இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, விதியுடனான ஒப்பந்தம் (Tryst with Destiny) என்கிற புகழ்பெற்ற உரையை, நாடு சுதந்திரமடைந்த நள்ளிரவில் அரசியல் நிர்ணய சபையில் நிகழ்த்தினார். அதில், இந்தியாவிற்குச் செய்யும் சேவை என்பது “இங்குள்ள லட்சக்கணக்கான மக்களின் துயர் துடைப்பதாகும்; வாய்ப்புகளிலுள்ள அசமத்துவத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாகும்” என்று அவர் குறிப்பிடுகிறார். [1] புவியியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வேறுபட்ட, ஒடுக்குமுறை மற்றும் அசமத்துவத்தைக் கொண்ட, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில், விளிம்புநிலை மக்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் சமத்துவத்தை அடைவதற்கான முயற்சிகள் வலுப்பெறுமென அவர் நினைத்தார்.
2010 இல் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து, பல முதல் தலைமுறை மாணவர்கள் கல்வி நிலையங்களில் நுழைந்துள்ளனர். [2] பெரும்பாலானவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியவர்கள், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள். பலருக்கு தரமான கல்வி, தண்ணீர், உணவு, கழிப்பறைகள், சீருடைகள் மற்றும் எழுதுபொருள்கள் கிடைப்பதில்லை. பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களில் கிராமப்புற மாணவர்களே அதிகம், அவர்களில் குறைவானவர்களே உயர்கல்வியில் சேருகிறார்கள்; மீதமுள்ளோர் குழந்தைத் தொழிலாளராகவோ அல்லது திருமணத்திற்குள்ளோ தள்ளப்படுகிறார்கள். அதாவது, பிறந்த இடம், சமூக-பொருளாதார நிலை, அருகாமையில் உள்ள கல்வி நிறுவனங்கள், பெற்றோரின் கல்வித் தகுதி உள்ளிட்டவற்றிலெல்லாம் எந்த கட்டுப்பாடும் இல்லாத குழந்தைகளுக்கு, அடிப்படையில் அவர்கள் வாழும் சூழலைப்பொறுத்து கல்வியறிவு பெறுவதற்கான வாய்ப்பில் இயற்கையாகவே ஒரு அசமத்துவம் உள்ளது. [3]
இன்று, உயர்கல்வி என்பது ஒரு தனிச்சலுகை. இன்று நம்மிடம் நுழைவுத் தேர்வுகள் உள்ளன; உயர்கல்வி நிறுவனங்களில் சேர வகுப்பறைக் கல்வி மட்டுமல்ல, கூடுதல் பயிற்சியும், வழிகாட்டலும் தேவை. சிலர் வீட்டு வேலையிலோ அல்லது குடும்பத்தை ஆதரிக்க பகுதிநேர தொழிலாளர்களாகவோ ஈடுபடுவதால், சிறப்புப் பயிற்சிகள், கூடுதல் வசதிகள் அல்லது குறைந்தபட்சம் சுயகல்விக்கான நேரத்தை ஈட்டிக்கொள்ள முடியாது. இந்தப் பின்னணியில், ஒருவர் நுழைவுத் தேர்வுக்கு தகுதி பெற்றாலும், நிறுவனத்தின் இருப்பிடம், பொருளாதார நிலை மற்றும் கட்டண அமைப்பு போன்ற காரணிகளே சேர்க்கையைத் தீர்மானிக்கின்றன. உதவித்தொகை போன்ற ஆதரவுத் திட்டங்கள் இருந்தாலும், அவை போதுமானதாக இல்லை அல்லது முறையான கால இடைவெளிகளில் வழங்கப்படுவதில்லை. எனவே, நம்முடைய உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தைச் சேர்ந்த மக்களுக்கு எளிதில் அணுகக்கூடியவையாக இல்லை.
சமூகத்தின் பெரும் பகுதியினருக்கு முன்னேற ஒரே வழி கல்வி என்பதால், அவர்களின் விருப்பம் மலிவான கட்டணம் மற்றும் மிதமான உள்கட்டமைப்புகளைக் கொண்ட அரசு அல்லது கிராமப்புறத் தனியார் நிறுவனங்கள் மட்டுமே. மொழித் தடைகள், பகுதிநேர வேலைகள், மற்றும் நோய்வாய்ப்பட்ட பெற்றோர் / ஒற்றைப் பெற்றோர் போன்ற குடும்ப சூழ்நிலைகள் காரணமாக இந்த நிறுவனங்களில் கலை மற்றும் அறிவியல் இளங்கலைப் படிப்புகளில் சேருதல் அதிகமாக உள்ளது. சில ஆசிரியர்கள்/பேராசிரியர்கள் மாணவர் சேர்க்கையை அல்லது இடைநிற்றலைத் தடுக்க சில மாணவர்களுக்கு பருவக் கட்டணத்தைச் செலுத்துகின்றனர். எனவே கிராமப்புற இந்தியாவில் இருந்து ஒரு பட்டதாரியைப் பிறப்பிப்பதென்பது ஓரங்கட்டப்பட்டவர்களை மேம்படுத்துவதற்கான ஒரு சமூக முயற்சியாகும், மேலும் சமத்துவ சமூகத்தை நோக்கிய ஒரு படியாகும்.
இந்த கிராமப்புற அல்லது எளிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இறுதியாண்டில் நிகழும் வளாக நேர்முகத் தேர்வுகளைப் பொறுத்தவரை, அதிக நிறுவனங்கள் ஆட்தேர்வில் பங்கேற்பதில்லை. வேலைவாய்ப்பு முகாம்களில், ஒருவரின் வசிப்பிடம் அல்லது கல்வி பயின்ற இடத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவது நீண்ட காலமாக அறியப்பட்ட ஒன்றே. இருப்பினும், அரசு நிறுவனங்களில் இத்தகைய போக்குகளைக் காண்பது அதிர்ச்சியானது, அசமத்துவத்தை வலுவாக்குவது மற்றும் விவாததிற்கு உள்ளாக்கப்படவேண்டியதாகும். அரசு நடத்தும் சில தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (National Institute of Technology-NIT) (குருக்ஷேத்ரா-NITK, ஹமீர்பூர்-NITH) மற்றும் சாண்ட் லாங்கோவல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் & டெக்னாலஜி (SLIET), பஞ்சாப் ஆகியவற்றில் நடந்த ஆசிரியர் பணியிட ஆட்சேர்ப்பில் விண்ணப்பதாரர்களை வடிகட்டப் பின்பற்றிய அளவுகோல்கள் கவலையை எழுப்புகின்றன. [4-6] இந்த நிறுவனங்கள் அனைத்தும், விண்ணப்பதாரர்களின் தரவரிசைக்கான மதிப்பெண் வழங்குவதில் பணிநாடுநர்களின் படித்த இடத்திற்கு முன்னுரிமை அளிக்கின்றன. பணிநாடுநர்கள், அவர்கள் பட்டம் பெற்ற கல்வி நிறுவனங்கள், நிறுவனத்தின் உலக தரவரிசை அல்லது அது IITகள், IIMகள், IISc, மத்திய நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் (CFTI), மத்திய/மாநில பல்கலைக்கழகங்கள் அல்லது தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) தரவரிசையை வைத்திருக்கும் ஏதேனும் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப்படுத்தப்பட்டனர். ஆட்சேர்ப்புக்கு இதேபோன்ற அளவுகோல்களைப் பின்பற்றும் பிற அரசு நிறுவனங்கள் குறித்த தரவேதும் கிடைக்கவில்லை. ஆனால், அதே ஆண்டில் ஆட்சேர்ப்புக்காக விளம்பரப்படுத்தப்பட்ட இதே போன்ற NIT- திருச்சி, சூரத்கல், சில்சார், தரவரிசைப் பட்டியலுக்கான எந்த மதிப்பெண் முறையையும் குறிப்பிடவில்லை. ஆனால் அது நிர்வாகத்தின் முடிவை அடிப்படையாகக் கொண்டது என்று குறிப்பிட்டுள்ளன, எனினும் விரிவாக விளக்கப்படவில்லை. [7-9] BITS பிலானியின் துணைவேந்தரும், டெல்லி IIT இன் முன்னாள் இயக்குநருமான பேராசிரியர் வி. ராம்கோபால் ராவ், IISER கொல்கத்தாவின் விண்வெளி அறிவியல் இந்தியாவின் சிறப்பு மையத்தின் தலைவர் பேராசிரியர் திப்யேந்து நந்தி மற்றும் அசோகா பல்கலைக்கழகத்தின் டீன்-ரிசர்ச் பேராசிரியர் கௌதம் மேனன் உள்ளிட்ட பல கல்வியாளர்கள் இந்த அணுகுமுறையை பகிரங்கமாகக் கண்டித்தனர். [10-12]
மேற்கூறிய நிறுவனங்களிலுள்ள தற்போதைய ஆசிரியர்களைப் (இயற்பியல்-வேதியியல்-கணிதம்) பகுப்பாய்வு செய்யும் போது, NITK இல், IIT/IISc/NIT/வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் சுமார் 42% பேர். NITH மற்றும் SLIET ஆகியவற்றின் எண்ணிக்கை முறையே 27% மற்றும் 25% ஆகும். [13-15] எனவே, தற்போது இந்த நிறுவனங்களின் ஆசிரியர்கள் பல்வேறு மாநிலப் பல்கலைக்கழகங்களில் இருந்து பாடம் பெற்றவர்கள் என்பது தெளிவாகிறது; மற்றும் இந்தக் கொள்கையால் வரும் ஆண்டுகளில் இவ்விகிதாச்சாரம் குறைக்கப்பட உள்ளது. இது எதிர்காலத்தில் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ளார்ந்த சுய-பணியமர்த்தலுக்கு வழிவகுக்கும். அதிகளவிலான சுய-பணியமர்த்தல் ஆரோக்கியமற்ற கல்வி முறையைக் குறிக்கலாம், ஏனெனில் சுய-பணியமர்த்தல் புதிய நிபுணர்களின் உருவாக்கத்தைத் தடுக்கிறது மற்றும் ஆய்வின் தரத்தைக் குறைக்கிறது.[16]
மேற்கண்ட இடங்களில், விண்ணப்பத்தாரர்களை மதிப்பிடுவதற்கு அவர்கள் பட்டம் பெற்ற நிறுவனங்களின் NIRF தரவரிசை பயன்படுத்தப்பட்டது; இது தவறான முடிவுகளுக்கு இட்டுச்செல்வதாகும். சென்னை கணித அறிவியல் நிறுவனத்தைச் சார்ந்த எம். சுரேஷ் பாபு சுட்டிக்காட்டியபடி NIRF தரவரிசையில் நிறையக் குறைபாடுகள் உள்ளன. [17] 2021 இல் வெளிவந்த அகில இந்திய உயர் கல்வி (AISHE) ஆய்வின்படி, இந்தியாவில் 1,113 பல்கலைக்கழகங்கள் மற்றும் 43,796 கல்லூரிகள் இருந்தன. அவற்றில் வெறும் 12.3% உயர்கல்வி நிறுவனங்கள் மட்டுமே NIRF தரவரிசைச் செயல்பாட்டில் பங்கேற்றன. AISHE தரவுகள் சுமார் 43% பல்கலைக்கழகங்களும் 61.4% கல்லூரிகளும் கிராமப்புறங்களில் உள்ளன என்பதைக் காட்டுகின்றன. இதன் பொருள், மீதமுள்ள 87.7% நிறுவனங்களுக்குத் தரவரிசை இல்லை, அவற்றில் பெரும்பாலானவை கிராமப்புறங்களைச் சேர்ந்தவை. எனவே, மேற்கண்ட ஆட்சேர்ப்புமுறை தொடர்ந்தால், கிராமப்புறக் கல்வி நிறுவனங்களிலிருந்து பட்டம் பெற்ற பட்டதாரிகள் தொடக்க நிலையிலேயே வெளித்தள்ளப்படுவார்கள்.
கொலராடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆரோன் கிளாசெட் மற்றும் டேனியல் பி. லாரெமோர் ஆகியோரால் நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட தொடர் ஆய்வுகள், அமெரிக்காவில் பிஎச்டி பெற்ற 80 சதவீத ஆசிரியர்கள் வெறும் 20 சதவீத பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்றவர்கள் என்றும், அவர்களில் 20% பேர் வெறும் 8 பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளது. 2011 மற்றும் 2020 க்கு இடையில் அமெரிக்காவில் உள்ள கிட்டத்தட்ட 400 கல்வி நிறுவனங்களில் இருந்து மானுடவியல் முதல் அறிவியல் வரை 107 துறைகளில் பணியமர்த்தல் முறைகளைப் பகுப்பாய்வு செய்ததன் மூலம் இந்த ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. [18] இந்த நிறுவனங்களில் சேருவது, சமூக-பொருளாதார நிலை மற்றும் பெற்றோரின் கல்வித் தகுதிகள் போன்ற காரணிகளால் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்பதை மற்றொரு ஆய்வில் அவர்கள் நிறுவினர். இதற்காக, 2017–2020 காலகட்டத்தில், அமெரிக்காவை பிறப்பாகக் கொண்ட, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதவியல், சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் உள்ளிட்ட எட்டுத் துறைகளில் பணியாற்றும், சுமார் 7,204 தற்காலிக ஆசிரியர்களின் கல்வி, வருமானம் மற்றும் பல்கலைக்கழக தரவரிசை குறித்த தேசிய அளவிலான தரவுகளை அவர்கள் பகுப்பாய்வு செய்தனர். அவர்களுள் பல ஆசிரியர்களின் பெற்றோர் முனைவர் பட்டம் பெற்றவர்கள் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளனர். மேலும்,உலகளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் இந்த விகிதம் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது, மற்றும் கடந்த 50 ஆண்டுகளில் இவ்விகிதம் நிலையானதாக உள்ளது என்பதையும் அவர்கள் கண்டறிந்தனர்.[19]
இந்தியாவின் நிலையைப் புரிந்து கொள்ள, 2024 ஆம் ஆண்டு நேச்சர் இதழில் வெளியான “அறிவியல் துறைகளில் பன்முகத்தன்மை” என்ற தொடரின் ஒரு பகுதியைப் பார்க்கலாம். உலகளவில் ஆராய்ச்சித் துறையில் முன்னிலை வகிக்க முயலும் ஒரு நாட்டில், அறிவியல் கல்விக்கான வாய்ப்புகளை சாதிப்பாகுபாடு எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. வரலாற்று ரீதியாக சலுகை பெற்ற சாதியைச் சார்ந்தவர்கள், ஆசிரியர்களாகவும், முனைவர் பட்டப் படிப்பில் சேர்பவர்களின் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதையும் தரவுகள் முன்வைக்கின்றன. இளங்கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் விளிம்புநிலை சமூகங்ககளைச் சேர்ந்தவர்களின் குறைவான பிரதிநிதித்துவத்தையும் இது காட்டுகிறது. கிராமப்புற உயர்நிலைப் பள்ளிகளில் அறிவியலில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டிகள் இல்லாததே இதற்கு முக்கிய காரணம் என்கிற கருதுகோளையும் இவ்வாய்வு முன்வைக்கிறது. இத்தகைய சூழல், பெரும்பாலும் முதல் தலைமுறையாகக் கற்பவர்கள், சமூக-பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்கள், ஆங்கிலத்தில் புலமை இல்லாதவர்கள், பரிந்துரை/ஆலோசனை சொல்பவர்கள் இல்லாதவர்கள் போன்றோரைப் பாதிக்கிறது. முக்கியமாக, ஆர்வமும் தகுதியும் இருந்தும், ஆய்வு வழிகாட்டியைக் கண்டுபிடிக்க இயலாமல் போவது போன்ற காரணங்களாலும், முதுகலை மற்றும் முனைவர் பட்ட நிலையில் எளிய மக்களின் பிரதிநிதித்துவம் மேலும் குறைகிறது. இந்த ஆய்வில் உயர் மற்றும் நடுத்தர தரவரிசையில் உள்ள ஐஐடிகள் மற்றும் ஐஐஎஸ்சி என எதுவும் அரசாங்கத்தின் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளின்படி முனைவர் பட்ட ஆய்வாளர்களின் எண்ணிக்கையைப் பிரதிபலிக்கவில்லை என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. [20]
எனவே, NITK, NITH மற்றும் SLIET ஆகியவை பின்பற்றும் ஆசிரியர் தேர்வுமுறை மற்றும் அளவுகோல்கள், நாட்டில் உள்ள NIRF தரவரிசைப்படுத்தப்படாத 87.7% நிறுவனங்களின் பட்டதாரிகளைப் பாதிக்கின்றன என்பது தெளிவாகிறது. இது தொடர்ந்தால் பல்வேறு நிறுவனங்களிலிருந்து பட்டம் பெற்ற பணியாளர்களைக் கொண்ட இந்நிறுவனங்களின் தற்போதைய பன்முகத்தன்மை முடிவுக்கு வரும். இது கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்காவில் நடந்ததற்கு வழிவகுக்கும் – அதாவது, உயர்நிலை நிறுவனங்களிலிருந்து பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இனி ஆசிரியர் பதவியிலிருப்பார்கள். இதுவரை, ஒரு தனிநபரின் அறிவுசார் திறன்களை படிக்கும் இடத்துடன் தொடர்புடைய எந்த அறிவியல் ஆராய்ச்சியும் நம்மிடம் இல்லை. நாம் ஈட்டிக்கொள்கிற தகுதிகள் நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் மற்றும் பிறப்பால் நாம் அடையும் சமூக-பொருளாதார சலுகைகளின் விளைவாகும். மிகவும் எளிய பின்னணியைச் சார்ந்த, தமிழ் வழியில் பயின்ற, பல்வேறு கல்வியாளர்களை நாம் இத்தகைய உயர்கல்வி நிறுவனங்களில் காண்கிறோம். இப்போதுள்ள அரசு நிதியுதவி பெறும் அல்லது அரசுக் கல்வி நிறுவனங்களில், ஆராய்ச்சித் துறைகளில் முன்னணியில் உள்ள பலர் கிராமப்புறக் கல்வி நிறுவனங்களில் முதல் தலைமுறையாகக் கல்வி கற்றவர்கள். எனவே, தற்போதைய ஆசிரியர் தேர்வு முறையை மேற்கூறிய நடைமுறைத் தரவுகளைக் கருத்தில் கொண்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும்; வாய்ப்புகளிலுள்ள அசமத்துவத்தைக் களைய வேண்டும்.
சான்றுகள்:
https://thewire.in/history/india-at-75-jawaharlal-nehru-tryst-with-destiny-full-text
https://sci-hub.se/10.1257/pandp.20191060
https://www.nature.com/articles/d41586-022-01682-3
https://nitkkr.ac.in/wp-content/uploads/2023/06/2.-Detailed-Information-Sheet-Advt.No_.17.2023-for-the-post-of-Assistant-Professor-Gr.-I.pdf
https://nith.ac.in/uploads/topics/criteria-for-scrutiny16868092698980.pdf
http://administration.sliet.ac.in/files/2023/06/Recruitment-to-the-post-of-A.P.pdf
https://recruitment.nitt.edu/faculty2023/advt/General%20Information%20and%20Instructions-V5%20-14.06.2023.pdf
https://www.nitk.ac.in/document/attachments/5395/Faculty_Advertaisement_2023_Detailed_instructions.pdf
https://adda247jobs-wp-assets-adda247.s3.ap-south-1.amazonaws.com/jobs/wp-content/uploads/sites/13/2023/06/19161210/NIT-Silchar-Recruitment-2023-Notification-PDF.pdf
https://twitter.com/ramgopal_rao/status/1680924677240422402
https://twitter.com/ydnad0/status/1676489576179961867
https://twitter.com/MenonBioPhysics/status/1681135423094145025
https://nitkkr.ac.in/
https://nith.ac.in/
http://sliet.ac.in/
https://www.nature.com/articles/s41586-022-05222-x
https://www.thehindu.com/opinion/op-ed/rankings-and-the-realities-of-higher-education/article67019516.ece
https://www.science.org/doi/10.1126/sciadv.1400005
https://www.nature.com/articles/s41562-022-01425-4
https://www.nature.com/immersive/d41586-023-00015-2/index.html
Art : saatchiart.com
விஜயகுமார். வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தற்போது டோக்கியோ அறிவியல் நிறுவனத்தில் (Institute of Science, Tokyo) ஆய்வாளராக உள்ளார்








Leave a Reply