இந்தக் கதையைக் காதலிலிருந்து துவங்குவதா இல்லை சேவலிலிருந்து துவங்குவதா என்பதில் எனக்கு வலுத்த குழப்பமிருந்தது. இதுபோன்ற சந்தர்ப்பத்தில் ஒரு வாலிபன் காதலைத் தேர்ந்தெடுப்பதே இயல்பு. ஆனால் நான் சேவலைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். “இயல்பாக இருப்பவை அனைத்தும் உசிதமாக இருக்க வேண்டியதல்ல” என்பதொரு சைபீரியப் பழமொழி.
எங்கள் வீட்டுக்கூரைக்கும் ஆகாயத்திற்கும் இடையில் நன்கு விளைந்த அதிபழைய வேப்பமரத்தின் கிளை ஒன்று நின்றிருக்கிறது. அனுதினமும் காலையிலேயே அங்கே கூட்டாகப் பறவைகள் வந்தமர்ந்து கூச்சல் போடத் துவங்கிவிடும். ஏதோ என்னை எழுப்புவதுதான் அதன் இன்றியமையாத கடமை போல. அதற்கே அதன் பெற்றோர்கள் அவைகளைப் பெத்து விட்டிருப்பததைப் போல.
விவரம் தெரிந்ததிலிந்து என் எல்லா காலையிலும் ஒரு வியப்பு கலந்த சந்தேகம் எனக்குள் எழாமல் இருந்ததில்லை. ஒரு அரும்புமீசை கவிஞனின் கவிதை வரி போல.
“எந்தக் கிளையில் இருந்து இந்தக் கிளையில் வந்து அமர்ந்திருக்கின்றன இக்காலையில் இத்தனை கரச்சலுடன் இத்தனை பறவைகள்.?”
ஆனால் அன்று காலையில் வழக்கத்திற்கு மாறாக வேறொரு சத்தம் என்னை எழுப்பியது. சத்தம் மேலே கிளையிலிருந்து அல்ல கீழே தெருவிலிருந்து சரியாகச் சொல்லப் போனால் வீட்டு முற்றத்திலிருந்து.
நான் கண்ணைத் தேய்த்துக் கொண்டே வீட்டு முற்றத்திற்குச் சென்றேன். முற்றத்து மேட்டில் சேவல் ஒன்று ஒற்றைக் காலைத் தூக்கிக் கொண்டும் அதன் உரோமங்களைச் சிலுப்பிச் சிலுப்பி ஒரு வித வினோதமான ஒலி எழுப்பிக் கொண்டும் தன் சிவந்த கொண்டையை வெக்வெக்கென ஆட்டிக் கொண்டும் நின்றது. பொதுவாக சேவல்கள் அப்படிச் சத்தமிடுவதில்லை. அதனாலேயே அது விநோதமாக இருந்தது.
எதிர் வீட்டு பெரியம்மா சட்டென என் எதிரில் தோன்றி “இது ரொம்ப நேரமா இப்படித்தான் நிக்கிதுப்பா” என்று சொல்லிவிட்டு கடந்து போனாள். நான் குழம்பி நின்றேன். எனக்கு இதை யாரிடமாவது சொல்ல வேண்டுமெனத் தோன்றியது. ஆனால் அம்மாவையும் அப்பாவையும் நான் எழுந்ததிலிருந்து காணவில்லை.
அங்கே குவித்து வைக்கப்பட்டிருந்த தேங்காய் மட்டை ஒன்றை எடுத்து அந்தச் சேவல் மீது எறிந்தேன். அது சட்டென விலகி மீண்டும் அதே தோரணையில் சப்தம் எழுப்பியவாறே நின்றிருந்தது. அப்போதுதான் ஒன்றைக் கவனித்தேன். அது தலையை ஒரு பக்கம் சாய்த்தவாறு நின்றிருந்தது. நான் அதிர்ந்து போனேன். இது அவன்தான்.
என் பால்ய கால நண்பன். மிகப் பூஞ்சையானவன். எப்போதும் எந்தப் பிரச்னையிலும் ஒரு வார்த்தை கூட எவரையும் ஏசினானில்லை. திக்கித் திக்கிப் பேசுபவன் என்பதால் கூட இருக்கலாம். அவனைச் சிறுவயிலிருந்தே விநோதமான சீக்கு ஒன்று பீடித்திருந்தது. அவனால் தலையை நேராக வைக்க முடியாது. எப்போதும் ஒரே பக்கமாகச் சாய்ந்து நடுங்கிக் கொண்டே இருக்கும். இந்தத் தலையாட்டி நோய் பெரும்பாலும் ஆயிரத்தில் ஒரு வயோதிகர்களுக்கு வருவதுண்டு. இவனுக்குச் சிறுவயதிலிருந்தே வந்துவிட்டது. கோழித் தலையைத் தின்றுவிட்டால் இப்படிப்பட்ட நோய் என்று வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
இவன் மீது எனக்கோர் அக்கறைக்கண் எப்போதும் உண்டு. அவனுக்கும் என் மீது ஒரு தனிப் பிரியம் உண்டு. அதை நிரூபணம் செய்வது போல ஒரு சிறு சம்பவம் கூட நடக்கவில்லை என்றாலும் கூட நான் அப்படி நம்பினேன். அவன் தங்கையை நான் காதலிப்பது கூட அதற்கான காரணமாக இருக்கலாம். மனம் அப்படி வெறுமனே ஒன்றை நம்புவதில்லை. அப்படி என்றால் அவன் எனக்கு ஒரு வகையில் மச்சான். பிரச்சனை அதில்தான் உள்ளது.
எல்லா காதலையும் போல எளிய காதலை எல்லா காதலர்களைப் போல எளிய முறையில்தான் நாங்களும் பயின்று வந்தோம், ஐந்து வருடங்களாக மிக ரகசியமாக மிக மிக எளிய புகார்களுடன். அதில் முக்கியமான புகார் ஒன்றை நான் தீர்த்துவிட எண்ணினேன்.
“அப்பா நான் காதலிக்கிற பெண் நம் சாதி, அவளது குடும்பம் நம்மை விடச் சொத்தில் குறைந்தவர்கள். அவளது படிப்பு என்னை விடக் குறைந்த படிப்பு. அவளுடன் ஐந்து வருடக் காதல் வாழ்க்கை எனக்கு இருக்கிறது. எங்களைச் சேர்த்து வைக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.”
அடுத்த நாளே அப்பா அந்தப் பெண்ணுடைய வீட்டிற்குச் சென்று விஷயத்தைத் திறந்து வைத்துவிட்டார். “நீங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம் கலந்து பேசிச் சொல்றோம்” என்று சொல்லி அப்பாவை அனுப்பிவிட்டார்கள். நான் என் நம்பிக்கையை இதயத்திலும் மகிழ்ச்சியைக் கக்கத்திலும் அச்சத்தைக் கவுட்டிலும் வைத்துக் காத்திருந்தேன்.
ஆம், இந்த அச்சம் கடந்த ஆறு மாதமாகவே என் தொண்டைக்குழியில் துடியாய் இருந்தது. இந்தக் காதல் ஒரு மழைச்சாலையில் வளைந்து திருமணத்திற்குத் திரும்பும் வழியில் ஒரு புதிய ஆனால் ரொம்ப புராதனமான சிக்கல் நின்றிருந்தது, தாடியைச் சொறிந்து கொண்டு புகையை வானத்திற்கு ஊதிக் கொண்டு. நான் நினைத்திருந்ததைப் போலவே அது என் வீட்டுக்கும் வந்தது.
அந்தப் பெண்ணுடைய அம்மா எனக்கு அத்தை முறை. அதில் பிரச்சனை இல்லை. ஆனால் அவளுடைய அப்பா எனக்கு ஒரு வகையில் சித்தப்பா முறை என்பதை “கலந்தாலோசித்து” முடிவு செய்திருக்கிறார்கள். அப்படி என்றால் அந்தப் பெண் என்னுடைய தங்கை.
இப்படியொரு பிரச்சனையை அந்தப் பெண்ணுடைய வீட்டில் கலந்தாலோசிக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் என் வீட்டின் முகமே மாறி விட்டது. அம்மா அன்றிலிருந்து என்னுடன் பேசுவதைக் குறைத்துக் கொண்டாள். அப்பா பேசுவதே இல்லை. நல்ல வேளையாக எனக்குத் தங்கை இல்லை.
என் சாதியில் என் சொந்தத்தில் எவனோ செய்த ‘திருட்டடி’ இப்போது என் தலையில் வந்து விழுந்திருக்கிறது. இப்படியொரு பிரச்சனையைக் கேட்ட சிலர் “ஒரே சாதியில் திருமணம் செய்தால் இப்படித்தான்” என்று சொன்னார்கள். காதல் சாதி பார்த்து வருகிறது என்பதை நான் நம்பவில்லை. சாதி மாற்றிக் காதல் செய்தவரை இந்தப் பிரச்சனை விட்டதும் இல்லை.
என் பக்கத்து ஊரைச் சேர்ந்தவன் லோகேஷ். உறவு முறையில் என் அண்ணா. அவன் ஒரு பெண்ணை நாமக்கல்லில் திருமணம் செய்திருக்கிறான். அந்தப் பெண் சாதியில் கவுண்டர். ரகு. இவன் என் ஊரேதான். இவனும் உறவு முறையில் அண்ணாதான். இவனும் திருப்பூரில் அதே சாதியில் திருமணம் செய்திருக்கிறான்.
ஒரு வகையில் இருவரும் அண்ணா தம்பி உறவு முறை. ஆக இவர்கள் திருமணம் செய்த இரு பெண்களும் உறவுமுறையில் அக்கா தங்கைகளாக இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இருவரும் நெருங்கிய மாமா, அத்தை பிள்ளைகள். இது கொஞ்சம் பெரிய தலையிடிதான். இதற்கெல்லாம் என்ன தீர்வு இருந்துவிடப் போகிறது.
அவள் என்னைத் தனியே சந்தித்தால் தாவிக் கட்டியணைத்து என் இடுப்பில் அமர்ந்து என் கன்னத்தில் முத்தமிடுவாள். அப்போதே எனக்கு அதில் ஒரு சிறிய குழப்பம் இருந்தது. மனம் இதுபோன்ற அநேக விநோதங்களைத் தன்னுள் தோண்டித் தேடி எடுத்து வந்து என்னிடம் காண்பித்துக் காண்பித்து ஓடியது.
இஸ்லாம் மதத்தில் சித்தப்பாவின் மகளைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று படித்திருக்கிறேன். பேசாமல் மதம் மாறிவிடலாமா. அதற்கு அவள் குடும்பம் சம்மதிக்க வேண்டுமே. என்ன இது விநோதமான எண்ணம். இல்லை இந்த சேவல் கூவியது கூட விநோதமாகத் தோன்றவில்லை. சேவல் கூவும் ஒவ்வொரு முறையும் ஸுப்ஹான மலிக்குல் குத்தூஸ் என்று உமரம்மா சொல்வது என் நினைவில் எழுகிறது.
அதனால் மீசை இல்லாமல் தாடியுடன் தலையில் குல்லா அணிந்து கொண்டு குர்தா போன்ற நீள அங்கியுடன் என்னைக் கற்பனை செய்து பார்த்தேன். என் முகத்திற்கு ஒத்துவரவில்லை. அல்லது நான்தான் அப்படி சிந்திக்கிறேனா. ஆமாம் நான் ஏன் இப்படிச் சிந்திக்கிறேன். அப்படிச் சிந்திப்பதில் என்ன தவறு, என் ஊரில் நிறைய மதமாற்றம் நிகழ்ந்திருக்கிறதே. ஏன் உமரம்மா கூட என் சொந்த அத்தை தானே.
என் காதலியின் குடும்பமும் என்னுடைய குடும்பமும் இந்தத் திருமணத்தை மறுப்பதில் மிகப்பிடிவாதமாக இருந்தது. அதனால் ஐந்து வருடமாக நாங்கள் காதலில் இருந்ததை மறந்தும் மறைத்தும் விட்டது. பொதுவாக விஷயத்தின் சூட்டை ஆற வைத்தால் அதைக் கையிலெடுத்து விளையாடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் காதல் சூடு அவ்வளவு எளிதில் ஆறிவிடுவதில்லை. ஆறுவதற்கு அவளுடைய தலைவெட்டி அண்ணன் அதை அவ்வளவு எளிதாக விடவுமில்லை.
இந்தப் பிரச்சனை பூதாகரம் எடுத்த அடுத்த சில தினங்களுக்குப் பிறகு ஒரு நாள் என் வீட்டு முற்றத்திலிருந்து “ஆத்தா, சுன்னி, அவக்கைகூதி, தங்கச்சி போன்ற உடைசலான வார்த்தைகளாக வந்தது. நான் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தேன். அவன்தான். முற்றத்து மேட்டில் நின்று வக்கீல் போல கருத்த கோர்ட் போட்டுக் கொண்டு தலையை வெக்வெக்கென ஆட்டித் தன் திக்குவாயிலிருந்து சொற்களை ஒவ்வொன்றாக உதிர்த்துக் கொண்டிருந்தான். அதில் பெரும்பாலான சொற்கள் தங்கச்சியாக இருந்தன. அவன் தங்கச்சி என்று சொல்கிறானா இல்லை என் தங்கச்சி என்று சொல்கிறானா?
அவன் அன்றோடு அதை நிறுத்தினானில்லை. ஒரு பித்துக்குளி போல அவன் தினமும் எழுந்து அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன் என் வீட்டு முற்றத்தில் வந்து அவனுடைய வாகனத்தை நிறுத்தித் தன் தலையை ஆட்டிக்கொண்டே பத்து நிமிடங்கள் திட்டினான். அதில் ஒரு நியாயம் இருப்பதாகவே நான் நினைத்தேன். ஆனால் அவன் வக்கீல் கோர்ட் அணிந்து வருவதைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதை ஏன் அவன் வாடிக்கையாக வைத்திருக்கிறான் என்பது இன்னும் மர்மம் நிறைந்ததாக இருந்தது. ஒரு வகையில் அவன் வருகைக்கு நான் உள்ளூரக் காத்திருக்கிறேன் என்பதை நான் உணர்ந்தபோது அந்த விஷயம் இன்னும் மர்மம் நிறைந்ததாக இருந்தது.
அப்படிப்பட்ட ஒரு மர்மம் நிறைந்த காலையில்தான் அந்த சேவல் வந்து நின்றது. ஒற்றைக்காலில் நின்று கொண்டு தலையை ஒருபக்கம் சரித்துத் தன் சிவந்த கொண்டையை வெக் வெக்கென ஆட்டிக்கொண்டு ஒரு விநோதமான சத்தம் ஒன்றை எழுப்பிக் கொண்டு.
அம்மா சேவலைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே கிரில் கேட்டை விளக்கிக் குப்பைக் கூடையை வைத்துவிட்டு அடுப்படிக்குள் நுழைந்தாள். அந்தச் சிரிப்பில் ஒரு புதிர் நிரம்பி இருப்பதாக எனக்குப் பட்டது. அந்தக் குப்பைக் கூடையில் கோழிச் செல் சில ஒட்டியிருந்தன. அது காற்றால் தூண்டப்பட்டுச் சிறிதாக எழுந்து பறந்தது. நான் அடுப்படிக்குள் சென்று பார்த்தேன். அம்மாவின் புன்னகையில் குறும்பும் மர்மமும் கலந்திருந்தது, “அந்தச் சேவல் அதோட தங்கச்சியைத் தேடி வந்திருக்கு” என்று கண்கள் விரியச் சொல்லி மசால் அரைத்துக் கொண்டிருந்தாள். அப்பா வீட்டுப் பக்கவாட்டுச் சந்தில் அரிவாள்மனையைத் தீட்டிக் கொண்டிருந்தார்.
அடுத்த நாள் காலை வீட்டு முற்றத்திலிருந்து சத்தமாக ஆனால் திருத்தமாக என் பெயரைச் சொல்லி அழைக்கப்பட்டது. நான் கண்ணைத் துடைத்துக் கொண்டே சென்று பார்த்தேன். அவன்தான். தாடியை விட்டு மீசையை ஒட்டக் கத்தரித்து குர்தா போன்ற நீண்ட வெள்ளை அங்கி அணிந்திருந்தான். அவன் தலை ஒரு புறம் சாய்ந்து வெக்வெக்கென ஆடிக்கொண்டிருந்தது. அதிகாலைச் சூரிய ஒளி பட்டு அவன் தலை மேல் கொண்டை சிவந்து சிவந்து மின்னியது.
thanks : etsy
தேனியில் பிறந்தவர். சென்னையில் பொறியியல் பணி செய்கிறார். மதம், வரலாறு சார்ந்தவற்றில் ஆர்வமும் தேடலும் கொண்டவர். இவரின் முதல் சிறுகதை நிறமிலான் நீலம் இதழில் 2022 இல் வெளியாகியது.








Leave a Reply