Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

மரணஅரசியல் : தலித்துகளின் நடைபிண வாழ்க்கை

டி. தருமராஜ்
டி. தருமராஜ்
September 1, 2025
மரணஅரசியல் : தலித்துகளின் நடைபிண வாழ்க்கை

ஆணவக் கொலையை எதிர்ப்பது தலித்தல்லாதோருக்கு மிகச் சுலபமான புரட்சிகர நடவடிக்கை. ஏனெனில், ஆணவக் கொலை தீண்டாமையின் கவித்துவ வடிவம்.  ‘காதலும் மரணமும்’ என்ற முரணை அதில் கண்டு கொண்ட விநாடியே அது உலகளாவிய மானுடச் சிக்கலாக மாறிவிடுகிறது. மறுகணம், ஆணவக் கொலைக்கு எதிரான பெரும்பேச்சு மடை திறந்த வெள்ளமாகக் கொட்ட ஆரம்பிக்கிறது.  

வேறெந்தவொரு தீண்டாமைக்கும் இல்லாத கவர்ச்சியும், தீர்க்கமும் ஆணவக் கொலைக்கு இருப்பதற்கான காரணம், அது பட்டவர்த்தனமாக நிகழ்த்தப்படுகிறது என்பதுதான். மற்ற எல்லா தீண்டாமைக் குற்றங்களையும் தீண்டத்தகாதவனின் வார்த்தைகளிலிருந்தே தலித்தல்லாதோர்கள் தெரிந்து கொள்கிறார்கள். குற்றம் புரிந்தவன் எதுவும் பேசுவது இல்லை. அதனால் அதில் கூடுதல் குறைச்சல் இருக்க வாய்ப்பிருக்கிறது.  ஆணவக் கொலை அப்படி இல்லை. அதைச் செய்தவனே எல்லாவற்றையும் ஒப்புக் கொள்கிறான். பெரும்பாலான ஆணவக் கொலைகளில் கொலையாளிகள் நீதிமன்றத்தில் சரணடைந்து விடுவதால், துப்பறிந்து உண்மையைக் கண்டு பிடிக்கும் சிரமம் கூட இல்லை. அதனால், ஆணவக் கொலைகளை எதிர்த்துப் போராட அவர்களால் உடனடியாகத் தயாராக முடிகிறது.  

ஆணவக் கொலை எதிர்ப்பின் மையப்பொருள் மானுட நேயமாக இருப்பதால் கூடுதல் வசதியும் கூட. எந்தவொரு குழுவையோ சாதியையோ குற்றம் சொல்லிப் பேச வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு இல்லை. மானுடத்தின் மீது கறை படிந்தது என்று சொல்வது மூலமும், காட்டுமிராண்டிகளாக மாறிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்வதன் மூலமும், பண்பாடு – நாகரீகம் போன்ற பெருமைகள் என்னவாயிற்று என்று கேட்பதன் மூலமும் அவர்களால் ஆணவக் கொலையை மானுட இழிவாக மிகத் திறமையாகச் சித்தரிக்க முடிகிறது. அல்லது, குறைந்தபட்சம் அதைப் பாரத தேசத்தின் இழிவாக. இப்பொழுது அவர்களின் உரையாடல் அரூபத் தளத்திற்குள் நுழைந்து விடுகிறது. சொல்லி வைத்தது போல் எல்லாக் கவிஞர்களும் அங்கே ஆஜராகிறார்கள். காதல் பற்றியும், ஒவ்வொரு தோல்வியிலும் காதல் மட்டும் எவ்வாறு வெற்றி பெறுகிறது என்றும், கொல்லப்பட்ட காதல்களின் இடுகாடே இந்த பூமி என்றும் அவர்கள் விவரிக்கும் போது ஒட்டுமொத்த மானுடத்தின் கோளாறாக ஆணவக் கொலை மடைமாற்றப்பட்டிருக்கிறது.

மானுடத்தைப் போல மிகப் போலியான இன்னொரு கருத்தாக்கம் இங்கே இல்லை. அது எல்லா அநீதிகளையும் அரூப நிலைக்கு எடுத்துச் செல்வதன் மூலம், நீதியை முடமாக்கி விடுகிறது. தீண்டாமை என்பதை இந்து மதத்தின் கொடூரம் என்று அம்பேத்கர் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருந்த போது, ‘அது மனித மனத்தின் வக்கிரம் மட்டுமே’ என்று காந்தி வலியுறுத்தி வந்தது இது போன்றவொரு முடமாக்கும் தந்திரம். மனிதர்கள் நிகழ்த்தும் கொடூரங்களை விலங்கின் குணமாகவும், வக்கிர நிலையாகவும் விளக்கும் போது நாம் மானுடத்தைக் காப்பாற்றுவதாக நினைத்து, நீதியையும் ஒழுக்கத்தையுமே குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறோம்.  

தீண்டாமைக்கு எதிராக மிகக் கடுமையான தண்டனைகள் வேண்டுமென்று பலரும் பரிந்துரைத்த வேளையில் அதை ஆன்மீகச் சிக்கலாக மாற்றியமைத்த காந்தியின் நடவடிக்கைகள், தீண்டாமையை அடையாளம் கண்டுகொள்ளும் புதிய செயற்பாட்டாளர்களை உருவாக்கியதைத் தவிர வேறொன்றையும் சாதித்திருக்கவில்லை. அதற்கு முன்பு வரை, தீண்டாமையைக் கடைபிடிப்பவர்கள், தீண்டாமைக்கு ஆளாகிறவர்கள் என்ற இரண்டு பேர் மட்டுமே வாழ்ந்த உலகில் மூன்றாவதாக ஒருவர், தீண்டாமையைக் கண்டிக்கிறவராக வலம் வரத் தொடங்கினார். இவரே, பின்னாட்களில் தீண்டத்தகாதவரின் நண்பராகவும், ஆபத்பாந்தவராகவும், காவலாளியாகவும், மேய்ப்பராகவும் விதவிதமாக உருமாறத் தொடங்கினார். தீண்டாமை ஒழிப்பு இவரது பிரதான தொழிலாக மாறியிருந்தது. ஆணவக் கொலை எங்கு நிகழ்ந்தாலும் உடனடியாக மனம் நொந்து, தன் இரங்கலைத் தெரிவிக்கிற தலித்தல்லாத மகானுபவர் இவர்தான். தலித்துகள் ஆணவக் கொலையை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை இந்த நபர் என்றைக்குமே அறிந்து கொண்டது இல்லை.

தலித்துகளுக்கு ஆணவக்கொலை, ஒப்பீட்டளவில் வலி குறைந்த தீண்டாமை. ஏனெனில், கொல்லப்படுகிற தலித்துக்கு அந்தக் கணத்தோடு எல்லாம் முடிந்து போகிறது. ஆனால் அது விளைவிக்கும் பதற்றம் பிற அத்தனை தீண்டத்தகாதவர் மீதும் சாபமெனப் படிய ஆரம்பிக்கிறது. ஆணவக்கொலைகளை ஊரறியச் செய்வதன் காரணம், அக்கொடூரம் காட்சிப் பெருவெடிப்பெனப் பரவ வேண்டும் என்பதைத் தவிர வேறு இல்லை. இந்தப் பயங்கரவாதத்தின் மூலமே காலம் காலமாய்த் தீண்டத்தகாத உடல்கள் நிர்வகிக்கப்படுகின்றன. வரலாற்றின் வெவ்வேறு பக்கங்களில் நிகழ்த்தப்பட்ட தீண்டாமைச் செய்திகள் ஒவ்வொரு தலித்தின் உடலையும் ஒழுங்கமைக்கும் வேலையையே செய்து வருகின்றன. ஒரு தலித் உயிரோடு எஞ்சுவதற்கான சாத்தியங்கள் என்னென்ன, எந்தெந்தச் செயல்கள் அவருக்கு விலக்கப்பட்டிருக்கின்றன, அங்கீகரிக்கப்பட்ட காரியங்கள் எவையெவை, விலக்குகளை மீறுகையில் அவர் உடல் என்னென்ன சித்திரவதைகளுக்கு உள்ளாகும் என்ற தகவல்கள் இங்கே மிகத்தெளிவாய்ச் சொல்லப்பட்டுள்ளன. இந்த உடலரசியலை மீறுகிறவர்கள் ஒன்று கொல்லப்படுகிறார்கள் அல்லது மெளனமாக்கப்படுகிறார்கள். இந்த உடலரசியலுக்கு எதிராக நாம் கேட்டிருந்த மிகச் சமீபத்திய கலகக்குரல் அயோத்திதாசருடையது. அவருடைய ‘பூர்வ பெளத்தன்’ என்ற கருத்து தலித் உடலரசியலுக்கு எதிரான இயல்புகளைக் கொண்டிருந்தன என்பதே வரலாறு. அதனாலேயே அவர் வரலாற்று நீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பதையும் நாம் அறிவோம்.

மிஷல் ஃபூக்கோ (Michael Foucault) உடலரசியல் என்ற கருத்தை முன்மொழிந்த சிந்தனையாளர். நவீனத்துவச் சமூகங்கள் மனிதர்களை நிர்வகிப்பதற்கு அவர்களது உடலின் மீது தொடர்ச்சியான வன்முறைகளை நிகழ்த்துகிறது என்பதை நிரூபித்தவர். ஆனால்,  அவர் கணிப்பதைப் போல நவீனத்துவச் சமூக நிறுவனங்கள் மட்டுமல்ல, ஆதியிலிருந்தே தலித் உடல் மீது கண்காணிப்பு அரசியல் செயல்பட்டு வந்திருக்கிறது. வர்ணாசிரம தர்மம் பஞ்சமன் என்று குறிப்பிடுவது; மனுதர்மம் ‘அந்தணன், ஆ, பெண், பாலர் இவர்களைக் காக்கும் பொருட்டுக் கூலி பெறாமல் உயிரைத் தியாகம் செய்வதே தீண்டத்தகாத பிறப்பினர் சுவர்க்கம் புகும் நல்லாறு’ என்று சொல்வது; ஏகலைவனின் கட்டைவிரலைக் காணிக்கையாகக் கேட்பது; திருநாளைப்போவார் சிதம்பரம் தெருக்களைச் சுற்றிச் சுற்றி வந்த கதைகள்; தனது நற்செயல்களையெல்லாம் பிரம்மராசஷனுக்குத் தாரைவார்க்கும் நம்பாடுவானை நாடே கொண்டாடுகிறது; இளையராஜாவின் இசை மேதைமையை உச்சி முகரும் ஒவ்வொரு கணமும்; திருமாவளவனைப் போல் அறிவார்ந்த, நேர்மையான அரசியல்வாதி யாரும் இல்லை என்று பலரும் சொல்லும் போது எது மிகச் சரியான தலித் உடல் என்பதே வலியுறுத்தப்படுகிறது. இது இன்று நேற்று மட்டுமல்ல, காலங்காலமாக தீண்டத்தகாத உடல் இப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எனவே, தீண்டத்தகாதவர்களுக்கான உடலரசியல் நீண்ட வரலாற்றை உடையது. ஆணவக் கொலைகள் அவ்வுடலரசியலின் கோரமான சமீபத்திய உதாரணம்.

குற்றங்களுக்கான தண்டனை உடல்ரீதியான துன்புறுத்தலே என்றிருந்த நிலை மாறி, குற்றவாளிகளின் உள்ளத்தைக் கவனிக்க ஆரம்பித்த நவீனத்துவச் சமூக அமைப்புகள், அதன் பின் எல்லா மனித உடல்களையும் மாபெரும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தன என்பதை ஃபூக்கோ தனது, ‘ஒழுக்கமும் தண்டனையும்’ (Discipline and Punishment) புத்தகத்தில் ஆரம்பித்து, ‘பாலியலின் வரலாறு’ (History of Sexuality) என்ற நூல் வரைக்கும் தொடர்ந்து விளக்கியிருப்பார்.  மனித உடல்களைக் கண்காணிப்பது, ஒழுங்குபடுத்துவது, நிர்வகிப்பது என்று நவீனத்துவம் மாபெரும் வன்முறையைக் கட்டவிழ்த்தது என்று அவர் சொல்லிக் கொண்டிருப்பதற்கு மாறாக, ஜார்ஜியோ அகம்பென் (Giorgio Agamben), நாகரீகம் என்று பேச ஆரம்பித்த காலத்திலிருந்தே உடலரசியலுக்கான முயற்சிகள் நடந்து வந்திருப்பதை Homosacer (புனித மனிதன்) என்ற பண்டைய ரோமானியக் கதாபாத்திரத்தின் மூலமாக விளக்குகிறார். அதன் தொடர்ச்சியாக, மனித உடல்கள் மீது ஏவப்பட்ட மிகக் கொடூரமான வன்முறை நாஜிக்களின் வதை முகாம்களில் நிகழ்ந்தேறியது என்பது அவருடைய வாதம். அவ்வதை முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த யூதர்களின் வாழ்க்கையை barelife என்ற சொல்லின் மூலம் அவர் விளக்க முனைந்தார். தமிழில் சொல்வதென்றால் ‘நடைப்பிணம்’ என்று மொழிபெயர்க்க வேண்டும். எல்லாவித ஆசாபாசங்களும் மறுக்கப்பட்டு, எப்பொழுது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்ற தீர்ப்பளிக்கப்பட்ட யூதர்களின் வாழ்க்கை எந்தச் சாரமுமற்றது என்பதே அவரது முடிவு.    

அகம்பெனின் இக்கருத்துகளை ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையோடு இணைத்து யோசித்த அஷில் இம்பெம்பே (Achille Mbembe) Necropolitics (தமிழில், மரணஅரசியல்) என்ற கருத்தாக்கத்தை முன்மொழிகிறார். ‘அரசாண்மையின் கடைசி அஸ்திரம் இவ்வுலகில் யார் உயிருடன் இருக்க வேண்டும், யார் சாக வேண்டும் என்று தீர்மானிப்பதே’ என்று எழுதுகிற இம்பெம்பே ஒடுக்கப்பட்ட எல்லா மக்களின் மீது மரணம் நீக்கமற நிறைந்துள்ளது என்றே ஆரம்பிக்கிறார். இந்த மரணம் எப்பொழுது வேண்டுமானாலும் வெளிப்பட முடியும்; ஆணவக் கொலையில் கொல்லப்படுவதைப் போல அது எந்த நேரமும் நிகழ முடியும். இப்படி ஓரிருவருக்கு நிஜமாகவே நிகழ்கிற மரணம் மீதமுள்ள அனைவரையும் நடைப்பிணங்களாக மாற்றி விடுவதுதான் யதார்த்தம். ஒவ்வொரு ஆணவக்கொலைக்குப் பின்பும், தலித்துகளின் மத்தியில் ஒலிக்கும் ‘இனிமேல் யாரும் காதலிக்காதீங்கடா’ என்ற புலம்பல், நடைப்பிண வாழ்வை அறிவுறுத்துவதுதான். இதற்கு நேர் எதிராக, தலித்தல்லாதவர்களிடமிருந்து எழக்கூடிய ‘நாடகக் காதல்’ என்ற கண்டனமும் நடைப்பிணமாக வாழ் என்று சொல்வதன் வடிவம்தான். படித்து முன்னேறிய தலித் இளைஞர்களை வெளிநாட்டிற்கு ஓடிப்போங்கள் என்று ஆலோசனை சொல்வது கூட மரண அரசியலின் ஒரு அங்கம்தான். நடைப்பிணமாக இந்த தேசத்தில் வாழ்வதற்குக் கண்காணாத தேசத்தில் உயிரோடு இருக்கலாம் என்ற பரிதவிப்பு இது. வதை முகாம்களில் கொல்லப்படுவோம் என்று தெரிந்த போது ஜெர்மானிய யூதர்கள் செய்த காரியமும் இந்த ஓடிப்போதல்தான்.  

ஆணவக் கொலைகள் விளைவிக்கும் மரணஅரசியல் தொடர் விளைவுகளை ஏற்படுத்தவல்லது. அது ஒவ்வொரு தலித்தையும் பார்த்து ‘நீ நடைப்பிணம்’ என்று உரக்கச் சொல்கிறது. வரலாறு தன் மீது சுமத்தியிருந்த அத்தனை கசடுகளையும் ஒதுக்கி, அது ஏற்படுத்திய தளைகளைக் களைந்து, தனது உடல் ‘தீண்டத்தகாதது’ என்ற பொய்மையிலிருந்து விடுபட்டு, இந்த தேசத்தின் உடலரசியலில் இருந்து மெல்ல மெல்ல வெளி வந்து கொண்டிருக்கும் போது நிகழும் ஆணவக் கொலைகள் பழையபடி நடைபிணங்களாகவே மாற்றி விடுகின்றன.  

ஆணவக் கொலை, ஒரு குற்றச் சம்பவம் மட்டுமல்ல; அது காலம்காலமாக நிகழ்ந்து வரும் மரண அரசியலின் காட்சி வடிவம். ஒரு தீண்டத்தகாத உடலின் பாலுணர்ச்சிகளை அது வரையறுக்க ஆரம்பிக்கிறது. அவ்வுடலுக்கான நடத்தைவிதிகளை அது பட்டியலிடுகிறது. ஒரு தலித் நடைபிணம் யாரோடு, எந்த அளவுக்குப் பழக முடியும் என்பதற்கான விதிகளை வகுக்கிறது. ஒரு நல்ல தலித்தின் லட்சணம் என்ன என்பதை அது மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகிறது. அந்த விதிகளின் படி தத்தம் உடல்களை வடிவமைத்துக்கொண்ட தலித்துகளைப் பாராட்டவும் பெருஞ்சமூகம் மறப்பதில்லை. இதன் மூலம் லட்சிய தலித் உடல்களை அதனால் கோடிட்டுக் காட்ட முடிகிறது. 

காந்தியின் மிரட்டலுக்குப் பயந்து, இரட்டை வாக்குரிமையைக் கைவிட்ட போது அம்பேத்கர் இப்படித்தான் பாராட்டப்பட்டார். அதன் பின், அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய போதும் கூட அவர் ஒரு முன்மாதிரியான தலித் என்றே நமக்குக் காட்டப்பட்டார். ஆனால், ‘அரசியலமைப்பு ஒழுக்கம்’ இல்லாத இந்த தேசத்தில் சட்டத்தால் எந்தப் பயனுமில்லை என்று வருந்திய அம்பேத்கரையும், வாழ்வின் இறுதியில் அவதியவதியாய் பெளத்தம் தழுவிய அம்பேத்கரையும் தீர விசாரிப்பவர்களுக்கு அவரது நடைப்பிண வாழ்வின் துயரம் தெரிய வரும். மிக உயரிய நோக்கங்களுடன் ஆரம்பித்த விடுதலைச் சிறுத்தைகள் மிகச் சிறந்த தலித் அரசியல் அமைப்பு என்றும், திருமாவளவன் எல்லோரும் விரும்பும் அரசியல் தலைவர் என்றும் இந்தப் பெருஞ்சமூகம் கொண்டாடுவது கூட மரணஅரசியலின் அங்கம்தான். தலித் அரசியலைத் துணிந்து பேச முடியாமல் பல நேரங்களில் ஊமைகளாய் நிற்கும் விடுதலைச் சிறுத்தைகளை ‘நடைப்பிணம்’ என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது? பாரபட்சம் இல்லாமல், எல்லா தமிழர்களாலும் இளையராஜா கொண்டாடப்படுவதற்கு, இசை என்பதையெல்லாம் கடந்து, அவர் மிகக் கச்சிதமான தீண்டப்படாத உடலைக் கொண்டிருந்தார் என்பதுதான் முதன்மைக் காரணம். அவர் தன் மீது செலுத்தப்பட்ட தீண்டாமையை மறந்தவர் (நினைவுப்பிணம்) போல வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதையும் மீறி, தன் மீதும் தன்னையொத்தவர்கள் மீதும் செலுத்தப்படும் மரணஅரசியலைப் பேச முடியாத நடைப்பிண வாழ்வின் கொந்தளிப்பையே அவர் பொதுவெளிகளில் வேறு வேறு எரிச்சல்களாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.  

காலம்காலமாகத் தன் மீது செலுத்தப்படும் மரணஅரசியலை எதிர்க்கிற ஒவ்வொரு தலித்தையும் கொன்று விடவே இந்தச் சமூகம் ஆசைப்படுகிறது. அரசாண்மையின் விருப்பமும் கூட இதுவாகத்தான் இருந்தது. பெருகும் மக்கள் தொகையைக் கட்டுக்குள் வைத்திருக்க, இயற்கைப் பேரழிவுகளை அனுமதித்தல், போர்ச் சூழலை உருவாக்குதல் போல தலித்துகளைக் கொன்று விடுவதையும் ஒரு உத்தியாக அரசு கைக்கொண்டிருக்கிறது. இந்த மரண தண்டனைக்குப் பயந்து உயிர் பிழைக்கக் கெஞ்சுகிற தலித்துகளுக்கு ஏற்படுத்தப்பட்ட உடலரசியலே நடைப்பிண வாழ்க்கை. அவ்வரசியல் எப்பொழுதெல்லாம் எதிர்க்கப்படுகிறதோ அப்போதெல்லாம் நிர்மாணிக்கப்படும் கண்காணிப்புக் கோபுரமே, ஆணவப்படுகொலை. அதுவொரு அச்சுறுத்தல் போல சமூகத்தில் உலவுகிறது. இதையெல்லாம் மீறி வாழ்வதே தலித்துகளின் சவால்.


Art :Jialun Deng

டி. தருமராஜ்
டி. தருமராஜ்

மானுடவியல், நாட்டார் வழக்காற்றிய, பண்பாடு, வரலாறு, கலை, இலக்கியம், திரைப்படம் உள்ளிட்ட துறைகளில் முப்பது வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து இயங்கி வருபவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறையின் பேராசிரியர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினரும் கூட. ஜெர்மனியிலுள்ள கோட்டிங்கன் பல்கலைக்கழகத்திலும், ட்யூபிங்கன் பல்கலைக்கழகத்திலும் வருகை தரு பேராசிரியராகப் பணியாற்றியவர்.

அயோத்திதாசரை முற்றிலும் புதிய கோணத்தில் விவாதிக்கும் ‘அயோத்திதாசர் – பார்ப்பனர் முதல் பறையர் வரை’ என்ற நூல், நாட்டுப்புறவியல் துறை சார்ந்த அடிப்படை நூலாகத் திகழும் ‘தமிழ் நாட்டுப்புறவியல்’, மிகுந்த சர்ச்சைக்கும் விவாதத்திற்கும் உள்ளான ‘நான் ஏன் தலித்தும் அல்ல?’, திரைப்படக் கட்டுரைகளின் தொகுப்பான ‘இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?’ என்ற நூல், சமீபத்தில் வெளியான ‘யாதும் காடே, யாவரும் மிருகம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

Share :

13 responses to “மரணஅரசியல் : தலித்துகளின் நடைபிண வாழ்க்கை”

  1. Puthiyamaadhavi
    September 2, 2025

    ஆணவக் கொலையும் அது ஏற்படுத்தும் பதட்டமும் மற்றவர்களுக்கு ஒரு பரபரப்பான செய்தி ஆனால் ஒரு தலித் உடலுக்கு அச்செய்தி ஏற்படுத்தும் தாக்கம் என்னவாக இருக்கும்? இந்தக் கேள்வியை நோக்கி இக்கட்டுரை நகர்ந்து இருக்கிறது. வாழ்த்துகள். இளையராஜா தானே விரும்பினாலும் கூட அவருடைய தலித் உடலை அவ்வளவு எளிதாக கழட்டி வைத்து விட முடியாது. இந்த யதார்த்தம் அவருக்குள்ளும் எரிச்சலாக வெளிப்படத்தான் செய்கிறது என்பதை இக்கட்டுரை அணுகியிருப்பது இன்னும் சில வாசல்களை திறக்கிறது.
    பேரா. மீண்டும் வாழ்த்துகள்.

    புதியமாதவி
    மும்பை

    Reply
    1. டி. தருமராஜ்
      டி. தருமராஜ்
      September 4, 2025

      நன்றி. ‘மரண அரசியல்’ என்ற சிந்தனை பலருக்கும் புதிய வெளிச்சங்களைக் காட்டியிருப்பது குறித்து மகிழ்ச்சி.

      Reply
  2. இரணியன்
    September 2, 2025

    It hits hard. போராசியரின் இக்கட்டுரை மிகவும் ஆழமான உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. மற்ற அறிஞர்களின் கருத்துச் சட்டங்களை தனது ஆய்வுப் பொருளுடன் இணைத்தது அவரது மேதைமையை வெளிப்படுத்துகிறது. வழக்கம்போல பேராசிரியரின் கருத்து என்னைப் பதற்றப்படுத்த தவறவில்லை.

    Reply
    1. டி. தருமராஜ்
      டி. தருமராஜ்
      September 4, 2025

      நன்றி, இரணியன்.

      Reply
  3. சஞ்சீவ் பரந்தாமன்
    September 2, 2025

    பேராசிரியரின் எழுத்து எப்பொழுதுமே காத்திரமாக இருக்கும் என்பது தெரியும். ஆனால் இம்முறை எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி விட்டது. உங்களைத் தொடர்ந்து வருபவன் என்ற முறையில், நான் ஏன் தலித்தும் அல்ல புத்தகத்தை மூல நூல் போல் படித்து வருகிறேன். அதில் ஓரிடத்தில், நான் ஏன் தலித் அல்ல என்று சொல்லி வருகிற போது (தர்க்கரீதியாய்) நடந்து விடுகிற ஆணவக் கொலைகள் என்னை மீண்டும் தலித்தாக மாற்றி விடுகின்றன என்று எழுதியிருப்பீர்கள். அதன் விரிவாக்கம் தான் இந்தக் கட்டுரை என்று எடுத்துக் கொண்டேன். ஜார்ஜியோ அகம்பென்னையும், அஷில் ம்மும்பேயையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. மரண அரசியல், புனித மனிதன், நடைபிணம் என்ற சொற்சேர்க்கைகள் தலித் உரையாடலுக்கு நீங்கள் வழங்கும் கொடைகள். உங்கள் கட்டுரைகளைப் படித்த பின்பு ஏற்படும் அதே உணர்வு இதிலும் ஏற்பட்டது – நிறைய புரிதல்கள், புதிய குழப்பங்கள்.

    Reply
    1. டி. தருமராஜ்
      டி. தருமராஜ்
      September 4, 2025

      நீங்கள் சொல்வது போல, ‘தலித் அல்ல காதலன்’ என்ற கட்டுரையின் மறுபக்கம் தான் இது. தீண்டாமை என்ற உடலரசியலைக் கடந்து வந்தோம் என்று ஒவ்வொரு முறை நினைக்கும் போது, ஒரு கொலை எனக்குப் பரிசளிக்கப்படுகிறது. நான் மீண்டும் தீண்டாமைக்குள் தள்ளப்படுகிறேன். இந்த சுழலை யாராலும் தவிர்க்க முடியவில்லை என்பதே இங்கு யதார்த்தம்.

      Reply
  4. கோ. மணிசேகர்
    September 2, 2025

    அன்புள்ள தர்மராஜ், இந்தக் கட்டுரையில் வெளிப்படும் கசப்பு தேவைதானா என்று எனக்குள் கேள்வி. தலித் வாழ்க்கையை எட்டாத உயரத்தில் கொண்டு போய் வைக்கிறீர்கள். தலித் அல்லாத நாங்கள் எட்ட முடியாத இடத்தில் இருப்பது ஒரு வகை அரசியல் உத்தியா என்றும் நான் கேட்டுக் கொள்கிறேன். எங்களை மெளனமாக்கி நீங்கள் என்ன பேச விரும்புவீர்கள் என்று தெரியவில்லை. தம்பி திருமாவளவனின் ஆளுமையை வியக்கும் தலைமுறை நாங்கள். அதையும் மரண அரசியலின் பகுதி என்று சொல்லி விட்டால் பேசுவதற்கு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. எங்களைப் போன்ற ஆதரவு சக்திகளை விலக்கி வைத்து தலித் அரசியல் எதைச் சாதிக்க விரும்புகிறது?

    கோ. மணிசேகர், திருவாடனை.

    Reply
    1. இரணியன்
      September 3, 2025

      அவர் அவ்வாறு கூறவில்லை. திருமாவளவன் போன்றோரின் அரசியல் முழுமையான தலித் அரசியலாக இல்லை என்றகிறார். மைய நீரோட்டம் என்பது தலித்-எதிர் அரசியல் என்கிறார். தலித்தல்லாதோர் சாதி ஒழிய வேண்டும் என நினைக்கிறீர்கள் என்றால் துணிந்து தலித்துகள் பக்கம் நிற்க வேண்டும் என்கிறார். அவர் ஆதரவு சக்திகளை விலக்கி வைக்கவில்லை. மாறாக, வெளிப்படையாக துணிந்து தலித்துகளுடன் நில்லுங்கள் என்கின்றார்.

      Reply
  5. Celine Kanagam
    September 2, 2025

    சார், உங்களது ‘நினைவில் மறதியுள்ள மனிதன் – இளையராஜா’ உரைக்கான ரசிகை நான். அதே கட்டுரை ‘யாதும் காடே யாவரும் மிருகம்’ தொகுப்பில் வந்ததை நிறைய முறை படித்திருக்கிறேன். அதிலிருந்து விலகி வேறு மாதிரியாய் ராஜாவை காட்டுவது போல இருக்கிறது. எனக்கு மட்டும் தான் இப்படி தெரிகிறதா அல்லது எல்லாருக்குமேவா? ராஜாவை நாங்கள் ரசிப்பதற்கானக் காரணம் இசையைக் கடந்த அவரது லட்சிய தலித் வார்ப்பு என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரது ஆயிரம் ஆயிரம் இசைக் கோர்வையைக் கேட்டு மயங்கி நிற்கிற என்னைப் போன்ற இசைப்பிரியைகளின் அடித்தளத்தை உங்கள் கட்டுரை தரைமட்டமாக்குகிறது. தயவு செய்து ராஜாவை மட்டுமாவது விட்டு வையுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    செலின் கனகம், சென்னை.

    Reply
    1. டி. தருமராஜ்
      டி. தருமராஜ்
      September 4, 2025

      ராஜா மாதிரியான ஒரு ஆளுமையை ஏற்றுக் கொள்ளும் தகுதி இந்த சமூகத்திற்கு இல்லை.

      Reply
  6. Kalyanaraman Anjaneyaa
    September 2, 2025

    உடலரசியல் விவாதத்தில் முதல் முறையாக தலித் உடல் கவனக்குவிப்பு நடக்கிறது. ஏன் இத்தனை காலம் இதை யாரும் பேசவில்லை என்று தெரியவில்லை. தமிழில் உடலரசியலைப் பேசிய பலரும் பெண்ணுடல், திரைப்படத்தில் காட்டப்படும் உடல் என்றே விவாதம் செய்து கொண்டிருந்த நேரத்தில், இப்படியான எழுத்து தலித் இலக்கியத்தில் புதிய கண்ணோட்டத்தை வழங்கக்கூடும். அதற்காக வாழ்த்துகள்.

    ஆ. கல்யாணராமன், புது தில்லி

    Reply
  7. S. Muthukumaran
    September 4, 2025

    சாதியக் கொடுமை பற்றிய புதிய கண்ணோட்டத்தை உங்கள் கட்டுரை வழங்கியது. ஆணவக் கொலை தொடர்பாக ஏராளமாகக் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. சமீபத்தில் கூட பலரின் கட்டுரைகளையும் படிக்க நேர்ந்தது. ஆனால் உண்மையில் நீங்க் எழுதுவது மட்டும் தான் தெளிவானப் பார்வையையும், ஆத்மார்த்தமாகவும் உள்ளது. ஒவ்வொரு சமூகப் பிரச்சினையையும் நீங்கள் சரியான கோட்பாடுகளுடன் அணுகுவது என்னைப் போன்ற இளம் ஆய்வாளர்களுக்கு பெரிதும் துணை செய்கிறது. இந்த முறை நீங்கள் பயன்படுத்திய necropolitics பற்றி கூடுதலாகத் தெரிந்து கொள்ள ஆசை. முடியுமென்றால் அது பற்றி விரிவாக எழுதுங்கள். உங்களைத் தொடரும் என்னைப் போன்ற பல இளம் வாசகர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

    செ. முத்துக்குமரன், கோவை

    Reply
  8. S. Kandhimathinathan
    September 10, 2025

    சார், வணக்கம். உங்கள் கட்டுரைகள் அதிரடியாய் இருக்கும். இந்தக் கட்டுரை கொஞ்சம் கூடுதல் காரம். அதிலும் காந்தி பற்றிய உங்கள் பார்வை பலருக்கும் எரிச்சலை உண்டு பண்ணும். முகநூலிலும் தொடர்ந்து நீங்கள் காந்தி அம்பேத்கர் மோதல் குறித்து எழுதி வருவதை வாசிக்கிறேன். இந்த சூழலில், மரணத்தை கலையாக்கிய காந்தி என்றொரு கட்டுரையை ஷ்ங்கர ராமசுப்பிரமணியன் என்பவர் அகழ் இணைய இதழில் எழுதியிருக்கிறார். அதில் வழக்கம் போல துதிபாடல் இருக்கிறது என்றாலும், காந்தி மரணத்தோடு மேற்கொண்ட பரிசோதனைகள் கவனத்தை ஈர்த்தன. அது பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவல்.

    சு. காந்திமதிநாதன்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top