Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

திணை அறிவின் அறிவியல்

பாமயன் .
பாமயன் .
August 1, 2025
திணை அறிவின் அறிவியல்

அறிவுத் தோற்றவியலின் அடிப்படைகள்

அறிவியல், மெய்யியல், சமய நெறிகள் போன்ற எந்த ஒரு சிந்தனை முறையிலும் அறிவு எவ்வாறு பெறப்படுகிறது, எவ்வாறு சரிபார்க்கப்படுகிறது, எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான ஓர் அடிப்படை கட்டமைப்பு அல்லது இழை இருக்கும். இந்த அடிப்படைக் கட்டமைப்பையே நாம் அறிவுத் தோற்றவியலின் பின்னணி என்கிறோம். இஃது அறிவுத் தோற்றவியல் (Epistemology) அல்லது மெய்காண்பியல் அல்லது அறிவறிவியல் என்று அழைக்கப்படுகின்றது.

எது உண்மை?
ஒன்றை உண்மை என்று எப்படி நம்புவது?
எவற்றைச் சான்றாகக் கொள்வது?
என்பதற்கான விடைகளை அறிவுத் தோற்றவியல் அளிக்கிறது.

எடுத்துக்காட்டாக, புத்தறிவியல் (நவீன அறிவியல்) பட்டறிவு (empirical observation), பகுத்தறிவு (rationality) அடிப்படையில் உற்றுநோக்கல், ஆய்தல், தருக்கம் போன்ற ஆய்வுக் கூறுகளை முதன்மை அடிப்படைகளாக வைத்து இயங்குகிறது. மாறாக, தொன்றியல் அறிவுமுறை (Indigenous Knowledge System), மெய்ப்பாட்டறிவு (embodiment knowledge), உறவுமுறை, சூழல் அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் கதைகள், சடங்குகள், புழங்கும் நடைமுறைகள் போன்றவற்றை அறிவு பெறும் கூறுகளாகக் கொள்கிறது. இவ்விரு அறிவு பெறும் முறைகளும் காலங்காலமாக வளர்ந்து வந்தாலும், அவற்றுக்கான வழிமுறைகளும் மதிப்பீடுகளும் வேறுபடுகின்றன.

‘திணை’ – சூழலியல் தொடர்பு

திணை என்பதற்கு நிலம் (பூமி), இடம், வீடு, குலம், ஒழுக்கம், பொருள் ஆகிய ஆறு பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நிலம், ஒழுக்கம் என்ற இரண்டு முதன்மையான பொருண்மைகளைக் கொண்டிருக்கும் இச்சொல், சூழலுக்கும் உயிர்கள் அச்சூழலுடன் கொண்டிருக்கும் உறவுக்கும் (ஒழுகாறு) உள்ள தொடர்பை மொழியியல் வழியாகக் காட்டுகிறது.

தமிழ் அறிவுத் தோற்றவியல் முறைகளில் திணை மெய்யியல் முதன்மையானது, ஆழமானது மற்றும் இன்றைய சூழலியல் நெருக்கடிக்கு விடையளிக்கிறது.

திணைவியல், திணையியல்’ ஒப்பீடு

ஆங்கிலத்தில் ‘Ecology’ என்ற ஒரு சொல் உள்ளது. இது கடந்த 1866 ஆம் ஆண்டு எர்னச்ட் ஃகெகல் (Ernst Haeckel) என்ற ஜெர்மானிய விலங்கியல் அறிஞரால் ஆங்கிலத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது ‘Eco’ + ‘Logy’ ஆகிய கிரேக்க வேர்ச் சொற்களான ‘oikos’ (வாழிடம்) மற்றும் ‘logia’ (படிப்பு/ஆய்வு) ஆகியவற்றிலிருந்து உருவானது. இதன் நேரடிப் பொருள் ‘வாழிடம் பற்றிய படிப்பு அல்லது ஆய்வு’ என்பதாகும்.

ஆனால், இன்றைய அறிவியல் இதை இவ்வாறு விளக்குகிறது: “ஓர் உயிரினத்திற்கும், அதன் சுற்றுப்புறத்திற்கும் உள்ள உறவைப் (ஒழுகலாற்றை) பற்றிய படிப்பு திணைவியல் அல்லது சூழலுறவியல் (Ecology) எனலாம்.” (The Concise Oxford Dictionary of Ecology: Michael Allaby)

எர்னஸ்ட் ஃகேக்கல் 1860-70 ஆம் ஆண்டுகளில் பல படைப்புகளில் இந்தச் சொல்லைப் பயன்படுத்தினார். ‘ஓய்கோஸ்’ என்ற சொல் வாழிடம் என்ற பொருளில் உள்ளதாலும், அது ஏற்கெனவே ‘பொருளியல் (economy)’ குறித்துப் பயன்பட்டதாலும், புதிய சொல்லுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ‘எகானமி’ என்பதற்கு ‘வீட்டின் மேலாண்மை (management of the household)’ என்றும், ‘எகாலஜி’ என்பதற்கு ‘குடும்பம் அல்லது வீடு பற்றிய ஆய்வு (study of household and dwelling place)’ என்றும் பிரித்து விளக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சூழலியல் பற்றிய ஃகேக்கலின் பரிந்துரை, பின்னர் மனிதச் சுற்றுச்சூழல் துறையை உருவாக்கிய அறிஞர்களுக்கு உதவியது. பின்னர் வீடு, வாழிடம் என்ற பார்வை விரிந்து சூழல் மண்டலம் முழுமைக்குமானதாக இச்சொல் விளங்கி வருகிறது. (The Columbia Guide to American Environmental History: Carolyn Merchant)

தமிழில், மிக இயல்பாக ‘திணை’ என்ற சொல், வாழிடத்தையும் ஒழுகலாறான தொடர்புறவையும் குறிக்கிறது. இது தமிழுக்கே உரிய செழுமையாகும். ஆகவே, திணை பற்றிய படிப்பைத் திணைவியல் (Ecology) என்று குறிப்பிடுகிறோம். ஆனால், திணையியல் என்பது இன்னும் நுட்பமான பொருளைக் கொண்டது. திணையியல் என்பது சமூகவியல், சூழலியல், மானுடவியல் போன்ற ஒரு துறையியல் ஆகும்.

“திணையென்பது பல்பொருள் ஒரு சொல்லாய்க் கிடந்தது: நிலத்தினையும் திணையென்ப, குலத்தினையும் திணையென்ப, ஒழுக்கத்தினையும் திணையென்ப; ஆகவே, ஆகுபெயரால், அவரால் ஒழுகலாறு நிகழ்ந்த இடத்தையும் திணை என்றார்.” – இறையனார் அகப்பொருள் (நக்கீரனார் உரை), முல்லை நிலையம், சென்னை.

முதன்மைக்கூறுகள் (Primal Elements) எனப்படும் நிலம், பொழுது; கருப்பொருட்கள் (Objective Elements) எனப்படும் தெய்வம், உணவு முதலிய புறநிலைக் கூறுகள்; உரிப்பொருள் (Subjective Elements) எனப்படும் புணர்தல், காத்திருத்தல், ஊடல் முதலிய அகநிலைக் கூறுகள் ஆகியவற்றிற்கிடையே உள்ள இயங்கியல் உறவுகளே திணை என்பதாகும். இதைப் பற்றிய ஆய்வுத்துறை திணையியல் ஆகும். திணைக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட மெய்யியல் திணையியம் எனப்படுகிறது.

திணைக் கோட்பாட்டின் மெய்யியல் ஆழம்

திணைக் கோட்பாடு, இயற்கை, மக்கள் சமூகம், தனிநபர் ஆகிய கூறுகள் ஒன்றோடொன்று நுட்பமாக இணைந்திருக்கும் உலகத்தைப் புரிந்துகொள்வதற்கான ஒரு வழிமுறையை விளக்குகிறது.

1. இணர்மை (Interconnectedness)

இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களும், உயிரல்லாதவையும் ஒன்றுடன் ஒன்று இணைந்தே உள்ளன; எவையும் தனித்து இயங்குவது கிடையாது. நாமும் இயற்கையின் கூறுகளாகவே இருக்கிறோம். இயற்கையின் மீது நாம் செய்யும் எந்தச் செயலும் நமக்குத் திரும்பி வரும்; நல்லது செய்யின் நன்மையாகவும், அல்லாதது செய்யின் தீமையாகவும் திரும்பி வரும்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்!
தீதும் நன்றும் பிறர்தர வாரா!” (புறநானூறு: 192)

– மனிதர்கள் யாவரும் பிரிக்க முடியாத பகுதியென்று அறியலாம். மலைகள், காடுகள், வயல்கள், ஆறுகள், கடல்கள் தொலைவில் உள்ளவையோ அல்லது அயலானவையோ அல்ல; மாறாக, நம்மை வளர்த்து நிலைநிறுத்தும் ஒருங்கிணைந்த வாழ்விடங்கள் என்ற உணர்வைப் பெற முடியும். முழுப் பூவுலகும் அனைத்துயிர்களுக்கும் சொந்தமானது என்ற உணர்வை வளர்க்கிறது. இயற்கையின் மீதான மதிப்பாண்மையையும், பேணுகையையும் ஒரே வகையில் வெளிப்படுத்தும் பண்பு. நிலமும் இயற்கை வளங்களும் சுரண்டி அழிப்பதற்கானதல்ல; மாறாக, உறவினர்களாகவும் தோழர்களாகவும் பார்க்கப்பட வேண்டியவையாகும்.

இந்தக் கண்ணோட்டம் மக்களின் பொறுப்பாண்மையை வளர்க்கிறது. எல்லா இடங்களும் நம்முடையதாக இருக்கும்போது, அவற்றின் அழிவும், மாசுபடுத்தலும் அனைவருக்குமான கவலையாகின்றன. ஏதோ ஒரு ஆற்றை மாசுபடுத்துவது, எங்கோ ஒரு காட்டை அழிப்பது அல்லது ஒரு கடலைப் பாழாக்குவது என்பது எங்கோ உள்ள இயற்கைக்கு எதிரான செயல் அல்ல; மாறாக, நமது சொந்த வீட்டிற்கு எதிரான அத்துமீறலாகும். அண்டத்தின் பேரியக்க ஒழுங்கு, சமூக வாழ்வியல் கூறுகள் (கருப்பொருள்), மனித உணர்வுகள் – இவை ஒவ்வொன்றும் கொண்டிருக்கும் இணைந்திருப்பு என்பதை திணைக் கோட்பாடு ஒரு விரிவான மெய்யியலாக விளக்குகிறது. உலகத்திலிருந்து தன்னுமையையும் (சுயம்), பண்பாட்டிலிருந்து இயற்கையையும், உணர்ச்சியிலிருந்து நெறிமுறைகளையும் பிரிக்கும் மேற்கத்திய இரட்டைமை (dualism) போலல்லாமல், திணை ஒன்றோடொன்று இணைந்த கருத்தியலை முன்வைக்கிறது.

· இயற்கையின்றி விளையுள் இல்லை,
· விளையுள் இன்றி உணவு இல்லை,
· உணவு இன்றி உடல் இல்லை,
· உடல் இன்றி உணர்வு இல்லை,
· உணர்வு இன்றி அறிதல் இல்லை,
· அறிதல் இன்றி மெய்யியல் இல்லை.

2. முழுமை (Wholeness)

திணையியல் நெறிமுறைகள் இந்த உலகின் யாவற்றையும் முழுமையாகப் பார்க்கச் சொல்கின்றன. ஒரு பெருந்தலைவனுக்கு இந்த உலகில் வாழ்வதற்கு என்ன உரிமை உள்ளதோ அதே உரிமை ஒரு நுண்ணுயிரிக்கும் உண்டு என்பதே அதன் சாரம். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று திருக்குறள் அதை விளக்குகிறது. பகுப்பாய்வு அறிவியல் அனைத்தையும் எந்திரத்தின் பகுதிகளாகப் பார்க்கச் சொல்கிறது. இதைத் திணையியல் ஏற்பதில்லை; எதையும் அதன் முழுமையின் பகுதியாகக் காண்கின்றது.

“நிலம் தீ நீர் வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலகம்” (தொல்காப்பியம்: பொருள்: 635)
– ஐந்து பூதங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை.

‘உணவெனப்படுவது நிலத்தோடு நீரே’ (புறநானூறு: 18)
– உணவு என்பது தனித்த ஒன்றல்ல; நீர், நிலம் என்ற முழுமையின் பகுதிதான்.

3. உறவாண்மை (Relationality)

முதற்பொருளில் ஒன்றான நிலம், காலம், மரஞ்செடிகள், விலங்குகள், மக்கள், தெய்வம், உணர்வுகள், நடத்தைகள் போன்ற அனைத்து வாழ்வியல் கூறுகளும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை திணை வழியாகக் கண்டறிய முடியும். ‘மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே’ (தொல்காப்பியம்: எழு:18)

4. சேர்ந்திருத்தல் (Belonging)

திணை என்றாலே சேருதல் என்று பொருள். சிறு துகள் முதல் பெரும் மலை வரை யாவும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை என்று திணை கூறுகிறது. அனைத்து இடங்களும் நமக்கான ஊர் என்றும், அனைத்து உயிர்களும் நமக்கு உறவு என்றும் விளக்குகிறது.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” (புறநானூறு: 192)

5. இயற்கைநுண்ணறிவு (Nature Intelligence)

சூழல் பற்றிய நுண்ணிய அறிவும், அதற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலும் திணையியலின் அடிப்படைகளில் ஒன்று.

‘வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர்வர
வறிது வடக்கு இறைஞ்சிய சீர் சால் வெள்ளி
பயங்கெழு பொழுதோடு ஆநியம் நிற்பக்
கலிழும் கருவியொடு கையுற வணங்கி,
மன்னுயிர் புரைஇய வலன் ஏர்பு இரங்கும்
கொண்டல் தண் தளிக் கமஞ்சூல் மா மழை
கார்எதிர் பருவம்…’ (பதிற்றுப்பத்து: 24)

– மழை பொழிவதற்குரிய அடையாளங்களை பதிற்றுப்பத்து விளக்குகிறது. வெள்ளிக்கோள் ஆநியம் என்ற உடுமண்டலத்தில் நின்றால் மழை பொழியும் என்பது அன்றைய மக்களின் கவனகம்.

‘செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்’ (திருக்குறள்: 637)

சூழல் மண்டலங்களாக நிலம் பிரிக்கப்பட்டு, அதற்குப் பொருத்தமான பொழுது முதல் கருப்பொருள், உரிப்பொருள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இது அந்த நிலம் பற்றிய அறிவையும், எப்படி அந்த நிலத்துடன் இணைந்து வாழ்வது என்ற தெளிவையும் கொடுக்கிறது. சூழலுக்குத் தக வாழ்வது என்பது இன்று தேவையான திறன்களில் ஒன்று.

6. இயற்கை முதன்மைக் கோட்பாடு (Nature-Centric Approach)

மனிதர்கள், பிற உயிரினங்கள் எவ்வித ஏற்றத்தாழ்வுகளும் இல்லாத சமத்துவ உறவைக் கட்டியமைக்கிறது. உயர்திணைச் சமூகமும், அஃறிணைச் சூழல் அமைவுகளும் இயங்கியல் தன்மை கொண்ட உறவுகளைக் கொண்டுள்ளன. இவை ஒன்றுக்கொன்று இணைந்தும் கலந்தும் வளர்வதிலும், வடிவெடுப்பதிலும் தாக்கம் செலுத்துகின்றன. திணையியல், மனித முதன்மைக் கருத்தியலுக்கு அறைகூவல்விடும் வகையில் அமைகிறது.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ (திருக்குறள்: 972)

7. இயற்கை போற்றல் (Reverence for Nature)

இயற்கையுடன் பண்டைப் புலவர்களுக்கு இருந்த உறவும் அன்பும் அளப்பரியது. பரிசு பெறச் சென்றபோதும், அரசனைப் போற்றுவதைவிட இயற்கையைப் போற்றுவதைப் பெருமையாக நினைக்கும் மோசி கீரனாரை அறிய முடிகிறது.

‘ஈயென இரத்தலோ அரிதே
நீ அது நல்கினும் நல்காய் ஆயினும் வெல்போர்
எறி படைக்கு ஓடா ஆண்மை அறுவைத்
தூ விரி கடுப்பத் துவன்றி மீமிசைத்
தண் பல இழிதரும் அருவி நின்
கொண் பெருங்கானம் பாடல் எனக்கு எளிதே.’ (புறநானூறு: 154)

– கொடு என்று இரந்து கேட்பது எனக்கு ஒத்துவராது; நீ பரிசைக் கொடுத்தாலும்கொடுக்காவிட்டாலும், இந்தப் பெருமழையில் வெள்ளைத் துணிபோல் துள்ளி விழும் அருவியை என்னால் பாட முடியும் என இயற்கையின் மீது அவருக்கு இருக்கும் பற்றைக் காட்டுகிறார்.

‘திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்’ (சிலப்பதிகாரம்: 1.1)
‘ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!’ (சிலப்பதிகாரம்: 1.4)
‘மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்!’ (சிலப்பதிகாரம்: 1.7)
என்று வாழ்த்துகின்றது சிலப்பதிகாரம்.

கடலை வணங்கிய இளம் பெண்களை அகநானூறு குறிப்பிடுகிறது:
‘அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து,
தழை அணிப் பொலிந்த கோடு ஏந்து அல்குல்
பழையர் மகளிர் பனித் துறைப் பரவ’ (அகநானூறு: 201)

9. பண்பாடும் ஒழுகலாறும் (Culture and Conduct)

ஒவ்வொரு திணையும் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை மட்டுமல்லாமல், மக்களுக்குப் பொருத்தமான நடத்தை நெறிகளையும், பண்புகளையும், தொழில்களையும் முறைப்படுத்துகிறது. மனித வாழ்க்கையும் மக்களின் அறிவும் குறிப்பிட்ட சூழல் அமைவுகளால் வடிவமைக்கப்படுகின்றன என்ற அறிவுத் தோற்றவியல் புரிதலை விளக்குகிறது. இயற்கையுடன் ஒத்திசைந்துதான் வாழ முடியும் என்ற நிலத்தின் கட்டளையாக இதைக் கவனிக்க வேண்டும்.

‘அவரோ வாரார், முல்லையும் பூத்தன’ (குறுந்தொகை: 221)

– கார்காலம் வந்தால் முல்லை பூத்துவிடும், முல்லை பூத்தால் தலைவன் வந்துவிடுவான் என்ற பண்பாடு கொண்ட சமூகத்தில் ஒரு காட்சியாக முல்லை பூத்தும் தலைவன் வரவில்லையே என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தும் பாடல்.

10. மெய்ப்பாட்டறிவு / தொட்டறிவு (Embodied Knowledge)

மெய்ப்பாட்டறிவு என்பது நம் உறுப்புகள் இயற்கைக் கூறுகளுடன் தொட்டுப் புழங்கி உருவாகும் அறிவு. இதைத் தொட்டறிவு என்றும் கூறலாம். மக்களின் உணர்வுகளும் சிந்தனைகளும் அவர்கள் வாழும் நிலத்திலும் புழங்கும் இயற்கைக் கூறுகளில் இருந்தும் எழுகின்றன.

‘ஒரு நாள் வாரலன், இரு நாள் வாரலன்,
பன்னாள் வந்து, பணி மொழி பயிற்றி, என்
நன்னர் நெஞ்ச நெகிழ்த்த பின்றை,
வரை முதிர் தேனின் போகியோனே,
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன் கொல்லோ?
வேறு புலன் நல் நாட்டுப் பெய்த
ஏறுடை மழையின் கலிழும் என் நெஞ்சே.’ (குறுந்தொகை: 176)

– வராமல் சென்ற தலைவன் ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்ல, பல நாளாய் வந்து அன்பைப் பகிர்ந்தவன், என் நெஞ்சை நெகிழவைத்த பின்னர் முற்றிய தேன் கூட்டில் இருந்து தேன் விழும் காலத்தைப்போலச் சென்றுவிட்டான். வேற்று நாட்டில் பெய்யும் இடிமழைபோல என் நெஞ்சம் கலங்குகிறது என்று இடியுடன் பெய்யும் மழையுடன் தன் உணர்வை பொருத்திப் பார்த்துத் தலைவி புலம்புகிறாள். மக்களின் சிந்தனையும் செயலும் மண்ணில் இருந்தே உருவெடுக்கின்றன.

11. இலக்கியக் குறியீடுகள் (Literary Symbolism)

தமிழ்ச் செய்யுள்களில் விளக்கப்பட்டுள்ள தெய்வம், உணவு, இசை, உணர்வுகள் முதலிய கூறுகள் ஆழமான குறியீட்டுத் தன்மை கொண்டவை. இவற்றில் ஆழமான சூழலியல் அறிவு பொதிந்து வைக்கப்பட்டுள்ளது.

‘உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவு கொண்டு அதன் முதல் குத்திய மத யானை
நீடுஇரு விடர் அகம் சிலம்பக் கூய்த் தன்
கோடு புய்க்கல்லாது உழக்கும் நாட! கேள்!’ (கலித்தொகை: 38)

– வேங்கை மரம் ஏராளமாய் பூத்துக் குலுங்கியது, அதை புலி என்று நினைத்த யானை அதைக் குத்திக் கிழிக்க நினைத்து தன் வலிய கொம்பால் குத்த, கொம்புகள் மரத்துள் வெளியே எடுக்க முடியாத அளவு பதிந்துவிட்டன, அதன் பிளிறியது என்ற வரிகள் தலைவி தலைவன் கொண்ட காதலை விட முடியாமல் தவிக்கும் காட்சியுடன் ஒப்புமையாக நுட்பமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

12. நடைமுறை ஞானம் (Practical Wisdom)

திணையால் வடிவமைக்கப்பட்ட பண்டைய தமிழ் இலக்கியம், நீர் மேலாண்மை, வேளாண்மை நுட்பங்கள், உயிர்ப்பன்மயம் ஓம்புதல் ஆகியவை பற்றிய நுண்ணிய அறிவை வெளிப்படுத்துகிறது. இந்த அறிவுத் தோற்றவியல் கோட்பாடு நடைமுறை அனுபவம், சூழல் மீதான கவனம் இவற்றின் வழியாக வேரூன்றி உருவெடுக்கிறது. இது வெறும் அனுமானங்கள், கருத்துருக்கள், தர்க்கம் போன்ற மேற்குலக அறிவுத் தோற்றவியல் முறையில் இருந்து மாறுபடுகிறது.

‘விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே’ (நற்றிணை: 172)
– புன்னை மரத்தை, நெய்யும் பாலும் ஊற்றி வளர்த்த செய்தியை, அதாவது மற்ற உயிர்கள் மீது கொண்ட நேயத்தை வெளிப்படுத்தும் பாடல்.

13. உணர்வின் அறிவு (Affective Knowledge)

ஒவ்வொரு திணையுடனும் குறிப்பிட்ட மனநிலை, உணர்வுகளின் தொடர்பு ஒரு பொதிந்த அறிவை எடுத்துக்காட்டுகிறது – சுற்றுச்சூழல் மனித உணர்ச்சிகள் மற்றும் அனுபவங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றிய புரிதல். இந்த முழுமையான கண்ணோட்டம் உணர்ச்சிகரமான களத்தை அறியும் செயல்பாட்டில் ஒருங்கிணைக்கிறது.

‘மெய் கூர்ந்த பனியொடு மேல் நின்ற வாடையால்
கையாறு கடைக்கூட்ட கலக்குஉறூஉம் பொழுதுமன்’ (கலித்தொகை: 31)
– “உடம்பைத் தழுவும் பனியோடு சேர்ந்து வீசும் வாடையால் கைகளால் பொருள்களைக் கூட்டும் போது, மனம் கலங்குவது போல, அந்தப் பொய்ச் சொற்களை நினைக்கும்போது என் மனம் கலங்குகிறது”

14. நீடித்த நிலைத்தன்மை மற்றும் தற்சார்பு (Sustainability and Self-Reliance)

நீடித்த வாழ்விற்கு இயற்கை வளங்களைக் காத்துப் புரத்தல் வேண்டும், அதுவே அரசனது கடமையாகும், அது மக்களின் கடமையும் ஆகும் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

‘அடு போர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன் நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே’ (புறநானூறு: 18)

– போரில் வெற்றியைக் குவிக்கும் செழியனே! என்னைக் குற்றம் சொல்லாது விரைவாகச் செய்வாயாக! மழை பொழியும் போது நிலத்தில் வளைந்தும் நெளிந்தும் ஓடும் நீரைத் தடுத்து நிறுத்தி நீர்நிலைகள் பெருகி வளம்பெறும் வகையில் நிலைபெறச் செய்பவர்களே, இந்த உலகத்தில் நிலைநிற்பவர் ஆவர். மற்றவர் தள்ளத் தக்கவராகி வரலாற்றில் இடம் பெறாமல் மறைவர். (‘தட்டோர்’ என்றால் தடுத்து நிறுத்துபவர், நிலைநிற்பவர் என்று பொருள்)

பாரியின் பறம்பு மலை தற்சார்பிற்கு அடையாளமாகவும் இலக்கணமாகவும் இருப்பதை கபிலர் விளக்குகிறார். பாரியின் பறம்புநாடு உழவர் விளைவித்துத் தராத தற்சார்பான நான்கு வகையான வளங்களைக் கொண்டுள்ளது:

ஒன்று, சிறிய இலை மூங்கிலின் நெல் விளையும்.
இரண்டு, இனிய சுளைப் பலாப்பழம் பழுத்திருக்கும்.
மூன்றே, கொழுத்த கொடி வள்ளிக்கிழங்கு வீழ்ந்திருக்கும்.
நான்கே, அழகிய நிறமுடைய ஓரி (ஒரு வகை குரங்கு) பாய்தலால், மீது அழிந்து, அடர்ந்த நீண்ட குன்றம் தேன் சொரியும்.
“உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே:
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே;
இரண்டே, தீம் சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே;
மூன்றே, கொழுங் கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே;
நான்கே, அணி நிற ஓரி பாய்தலின், மீது அழிந்து,
திணி நெடுங் குன்றம் தேன் சொரியும்மே.
வான் கண் அற்று, அவன் மலையே; வானத்து,
மீன் கண் அற்று, அதன் சுனையே;” (புறநானூறு: 109)

15. அளவறிவாண்மை (Moderation/Prudent Consumption)

எந்த ஒரு வளத்தையும் தேவைக்கு அதிகமாக நுகர்வதால் அது மிகப் பெரும் நெருக்கடிக்கு இட்டுச் செல்லும். இன்று மக்களிடம் பெருகியுள்ள நுகர்வு வெறியால், இயற்கைச் சீரழிவு பேரழிவை நோக்கிச் சென்றுள்ளது. அளவாக நுகர்வதே நீடித்த வாழ்வுக்கும், அமைதியான வாழ்க்கைக்கும் உதவும் என்பது திணைக் கோட்பாடு.

‘மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;
உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப்
பொன்னும் கொள்ளார், மன்னர் நன்னுதல்!
நாம் தம் உண்மையின் உளமே; அதனால்
தாம் செய் பொருள் அளவு அறியார்; தாம் கசிந்து,
என்றூழ் நிறுப்ப, நீள் இடை ஒழிய,
சென்றோர் மன்ற நம் காதலர்; என்றும்
இன்ன நிலைமைத்து என்ப;
என்னோரும் அறிப, இவ் உலகத்தானே’ (நற்றிணை: 226)

– மரத்தைக் கொன்று மருந்தும் கொள்ளாத, பெரும் வரம் கிடைப்பதாக இருந்தாலும் உடலை வருத்தி தவம் செய்யாத, நாட்டு வளங்களை அழித்து நாணயம் சேர்க்காத மன்னர்கள் வாழும் நாடு. இதுவே நமது மக்களின் வாழ்க்கை நெறி.

இந்த அடிப்படையில்தான் திணை அறிவு, தோற்றமும் வளர்ச்சியும் பெறுகிறது. திணை மெய்யியலாக அறிவை வரித்துக் கொள்ளும் கோட்பாடுகளையும், நெறிமுறைகளையும் கொண்டிருக்கிறது. “திணையியல்” என்ற கருத்து அறிவுத் தோற்றம் பற்றிய ஆழமான கட்டமைப்பை வழங்குகிறது. வெறும் நிலப்பரப்பு என்பதையும் தாண்டி, மக்களின் வாழ்வியலில் ஆழமாகப் பதிந்துள்ள இயற்கை உலகத்தை அறிந்துகொள்வதற்கும் தொடர்புகொள்வதற்கும் ஒரு முழுமையான வழியைக் காட்டுகிறது.


Art : planksip

பாமயன் .
பாமயன் .

பாமயன் எனப்படும் மு.பாலசுப்பிரமணியன் சுற்றுச்சூழல், இயற்கை வேளாண்மை ஆகிய துறைகளில் 25 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வருபவர். காரல்மார்க்சு, காந்தியடிகள், குமரப்பா ஆகியோரது கருத்துகளால் உந்தப்பட்டு தனது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டவர். கடந்த 1989ஆம் ஆண்டில் இருந்து கிராமப்புற மேம்பாடு குறித்தும், பசுமைப் பொருளாதாரம் குறித்தும் பேசியும், எழுதியும், செயல்பட்டும் வருபவர். தினமணி, தமிழ் இந்து, சர்வோதயம் மலர்கிறது, கிராம ராஜ்யம், ஜனசக்தி போன்ற பல்வேறு இதழ்களில் இவரது கட்டுரைகள் 500 மேற்பட்டு வெளிவந்துள்ளன. நெடுஞ்செழியன் அவர்களுடன் இணைந்து பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பில் பணியாற்றியவர். தமிழகத்தின் முதல் சூழலியல் நூல்களை வெளியிட்டவர்கள் இந்த அமைப்பினரே. குறிப்பாக ஒற்றை வைக்கோல் புரட்சி, மௌன வசந்தம், பசுமைப் புரட்சியின் வன்முறை, உயிரியல் புரட்சியின் ஒடுக்குமுறை போன்ற முன்னோடி நூல்கள் அப்போது வெளிவந்தவையே.

தமிழ் ஒப்புரவு என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும் தாளாண்மை என்ற வேளாண்மை இதழின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். உயிரியல் புரட்சியின் ஒடுக்குமுறை, வேளாண் இறையாண்மை, அள்ளித்தரும் நிலம், பழந்ததமிழர் வேளாண்மை முதலிய இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல், பொருளாதாரம் குறித்த இவர் எழுதியுள்ளார். நிதிகளின் உலகமயமாக்கம், மணற்கோட்டைகள் முதலிய பல நூல்களை மொழி பெயர்ப்பு செய்துள்ளார்.

Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    December 2, 2025
  • பொப்பி என்பது புனைபெயர்

    பொப்பி என்பது புனைபெயர்

    December 2, 2025
  • அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    December 2, 2025
  • வண்ணார் : வரலாறும் வலிகளும்

    வண்ணார் : வரலாறும் வலிகளும்

    December 2, 2025
  • பொலி எருமை

    பொலி எருமை

    December 2, 2025

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (8)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (9)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இலக்கியம் (12)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (67)
  • கட்டுரை (1)
  • கதை (3)
  • கதை (2)
  • கவிதை (49)
  • கவிதை (11)
  • குறுங்கதை (5)
  • சிறார் (4)
  • சிறார் கதை (10)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (30)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (3)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (8)
  • நாவலின் ஒரு பகுதி (7)
  • நினைவேடு (1)
  • நுண்கதை (1)
  • நூல் அறிமுகம் (11)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (24)
  • வாழ்வியல் (2)

Archives

  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    December 2, 2025
  • பொப்பி என்பது புனைபெயர்

    பொப்பி என்பது புனைபெயர்

    December 2, 2025
  • அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    December 2, 2025

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (8)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (9)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இலக்கியம் (12)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (67)
  • கட்டுரை (1)
  • கதை (3)
  • கதை (2)
  • கவிதை (49)
  • கவிதை (11)
  • குறுங்கதை (5)
  • சிறார் (4)
  • சிறார் கதை (10)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (30)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (3)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (8)
  • நாவலின் ஒரு பகுதி (7)
  • நினைவேடு (1)
  • நுண்கதை (1)
  • நூல் அறிமுகம் (11)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (24)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top