Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

முதல் ஷிஃப்ட்

பாரத் தமிழ்
பாரத் தமிழ்
January 3, 2026
முதல் ஷிஃப்ட்

முதல் ஷிஃப்ட் காலை ஆறு மணிக்குத் தொடங்கும் என்றாலும், கொஞ்சம் தாமதமாக வந்த சிறில், வருகைப் பதிவேட்டில் கையொப்பம் போட்டுவிட்டு பணியாளர்களுக்கென்று இருக்கும் வாட்ஸ்அப் குழுவில் லைவ் லொக்கேஷனையும் ஷேர் செய்தான். மூடுபனி பக்கத்தில் இருக்கும் ஆட்கள் தெரியாத அளவுக்குப் புகைபோல் மண்டி இருந்தது. பனியோ மழையோ, முதல் வேலையாக ரயில் நிலையத்தின் மூலை முடுக்கெல்லாம் அலசி ஆராய்ந்து விட்டுத்தான் அடுத்த வேலைகளைப் பார்ப்பான். நடைமேடைகள், சிமெண்ட் இருக்கைகள், இருக்கைகளின் அடியில், ஆள் நடமாட்டமற்ற ஐந்தாம் நடைமேடையின் கடைசி வேப்பமரத்தடி, கூட்ஸ் வண்டிகள் நிற்கும் ஐந்தாம் நடைமேடையை ஒட்டிய கொடோன், அதைச் சுற்றியுள்ள புதர்கள், ரயில் நிலைய எல்லையில் கட்டப்பட்ட பிரிட்டிஷ் காலத்து மாளிகை போன்ற நீர்த் தேக்கத்தொட்டி, அந்தத் தொட்டிக்கு அருகே இருக்கும் சிறிய பார்க், பார்க் பக்கத்தில் மறைவாக இருக்கும் மின் நிலையம் இப்படியான இடங்களில்தான் அநேகமாகக் குழந்தைகள் மறைந்திருப்பர் என்பது பணியாளர்களின் அனுபவக் கணிப்பு.

ஐந்து நடைமேடைகள் கொண்ட அந்தக் காட்பாடி ரயில் நிலையத்தை ஒருமுறை சுற்றிவருவது மூன்று கிலோமீட்டர் தூரம் நடப்பதற்குச் சமம். அப்படிச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்ததால் ஏற்பட்ட சிறு களைப்பையும் கடுங்குளிரால் வாய் உதறி பற்களிடும் கடகட சத்தத்தையும் போக்கிக் கொள்ள, இரண்டாம் நடைமேடையில் உள்ள ஆவின் பாலகத்தில் சுடச் சுட பாதாம் பால் வாங்கிக் குடித்தபடியே பார்வையால் அக்கம்பக்கத்தை அலசினான்.

பணியில் மட்டுமன்றி, பொதுவாகவே பயணத்தில், பேருந்து நிலையங்களில், பொதுவிடங்களில் எங்குப் பதினெட்டு வயதிற்கு உட்பட்ட சிறுவர்களைக் கண்டாலும் அவர்கள் தனிமையில் இருக்கிறார்களா? ஆபத்தில் இருக்கிறார்களா? அவர்களை மீட்க வேண்டுமே என்ற நினைப்புதான் இப்போதெல்லாம் அவனுக்கு. ஊரில், நண்பர்கள் வட்டத்தில், உறவினர்கள் மத்தியில் இப்போதெல்லாம் அவன் பெயர் ‘புள்ள புடிக்கிறவன்’.

நிலையம் முழுவதும் சுற்றித் திரிந்தும் யாரும் தென்படவில்லை. அவனது கண்களிலிருந்து எந்தக் குழந்தையும் அவ்வளவு சீக்கிரம் தப்பிவிட முடியாது. அந்த நிலையத்தில் பணி செய்யும் ஊழியர்களிலேயே ஆபத்திலிருக்கும் குழந்தைகளை அதிகம் மீட்டெடுத்தவன் அவன்தான்.

அவனால் மீட்கப்பட்ட குழந்தைகளைப் பட்டியலிட்டால் நிச்சயம் ஐந்நூறைத் தாண்டும். சமீபத்தில் கூடச் சமூக விரோதிகளால் நாசம் செய்யப்பட்டு சாகும் தறுவாயில் முக்கால் நிர்வாணமாகக் கிடந்த பதினாறு வயதுச் சிறுமியை ரயில் நிலையத்தின் எல்லை முடிவில் இருக்கும் ஏரிக்கரையில் கண்டெடுத்தான். சிஎம்சி மருத்துவமனையின் தயவால் அச்சிறுமி உயிர்பிழைத்தாள். அதற்காக நிறுவனத்தின் சார்பில் பெரிதும் பாராட்டப்பட்டிருந்தான். எந்தப் பணியாளரும் ரயில் நிலையம் தாண்டித் தன் கண்காணிப்பைச் செலுத்துவதில்லை. ஆனால் சிறில் அப்படி அல்லன். ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ ரயில் நிலையத்தில் தனியாக இருப்பது தெரிந்தால் கொஞ்சம் நேரம் நோட்டமிடுவான். தனிமையில்தான் இருக்கிறார்கள் என்று உறுதியானால் உடனடியாகத் தன் விசாரணையை ஆரம்பித்து விடுவான். அன்பும் கருணையும் அவனது விசாரணையில் வெளிப்படும். எப்படிப்பட்ட குழந்தையையும் தன்வயப்படுத்தித் தகவல்களை மிக லாவகமாக வாங்கி விடுவதில் கைத்தேர்ந்தவன். அதேபோல், எக்காரணம் கொண்டும் குழந்தையை மீட்டு உரியவர் இடத்தில் ஒப்படைக்கும் வரை ஓய மாட்டான். பணி நேரம் முடிந்து விட்டது என்று இதுவரை எந்த ஆபத்திலிருக்கும் குழந்தையையும் அடுத்த ஷிஃப்ட்க்கு வரும் ஊழியரிடம் அரையும் குறையுமாக ஒப்படைத்து விட்டுப் போனதில்லை. அப்படி ஒப்படைத்து விட்டுப் போன நாள்கள் அரிதினும் அரிதே.

சித்தூர் வழியாக ஆந்திரா மாநிலத்தையும், வட இந்தியாவையும், ஜோலார்பேட்டை வழியாகக் கர்நாடக மாநிலத்தையும், சேலம் வழியாகத் தென் தமிழகத்தையும் இணைக்கும் மிக முக்கியமான நிலையமாகக் காட்பாடி இருக்கிறது.‌ அதிலும் வடநாட்டவர்கள் கூலி வேலைகளுக்காகவும், சி.எம்.சி மருத்துவமனையில் மருத்துவம் பார்க்கவும், வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் படிக்கவும், அரியூர் தங்கக் கோயிலைப் பார்வையிடவும் என்று கூட்டம் கூட்டமாக வந்திறங்குவதால் மக்கள் தொகை அடர்த்தியான நிலையமாகக் காட்பாடி அண்மைக்காலமாக மாறி இருக்கிறது. அனைத்து மாநிலத்து மக்களும் குவிந்து கிடக்கும் அந்தக் கூட்ட நெரிசலில் இப்போதெல்லாம் உட்கார இடமிருப்பதில்லை.

வேலூர் கன்டோன்மென்ட் நிலையத்திலிருந்து சென்னை பீச் வரை செல்லும் ரயில், அன்று தாமதமாக வந்து நின்றது. ஒவ்வொரு பெட்டியாக நடைமேடையில் இருந்தபடியே நோட்டமிட்டான். ஒரு குழந்தையும் காணவில்லை. மன்னார்குடி எக்ஸ்பிரஸிலும் சென்னை பீச் ரயிலிலும்தான் நிறைய குழந்தைகளை இதுவரை மீட்டிருக்கிறார்கள். ஆனால் பீச் ரயில் அவனை அன்று ஏமாற்றி விட்டது. அடுத்த வரவிருக்கும் சேலம் மெமோ பேசஞ்சர் குறித்த அறிவிப்பு கேட்கவே மீண்டும் முதல் நடைமேடைக்கு ஓடினான். அந்த ரயிலிலும் எந்தக் குழந்தையும் தென்படவில்லை. கேன்டீன் ஊழியர் திருமலையிடம் கொஞ்சம் நேரம் பேச்சுக் கொடுத்தான். சாதாரண நலன் விசாரிப்புதான். ரயில்நிலையக் காவலர்கள், டிக்கெட் பரிசோதகர்கள், பல்வேறு ரயில்வே ஊழியர்கள், தின்பண்டங்கள் விற்பவர்கள், யாசகர்கள் என யாரிடமும் சிறில் பேச்சுக் கொடுப்பது வழக்கம். அப்போதுதான் அவர்கள் எங்கேனும் குழந்தைகளைக் கண்டால் அவனுக்குத் தகவல் தருவார்கள். திருமலையிடம் பேசிவிட்டு நேற்றைய பணிகளை ஆவணப்படுத்தும் பணி பாக்கி இருந்ததால் மீண்டும் அலுவலகத்தில் வந்து அமர்ந்து எழுத்து வேலையை முடித்துவிட்டு, காலை உணவையும் முடிக்கச் சரியாக மணி பத்தானது.

மீண்டும் தன் கோப்புகளைத் திறந்தபோது மாலதியிடமிருந்து ஃபோன் வந்தது. அவளது ஃபோன் காலுக்காகத்தான் காத்திருந்தான். அவள் தரவிருக்கும் தகவல்கள் அடிப்படையில்தான் அவனது கோப்புப் பணிகள் நிறைவடையும். சமூகநலத்துறையைச் சார்ந்த மாலதி, பெண் குழந்தைகளைப் பராமரிக்கும் இல்லத்தின் பணியாளர். எனவே பெண் குழந்தைகள் விடயத்தில் சிறில் போலவே சமரசமற்றுப் பணியாற்றுவாள். அவள் சொன்ன தகவல்களை அப்படியே எழுதிக் கொள்ளத் தாள்களை எடுத்தான்.

“சிறில் சார்! மெடிக்கல் எக்ஸாமினேஷன் முடிஞ்சது. அந்தப் பொண்ணு மூணு மாசம் கன்ஷிவா இருக்காளாம். அதுமட்டுமல்ல, எச்ஐவி பாசிட்டிவ் வேற” மாலதியின் குரலில் விரக்தியும் ஆற்றாமையும் வெளிப்பட்டது.

“என்ன மேடம் சொல்றீங்க? ரொம்ப வருத்தமா இருக்கு கேக்கவே” அதே ஆற்றாமை சிறில் குரலிலும் இருந்தது.

“ஆமாம் சார். அந்த ஆளுக்கும் எக்ஸாமினேஷன் முடிஞ்சது. அவன் தப்பு எதுவும் பண்ணல. பட் தப்பு பண்ண டரை பண்ணி இருக்கான் ராஸ்கல். தொடக் கூடாத எடத்துல எல்லாம் தொட்டிருக்கான்; அடிச்சிருக்கான்”

சிறில், மாலதி சொல்லும் தகவல்களை வேகமாக எழுதிக் கொண்டே இருந்தான்.

“திருப்பதியில பிச்சையெடுக்குற பொண்ணாம் சார் அது. முந்தாநேத்துலருந்து நேத்துவர அந்தப் பொண்ண அவ்ளோ தொல்ல பண்ணி இருக்கான். அந்தப் பொண்ணு சொல்லி அப்டி அழ்றாளாம். அந்த லக்காடிக்கு இந்தப் பொண்ணவிட வயசுல மூத்த பொண்ணுங்க இருக்குதுங்களாம்.‌

தன் வூட்டுப் பொண்ணுங்களத் தவிர மத்த எல்லாப் பொண்ணுங்களும் இவனுங்களுக்குப் பொண்டாட்டி ஆயிடணும். வெள்ளையும் ஜொள்ளையுமா பாக்க பழம் மாதிரி இருக்கான் அப்பனோலி மவன். சாரி சார்…. கோவம் கோவமா வருது.” மாலதி தன் ஆற்றாமையை சிறிலிடம் சொல்லிக் கொண்டே இருந்தாள்.

“பாப்பா பேரு என்னன்னு விசாரிச்சீங்களா?”

“ஆமாம் சார் அதச் சொல்ல மறந்துட்டன் பாருங்க. பேரு புட்டம்மா. வயசு பதினஞ்சு. அப்பா அம்மா ரெண்டு பேரும் இல்லையாம். மூன்ற வருஷமா பிச்சையெடுத்துதான் வாழ்ந்திருக்கா. ரொம்ப நாசம் பண்ணி வச்சிருக்கானுங்களாம் சார். நர்ஸ் சொல்லுச்சு. கேட்கவே பயமா இருந்துச்சு. பிரெஸ்ட், தொடைன்னு எங்க பார்த்தாலும் பல் கடி, நகக் கீறல், வடுன்னு அவங்க சொல்லச் சொல்ல அழுதுட்டன் சார்”

“சிறிலுக்கு இப்படிப்பட்ட செய்திகள் புதிதல்ல என்றாலும் கனத்த இதயத்தோடே அனைத்துத் தகவல்களையும் குறித்துக் கொண்டிருந்தான்.

“அப்பறம் இன்னொரு விஷயம் சொல்லட்டுமா சார்? அந்தப் பொறிக்கி எங்க ஜாதிக்காரனாம். அதனால அவன நான் மன்னிக்கணுமாம்”

“அது எனக்கு நேத்தே தெரியும் மேடம். அவனோட ஒயிட் சர்ட் பாக்கெட்டில போட்டோ தெரிஞ்சது. அப்பவே கணிச்சன் கட்சியில இருக்கான் போலன்னு. எவனா இருந்தா நமக்கென்ன மேடம்?”

சிறிலும் மாலதியும் தொழில் ரீதியாக நண்பர்கள் என்பதைத் தாண்டி அவ்வப்போது இப்படி வெளிப்படையாகச் சாதி, அரசியல், சமூகநீதி குறித்தெல்லாம் உரையாடும் அரசியல் ஆர்வமுள்ளவர்களும் கூட. மாலதி, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவள் என்றாலும் சாதிப் பற்று அறவே இல்லாதவள். அவளுக்கு அம்பேத்கர், பெரியார், சமூகநீதி குறித்தான சிறு சிறு புத்தகங்களை அவ்வப்போது சிறில் வாசிக்கக் கொடுப்பான். ஆரம்பத்தில் சராசரி பெண்ணாக இருந்த மாலதி இப்போது சாதிக்கு எதிரான மனநிலை கொண்ட பெண்ணாக மாறி இருக்கிறாள். இப்போதெல்லாம் மாலதிக்குத் தெரிந்ததெல்லாம் ரெண்டே ஜாதிதான். ஒண்ணு நல்லவங்க; இன்னொண்ணு கெட்டவங்க.

இந்தப் புரிதல்தான் அவர்களின் நட்பை அவ்வளவு ஆழமாக வைத்திருக்க உதவுகிறது.

“இப்ப அவனை என்ன பண்ணலாம் சார்?” மாலதி கேட்க,

“அவனக் கண்டிப்பா பனிஷ் பண்ற வேலையப் பாருங்க. நான் சி.டபல்யூ.சி ச்சேர் பர்சன் கிட்ட பேசுறன். போக்சோவுல உள்ள தள்ளுவோம். அப்பதான் புத்தி வரும்”

மாலதிக்குத் தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல்வாதியின் நேர்முக உதவியாளரிடமிருந்து ஏற்கனவே ஃபோன் வந்திருந்தது.

“தப்புத்தண்டா பண்ணலன்னா வெறும் வார்ன் பண்ணி அனுப்பிடுங்க மேடம். நம்ம கேஸ்ட்க்குத்தான் கெட்ட பேரு. யோசிச்சிப் பார்த்து ஒரு நல்ல முடிவு எடுங்க”

அவரது கோரிக்கையைப் பொருட்படுத்தாமல் அவன்மீது உரிய நடவடிக்கை எடுக்க சிறில் சொன்னதுபோல் பரிந்துரை செய்தாள் மாலதி.

நேற்று காலை பதினோரு மணிவாக்கில் இரண்டு மற்றும் மூன்றாம் நடைமேடைகளைப் பிரிக்கும் தாழ்தளப் படிக்கட்டில் அமர்ந்திருக்கும் அப்பாவுக்கும் மக்களுக்குமான சண்டைதான் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. என்றாலும், சிலர் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. அவர்களிடையேயான அன்புச் சண்டையென நினைத்திருக்க வாய்ப்புண்டு. அல்லது யாராக இருந்தால் நமக்கென்ன என்று ஃபோனில் முகத்தைப் புதைத்துக் கடந்து போயிருப்பார்கள். தூய்மைப் பணியாளர் லதாவிடமிருந்து அழைப்பு வரவே ஷிஃப்டில் இருந்த சிறில் நிகழ்விடம் நோக்கி ஓடினான். அந்த அப்பா மகள் சண்டையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து விசாரிக்காமல், சற்று அருகில் நின்று கவனித்தான். எதையெதையோ வாங்கித் தந்தார் அந்தத் தந்தை. ஆனாலும், அவரது கையிலிருக்கும் தின்பண்டங்களைத் தட்டி விட்டபடி கோபத் தெலுங்கில் அசிங்கமாகத் திட்டுகிறாள் சிறுமி.

அப்போதுதான் தங்களைச் சில கண்கள் மேய்வதை உணர்ந்த அந்த அப்பா,

தன் கையில் இருந்த தின்பண்டங்களைக் கொடுக்க இன்னும் மென்மையாக அந்தக் குழந்தையை அணுகினார்.

“நாக்கு ஏமி ஒத்து. நு மூஸ்க்குனு போறா! நாக்கு கால் நொப்பி கம்முனுன்றா” என்றாள் சிறுமி.

மீண்டும் அந்த அப்பா தன் செல்லத் தமிழால் கெஞ்சிப் பார்க்கிறார்.

ஏன்டிக்கிறா தொல்ல சேஸ்தாவு?

நன்னே நிம்மதிக்கே ஒச்சேசி போறா! மீ இண்ட்ல பாப்பு எவுறு லேதாறா நன்னே ஏன்டிகிறா தொல்ல சேஸ்தாவு?”

“ஏம்மா இப்படிப் பேசுற? இந்தாம்மா இந்த டீ தண்ணியாவது குடிம்மா! எல்லாரும் எப்படிப் பாக்குறாங்க பாரும்மா”

“நேனு தின்னகுண்ட வுட உண்டானு, நு பணி சூஸ்க்குனி போறா!”

பற்களை நரநரவென்று கடித்தாள் கோபத்தில்.

அதோடு விடாமல்

“நு இ ஜாகா வுச்சி போறா!” என்று எழுந்து நின்று சத்தமிட்டாள்.

இது அப்பாவுக்கும் மகளுக்குமான இயல்புக்கு மாறான விவாதம் என்பதைச் சில நொடிகளில் புரிந்து கொண்டான் சிறில். அப்பா தமிழில் பேசுவதும் மகள் தெலுங்கில் பேசுவதும் தாண்டி, பல நாள்கள் குளிக்காத சீக்கேறிய தலையும் கிழிந்த அழுக்குத் துணியுமாய் இருக்கும் அந்தச் சிறுமிக்கும் வெள்ளைச் சட்டையும் வெள்ளை வேட்டியுடனும் இருந்த அந்த ஆசாமிக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்க நியாயமே இல்லை என்று உடனடியாகச் செயலாற்றினான். அவர்கள் அருகே செல்லும்முன் காவல்துறைக்கும் தன்னுடன் பணியாற்றும் சகக் குழந்தைகள் நலன் சார்ந்த பெண் பணியாளருக்கும் தகவல் சொல்லிவிட்டு அவனிடம் பேச்சுக் கொடுத்தான்.

“சார் என்ன பிரச்சின? பாப்பா ஏன் அடம் பிடிக்கிறாங்க?” பொறுமையாகவே கேட்டான்.

“ஒரு பிரச்சனையும் இல்ல சார். என் பொண்ணுதான். கொஞ்சம் மனநலம் சரியில்ல. ‌அதான் திருப்பதிக்குக் கூப்ட்டுனு போய் வந்தன்” என்றார் கொஞ்சமும் பதற்றம் இல்லாமல்.

“சரி எந்த ஊர் நீங்க?”

“தருமபுரி”

“உங்க பொண்ணு பேரென்ன?”

கொஞ்ச நேர யோசனைக்குப் பிறகு, ‘கவிதா’ என்றான்.

அதற்குள் காவல்துறையும் சமூக நலத்துறையும் அந்த ஆசாமியைச் சுற்றி வளைத்திருந்தனர். தப்பியோட முடியாத நிலையில் அவர்களின் அழைப்பை ஏற்று திமிறிக்கொண்டு எகிறினான். “சார்! நான் ஏன் உங்க கூட வரணும்? பாவமா இருக்கே பொண்ணுன்னு டீ வாங்கித் தந்தது தப்பா? நான் சேலம் போகணும்.‌ அது என் பொண்ணு இல்ல”

“உன் பொண்ணு இல்லன்னு எங்களுக்குத் தெரியும். மொதல்ல தர்மபுரின்ன. இப்ப சேலம்ன்ற. ஒண்ணும் பண்ண மாட்டோம். எங்க கூட வந்து உன் அட்ரஸ்ஸ மட்டும் எழுதிக் குடுத்துட்டுக் கிளம்பு” ரயில்வே சட்ட ஒழுங்குக் காவலர் (ஜி.ஆர்.பி) அதட்டினார்.

“சார்….! என் பொண்ணு போல இருக்குதேன்னு பாவப்பட்டு டீ வாங்கிக் குடுத்தது தப்பா சார்?” மீண்டும் கத்தினான்.

கையிலிருந்த லத்தியால் பின்னாடி ஓர் அடி கொடுத்து, “வாடா மூடினு” என்றார் இன்னொரு காவலர்.

நேற்று நடந்த இந்தச் சம்பவத்தைத்தான் மாலதியுடன் பேசி கேஸ் டடி தயார் செய்துகொண்டிருந்தான் சிறில்.

எப்போதும் கூச்சலும் அறிவிப்புகளுமாய்க் கிடக்கும் அந்த ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் அமைந்துள்ள தன் அலுவலகக் கதவைச் சற்றே மூடியபடி அமர்ந்து புட்டம்மா குறித்த ஆவணத்தைத் தயார் செய்து கொண்டு அவளையே பரிதாபமாக நினைத்திருந்தான்.

வீட்டில் சண்டை, ஆசிரியர்கள் கண்டிப்பு, குடும்பப் பிரச்சினைகள், காதலைத் தேடி, சுற்றிப் பார்க்க, இலவச ரயில்வே இணையதளத்தைப் பயன்படுத்த என்று ஏராளமான காரணங்கள் உள்ளன குழந்தைகள் ரயில் நிலையம் வருவதற்கு. அதோடு, அப்படிப்பட்ட குழந்தைகள் பயணம் செய்யத் தேர்வு செய்வதும் ரயில்தான். காரணம், ரயிலில்தான் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ய முடியும். அப்படி வழி தவறியோ, கோபித்துக் கொண்டோ, வேண்டும் என்றோ, வேண்டாம் என்றோ வரும் குழந்தைகளை மீட்டு, சட்டத்திற்கு உட்பட்டு பாதுகாப்பு கொடுத்து, உரிய முறையில் உரிய இடங்களில் ஒப்படைக்க வேண்டும். அதற்காக ‘ரயில்வே சில்ட்ரன்’ எனும் பெயரில் ஒன்றிய அரசு செயல்படுத்தி இருக்கும் திட்டத்தின் கீழ் கடைநிலை ஊழியராகப் பணியாற்றி வருபவன்தான் சிறில். இந்த வேலையைக் கடந்த நான்கு ஆண்டுகளாகச் செய்து வருகிறான். நேற்றைய கோப்புப் பணிகளை ஓரளவு முடித்த திருப்தியில் தன் உடலை மேல் நோக்கித் திமில் விட்டபடி எழுந்தபோது அவனுக்கு எதிரே ஓர் உருவம் வந்து நின்றது.

அப்படியொரு உருவத்தை அதற்கு முன் அவன் பார்த்ததே இல்லை. தூக்கி வாரிப் போட்டதுபோல் பதற்றமாகி எழுந்தான்.

தனது ஜட்டியைக் கழற்றித் தலைக்குக் குல்லாபோல் அணிந்து கொண்டிருந்த அந்தச் சிறுமிக்கு வயது பதினெட்டுக்குள்தான் இருக்கும். காதோரம் சொறிந்தபடியே அலுவலக வாசலில் நின்று பசிக்குது என்று கையை வாய்க்கு அருகே கொண்டு சென்றாள்.

சகப் பணியாளரான நிஷாவுக்கு ஃபோன் பண்ணி வரச் சொல்லி விட்டு அப்படியே திருமலைக்கு ஃபோன் பண்ணி கேன்டீனில் சாப்பிட என்ன இருக்கிறது என்று விசாரித்தான்.

“வெஜ் பிரியாணி மட்டும்தான் இருக்குது. கொண்டு வரவா?” என்றவரிடம்

“ஆமாம் சீக்கிரம்” என்று சொல்லி விட்டு அந்தச் சிறுமியை உள்ளே அழைத்து உட்காரச் சொன்னான். அதற்குள் நிஷாவும் வந்திருந்தாள்.

பான்பராக் கறையேறிய பற்கள், கிழிந்த நைட்டி, அழுக்கும் துர்நாற்றமும் வீசும் உடல், அதோடு சற்றே மனநலம் பாதிக்கப்பட்ட சாயல்.

பொட்டலத்தைப் பிரித்து வாரி வாரித் தின்றாள்.

“உன் பேரென்ன? ஜட்டிய ஏன் கழட்டி தலைல போட்டிருக்க?”

நிஷாவின் கேள்விகளுக்குப் பதிலே இல்லை. அவள்பாட்டுக்குத் தின்பதிலேயே குறியாய் இருந்தாள்.

சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர்க் குடித்து விட்டுப் பெருத்த ஏப்பம் விட்டபடி நிஷாவையும் சிறிலையும் மாறி மாறிப் பார்த்தாள்.

“இப்ப சொல்லு! உன் பேரென்ன? இப்படித்தான் ட்ரஸ் பண்ணுவியா?”

அப்போதும் அமைதியாக இருந்தாள் சிறுமி.

“இங்க பாரு பாப்பா. பசிக்குதுன்னு சொன்னல்ல? வேற எதாவது வேணும்னாலும் கூடக் கேளு வாங்கித் தரோம். அக்கா கேக்குற கேள்விக்குப் பதில் சொல்லணும் புரியுதா?”

சிறில் வேண்டுமென்றே கொஞ்சம் கடுமையான வார்த்தையில் சொன்னான்.

“பரமேஸ்வரி. விக்ரவாண்டி பக்கத்துல கீழ்ப்பாதி”

“குட் கேர்ள்! சரி, இதென்ன கோலம்? ஜட்டிய இப்டித்தான் போடுவாங்களா? மொதல்ல அத தலையிலருந்து எடு! அசிங்கமா இருக்கு” நிஷா சொன்னாள்.

கண்களை உருட்டிச் சிரித்தபடியே ஜட்டியைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டாள். அவளது பேச்சும் நடவடிக்கையும்தான் மனநலக் குறைபாடு (MR-Mental Retardation) உள்ள சிறுமி என்பதை ஓரளவு யூகிக்க முடிந்தது.

ஜி.ஆர்.பி க்கு அழைத்துச் சென்று மெமோ வாங்கிய பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துத் திட்டமிட்டனர்.

ஜி.ஆர்.பி. காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பெண் என்பதால் பெரும்பாலும் பெண் குழந்தைகளுக்கு மெமோ வாங்குவதில் பிரச்சினை வருவதில்லை.

பெண்ணின் உருவத்தையும் மனநிலையையும் கவனித்த இன்ஸ்பெக்டர் ஒரு தாயாகவே மாறிச் சிறுமியைத் தடவிக் கொடுத்து அவளது கூந்தலையும் சரி செய்தபடி பேச்சுக் கொடுத்தார்.

“என் எக்ஸ்பீரியன்ஸ்ல சொல்றன் சார், இப்படிப்பட்ட பொண்ணுங்களத்தான் இந்த ஆம்பள மிருகங்க அப்யூஸ் பண்ணுவானுங்க. இவளக் கொஞ்சம் கேர் எடுத்து விசாரிக்கணும். நல்ல வேலை பண்ணீங்க”

சிறிலையும் நிஷாவையும் பாராட்டினார் ஆய்வாளர்.

நிச்சயமாக இந்தக் குழந்தைக்கு உதவ வேண்டும் என்ற மனநிலைக்கு இன்ஸ்பெக்டர் வந்து விட்டதே நிம்மதியாக இருந்தது.

மற்றொரு பெண் காவலரிடம் புதிதாக வாங்கி வரச் சொல்லி இருந்த நைட்டியை பரமேஸ்வரிக்கு ஆய்வாளரே மாட்டி விட்டபடி, அவிழ்த்த அவளது முடியை விரல்களால் கோதி, ரப்பர் பேண்ட் போட்டபடி

“பரமேஸ்வரி! உங்க அப்பா அம்மா பேரு சொல்லுடா. அப்பதானே உன்ன கூட்டிட்டுப் போய்ப் பத்திரமா வீட்ல விட முடியும்?” என்றார்.

“அப்பா பேரு கண்ணப்பன், அம்மா பேரு குமாரி”

“வெரி குட்! அவங்க ஃபோன் நம்பர் தெரியுமா?”

“மாமா நம்பர் தெரியும்”

“சரி சரி. சொல்லுடா பார்க்கலாம்” கேட்டுக் கொண்டே அவள் சொன்ன எண்களைத் தனது அலைபேசியில் போட்டுக் கால் செய்தார்.

முதல் ரிங்கிலேயே எடுத்த நபரிடம்,

“ஹலோ, நான் காட்பாடி ரயில்வே ஜிஆர்.பி. இன்ஸ்பெக்டர் பேசுறன். பரமேஸ்வரி உங்க எண் குடுத்திருக்கா. நீங்க அவங்க மாமாவா?”

“ஐயோ மேடம். நான் அந்தப் பொண்ணுக்கு மாமா இல்ல. பக்கத்து ஊர்க்காரன்; நான் மேல்பாதி” சொல்லிவிட்டு ஃபோனை துண்டித்து விட்டான். மீண்டும் அவனுக்கே கால் பண்ணும்போது அவன் ஃபோனை எடுக்கவே இல்லை.

“ஏம்மா பக்கத்து ஊர்க்காரன் நம்பரெல்லாம் வச்சிருக்க? உங்க வீட்ல யார் நம்பராவது குடு”

அவள் சொன்ன இன்னொரு எண்ணுக்கும் கால் செய்தார் இன்ஸ்பெக்டர். அவரும் விழுப்புரம் பக்கத்தில் ஒரு ஊர்ப் பெயரைச் சொல்லி விட்டு அந்தப் பெண் பைத்தியம் என்றும் அதற்கு மேல் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சொன்னார்.

இப்படியே ஏழெட்டுப் பேருக்குக் கால் செய்ததிலும் பரமேஸ்வரிடம் விசாரித்ததிலும் ஒரு விஷயம் மட்டும் நன்றாகத் தெரிந்தது. பரமேஸ்வரி கொடுத்த அத்தனை பேரும் பரமேஸ்வரியைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தியவர்கள்.

இவ்வளவு பேரின் எண்களைப் பார்க்காமல் சொல்வதுதான் அனைவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. அதோடு, அவர்கள் தன்னை என்னவெல்லாம் செய்தார்கள், எப்படியெல்லாம் துன்புறுத்தினார்கள் என்று இன்ஸ்பெக்டரிடம் ஒன்று விடாமல் ஒப்படைத்தாள். அவள் சொன்ன வார்த்தை ஒவ்வொன்றையும் கேட்கக் கேட்க அடி வயிறு கலங்கி பயமே வந்து விட்டது.

இன்ஸ்பெக்டரோ அவள் கொடுத்த அத்தனை பேரின் எண்களையும் வைத்து அவர்களையும் வழக்கிற்குள் கொண்டு வர வேண்டும் என்று சிறிலிடமும் நிஷாவிடமும் ஆதங்கப் பட்டுச் சொல்லிக் கொண்டிருந்தார்.

“அம்மாடி! உன் வீட்டுக்குத் தகவல் சொல்லணுமா இல்லியா? அம்மா அப்பா கிட்ட பேசுற மாதிரி யார் நம்பராவது இருக்கா? அக்கம் பக்கத்து வீட்டு நம்பரா இருந்தா சொல்றியா?”

கனிவுடன் கேட்டார்.

கடைசியாக ஒரு எண்ணைச் சொன்னாள் பரமேஸ்வரி.

ஹலோ என்று ஆரம்பித்து, தான் யார் என்றும் எங்கிருந்து பேசுகிறேன் என்றும் விலாவாரியாக மீண்டும் சொன்னார் இன்ஸ்பெக்டர்.

“மேடம்! என் பேரு ராமன். விக்ரவாண்டி போலீஸ் ஸ்டேஷன்ல சப் இன்ஸ்பெக்டரா இருக்கன். அந்தப் பொண்ணு ஒரு மாதிரி மேடம். எங்கியாவது ஊர் சுத்தும். யார் கூப்பிட்டாலும் போகும். அவங்கப்பா அம்மா மஹாராஷ்டிரா பக்கம் கரும்பு வெட்டப் போயிடுவாங்க. இது யார் கூட வேணும்னாலும் சுத்தும்; படுத்திருக்கும்; குடிக்கும்; பான்பராக் போடும். எல்லார் கிட்டியும் என் நம்பரக் குடுத்து மானத்த வாங்கும்”

எதிர் முனையில் பேசியவர் இப்படிச் சொன்னதும்,

இன்ஸ்பெக்டர் தனது அறைக்குள் எழுந்து போய்ப் பேச ஆரம்பித்தார்.

அவர்கள் என்ன பேசினார்கள் என்று அதற்கு மேல் சிறிலுக்கும் நிஷாவுக்கும் தெரியாது.

ஃபோன் பேசி விட்டு வெளியே வந்த இன்ஸ்பெக்டர்,

“சார்! இவள விழுப்புரம் ட்ரைன்ல ஏத்தி விட்ருங்க. பொண்ணா இவ? பொறிக்கி. மெமோ எல்லாம் தர முடியாது. வயசு பதினெட்டு எல்லாம் இருக்க சான்ஸ் இல்ல. இருவதுக்கு மேல இருக்கும்”

இன்ஸ்பெக்டரின் பரிவும் அக்கறையும் கணத்தில் காணாமல் போனது நிஷாவுக்கும் சிறிலுக்கும் வியப்பாக இருந்தது.

மேடம் பொண்ணுக்குப் பதினெட்டு வயசுக்குள்ளதான் இருக்கும். ஜூவனைல்தான் மேடம். எல்லாரையும் போக்சோவுல கொண்டு வரலாம்னு நீங்கதானே சொன்னீங்க?” நிஷா, பொறுமையாக எடுத்துச் சொன்னாள்.

“சாரி நிஷா! இந்தப் பொண்ணு கேரக்டர் சரியில்ல அவ்ளோதான் சொல்ல முடியும்” நீங்க இந்த புரோஜெக்ட்ல ஒர்க் பண்ற ஸ்டாப் ங்குறதால இவ்ளோ பொறுமையா பேசுறன். வேற யாராவது இருந்தா கதையே வேறு”

இன்ஸ்பெக்டர், கிட்டத்தட்ட மிரட்டும் தொனியில் பேசினார். அதோடு தன் தொப்பியை எடுத்துத் தலையில் மாட்டிக் கொண்டு தனக்கு வந்த ஃபோன் காலில் பேசியபடி மீண்டும் அறையின் உள்ளே சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டார்.

“ட்டோண்ட் வரி ராமன். ஐயம் வித் யூ. ஹௌ கேன் வீ கிவ் அப் அவர் டெபார்ட்மென்ட்?”

இன்ஸ்பெக்டரின் இந்த வார்த்தை மட்டும் உள்ளிருந்து தெளிவாகக் கேட்டது.

பரமேஸ்வரியின் தோள்மீது கைப் போட்டபடி, வா போகலாம்” என்று பொதுவாகச் சொன்னாள் நிஷா.

நிஷா, சிறில், பரமேஸ்வரி மூவரும் ஜி.ஆர்.பி காவல் நிலைய வாசலைக் கடந்தபோது உள்ளிருந்து எட்டிப் பார்த்த இன்ஸ்பெக்டர்,

“அப்பாடா!” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

“நிம்மதி எல்லாருக்கும் கெடக்கிறதில்லே. இப்ப இந்த இன்ஸ்பெக்டருக்கு கெடச்ச மாதிரி” நிஷா, சிறிலுக்குச் சொல்லிக்கொண்டே முன்னாள் நடந்தாள்.

“அக்கா! இன்னொரு நம்பர் சொல்லட்டுமா?” பரமேஸ்வரி, நிஷாவைப் பார்த்துப் பச்சைக் குழந்தைப் போலவே கேட்டாள்.


Art : Kelsey Acosta

பாரத் தமிழ்
பாரத் தமிழ்

எழுத்தாளர் பாரத் தமிழ், வேலூர் மாவட்டம், கெம்மங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றாலும், நிலவியல் சார்ந்த அடையாளத்தை மட்டுமன்றி அறமற்ற எந்த அடையாளத்தையும் விரும்பாதவர். குழந்தைகள் நலன் சார்ந்து இயங்கி வரும் இவர், ஆபத்தில் சிக்கிய நூற்றுக்கணக்கான குழந்தைகளை மீட்டிருக்கிறார். சிறார் சிறையில் பணிசெய்த அனுபவம் பெற்றவர். வரலாற்று ஆய்வாளர், ஓவியர், சமூகச் செயற்பாட்டாளர் எனப் பன்முகம் கொண்டவர். ‘நிலமற்றவனை நனைக்கும் மழை’ எனும் கவிதைத் தொகுப்பையும் ‘டாஃபி’ எனும் சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார்.

Share :

One response to “முதல் ஷிஃப்ட்”

  1. ஜெயபிரகாஷ் ம
    January 4, 2026

    மன உளைச்சல் மிகுந்த மன உளைச்சல், கதையினாலா என்று கேட்டால் இல்லவே இல்லை. சக பாலினத்தையே வெறுக்க வைத்து விடுகிறது சிலர்களின் அரக்க குணம். ஆண் பெண் என்ற இரண்டு பாலினமும் சேர்ந்தால் தான் அங்கு புணர்தல் நடைபெறுகிறது. அது வாழ்வில் ஒரு நிகழ்வு ஒரு உணர்வு. அதனை அப்படியே பின்தொடர்ந்தே அந்த கண்ணோட்டத்திலேயே எந்த நிலையிலும் தன் எதிர் பாலினத்தை நோக்குவது மனிதத்தன்மை அற்ற பண்பு. எத்தனை கேவலமான இழி சொற்கள் இருந்தாலும் அதனை அவர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படியான தன்மை கொண்ட பாலினம் வேறு எதுவுமில்லை என்னைப்போன்ற ஆண் பாலினம் தான். கதையில் பரமேஸ்வரி சிறுமி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தும் கூட பல ஆண்களினால் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். இப்படி மனநலம் பாதிக்கப்பட்டு தோற்றம் சீராக இல்லாமல் முகமெல்லாம் அழுக்கு படிந்து ஆடையெல்லாம் கிழிந்து இருக்கும் பரமேஸ்வரியிடமே அத்துமீறும் ஆண்கள், தன்னை பலப்பல முகப்பூச்சுகளினால் ஒப்பனை செய்து கொண்டு பேருந்துகளிலிலும் பொது இடங்களிலும் தங்களின் வாழ்க்கையினை நகர்த்தி சென்று கொண்டிருக்கின்ற பெண்களின் நிலை என்னவாக இருக்கும்?
    அப்படியான பெண்கள் யாவரும் ஆண்களிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். சாதாரண மனிதர்களாக இருக்கும் ஆண்களே இத்தனை கேடுகெட்டவர்களாய் இருக்கிறார்கள் என்றால், கொஞ்சம் பண வசதி , அரசியல் அதிகாரம் , அரசு அலுவலர்களாக இருந்தால் கதையே வேறாய் அமைந்து விடுகிறது. செய்தி வெளியிலேயே வராமல் போய்விடும். அதிகாரத்தில் இருக்கும் ஆண்கள்தான் வெறிகொண்ட நாயாக இதனையெல்லாம் செய்கிறார்கள் என்றால், அதிகாரத்தில் உயர் பதவிகளில் உள்ள பெண்கள் அவர்களுக்கு அடங்கிப் போகவே செய்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு பெண் துணையாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்பெபெல்லாம் நம்மிடம் தான் அதிகார உயர் பதவிகள் இருக்கும் பெண்களுக்கல்ல என்ற எண்ணத்தை வர வைக்கிறது கதையில் வரும் பெண் இன்ஸ்பெக்டரின் செயல். இப்படியான செயல்களை காதில் கேட்கும்போதே மனம் பதறுகின்றது கூடவே பயம் கலக்கிறது. களத்தில் நின்று பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு உதவும் அண்ணன் பாரத் அவர்கள் ஆண் இனத்திற்கு உதாரணம். தெரிந்தது ஒரு பாரத் தெரியாமல் எத்தனை பாரத் இருக்கிறார்களோ அவர்கள் யாவருக்கும் என் சிரம் தாழ்த்தி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் மீதான இச்சை உணர்வானது சைட் அடிக்கலாம் வா மச்சான், செம்மயா இருக்குல இந்த பொண்ணு, செம ஃசேப் டா என்னும் தொடக்க நிலையில் இருந்தே உருவாகின்றன. அப்படியான உணர்வுகள் தோன்றும் பருவ வயதிலேயே ஆண் பிள்ளைகளை பெற்றோர் அவர்களும் உன் தாயைப்போல, சகோதரியைப்போல ஒரு பெண் என்று முறையாக சொல்லிக் கொடுத்து வளர்த்தால் பெரிய பிரச்சினை வராமல் தடுக்கலாம் என்று நினைக்கிறேன். கதையை படித்த பின்பு பெண் பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் அதோடு பெண்களிடம் நான் சரியான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு உண்மைச் சம்பவத்தை நம்மிடம் சொல்லி அதனை விளக்கி, இப்படியாக இருக்க வேண்டுமென்று நமக்கெல்லாம் வாழ்வியல் அறிவுரைகளேயே அண்ணன் பாரத் தமிழ் அவர்கள் வழங்கி வருகிறார். வழிநடத்தும் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஆயிரம் ❤️.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • மாதுளை மரம்

    மாதுளை மரம்

    January 4, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 1

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 1

    January 4, 2026
  • இன்கா நாடோடிக்கதைகள் – 6

    இன்கா நாடோடிக்கதைகள் – 6

    January 4, 2026
  • நிணம் : நுண்கதை- குறுங்கதை- சிறுகதை

    நிணம் : நுண்கதை- குறுங்கதை- சிறுகதை

    January 4, 2026
  • சிக்கிம் சுந்தரி

    சிக்கிம் சுந்தரி

    January 4, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (9)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (11)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இதழ் 8 (44)
  • இலக்கியம் (15)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (80)
  • கட்டுரை (2)
  • கதை (3)
  • கதை (4)
  • கவிதை (11)
  • கவிதை (62)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (11)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (36)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (5)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (9)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (3)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (27)
  • வாழ்வியல் (2)

Archives

  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • மாதுளை மரம்

    மாதுளை மரம்

    January 4, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 1

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 1

    January 4, 2026
  • இன்கா நாடோடிக்கதைகள் – 6

    இன்கா நாடோடிக்கதைகள் – 6

    January 4, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (9)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (11)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இதழ் 8 (44)
  • இலக்கியம் (15)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (80)
  • கட்டுரை (2)
  • கதை (3)
  • கதை (4)
  • கவிதை (11)
  • கவிதை (62)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (11)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (36)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (5)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (9)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (3)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (27)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top