அறுவடை நாள்
கழுத்தில் சன்னமான
கோடுகளை உடைய காகங்கள்
ஒரே குரலில் மனிதப் பெயர்களை
ஒன்றன் பின் ஒன்றாக அழைத்தன
அதில் ஒருவர் கூட இப்போதங்கு இல்லை
ஒரே நாளில் தலையில் இருந்து வயிறுவரை
நீண்டு விட்டது வயல்
தேய்பிறையிலிருந்து வளர்ந்து தேய்பிறைக்கே
திரும்பிவிட்டது நிலவு
வெயில் மறைந்து இருளுக்குள் நுழையும் பொழுதில்
ஆழமான கிணற்றருகே கண்டெடுக்கப்பட்ட உடல்
தங்கமாக மின்னுகிறது,
முன்னொரு காலத்தில்
மண் குளித்து இறந்தவரின் உடலென்று
ஊரார் பேசிச் செல்கின்றனர்
மீண்டும் வீடு திரும்புவதற்கான வழியை
மறந்துவிட்டுப் போகும் அவர்களுக்கு
இன்றுதான் அறுவடையின் முதல் நாள்.
இழப்பென்பது
இழப்பைப் பற்றிய உரையாடலின் போதெல்லாம்
எரிந்து சாம்பலான வீடொன்றை நினைத்துப்
பயம் கொள்ளும் கண்களுக்கு,
சுவரின் எந்தப் பகுதியில்
யாரின் கண்கள் வரைந்து அழிக்கப்பட்டது
எந்த ஜன்னல் கம்பிகளுக்கு
என்னென்ன பெயர் வைக்கப்பட்டதென
எல்லாமே தெரியக்கூடும்.
ஏக்கமும் துக்கமும் வந்து அடைத்துக் கொள்ளும்
நாட்களில் எல்லாம்
வானத்தின் தூதுவர் வந்துசேரும் பாதையில்
பதிக்கப்பட்டிருந்த நட்சத்திரங்களை யார்
மிதித்திருப்பார்களென எல்லாம் தெரியும்
இருண்டு அடர்ந்த காடுகளை நினைவுப்படுத்தும்
பெயரற்ற மரத்தின்மேல் அமரும் பறவைகள்
வந்த வழியே திரும்பிச் செல்வதையும்
அதன் கலங்கிய கண்களையும் என
எல்லாமே தெரிந்திருக்கக்கூடும்
Art : John Everett Millais








Leave a Reply