Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

“ஹா-ரி-தி:நீ-லி-தா” – ஆறாம் நவீனத்தில் அத்தியயிக்கும் மூன்று கதாச் சுருள்கள்

கோணங்கி .
கோணங்கி .
September 1, 2025
“ஹா-ரி-தி:நீ-லி-தா” – ஆறாம் நவீனத்தில் அத்தியயிக்கும் மூன்று கதாச் சுருள்கள்

1. வெள்ளரிக்கண் லவண–கோட்டை

கப்பகரப்பு குருடர்களின் பார்வைத் தடாகம்

கப்பகரப்பு உப்புத்தொடைப்பாதை கள்ளத்திமுடுக்கு மூக்கரைக்கழுதை மேல் சிராப்பள்ளி சுருட்டுக்காரன் ஒரு கையில் ஹோமரின் தினம் ஒரு கண்மலர் ஏந்தியதில் அதன் புராதன வாசனைப் புதிர்கள் கூட்டிவர மறுகை விரல்கள் மேல் கால் வைத்திருக்கும் கபிஞ்ஜலா கிளி செங்கபாடம் திறந்து உதிர்க்கும் புத்தரின் தித்திரி ஜாதகம் அணுத்துகள் நெய்தவாசல் பிறையொளி மறைப்பில் உவர்ந்திருந்த கடலிலும் வானத்திலும் மயங்கியிணையும் நீலக்கோடுகளின் கிறக்கத்தில் சுருட்டுப் புகையாய் அரவு புனைநிழல் வளைந்துவரும் பாதை. சுருட்டு ஒரு பெரியவளம். சிராப்பள்ளி சுருட்டு உங்களுக்கு இன்பத்தையாவது வழங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ள நீங்கள் நீண்டநேரம் ஸ்டாரெஸ்ட்களின் கப்பலில் பயணம் செய்திருக்க வேண்டியது அவசியம். சுருட்டு உங்களுக்கு உத்வேகத்தை அளிக்கிறது. நீங்கள் ஏதாவது ஒன்றால் தொல்லைக்கு ஆளாகியிருக்கிறீர்களா? சிராப்பள்ளி சுருட்டு அதனைக் கரைத்து விடுகிறது. நீங்கள் வலியுணரும்  மனநிலைக்கு ஆளாகி இருக்கிறீர்களா? சிராப்பள்ளி சுருட்டு அதனைக் கரைத்து விடுகிறது. நீங்கள் சந்தோஷமற்ற துன்பகரமான ஞாபகங்களால் தொல்லைப்படுத்தப்படுகிறீர்களா? ஒரு  சிராப்பள்ளிசுருட்டை புகைப்பது இவை அனைத்தையும் தூக்கி எறியும் மனநிலையில் ஒருவரை வைக்கிறது. நீங்கள் எப்போதாவது பசியால் சிறிது மயக்கமடைந்திருப்பதை உணர்ந்திருக்கிறீர்களா? சிராப்பள்ளி சுருட்டு அந்த ஏக்கத்தைத் தீர்த்துவிடும். நீங்கள் சுகமான ஞாபகமறதியில் பீடிக்கப்பட்டிருந்தால் சிராப்பள்ளி சுருட்டு உங்கள் மனதை அவற்றிலிருந்து எழுதும் பாதைக்குக் கூட்டிச் சென்றுவிடும். சிராப்பள்ளி சுருட்டு இறுதியாக நீங்கள் சில நேரங்களில் சுகமான ஞாபகவெளியில் புனைவுப்பாம்பின் சுருள்சுருளான கற்பனைத்தாவரத்தின் உலர்ந்த வாசனையில் புகைத்துக் கொண்டிருப்பீர்கள் இல்லையா? சிராப்பள்ளி சுருட்டு நூதனபுனைகதைகளை மேலும் வடிவமாக்குகிறது. சில நேரங்களில் சுருட்டுகள் அணைந்து போவதுண்டு. மிக விரைவில் மீண்டும் பற்றவைக்க வேண்டும் என்ற தேவையில்லாதவர்கள் தன்னெழுச்சியாக சுருட்டைப் பற்றி மேலும் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். முற்காலத்தில் அது ஆற்றிய சேவைகளுக்காக இந்த சிறிய சிராப்பள்ளி சுருட்டின் குறிப்புகளை நான் உங்களுக்கு வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

 “எருக்கம்பூக்களின் சொடக்குச் சத்தம் உவட்டுக் கல்மொழி பேசுமே…” என்றது கபிஞ்ஜலா கிளி. வானம் திருப்பி வைக்கப்பட்ட மிகப்பெரிய கோப்பை என்றும் பூமி ஒரு  பெரிய சமதளமான தட்டு என முதலில் சொன்னவர்கள், பிறகு நீணிலவெளியைச் சுருட்டியெடுத்து உப்புவிரல்களால் உருட்டிப் பிரபஞ்ச வெளிக்குள்  தூக்கி எறிந்தவர்கள் தாமென இராண்டாம் முறையாக நம்பினார்கள் கமாராவாசிகள். லவண-துர்க்கை உவட்டுக் காட்டுக்கதவு துருப்பிடித்துக் கரகரத்த ராத்திரி யாரோ கூப்பிடும் முனிப்பாய்ச்சல். ஈட்டிக்கொண்டிக் கதவுச் சுவர்க் கணிஜப்பூண்கள் பேயழுதாற்போல் திறக்கும் சப்தம். தலைவாயிலின் முன்வரிசசைப் பரிவாரங்களில் ஒன்று சிங்கத்தின் பெருவாயில் உருளும் கல்பூமி சுழன்று கொண்டிருக்கிறது. சிங்கத்தின் உரையாடலில் வினோத மொழி இரவெல்லாம் கேட்கிறது. கதைபூமி கல்லாக மாறிய கல்லாகவே சுழன்று கொண்டிருக்கிறது. அருகில் “எனது கருப்பையிலிருந்து இரவில் வெளிவருகிறது என்மேல் மிதக்கும் நிலவு.அது நான்பெற்ற உலகின் மாபெரும் முட்டை”என்றது குருடர்களின் பார்வைத் தடாகம்.

உலகின் மாபெரும் முட்டையிலிருந்து கெள்ளிப்பறித்த ரஸவாத வேர்களைக்கையில் ஏந்தி நிற்கும் ‘தியாமத்தா முதலூழி ஏசல்’ சித்ரமடக்கு ஓலைகளின் வரைந்த ஆலிவ்நிற ஏழு மந்திர தேவதைகளைப் பெற்றவள் தன் உன்னத உயிர் விரல்கள் பிறை நகங்களால் முனகும் மெல்லிய தொனி  கொடுக்கும் கரங்களில் தான் படைத்த வெள்ளரி கண் லவண மலர்களை அவர்கள் மூன்று அந்கத நூலகர்களுக்காக ஏந்தி வருகிறார்கள். அவள் படைத்த சிறு லவண -வெள்ளரிக்கண் கடலடிக் குருட்டு உயிரினங்களின்கூட்டம் கூட்டமாய் அவளை நோக்கித் தாவித்துள்ளிப் பாடுகின்றன ஆழிப்பேரலைகள் மீது. தியாமத்தாவின் பாதாள நகரம் கீழே நூறு நூறு கெஜங்கள் கையளந்த பாகங்களுக்குக் கீழே தமிதோ மொழியின் மாயத்திறம் வாய்ந்த வரையுருவங்கள் ஐவகைத் திணைகளின் சித்திர மரபுகளாய் அவள் மடிதுருத்திய பிறைக்கட்டுகள் பத்துக்கு மேற்பட்ட மாதிமஞ்ண்சார் சித்திர மரபினங்களின் மடக்கு ஓலைச்சுவடிகளாய் விரிந்து கொண்டிருக்கின்றன. அவள் பாதாள உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் லவண- கோட்டைக்குள் மையத்தில் உள்ள கவிகை மாட மறைவு மைக்கண்ணாடிகளுக்கும் சித்திர அபிதானங்களுக்கும் இடையில் வானவில் வர்ணங்களாலான இப்பூமியை ஈன்றெடுத்த கோண்டுத்தாய் இரலைமான்களை ஈண்டித் தூங்கியபடி இருக்கிறாள் லவணக்கோட்டையில்.

பார்வைத் தடாகத்தின் நீரின் தேசல்ஒளியிருட் குழிவிலிருந்து ஆலிவ்நிறப் பச்சைய ஸர்ப்ப மூதாய் தியாமத்தா துயர இசையின் மெல்லிய ஒலி இயைபுக்கு ஏற்ப அவளை நோக்கிச் சித்திரக்காரிகள் நீலமஞ்சள்குருட்டுநிலையில் நகர்கிறார்கள். திமாத்தா ஊர்ந்து சென்ற தடங்களில் தூரிகைக்கால் வண்ணத்திகள் கூட்டமாப்பறந்து தொடுகின்றன அவளை. மணல் எக்கர்களில் அவள் வரைந்தகோடுகளினுருமறைவில் அவள் போன இடத்தைத் தேடுவதிலேயே சித்திரஞானமுற்றனர் திருகுமறுகான புதிர்ப் பாதையில் திடீர்த் திருப்பங்களில் தப்பிக்க முடியாதவர்களாக வெளியேறுவதற்கு தியாமத்தா முதலூழிஏசல் சித்திர மடக்கு ஓலைகளைத் திறந்து அவள் மறைவிடத்தைக் கண்டுணர்ந்து விடுகிறார்கள். தியாமத்தா கனாத்தோற்றங்களில் ஸர்ப்பத்தின் பாதையில் நடந்து திரும்புவதற்குரிய புதிர்வழிகளிளில் பலவிலங்குருக்களின் மாந்திரீக வட்டத்தில் நடைகொண்ட விலங்குகளின் வட்டத்தில் திருகுசுருளாய்ச் சுழலும் டிராகனின் செதில்களில் வரைந்துள்ள சித்திர விசித்திரங்கள் பாதைகளில் உதிர்ந்தபடி இருக்க, அந்த டிராகனின் பொற்பழையமூன்று சித்ரகபாலங்களைத் தொட்டதும் வேறான சடங்குகளிலும் புராணிகங்களிலும் நுழைந்துவிடுகிறார்கள் மூன்று அந்தக நூலகர்கள். ஏனெனில் காண்டாமிருகத்தின் மீது அமர்ந்திருக்கும் லவணன் அதன் ஒற்றைக் கொம்பைப் பிடித்தவாறு கையில் சொர்ணப்பறவை இறக்கை எழுத்தாணி கொண்டு வரைவதற்காக அவளைத் தேடி வருகிறான். அவன் கையிலுள்ள மூங்கில் காகிதங்கள் காண்டாமிருகத்தின் திருகு சுருளான வட்டத்தில் சுழலச் செய்வதன் மூலம் தியாமத்தா பெண் பரிதிக்குத் திரும்புவதைக் குறிப்பதாக இருக்கக்கூடும். அறியப்படாத எரிது நகரத்திலும் உதிரும் சுவர்ச்சித்திங்களை மறுபனுக்கம் செய்வதற்கு அங்கே அமரர்களின் இருட்டுமைக் கண்ணாடியில் எரிது நகரெங்கும் சுட்ட சித்துச்செங்கல்கள் உதிர்ந்து கொண்டிருக்கும் பாழடைந்த வீதிகளில் மறைந்தோரின் செவ்வெலும்புகளின் அங்காதிபாகங்களில் மாண்டோர் தொலிச் சுருக்கங்களுக்குள் வரையப்பட்ட துணிமணிகளின் கிழிசல்கள் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும்.கச்சாங்காற்று கசந்துவீசி ஈமப்பேழைகளில் எதிர்-எதிர் மூச்சுக் காற்றாய் மாறிப் புராதனச் சித்திரஆடைகளை உருவங்களாக உயிருற்றெழ வைத்த இரஸவாதி பாரசெல்ஸஸ் ஆடியில் நடமாடும் ஆழிபொம்மை நிழலாட்டம். கண்ணாடிக் கதவுகளைத் திறந்து கல்லரக்குத்தாளைக்கிழித்துக் கொண்டு வெளிவருகிறார்கள் சித்ரமனிதர்கள்.

 இரஸவாதி பாரசெல்ஸஸ் இருந்த அறைஇருளில் மூழ்கி இருந்ததால் சுற்றிலும் விளக்குகளை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். ‘தியாமத்தா முதலூழி ஏசல்’ஏட்டுநரம்பிழைபின்னிய மரப்பட்டைச்சுவடி தானே திறந்துகொள்ளும் பக்கங்களிலிருந்து வரும் கருங்களர் நிலத்துத் திரிக்காரிகள் இப்போது சில கல்லரக்குத்தாள் பக்கங்களைப் புரட்டி எழுத்துகளை இணைக்கத் தொடங்குகிறார்கள். பிறகு எழுத்துகளைத் தமிதோக்களின் திணை வெளி மொழியணங்குகள் ஒரு கையிலுள்ள ஏசல் சருக்கக் காகிதங்களை ஒன்றுக்கொன்று தலைகீழாக இடம்மாற்றித் ‘தியாமத்தா முதலூழி ஏசல்’ புத்தகத்தை ஒற்றைநாடி மீமிகைப்புனைவு எழுத்து முகம் கொண்ட நிசாபா வெகுவாய் வெகுபாஷைகளை முகம் முகமாய் எழுதியிருந்தாள். காலமெல்லாம் எழுத்து முகத்தில் ஒடித்த முறிஊசிகளைக் கொண்டு தியாமத்தா மொழி அபிதான கோஸத்தை முதலில் சொல்அகராதியின் அகரவரிசையில் உயிர்மெய் எண்களின் இசைவிலக்கண இணைவில் தோன்றும் தியாமத்தா பெருநூல் காவியத்தைப் பழைமைக்கு அப்பால் மறதியில் மூழ்கியுள்ள புறநடைநயப்பண்பு நனவிலித் திணைவெளிக் கருவுருக்களாலான மொழிஅகராதியை இணைக்கத் தொடங்கு கிறார்கள்.

 2. மூன்று அந்தக நூலகர்கள் வந்த சொல்லமுதக் கிள்ளைகளின் நந்தன கானகம்

நாளந்தலா மாதிமஞ்ண்சார்விபுலாவின் மூன்று அந்தக நூலகர்களும் நாடோடிகளாத் திரிந்ததையும் இருளிவிருட்சத்தின் தோற்றத்தையும் வரைந்து கொண்டிருந்தது கபிஞ்ஜலா கிளி.

பறவைப்பாதமுள்ள சாக்யா என்று நம்பப்படும் போதிசத்துவர் பறவைவைக் கருவட்டமாய்ச் சுழன்றுசுற்றி கபிஞ்ஜலா கிளிஉருவெடுத்து கமாராவில் முதல் நூற்றாண்டிலிருந்து செம்படவர்சேரியில் கட்டுச்சேவல், கௌதாரிகளோடு கப்பகரப்பில் பறந்துதிரிகிறார்.பாழடைந்த வீதியில் சிப்பிச்சுண்ணாம்புக்காரை கருத்த மாடவீடுகளில் கோட்டான்கள் உறங்குகும் மூச்சரவம்.இறாமீன்,ஆமை செம்படவசனம் சுறாமீன் கொம்புகளை மணலெக்கர்மேல் நட்டி இறைச்சிககளைப் படையலிட்டு மாந்தியுண்ணும் ஏனாதிபிள்ளைகள் பவழக்கால் நண்டுகளோடு மணலில் விளையாடுகிறார்கள். சாயாவனத்தில் வருடைமான்கூட்டம் பரதவர்களோடு துள்ளிக்குதித்து விளையாடுவதும் பௌத்தக் கலையில் அடிக்கடி சித்தரிக்கப்படுகிற ஜம்புத்வீப நாவல்மரத்துடன் பிணைக்கப்பட்டு வாழ்ந்து வரும் கபிஞ்ஜலா கிளிசொன்ன அதிசயம் “ஒன்னார்கடிமத்தில் பாயுனின் களிறடங்கவே” செம்பினை உருக்கி மதில்களைத் தகர்க்க முடியாதவாறு கட்டிடக்கலை உச்சநிலையை அடைந்திருந்தது. பகைவர்களால் கரிகாலன் கோட்டைக்குள் நுழையமுடியாது.நிலவின் ஒளிகூடப் புகமுடியாதிருந்தது. மண்மம்,மரம், சித்துச்செங்கல் சுட்ட மண்ணீட்டாளரும், கல்வினைஞரும் அரக்குப்பூசும் மந்திரக்கொத்தரும்  திணிமணல் செய்யுறு பாவைக்குக் காதைகளின் சலனம் காவேரி வாய்க்காலில் இருட்டு நீரோட்டத்தில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. மேகலா தெய்வம் பௌத்தத் தாந்திரீக வழிபாட்டில் கடலூழிக்  காலத்தை மறைபுதிராய்க் கொண்டிருக்கும் கடற்சிலம்பை ஜம்பைமரத்தின் உட்பகுதி ஆவியாகும். விருட்சகன்னிஅழிந்தால் அதனுடன் கபிஞ்ஜலா கிளி கனியின் பாதையில் சென்று மரஆவியின் இளம்தேவதை உருவில் புத்தரின்சாயை தாவரஆன்மாவுடன் வளர்ந்து வரும் மஹாயான மரபுகளுடன் தொடர்புடைய கபிஞ்ஜலா கிளி, பூர்வ ஜாதகக் கதைகளில் தித்திரி ஜாதகம் ஓலைச்சுவடியின் சாயலையும் அடுக்கிய தேய்பிறை ஓலைத்துளைகளில் வளர்பிறைக் குருத்தோலைகளை அட்சரபடலிகரால் மெய்ப்பு நோக்கல் திருஷ்டம். வளையத்தில் கோர்க்கப்பட்ட பிரதிகளில் கதைக்கருஉருவில் கலையின் ஜனனத்தைக் குறியிட்டுச் சொல்லாமல் மொழிக்குள் ஆழ்ந்து மயங்க விடுதல். இவற்றில் தம்மபத- அத்த- கதைகளும் சேர்ந்துள்ளதை கரிகால்ராசனின் அரசாணி யசோமதி கொடிவழியில் அரவணஅடிகளின் பூர்வீகம். கௌதமி புத்திர சாதகர்ணியின் நாஸிக் கல்எழுத்து காரவேலனின் ஹாதிகும்பா ருத்ரதாமனின் கிர்னார் குகைப்பாழிக் கல்எழுத்தும் பிரசஸ்திகள் மாகதிப் பிராகிருதத்தில் கீறியிருப்பவற்றில் நந்தவனங்களைப் பராமரித்ததோடு கடிகையின் ஏடகத்தில் கலிங்கமன்னர் காரவேளனின் கல்வெட்டில் நந்தனவருஷமாய்த் துவங்குகிறது. திபேத்தியர்களின் காலநிலைபற்றிய குறிப்புகள் காலத்தை அறுதியிட சரித்திரப்பாதையில் தடுமாறிச் செல்வோருக்குப் பயன்படலாம். இது பண்டுகாலம் தற்போதைய புத்தர்களின் பலஜாதகக் கதாவுருவில் பறந்து வந்தது கபிஞ்ஜலா கிளி. ஷாக்யமுனியின் கதாஓலைமுறியாமல் அத்திரிஜாதகத்தை இருளிமரத்தின் ஆதிவிதை போன்ற வடிவிலும் தமிதோமொழிக் குரிய வடிவமானது. இருளி விதைஎனும் வடிவம் கிரந்தத்தில் மேற்புறம் பிளவு ஏற்பட்டு இருவளையங்களாக அவற்றுள் வலப்புறம் வளையம் சுழியாக முடிகிறது. இருளிமரத்தின் உச்சியில் கொம்பும் அதனின்று தொங்கும் இருட்கனி போலவும் பிறகு கனி பறித்த வெற்றிடத்தில் இருளே ஒரு கனியாகவும் உட்புறம் மெலிந்த அமைதியுடையதாக கபிஞ்ஜலா கிளி செங்கபாடம் திறந்ததும் பல்லவ கிரந்த எழுத்துகளில் கதையுரைத்தது. கமாராவாசிகள் அகித்தி ஜாதக ஓலைகளை ஒரு நீட்டுவாக்கில் அமைந்த செவ்வகத்தில் இருளிமரஉச்சியில் கல் மூங்கில் நூலாயத்தில் தொகுத்து வைத்தனர். இருளி மரத்துக்கு மேலிருக்கும் பிறை பூதமங்கையிலிருந்து குச்சரக்குடிகைக்கு மெல்ல நகர்ந்து கந்திற்பாவை தோளில் அமர்ந்தது அகித்தி ஜாதக மந்திரக் கதாச்சுருளுடன். கதாச்சுருளோடு விசும்பில் பறந்து வரும் கபிஞ்ஜலா நகக்கோடுகளாய் கதா அனுபவம் கொண்ட மொத்த எழுத்தும் வட்ட வடிவம் பெறுகிறது. தமிதோமொழி மிக எளிமையான உயரம் குறைந்த அகன்ற எழுத்துவடிவம் பெறுகிறது மொழிதம்.

குச்சரக்குடிகை கந்திற்பாவை கீறிய குறிப்புகளில் காணப்படுகின்றன. தேரவாத நியதிக்குள், அவர் சுருக்கமாக திகானிகாயாவில் குறிப்பிடப்படுகிறார்.  மூல-சர்வஸ்திவாத நியதி நூல்களில், அவர் திவ்யவதனாவில் தோன்றுகிறார்.  பள்ளியின் எதிர்கால புத்தர்களின் பட்டியலில் அகித்தி ஜாதக ஊழின் உப்பக்கம் கமாரா ஏழுசாயாவனத்தில் கதா உருவில் முதல்சாயா வனத்தில்பறவைப்பாதமுள்ள சாக்யா தோன்றினார். உயிரியற்தொகுதி வட்டச்சுவடிகளில் கமாராப்பட்டினத்தை மையமாகக் கொண்ட கதை ஊன்மம் புள்ளொலி விசும்பில் மிதக்கும் உச்சக்கலையுரு உயிரிகளின்மொழி நிகண்டுதிறந்துகொண்டது. கம்பைமரத்தில் தொங்கும் பிறைக்கோடுகளால் பின்னிய நூறுநூறு புட்கூடுகள் இராத்திரிவீசிய காற்றில் அசைந்தவாறு மைருளில் கதைபோடும் அகித்தி ஜாதகத்தின் தோற்றம் தொடர்பான முழுமையான கட்டுக்கதை பற்றிஎரிந்து கொண்டிருக்கிறது.

கமாராவின் சாக்கிய முனி போதிசத்துவர்களைப் போலவே  துஷிதா மண்டலத்தில் ஆறு சுவனவாயில்களில் நுழையாமல் சிலந்தி பின்னிய ஏணியில் நரகத் தொல்லியத்திலிருந்து இறங்கி வரும் கமாரா கணிகை மாதவிக்காக காத்திருக்கிறார் பறவைப்பாதமுள்ள சாக்யா. எதிர்கால பூமியை ஈன்ற கருப்பு கூழாங்கல் இரலைமான் தொப்பூல்கொடியில் பிறவாமுன்மைக்குள் கபிஞ்ஜலா கிளிச்சலனம் என்றும் கமாராவாசிகள் நம்புகிறார்கள். எனவே, சாக்கிய முனியின் உருவச் சித்தரிப்புகளில் கபிஞ்ஜலா கிளி, அவரது அவதாரத்திற்காகக் காத்திருக்கும் துஷிதாவில் பறவைப்பாதமுள்ள சாக்யாவைக் கண்டறிகின்றன. சாஞ்சி ஸ்தூபியின் நுழைவாயில்களில் ஒன்றின்  கடந்த ஆறு புத்தர்களின் மற்ற அனிகோனிக் பிரதிநிதித்துவங்களுடன் அவர் கபிஞ்ஜலா கிளியாக சித்தரிக்கப் படுகிறார். காந்தாரக் கலையிலும் குறைந்த அளவிற்கு மதுராவில் . அவரது உருச் சித்திரத்தில் மேல் முடிச்சு மற்றும் நீர்க்குடுவை  ஆகியவை கபிஞ்ஜலா தாகத்தை தீர்க்கும் மழைச் சொட்டு.மழை வரும்வரை காத்திருக்கும் சாதகப் பறவையை உணர்த்தும். காருண்ட மேகங்களும் அடங்கும். அவரது வலது கைவிரல்களில் பிறைநகங்கள் உன் முகமாய் வளைந்துள்ளன  மாற்றாக, வலது உள்ளங்கையை உள்நோக்கித் திருப்பினால் கபிஞ்ஜ்லா கிளி உருவம் எடுத்துப் பறந்து விடுவார் பறவைப்பாதமுள்ள சாக்யா.

சாக்கிய முனியின் கமாராசிற்பங்கள் சாயாவானங்களில் முதிய விருட்சிகளின் வேர்களிடியில் மரத்துடன் கலந்து விட்டதாகவும் கல்லால மரம் மொடுமொடுத்து மஞ்சள் இலைகளை உதிர்த்தபடி புலம்புகிறது. சக்கரவாளக் கோட்டம் சாக்காட்டின் சாம்பல் வடிவம்.   கமாரா சிற்பமரபானது திருநாகைக்காரோணத்தின் புராதன சிற்பிகளால் கல்லைத் தசையாக்கிய வடிவம் . கமாராவில் கூர்ஜரச் சிற்பிகள்  குச்சரக்குடிகையில் கூட்டமாய் இருந்து சிற்பங்களை ராப்பகலாய் செதுக்கிய போதிசத்துவர் உருவங்களின் மீது அதிக கவனம் செலுத்துவது பூர்வ ஜென்ம சாக்கிய முனி கதா மந்திரத்தில் அவரது சிகை அலங்காரங்கள் கூர்ஜர சிற்பமரபின் சிகலிகை கல் நெளிவுக் கோடுகள் கசியும் கற்சுருள்கள் சாக்கியாவின் முழு உடலின் பின்புறத்திலும் மழைப்புதிரான சிகலிகைச் சுருள்கள் சாக்யமுனி வெண்கலச் சிற்பங்கள் நகியவதனா சிற்பமரபின் கலையால் தாக்கமடைந்த விரிவான குச்சரக்குடிகையின் சம்பாபதி தேவியின் பிரார்த்தனை மணிகள், கபிஞ்ஜலா கிளியின் தாகத்தை தணிக்கும் காவேரிநீர் குடுவை இரண்டு முடி இழைகள் உருவத்தின் மேல் கிரீடம் போன்ற வடிவத்தை உருவாக்குகின்றன.

கீழைக்கடல் நகரெங்கும் நுரைகளாய்ச் சிதறி வாழ்ந்து திரிந்த சிற்பிகள் கூட்டம் நகிய வதனாவில்  இருந்ததும்  முக்கிய நகியபொடனா துறைமுகமாகவும் பெயர் பலவாய்  தென்கிழக்கு ஆசியாவில் புத்தமதத்தின் முக்கிய மையமான கமாரா நாகப்பட்டினத்தில், சோழர்களின் வெண்கலச் சிற்பத்துடன் பல பாணியிலான ஒற்றுமைகளுடன் வெண்கலத்தில் சாக்யாவைச் சித்தரித்த நாடோடி சைத்ரீகர்கள்

இடைக்காலத்தின் பிற்பகுதியிலும் அதற்குப் பின்னரும் தெற்காசியாவில் ஹாரிதி ஐநூறு குழந்தைகளோடு திரிந்து கொண்டிருந்த நாடோடிப் பாதைகள் மங்கிப்போன அதேவேளையில், வஜ்ராயன தங்கஓவியங்களில் ஹாரிதியை புத்ரர்களோடும் தேவதை புத்திரிகளோடும் இன்று வரை தொடர்ந்து சித்தரித்து வந்தனர் . ஹாரிதிதாய் யட்சிணி வழக்கமாக ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்து ஐநூறுபிள்ளைகளோடு சித்தரிக்கப்படுகிறாள், தாமரைபோன்ற பாதத்துடன்.பின்னணியில் துஷிதா சுவனத்தின் வாயில்களில் செல்லாமல் சிலந்தியின் நூலேணி வழியாகப் பாதத்தைஎடுத்துவைக்கும் கணத்தில் கபிஞ்ஜலா கிளியாகப் பறந்து கொண்டிருக்கிறான் பறவைப்பாதமுள்ள சாக்யாவின் பிட்சா அகலிலிருந்த ஐநூறாவது  பிள்ளையான நிச்சரின்.

 3. மூழ்கிக்கொண்டிருக்கும் சுள்ளவக்காக்கிளிமுக ஹாரிதி

‘நெல்குளிராத விஹாரத்துக்குள் சுள்ளவக்காக்கிளி

மூலைக்குமூலை உச்சியிலிருந்து சொல் உதிர்த்தது’

கந்தலுடுத்திய மகாவக்கதில் தம்மசீலர்கள் உண்ணாநோன்பில் யாரும் சாகாமலிருக்க வேண்டும். நிகவே வா விஹாரத்துக் குகையிலுள்ள   இரு மரப்படிமங்கள் ஒருமுலை குறைந்த தாரையும் மாசாத்துவான்காடு மாறம்பாவைகளுடன் விளையாடும் அவன் குமாரனுமாம். நெய்தவாசல் கிழக்குப்பக்கக் கிளிஞ்சல் மணலெக்கர்களின் பின்புறத்தில் கூம்பொடுமீப்பாய் களையாது மிசைபாரம் தோண்டாது புகாஅர்ப் புகுந்த துறைசேர் பெருங்கலங்களில் அபிமகததோ…என உடைபடும் மண்பொம்மைகளின் சில்லுகளிடையே தோற்றமானது அசையும் புத்தபாதங்கள். ஒரு வயதான ‘க்ஷ்திகர்பா’ கப்பல் நிற்கிறது அவலோகிதரின் தனிமையில். நூற்றி ஐந்துவயதான போதிசத்துவரே சுள்ளவக்காக் கிளியாகி அதில்பயணம் செய்துவருகிறார். மாலுமிகளற்ற நாவாயது.’ எப்போதும் தனியாகத்தான் பயணிக்கிறேன். என்பேர் சுள்ளவக்காக்கிளி. பனைசையில் வதியும் தம்மச்சீலர்கள் இருபத்தியொரு தீவுகளிலும், பிறதீவாந்திரங்களிலும் கடந்த ஒன்பதுவருஷங்கள் நிலத்தோற்றத்தின் மாற்றத்தால் ஒவ்வொரு மண்ணுடலையும் வெளிர்மஞ்சள் மாறாத்தன்மையுள்ள மலராகஏந்தி மூழ்கிக்கொண்டிருக்கும் ஸ்திதியில் போதிசத்துவர் அருகில் ஹாரிதியின்நிழல் விழுகிறது.

கருமையடைந்த தம்மசீலர்கள் கனல் வாழ்வினால் கந்தை யுடுத்திய பருத்திச் சீவரத்தின் காலம்நொறுங்கி அதில் தோன்றிவரும் உவர்வாடை அலைகடல் உறுமலாய்க் கேட்டது. அதில் சொறிமணற் பூச்சிகள் கந்தலை வாய்வைத்து மென்று உறங்கின. செந்நண்டுகள், சாம்பல்கோரைகள் மௌத்திகங்கள் உயிர்க்கூச்சலிடும் அமணபட்சத்திலும் தெறித்துவிழும் நிலவின் பொடிமணலை அண்ணாந்து வாய்பிளந்து விழுங்கியதால் பிறைவடிவங்களைக் கடலில்ஊர்ந்து சூருடைத் தோட்டத்தில் மறைந்துவாழும் ஹாரிதியின் ஐநூறுகுழந்தைகளின்முடுகு,சோங்கு தனிமை ஓடங்களாகப் பார்க்கலாம். அவற்றில் சிப்பிகள்ஒட்டிய ஓட்டில் துளையிடும் உயிர்களும் குருடாக்குகின்றன ஏரலை. எண்காலிகள், சிப்பிகளின் ஒளிபடும் பிறைவடிவங்களைக் ஹாரிதியின் குமாரத்தி அரிட்டா தன்கவிதைகளாக்கி அவிகுலாப்பாறையில் பாசிகளும் மூடிவிட்ட, அலைகள் தீராத குமாரத்தி அரிட்டா பிறைவடிவங்களான கவிதைகளை எஞ்சவிட்டுப் போகிறாள். அதற்கேயுரிய நிலவுடன் சேர்ந்து மூழ்குகிறது சுள்ளவக்கா கிளி. ஆகாஸகர்பா கூட்டம் விரக்தியில் புலம்புகிறது பேய்முனையில். கந்தேதுகிப்பாறையில் நிற்கிறார் போதிசத்துவர். அறியாங்குண்டு கலங்கரைவிளக்கிற்கு மேற்கே தூரத்தில் உலர்ந்த பவளப்பாறை. வடகிழக்குப்பருவத்தில் ‘க்ஷ்திகர்பா’ அங்கே நகர்ந்துவரும். பாறைக்கும் கரைக்கும் இடையே படகுக்கால்வாய். மீனவர்கள் கருங்கப்பல் அருகில்போய் உரசுகிறார்கள் மீனைப்போல. உப்பேச்சுவரம் தீவின் வடமேற்கு முனையில் மணற்குன்றின்மீது மணல் தூணாலான கலங்கரைவிளங்கின் கண்ணணியைத் துடைத்து எண்ணையில் எரியும் சுடரை விரல்களால் தொடுகிறான் பழங்காலத்துறவி ஆகாஸகர்பா. சுள்ளவக்கத்துடன் வாழ்க்கையில் விரிந்த முழுப்பரப்பையும் நாடோடிகளான பிச்சைஎடுத்து நியமதைஏற்கும் சுள்ளவக்கா மணற்துறவிகள் உபோதச நியமங்களில் மழைகாலத்தில் ஒழுகவேண்டும் ஒழுக்கலாறுகள் பிணியோர்க்குக் கொடுக்கும் மருந்துப்பெட்டிகளோடு கந்தலாடைகளைத் தூயமலரெனப்போர்த்தி மெல்லிய குரலில் உள்ளங்கைகளைத் திறந்து வலசைநாரைகளின் சுவடுகளின் பின்னேபோய்க் கூப்பிடுகிறார்கள்.

செங்காலிகளால் உண்டாகும் ஓடையில் குந்துக்கால்வாய் வழியாக மேற்குத் திக்கில் வெள்ளப்பெருக்குடன் வலசைநாரைகளின் நிழல்நகர்வு. அங்கிருந்து மேற்கே சென்றால் பவளப்பாறையின் வடக்கு விளிம்பில் பூமரிச்சான் தீவும் குருசடைத் தீவும் திரள் திரளாய்ச் சுழலும் சுள்ளவக்காக்கிளியின் தியானஒலி ஹாரிதியின் பழுப்புச்சிறகுகள் அசையும் ஐநூறுகுழந்தைகளின் ரகஸியமாய்ச் சுற்றுகிறது. சின்னஞ்சிறு மீன்கள் சதையுதடுபிளந்து நீரில்மூழ்கிய வீடுகளுக்குள் முணுமுணுக் கின்றன. சுற்றியிருந்த வீடுகளுக்குள் சுள்ளவக்காக்கிளி ஹாரிதியின் கடற்தோட்டம். ஒவ்வொரு அறையிலும் நீர்சுருண்டு வந்தது. சமையலறையில் இருட்டுக்கருக் கொண்டு நெளிந்த ஜூவாலைகளில் சுள்ளவக்கா மணற்துறவிகள் தோற்றமாகி மெல்லஅசைந்து அலமாரிக்குள் கடலுயிர்களோடு ஐநூறுகுழந்தைகளும் முணுமுணுக்கிறார்கள்.

அவலோகிதரின் உருவடிவும் போதிசத்துவரின் சத்ருதுவடிவுமான மூவுருவடைந்த காவல்தெய்வம் சம்பாபதிகோயில் கமாராவின் அம்பலத்தில் குணதிசையில் அமைந்திருந்தது. துறக்கம் வேண்டாத் தெய்வகணத்தைச் சேர்ந்தது வதிகனின் சப்தருதுவடிவம் கந்திற்பாவை இவள் தொல்மூதாள். மாதெய்வம் சம்பாபதியைத்தேடி மழைக்கண் நீலிகாயா மகாயானம் எறும்புப்பாதையில் குனிந்துகொண்டுகேட்டாள்: “பல்வகை உயிருக்கும் உய்தியுண்டு என்ற பெருங்கொள்கை ஆடவர் பெண்டிர் முதியோர் அஃறிணை உயர்திணை என்ற வேறுபாடு இன்றி அனைவருக்கும் போதி சத்துவ நிலை உரியதா?எனக்கேட்டாள்.

அறுவடைஎறும்புசொன்னது:போதிசரியாவதாரம்… சத்தருமபுண்டரிகம் எனும் மகாயான நூல்களில் புழுக்கள் கூட புத்தராக உயரலாம். போதிதத்துவக் கொள்கை உருவாவதற்கு சாதகக்கதைகள் பின்புலமாய்ச் சுற்றுகிறது. மகனை இழந்து வாழ்வைத் துறந்து வஞ்சிமா நகரம் வந்து தன்முன்னோன் போதிசத்துவர் அமைத்த புத்தாலயத்தில் காலம் கழிக்கும் மாசாத்துவான் அருகனாக திகழ்ந்த விஷயத்தைச் உனக்குச்சொல்கிறேன் சமணநீலிகாயா”என்றது. “அருகநிலையை ஆதரிக்காமல் போதிசத்துவ நிலையை உள்ளுவம் கொண்டாள் சம்பாபதி. பத்து விதப் பாராமிதைகள் நிரம்பப் பெற்றவள் அவலோகிதரின் வடிவமான சம்பாபதி” என்றதுவரிசையில் வராமல் தனித்துவந்த பேய்எறும்பு.”போதிசத்துவர்க்குரிய தனிப்பெரும் உள்ளுவம் பாராமிதை என்ற சொல்லிற்கு அர்த்தமென்ன சொல் பேய் எறும்பே”

வரிசைமாறாதசித்தெறும்பு:” சமணகையே…நீலகேசி உரையிலும் இப்பொருளே காணப்பட்டது. இருவேறு விளக்கங்களையும் நினைத்து முழுமையுறுதலும் அக்கரைதேர்தலும் ஆகிய இரண்டையும் பாராமிதை என சுட்டுவதாகக் கொள்ளேன். நீலகேசியிலும் வீரசோழியத்திலும் பத்துபாராமிதைகளை வாசித்துவிடு நீலிகாயா. திருப்பதிகம் பௌத்தநூலும் இவற்றை இயம்புகிறது. அதில் நீ…தெரிந்திராத தசபாலன் என்று புத்தர் போற்றப்படுகிறார் சித்தெறும்பே…

“ஈகையினால் முழுமை பெறும் போதிசத்துவர் உடல் பொருள் ஆவி அனைத்தையும் மனம் உவந்து வேண்டுவோர்க்கு வழங்குவதும் அனைத்தையும் வழங்கும் மனப்பதம் வாய்த்துவிட்டவள் ஹாரிதி தான்.தானபாராமிர்தையில் போதிசத்துவரின் பெண்வடிவானவள் ஹாரிதி”எனவுரைத்தது இளஞ்சிவப்பு சுலுக்கெறும்பு.

நீலிகாயா:தசசீலங்களை முழுமைபெறக் கடைப்பிடிக்கும் எறும்பே..சூதெறும்பே உன்மனமொழி மெய்களால் காட்டுப்பாதைகளில் புற்றுகளில் மறந்திருக்கும் குளுமைகளில் ஏழைகள் தான்யம் பெறுதல் சீலம் நிறைவுறற்கு சாட்சியாகும் எறும்புகளான உங்கள் வரிசைமீது மயில்விசிறி கொண்டு தூற்றுத்தூற்று கிரியா கலாபம் முனகும் திகம்பார்கள் எறும்புகளைக் கொஞ்சும் சமணத்திற்கு வாராய் குட்டிக்காளை எறும்பே…

பூமிலுள்ள பழமையான ராணி எறும்பு:இகழ்ச்சி, அவமதிப்பு, இடையூறு இயற்றுவோரை மனம் உவந்து மன்னித்தல் போதிசத்துவத்தின் இயல்பாகும். வெப்பமும் மழையும் பசியும் வேட்கையும் தணிந்திருந்தாலும் இடுக்கண் வருங்கால் நகுதலும் மனம் தளராமையும் எம் ராணி எறும்புக்கோட்டை நவதான்யங்களால் எறும்பேறித்தேய்ந்த மண்சுவர்களின் சாந்திபாராமிதை நீலிகாயா… எறுப்பின் கால்களில் வரப்போகும் சாவின் நடுக்கம்:மன வலிமையும் உடல் வலிமையும் நிரம்ப பெறுதல் வரப்போகும் சாவின் நடுக்கம் அச்சங்களையும் தீமைகளையும் முன்பே உணர்தல்.

பெரியவர்களான பல்லில்லாக் காளை எறும்புகள் சொன்ன கதை: குளிர்காலத்தில் பெரியவர்களான பல்லில்லாக் காளை எறும்புகள் விகாரங்களை அடைந்தேன். மாங்கொல்லையில் நிறைந்த தாவரங்களையும் மரங்களையும் அடைந்து தியானத்தை மேற்கொண்டு இலைகளில்ஒளிரும் மஞ்சள் குருத்தின் ஒளிச்சேர்க்கையில் முழுமையுறுதல் இன்றியமையா இலைகளில் ஒளிரும் மஞ்சள் எறும்புகளின் தியானவெளி போதிசத்துவரின் தியான பாராமிதை.

பிரக்ஞாபாரமிதா கதைசொல்லும் மரக்கலம்:

குறிப்பிட்டநிலையில் போதிசத்துவர் தன் பிரக்ஞா பாரமிதா’ மூழ்கிய மரக்கலம் அடிக்கடலின் சமவெளியில் யட்சஜாதகக் கதைகளைச் சொல்லியவாறு மேல்வந்தது. நடுக்கடலிலிருந்து சங்கதருமன் விடுதலைக்காகவும் மூழ்கியவங்கமே முதுநீரில் ஊர்ந்தவாறு யட்சஜாதகக் கதைக்குள் கதையானது. ஆதலின் மெய்யுணர்வு பிரக்ஞா பாரமிதா வாணிபக்கலத்துக்கும் உள்ளுவப்படுதல் இன்றியமையாதது. பௌத்த நூல்களைப் பாய்மரக்கம்பத்தில் சாய்ந்தவாறு அசேதனத்திடம் பயிறலும் சிந்தித்தலும் உணர்தலும் நிறைவுறுதலும் ‘பிரக்ஞா பாரமிதா’பாய்மரத்துக்கும் இப்பாராமிதை உட்பட்டதுதான். எவ்வகைப் பாராமிதைகளிலும் இதுவே நனிசிறந்தது என்பார், அதே பாய்மரத்தில் கந்தலாடைத்துறவி பிரக்ஞாபத்திரர் சங்கதருமனோடு வந்த யுவான் சுவாங்கிற்கு கோவலனின் முன்னோன் போதி சத்துவனானதைத்தான் பயணத்திரட்டில் வெர்மீலியன் செவ்வரக்கு மசியால் சித்திர எழுத்தில் பனுப்பித்திருந்தான்.

பிரக்ஞாபத்திரர் மழைக்கண் நீலிகாயாவுக்குச் சொன்ன பாரமிதை: பௌத்த நெறிக்கு ஏனையோரை மாற்றுவதற்குரிய மார்க்கங்களில் வல்லமை பெற்றிருத்தல் கோவலனின்முன்னோன் சங்கதருமரிடமே போதிசத்துவரின் பண்புருவாக அமைந்திருக்கிறது உபாய கௌசல்ய பாரமிதை” என்றார் கந்தலாடைத்துறவி பிரக்ஞாபத்திரர்.

மழைக்கண்நீலிகாயா:எல்லையற்ற கருணை நிரம்பி இருத்தல் போதிசத்துவரின் தான்தோன்றியான புழுக்குலத்தின் குணரூபமா?

கந்தலாடைத்துறவி பிரக்ஞாபத்திரர் மழைக்கண் நீலிகாயாவுக்குச் சொன்ன பதில்:

அதுதான் கோவலனின் முன்னோன் சங்கதருமரெனும் போதிசத்துவரின்’ பிரணிதான பாரமிதை’ இதுவே என் செல்லப்புத்திரியே மழைக்கண் நீலிகாயா…

மழைக்கண் நீலிகாயா: பலஞானபாரமிதைகளை என் குருமுனியான கந்தலாடைத் துறவியே.. . உங்களிடம் பாடம் கேட்கவே விரும்புகிறேன் நானுமே…

கந்தலாடைத்துறவி: சுயப்பிரக்ஞாவலிமையும் மெய்மையும் உள்ளுவத்தில் இவ்விரண்டும் சேரும் பாரமிதைகள். இவற்றை வீரியம்,பிரக்ஞை எனும் பாரமிதைகளிலும் வைத்துக்கூறுவர். உபாயம், நிதானம் என்பனவற்றைத் தானம், சீலம் என்ற பாரமிதைகளிலும் அடக்குவர். ஆதலின் முதற்கண் நின்ற அறுவகை பாரமிதைகளே இன்றியமையாமை ஆனதால் இவை நிரம்பியவரே கோவலனின் முன்னோன் சங்கதருமரான போதிசத்துவர். அதோ கடலும் வானும் இணையும் நீலநீர்க்கோடு மேல் அசைந்து கொண்டிருக்கும் ‘பிரக்ஞா பாரமிதா’ பாய்மரம் அசேத நிலையில் காத்திருந்த பேசும்கலமாகிச் சங்கதருமரோடு உரையாடிய அதுவும் தானே போதிசத்துவர் இல்லையா.. நீலிகாயா…

கோவலனின் சீயான் ஒருவன் போதிசத்துவன், ஆவதற்கு பக்குவம் அடைத்திருந்தான் சங்கதருமன்.நான்கு வாய்மைகளையும் சீலங்களையும் நன்கு அறிந்தான் ஆதலின் தானம், சீலம், பிரக்ஞை முதலிய பாரமிதைகள் அவன் பால் திகழ்ந்தன. போதிசத்துவர் உலகியல் கடமைகளில் இருந்து ஒதுங்கத் தேவையில்லை. அவன் கடல் வணிகம் மேற்கொண்ட பொழுது மரக்கலம் நடுக்கடலில் அமுக்கியது.

வெண்ணிறஇரவு விழுந்த நெய்தவாசல்,வானகிரி வீடுகளிலெல்லாம் நிழல்களாய் வளர்ந்து நிசப்தத்தை ஒளியாகக்கொண்ட அரைத்தூக்க மயக்கத்தோடு கோவலனின் சீயான் சங்கதருமன் சுள்ளவக்காக்கிளியைக் கையிலேந்தி நகர்ந்துவரும் திரவநிலவு எல்லாவீட்டிலும் ஜன்னலாகத் திறந்து பழுப்புச்சிறகுகள் அசையும் ஹாருதியின் குழந்தைகள் மிதக்கிறார்கள். மதிகொண்ட வீடுகளுக்குள் நீரின் வெளிச்சத்தை அருந்தும் மச்சங்களும், சாம்பல் ஆமைகளும் நகுலங்களின் சுகோஷங்க ஊளை இவ்வூர் மனிதர்களைத் தவிர வீட்டில் யாருமில்லை. எல்லாவீடுகளும் வலசை நாரைகளின் சுவடுகளோடு ஹாரிதியின் குழந்தைகள் ஓடிப்பிடித்து ஒளிந்து கொண்டு வெளிப்பட்டன.

கமாராவை தாக்கிய கடல்கோள் நிகழ்வில் நீரில் மரணம் என ஏதுமில்லை போன்றே கருப்பு மின்னலில் ஊர்ந்துவரும் கமாராரயிலரவுப் பூச்சியின் இருட்டு அறைகளுக்குள் நீத்தார் ஆழிவலம் வருகிறார்கள். நனவிலி மன நிலையில் மறுஜனனமான சிறகு முளைத்த குழந்தைகளும் அவற்றைக் கருக்கோப்பையில் ஈன்றெடுத்த தாய் தேவதைகளும் உயிருற்றெழுந்து கூடவே வருகிறார்கள். கமாராவின் பழைமைக்குள் அடிக்கடலின் சமவெளியில் ஏழு சாயாவனங்களில் இருக்கும் பாதாள நகரமான கடற் சம்பை மணலுக்குள் பாழியடித்துக் கிடந்த தொன்மைக்குள் பத்தினிப் பாறை ஆயிரம் உயிர்க் கூச்சலிட்டுக் கொண்டிருந்தது. பத்தினிப் பாறையின் சரமூச்சில் அதன் மடிப்புமடிப்பான கற்காகிதங்களைக் கசக்கிக் குடைந்து ஊழிக் கல்லாய்ச் சமைந்திருந்த மறை புதிரிலிருந்து சுழிகொண்ட வேகத்தில் உருவெடுத்த ரயிலரவுப்பூச்சியாய் வட்ட வட்டமாய்ப் புயற்சுழியில் உருவெடுத்த மூத்த கணிகை அஞ்சிலாந்தை வஞ்செள்ளை எனும் நீரணங்கின் காற்சிலம்பின் பூட்டைத் திறந்து நீரில்மூழ்கி இறந்தவர்களோடு ஊர்ந்து வருகிறது கமாராரயிலரவுப்பூச்சி. கடல் கோணிநிகழ்வில் கருப்பு மின்னலில் உருவெடுத்த ரயிலரவுப் பூச்சி இமையில் ஓடும் ககனத் துடிப்புகளைப் பெற்று எதிர்மறையை ஜனிக்கச் செய்யும் பேராழி இயற்பியல் ஊழிப்புத்தகத்தை வாசித்தவாறு உரையாடியபடி நீரில் மூழ்கியோர் வருகிறார்கள். பாதாள ஜம்பைக் கடற்நகர நீரோடி வீதிகளில் கிளம்பிவரும் கருஞ்சாம்பல் ரயில்பெட்டிகளின் படிக்கட்டுகளில் அமர்ந்தவாறும் நின்றவாறும் இருண்மையான ஆழிப் பேரலைகளின் ரகஸியத்தைப் பற்றிய ரகஸியம் மற்றொரு ரகஸியத்தால் சுவடிகள் உடைந்தாலோ எழுத்துப் பலகைகளில் வாசிக்கும் ராத்திரிகளில் எழுத்துக்கள் தெளிவதற்கு இலுப்பைஎண்ணெய்ச் சிமிளி விளக்கு வெளிச்சமில்லாமல் மங்கிப்பரவிய சீதளஓலைகளிலிருந்து கதாஇருட்டு வரியோட்டத்தில் சேந்துவிடும். நாடியோட்டத்தில் மாறிவிடும் மறைநீக்கங்களைப் பேய்களின் புராதனச் சித்திரக்கையில் கடல்நாடோடிகளின் டேரட்கார்டுகள் வேகமாகக் களைக்கப்பட்டு காதைகளின் விதிகளும் மாறிவிடும். ஆபுத்திரனின் முற்பிறப்பு எலும்பூசியால் ஒருகதையை செந்தேரிப் பனையோலையில் கீறுவதற்கு முன் ஜம்பை மணல்பட்டணச் சாக்காட்டுப் பேழையிலிருந்து எலும்பூசிகளாலே செந்தேரிப் பேய்தான் அது ராத்திரியைக் கதையாக்கிக் கீறிக்கோர்க்கும் ஊழிஎழுத்தோட்டம். செந்தேரிக் குறுங்கதைகளில் மடக்குஓலைக்கன்னியின் ஆவிருது நறுமண அகராதியில் சுவாசிக்கும் திரட்டிலிருந்து தனித்தனியாய்க் கட்டவிழ்ந்து ஒடிவிடும் மடக்குஓலைக் கன்னியின் மீச்சிறுகதைகள் எட்டிப்பார்க்கின்றன சுவடிப் பலகையைவிட்டு. மடக்குஓலைக் கன்னியின் விழிக்கடவில் மீச்சிறுகதைகளின் கண்ணீரில் மூழ்கியுள்ள உப்பியல்பாவைகளின் அசையும் கதாபாத்திரங்களின் நயனங்களிலும் ராத்திரி வாசகவேடர்களின் இலுப்பைஎண்ணெய்ச் சிமிளி விளக்குகளில் அசையும் தூங்காத கண்களின் உவர்ப்பு தெரிகிறது.

கமாராரயிலரவுப்பூச்சி காபேரிஸ் கடற்கரை நெடுகக் கனமில்லாத காற்றில் இருக்கும் உயிர் வளியுடன் மூழ்கியோரைத் தாங்கும் கடற்கோரை முளைத்த நட்சத்திர மீன்கள் நீந்தும் ரயில்பெட்டிகளை ஒவ்வொன்றாய் நீந்திக் கடந்து வருகிறாள் அஞ்சிலாந்தை வஞ்செள்ளையாக மாறிய பச்சைநிறமான சஞ்சல தேவதை மாதவியாள்.

லிஜிஸ்ரேட்டா நாடகவரிக்குள் அரிஸ்டோபெனிஸின் புதிர்ப்பாதைகளில் சூல் கொண்ட கமாராரயிலரவுப்பூச்சியின் ஆறாவது பெட்டிக்குள் ஜன்னலில் சாய்ந்துகொண்டு முகம்வைத்து அழுது கொண்டிருக்கிறாள் லிஸிடா. ஆலிவ்மரத்தின் கீழ் லிஜிஸ்ரேட்டாவுக்கும் எமக்கும் உள்ளபந்தம் அவள் பெருவிரலின் நுனியால் விரலின் அடிப்பாகத்தைத் தொட்டால் விரலின் உறுப்பைத் துயர்வீசிய நாடகக் காற்று என்றது இந்திரபூதருகு. லிஸிடா விரலின்நுனி பெருவிரலின் நுனியைத் தொட்டால் அவ்விரலின் உறுப்பை ஆகாயம், நிலம், நீர், காற்று அனைத்தும் அதிகரிப்பதாக இந்திர பூதருகு சொன்னது.

கமாராரயிலரவுப்பூச்சியின் இருபத்தேழு பெட்டிகளில் டிக்கட்டைவாங்கி இருப்போர்க்குப் பயணச்சலுகைகள் ஏதுமில்லை. மூழ்கிய ஆறுகளில் முதுநீர் சின்டெக்ஸ் டேங்குகள் பொருந்திய பெட்டிகளுக்குள் பாய்கிறது. கமாராரயிலரவுப் பூச்சியின் தாகவிடாய் நூற்றாண்டுகளாய்த் தீரவே தீராதகுடிநீர் வற்றிய வேகத்தில் நிரம்பி விடுகிறது பெட்டிகளுக்குள். குடிநீர்க் குப்பிகள் அடங்கிய இரண்டு பெட்டிகளுக்குள் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய ரயிலரவுப்பூச்சியின் மைய அறைகளில் நாடோடிகளும் ஒவ்வொரு கணத்திலும் கமாரா ரயிலரவுப்பூச்சியின் வேகத்தில் இயங்கும் வல்லமை எங்கிருந்து வருகிறது இரு யுகங்களுக்கு இடையின் நம்மில் பலரும் பயணம் செய்திருக்க மாட்டோம். காலத்தின் தூரப் புள்ளியில் இருந்து நாம் பயணிக்கும் கமாரா ரயிலவுப்பூச்சியுடலில் மறைந்திருக்கும் ஜம்பை மூதூர் பெண்களுக்கும் தனிப்பெட்டிகள் இருந்தன. இந்தமறைமுகப் பெட்டிகளுக்குள் பயணம் செய்யும் ஜம்பை மூதூர்வாசிகள் அனைவருக்கும் போதுமான அளவில் இருக்கைகள் உள்ளனவா என்பதை அறிய முடியவில்லை. இப்புதினத்தின் விதியில் மாதவி கானல்வரிப் பாட்டின் இறுயிலிருந்து மணற்புகைக்காற்றின் கசைவீச்சிலிருந்து வெளியேறி அஞ்சிலாந்தை வஞ்செள்ளையாக உருமாறி சுறவுக்குழைநீரணங்காய் மூடுண்டமுறுவல் தூக்கத்தைக்கலைக்காமல் தூங்கும் குழைகளின் ஆட்டம் சுருளித்தோன்றும் காருண்ட விழிக்கடவில் தொன்மம் உமிழ்கிறாள்.அவள் சுறவுக்குழைநீரணங்காய் உள்ளவளென்று வாசித்து அறிவதில் அமரர்களின் கண்ணாடியில் தெரியும் மூன்று பெட்டிகளில் பழமைக்கு அப்பால் நிலவும் மூழ்கியோரின் மெய்யுடம்பின் நம்புவதற்கியலா விசித்திரமான நிலவெளிகள் அவை இன்னும் அகப்பாலையில் தான் ஊர்ந்து கடந்து கொண்டு இருக்கின்றனவா? நிலவெளியின் மாயமானவழித் தடங்களில் ரயில்வே பாலங்கள் இருப்புப் பாதைகளுக்கு வயதாகி விட்டது. புத்தரின் வாழ்வோடும் யாத்திரைகளோடும் தொடர்புடைய சுற்றுவட்ட நகரங்களைத் தரிசிக்கும் வண்ணம் மகாபரிநிர்வான் ரயில்களைவிட கமாரா ரயிலரவுப்பூச்சியின் இருபத்தேழாவது அறையில் புத்தர் பயணித்துக் கொண்டிருக்கிறார். மாத்தரன் மலைரயில் போன்றது கமாராரயிலரவுப்பூச்சியில் மரித்தோர் ஆழிவுலாவருவது.


 

கோணங்கி .
கோணங்கி .
Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    December 2, 2025
  • பொப்பி என்பது புனைபெயர்

    பொப்பி என்பது புனைபெயர்

    December 2, 2025
  • அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    December 2, 2025
  • வண்ணார் : வரலாறும் வலிகளும்

    வண்ணார் : வரலாறும் வலிகளும்

    December 2, 2025
  • பொலி எருமை

    பொலி எருமை

    December 2, 2025

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (8)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (9)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இலக்கியம் (12)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (67)
  • கட்டுரை (1)
  • கதை (3)
  • கதை (2)
  • கவிதை (49)
  • கவிதை (11)
  • குறுங்கதை (5)
  • சிறார் (4)
  • சிறார் கதை (10)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (30)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (3)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (8)
  • நாவலின் ஒரு பகுதி (7)
  • நினைவேடு (1)
  • நுண்கதை (1)
  • நூல் அறிமுகம் (11)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (24)
  • வாழ்வியல் (2)

Archives

  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    December 2, 2025
  • பொப்பி என்பது புனைபெயர்

    பொப்பி என்பது புனைபெயர்

    December 2, 2025
  • அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    December 2, 2025

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (8)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (9)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இலக்கியம் (12)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (67)
  • கட்டுரை (1)
  • கதை (3)
  • கதை (2)
  • கவிதை (49)
  • கவிதை (11)
  • குறுங்கதை (5)
  • சிறார் (4)
  • சிறார் கதை (10)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (30)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (3)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (8)
  • நாவலின் ஒரு பகுதி (7)
  • நினைவேடு (1)
  • நுண்கதை (1)
  • நூல் அறிமுகம் (11)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (24)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top