ஷிஹாபுதீன் பொய்த்தும்கடவு (மலையாளம்)
(தமிழில் சுஜா சுயம்பு)
தனிமை
படைப்புக் காலத்தில்
கண்டங்களுக்கு நடுவில்
இவ்வளவு சிறிய இடத்தில்
கடவுள் ஒரு கடலை உருவாக்கினான்.
அலைகளும் மீன்களும் இல்லாத
அந்த ஆழ்கடலிலிருந்து
ஊர்ந்து வந்தது பூமிக்குத்
தனிமை.
♠
சாத்தான்
பக்தர் என்ற தனிமையைச் சொல்லி
தெய்வம் பலமுறை கவலைப்பட்டது
வேறு வழி இல்லாமல்
சாத்தானைப் படைத்தது.
♠
வஞ்சனை
ஒரு முறை
ஒரு கருப்புப் பிசாசு
பிச்சை தேடி வந்தது.
அறிவீனம் எனும் பாத்திரத்தில்
கடவுள் எனக்குக் கொடுத்ததில்
பாதியை நான் அவனுக்குக் கொடுத்தேன்.
என்னுடைய பாதியில்
அவன் நஞ்சு கலந்தது அறியாமல்
உண்டு துடித்துக்கொண்டிருக்கிறேன் அறிவிலியான நான்.
♠
உலை
கொல்லனின் உலைக்களத்தில்
காலத்தைப் போல
உனக்காகக் காத்திருக்கிறேன்.
இடையில்
பணி முடிந்து சென்றுவிட்ட
கருவிகள் எதுவும்
எனது தேவைகளாக இருக்கவில்லை.
♠
கனவு
வெப்பமான பாலைவனத்தில் கிடக்கும்
கைவிடப்பட்ட மண்டையோட்டைப் போல
ஒரு கண் குழியில் சூரியன் வந்து மறைந்தாலும்
மற்றொரு கண் குழியில்
சந்திரனைப் பற்றிய கனவு
மீதமாய் இருக்கும்.
♠
கண்திறக்கும் இலைகள்
தொலைதூரப் பயணத்திற்காகப்
பாய்ந்து செல்கின்ற
அறிமுகம் இல்லாத வாகனங்களை
சில நேரங்களிலேனும்
சிறிது தூரம்
ஏன் பின்தொடர்கின்றன?
உலர்ந்த இலைகள்.
♠
என்னையும் சேர்த்துக் கொள்வாய்
தெய்வமே,
ஒரு முறை
நீ ஒளிந்திருக்கும் இடங்களையும் காலங்களையும்
நான் கண்டுபிடிப்பேன்
அன்று உன்னிடம் கேட்பேன்
எதற்காக இவையெல்லாம் என்று?
அப்போது ஒரு பூவைக் கொடுத்து
என்னை மயக்கப் பார்க்காதே
நீ விடைகொடுக்கும்வரை
நான் உன்னைத் தொல்லை செய்வேன்.
♠
தேவாலயம்
தெய்வமே
நீ குழந்தையாய் இருந்தபோது
எனக்கு வரைந்து தந்த
தேவாலயத்தின் படத்தில்
ஜன்னலும் கதவுகளும் இல்லை.
வெளியே
ஒரு பூச்செடி கூட இருக்கவில்லை
ஒரு கழுதையாக வரைந்து
அதன் முற்றத்து முள் மரத்தில்
நீ என்னைக் கட்டியும் விட்டு விட்டாய்.
♠
நாய்
சென்ற பிறவியில்
நான் ஒரு
முட்டாள் நாயாயிருந்தேன்.
அன்பைத் தேடி அலைந்து
ஒரு மனிதனாக மறுபிறப்பெடுத்தேன்.
அன்று
என் மீது எறிந்த கற்கள்
இப்போதுதான் என்னைத் தாக்குகின்றன.
ஆசிரியர்: ஷிஹாபுதீன் பொய்த்தும்கடவு
அக்டோபர் 29, 1963இல் கேரள மாநிலம் கண்ணூரில் பொய்த்தும்கடவில் பிறந்தவர். பத்திரிகையாளர், கவிஞர், எழுத்தாளர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர். ஒரு கதைசொல்லியாக மட்டுமல்லாமல் கட்டுரைகள், நாவல்கள், கவிதைகளுக்காகவும் நன்கு அறியப்பட்டவர். தல, மஞ்சுகாலம், மலபார் எக்ஸ்பிரஸ், ஒரு பட்டினத்தின் தூரம், ஈர்ச்சா, ஆலிவைத்தியன், மறுஜீவிதம் ஆகியன இவரது முக்கியமான படைப்புகள். இவரது கதைகள் கேரள மாநிலக் கல்வி வாரியம், கோழிக்கோடு பல்கலைக்கழகம், மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், கேரள பல்கலைக்கழகங்களிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.கேரள சாகித்திய அகாதெமி விருதினை 2007ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளுக்காகப் பெற்றுள்ளார்.
Art :Colossal
சுஜா சுயம்புதிருநெல்வேலியைச் சொந்த ஊராகக் கொண்டு சென்னையில் வாழ்பவர். தமிழ் இலக்கியத்தில் இளங்கலை, முதுகலை, ஆய்வியல் அறிஞர், முனைவர், முதுமுனைவர் பட்டங்களும் இளங்கலை கல்வியியல், முதுகலை மொழியியல் பட்டங்களும் பெற்றவர். அரும்பாக்கம், துவாரகை தாஸ் கோவர்தன் தாஸ் வைணவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தமிழ்த் தொகுப்பு மரபு சங்க இலக்கியம், சங்கப் பனுவல்கள், தமிழியல் மொழியும் வெளியும் ஆகியன இவரது ஆய்வு நூல்கள். கருத்தரங்குகளிலும் இதழ்களிலும் தொடர்ச்சியாக ஆய்வுக் கட்டுரைகளை எழுதிவருகிறார்.







Leave a Reply