“தீ என்பது ஒரு பெருநெஞ்சு. அதனின் பிரியங்கொள்ளலில்
சில கடுங்கோபங்கள் விலகிச் செல்லும்”
அ)
இப்பொழுது
வரிசையில் நிற்க வேண்டும்.
தலைகீழாக மாறும் ஒன்றைக்
காண்பது சாமர்த்தியம் என்கிறார்கள்.
சந்தையிலிருந்து திரும்பும் போது
பை கனத்தது.
வெப்பக் காலத்தில் உறைந்த பணியிலிருப்பது போதும்
எந்த வாய்மொழியும்
நம்மைக் கனக்கச் செய்வதில்லை
என்ற தீயிடம்
முகங்கொள்ளாப் பொலிவு.
ஆ)
இதுதான்
வழி நடை என்கிறார்கள்.
நடைபாதைச் சுவர்கள், நகரும் வீதிச் சுவர்கள்
விழாமல் நிற்கும் பதாகைகள்
அனைத்திலும் வரையப்பட்ட ஓவியம் தெரிந்தது
வரைந்த “நான்”
தெரியாதது கண்டு
சுருக்கமாக விசாரணை செய்ய
“தீ” நியாயந்தீர்க்கும் காலத்தைக்
கையிலெடுத்தது.
இ)
வேறொரு உலகிற்குச் செல் என்கிறார்கள்.
அங்கே, போக நேரமில்லை.
அடைப்பட்ட இயந்திரப் பயணத்திலிருந்து
சிதறத் தயாராகவிருக்கும் திரளொன்றினைப் பார்த்து,
வெம்மையினாலுரிஞ்சுதல் மட்டுமே வேறுபடும்.
மற்றபடி
பெரிதென
யாதுமில்லை
என்ற ‘தீ’ யில் எச்சஞ்சலமுமில்லை.
ஈ)
மிக மிக உரத்துப் பேசுகிறார்கள்.
பேசுதல் நல்லதுதான்.
சில நேரங்களில்
அமைதி நல்லது.
அடிவானம் கருகப் பெய்யும் பெருமழை
எந்நேரமும் பிடித்துப் போவதில்லை
எனத் ‘தீ’ காதில் கை வைத்துக் கூறியது.
உ)
ஒரு பிரியமென்பது
ரத்தத்தில் கலந்து கிடப்பது.
அதில், ஏகப்பட்ட
வாடிச் சுருங்குதல் அசையும்.
தீயிற் களித்தெலென்பது
பிரியங்களுக்காகப்
புது இசை பாடுதல்
அவ்வளவுதான்…
ஊ)
ஒரு பசியாற்றும் இடத்தில்
சிறிது நேர அலங்கரிப்பு உணவுகள்
அதோடு,
இன்னும் கொஞ்சம்…
இன்னும் கொஞ்சம்…
இன்னும் கொஞ்சம்…
கேட்ட தீயின் முகம்
அழகான சிவப்பில் நாணியது.
Art : Gabrielle








Leave a Reply