கன்னட எழுத்தாளர் ஜயந்த் காய்கிணி, கொங்கனியைத் தாய்மொழியாகக் கொண்டவர். இருபது ஆண்டுகளுக்கு மேல் மும்பையில் மருந்து உற்பத்தித் துறையில் பணியாற்றியவர். கர்நாடகத்தின் கடற்கரை நகரமான கோகர்ணாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். ‘பாவனா’ என்றொரு இலக்கிய இடைநிலை இதழுக்கு ஆசிரியராக இருந்தார். திரைப்படப் பாடல்கள் எழுதியுள்ளார். திரைக்கதைகளும் எழுதியுள்ளார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கன்னட வடிவத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மிகவும் பேசப்பட்டன.
ஆங்கிலத்தில் ‘No presents please’ ‘Mithun number two’ ஆகிய இரு சிறுகதைத் தொகுப்புகள் வாசிக்கக் கிடைக்கின்றன. தேஜஸ்வி நிரஞ்சனா மும்பைக் கதைகள் எனும் அடிப்படையில் அவற்றை தொகுத்து மொழியாக்கம் செய்துள்ளார். தமிழில் ‘மகிழம்பூ மணம்’ எனும் தலைப்பில் கே.நல்லதம்பி மொழியாக்கத்தில் இவரது சில சிறுகதைகளைக் காலச்சுவடு வெளியிட்டுள்ளது.
வாசிக்கக் கிடைக்கும் காய்கிணியின் கதைகளின் களம் மும்பை எனும் பெருநகரம்தான். தமிழில் நாஞ்சில்நாடனும் அம்பையும் மும்பையைக் களமாகக் கொண்டு புனைவுகளை எழுதியுள்ளார்கள். புனைவுகளில் இரண்டு மும்பைகள் வெளிப்படுகின்றன. ஜீத் தாயிலின் நார்கோபோலிஸ், கிரேக்கரி டேவிட் ராபர்ட்ஸின் சாந்தாராம் போன்றவை காட்டும் மும்பை என்பது இருண்ட பாதாள நகரம். இன்னொரு பக்கம் காய்கிணியின் நாஞ்சிலின் மும்பை. நாஞ்சிலின் தன்ராம் சிங் கான் சாகிப் போன்ற கதைகளை வாசிக்கும் போது நமக்கு மனிதர்கள் மீது வாஞ்சை பெருகுகிறது. சண்டாஸுக்கும் (மலம் கழிக்கவும்) உணவுக்கும் அலைந்தாலும், அவமானங்களை எதிர்கொண்டாலும் வாழ்வின் மீது நம்பிக்கை இழக்காத மனிதர்கள். காய்கிணியின் கதை மாந்தர்களும் ஏறத்தாழ இதே இயல்புடையவர்கள்தான். இன்னும் சொல்வதானால் ஒருபடி மேலே, அசோகமித்திரன் மொழியில் வண்ணதாசன் கதை மாந்தர்களுடன் ஒப்பிடத்தக்கவர்கள். அவர்களுக்கு எதன் மீதும் பெரிதாகப் புகாரில்லை. எதிர்மறைப் பாத்திரங்கள் ஏதுமின்றிச் சூழலுடனான முரண்கள் வழியாகவே கதைகளைக் கட்டமைக்கிறார். அதிகபட்சம் தங்களது சிறுமையை எண்ணி நாணுகிறார்கள். ‘கேக்கூவும் பியாரிலாலும்’ கதையில் நகலகம் நடத்தும் கேக்கூ வாசலிலேயே பழக்கடை நடத்தும் பியாரிலாலுக்குத் தெரியாமல் லஸ்ஸி குடித்துவிட்டு வருவதற்காகக் கூசுகிறான்.
சூழல்கள் ஏற்படுத்தும் மோதல்கள்தான் கதைகள் சந்திக்கும் முதன்மை முரண். வயது முதிர்ந்த கேகே எனும் சமூகச் செயல்பாட்டாளரை நாயகராகக் கொண்ட ‘Spotless’ கதையில் வரும் ஒரு வரியை காய்கிணியின் கதைகளின் மைய தரிசனம் எனக் கொள்ளலாம். ‘நோய்களுக்கும் அசிங்கங்களுக்கும் மத்தியில் ஒரு மாயாஜாலம் போல அழகைக் காண்பது’ . ஆகவேதான் மருத்துவமனை பல கதைகளின் களமாக ஆகிறது. ‘பார்ட்னர்’ எனும் கதையில் ரூபக் ரதோட் தன் சக அறைவாசி திடீரென்று வளத்துடன் வாழ்வதாக ஐயம் கொள்கிறான். ஆனால் அவன் அப்பன் டிசைன் நோயில் தவிக்கும் போது ரதோட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உடன் இருக்கிறான். பலவீனமான தருணங்களில் மனிதர்கள் உடன் நிற்க விழைகிறார்கள். ஜெயமோகனின் ‘புறப்பாடு’ நூலில் ‘கையீரம்’ என்றொரு பகுதியில் பொருளியல் ரீதியாகப் பலவீனமாக இருப்பவர்கள் கொடுப்பதில் அடையும் உவகையைச் சொல்வதை நினைத்துக்கொண்டேன். ஒரு சிறிய அகங்கார நிறைவு என்று கூடச் சொல்லலாம். ‘விழிப்பின் முடிவில்’ எனும் கவிதை மருத்துவமனையில் நிகழ்கிறது. ஒரு பிரார்த்தனையோடு நிறைவடைகிறது.
மருத்துவமனையின் எல்லாக் கதவுகளும் திறக்கக்கடவது
ஜுரம் ஏறிய கண்களுடன் எல்லாக் குழந்தைகளும் என்னை வந்து கட்டிக்கொள்ளக்கடவது
ஒளிக்கீற்று ஒன்றும் சிறு முத்தத்தில் எல்லாப் புண்களும் ஆறக்கடவது
கண்ணீர் நம் நெஞ்சகத்துப் பாலை திரிக்காதிருக்கக்கடவது
அசோகமித்ரன் எழுதிய நாவலின் தலைப்பு ‘ஒற்றன்’. யுவன் சந்திரசேகர் சிறுகதைத் தொகுப்பிற்கு ‘ஒற்றறிதல்’ எனப் பெயரிட்டிருப்பார். சாமானிய மக்களின் வாழ்வை மேலிருந்து இகழ்ச்சியுடன் நோக்காமல், கீழிருந்து உயர்த்திக் காட்டாமல், அவர்களுடன் ஒருவராக இருந்து எழுதுவது. மக்களோடு மக்களாக இருந்தாலும் கூட எழுத்தாளர் என்பவர் வேறொருவர்தான். ஆனால் அதை அவர் மட்டுமே அறிந்திருப்பார்.
பெருநகரங்களைப் பிணைக்கும் ஆற்றல் என்பது பசிதான். நகரம் எல்லோரையும் விடுவிக்கிறது என்று காய்கிணி ஆழமாக நம்புகிறார். சாமானிய மக்களின் பிரார்த்தனைகள் கதைகள் முழுவதும் நிரம்பிக் கிடக்கின்றன. பல சமயங்களில் அவர்கள் பெரிதாக எதையும் கோரவில்லை. “இவனுடைய குட்டிக் கடையின், குட்டிச் சட்டத்துக்குள், இவனுடைய குட்டிக் கடவுள், இவனுடைய சுவர்க்க நரகத்தைக் காப்பாற்று. இவனுடைய டீ ஷர்ட்களை இஸ்த்ரி செய்” என்று “கண்ணுக்குத் தெரியாத காடு” கதையில் குசுமா தொலைந்து போய் மீண்டும் கிடைத்த அல்லது கிடைத்ததாக நம்பப்படும் தனது சகோதரனுக்காக வேண்டிக் கொள்கிறாள். சற்று தொலைவில் ஒரு சிறிய கடையில் அமர்ந்திருப்பவன் அவளது சகோதரனா இல்லையா என்று அறிய அவள் துணியவில்லை. சாத்தியங்கள் சாத்தியங்களாக மட்டும் நீடிக்கும் வரை அதன் மர்மம் தீர்வதில்லை. சகோதரனின் மீதான அன்பின் காரணமாக அவனை மீண்டும் தனது குடும்பச் சூழலுக்குள் இழுத்து வர மனமின்றித் தவிர்க்கிறாள். ‘மகிழம்பூ மணம்’ கதையில் ஷசாங்கன் தனது இளமையில் கண்ட சரோஜினியை மருத்துவமனையில் சந்திக்கிறான். சிகிச்சை செய்து கொண்டால் நினைவுகளை இழந்து விடுவாள் சரோஜினி. ஷசாங்கனின் வருகை அவளது முடிவில் சில குழப்பங்களை ஏற்படுத்துகிறது. ஷசாங்கன் அவளைச் சந்திக்காமலேயே விலகுகிறான். உயிர் வாழ்தல் என்பதன் பொருள் என்ன? நினைவுகளைப் பணயம் வைத்து உயிர் வாழ்வதன் பயன் என்ன? “கடவுளே, எல்லோருக்கும் புதிய புதிய நினைவுகளை அருள்” எனும் ஷசாங்கனின் பிரார்த்தனையுடன் கதை நிறைவடைகிறது. காதலித்து மணமுடித்தவன் ‘கேட்வே’ கதையின் சுதாம்ஷு. குடும்பத்தைக் காப்பாற்றத் தத்தளிக்கிறான். ‘என் நகரமே, என் நிர்வாணமே, எனக்காக நிழலைத் தந்த பகலே, பறக்க முடியுமளவுக்கு என்னை லேசாக்கு’ என நகரத்திடம் கோருகிறான்.
மும்பை எனும் பெருநகரத்திற்கு எழுதிய காதல் கடிதம்தான் ஜயந்த் காய்கிணியின் கதைகள் எனும் எண்ணம் ஏற்பட்டது. “இரவு எல்லாக் காட்சிகளும் முடிந்த பிறகு வெறுமனே மஞ்சள் விளக்கின் தெருக்களில் நடப்பான். அப்போது அவனுக்கு இந்த நகரத்து மக்களை மடிமேல் படுக்க வைத்துக்கொண்டு தான் மட்டுமே விழித்துக்கொண்டு காக்கும் அம்மாவைப் போலத் தோன்றும்” என ஓபேரா ஹவுஸ் கதையில் ஒரு சித்தரிப்பு உள்ளது. ஒரு நகரமே அதன் வாசிகளுக்கு அன்னையாகும் தருணம். ‘தப்பித்துப் பிழைப்பதே உண்மையான மகிழ்ச்சி!’ என்றொரு வரி துஃபான் மெயில் கதையில் உள்ளது. நகரத்தின் கிளர்ச்சி அல்லது வசீகரம் அதுதான். ‘டயமண்ட் சர்க்கஸில் பிறந்த குழந்தை’ ‘துஃபான் மெயில்’ ‘மரணக் கிணற்றுக்கான படிகள்’ போன்ற கதைகள் சர்க்கஸைப் பின்புலமாகக் கொண்டவை. இவர்கள் தங்களது வாழ்வின் அர்த்தத்தை உசாவுகிறார்கள். சர்க்கஸ் சாகசங்கள் இயல்பாக நிகழும் இடம். சாகசங்கள் வேடிக்கை மக்களை மகிழ்விக்கின்றன என்பதைத் தாண்டி அதில் ஈடுபடுபவர்களுக்குப் பிழைத்திருப்பதின் மகிழ்ச்சியை நல்குகின்றன. பெருநகர வாழ்க்கையின் சாரம் என்பது பிழைத்திருப்பதுதான். மும்பையை ஒரு பிரமாண்டமான சர்க்கஸாகக் காண முடியும்.
நாம் பார்க்கும் சாமானிய முகங்களுக்கு பின்னே ஒரு நெடிய கதை இருக்கக்கூடும். மும்பைத் தெருக்களில் “எனக்கும் தந்தை உண்டு” எனக் கூவும் வடநாட்டு வியாபாரியைப் பற்றிய ஒருவரி வரும். தந்தையும், தாயும், ஊரும், நிலமும் எல்லாமும் உண்டு. ‘கேட் வே’ கதையில் ‘அவனுடைய நாற்பது ஆண்டுகளுக்கு என்ன பொருள். நரை படிந்த புருவங்களின் இந்தப் பெயர் தெரியாதவன் நாற்பது ஆண்டுகளுக்கு முன் எந்தத் தொட்டிலில் சிசுவாக இருந்தான், எந்தக் கைகளால் எண்ணெய் நீராடினான், எந்தப் போட்டிகளில் ஓடினான், எந்தப் பெயர்களுடன் இருந்தான், எல்லாம் கடந்து, கடைசியாக இங்கே, இந்த மும்பையில், இந்தக் காலாகோடாவில், இந்த இரண்டே அடி இடத்தில் நின்றுகொண்டு, சின்னப் பெட்டியைத் திறந்து சாவிக்கொத்தை விற்போம் என்ற முடிவை எப்படி எடுத்தான்’ என்று எழுதுவது பெரும் பரிவின் பாற்பட்டது.
நகரம் எல்லோரையும் எல்லா நேரங்களிலும் வாழவைப்பதில்லை. சிலரைக் கைவிடவும் செய்கின்றன. தேவைகள் உறவுகளைத் தீர்மானிக்கிறது எனும் உண்மையை நகரம் ஏற்றுக்கொள்கிறது. ஆகவே அங்கே குற்றவுணர்வுக்குப் பெரிய இடமில்லை. ‘கண்ணாடி இல்லாத ஊரில்’ கதையில் மத்தியவயதைக் கடந்த திருமணமாகாதவர்களின் கதை சொல்லப்படுகிறது. சத்யஜித் பற்றிய சித்தரிப்பு இது. ‘குளியலறைக் கூண்டிலுள்ள சோப் டப்பாவில் இருக்கும் சோப்பைப் போன்ற மென்மையான மனத்தோடு ஒவ்வொருவரும் அசைபோட்டுக்கொண்டிருக்கும்போது, அவன் மட்டும் என்றோ கைநழுவி கண்ணுக்குத் தெரியாமல் வெயிலில் காயும் பழைய சோப் வில்லையைப்போல, முக்குணமற்ற, துவந்தமற்ற, சத்தியத்தைப்போல, மினிமம் பேலன்ஸ் வைத்துக்கொண்ட வங்கிக் கணக்குபோல இருந்து விட்டான்.’ அவன் தனக்கு வரனாக வந்த ஷாலினி சென் குறித்து எண்ணிப் பார்க்கிறான். ‘இந்த நகரத்திற்குப் புலம் பெயர்ந்து நிலைத்த அல்லது நிலையற்ற குடும்பம் ஒன்றின் பிள்ளையாக இருக்கலாம் அவள். எங்கேயோ தவழ்ந்திருக்கிறாள். தன் ஒருவனைத் தவிர, இலட்சக்கணக்கான முகங்களைப் பார்த்து வளர்ந்திருக்கிறாள். பாழாய்ப்போன மும்பை இந்தி பேசிக்கொண்டு, தோழிகளின் வீட்டில் நகத்திற்குச் சாயம் பூசிக்கொண்டு, நவராத்திரியன்று கர்பா நடனமாடிக் கொண்டு, கணபதிக்கு “மோரயா” என்று கூவி கடலில் நனைந்து ட்ரக்கில் அசைந்தாடிக்கொண்டு வயதிற்கு வந்த அந்தப் பிள்ளையை, இந்த நகரம் “எல்லாம் சரியாகும்” என்று சொல்லிக்கொண்டே ஏதோ ஒரு நொடியில் திடீர் என்று கைவிட்டிருக்கவேண்டும். அப்போது அவள் நடுங்கி இருக்கிறாள். உலகமெல்லாம் முன்னேறிக்கொண்டிருக்கும்போது தான் ஒருவள் மட்டும் வரிசை விட்டு விலகி சாக்கடையில் விகோ டர்மரிக் பூசிக்கொண்டு தங்கிவிட்டதாக எண்ணித் தவித்திருக்கிறாள்.’
ஜயந்த் காய்கிணி கதைகளில் என்னை மிகவும் பாதித்தது ‘பால் மீசை’ எனும் கதைதான். புண்டலீகன் தனது கர்நாடக பூர்வீக கிராமத்தில் மலர்வனத்தில் மலர்களைக் கொய்து கொண்டிருந்தான். தந்தையை இழந்தவன், தாயும் முடமாகிவிட்டாள். மும்பைக்குப் பெயர்ந்து ஒரு சிறிய அடுக்குமாடிக் குடியிருப்பில் பதினொரு வயது புண்டலீகன் வீட்டு வேலைகளைப் பார்த்தபடி அங்குள்ள மூன்று வயது குழந்தையைக் கவனித்து வாழ்கிறான். அவள் அவனது தங்கையை அவளுக்கு நினைவுறுத்துகிறாள். ஊரில் நல்லபடியாக வாழ்ந்து வருகிறாள் என்றெண்ணி ஆறுதல் கொண்டிருந்தவனுக்கு அதிர்ச்சி. எட்டு வயது தங்கையும் மும்பையில் வேறொரு வீட்டில் ஆறுமாதக் குழந்தையைப் பார்த்துக்கொண்டு வசிக்கிறாள் என்பதையும் அறிகிறான். தங்கை தனது பணிகளைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று அண்ணன் அறிவுறுத்த வேண்டும். அண்ணனுடனான சந்திப்புதான் அவளை ஓட வைக்கும் கேரட். நல்ல உடை உடுத்திய அண்ணன் தங்கையுடன் பேசுவதற்காக ஒரு அறைக்குள் அனுப்பி வைக்கப்படுகிறான். அவர்களுக்குள் ஒரு சொல்லும் பரிமாறிக் கொள்ளப்படவில்லை. இறுகி கனத்த மவுனமே எல்லாவற்றையும் கடத்தி விடுகிறது. ஒரு கதைக்குள் மவுனத்தின் வலிமை என்ன என்பதை உணர்வதற்குத் தலைசிறந்த உதாரணமாக இந்தக் கதையைச் சொல்லிவிட முடியும். ஏதோ ஒன்று வேண்டும் என அடம்பிடிக்கும் போது வேறொன்றைக் கொடுத்துச் சமாதானம் செய்வது. பால் மீசை வைராக்கியத்தில் பிறந்ததுதான் என்றாலும். பசிக்கு முன், பிழைக்க வேண்டும் எனும் அவாவிற்கு முன் அந்த வைராக்கியத்திற்கு எந்தப் பொருளும் இல்லை. சற்று நேரத்தில் மறைந்து விடும் பால் மீசை. குழந்தைகளைப் பணியமர்த்தும் குடும்பங்களும் இந்த நகரத்தின் சூழலில் இருந்து எழுந்து வருபவைதான்.
எனக்கு மிகப்பிடித்த இன்னொரு கதை ‘நோ பிரசண்ட்ஸ் ப்ளீஸ்.’ மும்பையின் தெருக்களில் வளர்ந்த போபட்டும் ஆசாவரி லோகாண்டேவும் திருமணம் செய்து கொள்வதாக முடிவெடுக்கிறார்கள். அதற்காக அழைப்பிதழ் அடிக்க இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். போபட் ஆசவரி லோகண்டேக்கு இருக்கும் சாதி பின்னொட்டு போல தனக்கேதும் இல்லையே என்று வருந்துகிறான். ஆசவாரிக்குத் தெரியும் அது தன்னை வளர்த்தெடுத்த அநாதை ஆசிரமத்தில் இருந்து ஒட்டிக்கொண்ட பின்னொட்டு என்று. மிக நுட்பமான சிக்கலைக் கதையாக்கியிருக்கிறார். புறச் சூழலுக்கும் அகத்திற்கும் இடையிலான இசைவு வெளிப்படும் பகுதிகள் பலவும் உண்டு. ‘கேக்கூவும் பியாரிலாலும்’ கதையை எடுத்துக்கொண்டால் கேக்கூ நகலகம் நடத்துபவன். பியாரிலால் நாடோடி. இப்போது பழக்கடை நடத்துகிறான். கேக்கூ அடுத்து என்ன பாடல் வரும் என்று நன்கறிந்த கேசட்டுகளைக் கேட்க விரும்புகிறான். பியாரிலால் ரேடியோ கேட்பவனாக, அடுத்து என்ன எனும் நிச்சயமின்மையையை ஏந்திக் கொள்பவனாக இருக்கிறான். நினைவுகளைத் தொலைக்கும் நோயுடைய சரோஜினிக்குப் புதிதாக மலர்ந்த மகிழம்பூவை விட, அது வாடிய பின் வரும் வாசம்தான் விருப்பம். அம்மா முதல்நாள் சூடிய மலரை மறுநாளும் அவள் சூடிக்கொள்வாள் என்பதொரு நுட்பமான சித்தரிப்பு. ‘பால் மீசை’ கதையில் மும்பையின் சிறிய குடியிருப்பிற்குள் மலர்ச் செடிகளைத் தொட்டியில் வளர்க்க முயற்சிக்கிறான். நகரத்தின் நெரிசலுக்கு இடையே தனது ஊறி உருவாக்க முனைகிறான் என்று வாசிக்க இடமுண்டு. நகரம் என்பதே இப்படிப் பலருடைய ஊர்களைத் தாங்கிக்கொள்ளும் தொகை தானே.
கவிஞரின் மொழியில் புனைவுகளை வாசிக்கும்போது சில பிரத்யேகமான ஜாலங்களை நிகழ்த்த முடியும். கல்பற்றா நாராயணனின் சுமித்ரா நாவல் மொழி அழகுக்காகவே வாசிக்கப்பட வேண்டியது. காய்கிணி கதைகளுக்கும் அத்தகைய ஒரு தன்மை உண்டு. ‘A horizon for each eye’ எனும் கதை ‘எனது தற்கொலைக்குக் காரணம் தேடாதீர்கள். அது என்ன என்று தெரிந்திருந்தால், நான் அதைச் செய்திருக்க மாட்டேன்’ என்று தொடங்குகிறது. ‘ டிக் டிக் நண்பன்’ கதையில் ‘மருத்துவமனை கேன்டீனுக்கு அதற்கே உரிய ஒரு மென்மையான குணம் இருக்கும். சாதாரணமாக மற்ற ஓட்டல்களில் இருக்கும் ஒருவகை பேய்ப் பசி கொண்டவர்களின் வேகம் இங்கே காணப்படுவதில்லை. பெரிய ட்ரேயில் தோசையையோ, பெரிய பூரியையோ பிடித்த சர்வர் தூரத்தில் தெரியும்போதே ‘இது என்னுடையது’ என்று நினைக்கும் அவசரத்தின் முகம் அனிச்சையாக விரிந்து பரவும் நரம்புகள் இங்கே குறைவு. என அதன் பிரத்யேகத்தன்மை விவரிக்கப்படுகிறது. ‘வி.டியிலிருந்து வாரத்திற்கு ஒருமுறை போகும் இரயில் அந்தப் பாலத்தின் மேல் போகும். ஆயிரம் மைல் தொலைவில் இருக்கும் அந்த ஊர் – வி.டி.யை ஸ்பரிசித்துக்கொண்டே இருப்பதுபோல எனக்குத் தோன்றுகிறது’ என்று கேட் வே கதையில் எழுதுகிறார். நினைவைத் தக்கவைக்க நோயுடன் போராடும் சரோஜினியைச் சித்தரிக்கும் போது மகிழம்பூ மணம் சிறுகதையில் ‘பால்யத்திலிருந்து இதுவரை அவளுடைய எல்லாக் கட்டங்களின் கோட்டோவியங்களும் ஒன்றன் மேல் ஒன்று படருவதைப்போல சரோஜினி தெரிந்தாள்’ என்று எழுதுகிறார். இவற்றை செறிவான மொழியில் மொழியாக்கம் செய்த நல்லதம்பியைக் குறிப்பிட வேண்டும். ‘டிக் டிக் நண்பன்’ கதையில் ‘தினசரியின் எல்லா வேலை இரைச்சல்களுடைய அடித்தளத்தின் ஆழத்தில் இருக்கும் விசாலமான நிசப்தத்தின் வட்டத்துக்குள் ஒரு விநோதமான’ ஆறுதலைக் கண்டடைய முயல்கிறாள் கதை நாயகி. காய்கிணியின் கதைகள் அவற்றைத்தான் செய்ய முயல்கின்றன.
சுனில் கிருஷ்ணன் பாண்டிச்சேரியின் காரைக்காலில் பிறந்தவர். அம்புப்படுக்கை, விஷக் கிணறு ஆகிய சிறுகதை நூல்களையும் நீலகண்டம், குருதிவழி ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார். அம்புப் படுக்கை நூலுக்காக யுவபுரஸ்கார் விருதுபெற்ற இவர் ஆயுர்வேத மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார்.








Leave a Reply