மூன்று பச்சை நிற ஜன்னல்கள்
என் ஞாயிற்றுக்கிழமை தூக்கத்தில் பாதி விழித்திருக்கிறேன்
மூன்று பச்சை நிற ஜன்னல்களைப் பார்க்கிறேன்
மூன்று வெவ்வேறு ஒளியில்—
ஒன்று மேற்கு, ஒன்று தெற்கு, ஒன்று கிழக்கு.
பழைய நண்பர்கள் இறந்துவிடுகிறார்கள் என்பதை நான் மறந்துவிட்டேன்.
நான் நடுவயதுக்காரி ஆகிவிட்டேன் என்பதை மறந்துவிடுகிறேன்.
ஒவ்வொரு ஜன்னலிலும் இத்தகைய சலசலப்புகள்!
மரங்கள் விடாப்பிடியாக புளிப்பாகவும் புலன் இன்பம் தருபவையாகவும்,
புனிதர்கள் போல அடர்ந்தும் இருக்கின்றன.
பறவைகள் மூடிய மூன்று மனிதவிலங்குத் தலைத் தூம்புகளைப் பார்க்கிறேன்.
அவற்றின் சருமம் பதனிடப்பட்ட தோல் போல வெயிலில் பிரகாசிக்கிறது.
நான் என் படுக்கையில் கடற்பாசியைப் போல லேசாகக் கிடக்கிறேன்.
விரைவில் இது கோடை காலம் ஆகிவிடும்.
அவள் என் அம்மா.
எனக்கொரு கதை சொல்லி
அவளது உருண்டுதிரண்ட வழுவழுப்பான தோல் மேல் என்னைத் தூங்க வைப்பாள்
நான் இலைகளைக் காண்கிறேன்—
கழுவப்பட்டிருக்கும் அப்பாவி இலைகள்
ஒரு நிலவறையை ஒருபோதும் அறியாத இலைகள் அவை,
தங்கள் சொந்த பச்சை இரத்தத்தில் பிறந்தவை
கடற்கன்னிகளின் கைகள் போன்றவை.
நடைப் பயணத்தில் பார்த்த துருப்பிடித்த வண்டியைப் பற்றி நான் நினைப்பதில்லை.
வீட்டோரம் எந்திரங்கள் போலக் குதிக்கும்
சிவப்பு அணில்களை நான் கவனிப்பதில்லை.
கூனைப் பூக்களைப்போல் (artichokes) பருத்த
மரங்களின் உண்மையான தண்டுகளை
எனக்கு நினைவில் இல்லை.
நானொரு அரக்கியைப் போல மாறுகிறேன்,
ரகசியமாக கவனிக்கிறேன், ரகசியமாக அறிகிறேன்,
ஒவ்வொரு அழகிய கடலுக்கும் ரகசியமாகப் பெயரிடுகிறேன்.
நான் வான் ஆலன் பெல்ட்டை எங்கேயோ வைத்துவிட்டேன்,
சாக்கடைகளும் கழிவுநீர் வாய்க்கால்களும்
புதுப்பிக்கப்பட்ட நகர்ப்புறங்களிலும் புறநகர் மையங்களிலும்.
இலக்கிய விமர்சகர்களின் பெயர்களை நான் மறந்துவிட்டேன்.
என்ன எனக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியும்.
குழந்தையாக இருந்தேன் நான்,
இப்போது என்னுடைய வாழ்வை வாழ்கிறேன்
இளமையில் அரைத் தூக்கத்தில் இருக்கிறேன்.
இதுவொரு தண்ணீர்க் காலம், மரங்களின் காலம்.
ஜூன் 1962
■
தோட்டத்திலிருந்து
என் அன்பே, வருக
அல்லிகளைப் பற்றி யோசி.
நமக்கு நம்பிக்கையில்லை.
நாம் அதிகமாகப் பேசுகிறோம்.
உன் வாய் நிறைய இருக்கும் சொற்களை தூரப் போடு,
அத்தகையதொரு வயலில் அல்லிகள்
மலர்ந்திருப்பதைப் பார்க்க என்னுடன் வா,
அவை அங்கே உல்லாசப் படகுகள் போல வளர்கின்றன,
நமது பேணுதல்களுடனும் காலமுறைக் கவனிப்புடனும்
தங்கள் இதழ்களை மெள்ளத் திருப்புகின்றன.
இந்தக் காட்சியை கவனிப்போம்:
ஒரு வெள்ளை வீடு, அங்கே
மேகங்கள் அலங்கரிக்கும் மங்கலான கூடங்கள்.
ஓ, உன் நற்சொற்களை வெளியே எறி,
உன் தீச்சொற்களையும். துப்பு வெளியே,
கற்களைப் போல உன் சொற்களைத் துப்பு!
இங்கே வா! இங்கே வா!
வந்து மனதுக்கினிய என் பழங்களை சாப்பிடு.
■
தனித்திருக்கும் தற்புணர்ச்சிக்காரியின் கதைப்பாடல்
உறவின் முடிவு எப்போதும் மரணம்தான்.
அவள் என் பயிற்சிப்பட்டறை. வழுக்கும் கண்,
எனது இனக்குழுவைச் சேர்ந்தவள், என் சுவாசம்
நீ போய்விட்டதைக் காண்கிறேன். அருகில் இருப்பவர்களுக்கு
அச்சமூட்டுகிறேன். எனக்கு உணவளிக்கப்பட்டது.
இரவில், தனிமையில், நான் படுக்கையை மணக்கிறேன்.
விரலுக்கு விரல், இப்போது அவள் என்னுடையவள்.
அவள் அதிக தூரத்தில் இல்லை. நான் சந்தித்தது அவளைத்தான்.
ஒரு மணியைப் போல அவளை அடித்தேன். நான் சாய்கிறேன்
நீ அவள் மேல் பரவும் உள் அறையில்.
பூக்கள் நிறைந்த விரிப்பின் மேல் நீ என்னைக் கடன் வாங்கினாய்.
இரவில், தனிமையில், நான் படுக்கையை மணக்கிறேன்.
உதாரணமாக இந்த இரவை எடுத்துக் கொள், என் அன்பே,
ஒவ்வொரு ஜோடியும் ஒன்றாக இணைந்து
கூடிப் புரள்கிறது, கீழே, மேலே,
ஏராளமான ஜோடிகள் கடற்பாசி மற்றும் இறகு மெத்தையில்,
மண்டியிட்டும் தள்ளிக்கொண்டும், நேருக்கு நேர்.
இரவில் தனிமையில், நான் படுக்கையை மணக்கிறேன்.
நான் என் உடலை விட்டு இப்படித்தான் வெளியேறுகிறேன்,
ஒரு எரிச்சலூட்டும் அதிசயம். கனவுச் சந்தையை
நான் காட்சிப்படுத்தவா?
நான் பரவிக் கிடக்கிறேன். சிலுவையில் அறைகிறேன்.
நீங்கள் சொன்னது என் குட்டி பிளம் கனி.
இரவில், தனிமையில், நான் படுக்கையை மணக்கிறேன்.
பின்னர், கருப்புக் கண்களைக் கொண்ட என் எதிராள் வந்தாள்.
நீர்மைப் பெண்ணாள் கடற்கரையில் எழுகிறாள்,
அவள் விரல் நுனியில் ஒரு பியானோ, அவமானம்
அவள் உதடுகளில், மேலும் ஒரு புல்லாங்குழல் பேச்சு.
பதிலாக நான்தான் அந்த முட்டி தட்டும் துடைப்பம்.
இரவில், தனிமையில், நான் படுக்கையை மணக்கிறேன்.
ஒரு பெண், பேரம் பேசி வாங்கிய உடையை
அலமாரியிலிருந்து எடுக்கும் விதத்தில் அவள் உன்னை அழைத்துச் சென்றாள்.
ஒரு கல் உடையும் விதத்தில் நான் உடைந்தேன்.
உன் புத்தகங்களையும் தூண்டில் முள்ளையும் திருப்பிக் கொடுக்கிறேன்.
உனக்குத் திருமணமாகிவிட்டது என்று இன்றைய செய்தித்தாள் கூறுகிறது.
இரவில், தனிமையில், நான் படுக்கையை மணக்கிறேன்.
இன்றிரவு பையன்களும் பெண்களும் ஒன்றுதான்.
அவர்கள் ரவிக்கைப் பித்தான்களை கழற்றுகிறார்கள். ஜிப்பை அவிழ்க்கிறார்கள்.
காலணிகளைக் கழற்றுகிறார்கள். விளக்கை அணைக்கிறார்கள்.
மின்னும் உயிரினங்கள் பொய்களால் நிறைந்துள்ளன.
அவை ஒன்றையொன்று சாப்பிடுகின்றன. அவை அதிகம் சாப்பிட்டுவிட்டன.
இரவில், தனிமையில், நான் படுக்கையை மணக்கிறேன்.
■
அவளுடைய இனம்
நான் வெளியேறினேன், ஒரு பேய் பிடித்த சூனியக்காரி,
கருங்காற்றை வேட்டையாடுகிறேன், இரவில் துணிச்சலடைகிறேன்;
தீமையைக் கனவு கண்டு, என் சூனியத்தை நிகழ்த்துகிறேன்.
சமவெளி வீடுகள் மேல், ஒவ்வொன்றாக தீ வைத்தேன்:
தனித்திருப்பவள், பன்னிரண்டு விரல்கள் கொண்டவள், பித்துப்பிடித்தவள்.
இப்படிப்பட்ட ஒரு பெண் ஒரு பெண்ணே அல்ல, முற்றிலும்.
நான் அவளுடைய இனத்தைச் சேர்ந்தவளாக இருக்கிறேன்.
காடுகளில் வெதுவெதுப்பான குகைகளைக் கண்டேன்,
அவற்றை வாணலிகள், மரச்சிற்பங்கள், அலமாரிகள், தனியறைகள்,
பட்டு உடைகள், மேலும் எண்ணற்ற பொருட்களால் நிரப்பினேன்;
புழுக்களுக்கும் குட்டிச்சாத்தான்களுக்குமான இரவு உணவை ஏற்பாடு செய்தேன்:
புலம்புதல், ஒழுங்கு சிதைந்தவற்றை மறுசீரமைத்தல்.
அப்படிப்பட்ட ஒரு பெண் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறாள்.
நான் அவளுடைய இனத்தைச் சேர்ந்தவளாக இருக்கிறேன்.
நான் உங்கள் வண்டியில ஏறிவிட்டேன், ஓட்டுனரே,
கடந்து செல்லும் கிராமங்களை நோக்கி என் நிர்வாணக் கைகளை அசைத்தேன்,
கடைசி பிரகாசமான பாதைகளைக் கற்றுக்கொள்கிறேன்,
உன் தீப்பிழம்புகள் இன்னும் என் தொடையைக்
கடித்துக் கொண்டிருக்கும் இடத்தில் உயிர்பிழைத்தேன்;
உன் சக்கரங்கள் சுழலும் இடத்தில் என் விலா எலும்புகள் உடைகின்றன.
அப்படிப்பட்ட ஒரு பெண் இறப்பதற்கு வெட்கப்படுவதில்லை.
நான் அவளுடைய சேர்ந்தவளாக இருக்கிறேன்.
■
மார்பு
இதுதான் அதற்குத் திறவுகோல்.
இதுதான் எல்லாவற்றிற்கும் திறவுகோல்.
விலைமதிப்பற்றது.
புழுதியிலிருந்து ரொட்டியைப் பொறுக்கும்
விளையாட்டுக்காரனின் குழந்தைகளை விட நான் மோசமானவள்.
இங்கே நான் வாசனைத் திரவியத்தை சிதறுகிறேன்.
நான் உங்கள் கம்பளத்தின் மேல்,
உன் வைக்கோல் மெத்தையில் இறங்கிக் கொள்கிறேன் – கையில் எது இருந்தாலும்,
ஏனென்றால் எனக்குள் இருக்கும் குழந்தை இறந்து கொண்டிருக்கிறது,
இறந்து கொண்டிருக்கிறது.
உண்ணப்பட வேண்டிய கால்நடை நான் என்பதல்ல.
ஏதோவொரு வகையான தெருவைப் போல என்னை எண்ண வேண்டாம்.
ஆனால் ஒரு கட்டிடக் கலைஞரைப் போல உன் கைகள் என்னைக் கண்டுபிடித்தன.
குவளை நிறையப் பால்! சில ஆண்டுகள் முன்பு இது உன்னுடையது.
எனது எலும்புகளின் பள்ளத்தாக்கில் நான் வாழ்ந்தபோது
சதுப்பு நிலத்தில் எலும்புகள் குவிகின்றன. சின்னஞ் சிறிய விளையாட்டுப் பொருட்கள்.
ஒரு சைலஃபோன், அதன் மீது தோல்
அசிங்கமாக நீட்டப்பட்டிருக்கலாம்.
பின்னர்தான் அது ஏதோவொரு நிஜமாகியது.
பின்னர் சினிமா நட்சத்திரங்களுடன் என் அளவை ஒப்பிட்டேன்.
நான் அளவிடவில்லை. என் தோள்களுக்கிடையில்
ஏதோ இருந்தது. ஆனால் ஒருபோதும் போதுமானதில்லை.
நிச்சயமாக, அங்கொரு புல்வெளி இருந்தது,
ஆனால் இளைஞர்கள் யாரும் உண்மையைப் பாடவில்லை.
உண்மையை சொல்ல எதுவுமில்லை.
ஆண்களைப் பற்றிய அறியாமையுடன் என் சகோதரிகளின் அருகில் படுத்திருக்கிறேன்
சாம்பலில் இருந்து எழுந்து நான் கதறினேன்
என் பால் நிலைகுலைந்து விடும் என்று கதறி அழுதேன்!
இப்போது நான் உன் தாய், உன் மகள்,
உன் புத்தம் புதிய பொருள் – ஒரு நத்தை, ஒரு கூடு.
உன் விரல்கள் இருக்கையில் நான் உயிரோடு இருக்கிறேன்.
நான் பட்டு அணிகிறேன் – அவிழ்ப்பதற்காக மூடுவது –
ஏனென்றால் நீ பட்டு குறித்து சிந்திக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
ஆனால் எனக்கு அந்தத் துணியைப் பிடிக்காது. இது கொஞ்சமும் நெகிழ்வற்றது.
எனவே என்னிடம் எதை வேண்டுமானாலும் சொல்,
ஆனால் ஒரு படர்தாவரம்போல் என்னை
இங்கிருக்கிறது கண், இங்கே நகை என்று தடங்காண்,
இங்கிருக்கிறது கிளர்ச்சி என என் மார்புக்காம்பு கற்கிறது.
நான் சமநிலை இழந்துவிட்டேன் – ஆனால் உறைபனியால் பைத்தியமாகவில்லை,
பைத்தியமாக இளம் பெண்கள் இருப்பது போல நானும் இருக்கிறேன்.
ஒரு படையலுடன், ஒரு படையல் . . .
பணம் எரியும் வகையில் நான் எரிகிறேன்.
■
முதுமை
எனக்கு ஊசிகள் என்றால் பயம்.
ரப்பர் ஷீட்களாலும் குழாய்களாலும் நான் களைத்துப்போனேன்.
எனக்குத் தெரியாத முகங்களால் நான் சோர்வடைகிறேன்,
இப்போது மரணம் தொடங்குகிறது என்று நினைக்கிறேன்.
மரணம் ஒரு கனவு போலத் தொடங்குகிறது,
பொருட்களாலும் என் சகோதரியின் சிரிப்பாலும் நிறைந்திருக்கிறது,
நாங்கள் இளமையாக இருக்கிறோம்,
நாங்கள் நடந்து சென்று டமரிஸ்கோட்டா வரை காட்டு அவுரிநெல்லிகளைப் பறிக்கிறோம்.
ஓ சூசன், அவள் அழுதாள்,
நீ உன் கன்னி இடுப்பைக் கறைப்படுத்திவிட்டாய்.
என் வாய் மிகவும் நிரம்பியுள்ளது,
டமரிஸ்கோட்டாவுக்கு செல்லும் வழியெல்லாம்
இனிமையான நீலம் வெளியேறுகிறது.
நீ என்ன செய்கிறாய்? என்னைத் தனியாக விடு!
நான் கனவு காண்கிறேன் என்று உனக்குப் புரியவில்லையா?
ஒரு கனவில் ஒருபோதும் உனக்கு எண்பது வயது ஆகாது.
■
இல்லத்தரசி
சில பெண்கள் வீடுகளை மணக்கிறார்கள்.
இது இன்னொரு வகையான தோல்; இதற்கென ஒரு இதயம்,
வாய், கல்லீரல், குடல் அசைவுகள்.
சுவர்கள் நிரந்தரமானவை, இளஞ்சிவப்பு நிறம்.
எப்படி அவள் நாள் முழுவதும் மண்டியிட்டு உட்கார்கிறாள்,
உண்மையுடன் தன்னைக் கழுவிக் கொள்கிறாள் என்று பாருங்கள்.
ஆண்கள் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைகிறார்கள், யோனாவைப் போல திரும்ப
தங்கள் சதைப்பற்றுள்ள தாய்மார்களுக்குள் இழுக்கப்படுகிறார்கள்.
அவளுடைய தாயும் ஒரு பெண்.
அதுதான் முக்கிய விஷயம்.
■
தனித்திருக்கும் நடனப் பெண்
வா நண்பனே,
உன்னிடம் சொல்வதற்கு என்னிடம் ஒரு பழைய கதை உண்டு —
கேள்.
என் அருகில் உட்கார்ந்து கேள்
துயரில் என் முகம் சிவந்திருக்கிறது
எனது மார்பகங்கள் வைக்கோலால் ஆகியவை
நான் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறேன்
பளபளப்பான மேடையின் ஒரு மூலையில்
நான் பழைய நடிகர்கள் அனைவரையும் மன்னித்து விட்டேன், இறந்தமைக்காக.
அதே வரிகளுடன் ஒரு புதியவன் வருகிறான்,
அவன் வாயில் இருக்கும் பெரிய வெள்ளைக் கட்டிகள் போல.
நடனக் கலைஞர்கள் சிறகுகளிலிருந்து வருகிறார்கள்,
கச்சிதமாக இணைந்தவாறு.
நான் நிமிர்ந்து பார்க்கிறேன். கூரை நிறைய முத்துக்கள்.
என் தொடைகள் அழுத்துகின்றன, அவற்றின் புதையலை முடிந்து வைக்கின்றன.
மேடையில் மணமகள் பட்டுத் துணிக்குள்ளிருந்து தரையில் விழுகிறார்.
அவளுக்குப் பக்கத்தில் சிவப்பு கம்பளி ஆடை அணிந்த உயரமான ஹீரோ
அவனது தந்தப் பிரம்பு கொண்டு நெருப்பைக் கிளறுகிறான்.
ஸ்டிரிங் குவார்ட்டட் தனக்குத் தானே இசைக்கிறது,
மெதுவாக, மெதுவாக, கைகளும் மெழுகு வில்களும்.
நடனக் கலைஞர்களின் கால்கள் குதிக்கின்றன, பிடிக்கின்றன.
எனக்கும் விறைப்பான குட்டிக் கால்கள்.
என் முதுகு ஒரு புத்தகம் போல நேராக உள்ளது
நான் எப்படி இந்த இடத்திற்கு வந்தேன் —
காய்ச்சலடிக்கும் குட்டி ரோஜாக்கள்,
ஆலிவ்களின் முள்ளங்கிகளின் தீவுகள்,
வரவேற்பறையின் ஆனந்தமான பொழுதுபோக்குகள்—
எனக்கு ஒருபோதும் தெரியாது.
■
Art : Noveltees
1980 களில் கவிதைகள் எழுதத் தொடங்கிய சமயவேல் இதுவரை ஒன்பது கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டு இருக்கிறார். மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டுள்ள இவர் இதுவரை எட்டு மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு இருக்கிறார். கவிதைக்காக விளக்கு விருதையும் மொழிபெயரப்புக்காக விகடனின் நம்பிக்கை விருது, நல்லி திசையெட்டும் விருது ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார். தொலைதொடர்பு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்று மதுரையில் வசித்து வருகிறார்.








Leave a Reply