எங்கள் வரவேற்பறையில் இருந்த அந்தப் பெரிய கண்ணாடியில் யாரோ குடியிருக்கிறார்கள் என்பதை என் அம்மா கண்டறிந்தபோது, நாங்கள் அனைவரும் முதலில் அதை நம்பவில்லை; பின்னர் ஆச்சரியப்பட்டோம்; பின் அதைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினோம்; இறுதியில் அதை ஒரு சாதாரண அன்றாட விசயமாகவே ஏற்றுக்கொண்டோம்.
ஆங்காங்கே புள்ளிகள் விழுந்திருந்த அந்தப் பழைய கண்ணாடி, எங்கள் குடும்பத்தில் இறந்துபோன, எங்களது அன்பிற்குரியவர்களைப் பிரதிபலிக்கிறது என்ற உண்மை, எங்களுடைய வாழ்க்கை முறையை முற்றிலும் சீரழித்து விடவில்லை. ‘வீடே எரிந்தாலும் புகை வெளியே தெரியக்கூடாது’ என்ற பழமொழிக்கேற்ப, நாங்கள் இந்த ரகசியத்தை எங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டோம். எப்படியும் இது மற்றவர்களுக்குத் தேவையில்லாத ஒரு விசயம்தானே!
ஆனாலும், நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுக்கே உரிய நாற்காலியில் அமரும்போது, கண்ணாடியில் அதே நாற்காலியில் வேறொருவர் அமர்ந்திருப்பதைப் பார்த்து முழுமையாகப் பழகிக்கொள்ளச் சிறிது காலம் பிடித்தது. உதாரணமாக, என் பாட்டியின் சகோதரி ஆரேலியா (1939-ல் மறைந்தவர்) அங்கே அமர்ந்திருக்கக்கூடும். என் பக்கத்தில் உறவினர் நடாலி அமர்ந்திருந்தால், அவருக்கு நேர் எதிரே, ஏறக்குறைய மறக்கப்பட்டே போன மாமா நிக்கோலஸ் (1927-ல் மறைந்தவர்) கண்ணாடியில் தெரிவார்.
மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் சில நேரங்களில் எனக்கு அது கண்ணாடியில் தெரியும் ஒரு காட்சி என்பதை விட, மங்கலாகத் தெரியும் ஒரு பழைய தேய்ந்துபோன திரைப்படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வையே தந்தது. எங்களுடைய அசைவுகளை அப்படியே பிரதிபலிக்க, அந்த இறந்தவர்கள் எடுத்த முயற்சி மிகவும் மெதுவாகவும், கட்டுப்படுத்தப்பட்டதாகவும் இருந்தது; அது ஏதோ ஒரு நேரடிப் பிம்பத்தைக் காட்டாமல், வேறொரு பிரதிபலிப்பின் நிழலைக் காட்டுவது போலத் தோன்றியது.
ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஒன்று மட்டும் நன்றாகத் தெரிந்திருந்தது: என் உறவினர் கிளாரா விடுமுறை முடிந்து திரும்பியவுடன் நிலைமை இன்னும் சிக்கலாகும் என்பதுதான் அது. அவளுடைய துணிச்சலும் உறுதியும், அவள் தவறுதலாக எங்கள் குடும்பத்தில் பிறந்துவிட்டாளோ என்ற எண்ணத்தை எனக்கு நீண்ட காலமாகவே தந்து கொண்டிருந்தன. இந்நாட்டின் முதல் பெண் பல் மருத்துவர்களில் ஒருவராக அவள் இருந்தது, என் சந்தேகத்தை இன்னும் உறுதிப்படுத்தியது. இருப்பினும், அவள் தனது பட்டயப் படிப்பை முடித்த கையோடு, தன் மருத்துவத் தொழிலைக் கைவிட்டுவிட்டு, என் பாட்டி, அத்தைகள் மற்றும் பிற உறவினர்களுடன் அமர்ந்து துணிகளில் பூத்தையல் வேலை செய்யத் தொடங்கியவுடன் அந்த சந்தேகம் மறைந்து போனது. தனக்கான ஒரு வரனுக்காக அவள் காத்திருந்தாள்; வரன்களும் வந்தார்கள்; ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்கள் நிராகரிக்கப்பட்டார்கள் — அந்தக் காரணம் என்னவென்று யாருக்கும் சரியாகத் தெரிந்திருக்கவில்லை.
படிப்பு முடிந்ததும், கிளாரா தனது தொழிலைச் செய்யாவிட்டாலும் எங்கள் குடும்பத்தின் ஆலோசகராக ஆகிப்போனாள். அவள்தான் வலி நிவாரணிகளைப் பரிந்துரைப்பாள்; ஆடை அலங்காரத்தில் அவளே நடுவர்; எந்த நாடகத்தைப் பார்க்க வேண்டும் என்று அவள்தான் முடிவு செய்வாள். குடும்ப விழாக்களில் பரிமாறப்படும் பானத்தில் மதுவின் அளவு சரியாக இருக்கிறதா என்று தீர்மானிப்பதும் அவளே. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, அவள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாதம் கடற்கரைக்குச் சென்று ஓய்வெடுப்பது பொருத்தமானதாகவே இருந்தது.
அந்தக் கோடையில், விடுமுறை முடிந்து திரும்பிய கிளாரா என் அம்மாவின் இந்தத் கண்டுபிடிப்பைப் பற்றி அறிந்தபோது, ஏதோ ஒரு நோயைக் கண்டறிவதற்கு முன் நோய்க்கான அறிகுறிகளைச் சீர்தூக்கிப் பார்ப்பது போலச் சிறிது நேரம் யோசனையிலேயே இருந்தாள். பிறகு, இமை கூட அசைக்காமல் கண்ணாடியின் மேல் சாய்ந்து, அது உண்மைதான் என்பதைத் தன் கண்களாலேயே பார்த்துக் கொண்டாள். அதன் பிறகு, அந்தச் சூழலை ஏற்றுக்கொண்டவள் போலத் தன் தலையை அசைத்தாள்.
உடனடியாக புத்தக அலமாரியின் அருகில் அமர்ந்துகொண்டு, கண்ணாடியின் மறுபக்கத்தில் உள்ள நாற்காலியில் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்று பார்க்கத் தன் கழுத்தை நீட்டினாள். “அடடே, கஸைப் பாருங்கள்!” என்பது மட்டும்தான் அவள் சொன்னது.
அங்கே அதே நாற்காலியில் கண்ணாடி எங்களுக்கு ‘கஸ்’-ஐக் காட்டியது. அவர் அப்பாவின் ஏதோ ஒருவகை வளர்ப்பு மகன். அவருடைய ஊரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்குப் பிறகு எங்களுடன் வந்து தங்கியவர்; ஒரு ஏழை உறவினராகவே இங்கேயே தங்கிவிட்டவர். கிளாரா கையை அசைத்து அவருக்கு அன்புடன் வாழ்த்துத் தெரிவித்தாள். ஆனால் அவர் அந்த நேரத்தில் ஒரு வானொலிக் குமிழ் போன்ற ஏதோ ஒரு கருவியுடன் வேலையாக இருந்ததால், இவளைக் கவனிக்கவில்லை.
சந்தேகமே இல்லை, கண்ணாடியில் இருப்பவர்கள் மற்றவர்களுடன் பழகுவதற்கு அத்தனை மெனக்கெடவில்லை. இது கிளாராவின் சுயமரியாதையைக் காயப்படுத்தியிருக்க வேண்டும்; ஆனால் அவள் அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
அந்தப் பெரிய கண்ணாடியை உணவறைக்கு மாற்ற வேண்டும் என்ற யோசனை கிளாராவுடையதுதான். அதன் தொடர்ச்சியாக, நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பதற்காக அந்தக் கண்ணாடியைப் பெரிய மேசைக்கு அருகிலேயே கொண்டு வர வேண்டும் என்பதும் அவளுடைய திட்டமே.
இந்தக் களேபரங்களால் கண்ணாடியில் இருப்பவர்கள் ஓடிவிடுவார்களோ அல்லது எரிச்சலடைவார்களோ என்று என் அம்மா பயந்தபோதிலும், அனைத்தும் நன்றாகவே நடந்தன. ஒவ்வொரு நாளும் மேசையில் அமரும்போது அத்தனை தெரிந்த முகங்களைப் பார்ப்பது நிம்மதியாக இருந்தது என்பதை நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அந்தப் பக்கம் இருந்தவர்களில் சிலர் தூரத்து உறவினர்கள்; வேறு சிலரோ, நீண்ட கால இடைவெளியால் (அது அவர்கள் திட்டமிட்டது அல்ல என்றாலும்) எங்களுக்கு அன்னியர்களாகவே தெரிந்தனர். ஒவ்வொரு நாளும் மேசையைச் சுற்றிச் சுமார் இருபது பேர் அமர்ந்திருந்தோம். அவர்களுடைய அசைவுகள் எங்களை விட மந்தமாகவும், அவர்களுடைய உணவுகள் சற்றே நிறம் மங்கியும் தெரிந்தாலும், பொதுவாக நாங்கள் அனைவரும் ஒற்றுமையான ஒரு பெரிய குடும்பம் போன்ற தோற்றத்தையே அளித்தோம்.
நிஜமான மேசைக்கும் கண்ணாடியில் தெரிந்த மேசைக்கும் இடையிலான அந்த எல்லையில், இந்தப் பக்கம் கிளாராவும் அவளுடைய சகோதரன் ஜூலியஸும் அமர்ந்திருந்தார்கள். அந்தப் பக்கம் யூலாலியா (1949) இருந்தாள். அவள் டேனியல் மாமாவின் இரண்டாவது மனைவி; உயிரோடு இருந்தபோதே ஒதுங்கியும் சோம்பலாகவும் இருந்தவள், இப்போது அந்தப் பக்கம் இருப்பவர்களிலேயே மிகவும் அன்னியமாகத் தெரிந்தாள். அவளுக்கு நேர் எதிரே என் ஞானத்தந்தை சில்வெஸ்டர் (1952) அமர்ந்திருந்தார். அவர் இரத்த உறவு இல்லை என்றாலும் எப்போதும் ஒரு ஆத்மார்த்தமான உறவாகவே இருந்தவர். சில்வெஸ்டர் தன் முகப் பொலிவை இழந்திருப்பதைப் பார்க்க எனக்கு வருத்தமாக இருந்தது; அவர் இப்போது நிறம் மங்கிய ஒரு பொம்மையைப் போலத் தெரிந்தாலும், அவருடைய முகம் மட்டும் முழுமையான ஆரோக்கியத்துடன் இருப்பது போலத் தோன்றியது. அந்த வெளிறிய நிறம் அந்தத் திண்ணிய அஸ்தூரியன் மனிதருக்குப் பொருந்தவில்லை. இந்தச் சூழலில் அவர் நிச்சயம் சற்றே சங்கடமாகத்தான் உணர்ந்திருப்பார்.
சிறிது காலம், எந்தப் பிரச்சனையும் இன்றி நாங்கள் அனைவரும் ஒன்றாகவே சாப்பிட்டோம். இருப்பினும், இரு மேசைகளுக்கும் இடையிலான அந்த எல்லைக்கோட்டில்—உள்ளதற்கும் இல்லாததற்கும் இடையிலான அந்த நிலநடுக்கோட்டில் — அமர கிளாராவை அனுமதித்ததை நாங்கள் மறந்திருக்கக் கூடாது. அந்தச் சூழலை நாங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டோம்; ஆனால் கவனித்திருக்க வேண்டும். சோம்பேறி யூலாலியா கிளாராவுக்கு நேர் எதிரே அமர்ந்திருந்தது எங்களுடைய அந்த மறதிக்கு இன்னும் ஒரு சிக்கலாக அமைந்தது. ஒரு நாள் இரவு, முன்பு கஸிடம் காட்டிய அதே இணக்கத்துடன், கிளாரா யூலாலியாவிடம் இலையமுது (சாலட்) வைத்திருந்த கிண்ணத்தை நகர்த்திக் கொடுக்குமாறு கேட்டாள்.
யாரோ அவமதிக்கப்பட்ட ஒரு அரசியைப் போன்ற கர்வத்துடன், யூலாலியா அந்தப் பேயுலக இலையமுதுக் கிண்ணத்தை நகர்த்தினாள். அதில் வாடிய கீரைகளும், அரைகுறையாய் ஒளி ஊடுருவிச் செல்லும் சாம்பல் நிறத் தக்காளித் துண்டுகளும் இருந்தன. கிளாரா இந்த விசித்திரமான புதிய முயற்சியால் குறும்புத்தனமாகச் சிரித்துக்கொண்டே அவற்றை விழுங்கினாள். அன்று ஒருநாள் ஆண்களுக்கான பாடப்பிரிவில் சேரச் சென்றபோது அவளுடைய கண்களில் இருந்த அதே சவாலான பார்வை இப்போதும் இருந்தது. ஆனால் எங்களால் எதையும் செய்வதற்குக் கால அவகாசம் இருக்கவில்லை; அவள் முகம் வெளுத்துப் போவதை நாங்கள் பார்த்தோம்; அவளுடைய சிரிப்பு மறைந்தது. இறுதியில் கிளாரா கண்ணாடியின் மேல் சாய்ந்து சரிந்து விழுந்தாள்.
அனைத்து இறுதிச் சடங்குகளும் முடிந்து, நாங்கள் மீண்டும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்தபோது, கிளாரா அந்தப் பக்கம் கண்ணாடிக்குள் இடம் பிடித்திருப்பதைக் கண்டோம். அவளது உறவினர் பல்தாசருக்கும் (1940-ல் இறந்தவர்) நாங்கள் “இட்டோ” என்று அன்புடன் அழைக்கும் ஒரு தாத்தாவுக்கும் இடையில் அமர்ந்திருந்தாள்.
இந்தத் தவறு எங்களுடைய கலகலப்பைச் சற்றே குலைத்தது. ஒரு வகையில், நாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தோம்; அவர்கள் எங்களுடைய விருந்தோம்பலைத் தவறாகப் பயன்படுத்திவிட்டதாக எங்களுக்குத் தோன்றியது. இருப்பினும், உண்மையில் யார் யாருடைய விருந்தினர் என்ற கேள்வியில் நாங்கள் பிரிந்து நின்றோம். எங்களுடைய கவனக்குறைவும், கிளாராவின் அடக்க முடியாத ஆர்வமுமே இந்த விபத்திற்குக் காரணம் என்பதும் தெளிவாகத் தெரிந்தது. உண்மையில், கிளாரா முன்பு செய்ததற்கும் இப்போது செய்து கொண்டிருப்பதற்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை என்பதைச் சிறிது நேரத்திலேயே நாங்கள் உணர்ந்தோம். எனவே, அந்தச் சம்பவத்தைப் பெரிதுபடுத்தாமல் இந்த வழக்கத்தைத் தொடர முடிவு செய்தோம்.
இருந்தபோதிலும், ஒவ்வொரு நாளும் எந்தப் பக்கம் வாழ்க்கை இருக்கிறது, எந்தப் பக்கம் அதன் பிரதிபலிப்பு இருக்கிறது என்பதில் எங்களுக்கு இருந்த சந்தேகம் அதிகரித்துக் கொண்டே போனது. ஒரு தவறான அடி அடுத்த தவறுக்கு இட்டுச் செல்லும் என்பார்களே, அதுபோல இறுதியில் கிளாரா விட்டுச் சென்ற அந்த வெற்று இடத்தில் நான் வந்து அமர்ந்தேன்.
இப்போது நான் அவர்களுக்கு இன்னும் நெருக்கமாக இருக்கிறேன். கைக்குட்டைகளை மடிப்பதும் பிரிப்பதும் போன்ற தூரத்துச் சத்தம், கண்ணாடித் தம்ளர்கள் மற்றும் உணவுக் கரண்டிகள் மோதும் மெல்லிய ஒலி, நாற்காலிகளை நகர்த்தும் சத்தம் என அனைத்தையும் என்னால் கேட்க முடிகிறது. சொல்லப்போனால், இந்தச் சத்தங்கள் அவர்களிடமிருந்து வருகிறதா அல்லது எங்களிடமிருந்து வருகிறதா என்று என்னால் சொல்ல முடியவில்லை. அதைத் தெளிவுபடுத்திக் கொள்வதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.
ஆனால், என்னை நிஜமாகவே வருத்துவது என்னவென்றால், கிளாரா தனது புதிய நிலைக்குத் தேவையான அந்தப் பக்குவத்துடனோ அல்லது மர்மத்துடனோ நடந்துகொள்வதாகத் தெரியவில்லை; அதை எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. அதைவிட மோசமான விஷயம் என்னவென்றால், குடும்பத்தில் மற்றவர்களை விட நானே கிளாராவின் தந்திரங்களுக்கு இலக்காகக்கூடும். ஏனெனில், நாங்கள் எப்போதும் சிறந்த ஓர் அன்பால் பிணைக்கப்பட்டிருந்தோம்; ஒருவேளை நாங்கள் ஒரே வயதினராக இருந்ததும், சிறுவயது விளையாட்டுகளையும் பதின்பருவத்தின் முதல் கவலைகளையும் பகிர்ந்து கொண்டதும் அதற்குக் காரணமாக இருக்கலாம்…
இப்போது நடப்பதைப் பார்த்தால், அவள் என் கவனத்தை ஈர்க்கத் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்கிறாள். கடந்த திங்கட்கிழமை முதலே, நான் எப்போது ஏமாறுவேன் என்று அவள் காத்துக்கொண்டிருக்கிறாள். நான் விரும்பும் அதே புளிப்புச் சுவையுடன், சாறு பிழிவதற்கு ஏற்றவாறு, சற்றே நிறம் மங்கிய ஒரு பெரிய அன்னாசிப் பழத்தை என்னிடம் நீட்டுவதற்காக அவள் காத்துக்கொண்டிருக்கிறாள்.
ஸ்பானியத்திலிருந்து ஆங்கிலத்துக்கு: பியாட்ரிஸ் தெலெகி
மரியா எலேனா யானா – கியூபாவின் ஹவானா நகரில் பிறந்த, மிக முக்கிய எழுத்தாளர், பத்திரிகையாளர், கதாசிரியர். தனது கதைகளில் எதார்த்தத்தையும் கற்பனையையும் மிக இயல்பாக இணைப்பதில் வல்லவர். அன்றாட வீட்டு வாழ்க்கையின் சாதாரண நிகழ்வுகளுக்குள் அமானுட, விசித்திரக்கூறுகளைப் புகுத்துவது இவரது பாணி. இவரது கதைகள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தின் வீழ்ச்சி, குடும்ப உறவுகளின் சிக்கல்கள் மற்றும் கியூபாவின் சமூக மாற்றங்களைப் பற்றிப் பேசுகின்றன. ‘In the family’ எனும் இச்சிறுகதை 1983ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்தச் சிறுகதையில் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான கோட்டை மிக மெல்லியதாக மாற்றியுள்ளார். “இறந்தவர்கள் மறைவதில்லை, அவர்கள் நினைவுகளாக நம்முடனேயே வாழ்கிறார்கள்” என்ற தத்துவத்தை இது நகைச்சுவையுடனும் சற்று மர்மத்துடனும் விளக்குகிறது.
சொந்த ஊர்: தூத்து








Leave a Reply