ஆன் செக்ஸ்டன் ஒரு அமெரிக்கக் கவிஞர். தாய்மை, மகப்பேறுகால மனநோய், எப்போதும் சிக்கலுக்குள்ளாகும் நெருக்கமான உறவுகள் ஆகிய பெண்களுக்கேயுரிய பிரச்சினைகள் குறித்த தீவிரமான தனிப்பட்ட, ஒப்புதல் வாக்குமூலக் கவிதைகளுக்காக (confessional poetry) அறியப்பட்டார். 1928 இல் பிறந்த அவர், தனது வாழ்நாள் முழுவதும் உளவியல் நோய்களுடன் போராடினார். இதில் இருமுனைக் கோளாறும் தற்கொலைப் போக்குகளும் அடங்கும். இந்த மனநிலை, இறுதியில் 1974இல் அவரது 46 வயதில், தற்கொலைக்கு வழிவகுத்தது. செக்ஸ்டனின் கவிதைகள் சர்ச்சைக்குரியனவாக இருந்த போதும், அவை பேசும் நேர்மையின் அசல்தன்மைக்காகவும் பெண்கள் இலக்கியத்தில் அவை ஏற்படுத்திய தாக்கத்திற்காகவும் பாராட்டப்பட்டன.
ஆன் செக்ஸ்டன் 1928, நவம்பர் 9 அன்று மாசசூசெட்ஸின் நியூட்டனில் பிறந்தார். இயற்பெயர் ஆன் கிரே ஹார்வி. ஒரு வெற்றிகரமான தொழிலதிபரின் மகளாக, செக்ஸ்டனின் குழந்தைப் பருவம் பொருளாதார ரீதியாக வசதியாக இருந்தது. ஆனால் மகிழ்ச்சியாக இல்லை. அவருடைய பெற்றோருடனான உறவுகள் கடினமாக இருந்தன. செக்ஸ்டனின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவரான அவரது முதல் பெரிய அத்தையின் ஏற்பாட்டில் மாசசூசெட்ஸின் ரோஜர்ஸ் ஹால் லோவலில் உள்ள உறைவிடப் பள்ளியில் பயின்றார். அங்குதான் அவர் முதலில் கவிதை எழுதத் தொடங்கினார். பிறகு ஓராண்டு கார்லண்ட் ஜூனியர் கல்லூரியில் பயின்றார். பத்தொன்பது வயதில் ஆல்ஃபிரட் முல்லர் செக்ஸ்டன் II ஐ மணந்தார். ஆனியும் அவரது கணவரும் சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வந்தனர். தங்களுடைய முதல் மகள் லிண்டா கிரே செக்ஸ்டனின் பிறப்புக்காக அவர்கள் மாசசூசெட்ஸுக்குத் திரும்பினர்.
செக்ஸ்டன், கவிஞர் ராபர்ட் லோவெல்லுடன் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்தார். ஒரு மாடலாகவும் நூலகராகவும் பணியாற்றினார். அவர் குழந்தைப் பருவத்தில் சில கவிதைகளை எழுதியிருந்தாலும் 1950களின் பிற்பகுதியில்தான் தீவிரமாக எழுதத் தொடங்கினார். 1955 ஆம் ஆண்டு இரண்டாவது மகள் பிறந்த பிறகு, உயர்நிலைப்பள்ளிக் காலத்தில் ஏற்பட்ட கவிதை மீதான ஆர்வத்தைத் தொடர செக்ஸ்டன், அவரது மருத்துவரால் ஊக்குவிக்கப்பட்டார். 1957 இலையுதிர்காலத்தில், அவர் பாஸ்டனில் உள்ள எழுத்துக் குழுக்களில் சேர்ந்தார். மாக்சின் குமின், ராபர்ட் லோவெல், சில்வியா பிளாத் போன்ற பலர் அறிமுகமாயினர். அவரது கவிதைகள், ஹார்பர்ஸ், தி நியூ யார்க்கர், சாட்டர்டே ரிவியூ முதலிய இதழ்களில் வெளியாகின.
அவரது முதல் புத்தகமான, பெட்லாமுக்குச் செல்வதும் பாதி வழியில் திரும்புவதும் (To Bedlam and Part Way Back), 1960 இல் வெளியிடப்பட்டது. அவரது மனச்சோர்வையும் மீட்சியையும் பதிவு செய்யும் கவிதைகளின் தீவிரமான, நேர்மையான தன் வெளிப்பாட்டுத்தன்மை காரணமாக இத்தொகுப்பு உடனடியான கவனத்தைப் பெற்றது. செக்ஸ்டனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான “எனது அழகானவர்கள் அனைவரும் (All My Pretty Ones)” 1962 இல் வெளியாகியது. சமரசமற்ற சுய ஆய்வு என்ற நோக்கில் எழுதப்பட்ட கவிதைகள் வாசகர்களை ஈர்த்தன.
1965 ஆம் ஆண்டில், செக்ஸ்டன் லண்டனில் உள்ள ராயல் சொசைட்டி ஆஃப் லிட்டரேச்சரின் ஃபெலோவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவரது மூன்றாவது தொகுப்பான “வாழ் அல்லது இறந்துவிடு, (Live or Die, 1966) ” புலிட்சர் பரிசைப் பெற்றது. மொத்தத்தில், செக்ஸ்டன் தனது வாழ்நாளில் ஒன்பது கவிதைத் தொகுதிகளை வெளியிட்டார். அவர் குமினுடன் பல குழந்தைகள் புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
செக்ஸ்டன் பல முக்கிய இலக்கியப் பரிசுகளைப் பெற்றார், அவற்றில் கக்கன்ஹெய்ம் பெல்லோஷிப், 1967 ஷெல்லி நினைவு பரிசு, 1962 லெவின்சன் பரிசு மற்றும் பிரட் லோஃப் எழுத்தாளர்கள் மாநாட்டிற்கான ஃப்ரோஸ்ட் பெல்லோஷிப் ஆகியவை அடங்கும். அவர் பாஸ்டன் பல்கலைக்கழகத்திலும் கோல்கேட் பல்கலைக்கழகத்திலும் கற்பித்தார்.
செக்ஸ்டன் அக்டோபர் 4, 1974 அன்று மாசசூசெட்ஸின் வெஸ்டனில் தற்கொலை செய்துகொண்டார். அவரது ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில், ஹாரி ரான்சம் மனிதநேய ஆராய்ச்சி மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
என் கருப்பையின் கொண்டாட்டத்தில்
எனக்குள் இருக்கும் ஒவ்வொன்றும் பறவைதான்.
என் எல்லாச் சிறகுகளையும் அசைக்கிறேன்.
அவர்கள் உன்னை வெட்டிவிட விரும்பினார்கள்
ஆனால் அவர்கள் அப்படிச் செய்ய மாட்டார்கள்.
நீ அளவிட முடியாத வெறுமையோடு இருக்கிறாய் என்றார்கள்
ஆனால் நீ அப்படி இல்லை.
சாகும் அளவுக்கு நீ நோயோடிருக்கிறாய் என்றார்கள்
ஆனால் அது தவறு.
ஒரு பள்ளிப்பெண் போல நீ பாடுகிறாய்.
நீ கிழிந்துவிடவில்லை.
இனிய கனமே,
நானென்ற பெண்ணைக் கொண்டாடுகிறேன்
நானென்ற பெண்ணின் ஆத்மாவை
மைய உயிரினத்தை அதன் ஆனந்தத்தைக் கொண்டாடுகிறேன்
உனக்காக நான் பாடுகிறேன். நான் வாழத் துணிந்துவிட்டேன்.
ஹலோ ஆல்கஹால், ஹலோ குவளை,
இறுக மூடு. அது மூடப்பட்டு இருக்கட்டும்.
வயல்களின் மண்ணுக்கு வணக்கம்
வேர்களே, வாருங்கள்.
ஒவ்வொரு உயிரணுவுக்கும் உயிர் உண்டு.
ஒரு தேசத்தை மகிழ்விக்க போதுமானது இங்கே இருக்கிறது.
இந்தப் பொருட்கள் மக்களுக்குச் சொந்தமாக இருந்தால் போதும்.
எவரும், எந்தக் குடியரசும் இதைப் பற்றிச் சொல்லும்.
“இந்த ஆண்டு மீண்டும் நடவு செய்வது நல்லது
அறுவடையை எதிர்நோக்கி யோசி.
ஒரு கருகல் நோய் முன்னறிவிக்கப்பட்டு ஒழிக்கப்பட்டது.”
பல பெண்கள் சேர்ந்து இதைப் பற்றி பாடுகிறார்கள்:
ஒருவன் செருப்புத் தொழிற்சாலையில் இயந்திரத்தைத் திட்டுகிறான்.
ஒருவன் மீன் தொட்டியில் கடல்நாய் வளர்க்கிறான்
ஒருத்தி ஃபோர்டு காரை மந்தமாக ஓட்டுகிறாள்.
சுங்கச்சாலையில் ஒருவர் சுங்கம் வசூலிக்கிறார்
அரிசோனாவில் ஒருவர் ஒரு கன்றுக்குட்டியின் கயிற்றைக் கட்டுகிறார்.
ருஷ்யாவில் ஒருவர் செல்லோ இசைக்கிறார்.
எகிப்தில் ஒருவர் அடுப்பில் பானைகளை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
ஒருத்தி தன் படுக்கையறைச் சுவர்களில் நிலவின் வண்ணம் பூசுகிறாள்.
ஒருவர் இறந்து கொண்டிருக்கிறார்
ஆனால் காலையுணவை நினைவு வைத்திருக்கிறார்,
தாய்லாந்தில் ஒருத்தி தனது பாயில் உடலை நீட்டுகிறாள்
ஒருத்தி தன் குழந்தையின் குண்டியைத் துடைத்துக் கொண்டிருக்கிறாள்.
ஒருவர் ரயிலின் ஜன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்க்கிறார்
வயோமிங்கின் நடுவில் மேலும் ஒருவர்
எங்கு வேண்டுமானாலும் இருக்கிறார் மேலும்
ஒருவர் எங்கெங்கும் இருக்கிறார் எல்லோரும்
பாடிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது, சிலர்
ஒரு இசைக்குறிப்பைக்கூடப் பாட முடியாது எனினும்
இனிய எடை,
பெண்ணாகிய எனது கொண்டாட்டத்தில்
ஒரு பத்தடி நீள ஸ்கார்ஃபை வைத்திருக்க அனுமதியுங்கள்
பத்தொன்பது வயதினருக்காக முரசு கொட்ட என்னை அனுமதியுங்கள்,
காணிக்கைக்குக் கிண்ணங்களை எடுத்துச் செல்ல என்னை அனுமதியுங்கள்
(அது என் பங்காக இருந்தால்).
இதயநாளத் திசுக்களை ஆய்வுசெய்ய அனுமதியுங்கள்,
விண்கற்களின் கோணத் தொலைவை ஆராய என்னை அனுமதியுங்கள்.
பூக்களின் தண்டுகளை உறிஞ்ச என்னை அனுமதியுங்கள்
(அது என் பங்காக இருந்தால்).
சில பழங்குடி உருவங்களைச் செய்ய அனுமதியுங்கள்
(அது என் பங்காக இருந்தால்).
இந்த விஷயத்திற்காக உடலுக்குத் தேவைப்படுகிறது
என்னைப் பாட அனுமதியுங்கள்
இரவு உணவுக்காக,
முத்தமிடுவதற்காக,
சரியான ஆம்
சொல்வதற்காக.
லட்சியப் பறவை
அதனால் இது இந்த நிலைக்கு வந்துள்ளது –
அதிகாலை 3:15 மணிக்குத் தூக்கமின்மை,
கடிகாரம் அதன் எந்திரத்தை ஒலிக்கச் செய்கிறது
ஒரு தவளை பின்தொடர்வது போல
ஒரு சூரியக் கடிகாரம், இன்னும் மின்சார வலிப்பு
கால் மணி நேரத்தில்.
வார்த்தைகளின் வியாபாரம் என்னை விழித்திருக்க வைக்கிறது.
நான் கோகோ அருந்துகிறேன்,
சூடான பழுப்பு நிறப் பால்
நான் எளிமையான வாழ்க்கையை விரும்புகிறேன்
எனினும் இரவு முழுவதும் ஒரு நீண்ட பெட்டியில்
கவிதைகளை இடுகிறேன்.
அது என் நித்தியப் பெட்டி,
என் வெளியே-இடு திட்டம்
என் சவப்பெட்டி.
இரவு முழுவதும் இருண்ட சிறகுகள்
என் இதயத்தில் படபடக்கின்றன.
ஒவ்வொன்றும் ஒரு லட்சியப் பறவை.
பறவை கீழே விழ விரும்புகிறது
தல்லாஹாச்சி பாலம் போன்ற உயரமான இடத்திலிருந்து.
சமையலறை தீக்குச்சியைப் பற்ற வைக்கவும்
தானே தீக்குளிக்கவும் விரும்புகிறான்
அவன் மைக்கேலாஞ்சலோவின் கைக்குள் பறக்கவும்
கூரையில் ஓவியமாக வெளிவரவும் விரும்புகிறான்.
மலைக்குளவியின் கூட்டைத் துளைக்கவும்
நீண்ட தெய்வத் தலையுடன் வெளிவரவும் விரும்புகிறான்.
அவன் ரொட்டியையும் வைனையும்
கரீபியனில் மகிழ்ச்சியாக மிதக்கும் ஒரு மனிதனை அழைத்து வரவும் விரும்புகிறான்.
தானொரு சாவியைப் போல அழுத்தப்படவும்
அதனால் மாயவுலகை அவனால் திறக்க முடியவும் விரும்புகிறான்
அந்நியர்கள் மத்தியில் விடைபெறவும்
தன் இதயத் துணுக்குகளைக் குதிரைப்படையைப் போல கடந்து செல்லவும் விரும்புகிறான்.
தனது உடையை மாற்றுகையில் இறக்கவும்
வைரம் போல சூரியனை நோக்கிப் பாயவும் விரும்புகிறான்.
அவன் விரும்புகிறான், நான் விரும்புகிறேன்.
அன்பான கடவுளே, வெறுமனே கோகோ அருந்தினால்
சரியாக, போதுமானதாக இருக்காதா?
ஒரு புதிய பறவையை வாங்க வேண்டும்
ஒரு புதிய நித்தியப் பெட்டியையும்.
இந்த ஒன்றுக்குள்ளே போதிய முட்டாள்தனம் இருக்கிறது.
என்றார் கவி ஆய்வாளரிடம்
என் தொழில் வார்த்தைகள்.
சொற்கள் லேபிள்களைப் போன்றவை,
அல்லது நாணயங்கள் அல்லது இன்னும் சிறப்பாக,
தேனீக்கள் மொய்ப்பது போல.
நான் விஷயங்களின் மூலாதாரங்களால் மட்டுமே உடைந்துபோனேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்;
மாடத்திலுள்ள செத்த தேனீக்களைப் போல
வார்த்தைகள் எண்ணப்படுவது போல,
அவற்றின் மஞ்சள் நிறக் கண்களிலிருந்தும்
உலர்ந்த சிறகுகளிலிருந்தும் கழற்றப்பட்டன.
ஒரு சொல் எவ்வாறு இன்னொன்றைத் தேர்ந்தெடுக்க முடிகிறது,
இன்னொன்றை நெறிப்படுத்துகிறது
என்பதை நான் எப்போது மறக்க வேண்டும்
நான் சொல்லியிருக்கக் கூடிய ஏதாவது ஒன்றை நான் பெறும் வரை…,
ஆனால் சொல்லவில்லை.
உங்கள் வேலை என் சொற்களைக் கவனிப்பது.
ஆனால் நான் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை.
உதாரணமாக, நான் சிறப்பானதைப் படைக்கிறேன்,
நாணயம் அச்சிடும் எந்திரத்தைப் புகழ்ந்து நான் எழுதுகையில்
நெவாடாவில் அந்த ஒரு இரவு: மாயமந்திர ஜாக்பாட் எப்படி
நலவாய்ப்புத் திரைமீது மூன்று மணிகளை எழுப்பியபடி வந்தது?
ஆனால் இது இல்லை என்று நீங்கள் சொல்ல வேண்டுமானால்,
பிறகு நான் பலவீனமடைகிறேன்,
என் கைகள் எப்படி உணர்ந்தன என்பதை நினைவில் கொள்கிறேன்
வேடிக்கையானது மற்றும் அபத்தமானது
பணத்தை நம்பும் அனைவரும் கூடி நெரிசலானது.
Designed by NovelteeDesignStudio
1980 களில் கவிதைகள் எழுதத் தொடங்கிய சமயவேல் இதுவரை ஒன்பது கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டு இருக்கிறார். மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டுள்ள இவர் இதுவரை எட்டு மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு இருக்கிறார். கவிதைக்காக விளக்கு விருதையும் மொழிபெயரப்புக்காக விகடனின் நம்பிக்கை விருது, நல்லி திசையெட்டும் விருது ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார். தொலைதொடர்பு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்று மதுரையில் வசித்து வருகிறார்.








Leave a Reply