இரங்கற்பாக்களுக்கு எதிராக ஒரு சாபம்
ஓ, அன்பே, நாம் ஏன் இப்படி வாதாடுகிறோம்?
உன் மூடநம்பிக்கைப் பேச்சுகளால் நான் சோர்வடைந்துவிட்டேன்.
இறந்தவர்கள் அனைவராலும் நான் களைத்துப்போனேன்.
அவர்கள் கேட்க மறுக்கிறார்கள்,
எனவே அவர்களை விட்டுவிடலாம்.
கல்லறையிலிருந்து உன் காலை வெளியே எடு,
அவர்கள் மும்முரமாக இறந்து கொண்டிருக்கிறார்கள்.
இவை அனைத்துமே எப்போதும் குற்றம் சாட்டப்பட வேண்டியவை:
மது காலியாகும் கடைசி ஐந்தாவது ரவுண்ட்,
பின்வாசற்படியின் மேலுள்ள சேற்றில் சிக்கிய
துருப்பிடித்த நகங்கள், கோழி இறகுகள்,
பூனையின் காதுக்கு அடியில் வாழும் புழுக்கள்
மெல்லிய உதடு கொண்ட மதபோதகர்,
ஒரேயொரு முறை மட்டுமே அழைக்க மறுத்தார், ஈக்கள் மொய்த்த நாளில்
முற்றம் வழியாக ஒரு பலிகடாவைத் தேடி
கால்களைத் தேய்த்தபடி உள்ளே வந்த அன்று.
நான் சமையலறையில் கந்தல் பையின் கீழ் ஒளிந்துகொண்டேன்.
இறந்தவர்களை நினைவில் கொள்ள நான் மறுக்கிறேன்.
இறந்தவர்கள் அனைத்திலும் சலித்துப்போனார்கள்.
ஆனால் நீங்கள்— நீங்கள் மேலே செல்லுங்கள்,
போய்க்கொண்டே இருங்கள், திரும்பிச் செல்லுங்கள் கீழே
கல்லறைக்குள்,
அவர்களுடைய முகங்கள் இருப்பதாக நீங்கள் நினைக்கும் இடத்தில் படுத்துக் கொள்ளுங்கள்;
உங்கள் பழைய கெட்ட கனவுகளிடம் மீண்டும் பேசுங்கள்.
எலினோர் பாய்லன் கடவுளுடன் பேசுகிறார்
கடவுளுக்கு பழுப்பு நிறக் குரல்,
பீர் போல மென்மையாகப் பொங்கி வழிகிறது
எலினோர், என் அம்மாவை விடவும் அழகானவள்
அவளது சமையலறையில் நின்று பேசிக்கொண்டிருக்கிறாள்,
நானும் என் சிகரெட்டுகளை விஷம் போல உறிஞ்சுகிறேன்.
அவள் எலுமிச்சை நிறத்தில் சூரியக் குளியல் உடையில் நிற்கிறாள்
முட்டைத் தட்டுகளைக் கழுவியதால் பளபளக்கும் ஈரக் கைகளை,
கடவுளை நோக்கி ஆட்டுகிறாள்.
அவள் அவரிடம் சொல்கிறாள்! பார்க்க வேண்டிய அவசியமில்லாமல் பேசும்
ஒரு குடிகாரியைப் போல அவரிடம் சொல்கிறாள்!
அது இயல்பானதாக அதே சமயம் நட்புடன் இருக்கிறது.
வீட்டுக் கூரையைப் போல மிக அருகில் இருக்கிறார் கடவுள்.
எப்போதுமே யாராலும் அறிய முடியாது என்றாலும்,
அவருக்கு முகம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
எனக்கு ஆறரை வயதாக இருந்தபோது அவருக்கு ஒரு முகம் இருந்தது.
இப்போது அவர், தூங்கும் மிகப்பெரிய ஜெல்லிமீன் போல
வானத்தை மூடிக்கொண்டு பிரம்மாண்டமாக இருக்கிறார்.
எனக்கு எட்டு வயதாக இருந்தபோது, அங்கே வானத்தில்
இறந்தோர், பலூன்களைப் போல மிதப்பதாக நினைத்தேன்.
இப்போது என் நாற்காலி சோளக்கொல்லை பொம்மையைப் போல இருக்கிறது,
வெளியே கோடைக்கால ஈக்கள் ஒரு இசைக்குழுவைப் போல பாடுகின்றன.
எலினோரே! கிளம்புவதற்கு முன் அவரிடம் சொல்ல வேண்டும்,
ஓ எலினோர், எலினோர்,
மரணம் உங்களை அழிப்பதற்கு முன் அவரிடம் சொல்லிவிடுங்கள்.
மீண்டும் மீண்டும் மீண்டும்
காதல் திரும்ப வந்தது போலவே
கோபமும் திரும்பி வரும் என்று நீ சொன்னாய்.
எனக்குப் பிடிக்காத கருத்த பார்வை ஒன்று
என்னிடம் இருக்கிறது. அது நான் அணிந்து பார்க்கும் முகமூடி.
நான் அதை நோக்கி நகர்கிறேன், அதன் தவளை
என் உதடுகளில் அமர்ந்து மலம் கழிக்கிறது.
அதற்கு வயதாகிவிட்டது. அது ஓட்டாண்டியும் கூட.
நான் அதை உணவுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சித்தேன்.
நான் அதற்கு எண்ணை முழுக்காட்டவும் இல்லை.
உறைந்த ரத்தம் போன்ற ஒரு நல்ல பார்வையையும்
நான் அணிவதுண்டு. அதை என்
இடது மார்பின் மீது தைத்து வைத்திருக்கிறேன்.
அதை என் தொழிலாகவே ஆக்கிக்கொண்டேன்.
அதில் காமம் வேரூன்றியுள்ளது,
அதன் முலைக் காம்பில் உன்னையும்
உன் குழந்தையையும் வைத்திருக்கிறேன்.
ஓ, அந்தக் கருமை கொல்லக் கூடியது,
முலைக் காம்பு ததும்புகிறது,
ஒவ்வொரு இயந்திரமும் இயங்குகிறது,
நான் ஒரு டஜன் புதிய ஆண்களைத் துண்டு துண்டாக வெட்டும்போது
உன்னை முத்தமிடுவேன்,
நீ கொஞ்சம் செத்துப் போவாய்
மீண்டும் மீண்டும்.
கரப்பான் பூச்சி
பூச்சிகளில் மிக அருவருப்பான கரப்பான்களே,
மஞ்சள் பற்களாலும்
ஷூவைப் போன்ற பெரிய உறவினர்கள் படையாலும் தாக்கும் நீங்கள்,
எந்திரங்கள் வெட்டிய நிலக்கரிக் கட்டிகள்,
நான் விளக்கை ஏற்றும்போது நீங்கள் மூலைகளுக்குள்
சிதறி ஓடுகிறீர்கள், இந்தச் சீறும் ஒலி நிலத்தின் மீது.
எனினும், வசீகரிக்கும் மந்திரத்தால் மிக அசிங்கமாக மாற்றப்பட்டது
எல்லோருக்குமான தேவதைகளான நீங்கள் மட்டுமே என்பதை நான் அறிவேன்.
உங்கள் மாமா ஒரு ஆப்பிளாக மாற்றப்பட்டார்.
உங்கள் அத்தை ஒரு சியாமிஸ் பூனையாக மாற்றப்பட்டார்,
மீதமிருந்த எல்லோரும் பட்டாம்பூச்சிகளாக மாற்றப்பட்டனர்
ஆனால் கடவுளிடம் நீங்கள் அப்பட்டமாகப் பொய் சொன்னதால்—
பூமியில் உள்ள அனைத்தும் ஒழுங்காக இருப்பதாக அவரிடம் கூறினீர்கள்—
அவர் தனது கோபத்தை உங்கள் மீது திருப்பிவிட்டுக் கூறினார்
“நான் உங்களை மிக அருவருப்பூட்டுபவர்களாக மாற்றுவேன்,
நான் உங்களை கடவுளின் பொய்யாக ஆக்குவேன்,
ஒரு சிறுமியும் உங்களை ஒருபோதும் நேசிக்கமாட்டாள்
அல்லது உங்கள் கருநிற இறக்கைகளை தன் உள்ளங்கையில் பிடிக்க மாட்டாள்” என்றார்.
ஆனால் அது உண்மையல்ல. ஒருமுறை நியூ ஆர்லியன்ஸில் மாணவர்களின் குழுவுடன்
ஒரு கரப்பான் பூச்சி தரையில் குறுக்கே ஓடியது,
நான் கத்தினேன், அவள் அதைத் தன் கைகளில் எடுத்து
தூக்கிப் பிடித்து, என்னை ஒரு மணி நேரம் பயமுறுத்தினாள்.
ஒரு வைர மோதிரம் போல தப்பிக்க முடியாதவாறு அதைப் பிடித்திருந்தாள்
இப்போதெல்லாம் பிசாசு கூட கவிழ்ந்து கிடக்கிறது
அதை, ஒரு டம்ளர் தண்ணீரைப் போல ஒளியில் பிடித்திருக்கிறேன்.
1980 களில் கவிதைகள் எழுதத் தொடங்கிய சமயவேல் இதுவரை ஒன்பது கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டு இருக்கிறார். மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டுள்ள இவர் இதுவரை எட்டு மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு இருக்கிறார். கவிதைக்காக விளக்கு விருதையும் மொழிபெயரப்புக்காக விகடனின் நம்பிக்கை விருது, நல்லி திசையெட்டும் விருது ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார். தொலைதொடர்பு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்று மதுரையில் வசித்து வருகிறார்.








Leave a Reply