நகரவாசி
காரணமின்றி அவமானப்படுத்தப்படும்போது
தங்களை அவமானப்படுத்தியவர்களுக்காக வருந்துங்கள்
உங்களின் இருப்பு அவரைத் துன்பப்படுத்தியிருக்கலாம்
தன்னைச் சரியென்று என்னும் ஒரு அப்பாவிக்காக
வருத்தப்படுவது அன்றி வேறென்ன செய்ய முடியும் நம்மால்
சாலையில் விரைந்து செல்லும் பாதசாரியை
முட்டிச் செல்லும் யுவதிமேல் என்றைக்காவது கோபம் வரும்யெனில்
நீங்கள் நேற்று நன்றாக உறங்கவில்லை எனப் பொருள்.
ஊர்ந்து செல்லும் வாகன நெரிசலில் தொடர்ந்து ஒலியெழுப்பும் ஓட்டுநர்
நமக்கான கடிதத்தினை மறுத்துச் செல்லும் தபால்காரனின் வெறிச்செயல்
நம்முறை வரும்போது தீர்ந்துபோகும் வாய்ப்புகள்
(சுண்டல், தேநீர், பாயசம், சிக்கன் துண்டு)
நீண்டநாள் காத்துக் கிடக்கும் உத்தரவுகள்
வேண்டுமென்றே அவதூறு பரப்பும் மேலதிகாரி
எது நடந்தாலும் அவர் கட்சித் தலைவனால்தான் நடந்தது
என மார்தட்டும் சகபயணி
நம்மால் எதுவும் செய்யவியலாது என நம்பிக்கொண்டிருக்கும் சகதர்மினி
பால்யத்தை நினைவுறுத்தி நம்மைப் பரவசப்படுத்தும் பழைய நண்பன்
எத்தனையோ செயல்களில் நமக்கு எந்தப் பங்கும் இல்லையென்றபோதும்
நம்மை வைத்து விளையாடும் யாவருக்கும்
நாம் எதுவும் செய்யவியலாத போது
தெருவில் விளையாடும் சிறுவனுக்குப்
பந்து பொறுக்கிப் போடுவதினும் சிறந்த செயல் ஏதுமில்லை.
உதிர்ந்த இலைகள் வரலாறு தேடுவதில்லை
மரத்தின் தேவை நிழலன்றி வேறென்ன
காற்றின் திசைக்கேற்ப ஆடுகிறது
நிழல்.
ஞானசேகரம்
மஞ்சள் பூத்த ஆவாரம் செடிகளைப் பார்க்கமுடிவதில்லை நகரின் தெருக்களில்
நடக்கும் போது ஒட்டிக்கொள்ளும்
நாயுருவி முட்கள் இல்லையென்றபோதும்
வேகமாய்ச் செல்லமுடிவதில்லை
இச்சமனற்ற சாலைகளில்
இன்டர்காம் தொலைபேசி ஒலிக்கையில்
திடுக்கிட்டுப் பதைக்கிறது மனம்
மணிக்கட்டுகளில் சுழன்று கொண்டிருக்கும்
கடிகார முட்களாய் யாருடைய கட்டுப்பாடுமின்றி
வட்டமிட்டுக்கொண்டிருப்பது
மனமின்றி வேறென்ன
இன்பத்தமிழ் ஏறிய மனிதர்களின்
நெருக்கடியில் கசங்கிக் கிடக்கிறது காலம்
கைபேசியில் எதையோ கண்டு சிரித்து
நம்மைக் கடக்கும் ஒவ்வொருவரும்
தனக்கான உலகில் வாழ்ந்துகொண்டிருக்க
பின்தொடர்ந்துவரும் நிழலுக்கு
என்ன கனவிருக்க முடியும்
பூத்துக் குலுங்கும் ஒவ்வொரு மலருக்கும்
அதனதன் வாசம்.
அழிக்க மறந்த எண்கள்
அழிக்க மறுத்த எண்கள்
இன்னும் பல உள்ளன என் கைபேசியில்
நடுக்கத்துடனே கடந்துசெல்கின்றேன்
ஒவ்வொரு தேடலிலும்
தகவலின் பொருட்டு அவர்கள்
சொல்லிச் சென்றவை செய்திகளாய்
விலாக்களில் வலிகளாய் எஞ்சியிருப்பது
தற்செயலானதெனத் தவிர்ப்பதற்கில்லை
நன்றியோடு விடைபெற்றபோதும்
மனத்தாபங்களின்
காலங்கள் மிளிரும் அழைக்கும் எண்களில்
துர்சொப்பனங்களாய் உறக்கம் கெடுக்கும்
இறந்தவனே தன் மரணத்தைச்
சேதியாய்த் தெரிவிக்கும் போது
எப்படி எதிர்கொள்வது
மினுங்கும் ஒளியில் ஒளிரும் இருள்
உறங்கும் போது காண்பதுதான்
உண்மையான முகம்
புன்முறுவலோடு உறங்கும் மனிதர்களின்
உறவு புனிதமானது
மதிய வேளை பணிகளுக்கிடையில் சில நொடிகள்
கண்ணயர்ந்து மன்னிப்புக் கோரும்
நண்பனின் முகம்
காலையில் நம்மீது உதிர்ந்த பூவை நினைவூட்டும்
பாரிஜாதம் வேண்டி உடல் தொலைத்த அருணகிரியின் அழகிய முகத்தை
எரிக்கும் முன் ஏன் பார்க்க மறந்தான் அந்தக் கயவன்
உறங்கும் முகத்தில் குழந்தை நம்மோடு
உரையாடும் போது கிட்டும் ஆனந்தம்
உலகைக் கடுகாக்கிப் பல்லிடுக்கில் சிக்க வைக்கும்
நெறிபடும் விநாடியில் நொறுங்கும் அவைதான்
பிறிதொரு வேளையில்
பிரமாண்டமாகிக் குரல் நசுக்கும்.
உறங்கும் அழகில்
உலகம் சுருங்கும்
உறக்கம் அவிழ
உலகம் விரியும்
மனிதம் விரிய
உறக்கம் பயில்வோம்
ஏமாற்றுவதற்குத்தான் அறிவு வேண்டும்
காப்பற்றுவதற்கு அன்பு மட்டும் போதும்
வேரின் நியாயம் விளைவிப்பது மட்டுமே
களைபற்றிய கவலை அதற்கேது
ஊரும் நீரில் உப்பு என்பது
தாகம் தீர்க்க கலக்கப்பட்ட வரம்
நீ
பிரபஞ்ச அடுக்கின் ஏழாம் வினை
கரைக்கக் கரைக்கத் துளிர்க்கும் நிறம்
அதில் உனது நிறம் என்ன?
பராசரம்
ஸ்ரீராமச்சந்திரனின்
விரல் வளையைத் தேடிச்சென்ற
அனுமனுக்குத் தெரியும்
எத்தனையாவது பிறவியிது என்று
காலத்தின் இரகசியம் காக்கும்
இராமனுக்கும் இது புரியும்
அதிரும் வட்டங்கள் எதிரொளிப்பது
ஒரு வாழ்வின் வட்டத்தை
அதனருகில் சத்தமிடுமொரு தவளை
மட்டத்தில் மலர்ந்திருக்குமொரு குவளை
உணவைத் தேடி
வாழ்வையிழக்கும் ஒரு மீன்
வேடிக்கை பார்க்கும் உழவன்
காது கிழிய
ஒலியெழுப்பும் மணியோசை
பூஜைக்கு நேரமானதை
நினைவுப்படுத்துகிறது
கடக்க வேண்டிய தூரத்தைக்
கவனச் சிதறலில் தவறவிடாதே
இரவும் பகலும்
பாம்பின் இரு நுனி
வாயிலிருந்து
அதன் வாலை அகற்றிவிடாதே
முடிவிலியாக மாறிப்போவாய்
Art : Răzvan








Leave a Reply