என்னதான் நவீனத்துவம் வாய்ந்த இயந்திர சாதனங்களின் அடிப்படையில் இயங்கும் போக்குவரத்து வாகனங்கள் நகரில் இயங்கினாலும் மனிதனின் நேரடி உழைப்பின் பேரில் இயங்கக்கூடியவை இன்னும் தன் இருப்பை இழக்கவில்லை என்பதை நாம் நேரடியாகவே கண்டு வருகிறோம். மனிதர்கள் பயணிப்பதற்கு மட்டுமின்றிப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கும் நான்கு அல்லது மூன்று சக்கர சைக்கிள் ரிக்ஷாக்களும், மினி பாடி வண்டி எனப்படும் மீன் பாடி வண்டிகளும் நகரச் சாலைகளில் இன்னமும் பறந்துகொண்டுதான் இருக்கின்றன. இதன் துவக்கம் என்பது மாறுபட்ட வடிவத்தில் குறைந்தது 300 ஆண்டுகளுக்கு மேலாகவே இருக்கக்கூடும்.
லண்டனிலிருந்து வெளியிடப்படும் ஜான் மர்ரே கையேட்டில் மதராஸில் போக்குவரத்துக்கான வாகனங்கள் குறிப்பிடப்பட்டு அதற்கான வாடகை விவரங்களும் தரப்படுகின்றன. 1879ல் வெளியிடப்பட்ட மர்ரே கையேட்டில் கை ரிக் ஷாக்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. ஸவுத் இந்தியன் ரெயில்வே கம்பெனியின் இல்லஸ்டிரேட்டட் கைட் எனப்படும் வழிகாட்டிப் புத்தகத்தில் கூட நகரத்தின் சாலை வழிப் போக்குவரத்து என்ற பிரிவில் ஹாக்னி கேரேஜ், மாட்டு வண்டி, குதிரை வண்டி ஆகியவை மட்டுமே குறிப்பிடப்படுகிறது. மனிதன் கையால் இழுத்துச் செல்லப்படும் கை ரிக் ஷா பற்றிய தகவல் ஏதுமில்லை. இத்தனைக்கும் பரிணாம வளர்ச்சியில் கை ரிக் ஷாவுக்கு அடுத்த கட்டத்தில்தான், மிருகங்கள் இழுக்கக்கூடிய வாகனங்கள் வந்திருக்க வேண்டும் என்றாலும் இவை பற்றி போதுமான தகவல்கள் ஏதுமில்லை.
1911ல்தான் மதராஸ் நகரத்தில் மனித மிருக உழைப்பில் இயங்கக்கூடிய போக்குவரத்துச் சாதனங்கள் பற்றிய சட்டமியற்றப்பட்டிருக்கிறது. 1911ம் வருஷத்திய மதராஸ் ஹாக்னி கேரேஜ் ஆக்ட் V இத்தகைய வண்டிகளை முறைப்படுத்தியிருக்கிறது. காவல் துறை ஆணையாளரிடம் ஆண்டுதோறும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி வண்டியின் விவரம், ஏற்றிச் செல்லக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை பதிவு செய்து கொண்டு, பதிவெண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பின்னாளில் இயந்திரத்தால் இயங்கக்கூடிய மோட்டார் வாகனங்கள் நகரத்திற்கு வந்தாகி விட்டது என்பதை 1923ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசின் தகவல் கையேட்டில் உள்ள பல்வேறு விளம்பரங்கள் மூலம் அறிய முடிகிறது. தென்னிந்தியாவிற்கும் நிஜாம் பகுதிகளுக்கும் ஃபோர்ட் கார்களை மவுண்ட் ரோடில் உள்ள ஓக்ஸ் அண்ட் கம்பெனி லிட் இறக்குமதி செய்து வந்திருக்கிறார்கள். செகந்திரபாத்திலும் உதகமண்டலத்திலும் கிளைகளைக் கொண்டிருக்கக்கூடிய சிம்ஸன் அண்ட் கம்பெனி சன்பீம், ரிலே, ஸ்டுடிபேக்கர், ஷெவர்லே ஆகிய கார்களை நியாயமான விலையில் விற்பனை செய்து வந்திருக்கின்றார்கள். எண் 188 மவுண்ட் ரோடில் உள்ள தி எலிபின்ஸ்டோன் கம்பெனி சிட்ரான், ரெனால்ட்ஸ் ஆகிய கார்களுக்கு மட்டுமின்றி பிஎஸ்ஏ சைக்கிள், பிஎஸ்ஏ மோட்டார் சைக்கிள், வால்ஸ்பார் எனாமல் மற்றும் வார்னிஷ், ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் கிராமபோன் ஆகியவற்றுக்கும் முகவர்களாக இருந்திருக்கின்றனர். எண் 2/11 மவுண்ட் ரோடில் உள்ள உல்செலி மோட்டர்ஸ் லிட் நிறுவனம் ஏழு, பத்து, பதினான்கு, பதினைந்து, இருபது எனும் ஐந்து மாடல்களில் யு ஒல்செலி ரக கார்களை விற்பனை செய்து வந்திருக்கின்றன. இந்நிறுவனங்கள் பொதுப் பயணத்துக்கான பஸ் போன்ற வாகனங்களை விற்பனை செய்யவில்லை என்பதும் பின்னரே இவை நடைமுறைக்கு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய மோட்டார் வாகனங்களுக்கான 1914ம் வருடத்திய சட்டத்தின்படி 1923ல் மதராஸ் மோட்டார் வாகன விதிகளும், 1921ல் மதராஸ் வாடகை கார் விதிகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. காவல் துறை ஆணையாளரே வாகனங்களைப் பதிவு செய்பவராகவும், இவற்றை ஓட்டுவதற்கான உரிமம் வழங்குபவராகவும் இருந்திருக்கிறார்.
மூணரை குதிரைச் சக்திக்குட்பட்ட மோட்டார் சைக்கிளுக்கு ரூ.4ம், அதற்கு மேற்பட்ட சக்தியைக் கொண்டதும் பக்கவாட்டில் இருக்கைகள் பொருத்தப்பட்டிருக்கும் இதே வாகனத்திற்கு ரூ.8ம், கார்களுக்கு ரூ.16ம், கனரக வாகனங்களுக்கு ரூ.32ம், பதிவுக் கட்டணமாக இருந்திருக்கிறது. பதிவெண் பலகைகள் பொருத்தப்படுவது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. ஓட்டுநர் உரிமம் பெற்றிட ரூ.5ம், புதுப்பிக்க ரூ.3ம் நிர்ணயிக்கப்பட்டிந்ததோடன்றி, இந்த உரிமம் இந்தியாவெங்கிலும் செல்லத்தக்கது என்ற அறிவிப்பும் காணப்படுகிறது.
வாடகை கார்களுக்கு மீட்டர் பொருத்துவதோடு, “வண்டி வாடகைக்கு” என்ற பலகை பொருத்தப்பட வேண்டும் என்பதை விதிகள் உணர்த்துகின்றன. குறைந்தபட்சக் கட்டணம் என்பது ரூ.1-0-0 ஆகவும் வாடகை காலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை முதல் மைலுக்கு ரூ.0-10-0 ஆகவும் இரவு பத்து மணிக்கு மேல் காலை ஆறு மணி வரை ரூ. 0-12-0 ஆகவும் அடுத்தடுத்த 1/5 மைலுக்கு ரூ. 0-2-0 ஆகவும் இருந்திருக்கிறது. 100 பவுண்ட் வரை கட்டணம் ஏதுமின்றிப் பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும். காத்திருப்புக் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டு இருந்திருக்கிறது. (12 பைசா = 1 அணா , 16 அணா = 1ரூபாய் என்பதை அறிக)
ஏற்கெனவே கூறியதைப் போன்று மதராஸ் ஹாக்னி கேரேஜ் சட்டத்திற்கிணங்க சக்கரத்தைக் கொண்டுள்ள எந்த ஒரு வாகனமும் மனிதன் அல்லது குதிரை, மாடு அல்லது வேறு எந்த மிருகங்களினால் இழுத்தோ, தள்ளிச் செல்லப்பட்டோ எவருக்கேனும் பயணத்திற்குப் பயன்படுத்தப்பட்டாலோ அல்லது பயண தூரத்திற்குத் தக்கவாறு மணிக்கணக்கிலோ நாள் கணக்கிலோ வாடகைக்கு அமர்த்தப்பட்டாலோ அது ஹாக்னி கேரேஜ் என்று பொருள்படும்.
மதராஸ் அரசாங்கத்தின் அரசு ஆணை எண் 552 நாள் 10 ஜூன் 1921 இந்த ஹாக்னி கேரேஜ் வாகனத்திற்கான பயணக் கட்டணத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. கட்டணப் பட்டியல், மதராஸ் நகரத்திற்குட்பட்ட காத்திருப்பு நிலையங்களுக்கிடையிலான தூரப் பட்டியல் ஆகியவை விற்பனைக்குள்ளதாகவும் மவுண்ட் ரோட்டில் உள்ள அரசு அச்சகத்தில் நாலணா விலையில் இது கிடைக்கும் என்ற உபரி அறிவிப்பும் ஆண்டுப் புத்தகத்தில் காணப்படுகிறது.
முதலில் இந்த ஹாக்னி கேரேஜ்களுக்கான உரிமக் கட்டண விவரத்தைப் பார்க்கலாம்.
ஆறுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு உரிமம் வழங்கப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குதிரைகள் பூட்டப்பட்டு இழுத்துச் செல்லப்படும் ஒவ்வொரு நான்கு சக்கர வாகனத்திற்கும் ரூ.3-0-0.
இரண்டு குதிரைகளால் பூட்டப்பட்ட மற்றைய ஒவ்வொரு நான்கு சக்கர வாகனத்திற்கும் ரூ.2-0-0
ஒற்றைக் குதிரையினாலோ அல்லது ஒற்றை மாட்டினாலோ இழுக்கப்படும் ஒவ்வொரு நான்கு சக்கர வாகனத்திற்கும் ரூ.1-0-0
ஒற்றைக் குதிரையால் இழுக்கப்படும் ஒவ்வொரு இரண்டு சக்கர வாகனத்திற்கும் ரூ.0-8-0
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாடுகளினால் இழுக்கப்படும் இரண்டு சக்கர வாகனத்திற்கும் ரூ0-4-0
ஒவ்வொரு ரிக் ஷா, தள்ளு வண்டி அல்லது மனிதனால் இழுத்தோ அல்லது தள்ளிச் செல்லகூடிய வாகனத்திற்குரூ0-4-0
இந்த விவரங்களின்படி சாலையில் செல்லக்கூடிய மனித அல்லது மிருக சக்தியினால் செல்லக்கூடிய ஒவ்வொருவிதமான வாகனத்தையும் முறைப்படுத்தப்படக்கூடிய முயற்சி தொடங்கிவிட்டதை நாம் அறிய முடிகிறது.
இவ்வாறே கட்டண விகிதமும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
எல்லாவிதமான வாகனத்திற்கும் முதல் ஒரு மணிநேரத்திற்கு ஒரு கட்டணமும், கூடுதலான ஒவ்வொரு மணி நேரத்திற்கு வேறு கட்டணமும் தவிர ஒரு முறைப் பயணத்திற்கு எடுத்துச் செல்கையில் முதல் மைல் தொலைவிற்கு ஒரு கட்டணமும், அடுத்தடுத்த மைல்களுக்கு வேறு கட்டணமும் நிர்ணயம் செய்திருப்பதைப் பட்டியல் வெளிப்படுத்துகிறது.
இதன்படி இரட்டைக் குதிரை வண்டிக்கு முதல் மணிநேரத்துக்கு ரூ.3-0-0, இதே ரிக் ஷாவாக இருப்பின் ரூ.0-6-0 என்பதைப் பட்டியல் உணர்த்துகிறது. தவிர வேகமும், காத்திருப்புக் கட்டணமும் கூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரட்டைக் குதிரை வண்டிக்கு மணிக்கு ஆறு மைலாகவும் இதே ரிக் ஷாவாக இருப்பின் மூன்று மைலாகவும் இருக்க வேண்டும் என்பதோடு காத்திருப்புக் கட்டணம் இரட்டைக் குதிரை வண்டிக்கு கால் மணி நேரத்துக்கு ரூ.0-8-0 என்றும் ரிக் ஷாவிற்கு ரூ.0-2-0 என்றும் இருந்துள்ளது.
இந்த வண்டிகளில் 20 பவுண்ட் வரை சாமான்களைக் கூடுதல் கட்டணமின்றி எடுத்துச் செல்ல முடியும்.
பின்னாளில் இந்த வாகன விதிகள் படிப்படியாக மாறியதோடு வாகனங்களுக்கும் ஓட்டுநர்களுக்கும் உரிமம் வழங்குவது புதுப்பிப்பது போன்றவற்றுக்குத் தனியொரு அமைப்பும் உருவானது.
உப்பு முதல் ஜாகுவார் வரை அனைத்திலும் தன் தடத்தைக் கொண்டுள்ள இந்தியாவின் மிகப்பெரும் பன்னாட்டு நிறுவனத்தின் குட்டியானைகள் பவனிவரத் துவங்கியதும் சென்ற நூற்றாண்டின் இறுதியில் சென்னப்பட்டணத்தில் அவற்றுக்கு வழிவிடும் வகையில் மீன்பாடிகளுக்குத் தடைவிதித்ததைப் போலன்றி, நகரத் தெருக்களில் கார் ஓடத் துவங்கியதும் கை ரிக் ஷா அல்லது ஜட்கா வண்டிகளை அகற்றிட முயற்சிகள் இல்லையென்பதோடு அவற்றை முறைப்படுத்தும் முயற்சிகள் சென்ற நூற்றாண்டிலேயே துவங்கியது என்பது அறியத்தக்கதாகும்.
image : thehindu.com








Leave a Reply