சொல்லாத சொல்லுக்கு
யுகங்கள் பல கழிந்து
கனவில் வந்திருக்கிறாய்
முகம் பார்த்ததும்
கொஞ்சம் சிரித்திருக்கலாம்
எதிர்பாராச் சந்திப்பின் மகிழ்வு
கொஞ்சம் பளிச்சிட்டிருக்கலாம்
அப்படி நேர்ந்திருந்தால்
அந்த நொடி பிளந்த தருணத்தைப்
பொதிந்து
பத்திரப்படுத்தியிருப்பேன்
மாறாக
உன் கண்ணில் வெடித்ததோ கோபம்
பேச்சில் கனன்றதோ தேவையற்ற அனல்
என்னைக் காயப்படுத்தும் நோக்கமில்லை
என்று நம்பினாலும்
கனவு கலைந்த பின்பு
மனம் பதியாமல் மூழ்கிப்போன சொற்களை
அகழ்ந்து எடுப்பது எப்படி?
முயன்றும் முடியவில்லை
அவற்றில் ஒரு சொல்லுக்கேனும் அர்த்தம்
துரோகம் என்று இருந்ததா?
இல்லையென்று
அடுத்த கனவில் சொல்லி விடேன்
துளிக் கருணையேனும் இல்லாமலா இருக்கும்
இழந்த காதலில்?
சொல்ல மனமில்லை எனினும்
சமிக்ஞை போதும்
மீண்டும் உறங்கச் செல்ல.
♦
கனவுக்குள் நில்லாது ஓடும்
வரிப்புரவி ஒன்று உண்டு.
புல்வெளியில் புரளும்.
நீர்நிலையில் தாவும்.
கடற்கரையில் ஓடும்.
முகத்தருகே வந்து
ஏதோ ரகசியத்தை முனகும்.
அதன் மனதின் எண்ணம் எல்லாம்
எப்படியோ என் செவிக்குள்ளும் கேட்கும்.
குதிரை மொழி அறிந்தாலும்
என் வாய்வழி வந்ததில்லை இதுவரை.
அதன் கண்களை மட்டும்
வெகுநேரம் பார்க்க முடிவதில்லை.
அவை கேட்கும் கேள்விகளுக்கு
என்னிடம் பதில் இருந்ததில்லை.
நேற்றிரவும் வந்தது அக்குதிரை.
அருகில் நின்ற போது
குதிரை வாசனை இல்லை.
இனம் தெரியாத பூவின் நறுமணம்
என் முகத்தை நிமிர்ந்து பார்த்து
முதுகில் சிலிர்த்தது.
மெதுவாகக் கையுயர்த்தி
வருடிக் கொடுத்தேன்.
ஒவ்வொரு வருடலிலும்
குதிரை கரைந்தது
மறைந்தே போனது.
திடுக்கிட்டு எழுந்து
உள்ளங்கையைப் பார்த்தேன்.
ரேகைகளாகியிருந்தன
குதிரை வரிகள்.
♦
”மாடு இல்லே”
தூரத்தில் கேட்ட
நாயனம்
பூம்பூம் மாட்டுக்காரன்
என்பதை அறிவித்துவிட்டது.
பண்டிகை நாட்களில்
பூம்பூம் மாட்டுக்காரன் மட்டுமல்லாமல்
குருவிக்காரர்களும்
பம்பையை
வளைந்த மூங்கிலால் தேய்த்தபடி
சாட்டையில்
தன்னையே அடித்துக்கொள்பவனும்
வேதங்களை
உச்சரித்தபடி வரும்
அந்தணர்களும்
முன்பெல்லாம் வருவார்கள்.
இப்போது
பூம்பூம் மாட்டுக்காரன்
மட்டும் எஞ்சியிருக்கிறான்.
காசை எடுத்துக்கொண்டு
வாசலுக்குச்சென்றால்
ஜரிகை வேலைப்பாட்டோடு
கண்ணாடி பதித்த
அலங்காரத்துணியில்
ஆர்ப்பாட்டமான தலைப்பாகை,
அழுக்கும் கிழிசலுமாக
கருப்பு கோட்டு,
கையில் தங்கம் போல்
தடிமனான காப்பு,
நெற்றியில் நாமம் போல
குங்குமம்,
கண்களில் மை,
அட்டகாசமான மீசை,
வினோதமாக
கட்டப்பட்ட வேட்டியோடும்
பதக்கங்கள் தொங்கும்
நாயனத்தோடும்
டால்டா டின் இல்லாமல்
எவர்சில்வர் பாத்திரங்கள்
கொண்ட பையை
தோளில் சுமந்து வந்தவனிடம்
மாடு மட்டும் இல்லை.
கேட்டபோது
“மாடு இல்லே”
என்கிறான் ராகமாக.
நான் போட்ட
ஐந்து ரூபாய் போல
நிறைய சேர்த்து
மாடு வாங்கிக்கொள்வான் போல.
♦
நான் காணாமற் போகும் கதை
காணாமற் போவதில் கவர்ச்சி இருக்கிறது
அது
ஆசையாக மட்டும்
நின்றுவிடுவதில் பெரும் அயற்சி
பொறுப்புகளைத் துறந்துவிட்டு
காணாமற் போவது சாகசம்
அதிலிருக்கும் குற்றவுணர்வைக்
கொல்வது மகோன்னதம்
உறவுகளைத் தவிக்கவிட்டு
காணாமற் போவது பழிவாங்கல்
அவர்கள் ஒன்றும்
தவிக்கப் போவதில்லை என்பது
நிதர்சனம்
காணாமல் எங்கே போவது
என்பது திகைப்பு
போகுமிடம் வாழ்ந்த இடத்தைவிட
நரகமாக இருக்கும்
என்பது மலைப்பு
காணாமற் போன பின்பும்
விட்டுவந்த வாழ்க்கையை
கள்ளத்தனமாகப் பார்ப்பது
கேவலம்
உங்கள் இன்மை
பொருட்படுத்தப்படவேயில்லை
என்றறிவது கர்வமரணம்.
காணாமற் போனவுடன்
காணாமலே போய்விட வேண்டுமென்பது
குறிக்கோள்
செத்த பின்பு எத்தனைபேர்
உன்னை இழந்திருப்பார்கள்
என்றறிவதே
உச்ச நிர்வாணம்.
Art : Iruvan Karunakaran
ஆரணியில் பிறந்த ஜி.குப்புசாமி ஓரான் பாமுக்கின் ‘என் பெயர் சிவப்பு, ‘பனி’, ‘இஸ்தான்புல்’, ‘வெண்ணிறக் கோட்டை ஆகிய துருக்கி நாவல்களை ஆங்கில மூலத்திலிருந்து மொழியாக்கம் செய்துள்ளார். மேலும் ஜான் பான்வில்லின் (The sea, John Banvill) ‘கடல்’ மற்றும் அருந்ததி ராயின் ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ (God of small things, Arundati Roy) இரு மொழியாக்கங்களும் பரவலான வாசகர்களைச் சென்றடைந்தன. எஸ்.ஆர்.எம் தமிழ்ப்பேராயம் விருது, டொராண்டோ தமிழ் இலக்கியத் தோட்டம் விருது, தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.








Leave a Reply