ஆம்
அவன் பசித்திருந்தான்.
அவனது வயிற்றில் மூன்று ஜோடி கண்கள் இருந்தன.
கடவுளே உனக்கு கண்ணில்லையா என்று கூக்குரல் வருகிற திசைக்கு
ஒரு ஜோடி கண்களைப் பரிசளித்தான்.
திசைகள் கண்களைப் பொருத்திக் கொண்டன
குரலோ இன்னும் ஊன்றிக் கத்தின
கடவுளே உனக்குக் கண்ணில்லையா
இருப்பதில் ஒரு ஜோடி கண்களைக் குரலுக்கும் வழங்கியாயிற்று
மீண்டும் கடவுளே உனக்குக் கண்ணில்லையா என்று மிக அழுத்தமான குரல்
மீதமிருந்த ஒரு ஜோடி கண்களையும் அந்தத் தாயிடம் வழங்கினான்.
மீண்டும் கடவுளே உனக்குக் கண்ணில்லையா என்று கடவுளின் குரல்.
சிறு புன்னகையோடு கடவுளை அருகழைத்தான்
தலை வருடினான்
முதுகில் தட்டிக்கொடுத்தான்
பின் கடவுளின் ஒட்டிய வயிற்றில் ஒரு ஜோடி கண்களை வரைந்தான்.
இப்போது நன்றாக தெரிகிறதா என்றான்.
கடவுளோ மங்கலாகப் பசிக்கிறது என்றார்.
பிறகுதான் அணிந்திருந்த கண்ணாடியை அணிவித்தான்.
இப்போது நன்றாகப் பசிக்கிறது என்றார்.
இப்போது கடவுளே உனக்குக் கண்ணில்லையா என்று
அவனிலிருந்து ஒரு குரல்.
மார்க்ஸ்க்கு போன் செய்தேன்
மாவோ எடுத்து
ஒரு தூண்டில் தந்தார்.
இரவில் அரண்டு அரண்டு எழுந்தவளின் முகத்தில்
ஒரு கை நீர் அள்ளி அடித்தேன்
நிலைக்கு வந்தவளுக்கு
ஒரு குவளை நீரைக் குடிக்கக் கொடுத்தேன்.
மடக் மடக்கெனத் தொண்டைக்குள் நீர் இறங்கும் ஒலி
அச்சத்தில் உறைந்த முட்டைக்கண் ஓரங்களிலிருந்து
பொத்துக் கொண்டு ஊற்றுகிறது நீர்
இரவுதோறும் உப்புக் காற்று வீசுகிறது.
எப்போது இந்த அலைகள் இளைப்பாறும்.
மகள் சிரிக்கிறாள்
மகன் சிரிக்கிறான்
இணையர் சிரிக்கிறார்
நானும் சிரிக்கிறேன்.
இந்த இரவிற்குக் கூடுதலாகக் கிடைத்தன
நான்கு விண்மீன்கள்.
ஊசியின் காதில் நூலாய் நுழைந்து
பிளந்த குழந்தையின் சரீரம் தைக்கிறாள் பழங்கிழத்தி
நிலம் நிலம் நிலம்
நிலம் எனப்படுவது
யாதெனில்,.
ஒரு படி நெல்
தூக்குப்போசியில் கனக்கும்
நீத்துத்தண்ணி
வரப்போரத்தொட்டிலில்
வீரிட்டழும் குரல்
கழுத்தாம்பட்டையில் பூட்டிய ஏர்
முதுகில் கனக்கும் செங்கல்
காதுக்குள் இறங்கும் வசை
காறி முகத்தில் உமிழ்ந்த எச்சில்
சோற்றுத் தட்டில் காய்ந்த மலம்
வாயில் நிறைந்த சிறுநீர்
வரிகொடேன் என்றறுத்த முலைகள்
நிலம் நிலம் நிலம்
நிலம் எனப்படுவது
யாதெனில் என்று
நிலத்திடம் கேளேன்
மூச்சு முட்ட முட்டக் குடித்த
தாய்ப் பால் ருசி
ஓவியன் அவனது தூரத்தை ஓவியத்தில் இறக்கி வைத்துவிட்டான்.
தூரத்தில் என்னதான் இருக்கிறது.
தூரத்தில் என்னதான் தெரிகிறது.
ஏக்கத்தின் விழிகள் இம்சிக்கின்றன.
என்னதான் இருந்தாலும்
மாடுகளை எலும்பும் தோலுமாக வரைந்திருக்கக்கூடாதுதான் .
அடிவயிற்றில் இருந்து அம்மா என்று அலறும்அவற்றின் குரலுக்கு
நிலம் நடுநடுங்குகிறது.
அவள் புல்லறுக்கச் சென்றிருந்தாள்.
அந்தக் கட்டாந்தரையில் தன்னையே மழையாகப் பொழிந்து
தன்னையே புல்லாக வளர்த்து
தன்னையே புல்லாக அறுக்கிறாள்.
அப்படி தூரத்தில் என்னதான் இருக்கிறது.
சூரியன் மறையும் காட்சி
இரவு வந்துவிட்டது
வீட்டில் அம்மா தேடுவாள்
ஓவியத்திற்குள் தள்ளிவிட்ட ஓவியன்
இந்த நட்டநடு ராத்திரியில் சூரிய விளக்கைத் தூண்டுகிறான்.
பறவைகள் எழுந்து பாடுகின்றன
அவைகளின் குரலைப்பற்றிக்கொண்டு
சட்டகத்திலிருந்து வெளியேறுகிறேன்.
எங்கெங்கு காணினும்
புல் புல் புல்
உயரத்தைப் பறித்துப் போட்டான்
பள்ளத்தையே மேய்கின்றன ஆடுகள்.
உயரம் சிற்சில பசிய இலைகள்
பள்ளம் மெல்ல மேலெழும் பசியத் தொரட்டிகள்.
வேர்க்க விறுவிறுக்க மேய்ப்பன் ஞாபகத்தை அறுக்கிறான்.
வேர்க்க விறுவிறுக்க மந்தைகள் ஞாபகத்தையே உன்னுகின்றன…
நெடுஞ்சாலையை விரித்துக்
குறுக்காகப் படுத்திருக்கும் மேய்ப்பன் மீது
பார்த்து மேலேறி இறங்குங்கள் வாகனங்களே…
தொரட்டி சில தலைகளை அறுத்திருக்கலாம்.
ஆடுகளும் சில தலைகளை மேய்ந்திருக்கலாம்.
ஓவியம் : திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்
திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் திண்டுக்கல் ஞானப்பிரகாசியார் புரத்தைச் சேர்ந்தவர். ஓவியரும், கவிஞரும், எழுத்தாளரும் ஆவார். இவரது இயற்பெயர் பூண்டி ஜெயராஜ் ஆகும். ஜெயராஜின் பெற்றோர் தோல்பதனிடும் தொழிற்சலையில் வேலை செய்கின்றனர். இவர் தேவகோட்டையியிலுள்ள தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
புதிய கோடங்கி, ஏர், தலித் முரசு, உயிர் எழுத்து முதலிய இதழ்களில் தன் கவிதைகளை எழுதிவருகிறார். கொஞ்சோண்டு, நாச்சிமுத்து, ஒழுகிய வானத்தை நேற்றுதான் மாற்றினோம், ஒரு கொடந்தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம், உச்சி சூரியனில் முளைக்கும் பனை ஆகிய நூல்களை எழுதி உள்ளார்.








Leave a Reply