தீபாவளிக்கு முந்திய நாள் பின் முற்றத்தில் இருந்த கட்டுத்தறியில் யாரோ இரண்டு பேர் பேச்சுகேட்டு எழுந்துபோய்ப் பார்த்தேன். அம்மா வாசலுக்கும், கட்டுத்தறிக்கும் நடந்துகொண்டிருந்தாள். என்ன என்று கேட்டதற்குக் கன்னுக்குட்டிய கொடுத்துடும்லாம்னு குரலற்ற வார்த்தையில் சொன்னாள்.
”இப்ப என்ன அவசரம்?”
”இல்ல இப்பத்தான் விலை கொஞ்சம் சேர்த்து போவும்னு சொன்னாங்க”
”அதுவும் இல்லாம மாடு போன பிறகு அது கத்தற சத்தத்த கேட்க முடியல”
அம்மா முகத்தில் அவ்வளவு சுரத்தில்லாமல் நான் பார்த்ததேயில்லை. விலையோ கன்னுகுட்டியோ அவள் பார்க்கவேயில்லை. அவள் பார்வை முழுக்கக் கட்டுதறியிலே இருந்தது. கன்னுக்குட்டியை விலை பேசியதிலிருந்து வெளியே கொண்டு போய் குட்டி யானையில் ஏற்றியது வரை அண்ணனின் நண்பன்தான் பார்த்துக்கொண்டான்.
சாய்ந்திரம் வெளியே போய் வந்து அம்மாவைத் தேடிய போது பின் வாசலில் போட்டிருந்த துவைக்கல்லில் உட்கார்ந்து வெறிச்சோடிக் கிடக்கும் கட்டுத்தறியையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் தளர்ந்து போன உடல் சுருக்கங்களில்கூட துக்கம் படர்ந்தது போல இருந்தது. என்னைப் பார்த்ததும் அவள் எழுந்து நடக்க முடியாமல் வீட்டுக்குள் வந்து படுத்துக்கொண்டாள்.
அப்பொழுதான் அப்பாவின் ஞாபகம் வந்து தேடினேன். வெளிவராந்தாவில் பாயில் கோழிக்குஞ்சு போல சுருண்டு படுத்துக்கொண்டிருந்தார். சவம் எடுத்துப் போன பிறகு இருக்கும் அமைதி போல வீடு முழுக்கத் துக்கம் அப்பிருந்ததைச் சகிக்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறி டி.வி.எஸ்.ஸ்கூல் தாண்டி நிலத்துக்குப் போகும் பாதையில் நடக்க ஆரம்பித்தேன்.
காத்தான் குளம் அருகே போகும் போது கால் தானாகவே நின்றது. சுற்றிலும் பீவேலி முளைத்து குளம் தெரியாத அளவுக்கு மூடிக்கிடக்க, பெரு மலையிலிருந்து வரும் ஓடையில் புது மழையில் வந்த வெள்ளத்தில் சாக்கடை கலந்து கோடு போல கறுப்பாக ஓடிக்கொண்டிருந்தது. மூனு ஆள் நின்றாலும் தெரியாத ஓடை இப்பொழுது மூனு அடிக்குத் தூர்ந்திக்க அதன் கரையில் இறங்கி நிலத்துக்குப் போனேன். மூவோடை கலக்கும் குளத்துக்கு அருகே மரத்துக்குக் கீழே வீரனார் சிலை கம்பீரமாக நின்றிருந்தது. முள்ளுக்கு நடுவே ஒற்றைக் காந்தல் பூ மட்டும் பூத்து விரிந்திருக்கச் சட்டெனக் காடு திறந்து போல சிறு வயது ஞாபகங்கள் எல்லாம் விரிய ஆரம்பித்தன.
அம்மாவை முன்பொரு முறை இதேபோல பார்த்திருக்கிறேன். ஆனால் அதிலிருந்து ஆங்காரமாக வெடித்து மீண்டெழுந்தாள். அப்பொழுது நான் ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தேன். அண்ணனுக்குக் கல்யாணம் நிச்சயக்கப்பட்டிருந்தது. வீட்டில் முதல் கல்யாணம் என்பதால் கல்யாணத்தை மண்டபத்தில் வைத்துதான் நடத்த வேண்டும் என்று பெண் வீட்டில் சொல்லிவிட்டார்கள்.
அம்மா, அப்பாவிடம் இருந்த சிறுவாணி காசை எல்லாம் போட்டு மண்டபத்துக்கு, சாப்பாட்டுக்கு, துணிமணிகளுக்கு என எல்லாமே அட்வான்ஸ் கொடுத்திருந்தார்கள். அப்பொழுது அப்பாவைப் பார்த்துக்கொண்டிருப்பேன், பகலெல்லாம் பணத்துக்காகச் சொந்தக்காரர் வீடுகளுக்குப் போய்த் திரும்பி வந்து இரவெல்லாம் கிணற்றில் ஏற்ற சால் இறைப்பார். நானும் சின்ன அண்ணனும்தான் அப்பாவுக்குத் துணையாக வட கயிறு, நெகுதடி எல்லாம் தூக்கிக்கொண்டு போவோம். கல்யாண நாள் நெருங்க நெருங்க பணம் கொடுப்பதாகச் சொன்னவர்கள் எல்லாம் கைவிரிக்க அப்பா சோர்ந்திருந்தார்.
வீடு சண்டையில் பாகம் கொடுக்காத வைராக்கியத்தில் பத்து வருடங்களுக்கு மேல் தாத்தாவோடு பேசாதிருந்த அப்பா பணம் கேட்டு நின்றபோது தாத்தன் சொல்லிய வார்த்தை தாங்காமல் வீடு திரும்பிய
அப்பா இரவெல்லாம் தூங்காமல் படுத்துக் கிடந்தார். என்ன நினைத்தாரோ நேராக மாட்டுப் பட்டிக்குப் போனவர் பட்டியில் இருந்த அறுபது மாட்டைப் பேசி முடித்து விட்டுக் கையில் பணத்தோடு வீடு திரும்பினார்.
அதைக் கேள்விப்பட்டு அம்மா என்னை இழுத்துக்கொண்டு பட்டிக்கு ஓடினாள். மாடு பட்டியை விட்டு வெளியேற அம்மா அதற்கு நடுவே நின்று ஆங்கரித்தாள். ஒரு மாடு பட்டியை விட்டு நடந்தா நான் இங்கேயே நாண்டுக்கிட்டுச் சாவேன்னு பட்டி நடுவே ஒட்கார்ந்துகொண்டாள். தரகு பேசிய தாத்தா நிலைகுலைந்து நின்றிருந்தார். அப்பா இழுத்துப் போட்டு அடித்தும் அம்மா முளைகுச்சியில் சுற்றி வரும் மாடு போல பட்டியை விட்டு அன்று முழுக்க நகரவேயில்லை.
இதே வீரனார் கோயிலில் பஞ்சாயத்து பேசி பட்டி காலியாகாமல் இருக்க உனக்குத் தேவையான மாட்டை நீயே பிடித்துக்கொள் என்று சொல்ல அம்மா போய் உழவுக்கு இரண்டு கன்னுக்குட்டியும், பாலுக்கு ஒரு பசு மாட்டையும் பிடித்துக்கொண்டு வந்து கட்டுத் தறியில் கட்டினாள்.
அதற்குப் பிறகு கட்டுத் தறி எப்பொழுதும் காலியானதேயில்லை. அவளுடைய அதிகாரம், பணம், புகழ் எல்லாமே மாடுதான். அதன் பிறகு வீட்டுக்குள் நூறு பிரச்சனைகளும், இழப்பும் வந்து போயிருக்கின்றன. அவள் எதற்கும் இவ்வளவு துக்கப்பட்டதேயில்லை. தூரத்தில் பட்டி இருந்த இடம் காலியாகக் கிடக்க பெரிய தாத்தனின் மாட்டுக்கொட்டாய் இருந்த சுவடு மட்டும் ஒற்றைச் சுவராக நின்றிருந்தது.
ஏழு தலைமுறைக்கு முன்னாடி மேற்கிலிருந்து என் முப்பாட்டன் ஒற்றை மாட்டை மட்டும் ஓட்டிக்கொண்டு வந்து ஒரு கார்த்திகை நாளில் நின்ற இடம் இந்தக் குளத்தோரம்தான் என்று பெரிய தாத்தா சொல்லியிருக்கிறார். சுற்றிலும் குலுவக் காடா இருந்த நிலத்தைத் திருத்தி முதலில் போட்ட கொட்டாயே மாட்டுக்குத்தான். அதுல வந்த பணத்துலதான் இந்த ஊருல நிலபுலத்தோட ஊனி நின்றோம் என்று பெரிய தாத்தா இருக்கும் வரைப் பெருமையாகச் சொல்வார். ஏழு தலைமுறையில் அறுவது தலகட்டான பங்காளிக்கும் இந்த இடம்தான் மாட்டுக்குப் பட்டி.
வீட்டில் இருந்ததை விட பெரிய தாத்தானோடுதான் இரவு, பகலெனக் கதை கேட்டு சுற்றியிருந்த காலம் அது. நடு வராந்தாவில் தன் வேட்டி மறைப்புக்குள் படுக்க வைத்து நட்சத்திரங்களைக் காட்டி அவர் சொன்ன கதைகளும், காலையில் வீட்டுக்கு முன் குழந்தையோடு நிற்கும் தாய்மார்களுக்குச் சொல்லை மனதுக்குள் உருக்கி அவர் போடும் திருநீறும் மாலை நேரத்தில் பட்டிக்கு முன் பஞ்சாயத்துக்கு நிற்கும் சம்சாரிகளுக்குத் துலாக்கோலாய் அவர் சொல்லும் வார்த்தையும் நினைவுகளில் அலையாட அவர் பட்டியில் நடமாடிய இடத்தையெல்லாம் நினைவுகளில் சுற்றி நடக்க ஆரம்பித்தேன்.
சுற்றிலும் பனைசாரை வேலியாய் நின்றிருக்க நாலு ஏக்கரில் காட்டுக்கு மேய்ச்சலுக்கு ஓட்டும் ஐந்நூறு மாடுகள் தானாக வந்து பட்டியடையும். காலையில் ஏர் உழவு முடிந்து வந்து பட்டி திறந்தால் காட்டோடையின் வழியே அபயம் மண்டபம் எதிரே இருக்கும் காட்டுக்குள் நுழைந்து மயிலாத்தான் பாறைக்கு மேலே இருக்கும் வெட்டக்காட்டுக்குள் மேய்ந்து மதியம் பஞ்சமுகத்துக்குப் பின்னாடியிருக்கும் காட்டுப்பாதையில் இறங்கி பச்சாத்தா கோயில் குளத்தில் தண்ணிகுடித்து மீண்டும் தரைகாட்டுக்குள் இறங்கும் கன்னிமார் ஓடையில் வழியே மேய்ந்து கொண்டு வந்து குபேர லிங்க குளத்தில் தண்ணிகுடிக்கவும் நாங்கள் பள்ளிக்கூடத்தை விட்டு வந்து பெரிய தாத்தனோடு போகவும் சரியாக இருக்கும். அப்படியே காட்டோடை வழியே வந்து பட்டி சாரும் போது அம்மா பால் கிண்ணத்தோடு நின்றிருப்பாள். பாடு, பொருள் எது போனாலும் தாங்கிக்கொள்ளுகிற அம்மாவுக்கு மாட்டுக்கு ஏதாவது என்றால் உடல் பதறி தூங்காமல் நேர்த்தி வைப்பாள்.
மழை வலுத்த ஒரு நாள் காட்டுக்குப் போன நிறைப் பசு நான்கு நாள் பட்டி திரும்பாமல் இருக்க அம்மா பட்டியிலே கிடந்தாள். கன்னுக்குட்டி போட்ட ஈந்து வலி போக பாறையிடுக்கில் படுத்துக்கிடக்கிற மாடு வலி சரியானதும் பட்டிக்குத் திரும்புவது வழக்கம். ஆனால் மாடு நான்கு நாள் ஆகியும் திரும்பாமல் இருக்க முதன் முறையாகக் காட்டுக்குள் அப்பாவோடு போனேன்.
இரண்டு இரவு இரண்டு பகல் காட்டுக்குள் அலைந்தும் கிடைக்காமல் திரும்பும் போது அழுது கொண்டே வந்த என்னைப் பக்கத்தில் இருத்தி வானத்தைக் காட்டி பெரிய தாத்தன், டே நம்ம ஊரச் சுத்தி வானம் இருக்க அதைத் தாண்டி மாடு எங்க போயிடப் போவுது. நீ பாரு நாம பட்டிக்குப் போறதுக்குள்ளே மாடு பட்டிக்கு வந்திடும்னு சொன்ன வார்த்தையை நம்பி அன்றிரவு தூங்கினேன்.
மறு நாள் காலை தூங்கி எழுந்ததும் பட்டிக்கு ஓடிப் போய்ப் பார்த்த போது செங்கல் நிறத்தில் கன்னுக்குட்டியோடு மாடு நின்றிருக்கச் சிரித்தபடி ஓடிப் போய்ப் பெரிய தாத்தனைக் கட்டிப்பிடித்த காட்சி இன்னும் அப்படியே இருந்தது. பட்டி இருந்த இடத்தைப் பார்த்தேன், சுற்றிலும் முள் வேலி போட்டுக் கற்கள் நின்றிருக்க மனம் கனத்து
பார்வையை மலையை நோக்கித் திருப்பினேன்.
மயிலாத்தா பாறையில் என் நினைவுகளின் சுவடுகள் போலவே நீர் ஓடிய தடங்கள் தெரிய அப்படியே பார்த்துக்கொண்டிருந்தேன். இருள் திட்டாகப் படிய வானத்தில் நிலவு எழுந்த நேரம் மாடுகள் மேய்ச்சலுக்குப் போன பாதையிலேயே நடந்து நடுக்காடு வரைப் போய்த் திரும்பினேன். குளம்படிகளால் உருவாக்கிய பாதை குறுக்கும் நெடுக்கமாக இன்னும் அப்படியேதான் காட்டுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
நடுச் சாமத்தில் வீட்டுக்குள் நுழையும் போது அம்மா அப்பனோடு சண்டையிட்டுக்கொண்டிருந்தாள். நாளும் கிழமையுமா மாட்டைத் தொலச்சிட்டு நிக்குறோம் உனக்கு உறக்கம் எப்படிய்யா வர்துனு சொல்ல. அப்பா எதுவும் சொல்லாமல் பின் வாசலை நோக்கிப் போனார். நான் நினைவுகளின் சாளரத்தோட வீட்டின் அலமாரியில் வைத்திருந்த வகை வகையான கழுத்து மணிகளைப் பாத்துக்கொண்டிருந்தேன்.
இரவெல்லாம் நினைவுகளின் சாளரத்தில் தங்கிப் போயிருந்த கழுத்து மணியின் ஓசைகள் நிற்காமல் ஓசைகளை எழுப்பியபடியே இருந்தது. காலையில் ஊரே வெடிவைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்க அம்மா படுக்கையை விட்டு வெளியே வரவேயில்லை. பலகாரம் கொடுக்க டவுனிலிருந்த வந்த அண்ணனும், அக்காளும் எவ்வளவு சொல்லியும் எழாமல் முனகியபடியே படுத்துக்கொண்டிருந்தாள்.
இரண்டு மாதம் அவள் படுக்கைக்கும் கட்டுத் தறிக்கும் நடமாடியதைப் பொறுக்காமல் அண்ணனும் நானும் யாரையாரையோ பிடித்துப் பசுக்களை வாங்கி வந்து கட்டிப் பார்த்தோம். அம்மா அதை ஏறெடுத்துக் கூடப் பார்க்கவேயில்லை. கார்த்திகை தொடங்கிய மூன்றாவது நாள் அம்மா ஏதோ கனவு கண்டு எழுந்தவள் போல தீட்சண்யமாய்க் கட்டுத்தறிக்குள் போய் உட்கார்ந்திருந்தாள். நான் அப்பாவைத் தேடினேன். செந்நிறமாய்ச் சூரியன் மேற்கில் பிரகாசிக்க ஒரு கல்லைப் பசுவைப் பிடித்த படி தெருவில் நடந்து வந்துகொண்டிருந்தார்.
அருகே வர வர அப்பாவின் நடையைப் பார்த்தேன். ஒவ்வொரு அசைவிலும் பெரிய தாத்தனின் சாயல் தெரிந்தது. நான் என்னையறியாமல் எங்கள் ஊரைச் சுற்றி விரிந்திருக்கும் வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
Art : samridhi sharma
மாரி.கிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலை மாவட்டம் ஆடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இங்கு அப்பா மாரிமுத்து, அம்மா ஜெகநாதம்மாள், மனைவி சுகன்யா ஆகியோருடன் வசித்து வருகிறார்.
கனலி, யாவரும், நடுகல் இணைய இதழ்களில் சிறுகதைகள் வெளியிட்டு வருகிறார். “தளம்”சமூக உரையாடல் மையம் வழியாக இலக்கியக் கூட்டங்களும், ஊர்ப் பொதுக் கிணறு புனரமைப்பு இயக்கம் வழியாக மூன்று பொதுக் கிணறுகளை மக்களோடு இணைந்து தூர் வாரி மக்களிடமே ஒப்படைப்பு வேலையும் செய்திருக்கிறார். மேலும், சொந்த ஊரில் குழந்தைகளுக்கான மகிழ்ச்சியான கல்வியை நோக்கி “தும்பட்டான்” சிறார் மாலை நேரப்பள்ளியும் நடத்தி வந்திருக்கிறார். தற்சமயம் the film school லில் படித்து முடித்து சுயாதீன சினிமா எடுக்கும் பணியில் இருக்கிறார். இவருடைய “பிடிமானம்” என்ற முதல் சிறுகதை தொகுப்பு 2025 வருடம் வெளிவந்துள்ளது.








Leave a Reply