இருள் அணைந்த வீடு
ஊதிக் கெடுத்தும் ஒரு அணங்கும் சுடரை
என் வீட்டில் தனித்த அறையில்
இப்பொழுதும்
நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன்
என் முன்னோர்கள் பற்றவைத்த தீ
அது காலங்காலமாய் எரிந்துகொண்டிருக்கிறது
என் பட்டினி ராத்திரிகள்
பயங்கரமாய் அலறும்போது
நான் பயந்து நடுங்கிப் போகிறேன்
நான் ஊதும்வரை அணையாதிருக்கும்
அந்தச் சுடரின் வெளிச்சம்
ஈன்று பெருக்கும்
கரிந்த மணமுள்ள வாசனையை
ஆளரவமற்ற காலத்திலும்
நினைவின் தாழ்வாரங்கள் மணத்துக் கிடக்கின்றதன
வாழ்வின் பூசனம் படிந்த ஆதிவார்த்தையைப்
பூனை நக்கிக்கொண்டு
முன்னங்காலொன்றைத்
தலைக்கு அண்டக்கொடுத்து
இருள் அணைந்த வீட்டில்
தூங்கிக் கிடப்பது ஏனோ பரிதாபகரமாய் இருந்தது
மகிமையின் நிலவிளக்கு
தேவாலயம் ஆளற்றுக் கிடக்கிறது
மகிமையின் நிலவிளக்கு
இறுதி நாளின் தலையில் ஔிர்கிறது
கைகளிலிருந்து ரத்தக்கறை
இன்னும் உலராதிருக்கின்றது
இந்த அமைதி சத்தியம் செய்ததுபோல்
ஏதோவொரு ரகசியமாகக் கனக்கிறது
பழங்கால ஓவியங்கள் சிதிலமடைந்திருக்கின்றன
இதுவரை எந்தச் சிலுவையிலும் புன்னகைக்காத யேசுபிரான்
தன் பிதாவிடம் மன்றாடுவது கேட்கின்றது
பிதாவே மக்களின் குற்றங்களுக்கு
என்னை ஏன் சிலுவையில் அறைந்தீர்கள்
என்னை ஏன் பலிகொடுத்தீர்கள்
நான் மறிகளோடு விளையாடித் திரிந்தவன்
என்னை கர்த்தராக்கிப் பாவங்களைத் தாங்கச் செய்தீர்கள்
புனிதராக்கிப் பயங்கரமாய்த் தண்டித்தீர்கள்
போங்கள் பிதாவே
நான் சிரித்து இரண்டாயிரம் வருடங்கள் கடந்துவிட்டன
சிலந்திவலைப் பின்னி
என் உடல் முழுக்கக் காயங்கள் மறைக்கப்பட்டுவிட்டன
யாருமற்ற வெறிச்சோடிய இந்த ஆலயத்தில்
யாரின் பாவம் சுமக்க இன்னும் காத்துக்கொண்டிருக்கிறேன் என்பதுதான்
உங்கள் மீது சத்தியமாய்த் தெரியவில்லை ஃபாதர்
நான் மூச்சை விடுவதாக இல்லை
உலகத்தின் முதல் பகலையும்
கடைசி இரவையும்
நான் பார்க்க முடிந்ததில்லை
என் வெளிச்சத்தையோ
என் இருட்டையே கூடப் பார்த்தவர்கள்
நிறைய சிரித்தும் நிறைய அழுதும் இருக்கிறார்கள்
அந்த இரு நிறங்களுக்குள்ளும்
நான் வாழ்ந்ததாக நம்பப்பட்ட காலங்கள் உண்டு
என் உடம்புக்குள் பாய்கின்ற ரத்தத்தில்
நல்ல கனவுகள் அமைதி இழந்து ஓடுகின்றன
அதிபயங்கரமானதொரு நிர்க்கதியில் நிற்கிறேன்
என் கால்களின் புழுதியில்
அழுக்குப் படிந்த அதன் விரல்கள்
வாழ்க்கையின் நாய்போல் குரைத்துகொண்டிருந்ததை அறிந்தேன்
அவை என் உடலைச் சுற்றி மோப்பமிடுகின்றன
அதன் மூக்கு
அகண்ட பிரபஞ்சம்போல் விரிந்துகொண்டே இருந்தது
எந்தக் கணத்திலும்
நான் மூச்சை விடுவதாக இல்லை
Art : JOHN PICKLES








Leave a Reply