Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

இலக்கியத்தில் வேரூன்றிய வங்க சினிமாவும் மலையாள சினிமாவும்

திருக்குமரன் கணேசன்
திருக்குமரன் கணேசன்
October 1, 2025
இலக்கியத்தில் வேரூன்றிய வங்க சினிமாவும் மலையாள சினிமாவும்

இந்திய சினிமா, அதன் பிறப்பிலிருந்து இன்று வரை, உலகின் மிகப்பெரிய சினிமா தயாரிப்பு மையமாக திகழ்கிறது. ஆனால், இந்தச் சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்லது வணிக அடிப்படையில் மட்டுமே வளர்ந்தது என்று சொல்லிவிட முடியாது. இந்தியாவின் வரலாறு, பண்பாடு, அரசியல் சூழல், குறிப்பாக அதன் இலக்கிய மரபு, சினிமாவை உருவாக்கியதில் மிக முக்கிய பங்கு வகித்தது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் தனித்துவமான மொழி, பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அவை அந்தந்த பிராந்திய சினிமாவிலும் பிரதிபலித்துள்ளது. எடுத்துக்காட்டாக, ஹிந்தி சினிமா (Bollywood) பெரும்பாலும் புதினங்கள், நாடகங்கள், பாடல்கள் ஆகியவற்றின் தாக்கத்திலிருந்து வளர்ந்தது. ஆனால் அதைவிட ஆழமாக, வங்க சினிமாவும் மலையாள சினிமாவும் இலக்கியத்தில் வேரூன்றி உருவானவை என்றால் அது மிகையன்று.

வங்க சினிமா பண்பாட்டின் சுவடுகள்

வங்காளம் (Bengal), 19 ஆம் நூற்றாண்டிலிருந்து இந்திய மறுமலர்ச்சியின் மையமாக விளங்குகிறது. இங்கு உருவான கல்வி மற்றும் சமூகச் சீர்திருத்த இயக்கங்கள், புதிய சிந்தனைகளுக்கு வழிவகுத்தன. ரவீந்திரநாத் தாகூர், சரத்சந்திர சட்டோபாத்யாய், பிபூதி பூஷன் பந்தோபாத்யாய போன்ற இலக்கிய மேதைகள், வங்காளத்தின் கலாச்சார அடையாளத்தை உலகளவில் உயர்த்தினர். அவர்களின் படைப்புகள் திரைப்படக் கதைகளாக மாறின. சத்தியஜித் ரே, மிருணாள் சென், ரித்விக் கடக் போன்ற தனித்துவமான இயக்குநர்கள், இந்த இலக்கிய மரபை தங்கள் கலை வெளிப்பாடுகளால் திரையில் உயிர்ப்பித்தனர்.

மலையாள சினிமா வாழ்வின் பிரதிபலிப்பு

கேரளாவின் இலக்கிய மரபும் அதன் சமூக அரசியல் சூழலும், மலையாள சினிமாவின் அடித்தளமாக இருந்தது. வைக்கம் முகமது பஷீர், தகழி சிவசங்கரன் பிள்ளை, எம்.டி. வாசுதேவன் நாயர் போன்ற எழுத்தாளர்கள், சாதாரண மனிதனின் வாழ்க்கை, காதல், வறுமை, போராட்டம் ஆகியவற்றை மிக எளிமையாகவும் உணர்ச்சியோடும் பதிவு செய்தனர். அத்தகைய இலக்கிய ஆற்றல், அடூர் கோபாலகிருஷ்ணன், ஜி.அரவிந்தன், ஷாஜி என்.கருண் போன்ற இயக்குநர்களின் படங்களில் சினிமா மொழியாக மாறியது.

இலக்கியத்திற்கும் திரைக்கலைக்குமான உறவுகள்

இலக்கியம் என்பது மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பு. சினிமா என்பது அந்த வாழ்க்கையை காட்சியாக்கும் கலை பிரதிபலிப்பு. இவ்விரண்டும் இணைந்தபோது, வங்க சினிமாவும் மலையாள சினிமாவும் உலக சினிமா வரலாற்றில் கலையின் உன்னதமான உச்சங்களைத் தொட்டன. அதனால்தான், இந்திய சினிமா பற்றி பேசும்போது இலக்கியத்தில் வேரூன்றிய வங்க சினிமாவும் மலையாள சினிமாவும் தனித்த அடையாளத்தை பெறுகின்றன, கவனப்படுகின்றன.

வங்க சினிமாவின் இலக்கிய வேர்கள்

வங்க சினிமாவை பற்றி பேசும் போது, அதனைப் புரிந்து கொள்ள இலக்கிய வேர்களை ஆய்வு செய்வது மிக அவசியமானது. வரலாற்றில் வங்காளம் இந்திய மறுமலர்ச்சியின் மையமாக இருந்தது. கல்வி, சமூகச் சீர்திருத்தம், இதழியல், இலக்கியம் ஆகிய அனைத்திலும் வங்காளம் முன்னிலை வகித்தது. அந்த இலக்கிய செழிப்பே பின்னர் சினிமா மொழிக்கான அடித்தளமாக அமைந்தது.

1. ரவீந்திரநாத் தாகூரின் இலக்கியமும் காட்சியியலும்

வங்க சினிமாவின் இலக்கிய வேர்களில் முதலிடம் வகிப்பவர் ரவீந்திரநாத் தாகூர். அவரது கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள் அனைத்தும் வங்காள சமுதாயத்தின் ஆன்மாவை வெளிப்படுத்தின. சத்தியஜித் ரே இயக்கிய Charulata (1964), தாகூரின் Nastanirh நாவலை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் படத்தில், புறக்கணிக்கப்பட்ட மனைவியின் உள்ளுணர்வுகள், தனிமை, அவள் விரும்பும் அறிவுலகம் ஆகியவை காட்சி மொழியில் பிரதிபலிக்கப்படுகிறது. Ghare-Baire (The Home and the World, 1984) திரைப்படமும் தாகூரின் நாவலை அடிப்படையாகக் கொண்டது. இதில், தேசியவாத இயக்கத்திற்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே ஏற்படும் முரண்பாடு வெளிப்படுகிறது. இதன் மூலம் அரசியல் தத்துவ சிந்தனைகள் சினிமா வழியாகக் கூறப்படுகின்றன. பின்னாளில் தாகூரின் பல சிறுகதைகள் வங்க திரைப்படங்களாக உருமாறின. அவை சமூகச் சிக்கல்களைப் பதிவு செய்ததோடு, மனிதனின் உள்ளார்ந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தின. இவ்வாறு, தாகூரின் இலக்கியம் சினிமாவுக்கு தத்துவத்தையும், உணர்வையும், கலைமிகு பாணியையும் வழங்கியது.

2. சரத்சந்திர சட்டோபாத்யாய் – சமூக உண்மையின் குரல்

வங்க சினிமாவின் இலக்கிய அடித்தளத்தில் மறக்க முடியாதவர் சரத்சந்திர சட்டோபாத்யாய். அவரது படைப்புகள் பெரும்பாலும் சமூக வாழ்க்கையின் சிக்கல்களையும் காதல் தியாகத்தின் முரண்பாடுகளையும் சித்தரித்தன. தேவதாஸ் (Devdas) நாவல், இந்திய சினிமாவின் வரலாற்றிலேயே மிக அதிக முறை திரைவடிவம் பெற்ற படைப்பாகும். வங்க சினிமாவில் மட்டுமல்லாமல், ஹிந்தி, தமிழ், தெலுங்கு உட்பட பல இந்திய மொழிகளில் பல்வேறு இயக்குநர்களால் உருவாக்கப்பட்டது. அதேபோல் அவரது “Parineeta, Biraj Bahu, Srikanta” போன்ற நாவல்களும் திரைப்படங்களாக மாறின. சரத் சந்திரனின் கதைகள், சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை, அவர்களது சமூகத் துன்பங்களையும் நெஞ்சை உருக்கும் உணர்வுகளையும் பதிவு செய்தன. இதனால், அவரது இலக்கியம் சினிமாவில் மனித நேயம் நிறைந்த திரைக்கதைகளை உருவாக்க வழிவகுத்தது.

3. பிபூதி பூஷன் பந்தோபாத்யாய – நாட்டுப்புற வாழ்க்கையின் கவிஞர்

வங்க சினிமா பற்றி பேசும் போது பிபூதி பூஷன் பந்தோபாத்யாய தவிர்க்க முடியாதவர். அவர் வங்க நாட்டுப்புற வாழ்க்கையை மிக எளிமையாகவும் உண்மையோடும் பதிவு செய்தார். Pather Panchali நாவல் சத்தியஜித் ரே இயக்கிய பதேர் பாஞ்சாலி (1955) திரைப்படமாக மாறி, உலக சினிமாவின் வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றது. “அபு த்ரிலஜி” (Pather Panchali, Aparajito, Apur Sansar) அனைத்தும் பிபுதிபூஷனின் இலக்கியத்தில் இருந்து உருவானவை. கிராமத்து ஏழை குழந்தையின் கனவுகள், தாயின் துயரம், அன்றாட வாழ்க்கையின் அழகு, வறுமை ஆகியவை சினிமாவில் உயிரோட்டம் மிக்க காட்சிகளாக உருமாறின. பிபுதிபூஷனின் இலக்கிய பாணி இயற்கையை சித்தரிக்கும் கவிதை போல் இருந்தது. அதனால் தான் சினிமாவும் அவரது கதைகளில் கவிதை மிகு உண்மையைக் கண்டது.

4. வங்க சினிமாவின் இலக்கிய தனிச்சிறப்பு

வங்க சினிமா, இலக்கியத்தின் மூலமாகவே உருவானது என்று தனித்து கூறலாம். அதற்கு சில முக்கியமான காரணங்கள் உள்ளன. வங்காளத்தில் எழுத்தாளர்கள் மாற்றத்திற்கான சமூக இயக்கங்களில் ஈடுபட்டிருந்தனர். அவர்களின் இலக்கியம் மாற்றத்துக்கான கருவியாக இருந்தது. சினிமாவுக்கு ஆரம்பத்தில் தன்னிச்சையான கதைக்களம் இல்லாதபோது, இலக்கியமே அதன் ஆதாரமாக இருந்தது. வங்க சமூகத்தில் வாசிப்புப் பழக்கம் அதிகமாக இருந்ததால், இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட படங்கள் எளிதில் பார்வையாளர்களை ஈர்த்தன. இதனால், வங்க சினிமா இலக்கியத்தில் வேரூன்றிய சினிமா உறவின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்தது.

வங்க சினிமா இயக்குநர்களும் இலக்கியமும்

வங்க சினிமா என்றால் முதன்மையாக மனதில் வருவது இலக்கியமும் இயக்குநர்களும்தான். இலக்கியங்கள் வங்க சினிமாவிற்கு கதைக் கருவை வழங்க, இயக்குநர்கள் அதனை கலைமிகு காட்சிமொழியாக மாற்றினர். இந்த இரண்டின் சங்கமமே உலக அளவில் வங்க சினிமாவை தனித்துவமிக்க ஒன்றாக மாற்றியது.

1. சத்தியஜித் ரே – இலக்கியத்தை உயிர்ப்பித்த கலைஞன்

சத்தியஜித் ரே வங்க சினிமாவின் பிரதிநிதி மட்டுமல்ல, உலக சினிமாவின் இந்திய சிகரமாகவும் விளங்குகிறார். அவர் தன் படைப்புகளை பெரும்பாலும் இலக்கியத்திலிருந்தே எடுத்துக் கொண்டார். பிபூதிபூஷன் பந்தோபாத்யாயின் பதேர் பாஞ்சாலி, ரே இயக்கத்தில் உருவான படம், வங்க சினிமாவை உலக வரைபடத்தில் கொண்டு சேர்த்தது. கிராமிய நாட்டுப்புற வாழ்க்கையின் எளிமை, வறுமை, மனித உணர்வுகள் அனைத்தும் மிக நேர்த்தியுடன் படமாக்கப்பட்டன. அபு த்ரிலஜி (Pather Panchali, Aparajito, Apur Sansar) முழுவதும் இலக்கியத்தின் ஆழத்தில் வேரூன்றி, காட்சியின் கவிதை மிகு மொழியாக உயர்ந்தது. தாகூரின் படைப்புகள் Charulata, Teen Kanya, Ghare-Baire போன்ற படங்கள் தாகூரின் இலக்கிய சிந்தனைகளின் சினிமா வடிவங்களாகும். பெலு கதைகள் குழந்தைகளுக்கான இலக்கியத்தில் இருந்து எடுத்துக் கொண்ட ரேவின் “Feluda” தொடர், வங்க சினிமாவில் புலனாய்வு கதைக்களத்தின் பிரபலத்துக்கு அடித்தளம் அமைத்தது. சத்தியஜித் ரே இலக்கியத்தை திரையில் உயிர்ப்பித்தவர் என்று கூறலாம். அவர் கதையின் உணர்வுகளை காட்சிகளாக மாற்றும் பாணியில் உலக சினிமாவுக்கே புதிய பாதையைத் திறந்தவர்.

2. ரித்விக் கடக் – இலக்கிய உணர்வின் கவிதைமிகு காட்சியியல்

ரித்விக் கடக் வங்க சினிமாவின் மற்றொரு சிறப்பான முகம். அவரது படைப்புகள் அரசியல் உணர்வும், கவிதைமிகு காட்சியியலும் கலந்தவை. Meghe Dhaka Tara (1960) ஒரு அகதி வாழ்க்கையின் வேதனைகளை சித்தரித்தது. கதை நேரடியாக இலக்கியத்தை அடிப்படையாகக் கொள்ளாவிட்டாலும், வங்க இலக்கிய மரபின் மனிதநேய உணர்வுகளைத் தொடர்ந்து கொண்டது. Subarnarekha (1962) சமூகச் சிக்கல்களையும் தனிப்பட்ட துயரங்களையும் இணைக்கும் பாணி, வங்க எழுத்தாளர்களின் இலக்கிய படைப்புகளை நினைவூட்டியது. கடக் தன் காட்சிகளில் கவிதை மிகு உவமைகளைக் கொண்டு வந்தார். இது வங்க கதை மரபின் அடையாளத்துடன் ஒத்து போனது. அவர் இலக்கியத்தின் ஆன்மாவை சினிமாவில் மொழிபெயர்த்தவர் எனக் கூறலாம்.

3. மிருணாள் சென் – சமூக இலக்கியத்தின் அரசியல் வாசிப்பு

மிருணாள் சென் வங்க சினிமாவில் அரசியல் கலையை உருவாக்கியவர் என்று கூறலாம். அவரது படங்களில் வங்க சமூகத்தின் அரசியல் கலக்கம், ஏழை, பணக்கார வேறுபாடு, நகர,கிராமப்புற முரண்பாடு ஆகியவை இடம்பெற்றன. “Bhuvan Shome (1969)” கதை ஒரு எளிய மனிதனின் வாழ்க்கையை மையமாக கொண்டிருந்தது. இது வங்க எழுத்தாளர்களின் சமூக சித்தரிப்புடன் தொடர்புடையது. “Ek Din Pratidin, Kharij, Akaler Sandhane” போன்ற படங்கள் சமூக இலக்கியத்தின் அரசியல் வாசிப்புகளாகும். அவர் சினிமா வழியாக, இலக்கியத்தில் பதிவான சமூகக் கலக்கம் என்ற உண்மையை காட்சியாக்கினார்.

4. வங்க சினிமாவின் கலை இலக்கிய உறவின் தனித்தன்மை

வங்க சினிமாவை புரிந்து கொள்ள வங்க சினிமாவின் இயக்குநர்கள் இலக்கியத்துடன் கொண்டிருந்த உறவைப் புரிந்து கொள்வது மிக முக்கியமானது. வங்க சினிமாவிற்கான இலக்கிய அடித்தளம்; கதைக்கரு, கதை நாயகர்கள், உணர்வுகள் அனைத்தையும் இலக்கியமே வழங்கியது. இயக்குநர்கள் அதை உயிர்ப்பித்தவர்கள். அவர்கள் கதை சொல்லும் கலை மூலம் அந்த இலக்கியத்தை காட்சி மொழியாக மாற்றினர். வங்க இலக்கியங்கள் அச்சமூகத்தின் சிக்கல்களை வெளிப்படுத்தியது, இயக்குநர்கள் அதனை சினிமா மூலம் வெகு மக்களுக்கு கொண்டு சென்றனர். வங்க இயக்குநர்கள் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு, உலக சினிமா மேடையில் தங்கள் தனித்துவத்தை நிலை நிறுத்தினர். இவ்வாறு, வங்க சினிமா என்பது இயக்குநர்கள் மற்றும் இலக்கியவாதிகள் என்ற உறவின் கலைநயத்தையும் சிந்தனை ஆழத்தையும் இணைத்தது.

மலையாள சினிமாவின் இலக்கிய வேர்கள்

மலையாள சினிமா இந்திய சினிமாவில் தனித்துவமான நிலையைப் பெற்றது. அதன் வேர்கள் பெரும்பாலும் மலையாள இலக்கிய மரபில் ஆழமாகப் பதிந்துள்ளன. 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மலையாள சினிமா சமூகத்தை பிரதிபலிக்கும் ஊடகமாக வளரத் தொடங்கிய போது, இலக்கியத்தின் தாக்கம் அதை வழிநடத்தும் குரலாக இருந்தது.

1. ஆரம்ப காலமும் இலக்கியத்திலிருந்து உருவான கதை பாதையும்

மலையாள சினிமாவின் ஆரம்ப படைப்புகள் பெரும்பாலும் இலக்கிய நாடகங்கள் மற்றும் புதினங்களிலிருந்து வடிவமைக்கப்பட்டன. “Balan” (1938) மலையாளத்தின் முதல் பேசும் படம். குடும்ப வாழ்க்கை, சமூகச் சிக்கல்கள் ஆகியவை வங்க தமிழ் இலக்கிய பாணியின் தாக்கத்துடன் வந்தன. “Nirmala” (1948) முதுகுளம் ராகவன் பிள்ளை (Muthukulam Raghavan Pillai) எழுதிய கதையின் அடிப்படையில், சமூக சீர்திருத்தக் கருத்துகளைக் கொண்டது. “Jeevitha Nouka” (1951) – தகழி சிவசங்கரன் பிள்ளை (Thakazhi Sivasankara Pillai) போன்ற எழுத்தாளர்களின் சிந்தனைகளை ஒட்டியபடி, குடும்ப நாடக பாணியை பிரபலப்படுத்தியது. இந்த ஆரம்ப கால சினிமா இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டதே அல்லாமல், மக்களின் சமூகக் குரலையும் திரையில் கொண்டு வந்தது.

2. பொதுவுடமை இலக்கிய இயக்கத்தின் தாக்கம்

1940–50 களில் கேரளத்தில் சோஷலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் இலக்கிய இயக்கம் வலுவாக இருந்தது. மலையாள எழுத்தாளர்கள் ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வை காத்திரமாக பிரதிபலித்தனர். இதே சிந்தனை மலையாள சினிமாவிலும் வேரூன்றியது. தகழி சிவசங்கரன் பிள்ளையின் செம்மீன் (Chemmeen-1956) என்ற நாவல், Ramu Kariat இயக்கத்தில் 1965 இல் படமாகி, இந்திய அளவில் பாராட்டுகளையும் தேசிய விருதையும் பெற்றது. வைக்கம் முகமது பஷீரின் எளிய நடையும் மனிதநேயக் குரலும் மலையாள சினிமாவில் பல படைப்புகளுக்கு அடித்தளமாய் அமைந்தது. “Bhargavi Nilayam” போன்ற திரைப்படம் அவரது கதையை அடிப்படையாகக் கொண்டது. எம்.டி. வாசுதேவன் நாயர், நவீன மலையாள இலக்கியத்தின் முக்கிய தூண். அவரது கதைகள் Nirmalyam (1973), Oru Vadakkan Veeragatha (1989) போன்ற படங்களில் வெளிப்பட்டன. இலக்கிய இயக்கத்தின் தீவிரமும், சமூகச் சிந்தனையும், மலையாள சினிமாவை யதார்த்த நிலையில் ஒரு கலை வடிவமாக உயர்த்தின.

3. கவிஞர்களும் சினிமா கதை மொழியும்

மலையாள சினிமாவில் பல கவிஞர்களும் எழுத்தாளர்களும் நேரடியாக பங்களித்தனர். வயலார் ராமவர்மா பாடலாசிரியராக, கவிதையின் அழகை சினிமா மொழியுடன் இணைத்தார். ஓ.என்.வி. குருப் அவரது வரிகள் சினிமாவின் இலக்கியத் தரத்தை உயர்த்தியது. இடதுசாரி சிந்தனைக் கொண்ட அவரது இலக்கிய பங்களிப்பு காட்சிமொழியிலும் அதை பிரதிபலித்தது. உரூப் எனப்படும் பருத்தோலி சாலப்புரத்து குட்டிக்கிருஷ்ணன், பு.பாஸ்கரன், இலக்கியத்தில் ஞானபீட விருதுபெற்ற ஜி.சங்கர குருப் ஆகியோர் இலக்கியத்தில் உருவாக்கிய மொழியை சினிமாவின் கதை, பாடல், உரையாடல் எனப் பல வடிவங்களில் கொண்டு வந்தனர். இதனால் மலையாள சினிமா வெறும் காட்சி முறை அல்லாமல், இலக்கியக் கவிதை போல் செறிவான கலை வடிவமாக நிலைபெற்றது.

4. இலக்கியத்தின் தொடர்ச்சியான புதிய தலைமுறை முன்னோடிகள்

1970 களில் மலையாள சினிமாவில் புதிய அலை உருவானது. இதற்குப் பின்னணியிலும் இலக்கிய வேர்களே இருந்தன. அடூர் கோபாலகிருஷ்ணன் சத்தியஜித் ரே போல், கேரள இலக்கிய மரபையும் சமூக உண்மையையும் திரையில் கொண்டுவந்தார். அவரது Kodiyettam (1977), Elippathayam (1981) போன்ற படங்களில் மனித மனவியல் இலக்கிய ஆழத்தில் வெளிப்பட்டது. ஓவியர், கார்டூனிஸ்ட், என பன்முகத் திறன் கொண்ட சிந்தனையாளரான ஜி. அரவிந்தனின் “Kanchana Sita” (1977) இந்திய இதிகாசங்களின் இலக்கிய வாசிப்பில் இருந்து புதிய காட்சி மொழியின் அம்சத்தை உருவாக்கியது. எம்.டி. வாசுதேவன் நாயர் இயக்கிய “Nirmalyam” (1973) இலக்கியத்தின் உண்மையான மொழியை நேரடியாக சினிமாவாக மாற்றியது. இவர்களின் படைப்புகள் மலையாள சினிமாவை உலக சினிமாவின் உயரத்தில் கொண்டு சென்றன.

இலக்கிய சினிமா உறவின் தனித்துவம்

மலையாள சினிமா இலக்கியத்துடன் கொண்டிருந்த உறவு தனித்தன்மையானது. சமூகக் குரல்; இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்ட ஏழை, தொழிலாளர், மீனவர், விவசாயி ஆகியோரின் வாழ்க்கை சினிமாவில் காட்சியாகியது. மனிதநேயம்; பஷீர், தகழி போன்ற எழுத்தாளர்களின் மனித நேய குரல், திரையில் உணர்ச்சிவயப்பட்ட கதை வடிவங்களில் வெளிப்பட்டது. அழகிய மொழி; மலையாள இலக்கியத்தின் கவிதை மிகு மொழி, பாடல்களிலும் உரையாடல்களிலும் சினிமாவுக்குள் புகுந்தது. சமூக சிந்தனை; கம்யூனிசமும் சோஷலிசமும் நிறைந்த இலக்கிய இயக்கங்கள், மலையாள சினிமாவை அரசியல் மற்றும் சமூக கலை வடிவமாக உருவாக்கின. இவ்வாறு, மலையாள சினிமாவின் வேர்கள் இலக்கியத்தில் பதிந்திருந்ததால், அது வெறும் பொழுதுபோக்கு கருவி அல்லாமல், சமூக உண்மைகளை யதார்த்தங்களை சித்தரிக்கும் கலை வடிவமாக உயர்ந்தது.

வங்க சினிமா என்பது இலக்கியத் தாக்கத்தின் பரிணாமம்

வங்க சினிமா இந்திய சினிமாவின் ஆன்மாவாகக் கருதப்படுகிறது. அதன் தனித்துவமான அடையாளம், இலக்கிய மரபுடன் கொண்டிருந்த ஆழமான உறவிலிருந்தே உருவானது. வங்காளம் 19 ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்திய மறுமலர்ச்சியின் மையமாக இருந்து வருவதால். அக்காலத்தில் உருவான நவீன வங்க இலக்கியமும் பின்பு வந்த வங்க சினிமாவுக்கு அடித்தளமாக அமைந்தது.

1. ஆரம்ப கால இலக்கிய மேடையே சினிமாவின் அடித்தளம்

வங்க சினிமாவின் ஆரம்ப காலத்தில், மேடை நாடகங்களும் இலக்கிய சிந்தனைகளும் முக்கிய பங்காற்றின. ஹிராலால் சென் (Hiralal Sen), தீரேந்திர நாத் கங்குலி Dhirendra Nath Ganguly போன்ற முன்னோடி இயக்குநர்கள் உருவாக்கிய படங்கள் பெரும்பாலும் நாடகங்களின் காட்சிப் பிரதிகளாக இருந்தன. பதேர் டாபி (Pather Dabi -1926) போன்ற கதைகள் அரசியல் தடை காரணமாக முழுமையாக திரையிடப்படவில்லை என்றாலும், இலக்கியத்தின் அரசியல் சிந்தனையை சினிமாவில் தோற்றுவிக்க முயற்சித்த சினிமாவாகும். New Theatres (Kolkata, 1930s) பி. என். சிர்கார் (B. N. Sircar) தலைமையில் இலக்கிய நாவல்கள், கவிதைகள், நாடகங்கள் ஆகியவற்றை திரைக்கு மாற்றும் முயற்சிகளுக்கும் புகழ் பெற்றது. ஆரம்ப கால சினிமாவில் வங்க இலக்கியத்தின் பாணி, மொழி, சமூகக் குரல் ஆகியவை முக்கியமான பங்கு வகித்தன.

2. காட்சிக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்

வங்க சினிமா, இலக்கியத்துடன் நேரடியாக இணைந்த முதன்மையான முகம் ரவீந்திரநாத் தாகூர். அவரது சிறுகதைகள் Chokher Bali (1903), Ghare Baire (1916), Char Adhyay (1934) ஆகியவை பின்னாளில் சினிமாவாக உருவெடுத்தது. சத்தியஜித் ரே (Ghare Baire, 1984), ரிதுபர்னோ கோஷ் (Chokher Bali, 2003) போன்ற இயக்குநர்கள் தாகூரின் இலக்கியக் குரலை புதிய காட்சி மொழியாக மாற்றினர். தாகூரின் சிந்தனை என்பது தனிமனித சுதந்திரம், சமூகப் பிணைப்பு, மனிதநேயம் என்று வங்க சினிமாவின் அடையாளமாகவே மாறியது.

3. பிமல் ராய் – இலக்கியத்தின் மெய்யியலை காட்சி மொழியில் வடித்த கலைஞன்

1940-50 களில் பிமல் ராய் உருவாக்கிய படங்கள் வங்க இலக்கிய சிந்தனையை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது. Udayer Pathey (1944) திரைப்படம் வங்க இலக்கிய மரபில் உள்ள சமூக சிந்தனையை வெளிப்படுத்தியது. பின்னர் ஹிந்தி மொழியில் எடுத்த Do Bigha Zamin (1953) – முன்ஷி பிரேம்சந்த் பாணியிலான விவசாய வாழ்க்கையின் உண்மை நிலையை உலகத்திற்கு எடுத்துக் காட்டியது. பிமல் ராயின் பாணி, வங்க இலக்கியத்தின் சமூக யதார்த்தத்தை (social realism) நேரடியாக திரையில் கொண்டு வந்தது.

4.சத்தியஜித் ரே – இலக்கியத்தின் காட்சிமொழி

வங்க சினிமாவின் உச்சம் சத்தியஜித் ரேதான். அவர் தனது முதல் படமாக வங்க இலக்கியத்தைதான் எடுத்துக் கொண்டார். பதேர் பாஞ்சாலி பதேர் பாஞ்சாலி (1955) பிபூதிபூஷன் பந்தோபாத்யாய் எழுதிய நாவலின் திரைவடிவம். இந்த படம் உலக சினிமாவில் வங்க சினிமாவை உயர்த்தியது. தொடர்ந்து Aparajito (1956), Apur Sansar (1959) Apu Trilogy அனைத்தும் இலக்கியத் தூண்களில் இருந்து வடிவானவை. Charulata (1964) தாகூரின் Nastanirh கதையின் திரை வடிவம். Ghare Baire (1984) தாகூரின் அதே பெயர் கொண்ட நாவலின் திரை வடிவம். ரே, இலக்கியத்தின் உளவியல் ஆழத்தையும் சமூக நுணுக்கத்தையும் காட்சியில் மெய்ப்பித்தார். அவர் சினிமாவை காட்சி இலக்கியமாக (visual literature) உயர்த்தியவர்.

5. மற்ற இலக்கிய சினிமா சந்திப்புகள்

வங்க சினிமாவில் பல இயக்குநர்களும் எழுத்தாளர்களும் நேரடியாக இணைந்தனர். மிருணாள் சென், அமலெந்து சக்கரபர்த்தி, மணி சங்கர் முகர்ஜி போன்ற எழுத்தாளர்களின் கதைகளை அடிப்படையாகக் கொண்டு சமூக அரசியல் படங்களை உருவாக்கினார். Bhuvan Shome (1969), Kharij (1982) போன்ற படங்கள் இலக்கியத்தின் சமூக விமர்சனக் குரலை கொண்டன. ரித்விக் கடக் வங்கப் பங்கீடு, அகதி வாழ்க்கை போன்ற இலக்கிய கருக்களை திரையில் கொண்டு வந்தார் (Meghe Dhaka Tara, 1960). ரிதுபர்னோ கோஷ் தாகூர் கதைகளில் இருந்து “Chokher Bali, Noukadubi” போன்ற படங்களை உருவாக்கினார். இவ்வாறு வங்க சினிமாவின் எல்லா பரிணாமங்களும் இலக்கிய வேர்களோடு பின்னிப் பிணைந்திருந்தன.

6. கலை இலக்கிய உறவின் தனிச்சிறப்பு

வங்க சினிமா இலக்கியத்தின் தாக்கத்தை பலவிதங்களில் வெளிப்படுத்தியது.
நாவல் – திரை சந்திப்பு – பிபூதிபூஷன், ஆஷாபூர்ணா தேவி, பங்கிம் சந்திர சட்டர்ஜி போன்றோரின் படைப்புகள் சினிமாவாக உயிர்த்தன.
சமூகக் குரல், இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்ட வறுமை, பங்கீடு, சுதந்திரப் போராட்டம், சமூக நீதியின் தேடல் அனைத்தும் சினிமாவின் மையமாகின.

மனித நேயம், வங்க இலக்கியத்தின் ஆழ்ந்த உணர்ச்சியும் உளவியல் சிந்தனையும் திரையில் தெளிவாக பிரதிபலித்தது.
உலகளாவிய அடையாளம் – சத்தியஜித் ரே மூலம் வங்க சினிமா, உலக இலக்கியத்துக்கு இணையான கலை வடிவமாக உயர்ந்தது.
இவ்வாறு, வங்க சினிமாவின் பரிணாம வளர்ச்சி இலக்கியத்தின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. அது வெறும் திரை மொழியல்ல, ஒரு இலக்கியப் பாரம்பரியத்தின் காட்சியுருவமாகும்.

மலையாள சினிமாவில் இலக்கியத் தாக்கமும் பரிணாமமும்

மலையாள சினிமா, இந்திய சினிமாவின் மிகச் செறிந்த இலக்கியம் சார்ந்ததொரு மரபாகும். வங்க சினிமாவைப் போலவே, மலையாள சினிமாவும் தனது அடையாளத்தையும் ஆழத்தையும் பெரும்பாலும் இலக்கிய வேர்களில் இருந்து பெற்றது. கேரளாவின் சமூக அரசியல் மறுமலர்ச்சி, நவீன இலக்கியப் புலம் பெயர்ச்சி, மொழியின் தனித்துவம் ஆகியவை சினிமாவின் காட்சி மொழியில் காத்திரமாக பிரதிபலித்தன.

1. ஆரம்பகால மலையாள சினிமாவும் இலக்கியத்தின் தொடக்கமும்

மலையாளத்தின் ஆரம்ப கால சினிமா (1930கள்–1950கள்) பெரும்பாலும் புராணக் கதைகளிலும் நாடக வடிவத்திலும் இருந்தது. ஆனால் 1950 களில் இருந்து, இலக்கிய நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள் சினிமாவுக்குள் வந்தன. Neelakkuyil (1954) – இராமு கரியத் மற்றும் பு.பாஸ்கரன் இயக்கிய இந்த படம், மலையாற்றூர் ராமகிருஷ்ணன் எழுதிய கதையின் பாதிப்பிலிருந்து உருவானது. இது சமூக உண்மை நிலை கொண்ட மலையாள சினிமாவின் பிறப்பாக கருதப்படுகிறது. Randidangazhi (1958) – தகழி சிவசங்கரன் பிள்ளை எழுதிய நாவலின் அடிப்படையில். விவசாயிகள், நிலச்சுவான்தார்கள் இழைத்த சமூக அநீதி ஆகியவற்றை வெளிப்படுத்தியது. ஆரம்பத்திலேயே, இலக்கியம் மலையாள சினிமாவுக்கு நேர்மையான சமூக குரலை கொடுத்தது.

2. தகழி சிவசங்கரன் பிள்ளை – நாவல் முதல் சினிமா வரை

மலையாள இலக்கியத்தில் முக்கியமானவர் தகழி சிவசங்கரன் பிள்ளை அவரது நாவல்கள் சினிமாவிற்கு உயிர் கொடுத்தன. “Chemmeen (1965)” அவரது புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இராமு கரியத் இயக்கிய படம். இந்த படம் தேசிய விருது பெற்றதோடு, கேரள மீனவ வாழ்க்கையின் உளவியல், காதல், மரபு ஆகியவற்றை காட்சிப்படுத்தியது. “Randidangazhi, Kayar” போன்ற படைப்புகளும் கேரள கிராமப்புற வாழ்க்கையை உண்மை நிலையாக சினிமாவுக்கு வழங்கின. தகழியின் இலக்கிய பாணி நாட்டுப்புற யதார்த்தவாதம், சமூக சமத்துவம், காதல், துயரம் என மலையாள சினிமாவின் அடையாளமாயின.

3. வைக்கம் முகமது பஷீர் – சிறுகதையின் திரைவடிவம்

வைக்கம் முகமது பஷீர் “Beypore Sultan” என அழைக்கப்பட்ட இவர், மலையாள சிறுகதை உலகின் முன்னோடி. அவரது படைப்புகள் Ntuppuppakkoranendarnnu, Balyakalasakhi போன்றவை திரை வடிவம் பெற்றன. Balyakalasakhi (2014) – பஷீரின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான படம், அவரது உணர்ச்சி பூர்வமான மொழியை காட்சியில் உயிர்த்தது. பஷீர், தனது கதைகளில் மனிதநேயம், சாதி, மத பாகுபாடு, காதல், நகைச்சுவை ஆகியவற்றை வலியுறுத்தினார். அவை சினிமாவின் கலை மொழியோடு எளிதில் இணைந்தன.

4. எம்.டி. வாசுதேவ நாயர் – இலக்கியத்திலிருந்து திரைக்கதை வரை

எம்.டி. வாசுதேவ நாயர் மலையாள சினிமாவின் முக்கியமான இலக்கியக் குரல். நாவலாசிரியராகவும் சிறுகதை எழுத்தாளராகவும் இருந்தவர், தானே திரைக்கதை எழுதி சினிமாவுக்குள் வந்தார். Nirmalyam (1973) – எம்.டி இயக்கிய முதல் படம், அவரது கதையை அடிப்படையாகக் கொண்டது. இந்த படம் தேசிய விருது பெற்றது. Oru Vadakkan Veeragatha (1989) கேரளாவின் பல்லவிப் புராணத்தை மீட்டுருவாக்கி எழுதிய சினிமா. எம்.டி. வாசுதேவ நாயரின் கதைகள் (Manju, Randamoozham) கேரள மக்களின் உளவியல், சமூகச் சிக்கல்கள், வரலாற்றுப் பார்வை ஆகியவற்றைச் சித்தரித்தன. அவரது இலக்கிய பாணி, உளவியல் நுணுக்கம், சோக சாயல், கால இடக் கோட்பாடு என மலையாள சினிமாவை உலகளாவிய அளவில் உயர்த்தியது.

5. ஜி. அரவிந்தன் – கலை இலக்கியத்தின் திரைவடிவம்

ஜி. அரவிந்தன் மலையாள சினிமாவை ஒரு அறிவியல் கலை மேடையாக மாற்றினார். அவரது படங்கள் பலவும் இலக்கிய கற்பனாவாத அடிப்படையில் அமைந்தவை. Kanchana Sita (1977) – வால்மீகி இராமாயணத்தின் உத்ரகாண்ட (Uttarakanda) பகுதியை அடிப்படையாகக் கொண்டது. Thampu (1978), Esthappan (1979) போன்ற படங்கள் கவிதை போன்று அமைந்த காட்சிகள். அவரது திரை பாணி; குறியீடு, கலை, இலக்கியம், தத்துவம் என மலையாள சினிமாவுக்கு தனித்துவமான அடையாளம் கொடுத்தது.

6. அழியா நிலை பெற்ற இலக்கியமும் சினிமாவும்

மலையாள சினிமாவின் தனிச்சிறப்பு
நாவல்–சிறுகதை மையம் – தகழி, பஷீர் ,எம்.டி போன்றோரின் படைப்புகள் நேரடியாக சினிமாவாக வந்தன.
இலக்கிய எழுத்தாளர்கள் திரைக்கதை ஆசிரியர்களாக மாறினர். எம்.டி. வாசுதேவ நாயர், பத்மராஜன், லோகிதாஸ் போன்றவர்கள் இலக்கியம் மற்றும் சினிமாவை ஒரே நேரத்தில் கட்டமைத்தனர்.

சமூக யதார்த்தவாதம் – சாதி, வறுமை, காதல், புராண மறுபார்வை இவை அனைத்தும் இலக்கியத்தில் இருந்தபடி சினிமாவிலும் பிரதிபலித்தன.
உலகளாவிய அங்கீகாரம் – அடூர் கோபாலகிருஷ்ணன், ஷாஜி என். கருண் போன்ற இயக்குநர்களும் இலக்கியக் கருக்களை உலகத் திரையுலகுக்கு எடுத்துச் சென்றனர்.
இவ்வாறு மலையாள சினிமா இலக்கியத்தின் ஆழத்தில் வேரூன்றிய ஒரு மரபாக உள்ளது. அது கேரள சமூகத்தின் உண்மை, புராணம், காதல், துயரம், மனிதநேயம் ஆகியவற்றை இலக்கியத்தின் பாங்கில் காட்சிப்படுத்தியது.
வங்க சினிமாவும் மலையாள சினிமாவும் ஒப்பீட்டுப் பார்வை
இந்திய சினிமாவில் வங்க சினிமாவும் (Bengali Cinema) மலையாள சினிமாவும் (Malayalam Cinema) தனித்துவமான அடையாளங்களைக் கொண்டிருப்பவை. இரண்டுமே இலக்கியத்தில் வேரூன்றிய மரபுகளாக விளங்கினாலும், அவற்றின் கலாச்சாரப் பின்னணி, சமூக நோக்கம், காட்சி மொழி ஆகியவற்றில் சில வேறுபாடுகளும் ஆழமான ஒற்றுமைகளும் உள்ளன.

1. வரலாற்றுப் பின்னணி – மறுமலர்ச்சியும் சமூக சீர்திருத்தமும்

வங்க சினிமா; 19 ஆம் நூற்றாண்டின் வங்காள மறுமலர்ச்சி (Bengal Renaissance), ராம் மோகன் ராய், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் போன்ற சிந்தனையாளர்கள், பின்னர் ரவீந்திரநாத் தாகூர், சரத்சந்திர சட்டோபாத்யாய் போன்ற இலக்கியச் சிகரங்கள்தான் வங்க சினிமாவுக்கு அடித்தளம். கலை, கவிதை, சிந்தனை, தேசிய உணர்வு ஆகியவை வங்க சினிமாவின் பாணியை ஆழமாகப் பாதித்தன.
மலையாள சினிமா; கேரளாவின் சமூக சீர்திருத்த இயக்கங்கள் குறிப்பாக ஸ்ரீ நாராயண குரு, ஐயன்காளி, சஹோதர சஹஜீவன் இயக்கம் மற்றும் இடதுசாரி அரசியல் கலாச்சாரம் மலையாள சினிமாவுக்கு அடிப்படை. அதனால், அதன் கதைகள் அதிகம் சாதி, வர்க்கம், சமூக சமத்துவம் என்பவற்றை மையமாகக் கொண்டன. வங்க சினிமா அழகியல் மற்றும் தத்துவ சிந்தனையில் வேரூன்றியதெனில், மலையாள சினிமா சமூக யதார்த்தவாதம், அரசியல் உணர்வுகளின் அடிப்படையில் வேரூன்றியது.

2. இலக்கியத் தாக்கம் – நாவலும் சிறுகதையும்

வங்க சினிமா; பெரும்பாலும் நாவலை மையமான கொண்டிருக்கும். ரவீந்திரநாத் தாகூரின் Ghare Baire, Charulata போன்ற நாவல்கள்; சரத்சந்திர சட்டோபாத்யாய் Devdas போன்றவை சினிமாவாகி புகழ்பெற்றது. நாவல் அமைப்பின் சமூகக் கதைகள் வங்க சினிமாவை ஆழமாக பாதித்தது. மலையாள சினிமா; நாவலும் சிறுகதையும் இரண்டும் சமமாக தாக்கம் செலுத்தின.தகழியின் Chemmeen, வாசுதேவனின் Randamoozham, பஷீரின் சிறுகதைகள் போன்றவை. கேரள எழுத்தாளர்கள், தாங்களே திரைக்கதையை எழுதியதால், மலையாள சினிமா நேரடியாக இலக்கிய மொழியோடு இணைந்தது. வங்க சினிமா பெரும்பாலும் நாவலை மகாகாவியம் போன்று கருதியது. மலையாள சினிமா சிறுகதை என்பது மனித உளவியலை வெளிப்படுத்தும் வடிவம் என்று எண்ணியது. இத்தகைய பாதிப்புகளே இரு மொழி திரையிலும் பிரதிபலித்தது.

3. இயக்குநர்களின் பாணியும் யதார்த்தவாத கலைநயமும்

வங்க சினிமா இயக்குநர்கள்; சத்யஜித் ரே – கவிதை போன்ற காட்சிகள், நுணுக்கமான சமூக உளவியல், இலக்கிய சீர்மை. ரித்விக் கடக் – குறியீடு, இசை, அரசியல் உணர்வு. மிருணாள் சென் – அரசியல் விமர்சனம். மலையாள சினிமா இயக்குநர்கள்; ஜி. அரவிந்தன் – தத்துவம், புராணக் கவிதை. அடூர் கோபாலகிருஷ்ணன் – சமூக உளவியல், யதார்த்தவாதம். ஷாஜி என். கருண் – காட்சிப் பாவனை, வாழ்க்கைச் சுழற்சி. வங்க சினிமா – திரைக்கலை உலகுக்கு வழி காட்டியது. மலையாள சினிமா – சமூக யதார்த்தத்தை பிரதிபலித்தது இவ்வாறுதான் இவ்விரு மாநில படங்களும் தனித்த அடையாளத்தைப் பெற்றது.

4. சமத்துவம் பேசும் சமூக அக்கறையும் தேசிய உணர்வும்

வங்க சினிமா; சுதந்திரப் போராட்டம், காலனிய எதிர்ப்பு, தனிநபர் சுதந்திரம், சமூக நவீனத்துவம் போன்றவை முக்கிய கருப்பொருள். உதாரணம்: Charulata, Ghare Baire – பெண்களின் விடுதலை, தேசிய உணர்வு. மலையாள சினிமா; சாதிய ஒடுக்குமுறை, வர்க்க பாகுபாடு, தொழிலாளர் வாழ்க்கை, பெண்களின் சமத்துவம் ஆகியவை கருப்பொருள். உதாரணம்: Chemmeen – மீனவ வாழ்க்கை மற்றும் சமூக நெறிகள். Randidangazhi – நிலச்சுவான்தார்களின் சுரண்டல். குறிப்பாக வங்க சினிமாவில் தேசிய உணர்வும் அழகியல் சிந்தனையும் மேலோங்கும். மலையாள சினிமாவில் சமூக நீதியும் பொதுவுடமை அரசியல் உணர்வும் சிந்தனையும் மேலோங்கும்.

5. கலை பண்பிலும் மனிதநேயத்திலும் உலகளாவிய அங்கீகாரம்

வங்க சினிமா; சத்யஜித் ரே உலகளவில் திரையுலகின் ஆகப்பெரும் கலைஞன். கான்ஸ், வெனிஸ், பெர்லின் விழாக்களில் அங்கீகாரம் பெற்றவர். வங்க சினிமாவை “Indian Parallel Cinema” என்றே உலகம் அறிந்தது. அதற்கு அடிப்படைக் காரணமானவர் ரே. மலையாள சினிமா; அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன், ஷாஜி என். கருண் ஆகியோர் உலகளவில் திரையுலகில் பெரும் மதிப்பும் அங்கீகாரமும் பெற்றனர். மலையாள சினிமா சமூக யதார்த்தவாத மனிதநேய சினிமாவாக உலகம் அறிந்தது. அதற்கு காரணமானவர்களும் இவர்களே.

6. வங்க சினிமாவும் மலையாள சினிமாவும் ஒற்றுமையும் வேறுபாடும்

இரண்டுமே இலக்கிய வேர்களில் உருவான சினிமாக்கள். இரண்டுமே சமூக மனிதநேய அக்கறை கொண்டவை. ஆனால், வங்க சினிமா அழகியலும் தத்துவ சிந்தனையும் கொண்டிருப்பவை. மலையாள சினிமா யதார்த்தவாத சமத்துவ சிந்தனை கொண்டவை. வங்க சினிமா கவிதை போல காட்சிகளை கட்டமைத்தது. மலையாள சினிமா ஒரு வாழ்க்கை போலவே திரைக்கலையையும் வடிவமைத்து. இவ்வாறு, வங்க சினிமாவும் மலையாள சினிமாவும் இலக்கியத்தில் வேரூன்றிய கலை மரபுகளாக, இந்திய சினிமாவின் இரு முக்கிய தூண்களாக விளங்குகின்றன.
இலக்கியத்தில் வேரூன்றிய வங்க மற்றும் மலையாள சினிமாக்களின் பங்களிப்பும் பன்முகப் பார்வையும்

1. இலக்கியம் என்பது சினிமாவின் அடித்தளம்

இலக்கியம் என்பது சினிமாவின் தாய் மொழி எனலாம். வங்க சினிமாவும் மலையாள சினிமாவும் இதற்கு சிறந்த சான்றுகள். வங்கத்தில் நாவல்களும் கவிதைகளும் சினிமாவை உருவாக்கின. கேரளாவில் சிறுகதைகளும் சமூக நாவல்களும் யதார்த்த வாழ்வும் சினிமாவின் மையமாக இருந்தன. இலக்கியத்தில் வேரூன்றியதால், இவ்விரு சினிமாக்களும் வெறும் பொழுதுபோக்கு கருவி அல்லாது, சமூகச் சிந்தனையின் மாற்று ஊடகமாக விளங்கின.

2. மனிதநேயமே மையக் கருவாக

இரண்டு சினிமாக்களிலும் மையமாக நிற்பது மனிதநேயம்தான். வங்க சினிமா என்பது மனிதனின் உளவியல், தனிமை, சுதந்திரம் ஆகியவற்றை நுணுக்கமாக எடுத்துக் காட்டியது. உதாரணம்: Charulata – தனிமைப்பட்ட பெண்ணின் உணர்வுகள். மலையாள சினிமா – மனிதனின் சமூக நிலை, பொருளாதாரச் சிக்கல், சாதிய வர்க்க சுமைகள் ஆகியவற்றை காத்திரமாகவும் கவனமாகவும் வெளிப்படுத்தியது. உதாரணம்: Randidangazhi, Chemmeen. இதனால், இவ்விரு மாநில படைப்புகளும் மனிதநேயம் என்ற அடித்தளத்தில் ஒன்றிணைகின்றன.

3. சமூகப் பொறுப்பும் கலைக்குமிகு சிந்தனையும்

வங்க சினிமா கலைப்பண்பில் உலக அங்கீகாரம் பெற்றது; ஆனால் அதன் அடிப்படை சமூகப் பொறுப்புதான். சுதந்திரம், பெண்களின் நிலை, நவீனத்துவம் இவைதான் அதன் கருப்பொருள். மலையாள சினிமா சமூக யதார்த்தவாதத்தில் ஆழ்ந்திருந்தது; ஆனால் அது வெறும் விமர்சனம் அல்ல. மாற்றத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டிருந்தது. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும், சமத்துவத்தை நிலைநாட்டவும் குரல் கொடுத்தது. இரண்டும் கலை, சமூகப் பொறுப்பு, மனிதநேயம் ஆகியவற்றின் இணைப்பாக இருந்தன.

4. உள்ளூரில் வேரூன்றி உலகளாவிய கிளை பரப்பிய சினிமாக்கள்

வங்க சினிமா, உலக சினிமாவின் கலைத் தரத்தில் பங்காற்றியது. சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி உலகம் முழுவதும் இந்திய சினிமாவை அறிமுகப்படுத்தியது. மலையாள சினிமா உலக சினிமாவின் சமூக யதார்த்தத்தில் பங்காற்றியது. அடூர் கோபாலகிருஷ்ணனின் எலிபத்தாயம் உலக மேடையில் ஒரு மனிதனின் தனிமை என்ற கருப்பொருளை வலுவாக முன்வைத்தது. உள்ளூர் கதைகளை உலகளாவிய சிந்தனையுடன் இணைத்தது. இதுவே இரண்டு சினிமாக்களின் மிகப் பெரிய பங்களிப்பும் வெற்றியுமாகும். இந்திய சினிமா உலக அளவில் பாலிவுட் (Bollywood) மூலம் மட்டும் அறியப்படவில்லை. அதற்கு அடையாளம் கொடுத்தது வங்க சினிமா, மலையாள சினிமா போன்ற மாற்று சினிமா (Parallel Cinema) இயக்கங்களால்தான். வங்க சினிமா இந்திய சினிமாவின் கலைநயம். மலையாள சினிமா இந்திய சினிமாவின் சமூக உண்மை. இவை இல்லையெனில், இந்திய சினிமா வெறும் வணிகத் திரைப்படங்களாக மட்டுமே உலகம் அறிந்திருக்கும்.

5. பன்முகப் பார்வையும் சமகால நீட்சியும்

இன்றும் வங்க சினிமாவும் மலையாள சினிமாவும் தங்களின் அடையாளத்தைத் தக்க வைத்துள்ளன. வங்க சினிமா தொடர்ந்து கலை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. மலையாள சினிமா சமூக யதார்த்தவாதத்தை நவீன பாணியுடன் தொடர்கிறது. Netflix, OTT போன்ற திரை வெளியீட்டு தளங்களில் இன்று மலையாள சினிமா உலக பார்வையாளர்களை கவர்கிறது. அதேபோல், வங்க சினிமா இன்னும் இலக்கிய சினிமா (literary cinema) என்ற அடையாளத்தில் நிலைத்து நிற்கிறது.

இலக்கியம் என்பது சினிமாவின் உயிர் இரண்டு மாறுபட்ட மண்ணின் சினிமாக்களும் இலக்கிய வேர்களால் உயிர்ப்பூண்டவை. மனிதநேய அடித்தளம் இவ்விரு படைப்புலகின் ஆன்மாவாக திகழ்கிறது. சமூகப் பொறுப்பு என்பது கலை இயக்கத்திற்கான சுகம் மட்டுமல்ல, மாற்றத்திற்கான சக்தியுமாக இருக்கின்றன. உலக சினிமாவில் வங்க சினிமா கலைப்பண்பிலும், மலையாள சினிமா சமூக யதார்த்தவாதத்திலும் இந்தியாவை உலக அரங்கில் புகழ்பெற வைக்கின்றன. ஆகவே, இலக்கியத்தில் வேரூன்றிய வங்க சினிமாவும் மலையாள சினிமாவும் இந்திய சினிமாவின் இரு கண்கள் எனலாம். ஒன்று கலைப்பார்வையைத் திறக்கிறது, மற்றொன்று சமூகப் பார்வையைத் திறக்கிறது. இவையிரண்டும் இணைந்துதான் இந்திய சினிமா உலக அரங்கில் பெருமையுடன் நிலைத்திருக்கிறது.


 

திருக்குமரன் கணேசன்
திருக்குமரன் கணேசன்

திருக்குமரன் கணேசன் ( பி.1984)

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இவர், தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் அருகே திருலோக்கி என்னும் சிற்றூரில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

முந்தைய படைப்புகள்; ‘நிலவெறிக்கும் இரவுகளில்’, ‘கறி விருந்தும் கவுளி வெற்றிலையும்’, ‘இரண்டாம் ஏவாள்’, ‘தாகத்தோடு அலையும் நதி’ , ‘பூனைகளின் மீசை’. 2022-ஆம் ஆண்டு ‘நோஷன் பிரஸ்’ நடத்திய தேசிய அளவிலான சிறுகதைப் போட்டியில் பங்கேற்று முதல் பரிசும் ‘இந்தியாவின் அடுத்த மாபெரும் எழுத்தாளர்’ என்ற விருதையும் பெற்றவர். காலச்சுவடு பதிப்பகத்தில் வெளிவந்த ‘கறி விருந்தும் கவுளி வெற்றிலையும்’ நூலை முன்வைத்து, 2023 ஆம் ஆண்டிற்கான “ஸ்பாரோ” இலக்கிய விருதையும் பெற்றிருக்கிறார்.

இரண்டு ஆவணப் படங்களை இயக்கியிருக்கும் இவர். இதுவரை நான்கு திரைக்கதைகளை எழுதியிருக்கிறார். திரைப்பட இயக்கத்தை இலக்காகக் கொண்டு எதார்த்த மற்றும் மாற்று சினிமா படைப்பாக்க முயற்சியில் தீவிரமாக இயங்கி வருகிறார்.

Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : யோகதாரா

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (4)
  • கதை (10)
  • கவிதை (14)
  • கவிதை (80)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (4)
  • கதை (10)
  • கவிதை (14)
  • கவிதை (80)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top