“இது குரூரமான வீடாக இருக்கிறதே.”
அவள் என்னை வீட்டுக் கதவை நோக்கித் தள்ளினாள். வேறு வழி எங்களுக்கு இருந்ததா? இல்லை. இரண்டு ஏழை மாணவிகளுக்கு, அறையில் சமைத்துச் சாப்பிட ஓர் அடுப்பை வைத்துக்கொள்ளும் சுதந்திரத்தை, இதைவிடக் குறைந்த விலையில் வழங்கும் வேறு எந்த விடுதியும் அருகில் கிடைக்கவில்லை. அடுப்பு வைத்துக் கொள்வதால் தீ விபத்துகளை ஏற்படுத்தக் கூடாது என்று வீட்டின் உரிமையாளர் தொலைபேசியில் எச்சரித்திருந்தார். கிருமி நாசினியின் வாசனையுடன் கூடிய அந்தப் பழமையான வீட்டுப்படிகள் வழியாக நாங்கள் ஏறினோம்.
வீட்டின் உரிமையாளர் ஒரு தடிமனான வயதான பெண்மணி. காக்கையின் இறக்கையைவிட மிகவும் கருமையான தலைச்சவுரி முடியை அணிந்திருந்தார். மங்கிய ஜப்பானியப் பட்டால் செய்த இரவு உடையணிந்திருந்தார்; நுனிகளில் உடைந்த, சிவப்பு நகப்பூச்சுப் பூசப்பட்ட வளைந்த நகங்களும் வைத்திருந்தார். அவர் ஒரு சிறிய சுருட்டைப் பற்ற வைத்துக்கொண்டார்.
“நீங்கள் மருத்துவப் படிப்பு படிக்கிறீர்களா?” நான் நின்றுகொண்டிருந்த திசையை நோக்கிப் புகையை ஊதிவிட்டு அவர் கேட்டார்.
“நான் சட்டம் படிக்கிறேன். அவள் மருத்துவம் படிக்கிறாள்.”
அந்தப் பெண்மணி எங்களை அலட்சியமாகப் பார்த்தார். அவர் பெருமூச்சு விட்டபோது வேறு எதையோ நினைத்துக் கொண்டிருந்திருக்க வேண்டும், அதனால் நான் அவரிடமிருந்து பார்வையைத் திருப்பிக் கொண்டேன். அந்தச் சிறிய வரவேற்பறை இருட்டாகவும், பொருந்தாத பழைய மரச்சாமான்களாலும் நிரம்பியிருந்தது. இருக்கையில் ஓட்டைகளுடன் கூடிய பிரம்பு சோஃபாவின் மீது, பழைய துணிகளைக் கொண்டு செய்யப்பட்டதைப் போன்று இரண்டு திண்டுகள் முதுகு சாய்ப்பதற்கு இருந்தன; அவற்றில் கண்ணாடி மணிகளால் புள்ளிகள் வைத்ததைப் போன்று பூத்தையல் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
“நான் உங்களது அறையைக் காட்டுகிறேன்; அது மாடியில் உள்ளது” என்று இருமல் கலந்த குரலில் அவர் சொன்னார்.
என் உறவினள் திரும்பிப் பார்த்தாள்:
“எலும்புகள் கொண்ட பெட்டியா?”
அந்தப் பெண்மணி பதில் சொல்லவில்லை; படுக்கையறைக்குச் செல்லும் குறுகிய சுழல் மாடிப்படிகளில் ஏறுவதில் அவர் கவனம் செலுத்தினார். அறைக்கு வந்ததும் விளக்கை எரிய விட்டார். அந்த அறை மிகவும் சிறியதாக இருந்தது. கூரை மிகவும் செங்குத்தாகச் சாய்ந்திருந்ததால் நாங்கள் ஏறத்தாழத் தவழ்ந்து செல்ல வேண்டியிருந்தது. இரண்டு படுக்கைகள், இரண்டு அலமாரிகள் மற்றும் தங்க நிறத்தில் வண்ணம் பூசப்பட்ட ஒரு பிரம்பு நாற்காலி ஆகியன அங்கு இருந்தன. கூரை, கிட்டத்தட்டத் தரையைத் தொடும் மூலையில், ஒரு சிறிய பெட்டி பிளாஸ்டிக்கால் மூடப்பட்டிருந்தது. என் உறவினள் தன் பையைத் தரையில் போட்டுவிட்டு, முழங்காலிட்டு, கயிற்றுக் கைப்பிடியைப் பிடித்து அந்தப் பெட்டியை வெளியே இழுத்தாள்; பிளாஸ்டிக் மூடியைத் திறந்தாள்; திறந்ததும் வியப்பில் ஆழ்ந்ததுபோலத் தோன்றினாள்.
“எவ்வளவு சிறிய எலும்புகள்! இவை ஒரு குழந்தையின் எலும்புகளா?”
“அவை வயது வந்தவருடைய எலும்புகள் என்றுதான் அவன் சொன்னான். ஒரு குள்ள மனிதனுடையவை.”
“குள்ள மனிதனுடையதா? அது சரிதான், இந்த எலும்புகள் ஏற்கெனவே நன்கு வளர்ச்சியடைந்திருப்பதை நான் பார்க்க முடிகிறது… ஓ, என்னவொரு அற்புதம்! குள்ள மனிதர்களின் எலும்புக்கூடுகள் மிகவும் அரிதானவை. அதோடு, அவை எவ்வளவு சுத்தமாக இருக்கின்றன, பாருங்கள்” என்று என் உறவினள் வியந்தாள்.
அவள் சிறிய, சுண்ணாம்பு போன்ற வெள்ளை மண்டை ஓட்டைத் தன் விரல் நுனியால் பிடித்துத் தூக்கினாள்.
“அந்தச் சிறிய பற்கள் அனைத்தும் எவ்வளவு கச்சிதமாயிருக்கின்றன!”
“நான் எல்லாவற்றையும் குப்பையில் தூக்கி எறிந்துவிடலாம் என்றிருந்தேன். ஆனால், உனக்கு ஆர்வம் இருந்தால், நீ இதை வைத்துக்கொள்ளலாம். குளியலறை அடுத்த அறையில் இருக்கிறது. உங்களது பயன்பாட்டுக்கு மட்டுமே அந்தக் குளியலறை; என்னுடைய குளியலறை கீழே இருக்கிறது. சுடுநீர்க் குளியல் வசதியும் உண்டு. தொலைபேசியும் இருக்கிறது. காலை ஏழு முதல் ஒன்பது வரை காபி அருந்திக் கொள்ளலாம். தெர்மோஸ் குடுவையைச் சமையலறை மேசையில் தயார் செய்து வைத்துவிடுவேன். பயன்படுத்திய பிறகு குடுவையை இறுக்கமாக மூடிவிடுங்கள்” என்று அவர் தன் தலையைச் சொறிந்தபடியே பரிந்துரைத்தார். தலைச்சவுரி சற்றே அசைந்தது. அவர் இறுதியாகச் சுருட்டுப் புகையை வெளியே ஊதினார். “வீட்டுக் கதவைத் திறந்து வைக்காதீர்கள்; திறந்து வைத்தீர்கள் என்றால் என் பூனை வெளியே ஓடிவிடும்.”
அவர் படிக்கட்டுகளில் இறங்கிச் செல்லும்போது ஒலித்த அவரது செருப்பின் சத்தத்தையும், சளியுடன் கூடிய அவரது இருமலையும் கேட்டபடி நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்தோம். நான் என் பெட்டியைத் திறந்து உள்ளேயிருந்த பொருள்களைக் காலி செய்தேன். ஒரு கம்பித் தொங்கலில் என் கசங்கிய மேலாடையைத் தொங்கவிட்டேன்; அதைத் தளர்ந்திருந்த திரைச்சீலைகளின் இடுக்கில் செருகினேன்; ‘கிராஸ்மேனின்’ படத்தைக் காகித நாடாவால் சுவரில் ஒட்டினேன்; எனது கரடி பொம்மையைத் தலையணையின் மீது உட்கார வைத்தேன். என் அத்தை மகள் நாற்காலியில் ஏறி, நடு உச்சியில் ஒற்றைக் கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த மங்கலான குமிழ்விளக்கைக் கழற்றிவிட்டு, அதற்குப் பதிலாக அவள் பையிலிருந்து எடுத்த இருநூறு வாட் குமிழ்விளக்கைப் பொருத்துவதைப் பார்த்தேன். அறை மிகவும் பிரகாசமாக மாறியது. ஆனால், இப்போது படுக்கைத் துணிகள் அவ்வளவு வெண்மையாக இல்லை என்பதைக் காண முடிந்தது; பெட்டியிலிருந்து அவள் எடுத்த சிறிய கால் எலும்புதான் வெள்ளையாக இருந்தது. அவள் அதை ஆராய்ந்தாள். ஒரு முள்ளெலும்பை எடுத்து, அதிலிருந்த சிறிய வளையத் துளையின் வழியாகப் பார்த்தாள். முட்டைகளை ஒரு அட்டையில் அடுக்கிக் வைப்பது போன்ற அதீதக் கவனத்துடன் அவற்றை எடுத்து வைத்தாள்.
“ஒரு குள்ள மனிதன். இது மிகவும் அரிதானதென்று உனக்குத் தெரியுமா? இதில் எந்த எலும்பும் காணாமல் போயிருக்காது என்றே நினைக்கிறேன். கட்டுப்போடும் கட்டுக்களை நான் கொண்டு வருகிறேன். வார இறுதிக்குள் அதை ஒன்றாகச் சேர்க்க ஆரம்பிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.”
நாங்கள் மத்திமீன் அடைத்துவைத்த ஒரு தகர டின்னைத் திறந்து ரொட்டியுடன் சாப்பிட்டோம். என் உறவினளிடம் எப்போதுமே ஒரு தகரடின் கைவசம் இருக்கும். அவள் விடியற்காலை வரை படித்துவிட்டு, பிறகு உணவைத் தயாரிப்பது வழக்கம். அவள் ரொட்டியை உண்டு முடித்ததும், ஒரு பொதியிலிருந்த ‘மரியா பிஸ்கட்டு’களைத் திறந்தாள்.
“அந்த வாசனை எங்கிருந்து வருகிறது?” என்று முகர்ந்தபடியே நான் கேட்டேன். எலும்புகள் இருந்த பெட்டி வைத்த இடத்துக்குச் சென்று, திரும்பி வந்து, தரையை முகர்ந்து பார்த்தேன்.
“சற்றே கருகிய வாசனை. உனக்கு வரவில்லையா?”
“அது பூசணம் பிடித்ததன் வாசம். வீடு முழுவதும் அப்படித்தான் நாற்றம் வருகிறது” என்று அவள் சொன்னாள். பிறகு அவள் அந்தப் பெட்டியைப் படுக்கையின் அடியில் தள்ளினாள்.
எனது கனவில், பொன்னிற முடி கொண்ட, வண்ணப்பட்டையிட்ட கம்பளி மேலாடை அணிந்து, நடு வகிடு எடுத்த தலைமுடி கொண்ட, சிகரெட் புகைக்கும் ஒரு குள்ள மனிதன் தோன்றினான். அவன் அறைக்குள் நுழைந்து, என் உறவுக்காரியின் படுக்கையில் அமர்ந்து, கால்களைக் குறுக்காகப் போட்டு, அவள் தூங்குவதைப் பார்த்தபடி மிகவும் இறுக்கமான முகத்துடன் நின்றான். ‘அறையில் ஒரு குள்ள மனிதன் இருக்கிறான்!’ என்று சத்தமாக அலற வேண்டும் என்று நினைத்தேன்; ஆனால் அலறுவதற்கு முன்பே விழித்துக்கொண்டேன். விளக்கு இன்னும் எரிந்து கொண்டிருந்தது. என் உறவினள் இன்னும் உடையணிந்துகொண்டு, தரையில் முழங்காலிட்டு, தரையில் ஒரு குறிப்பிட்ட புள்ளியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அங்கே என்ன செய்கிறாய்?” என்று நான் கேட்டேன்.
“இந்த எறும்புகள். அவை திடீரென, ஒரு குழுவாகத் தோன்றின. எவ்வளவு அழுத்தமானவை பார்!”
“ஆயிரக்கணக்கானவை இருக்கின்றன; நான் இத்தனை எறும்புகளைப் பார்த்ததில்லை. மேலும், திரும்பிச் செல்ல வழி இல்லை, ஒரே ஒரு வழிதான் என்று நான் விசித்திரமாக நினைத்தேன்.”
“ஒரே ஒரு வழிதான்.”
அவளது படுக்கையில் குள்ள மனிதன் அமர்ந்திருந்ததைப் பற்றிய என் கனவை நான் அவளிடம் சொன்னேன்.
“அது படுக்கைக்கு அடியில் இருக்கிறது,” என்று என் உறவினள் சொல்லி அந்தச் சிறிய பெட்டியை வெளியே இழுத்தாள்; பிளாஸ்டிக் மூடியை அகற்றினாள்.
“கருப்பு எறும்புகள்! எரிசாராயப் பாட்டிலைக் கொடு.”
“அந்த எலும்புகளில் ஏதோ மிச்சம் இருந்திருக்க வேண்டும், அதை எறும்புகள் கண்டுபிடித்துவிட்டன; எறும்புகள் எல்லாவற்றையும் கண்டுபிடித்துவிடும். நானாக இருந்தால், இதை வெளியே எடுத்துச் சென்று போட்டு விடுவேன். உன்போலச் சேமித்து வைத்திருக்க மாட்டேன்.”
“ஆனால் எலும்புகள் முற்றிலும் சுத்தமாக இருக்கின்றன என்று உன்னிடம் சொன்னேனே! ஒரு துணுக்குக் குருத்தெலும்புகூட இல்லை; அவை கறையின்றி இருக்கின்றன. இந்தக் கொள்ளைக்கார எறும்புகள் இங்கே என்ன தோண்டுகிறார்கள் என்று தெரியவில்லை.”
அவள் அந்த எரிசாராயத்தைப் பெட்டி முழுவதும் தாராளமாகத் தெளித்தாள். பிறகு அவள் தன் காலணிகளை அணிந்து, ஒரு கயிற்றில் நடப்பவளைப் போல, எறும்புப் பாதையில் ஒரு காலுக்கு முன்னால் ஒரு காலை வைத்து உறுதியாக நடந்தாள்; அவள் இரண்டு முறை முன்னும் பின்னுமாகச் சென்றாள். அவள் தனது சிகரெட்டை அணைத்தாள். ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டாள். அந்தச் சிறிய எலும்புப் பெட்டியை வெறித்துப் பார்த்தாள்.
“இது விசித்திரமாக இருக்கிறது! மிகவும் விசித்திரமாக இருக்கிறது.”
“என்ன?”
“மண்டை ஓட்டை நான் குவியலின் மேல் வைத்தது எனக்கு நினைவிருக்கிறது. அது உருண்டு போகாமல் இருக்க, அதைத் தோள்பட்டை எலும்புகளைக் கொண்டு தாங்கி வைத்ததும் கூட எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் இப்போது அது பெட்டியின் தரையில், ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு தோள்பட்டை எலும்புடன் கிடக்கிறது. நீ அதைத் தொட்டாயா?”
“கடவுளே, காப்பாற்று! எலும்புகளைப் பார்த்தாலே எனக்கு அருவருப்பு! குள்ள மனிதர்களின் எலும்புகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம், இன்னும் அருவருப்பு.”
அவள் பெட்டியின் மேல் பிளாஸ்டிக்கால் மூடினாள்; தன் காலால் அதைப் படுக்கைக்குக் கீழே தள்ளிவிட்டு, அடுப்பை மேசைக்குத் தூக்கிச் சென்றாள். அவளுக்குத் தேநீர் அருந்தும் நேரமாகிவிட்டது. தரையில், செத்துப்போன எறும்புகளின் வரிசை இப்போது சுருங்கும் ஒரு கருப்பு ரிப்பனாக இருந்தது. அந்தப் படுகொலையிலிருந்து தப்பித்த ஒரு சிறிய எறும்பு என் காலுக்கு அருகில் கடந்து சென்றது. அதைக் நசுக்கப் போகையில், அவசரத்தில் இருப்பவரைப் போல அது தன் கால்களைத் தலைக்கு மேல் உயர்த்தியதைப் பார்த்தேன். அது தரையில் உள்ள ஒரு விரிசலுக்குள் மறைந்து போக அனுமதித்தேன். நான் மீண்டும் படுத்துறங்கிக் கனவு காண ஆரம்பித்தேன். ஆனால் இந்த முறை அது பரீட்சைகளைப் பற்றிய பழைய கனவு; பேராசிரியர் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருக்க, நான் படிக்காத ஒரே ஒரு விசயத்தின்முன் வாய்பேச முடியாமல் நின்றேன். ஆறு மணிக்குக் கடிகார அலாரம் ஆக்ரோஷமாக அடித்தது. நான் மணி நிறுத்தும் பட்டியை ஓங்கி அழுத்தினேன். என் அத்தை மகள் தலையை மூடிக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள். குளியலறையில், நான் கவனமாகச் சுவர்கள், சிமென்ட் தரை ஆகியவற்றில் எறும்புகள் இருக்கிறதா என்று உற்றுப் பார்த்தேன். எதையும் பார்க்கவில்லை. நான் சத்தம் போடாமல் திரும்பி வந்து, திரைச்சீலைகளைப் பாதி திறந்தேன். இரவின் சந்தேகத்திற்கிடமான அந்த வாசனை மறைந்துவிட்டது. நான் தரையைப் பார்த்தேன்: படுகொலை செய்யப்பட்ட எறும்புப்படையின் தடமும் மறைந்துவிட்டது. நான் கட்டிலுக்கு அடியில் எட்டிப் பார்த்தேன்; மூடிய பெட்டிக்குள் எறும்புகளின் அசைவு துளியும் தெரியவில்லை.
நான் மாலை ஏழு மணியளவில் கல்லூரியிலிருந்து திரும்பி வந்தபோது, என் அத்தை மகள் ஏற்கெனவே அறையில் இருந்தாள். அவள் மிகவும் சோர்வாக இருந்ததால், அவளுக்கு இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும் என்று எண்ணி ஆம்லெட்டில் உப்பு சேர்த்தேன். நாங்கள் ஆர்வத்துடன் மௌனமாகச் சாப்பிட்டோம். பிறகு எனக்கு ஞாபகம் வந்தது.
“எறும்புகள்?”
“இதுவரைக்கும் எதுவும் இல்லை.”
“இறந்த எறும்புகளை நீ பெருக்கிச் சுத்தம் செய்தாயா?”
அவள் என்னையே உற்றுப் பார்த்தாள். “நான் எதையும் பெருக்கவில்லை. காலையில் எழுந்தபோது நான் மிகவும் சோர்வாக இருந்தேன். நீ சுத்தம் செய்திருப்பாய் என்றல்லவா நினைத்தேன்!”
“நானா! நான் எழுந்தபோது, இந்தத் தரையில் எறும்பின் ஒரு தடயம்கூட இல்லை. நீ தூங்குவதற்கு முன் இறந்த எல்லா எறும்புகளையும் சுத்தம் செய்துவிட்டாய் போலும் என்று நான் நம்பியிருந்தேன். அப்படியென்றால் யார் சுத்தம் செய்தது?”
அவள் தன் குறுகிய கண்களைச் சுருக்கினாள்; அவள் கவலைப்படும்போது அப்படித்தான் குறுகிய கண்களுடன் இருப்பாள்.
“மிகவும் வினோதமாக இருக்கிறது. மிகவும் வினோதம்!”
நான் சாக்லேட் கட்டியை எடுக்கச் சென்றேன்; கதவுக்கு அருகில் மீண்டும் அந்த வாசனையை நுகர்ந்தேன். ஆனால் அது பூசணம் பிடித்த வாசனையா? அது எனக்கு அவ்வளவு சாதாரண வாசனையாகத் தோன்றவில்லை. என் அத்தை மகளின் கவனத்தை ஈர்க்க நான் விரும்பினேன், ஆனால் அவள் மிகவும் மனச்சோர்வுடன் இருந்ததால், அமைதியாக இருப்பது நல்லது என்று நினைத்தேன். அறை முழுவதும் ஆப்பிள் வாசம் வரும் நறுமணத்தெளிப்பைத் தெளித்தேன் (ஒருவேளை அது ஒரு தோட்டத்தில் இருப்பதைப்போல் வாசனை வருமா?). பின்னர் உடனே படுக்கைக்குச் சென்றேன். எனக்கு இரண்டாவது வகையான கனவு வந்தது; இது வாய்முறைத் தேர்வுக்கனவுக்கு நிகராகத் திரும்பத் திரும்ப வந்தது. அதில், நான் ஒரே நேரத்தில் இரண்டு ஆண் நண்பர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தேன். அதுவும் ஒரே இடத்தில். முதலாமானவன் வந்தான்; இரண்டாமவன் வருவதற்கு முன் அவனை அங்கிருந்து அப்புறப்படுத்துவதுதான் என் பதற்றமாக இருந்தது. இரண்டாவதாக வந்தவன் குள்ள மனிதன். நிசப்தத்தின் வெற்றிடமும் நிழலின் வெற்றிடமும் மட்டுமே எஞ்சியிருந்தபோது, என் அத்தை மகளின் குரல் என்னைப் பிடித்துக் கொண்டு விழிப்புக்குக் கொண்டு வந்தது. நான் சிரமத்துடன் கண்களைத் திறந்தேன்.
அவள் என் கட்டிலின் விளிம்பில் இரவு உடையுடன் அமர்ந்திருந்தாள். அவள் கண் முற்றிலும் குறுகியிருந்தது.
“அவை மீண்டும் வந்துவிட்டன.”
“யார்?”
“எறும்புகள். அவை பின்னிரவில், விடியற்காலைக்கு முன்தான் தாக்குதல் நடத்துகின்றன. அவையனைத்தும் மீண்டும் வந்துவிட்டன.”
முந்தின நாள் இருந்த அதே அடர்த்தியான, இறுக்கமான வரிசை. கதவிலிருந்து அந்தச் சிறிய எலும்புப் பெட்டி வரை அதே பழைய பாதையைப் பின்தொடர்ந்து சென்றது, அங்கு அதே வரிசையில் ஏறி உள்ளே திரண்டன. திரும்புவதற்கு வழியே இல்லை.
“எலும்புகள்?”
அவள் நடுங்கியபடி போர்வையால் தன்னைச் சுற்றிக் கொண்டாள். “அதுதான் மர்மமாக இருக்கிறது. ஏதோ நடந்திருக்கிறது, ஆனால் இதற்குமேல் எனக்கு எதுவும் புரியவில்லை!”
அவள் தொடர்ந்தாள்: “இரவில் சிறுநீர் கழிக்க நான் விழித்தேன். அப்போது அதிகாலை மூன்று மணி போல இருக்கும். குளியலறையிலிருந்து திரும்பி வரும் வழியில், அறையில் வேறு ஏதோ உணர்ந்தேன். உனக்குப் புரிகிறதா? நான் தரையைப் பார்த்தேன், எறும்புகளின் அடர்த்தியான கோட்டைக் கண்டேன்; ஞாபகம் இருக்கிறதா? நாம் வந்தபோது அங்கு எதுவும் இல்லை. நான் அந்தச் சிறிய பெட்டியைப் பார்க்கச் சென்றேன். எறும்புகள் அனைத்தும் உள்ளே பின்னிப் பிணைந்திருந்தன, ஆனால் அது என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. இன்னும் தீவிரமான விசயம் ஒன்று உள்ளது: எலும்புகள் உண்மையில், தங்கள் நிலையை மாற்றிக் கொண்டிருக்கின்றன. நான் ஏற்கெனவே சந்தேகப்பட்டேன், ஆனால் இப்போது நான் உறுதியாக நம்புகிறேன். மெதுவாக, அவை… அவை தங்களை ஒழுங்கமைத்துக் கொள்கின்றன.”
“என்ன, தங்களை ஒழுங்கமைத்துக் கொள்கின்றனவா?”
அவள் யோசனையுடன் பார்த்தாள். நான் குளிரால் நடுங்க ஆரம்பித்தேன், அவளுடைய போர்வையின் ஒரு மூலையைப் பிடித்து, என் கரடி பொம்மையை விரிப்பால் மூடினேன்.
“உனக்கு ஞாபகம் இருக்கிறதா? தோள்பட்டைகளுக்கு இடையில் மண்டை ஓடு இருந்தது. நான் அதை அப்படி வைக்கவில்லை. இப்போது, முதுகெலும்பு கிட்டத்தட்ட உருவாகியுள்ளது; ஒரு முள்ளெலும்புக்குப் பின் ஒன்றாக, ஒவ்வொரு எலும்பும் அதன் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வேலையில் ஈடுபட்டுள்ள யாரோ எலும்புக்கூட்டை ஒன்று சேர்க்கிறார்கள். அனைத்து எலும்புகளையும் சேர்ப்பதற்கு இன்னும் கொஞ்சம்தான் இருக்கிறது… வந்து பார்!”
“கடவுளே, நான் எதையும் பார்க்க விரும்பவில்லை. அந்த எறும்புகள் குள்ள மனிதனை ஒட்டுகின்றன, அப்படித்தானே?”
நாங்கள் அந்த மின்னல் வேகப் பாதையைப் பார்த்தோம். அது மிகவும் குறுகலாக இருந்தது; அதில் ஒரு தூசிகூடப் பொருந்தாது. நான் தேநீரைச் சூடாக்கச் சென்றபோது மிகக் கவனமாக அதைத் தாண்டி நடந்தேன். வழி தவறிய ஒரு சிறிய எறும்பு (நேற்றிரவு வந்த அதே எறும்பா?) தன் கால்களுக்கு இடையில் தன் தலையை அசைத்தது. எனக்குப் பெரிதாகச் சிரிப்பு வந்தது. தரையில் எறும்புகளால் ஆக்கிரமிக்கப்படாமல் இருந்திருந்தால், சிரித்துக்கொண்டே தரையில் உருண்டிருப்பேன். நாங்கள் என் படுக்கையில் ஒன்றாகத் தூங்கினோம். காலையில் என் முதல் வகுப்புக்கு நான் கிளம்பும்போது அவள் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். தரையில், எறும்பின் ஒரு தடயம்கூட இல்லை; இறந்தவையும் உயிருடன் இருந்தவையும் பகல் வெளிச்சத்தில் மறைந்துவிட்டன.
அன்று இரவு நான் தாமதமாக வீட்டிற்குத் திரும்பினேன். வகுப்புத் தோழி ஒருத்திக்குத் திருமணம் நடந்தது. அதன்பின் விருந்து இருந்தது. நான் உற்சாகமாகத் திரும்பினேன். பாட வேண்டும் என்று விரும்பினேன். நான் மிகவும் சந்தோசமாக இருந்தேன். மாடிப்படியில் ஏறும்போது மட்டுமே எனக்கு நினைவுக்கு வந்தது: அந்தக் குள்ள மனிதன்.
என் அத்தைமகள் மேசையைக் கதவருகே நகர்த்தி வைத்திருந்தாள். அடுப்பின் மேல் தேநீர்க் கெட்டில் ஆவி பறந்துகொண்டிருக்க, அவள் படித்துக் கொண்டிருந்தாள்.
“இன்று நான் தூங்கப் போவதில்லை, நான் விழித்திருக்கப் போகிறேன்” என்று எச்சரிக்கை செய்தாள்.
தரை இன்னும் சுத்தமாக இருந்தது. நான் கரடி பொம்மையைக் கட்டியணைத்தேன்.
“எனக்குப் பயமாக இருக்கிறது.”
அவள் என் தலைவலியைத் தணிக்க ஒரு மாத்திரையை எடுத்து வந்து, ஒரு மிடறு தேநீருடன் அதை விழுங்கச் செய்தாள். மேலும் எனது ஆடையைக் களைவதற்கு எனக்கு உதவினாள்.
“இரவெல்லாம் நான் விழித்திருப்பேன்; நீ நிம்மதியாகத் தூங்கலாம். இதுவரை எதுவும் தோன்றவில்லை; இது அவற்றுக்கான நேரமில்லை; அவை பின்னிரவில் ஆரம்பிக்கும். உருப்பெருக்கிக் கண்ணாடியால் கதவுக்கு அடியில் பார்த்தேன்; அவை எங்கிருந்து வருகின்றன என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.”
நான் படுக்கையில் விழுந்தேன். நான் அவளுக்குப் பதில் சொன்னேனா என்றுகூடத் தெரியவில்லை, உறங்கிப் போய்க் கனவில் வீழ்ந்தேன். மாடிப்படியின் உச்சியில், என் மணிக்கட்டுகளைப் பிடித்துக் கொண்டு என்னைப் படுக்கையறைக்குள் சுழற்றினான் குள்ள மனிதன். “எழுந்திரு! எழுந்திரு!” என் முழங்கைகளைப் பிடித்து என்னை உலுக்கிக் கொண்டிருந்த அத்தை மகளை அடையாளம் காண எனக்குச் சிறிது நேரம் பிடித்தது. அவள் இரத்தமே இல்லாதவள் போல் வெளிறிப் போயிருந்தாள்; கண்கள் வெகுவாகக் குறுகிப் போயிருந்தன.
“அவை திரும்பி வந்துவிட்டன” என்றாள்.
வலிக்கும் என் தலையைக் கைகளால் பற்றிக் கொண்டேன். “அவை அங்கே இருக்கின்றனவா?”
அவள் மெல்லிய குரலில் பேசினாள். அவளது குரல் ஒரு சிறிய எறும்பு பேசுவது போலத்தான் எனக்குக் கேட்டது. “சோர்வாக இருந்ததால் நான் மேசையிலேயே தூங்கிவிட்டேன். நான் விழித்தபோது, அந்த எறும்புக் கோடு ஏற்கெனவே முழு வேகத்தில் இருந்தது. நான் அந்தச் சிறிய எலும்புப் பெட்டியைப் போய்ப் பார்த்தேன்; நான் எதிர்பார்த்தது நடந்துவிட்டது…”
“என்ன நடந்தது? சீக்கிரம் சொல், என்ன நடந்தது?”
அவள் தனது சாய்ந்த பார்வையைக் கட்டிலுக்கு அடியில் இருந்த சிறிய பெட்டியின் மீது நிறுத்தினாள்.
“அந்த எறும்புகள் உண்மையில் எலும்புகளை ஒன்றாகச் சேர்க்கின்றன. அதுவும் வேகமாகச் சேர்க்கின்றன. உனக்குத் தெரியுமா, எலும்புக்கூடு ஏற்கெனவே முழுமையடைந்துவிட்டது; தொடை எலும்பு மட்டுமே இல்லை. மற்றும் இடது கையின் சிறிய எலும்புகள் —அவற்றை அவை ஒரு நொடியில் செய்து முடித்துவிடும். வா, இங்கிருந்து கிளம்பிப் போய்விடலாம்.”
“நீ உண்மையிலேயே கிளம்பச் சொல்கிறாயா?”
“போகலாம், நான் ஏற்கெனவே மூட்டை கட்டிவிட்டேன்.”
மேசை சுத்தமாக இருந்தது; அகலமாகத் திறக்கப்பட்டிருந்த அலமாரிகள் காலியாக இருந்தன.
“ஆனால் இப்படி, இரவின் நடுவில் கிளம்பிப் போவதா? நம்மால் இப்படிப் போக முடியுமா?”
“உடனடியாகப் போகவேண்டும். சூனியக்காரி விழிப்பதற்குக் காத்திருக்காமல் இருப்பது நல்லது. வா, எழுந்து கிளம்பு!”
“நாம் எங்கே போகிறோம் இந்த நேரத்தில்?”
“அது பரவாயில்லை, பின்னர் யோசித்துக் கொள்ளலாம். வா, இந்த உடையை அணி. அந்தக் குள்ள மனிதன் தயாராவதற்கு முன் நாம் கிளம்ப வேண்டும்.”
நான் தூரத்திலிருந்து எறும்புகளின் அந்தப் பாதையைப் பார்த்தேன். இதற்குமுன் அவை இவ்வளவு வேகமாக ஊர்ந்தது இல்லை. நான் என் காலணிகளை அணிந்து, சுவரில் இருந்த அந்த அச்சுப்படத்தை உரித்தெடுத்து, கரடி பொம்மையை எனது மேலங்கியின் பைக்குள் திணித்தேன். எங்கள் பைகளைச் சிரமப்பட்டு மாடிப்படிகளில் இழுத்துச் சென்றோம். படுக்கையறையிலிருந்து வந்த வாசனை இன்னும் தீவிரமடைந்து கொண்டிருந்தது. நாங்கள் கதவைத் திறந்து வைத்துவிட்டுக் கிளம்பினோம். அப்போது கேட்ட சத்தம், அது பூனையின் நீண்ட ‘மியாவ்’ சத்தமா அல்லது அது ஓர் அலறல் குரலா?
வானத்தில் தெரிந்த கடைசி நட்சத்திரங்கள் ஏற்கெனவே மங்கிக் கொண்டிருந்தன. நாங்கள் வீட்டைத் திரும்பிப் பார்த்தபோது திறந்திருந்த ஒரு சன்னலை மட்டுமே எங்களால் பார்க்க முடிந்தது. இன்னொரு கண் இருளாக இருந்தது.
லிஹியா ஃபஹுந்தெஸ் தெயஸ் (1923 – 2022), பிரேசில்
பிரேசிலின் சவ் பாலோ நகரில் பிறந்த லிஹியா ஃபஹுந்தெஸ் தெயஸ் தனது பதினைந்தாவது வயதிலேயே சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டவர். வழக்குரைஞராகத் தொழிலைத் தொடர்ந்தாலும் பிரேசிலிய இலக்கிய உலகுக்கு மிகப்பரிச்சயமானவர். ஐந்து புதினங்களும் ஏராளமான சிறுகதைகளும் எழுதியிருப்பவர். தொன்ம, மாய எதார்த்தத் தனிமங்களையும் இயல்திரிபுப் புனைவையும் தனது கதைகளில் விரவவிட்டவர். அவரது புதினங்களில் தோன்றிய பெண் பாத்திரங்கள், கட்டுப்படுத்திய சமுதாயக்கோட்பாடுகளுக்கும் தங்களது சுய முயற்சிகள் குறித்த தேடல்களுக்கும் நடுவே சிக்கிக் கொள்பவர்களாக இருந்தார்கள். பரீட்சார்த்த எழுத்து நடையையும் பின்னாளில் சோதித்துப் பார்த்தவர். வலதுசாரிச் சர்வாதிகாரத்தை எதிர்த்த புதினமும் 1982-ல் வெளிவந்தது. ‘எறும்புகள்’ எனும் இச்சிறுகதை 1977-ல் வெளிவந்தது. வியப்புப் புனைவாய் வெளிப்படும் இச்சிறுகதை கனவா நனவா என்ற குழப்பத்தில் பாத்திரங்களையும் வாசகர்களையும் சிக்க வைத்துவிடுகிறது. ஒரு இடம், எப்படி மன அழுத்தத்தையும் அடக்கப்பட்ட பயங்களையும் வெளிப்படுத்துகிறது என்பதை இக்கதை காட்டுகிறது. பெண்களின் பார்வையில் இடர்பாடுகள், பாதுகாப்பின்மை மற்றும் வெளி உலகின் அச்சங்களைப் பிரதிபலிக்கும் கதையாக இது அமைந்து, பெண்களின் உடல் மற்றும் தனிமைச் சமூகத்தால் எவ்வாறு ஆபத்துக்கு உள்ளாக்கப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
சொந்த ஊர்: தூத்து








Leave a Reply