Swipe செய்து swipe செய்து
இன்று அனைவரிடமும்
அலாவுதீன் அற்புத விளக்கு உள்ளது
Debit card credit card -ஐ
Swipe செய்து swipe செய்து
தண்ணீர் முதல் தங்க பிஸ்கட்
வரை வாங்குகிறோம்
அவுன்ஸ் அளவு வயிற்றை நிரப்ப
மேலதிகாரியின் குடைச்சலை
தகாத வார்த்தைகளை
உடல் கூசும் அவமானங்களை
கூன் விழுந்த விலா எலும்பு மஜ்ஜையில்
பிடுங்கி எறியத் தூண்டும் மயிர் வேர்களில்
இட்டு இட்டு உமிழ முடியாமல் உட்கிரகித்து
பெற்ற ஊதியத்தை debit credit card களில்
வியர்வை கமழும் குறியீட்டு எண்களாய்
சேகரம் செய்ய swipe செய்து swipe செய்து
அசல் வட்டிகளால் அடைத்திருந்த
சுவாசக் குழாயைத் திறந்து வாழ்கிறோம்
ஆனால் ஏனோ எளியவர்களின்
அற்புத விளக்குகள் zero balance
என்று திறப்பதே இல்லை
♦
கோணல் மூளை
உலக வரைபடத்தில்
இடுப்பளவு தண்ணீர்
நிறைந்த நிலப்பரப்பில்
அமர்ந்திருந்த போது
ஏதோ கருகும் வாடை
பிரதமர் எழுந்திருந்து
எட்டிப் பார்த்த போது
ஏவுகணைகளை வீசி
எரியூட்டப்பட்ட நிலத்தை
கண்ணீரை எறிந்தே
அனைத்தும் நமத்தும்
கொண்டிருந்தனர்
ஈரான் மக்கள்
இடிபாடுகளில் சிக்கிய
பிணங்களுக்கு ஊடே
அண்ணம் பிசைந்திருந்த
கை அருகே உம்மா வாப்பா
என்றபடி தேம்பி அழும்
சிறுமியின் புகைப்படத்துக்கு
இஸ்ரேலின் உருக்குலையாத
மெழுகின் தீபம் பேரல் பேரலாய்க்
கக்கும் புகைமூட்டம்
கோணல் மூளை டாலர் அதிபரோ
ரூபாய் மோடி என் நண்பர்
என்று பிடிவிடாது கைகுலுக்க
இடுப்பளவு நீரால் நிறைந்த
நிலப்பரப்பு என்பதால்
சிரித்தபடி சிறுநீர் கழித்தது
தெரியவில்லை
♦
எளிமை
எளிமை
தினமும் தோழரைக் குளிப்பாட்டியது
முகத்தில் சிரிப்பைப் பூசி வசீகரித்தது
சுயநலம் என்னும் சுருக்கங்கள் அற்ற
ஆடையை தரிக்கச் செய்தது
எளிமை
தோழருக்கு முன்னே சந்தைக்குப்
புதியதாக வந்த கார்களை
மண்டியிடச் செய்தது
இருப்பினும் நடந்து வந்த தோழரைப்
பார்த்து தெருமுனை கோயில் தெய்வம்
செருப்பென ஓடி வந்தது
எளிமை
கட்சி அலுவலகத்தில்
தோழரைச் சந்திக்க வந்த அதிகாரங்களுக்கு
டோக்கன் கொடுக்கப்பட்டு வரிசையில்
அமர்த்தியிருந்தது
உள்ளே தோழருடன் முக்கியஸ்தர்களாக
விவசாயிகள் தொழிலாளர்கள்
பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்
எளிமை
தோழர் வீடு வந்ததும்
கை கால் கழுவி விட்டது
துண்டு எடுத்துத் துவட்ட தந்தது
தோழர் தேநீர் அருந்த இதமானது
அவருடனே படுத்துக் கொண்டது
ஆடம்பரம்
இதை அனைத்தையும்
ஆள் அரவமற்ற சந்து பொந்துகளில்
மூலை முடுக்குகளில் ஒளிந்தபடி
எளிமையை எட்டி எட்டிப் பார்த்து
சஞ்சலப் பெருமூச்செறிந்தது
♦
‘து’ என்று
கைகட்டி குனிந்து
கைகட்டி குனிந்து
ஆமை போல்
நாணிய முதுகின்
வியர்வைப் பிசுபிசுப்பில்
ஒட்டிக்கிடந்தது
‘து’ ன்று எச்சில் துப்பிய
சாதிப் பெருமை பேசும்
சுவரொட்டி
♦
குண்டுக்கட்டாக ஒரு கேள்வி
குண்டுக்கட்டாக ஒரு பிறப்பை
குண்டுக்கட்டாக ஒரு நிறத்தை
குண்டுக்கட்டாக ஒரு இடத்தை
குண்டுக்கட்டாக ஒரு தொழிலை
குண்டுக்கட்டாக ஒரு பார்வையை
எப்படி இவர்களால்
சாதி என்னும் சகிக்க முடியாத
மனம் கமழும் முலாம் பூசி
எளிதில் ஒடுக்க முடிகிறது?
♦
தூண்டில் புழுக்கள்
அரசியல் வர்க்கமும்
முதலாளி வர்க்கமும்
ஆதாய மீன்களை
அடைவதற்காகப்
பொது மக்களாகிய நாம்
தூண்டில் புழுக்கள்
ஆகின்றோம்
♦
கனவின் தேய்மானம்
முட்புதர்களால் மண்டிக்கிடக்கும்
நம் பொருளாதாரப் பூங்காவில்
மத்திய அரசும் மாநில அரசும்
சறுக்கு மரம் விளையாடுகின்றனர்
நம் கனவுகள் தேய
Artists : Jonathon Rosen
கவிஞர் மு.வெ என்று அழைக்கப்படும் மு.வெங்கடேசனின் பூர்வீகம் திருச்சிக்கு அருகே உள்ள விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம்). வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் (IITM) இல் தற்காலிகத் திட்ட தொடர்பாளராகப் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர். தற்போது வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் அறிவியல் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். தூண்டில் புழுக்கள், சொல் கேளா சொற்கள், இனிப்பு கரித்ததடி மற்றும் தீக்குளித்து பிழைத்த தேகம் ஆகியவை இவரின் கவிதை நூல்கள்








Leave a Reply