சன்டியாதா காப்பியமும் மாண்டே கலாச்சாரமும்
ஆப்பிரிக்கர்களின் வாய்மொழிக் கதைகள் பெருமையைப் பேசுகின்றனவாகவும் இருக்கின்றன. சான்றாக சன்டியாதா காப்பியத்தைச் (Epic of Sundiata) சொல்ல முடியும். வறுமையும் வலியும் எப்போதும் ஒரு சமூகத்திற்கு மட்டுமே உரியதல்ல என்கிற வரலாற்று உண்மையைச் சொல்லும் அந்தக் காப்பியம் மேற்கு ஆப்பிரிக்கர்களுக்கு வாழ்வளிக்கும் நம்பிக்கையாக இருந்து வந்தது. கிரியோ (Griot) என்னும் வாய்மொழி இசைக்கலைஞர்களால் (தமிழ்ப் பாணர்களைப் போன்றவர்கள்) நீண்ட காலம் பாடப்பட்டு வந்த அது பதின்மூன்றாம் நூற்றாண்டில் மாண்டே (Mande) மக்களை ஒன்றிணைத்து (மாண்டே என்பது மாலி, கினி, செனகல், காம்பியா போன்ற நாடுகளில் வாழும் பல மொழியியல், கலாச்சாரக் குழுக்களை – பம்பாரா, டயுலா, சோனின்கே போன்றவர்கள் உட்பட – குறிக்கும் சொல்) மாபெரும் மாலி பேரரசை நிறுவி, முக்கிய வர்த்தகத்தையும் ஆட்சியையும் நிலைநாட்டிய அரசர் சன்டியாதா கெய்தாவைப் பற்றியது.
நடக்கவே முடியாத குழந்தையாகப் பிறந்த சன்டியாதா, பொறாமையையே உருவாகக் கொண்ட மாற்றாந்தாயால் தனது தாய் அவமானப்படுத்தப்பட்ட பிறகு அற்புதம் நிகழ்ந்ததைப் போல அவர் எழுந்து நடக்கத் தொடங்கியது, சூழ்ச்சியாலும் வஞ்சகத்தாலும் அவர் நாடுகடத்தப்பட்டது, ஒரு போர்வீரராகவும் தலைவராகவும் அவர் பெற்ற பயிற்சி, கொடுங்கோல் அரசர் சுமங்குருவுக்கு எதிரான போரில் அவர் பெற்ற வெற்றி ஆகியவை இந்தக் காப்பியத்தின் முக்கிய நிகழ்வுகளாக விவரிக்கப்பட்டு இருக்கின்றன.
சன்டியாதா, தற்போதைய மாலி-கினியா நாடுகளின் எல்லைக்கு அருகிலுள்ள கங்கபா என்ற சிறிய இராச்சியத்தைச் சேர்ந்த மாலிங்கே மக்களின் கெய்ட்டா (Keïta) குலத்தைச் சேர்ந்தவர். அதாவது, மாண்டே பேரினத்திற்குள் அடங்கிய ஒரு குழு மாலிங்கே. அந்தக் குழுவிற்குள் அடங்கிய ஒரு குலம் கெய்ட்டா. சன்டியாதாவின் ஆரம்பகால வாழ்க்கை பற்றி அதிகத் தகவல் இல்லை. மாலிங்கே மக்களின் வாய்மொழிக் கதைகளின் படி, அவர் கங்கபா அரியணைக்கு வாரிசுகளாக இருந்த பன்னிரண்டு அரசச் சகோதரர்களில் ஒருவர். அண்டை நாடான கினியாவின் ஆட்சியாளரான சுமங்குரு, 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கங்கபாவை ஆக்கிரமித்து, சன்டியாதாவின் சகோதரர்கள் அனைவரையும் கொன்றார். சன்டியாதா ஒரு நோயுற்ற, நடக்க இயலாத சிறுவனாக இருந்ததாலும், மரணத்தின் விளிம்பில் இருப்பது போன்ற தோற்றத்தில் இருந்ததாலும் அவர் கொல்லப்படாமல் விடப்பட்டார்.
சன்டியாதா ஒரு காலத்தில் கங்கபாவின் கிராமங்களில் ஒன்றின் தலைவராக இருந்தார் என்று ஒரு நம்பிக்கை உண்டு. அவர் தனிப்பட்ட முறையில் படையை உருவாக்கி, சூசு (Susu) இனக்குழுவின் அரசனான சுமங்குருவை (Sumanguru) கி.பி.1235ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் தோற்கடித்தார். 1240ஆம் ஆண்டில், சன்டியாதா கானா நாட்டின் முந்தைய தலைநகரான கும்பியைக் கைப்பற்றினார். 1240-க்குப் பிறகு அவர் வெளிப்படையாக வேறு எந்தப் படையெடுப்புகளையும் நடத்தவில்லை. ஆனால் தனது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் மீதான பிடியை வலுப்படுத்தினார்.
இந்தக் காப்பியம் தொடர்பான வாய்மொழிக் கதைகள் பிரெஞ்சு உயர்கல்விப் பள்ளியான எக்கோல் வில்லியம் பான்டி (École William Ponty) முயற்சியால் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரெஞ்சு சூடானில் சேகரிக்கப்பட்டன. இன்று புத்தகமாகக் கிடைக்கும் கதை, வாய்மொழி வரலாற்று ஆசிரியரான ஜெலி மமூது கூயாட்டின் சேகரிப்பில் இருந்த வாய்மொழிக் கதையை அடிப்படையாகக் கொண்டது. இதை 1960-ல் ஜிப்ரில் தம்சிர் நயானே பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தார்.
காப்பியம் சொல்லும் கதை
சன்டியாதா காப்பியத்தில் வரும் ஃப்ராகோ மாகன் கெய்கு (Maghan Kon Fatta) என்பவர் மாண்டே இனக்குழுவின் அரசர் ஆவார். அவர் ஒரு நாள் தனது அரசவையில் ஒரு குறிசொல்லியைச் சந்தித்தார். அந்தக் குறிசொல்லி, அரசர் ஃப்ராகோ மாகன் கெய்கு ஒரு அசிங்கமான பெண்ணை மணப்பார். அவள் அவருக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பாள். அவன் ஒரு நாள் வலிமைமிக்க மன்னனாக ஆவான் என்று கணித்துச் சொன்னார். இது அரசர் ஃப்ராகோ மாகன் கெய்குக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஏனெனில் ஏற்கெனவே சஸ்ஸௌமா பெரேட்டே (Sassouma BÈrÈtÈ) என்னும் அழகான பெண்ணை அவர் மணந்திருந்தார். அவளுக்கு டங்கரன் டெளமன் (King Dankaran Touman) என்ற ஒரு மகனும் இருந்தான். அதனால் குறிசொல்லியின் கூற்று அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.
அந்தக் குறிசொல்லியின் வாக்கு பின்னாளில் நிறைவேற ஆரம்பித்தது. எப்படியெனில் டோ இராச்சியத்தைச் சேர்ந்த இரண்டு வேட்டைக்காரர்கள் சோகோலோன் (Sogolon Kedjou) என்ற அழகற்ற, கூன் விழுந்த பெண்ணை அரசரிடம் கொண்டு வந்தபோது, அவர் அந்தக் குறிசொல்லியின் கூற்றை நினைவுகூர்ந்து அவளை மணந்தார். விரைவில் அவள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அவனே தனது குழந்தைப் பருவம் முழுவதும் நடக்க இயலாதவனாக இருந்த சன்டியாதா கெய்ட்டா.
அரசரின் முதல் மனைவியான சஸ்ஸௌமா, சன்டியாதா கெய்ட்டா மீதும் அவனது தாய் சோகோலோன் மீதும் பொறாமை கொண்டாள். சன்டியாதாவின் நடக்க இயலாமைக்காகவும், அவன் தன் தாயிடமிருந்து பெற்ற அழகற்ற தோற்றத்திற்காகவும் சஸ்ஸௌமா அவனைக் கேலி செய்வதை வழக்கமாக்கி இருந்தாள். சன்டியாதா உடல் பலவீனமாக இருந்தபோதிலும், அரசர் இளம் வயதிலேயே அவனுக்கென ஒரு அரசவைப் புலவரை நியமித்துக் கற்பிக்கலானார். இதே காலத்தில், நமான்ஜே (NamandjÈ) என்ற பெண்ணை மூன்றாவதாக மணங்கொண்டார் அரசர். அவளுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.
கி.பி.1224ஆம் ஆண்டு அரசர் ஃப்ராகோ மாகன் கெய்குவின் மரணத்திற்குப் பிறகு குறிசொல்லியின் கூற்றை மதிக்க வேண்டும் என்ற கெய்குவின் விருப்பத்திற்கு மாறாக, அவரது முதல் மனைவியின் மகன் டங்கரன் டெளமன் முடிசூடிக்கொண்டான். இந்த நேரத்தில் கெய்குவின் மூன்றாவது மனைவி நமான்ஜேயிடம் இருந்து அவரது இரண்டாவது மகனைத் தத்தெடுத்திருந்த சன்டியாதாவும் அவனது தாய் சோகோலோனும், புதிய அரசராலும் அவரது தாயாலும் இகழ்ச்சிக்கு ஆளானார்கள். பின்னொரு நாள் சோகோலோனுக்கு ஏற்பட்ட ஓர் அவமானத்திற்குப் பிறகு, சன்டியாதா நூன்ஃபாரி (Nounfairi) என்னும் கொல்லரிடம் ஒரு இரும்புத் தடியைக் கேட்டு வாங்கினான். அந்தத் தடியின் உதவியால் நிமிர்ந்து நடக்க முயன்றபோது அது உடைந்து போனது. ‘ஸ்ரா’ என்று சொல்லப்படக் கூடிய ஆப்பிரிக்க பாவோபாப் மரத்தின் கிளையைப் பயன்படுத்தியபோதுதான் அவனால் நிமிர்ந்து நடக்க முடிந்தது.
வேறொரு பிரதியில், சன்டியாதா தனது தந்தை இறந்த பிறகு நடப்பவனாகவும் அவனது தாய் அவனை நடக்கும்படி கட்டளை இடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சன்டியாதா சிறந்த வேட்டைக்காரனாகச் சொல்லப்பட்டு இருக்கிறான். சஸ்ஸௌமா, அவள் மகன் டங்கரன் டெளமன் ஆகியோரின் வெறுப்பு சன்டியாதாவையும், அவனது தாயையும், தனது அப்பாவின் மூன்றாவது மனைவிக்குப் பிறந்த சகோதரிகளையும் நாடு கடத்தியது என்பதாக அக்கதை முடிகிறது.
மற்றொரு பிரதியில், சன்டியாதாவும் அவனது தாயும் நாடு கடத்தப்பட்டதாக இல்லை. சஸ்ஸௌமாவின் பொறாமையால் தனக்கும் தன் மகனுக்கும் ஆபத்து இருப்பதாகச் சோகோலோன் உணர்ந்து, அவனைப் பாதுகாப்பதற்காக அங்கிருந்து வெளியேறுகிறாள். சஸ்ஸௌமாவும் அவளது மகனும் கோபங்கொள்வார்கள் என்ற பயத்தில், அண்டை நாடுகளின் அரசுகள் சன்டியாதாவுக்கும் அவனது அம்மாவுக்கும் ஆதரவு அளிக்கத் தயங்கின. இந்தக் கடுமையான சூழலில் மேமா என்னும் இனக்குழு மக்கள் ஆதரித்தார்கள் என்பதாக கதை சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து மேமா மக்களோடு வாழ்ந்தபோது, சன்டியாதா ஒரு சிங்கத்தைப் போல வலிமை பெறத் தொடங்கினான். அப்போது மேமா மக்களின் சிறந்த தளபதியான மூசா டூன்காராவுடன் சண்டையிட்டு சன்டியாதா சிறந்த வீரனாகத் தன்னை நிரூபித்துக்கொண்டான். அதனால், அவன் மேமா அரியணைக்கு வாரிசாக ஆக்கப்பட்டான். அதில் மகிழ்ச்சி அடையாத சோகோலோன் தம்முடைய நாட்டுக்கு மன்னராகும் படி அவனது ஊக்குவித்தாள். அதன்படி மாலிக்கு மன்னன் ஆனான் என்பதாக கதை அமைந்திருக்கிறது.
இந்தக் காப்பியத்தில் ‘சன்டியாதா’ என்னும் சொல் வெறுமனே பெயராக மட்டுமில்லை. வரலாற்றின் குறியீட்டுத் தாங்கியாகவும் இருக்கிறது. வீரத் தலைமை, சூழ்ச்சிகளுக்கு மத்தியில் உடல் குறைபாட்டுடன் பிறந்தவன், ஒரு சமூகத்தின் விடுதலை வீரன் என்கிற பொருள் பொதிவோடு இருக்கும் இது தீரமுள்ள ஒருவனது வெற்றிக்கு அவனது உடல் பலவீனம் ஒருபோதும் தடையாக இருக்க முடியாது என்பதை உணர்த்தி வந்தது. மாலி பேரரசை நிறுவி மேற்கு ஆப்பிரிக்க அரசியல் பண்பாட்டு அடித்தளத்தை நிறுவிய வரலாற்று நாயகனான சன்டியாதா பின்னாளில் கறுப்பினத்தவர்கள் இடையே வாழ்வின் மீதான பிடிப்பையும் நம்பிக்கையையும் நீட்டித்துத் தருகிறவனாக ஆனான்.
மாண்டே கலாச்சாரம்
மேற்கு ஆப்பிரிக்கப் பெருங்குடிகளின் மாண்டே கலாச்சாரம் இறுக்கமான நம்பிக்கைகளைக் கொண்டது. அதுவே அவர்களிடையே மதமாகவும் செயல்பட்டது. மாண்டே மதத்தில் உயர்ந்த மனிதரான ந்கேவோ பிரபஞ்சத்தைப் படைத்தவராக அறியப்பட்டார். அவரது அனுமதி இன்றி எதுவும் நடக்காது என்பது மாண்டே மக்களின் அழுத்தமான நம்பிக்கை. குழந்தைப் பிறப்பின் போது கடவுளுக்குப் பலி செலுத்தினார்கள். இளைஞர்களுக்கு நல்வழி காட்டுவதற்காக போரா, சாண்டே என்னும் மந்திரச் சடங்குகள் நிகழ்த்தப்பட்டன. தண்ணீர் ஆன்மாவைத் தூய்மை செய்து ஈடேறும் என்று இறந்தவர்களுக்காகத் தண்ணீர்ச் சடங்குகள் செய்யப்பட்டன. சமூகத் தலைவர்களை நியமிப்பதற்கென்று தனியாகச் சடங்குகள் இருந்தன. சிவப்பு அரிசி திருவிழா அம்மக்களின் கோபத்தைத் தணிப்பதற்கு நிகழ்த்தப்பட்டதாக வழக்காற்றுத் தகவல்கள் குறிப்பிட்டாலும் கறுப்பர்கள் தங்களின் உற்பத்திப் பொருளான சிவப்பு அரிசியில் சமைத்து உண்டு திளைக்கும் அந்தத் திருவிழா அவர்களின் வேளாண் அறிவைப் பறைசாற்றுவதாக இருந்தது.
மாண்டே மக்களிடையே பிரபலமான தனித்துவம் அவர்களின் கதை சொல்லும் வழக்கம். வாழ்வின் அனைத்து நடவடிக்கைகளிலும் சொல்வதற்கென்று ஏராளமான கதைகள் இருந்திருக்கின்றன. அதேபோல சொற்பொழிவுகளும் அடிக்கடி இசையுடன் நிகழ்த்தப்பட்டன. பல குழுக்களின் ஒருங்கிணைந்த இனமானதால் அவர்கள் அனைவருக்கும் சமமான பகிர்ந்தளிப்புகள், நீதி வழங்கல் ஆகியவற்றுக்காக எழுதப்படாத விதி ஒன்று அமலில் இருந்தது. அதற்கு ‘மாண்டேன் சாசனம்’ என்று பெயர். ‘கறுப்பர்கள் மனிதர்கள் இல்லை’ என்ற வெள்ளையர்களின் எண்ணத்தைத் தகர்த்து கறுப்பர்களை உலகில் மேம்பட்ட சிந்தனை வளமை கொண்டவர்கள் என்று உரக்கச் சொல்வதற்கான சான்றாக அமைந்தது அந்தச் சாசனம்.
மாண்டேன் சாசனம் (Manden Cherter)
இந்தச் சாசனம் மாலிப் பேரரசு உருவான போது சன்டியாதா தலைமையில் அறிவிக்கப்பட்ட சமூக அரசியல் சட்ட ஒப்பந்தமாகும். உலகின் மிகப் பழைய மனித உரிமைச் சாசனமாகக் கருதப்படும் இது, பல்வேறு நீதி வரையறைகளை வழங்கியது. மனிதனின் உயிர் புனிதமானது. காரணமின்றிக் கொலை செய்தல் ஆகாது. வன்முறை தவிர்க்கப்பட வேண்டும். கைதிகள், அடிமைகள் முதலியோர் மனிதர்களாக மதிக்கப்பட வேண்டும். குலங்களுக்கு இடையே சண்டைகள் தவிர்க்கப்பட வேண்டும். குழுக்களுக்குள் பரஸ்பர மரியாதை வழங்கப்பட்டுக் கொள்ள வேண்டும் என்பதை விரிவாக விளக்கி இருந்தது.
பெண்களை மதிக்க வேண்டும். தாய்மை வழிபாட்டுக்கு உரியது. குடும்ப அமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும். குடும்பத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட பணி மரியாதைக்கு உரியது. விவசாய நிலங்களைப் பாதுகாக்க வேண்டும். பிறரின் சொத்துகளைக் கொள்ளையிடக் கூடாது. சன்டியாதா என்பவனே தலைமை அரசன். அவனுக்குக் கட்டுப்பட்டு மற்ற இனக்குழு அரசர்கள் தங்கள் பகுதிகளில் சுயாட்சி நடத்திக் கொள்ளலாம். மைய ஆட்சியின் அதிகாரமும் உள்ளாட்சி அதிகாரமும் சமமானவை என்று அந்தச் சாசனம் உரிமைகளை வகுத்திருந்தது. மாண்டே மக்களின் வரலாறுகள் கிரியோக்களின் வாய்மொழிக் கதைகளால் நினைவு கூர்ந்து அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தி வரப்பெற்றதைப் போல மாண்டேன் சாசனமும் கடத்தப்பட்டு வந்தது.
இப்படி அழுத்தமான கலை, இலக்கிய, சிந்தனைச் செழுமை கொண்ட கறுப்பர்களுக்கு, எழுத்துக்களை அறிந்துகொள்ளத் தடை இருந்த பதினெட்டாம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை அவர்களின் கலைமுறைமையாக வாய்மொழியே இருந்தது. அதனால் அவர்கள் எழுதத் தொடங்கிய போது அவர்களின் எழுத்துகளை வெள்ளையர் சந்தேகித்தனர். அடிமைகளுக்கு எப்படிச் சிந்திக்க வரும், எழுத வரும் என்று கேள்வி எழுப்பினர். எங்களுக்குச் சிந்திக்கத் தெரியும் என்பதை வெளிப்படுத்தவும் கறுப்பர்கள் நிறைய எழுதினார்கள். அந்த எழுத்தில் வெள்ளையர்களை நோக்கி, ‘உங்களுக்கு வாசிக்கத் தெரியுமா’ என்ற தொனி இருந்தது.
(நிறம் ஒளிரும்…)
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்புக்கு அருகில் உள்ள அக்கனாபுரத்தைச் சேர்ந்தவர். தற்போது மதுரை மாவட்டம், கருமாத்தூரில் உள்ள அருள் ஆனந்தர் கல்லூரியின் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். நானூறுக்கு மேற்பட்ட சமுதாயம், இலக்கியம், பொருளியல் சார்ந்த கட்டுரைகளை எழுதியுள்ளார். தொல்காப்பியத்தில் பொருளியல் பெறும் இடம், புறனடைக் கோட்பாடு – தொல்காப்பியர் மரபு, புறனடைக் கோட்பாடு – வீரசோழிய மரபு, தமிழ் இலக்கிய வரலாறு (பல புதிய குறிப்புகளுடன் 1970 முதல்…), அவதூறுகளும் புனிதப்படுத்தல்களும் நீர் – நிலம் – சாதி – சாஸ்திரம்’ முதலிய நூல்கள் எழுதியுள்ளார்.








Leave a Reply